???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை -10- கற்றது கல்வி மட்டுமல்ல... ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 என் இனிய தயாரிப்பாளர்களே....!பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்! 0 தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை!- முதல்வர் அறிவிப்பு 0 கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று 0 புதிய கல்வி கொள்கை: முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு 0 நாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா உறுதி 0 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா 0 ஆளுநர் பன்வாரிலால் கொரோனா தொற்றால் பாதிப்பு 0 தமிழகத்தில் 5,875 பேருக்கு தொற்று பாதிப்பு 0 கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்: முதலமைச்சர் 0 கொரோனா தாக்கம் 10 ஆண்டுகள் நீடிக்கும்: WHO 0 தமிழகத்தின் எதிர்காலத்துக்கு அ.தி.மு.க துரோகம்: ஸ்டாலின் 0 அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம்: மு.க.ஸ்டாலின் 0 கொரோனா மருந்தை கள்ளச்சந்தையில் விற்று செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதா? - வைகோ கண்டனம் 0 ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் 24 மாநிலங்கள் இணைந்தன
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 10 - ஒரே ஒரு பாடல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   18 , 2016  04:43:34 IST


Andhimazhai Image

அவளுக்கொரு பெயர் வைக்கலாமா.? அவளது இயற்பெயரைக் குறிப்பிடுவதற்கில்லை. பிடித்தவளுக்குப் பிடித்த வேறொரு பேர் சூட்டுவது ரகசிய உறைபனி. சாலச்சுகம். அவள் பெயர் நந்தினி என்றாகட்டும். நாங்கள் சந்தித்தது தற்செயலின் பயணம் ஒன்றில். பொதுவாகக் காதல் திரைக்கதைகளின் ஆரம்பக் காட்சிகளில் தான் இப்படியான சந்திப்புகள் நேரும். 2006ஆம் ஆண்டு.சனவரி மாதம் அடுத்த தினம் சென்னையில் ஒரு பணவரத்தை எதிர்நோக்கி திடீர் பயணம். எனக்குத் தெரிந்த குறுக்குவழித் தெய்வத்தின் பரிவுப் பார்வையால் வைகை விரைவு இரயிலில் குளுகுளுத் தேரில் பயணம். எனக்கு இரவுகளில் பயணிப்பது ஒவ்வாது. தூக்கம் வராது. நள்ளிரவு எனக்கு நண்பகல். நான் தூங்கத் தொடங்குகிற நேரம் விழுப்புரத்தைத் தாண்டி இருப்பேன். அதனால் அடுத்த நண்பகல் கண்ணெல்லாம் எரியும். எந்த ஊரானாலும் ஏதோ ஒரு கட்டிலில் தூங்கினால் சமர்த்தாகத் தூங்குவேன் எப்போதும் பகல் பயண விரும்பி தான் நான். நல்லவேளையாக வைகை.


நந்தினிக்கு அப்போது என்ன வயதிருக்கும் யூகிக்க முடியவில்லைஎன்னை விடச் சின்னவளாகவோ என் வயதினளாகவோ இருக்கக் கூடும். நான் இதிலெல்லாம் விற்பன்னன் இல்லை. இளம்பெண்களின் வயதைக் கேட்பது சிரமம் என்றால் யூகிப்பது யூபீ.எஸ்.ஸி தேர்வெழுதுவது போலல்லவா..? கூடவே அவளது மகள் என்று சாடைவழியில் தெரிந்து கொள்ளக் கூடிய சின்னவளொருத்தியும் உடன் வந்தாள். அந்தக் குழந்தைக்குப் பத்து வயது இருக்கலாம். ஹெட் செட்டில் பாட்டுக் கேட்டபடி வந்தாள். நான் சன்னல் பார்த்தபடி பயணித்தேன்.


திண்டுக்கலில் இருந்து கிளம்பிய போது நந்தினியின் மகள் யதேச்சையாக எழுந்தாள். அவள் கையிலிருந்த செல்ஃபோன் ஹெட்ஸெட் சகிதம் லேசாகப் பறந்து நடைவழியில் விழுந்து அணைந்தது. எடுத்து எத்தனையோ முயற்சித்தும் ஆன் ஆகவில்லை. அம்மாவுக்கும் மகளுக்கும் மிக மென்மையான அனுசரணையான குரலில் வாக்குவாதம் ஒன்று வந்தது. நான் அதைக் கேளாதவன் போல் கண்டும் காணாமல் இருந்தேன். பிறகு அந்தக் குழந்தை முகம் வாடியபடியே அமர்ந்து வந்தாள்.


