???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை -10- கற்றது கல்வி மட்டுமல்ல... ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 என் இனிய தயாரிப்பாளர்களே....!பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்! 0 தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை!- முதல்வர் அறிவிப்பு 0 கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று 0 புதிய கல்வி கொள்கை: முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு 0 நாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா உறுதி 0 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா 0 ஆளுநர் பன்வாரிலால் கொரோனா தொற்றால் பாதிப்பு 0 தமிழகத்தில் 5,875 பேருக்கு தொற்று பாதிப்பு 0 கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்: முதலமைச்சர் 0 கொரோனா தாக்கம் 10 ஆண்டுகள் நீடிக்கும்: WHO 0 தமிழகத்தின் எதிர்காலத்துக்கு அ.தி.மு.க துரோகம்: ஸ்டாலின் 0 அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம்: மு.க.ஸ்டாலின் 0 கொரோனா மருந்தை கள்ளச்சந்தையில் விற்று செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதா? - வைகோ கண்டனம் 0 ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் 24 மாநிலங்கள் இணைந்தன
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 9 - கதை சொல்லும் பதாகைகள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   11 , 2016  01:24:00 IST


Andhimazhai Image

முன்பிருந்து முற்றிலுமாக அழிந்து போனவற்றை மீட்டெடுப்பது தான் ஞாபகசுகம்.அப்படித் தமிழ்ச்சமூகத்தின் வாழ்வில் சினிமாவின் செல்வாக்கு உயர்ந்துகொண்டே செல்கிறாற் போன்றதொரு தோற்றம் இன்றும் இருக்கலாம். ஆனால் அது நிஜமா என்பது கேள்விக்குறி. சினிமா தன்னை உலகமயமாக்கல் காலத்துக்குப் பின்னால் விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது. சினிமா என்றால் சினிமா சின்னத்திரை இவ்விரண்டு தவிர இணையத்தின் சினிமா முகம் ஆகிய அனைத்தின் கலவையாய்த் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது. உண்மையில் சின்னத்திரைக்கும் சினிமாவுக்கும் நிழல்யுத்தம் ஒன்று வெற்றி தோல்வியின்றி அடுத்தடுத்த நிலைகளுக்குப் போய்க்கொண்டே இருப்பதாகத் தான் அர்த்தம்.


தமிழ் சினிமாவின் நூறாண்டுகளை நோக்கிக் கொண்டிருக்கிறோம். முதல் நாற்பது ஆண்டுகள் தமிழ் சினிமாவின் செல்வாக்குக் காலம் என்றால் அதன் உச்சம் எண்பதுகளின் இறுதி வரைக்கும் ஏன் தொண்ணூறுகளின் மத்தி வரைக்கும் என்று கருதமுடிகிறது. இந்தக் கால் வெள்ளாமையில் டீவீ சானல்களின் வருகையும் சீடீக்களின் சுதந்திர உலாவும் சினிமாவின் வேர்வரை நடத்திய முதல் யுத்தத்தில் இன்னுயிர் ஈந்தவை தான் டெண்ட் கொட்டாய்கள். அவற்றின் சரிதத்தில் போஸ்டர்களுக்கென்று தனித்த சிம்மாசனம் இருந்தது.


டெண்டுக் கொட்டாய்களின் பொற்காலம்.தமிழ் நிலமெங்கும் விரவிக் கிடந்த ட்யூரிங் டாக்கீஸ் மற்றும் மூவீஸ் தியேட்டர்கள்.காலையும் மதியமும் காட்சிகள் இராது. மாலை தொடங்கி நள்ளிரவு வரைக்கும் இரண்டே காட்சிகள்.ஊரெல்லையில் ஏக்கர்கள் பரப்பில் விரவி நிற்கும் ஆஸ்பெஸ்டாஸ் அல்லது இரும்பு ஷீட் கூரையுடன் ஒரு மெகா சைஸ் ஓட்டு வீட்டைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். எல்லா நகரங்களிலும் கல் கட்டிடங்களில் தியேட்டர்கள் இயங்கினால் மத்திம ஊர்களில் பாதி கட்டிடமும் கூரை மட்டும் ஷீட்களுமாய் தியேட்டர்கள் இருந்தன. அப்போது கடை நிலை கிராமங்களில் நாலைந்து ஊருக்கு ஒன்று எனும் கணக்கில் ட்யூரிங் தியேட்டர்கள் உருவாக்கப் பட்டன.


