???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை -10- கற்றது கல்வி மட்டுமல்ல... ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 என் இனிய தயாரிப்பாளர்களே....!பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்! 0 தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை!- முதல்வர் அறிவிப்பு 0 கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று 0 புதிய கல்வி கொள்கை: முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு 0 நாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா உறுதி 0 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா 0 ஆளுநர் பன்வாரிலால் கொரோனா தொற்றால் பாதிப்பு 0 தமிழகத்தில் 5,875 பேருக்கு தொற்று பாதிப்பு 0 கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்: முதலமைச்சர் 0 கொரோனா தாக்கம் 10 ஆண்டுகள் நீடிக்கும்: WHO 0 தமிழகத்தின் எதிர்காலத்துக்கு அ.தி.மு.க துரோகம்: ஸ்டாலின் 0 அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம்: மு.க.ஸ்டாலின் 0 கொரோனா மருந்தை கள்ளச்சந்தையில் விற்று செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதா? - வைகோ கண்டனம் 0 ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் 24 மாநிலங்கள் இணைந்தன
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் 11 - நிறமற்ற ரோஜாக்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   24 , 2016  23:24:49 IST


Andhimazhai Image

பாட்டுன்னாலே எனக்குப் பிடிக்காதுப்பா என்று முகம் சுளிப்பவர்களும் நம்மோடே நம் உலகத்தில் வாழ்ந்து வரத் தான் செய்கிறார்கள். விருப்பம் எனும் சொல்லே வெறுப்பு என்னும் எதிர்ப்பதத்தின் எதிர்ப்பதம் தானே..? நான் ரசிப்பதை நீயும் ரசித்தே ஆகவேண்டும் என்று சொல்வது வன்முறை. ஒரே ரசனை என்பது கொடுப்பினை தான் என்றபோதும் நமக்குப் பிடிக்கிற விசயத்தை விரும்பாதவர்கள் இருக்கத் தான் செய்வர். இசையை ரசிப்பது நல்ல விசயம் தான். ஆனாலும் எனக்குப் பிடித்த இசையைத் தான் நீயும் ரசிக்கவேண்டும் என்று வற்புறுத்த முடியாதல்லவா..?

 

இசையே பிடிக்காது என்பவர்களைக் கூட எடுத்த எடுப்பிலேயே மன்னிக்கிற மனம் வாய்த்தோர் கூட நமக்குப் பிடித்த ஆளுமைகளை விடுத்து வேறொரு பேர் சொல்லப் படுகையிலெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போடுவது ரசனையில் பெயரால் நிகழ்த்தப் படுகிற அராஜகம். முக நூலில் பார்த்தால் எப்படி ஜாதி மத இன கட்சி சண்டைக்களங்களும் மைதானங்களும் இருக்கின்றனவோ அப்படித் தான் பெரியதொரு தொடர்போரை இசை என்ற பேரால் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள். இதில் சாட்சாத் அந்த இசைஞானியோ அல்லது மெல்லிசை மன்னரோ நேராக வந்து வேணாம் ப்ளீஸ் எங்க பேரால நீங்க அடிச்சிக்காதீங்க என்று கெஞ்சினால் கூட நோன்னோ என்று அவர்களையும் மீறி அவர்களை வைத்தாடுகிற சப்தபூஜையைத் தொடர்வார்கள் என்பது தான் சோகமே. இப்படியானதா இசை மீதான ரசனை என்பது கேட்டுப் பதிலறிய வேண்டிய நல்வினா.


பாட்டென்றாலே முகம் சுளிப்பார் அத்தா. திருநகர் ரெண்டாவது ஸ்டாப்பில் தான் பன்னெண்டாவது படிக்குப் போது ஒன்று கூடுவோம். கூடுமிடம் அத்தா டீக்கடை. ஸ்டாப்பின் பின்புறம் இருக்கும். குணா ஜெயா இரட்டையர்களின் வீடு பாண்டியன் நகரின் மெயின் தெருவில் இருந்தது. கருவா எனப்படுகிற அன்பு நண்பன் பாலாவின் வீடு கலைவாணி தியேட்டரின் பின்வாசலுக்கெதிரே. மூன்று பேருக்கு அருகாமை தலம் என்பதால் கனிபாய் கடை தான் எங்களது கூடுகை. கனிபாய் தவிர அத்தாவுக்கு இன்னும் நாலு பசங்கள் இருந்ததாக நினைவு. நாங்களெல்லாமும் கூட அவர் பெறாத பிள்ளைகள் தான்.