திருச்சியை நெருங்குவதற்கு சற்று முன் அவளிடம் "உன் செல்லை இப்போது கொடு" என்று கேட்டேன். தயக்கமாய் அன்னை முகம் பார்த்தபடி  தந்தாள். நான் எனக்குத் தெரிந்த வைத்தியங்களின் மூலம் அதனை மறுபடி உயிர்ப்பித்தேன்.. முகமலர்ந்து  நன்றி சொன்னாள் நந்தினி.. பெண்ணொருத்தி நன்றி சொல்கிறாற் போல் எதாவது உதவுகிற சந்தர்ப்பங்களைத் தானாக வாய்க்கப் பெறுபவர்கள் எத்தனை பாக்கியவான்கள்..? அந்த செல்ஃபோனில் அப்போதும் ஒரு குறை எஞ்சியது. ஹெட் செட்டோடு கீழே விழுந்துவிட்டதால் அதன் ஸ்பீக்கர் கோளாறாகி ஹெட் செட் மோடுக்குப் போய்விட்டது. இனி அதனைக் கழற்றிப் பார்த்து சின்னதொரு ஸ்பேரை மாற்றும் வரை அதன் அழைப்புக்களைப் பேச ஒரே வழி லவுட் ஸ்பீக்கர் மாத்திரம் தான் என்பதை விளக்கினேன்.
ஏதோ இந்த மட்டுக்கு இத்தோடு போயிற்றே என்று தாயும் மகளும் பாதிராஜ்யத் திருப்தியில் மறுபடி நன்றி நவின்றார்கள்.


அந்த செல்ஃபோன் கீழே விழுந்து அத்தனையும் நடந்ததால் திருச்சிக்குப் பிற்பாடு நானும் நந்தினியும் சகஜமாக உரையாட ஆரம்பித்தோம். பரஸ்பரத் தகவல்களில் முக்கியமானவற்றைத் தந்து பெற்றோம். நான் மதுரைவாசி. அவள் சென்னைவாசி. அம்மா வீட்டுக்கு வந்து திரும்புகிறாள் என்பதையும் மாதமொருமுறையாவது வந்து விடுவாள் என்பதையும் சொல்லிப் புன்னகைத்தாள்.அவளது அம்மா வீடு எங்கள் பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தான் என்பதையும் சொல்லி வைத்தேன்.


பேச்சு வாசிப்பு இசை சினிமா என்று திரும்ப சகஜமாகப் பேசியபடி வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மனித மனதின் விசித்திரம் கையிருப்பைத் தாண்டி எதோ ஒன்றைத் தேடியபடியே இருப்பதாக உணர்ந்தேன். அவளிடம் பேசப் பேச முன்சமீபக் காலம் வரை நான் மிகவும் ரசித்த படங்கள் குரல்கள் பாடல்கள் நடிகர்கள் எனப் பலவற்றுடன் ஒத்துப் போனதை அறிந்தேன். என் மனதின் பெண் முகமாக அவளை மெல்ல வரைந்து கொண்டிருந்தேன். 80 சதத்துக்கு மேல் ஒத்துப் போகிற ரசனைகளுள்ளவர்கள் முதல் சந்திப்பிலேயே மிகவும் நெருக்கமான நட்பன்பை உணர்கிறார்கள்.நானும் சிலபல முறைகள் அதனை அனுபவித்திருக்கிறேன். நந்தினிக்கும் எனக்குமான அந்த முதல் சந்திப்பின் நீண்ட உரையாடல் எங்கோ எப்போதோ நாங்களறியாமல் வாழ்ந்த வாழ்விலிருந்து அகழ்ந்து மீட்ட காட்சி போலவே இருந்தது.


நந்தினியின் மடியில் தலைவைத்தவாறே குழந்தை பூஜா உறங்கி விட்டிருந்தாள். ஒப்பனை அறை செல்வதற்காக நந்தினி எழ முயல்கையில் நான் பூஜாவின் தலையை என் கைகளில் ஏந்தி அவள் நகர்ந்ததும் நந்தினியின் இடத்தில் நானமர்ந்து கொண்டேன். என் மடிக்கு மாறிய பூஜா சின்னதோர் சிணுங்கலுடன் தொடர்ந்து உறக்கத்தில் ஆழ்ந்தாள்.


