???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை -10- கற்றது கல்வி மட்டுமல்ல... ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 என் இனிய தயாரிப்பாளர்களே....!பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்! 0 தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை!- முதல்வர் அறிவிப்பு 0 கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று 0 புதிய கல்வி கொள்கை: முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு 0 நாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா உறுதி 0 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா 0 ஆளுநர் பன்வாரிலால் கொரோனா தொற்றால் பாதிப்பு 0 தமிழகத்தில் 5,875 பேருக்கு தொற்று பாதிப்பு 0 கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்: முதலமைச்சர் 0 கொரோனா தாக்கம் 10 ஆண்டுகள் நீடிக்கும்: WHO 0 தமிழகத்தின் எதிர்காலத்துக்கு அ.தி.மு.க துரோகம்: ஸ்டாலின் 0 அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம்: மு.க.ஸ்டாலின் 0 கொரோனா மருந்தை கள்ளச்சந்தையில் விற்று செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதா? - வைகோ கண்டனம் 0 ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் 24 மாநிலங்கள் இணைந்தன
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 12 - வராது வந்த நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   31 , 2016  23:36:18 IST


Andhimazhai Image

ஒரு மனிதனை முதன் முதலில் குரலாக சந்திக்கிற வாய்ப்பு எல்லோருக்குமா வாய்க்கும்..?  இதென்ன பிரமாதம்..? பாடகர்கள் எத்தனையோ பேர் பாடிய பாடல்களைத் தானே கேட்கவாய்க்கும்..? அப்புறம் அவர்களில் யாரையேனும் சந்திக்கிற வாய்ப்பு அபூர்வமாய்த் தானே உருவாகும்..? அதெல்லாம் சரித்தான். நான் இங்கே சொல்ல வந்த கதை ஒரு தொழில் முறைப் பாடகரைப் பற்றியதல்ல.


அவர் பெயர் பாண்டியன்.


நாங்கள் புதூரில் இருந்து திருநகருக்கு  குடிபெயர்ந்ததும் குறிஞ்சி நகர்  என்னும் மண்கடலில் ஆங்காங்கே தீவுகளைப் போல் ஆறேழு பத்துப் பதினோரு வீடுகள் இருந்த ஏரியாவில் அதுவரைக்குமான நகரப் பரபரப்பையும் மாந்தர் கூட்டத்தையும் இழந்து வாழ்க்கையின் பல சூத்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டதை உணர்வதற்கே பலமாதங்கள் ஆயிற்று. எங்கள் வீட்டுக்கு எதிரே ஒரு வீடு. அங்கே மொத்தம் ஐந்து பசங்கள். மூத்தவர் கண்ணன். அப்போது மன்னர் கல்லூரியில் எம்.காம் படித்தார். அவருக்கு அடுத்து இரண்டு சகோதரிகள். அடுத்து சங்கரும் சூர்யாவும். சூர்யா என்னை விட இரண்டு வயது மூத்தவன். இதான் காட்சி.


சூர்யாவின் அம்மா அப்பா எங்களுக்கு அத்தை மாமன் ஆனார்கள். உறவென்பதை ஏற்படுத்திக் கொள்ள முடியாது என்று எவன் சொன்னது.? அதே வீட்டில் நாங்கள் குடியிருந்தது மொத்தம் 20 வருடங்கள். என்னென்னவோ மாறி இருந்தாலும் மாறாத ஒரு சில விசயங்களில் ஒன்று சூர்யா வீட்டுக்கும்  எங்களுக்குமான பந்தம். என் பாட்டியும் அப்பாவும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். சூர்யா வீட்டிலும் சில பல மாறுதல்கள் நேர்ந்தன. அவர்கள் குடும்பம் படிப்படியாக கிறித்துவ மதத்தைப் பின் பற்றத் தொடங்கினார்கள். எங்கள் இரண்டு வீட்டுக்கு நடுவிலும் ஒன்று இரண்டல்ல பத்தாயிரம் ஊடல்கள் வரும். முரண்படுவோம். சண்டையிடுவோம். பேசாமல் முகம் தூக்குவோம். பிறகு பேசிக் கொள்வோம். எங்கள் உறவின் ஸ்பெஷாலிட்டியே எங்களை நாங்களே போற்றியும் சண்டையிட்டும் கொள்வோமே தவிர எங்களுக்கு இடையே காற்றுக் கூடப் புக முடியாது. சொல்லில் தீராத இருபதாண்டு காலண்டர் தாட்களுக்குள் எத்தனையோ நெகிழ் ஞாபகங்கள் எங்கள் அன்பின் சாட்சியங்களாக இருக்கின்றன. இன்றைக்கும் விட்ட இடத்திலிருந்து நலம் போற்றிக் கொண்டு தொடர்ந்து தொடர்கிற விக்ரமன் எடுக்காத விக்ரமன் படத்தின் கதை தான் எங்களது.