கடிதலையே அன்பாகத் தருகிற பலாப்பழ மனிதர்கள் அபூர்வம். அத்தா அப்படியானவர்களில் தலையானவர். மேம்போக்காகப் பார்த்தால் எங்களது வருகை அத்தா விரும்பாத முகச்சுளிப்பைப் போல இருக்கும். அது தான் அவர் அன்பு பகிர்கிற வழி என்பது புரிந்த பிறகு இலகுவாகும். என்னடா உங்களுக்கெல்லாம் வேலையே இல்லையா என்பதைக் கூட நாங்கள் வந்து கூடி இரண்டு மணி நேரங்கழித்துத் தான் சொல்வார் அத்தா. நாம் இல்லாத தருணங்களில் வயசுப்பசங்கல்லா... அப்டி இப்டித் தான் இருப்பாக.. நாளைக்கு ஆளுக்கொரு திசைக்குப் பிரிஞ்சு குடும்பம் குட்டியப் பாப்பானுவல்லா என்பார்.


பிரச்சினை பாட்டுப் போடுவதில் வரும். டீக்கடையில் என்னேரமும் இருக்கும் தஸ்தகீருக்குப் பாட்டென்றால் உசிர். அது அந்தக் காலம்.கேஸட்டுகள் ஏ ஸைட் பீ ஸைட் மொத்தம் அதிகபட்சம் பதினெட்டுப் பாடல்கள் இல்லையா..? விதவிதமான உள்ளடக்கங்களில் பாடல்கள் இருக்கும். இது இன்ன மனோநிலைக்கு என்றெல்லாம் தயாரிக்கப்பட்ட தனிமனவிருப்பக் கலெக்சன்கள். நாங்கள் உருகிக் கொண்டிருக்கும் போது வருவார் அத்தா.


வழக்கமாகக் கால ஒவ்வாமையினை மூத்தவர்கள் எப்படிச் செய்வார்கள்..? அந்தக் காலத்தில என்னமா பாடல்கள் வந்திச்சி..? இன்னைக்கு வர்றதெல்லாம் பாட்டா..? இப்படித் தானே..? அத்தா ரொம்ப வித்யாசர். அவர் முதல் கேள்வியிலேயே பவுன்ஸர் போட்டு ஆடுவார்.


இப்ப வர்ற படங்களுக்கு எதுக்குடே பாட்டு என்கிற ஆரம்ப வினாவே அத்தாவிடமிருந்து காத தூரம் ஓடவைக்கும். அத்தா கேட்கும் வினாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாது..? ஒவ்வொரு சிச்சுவேஷனையும் அத்தா கிண்டலடிப்பதே தனி ரகம்.


எதெதுக்கு எல்லாம் பாட்டு போடுறாங்கிய..? உளுந்த வடை சரியா வெந்திருச்சின்னா பாட்டு.. ரேஷன்ல சக்கரை கிடைச்சா பாட்டு.. இதெல்லாம் வெளங்குமா என்று கெக்கலிப்பார். பாடல் வரிகளை தன்னால் ஆன மட்டுக்கும் நக்கலடித்து குழியிலிடுவது இன்னுமோர் சேட்டை.


என்னடே பாட்டு இது..?


ராஜராகம் பாடாத பாரிஜாதம்..

பாடவேண்டும் உன்னோடு நூறு கானம்... இதுவாகட்டும்
உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது 
என் மனசத கேட்டுத் தான் தவிக்குது 
அதில் என்ன வெச்சி பாட மாட்டியா 
நெஞ்ச தொட்டு வாழும் ராசய்யா 
மனசு முழுதும் இசை தான் உனக்கு 
அதிலே எனக்கோர் எடம் நீ ஒதுக்கு...