திரும்பிய நந்தினியை என் இருக்கையில் அமரச்சொன்னேன். ஒரு பயணத்தின் ஆரம்பத்தில் யாரென்றே தெரியாமல் தொடங்கிய ஒரு உரையாடல். மெல்ல வளர்ந்தது. ஒவ்வொரு ஊராய்க் கடக்கையில் ஒரு மலையுச்சிக் கோயிலின் படிகளேற ஏறக் குறைந்து கொண்டே வருகிற நேர்த்திக் கடன் போல் குறைந்து மாறி வேறொன்றாகக் கிளைத்து இறுக்கமானது. உணர்வுகளின் நடன ஒத்திகைகளும் நிஜமாய் நேர்பவை தானே..?

 

ஒரு கட்டத்தில் வார்த்தைகள் இல்லாத மௌனங்களை அவ்வப்போது நேர்கோட்டில் சந்திக்கிற புன்னகைகளாக மாற்றிக் கொண்டோம். என் நம்பரைக் கேட்டு வாங்கிய நந்தினி தன் நம்பரிலிருந்து வணக்கம் என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். நான் என் உலகத்துக்கு நல்வரவு என்று பதில் அனுப்பினேன். சென்னை உங்களை வரவேற்கிறது என்று அவள் பதிலுக்கு அனுப்ப மதுரை உங்களை எதிர்நோக்குகிறது என்று நானும் திருப்ப அருகருகே அமர்ந்து கொண்டு எஸ்.எம்.எஸ் மூலம் பேசிச் சிரித்து மௌனித்து மொழிந்து கொண்டிருந்தோம்.


ஒரு தினம் முழுக்க அமர்ந்திருப்பதன் களைப்பு என்னையும் அவளையும் வெவ்வேறாகப் படுத்தியது. குழந்தையை ஸீட்டின் சமானத்துக்கு நகர்த்தி விட்டு நான் ஒரு முழு நீள ரெயில் நடை உலாத்தி விட்டு வந்தேன். எதாவது வேண்டுமா என்று பேண்டிரி கார் அருகே இருந்து செய்தியில் கேட்டேன். அவள் பதிலுக்கு தண்ணீர் பாட்டில் கேட்டாள்.வாங்கித் திரும்பினேன்.


என் மகளுக்கு ஒரு வயது அப்போது தான் பூர்த்தியாயிருந்தது. அவளிடமிருந்து அத்தனை கிலோமீட்டர்கள் எதிர்த்திசையில் நகர்ந்து கொண்டிருப்பது ஏனோ திடீரென்று என்னை அழுத்தியது. என் முகமாற்றத்தின் உள்ளே ஒரு வாட்டம் இருப்பதை யூகித்தவள் என்ன என்று மறுபடி பேசத் தொடங்கினாள். அப்படியே சொன்னதும் ரெண்டு நாள் தானேப்பா என்றாள். எனக்கு அந்த விளித்தலின் நெருக்கம் ஏனோ தேவையாய் இருந்தது.


 “நீங்க மொபிலிட்டில இருந்திருக்கீங்கள்ல..? என்றாள் திடீரென்று. எனக்கொரு உதவி செய்ய முடியுமா.? நான் ஒரு நம்பர் சொல்றேன். அந்த நம்பரை இப்ப வேறயாரோ யூஸ் பண்றாங்க. பட் அந்த நம்பரை முன்பு ரொம்ப நாளைக்கு யூஸ் பண்ணிட்டிருந்தவங்க இப்ப எந்த நம்பர் வெச்சிருக்காங்கன்னு கண்டுபிடிக்கணும் முடியுமா.?" என்றாள்.

 

சுவாரஸ்யமாக இருந்தது.ஆனால் டெக்னிகலாகவும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டு வேலிகளைத் தாண்டியும் அப்படி அறிந்து கொள்வதன் சிரமத்தை அவளுக்கு விளக்கினேன். அதனால் அவள் பெரிதாகக் கலக்கமடைய வில்லை. என் பதிலின் தோல்விமுனையை அறிந்தே அந்த வினாவைக் கேட்டிருக்கிறாள் என்பது புரிந்தது.


இருந்தபோதும் முயலலாம் என்று நான் சிறிது நம்பிக்கையும் தந்தேன். எனக்குள் எப்படியாவது முயன்று அவள் கேட்பதை அந்தப் பயணத்திற்குள்ளேயே கண்டறிந்து சொல்லிவிட மாட்டோமா என்று ஆர்ப்பரித்தது.