ஊர்களில் ஓடி முடித்த பிற்பாடு தாமதமாய்த் தான் டெண்ட் கொட்டாய்களுக்கு படம் வந்து சேரும். பெரும்பாலும் புதிய படங்கள் தீபாவளி பொங்கல் குடியரசு தினம் சுதந்திர தினம் காந்தி ஜெயந்தி ரம்ஜான் கிருஸ்த்மஸ்  மற்றும் ஏப்ரல் மே விடுமுறைக் காலங்களில் தான் இடம்பெறும், மற்ற காலங்களிலெல்லாம் இஷ்டத்துக்கு படங்கள் கிடைப்பதை எல்லாம் திரையிடுவார்கள்.


இதில் நற்படங்களுக்கென்று தியேட்டர்கள் இருப்பதைப் போலவே துர்ப்படங்களுக்கென்றும் தனி டெண்ட் கொட்டாய்கள் இருந்தன. அவை இன்னும் ஊரெல்லையில் இருக்கும்.அது தனிக்கதை. இங்கே வேண்டாம்.


டெண்ட் கொட்டாய்களுக்கு வருகை தரும் படங்களுக்கு அதிகபட்ச ஆயுள் மூன்று தினங்கள் தான். ஒவ்வொரு வாரமும் இரண்டு சேஞ் ஓவர் இருக்கும். சனி ஞாயிறு கடந்து ஓடுவது சொற்ப படங்கள் தான். பெரு வெற்றி பெற்ற படங்கள் ஒரே தியேட்டருக்குப் பத்திருபது முறைகள் கூட வருகை தந்த வரலாறும் உண்டு.திருவிளையாடல் ரத்தக்கண்ணீர் போன்ற படங்களுக்கென்று வினோதமான கூட்டு ரசிகர்கள் இருந்தது ரசம். போஸ்டர்களை ஒரு மாட்டு வண்டியில் இரு புறமும் தட்டி வைத்துக் கொண்டு பிட் நோட்டீஸ்களை ஊரெல்லாம் விசிறி அடித்தவாறு பாடல்களை சப்தமாக ஒலிபரப்பி விளம்பரம் செய்ததொரு காலம். அதற்குப் பின் ஒவ்வொரு ஊரிலும் போஸ்டர்களுக்கென்று தனி இடங்கள் உண்டாகின. 


இரண்டு அருகாமை தியேட்டர்கள்  "நீ ஒட்ற இடத்துக்கு நா வர்லை. என் இடத்துக்கு நீ வராதபா.." என்று தங்களுடைய எல்லைகளைப் பிரித்துக் கொள்வது வழக்கம். பொதுச்சுவர்கள் தவிர சில தனியார் வீட்டு பக்கவாட்டு சுவர் காம்பவுண்டு சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதும் உண்டு. அப்படியான வீடுகளுக்கு மாதத்துக்கு இத்தனை பாஸ் என்று போஸ்டர் பாஸ் வழங்கப்படும்.