இந்தப் பாட்டை வரிக்கு வரி கிண்டலடிப்பார் அத்தா.. இதென்ன பாட்டா இல்ல லெட்டராய்யா.? போஸ்ட்மேன் இல்லாத ஊர்ல தான்யா இதப் பாட்டா படிப்பானுங்க..
 

பாட்டால புள்ளி வெச்சேன் பார்வையில தள்ளி வெச்சேன்

பூத்திருந்த என்னைச் சேந்த தேவனே..
போடாத சங்கதிதான் போட ஒரு மேடையுண்டு.  

நாளு வெச்சி சேருவாங்க ராசனே..
நெஞ்ஜோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும்..

நில்லாம பாட்டு சொல்லி காலமெல்லாம் ஆளனும்
சொக்கத் தங்கம் உங்களைத் தான் சொக்கி சொக்கி

பார்த்து தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நான் பூத்து”

இந்த சரணம் முழுசா அத்தா தன் கட்டைக் குரல்ல கிண்டலடிச்சி முடிக்கையில இளையராஜாவோட வெறியனான எனக்கே கண்ல தண்ணி வரும். அத்தாவைப் பொறுத்த வரைக்கும் எதுவுமே நல்ல பாட்டு கெட்ட பாட்டுன்னெல்லாம் கிடையாது.. அவர் கண்ணதாசன் பாட்டுக்கு அடிமை. கண்ணதாசனுக்கு அப்பறம் எழுதப்பட்ட எந்தப் பாட்டுமே பாட்டில்லை. பாகவதர் காலத்தோட பாட்டெல்லாம் முடிஞ்சி போச்சு. அதை நம்ம மேல சார்ஜ் பண்றதுல ஒரு சந்தோஷம் அத்தாவுக்கு.

 


சிச்சுவேஷனுக்காக புனையப்பட்ட பல பாடல்கள் வெறும் ஜரிகை சொல்லாடல்களைக் கையில் பற்றிக் கொண்டு வெறும் கேளிக்கைக்கான ஊடுபொருட்களாய் இருந்ததை முழுவதுமாக புறந்தள்ளி விட முடியாது. பேசவேண்டிய கூற்றுத் தான் அப்படியான வெற்றுப் பாடல்கள் நமக்குத் தந்த லாகிரி இன்பம்.

 

          நிற்க.

 

எனைப் பொறுத்தவரை நான் முழுவதுமாக அத்தாவின் கூற்றை அப்படியே ஏற்கிறவனுமில்லை. மறுக்கிறவனுமில்லை. அன்சைஸ் பொம்மையை எங்கே வைப்பது எனத் தெரியாமல் ஒவ்வொரு வீட்டில் ஒவ்வோரிடத்தில் வைத்திருப்பது சகஜம். அப்படித் தான் தமிழ்த் திரைக்குள்ளே பாடல்களுக்கான இடமும் வருகையும். உண்மையைச் சொல்லப் போனால் முதலில் வெளியாகையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பைப் பலமடங்கு விரிவாக்கித் தருவது பாடல்கள் தான். ஆனால் படம் வெளியான பிற்பாடு படத்தின் ஆயுளுக்கும் பாடல்களின் ஆயுளுக்குமான வித்யாசம் தொடங்குகிறது. மேலும் சொன்னால் படம் வெளியான பிற்பாடு அதன் பாடல்கள் விண்வெளியை அடைந்த பிற்பாடு எடை நிமித்தம் தங்களை விடுவித்துக் கொள்ளும் ஒரு விண்கலத்தின் உப பாகங்களைப் போலத் தங்களை அந்தப் படத்தினின்றும் விடுவித்துக் கொள்கின்றன. படத்துக்கான வெளி வேறாகவும் பாடலுக்கான ஆன்மதளம் வேறொன்றாகவும் பிரிந்த பிற்பாடு படத்துக்கும் அதற்குமான தொடர்பு சொற்பமாக மிகச்சன்னமான தகவலாகவே குறுகுவதும் கூட நிகழ்கின்றது.