என்னென்னவோ பேசி விட்டு மறுபடி பேச்சு அந்த நம்பர் விஷயத்துக்கு வந்தது."அது யாரு நம்பருங்க நந்தினி..?" என்றேன். இயல்பான குரலில் தன் குழந்தையின் தலைவருடி "இவ அப்பாவுது.." என்றாள்.நான் நொறுங்கினேன்." என்னங்க ஸாரிங்க.." என்று உளறினேன். "நீங்க என்ன பண்ணுவீங்க..?" என்று இன்னும் ரெண்டாய் எனைக் கிழித்தவள் மறுகணம் மலர்ந்து "சரி விடுங்க ரவி வேறெதாவது பேசலாம்.இப்ப அதைப் பற்றிப் பேசினா கொஞ்சம் எமோஷனாய்டுவேன். நம்பர் இருக்கில்ல..? நாம அப்பறம் பேசலாம். குட்டிம்மா காதுல அவங்கப்பா பத்தி ஒரு வார்த்தை விழுந்தாக் கூட ரொம்ப துடிச்சி தேட ஆரம்பிச்சிடுவா..."என்றாள்.


அந்தப் பயணத்தைப் பூர்த்தி செய்வதற்குரிய ஐம்பதறுபது கிலோமீட்டர்கள் தூரத்தை எதுவுமே பேசிக்கொள்ளாமலே கடத்திச் சென்றது அதே இரயிலின் இன்னொரு ரயில்.நான் எழும்பூர் செல்கிறேன் என்றேன். இடையொரு ஸ்டேஷனில் இறங்கவேண்டிய அவள் கரம் குலுக்கி "மறு நாள் ஓய்வு அமைந்தால் வீட்டுக்கு அவசியம் வாங்க.." என்று அழுத்தமாய் அழைத்து விட்டு இறங்கிச் சென்றாள். அந்தக் குழந்தையும் அவளும் கையசைத்து வழியனுப்பிய சித்திரம் மனதில் சேகரமாவதற்குள் மின்னலின் மறுமுனை நோக்கிச் சென்றுவிட்டது என் இரயில்.

 

நந்தினியுடன் என் சினேகம் அந்த இரயிலில் தொடங்கியது.முடிந்துவிடவில்லை. மதுரைக்கு அவள் அடுத்த முறை வந்தபோது நாங்கள் சந்தித்தோம்."பிரகாஷ் தான் முதல்ல லவ்வை சொன்னான்.அம்மா ஓகேன்னாங்க. எங்கப்பாவுக்கு பிடிக்கலை. ரெண்டு பேரும் ஒரே கேஸ்ட் என்பதால் பெரிய பிரச்சினை எதுமில்லாம பன்னெண்டு வருஷத்துக்கு முந்தி எங்க கல்யாணம் நடந்தது. அடுத்த வருஷமே பாப்பா பொறந்தா. .அஃப்கோர்ஸ் அவனை விட நானொரு வயசு மூத்தவ. வெவ்வேற இண்டஸ்ட்ரில வேலை.இரண்டாயிரமாவது வருஷம் ஒய்டூகேன்னு பல பேருக்கு கணிப்பொறி துறைல வேலை போச்சில்ல.அதுல வீழ்த்தப்பட்ட பலர்ல பிரகாஷூம் ஒருத்தன்.


மூளை குழம்பிப் போயிடிச்சான்னு தெரியலைங்க. வீட்லயே இரு. நல்ல மாற்றம் வர்ற வரைக்கும் நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன். என் ஆறுதலை வெறுக்க ஆரம்பிச்சான். என் கிட்டேயிருந்து விலக ஆரம்பிச்சான். நான் பேசினாலும் பேசாட்டாலும் ரெண்டையும் வெறுத்தவன் ஒரு கட்டத்ல வீட்டுலேருந்து வெளிய போயிட்டான். மதுரைக்குப் போறேன்னு மெசேஜ் மட்டும் அனுப்பினான். சரி மனமாற்றத்துக்கு போயிட்டு வரட்டும்னு இருந்திட்டேன். பாப்பாவுக்கு விவரம் புரியாத வயசு.அப்பா ஊர்ல இருக்கார்னு சமாளிச்சிட்டு இருந்தம்.


ஒரு மாசம் கழிச்சு தான் அவன் தன்னோட பிறந்த வீட்டுக்கும் போகலைன்னு தெரிஞ்சிச்சி. யார்ட்டயும் எதும் சொல்லிக்கலை. ஏற்கனவே அவன் ரொம்ப மூடி டைப் ரவீ... ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி. தனக்குள்ளயே வெளித்தெரியாமப் பொங்கிட்டிருந்தவன் எங்க போனான்னு தெரில. தன்னோட நம்பரை சரண்டர் பண்ணிட்டான்".