          நல்லது.


இந்த இடத்தில் கண்ணனின் உயிர் மற்றும் ஆவி நண்பன் தான் பாண்டியன். இதில் ஒரு திருத்தம். இனி பாண்டி என்றே குறிப்பிடுகிறேன். பாண்டிக்கும் கண்ணனுக்கும் சண்டைகள் வரும். வந்தாலும் பாண்டியோடு தான் இருப்பார் கண்ணன். அதாவது பேசமாட்டார்கள். அதாவது ஒன்றாகவே இருப்பார்கள். அதாவது... விடுங்கள் புரிந்துகொள்ளவே முடியாத நட்பு. இன்னும் சொல்வதானால் பாண்டியே கண்ணனை அழைத்து இனிமே எங்கூடப் பேசாதப்பா நா உங்கூட பேஸ்றதா இல்லை என்றால் கண்ணனின் பதில் இது தான்.. நீ பேசாம இருந்துக்க... ஆனா நா உங்கூடப் பேசிட்டே இருந்துக்கிறேன் என்று தான்.


அப்படியான கண்ணன் வீட்டுக்கு முன்னால் வேலிக்கு உள்ளே சில பல வேப்ப மரங்கள் இருக்கும். அதன் கீழே கயிற்றுக் கட்டில் இருக்கும் இன்னொரு மரத்தில் ஊஞ்சல் இருக்கும். நாங்கள் அதாவது நான் என் அக்காக்கள் மற்றும் தம்பி பாலாஜி எல்லாரும் அங்கே சென்று ஊஞ்சலாடுவோம். வெறும் நிலமாகக் கிடந்த போது எங்கள் வீட்டு மனையைப் பராமரித்தது லட்சுமி அத்தை தான் என்பது உபதகவல். அனேக நேரம் எங்கள் வீட்டில் தான் இருப்பார் அத்தை.மேலும் அத்தை ஒரு ரவுண்டு ஊருக்குள் சென்று வந்து அன்றைய திருநகர் செய்திகளை எங்களுக்கெல்லாம் அப்டேட் செய்வார். ஆடு மேய்க்கிற பசங்களில் இருந்து மினி பஸ் ட்ரைவர் வரைக்கும் அத்தையைப் பார்த்தால் நடுங்குவார்கள். என்னையாவது என் தம்பியையாவது யாராவது எதாவது பேசிவிட்டார்கள் என டவுட் வந்தால் போதும். அத்தை அன் கண்டிரோலபிள் கேப்டனாக மாறி சண்டையான சண்டை போட்டு விடுவார். எங்கள்மீது அத்தனை பற்றுதல்.