 

உண்மையில் ஒரு பாடல் முதல் முறை அல்லது ஒரே ஒரு முறை பதிவு செய்யப்படுவதோடு என்ன நிகழ்கிறது..? இந்தக் கேள்வியை அதே அத்தா கடையில் வைத்து நண்பன் சங்கீத் என்னிடம் தன் கரகர குரலில் கேட்டான். எனக்கு நாலு வயதாவது மூத்தவனான சங்கீத் குறிப்பிட்ட காலமே என்னோடு பழகினாலும் கூட விரிவான பல தளங்களில் உரையாடிய நண்பன். எங்கிருந்தாலும் வாழ்க எனும் பதத்துக்குரியவன்.

 

எனக்கு உண்மையிலேயே பதில் தெரியவில்லை என்பதோடு அந்த வினாவே சரிவர விளங்கவில்லை. அ என்றேன் புரியாமல். இல்ல ரவீ... ஒரு பாட்டுன்றது எழுதி இசை அமைச்சு ஒரு பாடகர் பாடகி ஜோடியோ அல்லது தனியாவோ பாடுறதுன்றது அதோட பதிவு மாத்திரம் தான். அதோட முதல் வருகைன்னு இதை வெச்சிக்கங்க.. என்றான் ம்ம் என்றதும் அதே பாடகர் அதே தன்னோட சூப்பர்ஹிட் பாடலை மேடையில எப்பவாச்சும் பாடுறப்போ நமக்குள்ளே ஏதாச்சும் ஒண்ணு ஒட்டாமப் போயிடுதில்ல.. இல்லியா..?    ஆமா சங்கீத் என்றென்.இப்போது இன்னும் புரிந்தது.

 

ரவீ.. ஒரு பாடல் முதல்பதிவின் போது முதல்முறை நிகழுது. A SONG CAN BE HAPPENED. அது பாடப்படுவதில்லை. நிகழ்த்தப்படுது. அதோட பதிவு செய்யப்பட்ட பிரதிகளைத் திரும்பத் திரும்ப நாம கேட்கிறோம். பட் அத்தனை முறையும் அந்த முதல் முறை அல்லது ஒரே முறை பாடப்பட்டதோட பிரதிகளைத் தான் நாம நுகர்கிறோம்.. இது தான் பாட்டோட ஜாலமே.. அதே பாட்டை அதே ஆள் பாடி கேட்டாக் கூட நம்ம கிட்ட இருக்கிற பொய் நிஜமாகவும் கண் முன்னாடி இன்னொரு தடவை நிகழ்ற நிஜம் பொய்யாவும் மாறிடுது.. இதான் இசையோட மந்திரம். Magic Of The Music.

 

சங்கீத் என்ற பேருக்கேற்ப சங்கீத் சொன்னது நிஜம் என்பதை மீண்டும் மீண்டும் அவரது சொற்களினூடாகவும் பற்பல பாடல்களினூடாகவும் பயணிக்கையிலெல்லாம் உணர்ந்திருக்கிறேன்.பாடல்கள் உருவாக்கப்படுவதில்லை. பாடப்படுவதில்லை. நிகழ்த்தப்படுகின்றன.

 

ராஜசேகர் நாராயணசாமியின் கூற்று இதற்கடுத்த திறப்பைத் தந்தது. ஏன் பாலு பத்தாயிரம் பாட்டு பாடினாலும் நமக்கு பிடிக்குது. அலுக்கலை..? ஏன் தீபன் சக்கரவர்த்தி கிருஷ்ணசந்தர் முதலானவங்க நூறு பாட்டுக்குள்ள தான் பாடி இருக்காங்க..? ஏன் பாலு குரலுக்கும் அவங்க குரலுக்கும் என்ன வித்யாசம்..?இதைக் கேட்ட போது ராஜசேகர் சொன்னார். ரவீ... எல்லாக் குரலும் நிறைய்ய பாடலுக்கானவையா இருக்காது. பாடல் என்பது வெளித்தோற்றத்துக்கு ஒரே போலத் தோன்றினாலும் ஒவ்வொரு குரலுக்குமான தனித்த சில தன்மைகள் இருக்கும். அந்த தன்மைகளுக்கேற்ற பாடல்களைப் பாடினா மட்டும் தான் அது சிறக்கும். அதற்கு மாற்றான பாடல்களைப் பாடினா தோல்வியடைஞ்சுடும். இளையராஜா அதிகதிகப் பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குத் தந்ததா தோணும். ஆனா அது உண்மையா.. கொஞ்சம் யோசிச்சுப் பாரு... தன்னாலான அளவு ஜேசுதாஸை மனோவை மலேசியாவை பாட வச்சிருக்கார்..? எத்தனை படங்கள்ல பாலுவுக்கு ஒரு பாட்டு கூடத் தராம இசையமைச்சிருக்கார்..? ஆனாலும் ராஜான்னா பாலுன்னு தோணுறது மாயை. இட்ஸ் நாட் ட்ரூ..