 

"போலீஸூக்கு போகலியா" என் பலவீனக் குரலுக்குப் பதிலாக சிரித்து  "என்னங்க நீங்க உள்ளூர் வெளியூர் வெளி மாநிலம் வெளிநாடுன்னு தேடாத இடமில்லை. கேஸ்டுங்கிறது பெரிய நெட்வொர்க் ரவீ. அதோட கைகள் ரொம்ப நீளம். இவன் படிச்சவன் இல்லியா..? கணக்கை முன் கூட்டியே யூகிச்சி தனக்கு சம்மந்தமே இல்லாத ஒரு இடம் பேரு வேலைன்னு செட்டாயிட்டான்னு தோணுது. விட்டதைப் பிடிச்சி பெரிய சம்பளம் கை நிறையக் காசுன்னு ஆனப்புறம் வரலாம்னு வைராக்கியமா கெளம்பிட்டான். அதெல்லாம் சரி.என்னை விடுங்க. பெத்த பிள்ளையைக் கூடவா பாக்கத் தோணாது..? படிச்ச முட்டாள் பாதிப் பயித்தியம்னுவாங்க எங்கம்மா.. அதுக்கு அவன் தாங்க உதாரணம்" என்றாள்.பேச்சை மாற்றி புதுப்படம் பாட்டு என்றெல்லாம் உலவிவிட்டு ஒரு கட்டத்தில் ஃபோனை வைக்கலாமா என்ற இடத்துக்கு நகர்ந்து வந்திருந்தோம். திடீரென்று குரல் கம்மிற்று "ஒருவேளை ஒருவேளை.."  பேசமுடியாமல் திகைத்த நந்தினி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு தொடர்ந்தாள். "அவன் தமிழ்நாட்டுலயே எங்காச்சும் இருக்கான்னு வைங்க... நா ஒரு பாட்டு சொல்றேன்.. அந்தப் பாட்டுன்னா அவனுக்கு உசுரு.. அதைத் தான் அவன் ரிங் டோனாவும் வெச்சிருப்பான் காலர் ட்யூனாகவும் வெச்சிருப்பான். நெட்வொர்க் ப்ரொவைடர்ஸ் கிட்ட இன்ஃப்ளூயன்ஸ் இருந்தா அந்தப் பாட்டை யாரெல்லாம் ரிங் டோனா வெச்சிருக்காங்கன்னு பார்த்தா அவன் கிடைக்க வாய்ப்பிருக்கு ரவீ.."என்றாள்.


"பாட்ட வெச்சி எப்டிங்க..?"என்றதற்கு "இல்ல ரவீ அஞ்சு வருஷமா ஒரே பாட்டத் தான் வெச்சிருந்தான். மாத்த மாட்டான். நா நிச்சயமா சொல்றேன். அந்தப் பாட்டை வெச்சி அவனைப் பிடிச்சாத் தான் உண்டு.." என்று இன்னும் கலங்கினவள் "எனக்காக இல்லன்னாலும் பாப்பாவுக்காகவாச்சும் அவனைக் கண்டுபிடிக்கணும் ரவீ... நான் ஒளிஞ்சுகிட்டா நீயாச்சும் தேடியிருக்கலாம்லன்னு என் பக்கமே திருப்புவான். பாப்பாவுக்கு அப்பா வேணும் ரவீ..."அதற்கு மேல் பேசாமல் அழுதாள்.


அந்தப் பாடலைத் தொடர்ந்து பிரகாஷைத் தேடிக் கண்டுபிடிக்க நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. பின்னும் நாலாண்டுகள் கழித்து வளைகுடா நாடொன்றில் கடினப்பட்டுத் தான் விரும்பிய செல்வ சேகரத்தோடு வீடு திரும்பிய பிரகாஷ் மறுபடி வேலைக்குப் போகவில்லை. மனம் விரும்பிய தொழிலொன்று செய்கிறார். நந்தினி பிரகாஷ் மற்றும் பாப்பா மூவரும் சுகம். நிற்கஇந்த அத்தியாயத்தில் இன்னும் ஒருவரியும் ஒரு பாடலும் மட்டும் எஞ்சியிருக்கிறது.


மறுபடி இந்தியத் தமிழ்நாட்டு நம்பரொன்றைத் தற்போது உபயோகித்துக் கொண்டிருக்கும் பிரகாஷின் காலர்ட்யூனாக நந்தினி சொன்ன அதே ஒரே பாடல் தான் இருக்கிறது.

பாடலின் லிங்க் ;  https://www.youtube.com/watch?v=CQXmGk4x-bo

 

( ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)
     
    

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...