என்ன பெரிதாய் மிஞ்சி விடப் போகிறது..? டிக்கட் விலை ஒன்றரை ரூபாய்.மாதத்துக்கு நாலு பாஸ் என்றால் ஒரு குடும்பம் ஒரே ஒரு படத்துக்கு நாலுபேராய் சேர்ந்து போய்வர முடியும். இதில் வேடிக்கை என்னவென்றால் பாஸில் படம்பார்த்துப் பழகிய போஸ்டர்சுவர் வீட்டார் அடுத்த படங்களை காசு கொடுத்துப் பார்க்கப் போவார்களா என்றால் அனேகமாக மாட்டார்கள் எனலாம். ஒரு ப்ரஸ்டீஜ் இருக்காதா பின்னே..? எங்களூரில் பாஸை மாதக்கணக்கில் சேர்த்து வைத்து அதற்கொரு நோட்டுப் போட்டு (கணக்கு மிஸ் ஆகிவிடக் கூடாதல்லவா..? ஓசி என்றாலும் போஸ்டருக்குப் பிரதி உபகாரம் என்பதால் மறைமுக ஓஸி தானே..?) கையெழுத்து வாங்கிக் கொண்டு இத்தனை பாஸ் என்று வைத்துக் கொண்டு அடுத்தடுத்து நாலைந்து படத்துக்கு கும்பலாகச் சென்று வருவதும் நிகழ்ந்தது. அப்படிப் பாஸ் கொடுக்கப் படும் மணிமாறனுடன் சினேகிதம் வைத்துக் கொள்வதற்கு அடிபுடியே நடக்கும்.நான் அப்போதும் சமர்த்தன். நேரடியாக தியேட்டரில் டிக்கட் கிழிக்கிற சண்முகம் மகன் செல்வம் எனக்கு ஃப்ரெண்ட் என்பதால் ஒரு மாதிரி லஞ்ச லாவண்யனாய் வாழ்ந்திருக்கிறேன். நோ டிக்கட். செல்வமும் நானும் இணைபிரியாத ஒரே கலர் சட்டை போட்டுக் கொண்டு ராஜா தியேட்டருக்குப் போய்வரும் நண்பர்களாகப் பலகாலம் இருந்தோம்.

 

பண்டிகை காலத்தில் இரவு எட்டரை மணிக்கு சிறப்புக் காட்சிகள் நடக்கும்; அனேகமாக ப்ரூஸ் லீ படங்கள் அல்லது ஆங்கிலப் படங்கள் ஓடும். பரீட்சை காலம் தீபாவளி பொங்கலுக்கு முந்தைய வசூல்வாராக் காலங்களுக்கென்று அரதக் குப்பையான படங்கள் அல்லது ஆங்கிலப் படங்கள் தான் ஓடும்.பெரும்பாலும் கூட்டம் வராது.


நிற்க.. இத்தனை முஸ்தீபுகளுக்குப் பிறகு மறுபடியும் போஸ்டர்கள் பற்றி மறுபடி அலசலாம்.


சிவாஜிகணேசன் என்ற பெயருக்கு மேல் நடிகர் திலகம். எம்ஜி.ஆர் பெயருக்கு மேல்..? புரட்சித் தலைவர். ஜெயலலிதா புரட்சித் தலைவி. சாவித்திரி நடிகையர் திலகம். எம்.ஆர்.ராதா பெயருக்கு நடிகவேள். ரஜினி சூப்பர் ஸ்டார். கமல் காதல் இளவரசன். இதெல்லாம் நாமறிந்த பட்டங்களல்ல... நாடறிந்த பட்டங்கள். அவர்தம் பெயர்களுக்கு முந்திக் கொண்டு நினைவுக்கு வருகிற கூடுதல் பெயர்களாகவே இவற்றைக் கருதமுடியும்.


டெண்ட் கொட்டகை போஸ்டர்களில் இடம்பெறுகிற எல்லாப் படங்களின் அனேகமாய் எல்லா நாயக நாயகிகளுக்கும் சகட்டு மேனிக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டது தான் க்ரியேடிவிடியின் உச்சங்கள்.


 டாடா பிர்லா என்றொரு படம் அதில் நாயகன் பார்த்திபன் நாயகி ரக்சனா. இதற்கான போஸ்டர் எப்படி இருக்கும் தெரியுமா..?         