 

ஒவ்வொரு குரலின் தன்மைக்கேற்பத் தான் அவை பயன்படுத்த ஏதுவான பாடல்களின் எண்ணிக்கையும் அமையும். சிற்சில பாடல்கள் பாடின குரல்களின் மீது நமக்கு சின்னதா ஒரு கூடுதல் ப்ரியம் உருவாகும். அய்யோ இது நல்ல குரல்தானே.. இன்னும் பத்திருபது பாட்டு இருந்தா நல்லா இருக்குமே எனத் தோன்றுவதும் கூட மாயை தான். ஒருவேளை அத்தனை பாடல்களுக்குள் அதே குரல் நமக்குப் பிடிக்காமற் போயிருக்கலாம். அல்லது தோற்று வாய்ப்பிழந்தும் போயிருக்கலாம். எத்தனை அபூர்வமான குரல்கள் அரிதான பாடல்கள் எனத் தாண்டி வந்திருக்கிறது இந்தத் திரை இசை..?

 

இந்த அத்தியாயத்துக்கான பாடல்களாகச் சில தனித்த குரல்களில் உருவான பாடல்களைச் சொல்ல விருப்பம். ஆன்மாவிலிருந்து ஆன்மாவுக்கு நேரடியாகப் பெயர்ந்தூடுருவும் இத்தகைய பாடல்கள் எப்போதாவது நேரும் அபூர்வங்கள். இவற்றைப் பாடிய குரல்கள் நிறமற்ற ரோஜாக்களாய்ப் பூங்காடெங்கும் ஒளிந்து விளையாட வல்லவை. அவற்றின் மீதான ஏக்கம் முன் பழைய காத்திருத்தல் எல்லாமே கொள்ளை அழகு.

 


மித்தாலி சிங் பாடிய யமுனை ஆற்றிலே அப்படியானதொரு வைரம்.

 

யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே 
கண்ணனோடு தான் ஆட...  (இதை மெல்லத் தொடங்கும் ஐஸ்கேக் குரல்)
பார்வை பூத்திட பாவை பார்த்திட 
பாவை ராதையோ வாட.. (மெல்லக் கண்கள் ததும்புவதை குரலில் படர்த்தும்)
இரவும் போனது பகலும் போனது 
மன்னன் இல்லையே கூட.. (இதைப் பாடுகையில் உச்ச பட்ச பிரிவேக்கத்தை உணர்த்தும்)
இளைய கன்னியின் இமைத்திடாத கண் 
அங்கும் இங்குமே தேட.. (இந்த இடத்தில் குரல் குளக்கரையில் தவறிய குடமென உருளும்)
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ..
ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ...(முதல் முறை பாடுகையில் குற்றம் சாட்டும்)
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ 
ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ (இரண்டாவது முறை பாடுகையில் சரணடையும்)
பாவ்வம் ராதா...(உருகி முடிந்த பனி விரல்களிடையே வழிந்து உலகெலாம் பெருகும் தனிமை)

 


மித்தாலி இன்னொரு பாடல் பாடி இந்த ஒரு பாட்டின் கோடிகோடி இன்பத்தை இரண்டால் வகுப்பதை விடவும்.. ஒரே ஒரு பாடல் போதும்.