 

அந்த வீட்டில் இருந்து தான் முதலில் தன் குரல் வழியாக எனக்கு அறிமுகமானார் பாண்டி. சொல்லப் போனால் அத்தை வீட்டில் இருந்து முதன் முதலில் மாசிமாசம் ஆளான பொண்ணு பாடலை அட்சரம் பிசகாமல் பாண்டி பாடும் போது அதைக் கேட்டுக் கொண்டிருந்தேனே தவிர உடனே போய் யார் பாடுவது என்று பார்த்தறிய முடியாமல் என் பாட்டி எனக்கு எண்ணை தேய்த்து குளிப்பதற்கான தண்டனையை வழங்கிக் கொண்டிருந்தார். நான் போய் பார்த்தபோது அங்கே ஊஞ்சலும் பாண்டி விட்டுச் சென்ற பாடலின் வார்த்தைகளும் மாத்திரம் தான் இருந்தன. அடுத்த முறை காத்திருந்து யார் அந்தப் பாண்டி அண்ணன் என்று சந்தித்தபோது முதல் சந்திப்பிலேயே எனக்கு அவரை ஏனோ மிகவும் பிடித்து விட்டது.


பாண்டி ஒரு முழுமையான நாயகன். கல்லூரி சென்று படிக்கவில்லை. ஆனால் பட்டமேற்படிப்பு படித்தவர்களைப் போலவே சரளமாக குறையேதுமற்ற ஆங்கிலம் பேசவேண்டும் என்று முனைப்பெடுத்து அதனை செயல்படுத்தியவர். அற்புதமான குரலுக்கு சொந்தக்காரர். அவர் பாடி வான் நிலா நிலா அல்ல  பாடலாகட்டும் நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலாவாகட்டும் மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையா வாகட்டும் ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்  எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்  ஆகட்டும் பனிவிழும் மலர்வனம்  ஆகட்டும் கம்பன் ஏமாந்தான்   ஆகட்டும் தகிட ததுமி தகிட ததுமி தந்தானா  வாகட்டும் எத்தனையோ பாடல்களில் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் பாடல்களைத் தன் சொந்தக் குரலால் அதற்கு நிகரான கேள்வியின்பத்தை நேர்த்தினார் பாண்டி.


 டீ.எம்.எஸ் பாடல்களை நான் ரசிக்க ஆரம்பித்ததற்குப் பாண்டி தான் காரணம். அருண்மொழி பாடிய வராது வந்த நாயகன் பாடலின் பல்லவியை பாண்டி பாடுகிற அழகே அழகு.

 

பாடல்களின் வரிகளை எப்படி உச்சரிப்பது என்பதில் தொடங்கி எந்தப் பாடலை எப்படிப் பாடவேண்டும் எந்த இடத்தில் பாடுவது கடினம் என்றெல்லாம் அட்டகாசமாக விளக்குவார் பாண்டி. பாடல்கள் மீதான் என் பெருவிருப்பத்தின் ஆரம்ப விதைகளைத் தூவியவர்களில் பாண்டி முதன்மையான முக்கியமானவர். மூச்சு விடாமல் பாடியதாகக் கூறப்பட்ட மண்ணில் இந்தக் காதல் இன்றி பாடலை நிசமாகவே மூச்சு விடாமல் பாடிக் காட்டினார். பாண்டிக்கு அனேக பாடல்கள் வசப்படும்.


கவரிமான் படத்தில் வருகிற பூப்போலே என் புன்னகையில் பாடலை எப்போது பாடினாலும் கேட்பவர் கண்களைக் கலங்கச் செய்வார் பாண்டி. மூடிய கண்களில் பெருகும் நீர்நதியை எதுவும் செய்யாமல் அழுதபடி சிரிப்போம். சில சமயங்களில் அவரும் முடிக்கும் போது கலங்கி இருப்பார்.

பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா


பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே 

(பூ போலே

பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்
நீ நடப்பது நாட்டியமே 

மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே எனை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே

(பூ போலே )

அம்மாவென்று வரும் கன்றுக் குட்டி
அது தாய்மையை கொண்டாடுது 

குக்கூ என்று வரும் சின்னக் குயில்
தன் குழந்தைக்கு சோறூட்டுது
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே
நீயின்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே

(பூ போலே)