 
   
ஜெமினிகணேசன் காதல் மன்னன். கமல்ஹாசன் காதல் இளவரசன். இதெல்லாம் தெரியும். சிவக்குமாருக்கு பெயர் மார்க்கண்டேயன். சரோஜாதேவிக்கு அபநய சரஸ்வதி. குஷ்பூவுக்கு என்ன பெயர் தெரியுமா..? காதல் மலர் குஷ்பூ. ஜெய்சங்கருக்கு தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட். கார்த்திக்குக்கு முத்துராம புத்திரர் என்று ஒரு போஸ்டரில் புதுமை செய்தார்கள். நவரச நாயகன் கார்த்திக் என்பதைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான மாற்றுப் பெயர் அது. ஆடல்நாயகன் பிரஷாந்த் ஆசை நாயகன் அஜீத் இதெல்லாம் கூடப் பரவாயில்லை. ஆக்சன் கிங் அர்ஜூன் தெரியும். மம்பட்டியான் மகன் என்று பிரஷாந்துக்குப் போஸ்டரில் பெயர் தெரியுமா.? கவுண்டமணி ஹீரோவாக நடித்த சில படங்களில் அவருக்கொரு பட்டம் வழங்கப்பட்டது. காமெடியர் கவுண்டமணி என்று. ஆங்கில டியர் போலவே ஒலிக்கும் மனதுள்.


இவற்றுக்கெல்லாம் சிகரம் எதுவென்றால் யார் என்னவென்றே தெரியாத புதுமுகங்கள் நடித்த படங்களுக்கும் தெரியாத வினாவுக்குத் தோன்றியதே வினா என்று பரீட்சை எழுதுகிற படிக்காத மாணாக்கனைப் போலப் போஸ்டர்களில் புகுந்து விளையாடுவார்கள்.


கற்பூர முல்லை படத்துக்கு அபிநயத்தாரகை அமலா அழகியநாயகன் ராஜா. பாடல் நாயகன் மோகன் பருவநிலா நதியா நடித்த பாடுநிலாவே. முத்தழகன் முரளி முல்லைக்கொடி குயிலி நடித்த பூவிலங்கு எல்லாவற்றுக்கும் மேலாக பாண்டியராஜனுக்கு விழியழகன் பாண்டியராஜன் சிரிப்பழகி பல்லவி நடிக்கும் ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் என்று போடுவார்கள்.


எங்கே சிக்கல் வரும் என்றால் ஆங்கிலப் படங்களுக்கான போஸ்டர்களை தயாரிக்கும் போது தான். விஞ்ஞான ரீதியான அற்புத அறிவுக்கூர்மை இல்லாமல் அவற்றைப் புரிந்து கொள்வது கடினம். ஆறுநாடு சிவனேசன் யார் என்று தெரியுமா..? கடைசியில் தான் சொல்வேன்.


ப்ரூஸ்லீக்கு புயலடி ப்ரூஸ்லீ என்று ஒரு படத்தின் போஸ்டரில் பேர் இருக்கும்.இன்னொன்றில் மின்னலடி ப்ரூஸ்லீ என்று இருக்கும். பெரும்பாலும் தமிழ் நிலத்தில் பாகுபாடின்றி நேசிக்கப்பட்ட கலைஞன் ப்ரூஸ்லீ என்பது அவரது போஸ்டர்களில் கூடப் பிரதிபலித்தன எனலாம். ஜாக்கி சானுக்கு இன்னும் ரசிகர்கள் அதிகம்.ஜாக்குவார் ஜாக்கி என்று போடுவார்கள். அதென்ன ஜாக்குவார் என்று கேட்கலாமோ..? நோன்நோ...


ராம்போ பட நாயகன் நடித்த எல்லா படபோஸ்டர்களிலும் ராம்போ என்றே அடைமொழி இருக்கும். எதுவும் அடைமொழி சிக்காவிட்டால் முதல் ஆங்கில நடிகரின் பெயருக்கு மேல் நல்லவன் என்றும் அடுத்த பெயருக்கு மேல் கெட்டவன் என்றும் எழுதப்படும் வினோத சமாச்சாரமெல்லாம் நடக்கும்.இதில் கஷ்டகஷ்டம் என்னவென்றால் அந்த இரண்டாவது பெயருக்குரிய கெட்டவன் உண்மையில் கெட்டவளாக எழுதப்பட வேண்டிய நடிகையின் பெயராக இருப்பது தான். இஷ்டத்துக்கு விளையாடி இருப்பார்கள். இன்றைக்கு நினைத்துப் பார்க்க மட்டுமாய் எஞ்சி இருக்கும் முன் பழைய காலத்தில் போஸ்டர்களுக்கென்று தனி பாஷை இருந்திருப்பதையும் சினிமாவின் குறுக்குவெட்டுச் சித்திரத்தின் கீழ்நுனியைத் தாங்கி நின்ற ஒரு பெரிய மக்கள் கூட்டத்தின் மனோபாவத்துக்குள் அவற்றுக்கென்று தனித்த இயங்குதளம் இருந்ததையும் அவதானிக்க முடிகிறது. இன்றைக்கு அந்த உலகில் யாருமே இல்லை எனலாம்.அல்லது அப்படி ஒரு உலகமே இல்லாமற் போனதை!