ஒரு பாடலின் முதல் வருகை எப்படி இருக்க வேண்டும்.? எப்படியெல்லாம் இருக்க வேண்டும்.? ஒரு பாடல் இடம் பொருள் காலம் இவற்றை மறக்கச் செய்ய வேண்டும். அதுவரைக்குமான வாழ்க்கையை தன்னால் வகுத்துப் பெருக்க வேண்டும். ஏதோ அந்த தினமும் அதன் பின்னான காலமும் எஞ்சி இருப்பதே அந்த ஒரு பாடலைக் கேட்பதற்காகத் தான் எனும் பொய் மட்டும் மிஞ்ச வேண்டும். அந்தப் பாடலிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி அதன் இசையை குரலை வரிகளை மட்டுமல்லாது இசையிடை மௌனங்களைக் கூட மனனம் செய்வதன் மூலம் மட்டுந்தான் சாத்தியம் எனும் பேருண்மையை உணர்த்த வேண்டும். சுருக்கமாய்ச் சொன்னால் ஒரு தலைக் காதலின் தோன்றல் தின அவஸ்தைகள் அத்தனையையும் ஒரு சாகாத பாடல் நேர்த்தும். மனசை இசை அகழ்ந்தாலென்ன காதல் அகழ்ந்தாலென்ன..? இரண்டும் ஒன்று தானே..?

 


அப்படி எல்லாப் பாடல்களும் இருந்திடாது. சில பாடல்கள் சூழ்நிலை அல்லது உடனிருந்தவர்கள் என்பது போன்ற புறக்காரணிகளால் முக்கியத்துவம் அடைவது எல்லோர்க்கும் நிகழும். நான் சொல்ல வந்தது அப்படியான பாடல் இல்லை. இங்கே காரணியே பாடல் தான் என்பதே விசேஷம். காகிதம் கிழித்துக் கத்தி கிழிவதைப் போன்ற எதிர்மாறல் அபூர்வம் அப்படியான இன்னுமோர் பாடல் டிஷ்யூம் படத்தில் விஜய் ஆண்டனி இசைக்கோர்வையில் பாடகர் ஜெயதேவ் பாடியது. ஹம்மிங் மட்டும் ராஜலக்ஷ்மி வரிகள் வைரமுத்து.

யாரோ புத்தம்புதிய பாடலாசிரியர் எழுதியது என்றே முதல் முறை நினைத்தேன். சீடியைத் திருப்பி கவரைப் பார்த்தால் வைரமுத்து என்றிருந்தது நிஜமாகவே அதிர்ச்சி தான். தன் வழமை சொல்லாடல்களிலிருந்து முற்றாக விலகி புத்தம் புதிய வரிகளுடன் வந்திருப்பார் வைரமுத்து.. 2006இல் வந்த இந்தப் படத்தின் இந்தப் பாடல் என்னளவில் வைரமுத்துவின் அதற்கு முந்தைய நகர்தலில் ஒரு புதிய பாய்ச்சல் என்றே சொல்வேன்.


                
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் 

பெண்ணெ
நெற்றிப் பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டிப் போட்டு காதல் செய்கிறாய்
முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்
காதல் தானே
இது காதல் தானே..
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால்
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
நெற்றிப் பொட்டில் தீயை வைக்கிறாய்


... விண்ணைத் துடைக்கின்ற முகிலே வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்திரத்தை 
மண்ணைத் தேடி இங்கு வரவழைத்து உன்னைக் காதலிப்பதை உரைத்தேன்.
இன்று பிறக்கின்ற பூவுக்கும் சிறு புல்லுக்கும் காதல் உரைத்து முடித்தேன்.
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் இன்னும் சொல்லவில்லையே இல்லையே...

லட்சம் பல லட்சம் எனத் தாய்மொழியில் சொல்லிருக்க
ஒத்தச் சொல்லு சிக்கவில்ல எதனாலே..?
பந்தி வெச்ச வீட்டுக்காரி பாத்திரத்தைக் கவுத்துட்டு பட்டினியாக் கெடப்பாளே அது போலே...

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...