தன் மகள் தன் தரப்பு நியாயத்தை உணர்ந்துகொள்ள மாட்டாளா என்று ஏங்கும் தந்தையாகவும் தன் செல்ல மகளைக் கொஞ்சுகிற தந்தையாகவும் சிவாஜி கவரிமான் படத்தில் நடிப்பால் மெருகேற்றி இருப்பார். இந்தப் பாடலை இளையராஜா தனக்கே உண்டான வித்தகத்தை இதில் இன்னொரு முறை நிரூபித்திருப்பார். குழலிசையைத் துடிப்பிசையாகவும் சோகத்திற்கான இசைக்கு வயலினையும் பயன்படுத்துவதில் ராஜாவுக்கு நிகர் ராஜா மாத்திரமே. நீச்சலறியாதவனின் படகுத் ததும்பலை ஒத்த இசைத் துள்ளலை இதயத்திற்கு இடமாற்றுகிற சித்துவேலை இந்தப் பாடலும் இயைந்த அதனிசையும்.


காதல் திருமணம் செய்தவர் பாண்டி. தொழில்கள் சில செய்தார்,. அவரது விருப்பம் ஒரு நடிகராவது. ஆளும் அதற்கேற்ப மெருகான மனிதர். காதல்மனைவியும் மூத்தவனும் சின்னவளுமாய்க் குழந்தைகள் திருநகரில் பாண்டி என்றால் பிரபலம். அவர் குரலால் அல்ல. அவர் பாடுவார் என்பதைத் தாண்டி அதிரடியான அரசியல் முகம் அன்பான நட்பின் முகம் கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள் அல்லவா..? அதைத் திருத்திப் பாண்டிக்குச் சென்ற இடமெல்லாம் நட்பு என்றால் அது நிசவாக்கியம். திருநகர் விளாச்சேரி தனக்கன்குளம் குன்றம் ஹார்விபட்டி பைக்காரா பழங்காநத்தம் ஜெய்ஹிந்த்புரம் பசுமலை நாகமலை பைபாஸ்ரோடு பெரியார்நிலையம் என மதுரையின் பல இடங்களில் பாண்டி சென்றால் நின்றால் நகரவிடாமல் நாலுமணி நேரமாவது ஆகும் ஜனக்கூட்டத்தைத் தாண்டி வர. அத்தனை சினேகிதத்தை ஒரு மனிதன் தன் முழு வேலையாகப் பார்த்தால் கூட அடைந்திட முடியாது. அதைப் போகிறபோக்கில் சாதித்திருந்தார் பாண்டி.


நீல.பாண்டியனாக ஒரு கட்சியில் மாவட்ட செயலாளர் ஆகி திருநகர் சேர்மனுக்கு நின்று. கவுரவமான வாக்குகள் அடைந்து இனி அரசியல் வேண்டாம் என்று என் போன்ற பல நலவிரும்பிகளின் அன்புமிரட்டலுக்கு ஆளாகி சரி என் கனவை நோக்கிப் போறேன் என்று சினிமாவை நோக்கிச் சென்றார் பாண்டி. கோடம்பாக்கம் பேர் தரும் அல்லவா.. இங்கே அவர் பேர் நீல்சன்.


கடந்த பத்து ஆண்டுகளில் நீல்சன் சென்னைவாசி. ஒரு டப்பிங் கலைஞராகவும் சிறுவேட நடிகராகவும் தொடங்கிய நீல்சன் உதவி இயக்குனராகி இணை இயக்குனராக உயர்ந்து தற்போது தன் முதல் படத்தை இயக்குவதற்கான முகாந்திரங்களில் தீவிரமாக இருப்பவர்.
அவருக்கொரு ஆல் தி பெஸ்ட் சொல்வது மாத்திரமல்ல இந்த அத்தியாயத்தின் நோக்கம்.