சின்னச் சின்னச் செல்லக் குறும்பும் சீனிச்சிரிப்பும் என்னைச் சீரழிக்குதே..
விறுவிறுவென வளரும் பழம் எந்தன் விரதங்களை வெல்லுதே..
உன்னைக் கரம் பற்றி இழுத்து வளை உடைத்து காதல் சொல்லிடச் சொல்லுதே..
வெட்கம் இருபக்கம் மீசைமுளைத்து என்னைக் குத்திக் குத்தியே கொல்லுதே..

காதலெந்தன் வீதி வழி கையெழுத்துப் போட்ட பின்னும் கால்கடுக்கக் காத்திருந்தேன் எதனாலே..
ஃபெப்ரவரி மாதத்துக்கு நாளு ஒண்ணு கூடிவர ஆண்டு நாலு காத்திருக்கும் அதுபோலே..
நெஞ்சாங்கூட்டில் நீயே...


ஒரு சொல் கூட அதுவரைக்குமான பாடல்களில் ஆதிக்கம் செலுத்தியதில்லை. இந்த அளவுக்கு முற்றிலும் புனரமைக்கப் பட்ட கவிமொழி கொண்டு ஒரு பாடலை வேறாரை விடவும் தன்னால் தர முடியும் என்று மீண்டும் ஒரு முறை கம்பீரமாகத் தன்னை நிலை நாட்டிய வைரமுத்து இப்பாடலின் முதல் பலம் என்றால் விஜய் ஆண்டனி இந்தப் பாடலில் கோரஸ் எனப்படுகிற உடனொலியை ஒரு முழுமையான இசைக்கருவி போலவே உபயோகித்திருப்பார். அதுவும் ஆரோகணத்தில் அமானுஷ்யமான ஒரு தனிமையை உறுதி செய்தபடி பெருகும் உடனொலி தனிச்சிறப்பு.

 

மேலும் இந்தப் பாடலைத் துவக்கி பல்லவி முடிவடைகிற வரை தனித்து ஒலிக்கிற பின்னணி இசை அதன் பின் சரணங்கள் முழுவதுமாய்த் தங்களை அண்டர்ப்ளே செய்து மறைத்துக் கொண்டு முழுவதுமாய்க் குரலும் வரிகளும் மேலேழுவதை அனுமதித்தபடி பெருகும்.

 

இத்தனைக்கும் மேலாக இந்தப் பாடலைப் பாடிய ஜெயதேவின் முன்னரெப்போழ்தும் கேட்டிராத குரல் இந்தப் பாடலை நிரந்தரிக்கச் செய்யும்.

அஷோக் என்னும் பாடகர் மஞ்சள் நிலா என்னும் படத்தில் ஒரு பாடலும் அதன் பின்னர் தலைவாசல் படத்தில் உடலென்ன உயிரென்ன என்னும் பாடலும் மாத்திரம் பாடியிருப்பார். மஞ்சுளா குருராஜ் பாடிய உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே... நல்லவனுக்கு நல்லவன் ஓ.எஸ் அருண் எனைக் காணவில்லையே நேற்றோடு காதல்தேசம் லதா ரஜினிகாந்த் பாடிய நேற்று இந்த நேரம் ஆற்றங்கரை ஓரம் போன்ற பாடல்கள் அரிதான குரல்களுக்கான சின்ன ஸாம்பிள் தான். மொத்தப் பட்டியல் பெரிது.

 

ஜெயதேவைப் போலவே இன்னொரு குரல் கேட்கும் போதும் அதன் பின்னாலேயே மனம் வெகுகாலம் அலைந்துகொண்டிருந்தது.தமிழில் பத்துப் பதினைந்து பாடல்களை மட்டுமே பாடியிருக்கும் அந்தக் குரலாளர் அக்கரையில் கர்நாடகாவின் முக்கியமான பாடகர். அவரைப் பற்றி இன்னொரு இடத்தில் பார்க்கலாம். பெயர் மட்டும் சொல்லியாகவேண்டுமா..? அவர் பேர் ராஜேஷ்.

 

( ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)
     

 

 

 

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...