நீல்சன் சதா ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கும் ஒரு தேடல் மனிதன். தானறிந்ததை தன்னை ஒற்றிவருகிறவர்க்குப் பிட்டுத் தரும் ஆசிரியத்துவமும் கட்டளைத் தன்மையும் மிக்க நீல்சனது வாழ்க்கை ஒரு இடதுக்குப் பதிலாக இன்னொரு வலது திரும்பி இருந்தால் அவர் இன்றைக்குப் பல்கலைக் கழகமொன்றில் தத்துவவியல் மொழியியல் இசை உள்படப் பல துறைகளில் ஏதேனும் ஒன்றில் விரிவுரையாளராக இருந்திருக்கவேண்டியவர். இருந்திருந்தால் எங்க ப்ரொஃபஸர் என்று இதே நட்பின் கூட்டம் வேறோரு விதமாய்க் குழுமியிருக்கக் கூடும். அரசியலில் வென்றிருந்தால்.... தொழிலை விடாமல் பற்றிக் கொண்டு பணத்தைக் குவித்திருப்பாரேயானால்...எப்படிப் பார்த்தாலும் அவற்றை எல்லாம் விடத் தனக்கு மிகவும் உள்ளாழத்தில் இயைந்த துறையான சினிமாவில் தான் இருக்கிறார் என்பது ஆறுதலளிக்கும் விசயம் தான்.


ஆனால்... ஆனால்... எனக்கான ஆச்சரியம் என்னவென்றால் அடைவதில் மாத்திரமல்ல வெளியேறுவதிலும் எந்த சமரசமும் கொள்ளாதவர் நீல்சன். ஞானிகள் பலரின் தத்துவ விளக்கங்களைக் குறிப்பாக ஜேகே மற்றும் ஓஷோவை முழுவதுமாக அறிந்த நீல்சன் பெரியாரியத்தை முழுவதுமாக அறிந்ததோடு மட்டுமல்லாமல் இன்றளவும் பின்பற்றுகிறவராகவும் சமரசம் ஏதுமற்று அதன் மீதான பிடிப்பைக் கொண்டவராகவும் இருக்கிறார். பாலகுமாரன் சுஜாதாவில் தொடங்கி பாலோ கொய்லோவையும் ஜெயமோகனையும் வாசித்துக் கொண்டு இன்னமும் எதடா கிடைக்கும் என்று தன் அறிவின் பரப்பை விஸ்தரித்துக் கொண்டே செல்வதை ஒரு பணியாக அல்ல தன் இயல்பாகக் கொண்டிருக்கிற மனிதர் நீல்சன்... தன்னை எடைபோடுவதில் தன் குரல்வளத்தை சரிவர புரிந்துகொள்ளவில்லையா அல்லது தேவையற்ற கூச்சமா என்று யோசித்தால் அவை ஏதும் இவருக்குப் பொருந்தாது என்று நானே சொல்வேன்.


அப்படியான நீல்சன் ஏன் தன்னை ஒரு பாடகராக நிலை நிறுத்திக் கொள்ள முயலவே இல்லை என்பது தான் என் ஆச்சரியம். நடிப்பதற்கும் குரல் தருவதற்கும் இயக்குவதற்கும் அவர் செய்த முனைப்புக்களைக் கூட நீல்சன் ஒரு பின்னணிப் பாடகராக முன்வருவதற்காக செய்யவில்லை.  செய்திருந்தால் அருமையான இன்னுமோர் பாடகரின் சிலபல பாடல்களாவது கிடைத்திருக்கும். அவரைப் பற்றி எழுதவேண்டும் என்று முடிவுசெய்தபிறகு "ஏங்க முயற்சி செய்யலை..?" என்று சமீபத்தில் கேட்டேன். உண்மையான காரணத்தை சொல்லணும்னா ஏன் முயற்சி செய்யலைன்னு எனக்கே தெரியலை. செய்யலை. அதான் உண்மை. செய்திருக்கலாமோன்னு யோசிக்கக் கூட இல்லை." என்று சிரித்தார்.
 

நான் கொஞ்சம் கூடக் கூட எழுதவில்லை என்பதை மனிதரை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கப் பெறும் சந்தேகிஸ்டுகள் ஒரே ஒரு பாடலைப் பாடச் சொல்லிக் கேளுங்கள். என் கூற்றின் சத்தியம் புரிவதற்காகவாவது.

 

 

( ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)
      click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...