ஆறுநாடு சிவனேசன் என்றால் ஆர்னால்ட் ஸ்வாஷினேஹர் எனப்படுகிற புண்ணியவாளர்.அவருக்குத் தெரியாது தானொரு சிவனேசன் என்பது. சொல்லிவிடாதீர்கள் யாரும்.

 

வீ.எஸ் நரசிம்மன் . இளையராஜாவின் காலகட்டம் தொடங்குவதற்கு வெகுகாலம் முன்பே அதாவது 1958 முதலே பல்வேறு இசை அமைப்பாளர்களிடம் வேலை பார்த்தவர். சொற்ப எண்ணிக்கையிலான படங்களுக்கே இசை அமைத்திருக்கும் நரசிம்மன் இசையுருவாக்கத்தின் பெருவாரிப் பாடல்கள் சூப்பர்ஹிட் ரகத்தை சேர்ந்தவை. மேலும் சொல்லப் போனால் இளையராஜாவின் மகா பரபர காலமான எண்பதுகளில் நரசிம்மன் இசையில் உருவான பாடல்கள் ராஜா இசையிலிருந்து தனித்து ஒலித்த சிறப்பான பாடல்களின் வரிசையில் இடம்பெறத் தக்கவை என்றும் சொல்லலாம்.நரசிம்மனின் பாடல்கள் ராஜா இசையின் நேரெதிர் தன்மையில் துவங்குபவை. பல்லவிக்கு முந்தைய துவக்க இசைக் கோர்வையில் நிறைய புதிய முயல்வுகளை பரிசோதித்தார் நரசிம்மன். மொத்தப் பாடலுமே ஜாஸ் வகைமையின் இந்தியப் பகுதி உருவமாகக் கிளைத்தெழுவதை அதிகம் செய்து பார்த்தார். இசைக்கருவிகளின் உபயோகத்தில் அதிகம் பயன்படுத்தப்படாத சிலவற்றைத் தன் பாடல்களின் மைய இசைக்கான தேர்வாகக் கொண்டதும் நரசிம்மனின் சிறப்புக்களில் ஒன்று. அந்தக் காலகட்டத்தின் இசை நகர்தலுக்கு நேரெதிர் திசையில் நகர்ந்து பார்த்த தனி ஒருவராகவே நரசிம்மனைச் சொல்லலாம். காலம் கடந்த பிற்பாடு இளையராஜா என்னும் பெருவெள்ளத்தின் பாடல்களுக்குள் தாமும் ஒளிந்து கொண்டு இதெல்லாம் ராஜா பாட்டுத் தான் என்றே பலரும் கருதியதும் நிகழ்ந்தது.


நரசிம்மன் அடிப்படையில் வயலின் மேதை. வயலினே அவர் வாழ்வு. இளையராஜாவின் ஹவ் டு நேம் இட் ஆல்பத்தின் வயலினிசை வழங்கல் நரசிம்மனுடையது. காலந்தாண்டி நிலைத்த பல பாடல்களைத் தந்திருக்கிற நரசிம்மனின் என் விருப்ப டிஸ்கோக்ராஃபி இதோ


      ஷென்பகப் பூவைப் பார்த்து...ஒரு சேதி சொன்னது காற்று...(பாசமலர்கள்)


      ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்தை (அச்சமில்லை அச்சமில்லை)


      மலரே மலரே மலரே மலரே மாலைகளோடு மஞ்சளும் சூடுக மலரே..


      உயிரே உயிரே உயிரே ஊர்வலம் ஏகும் தோரணமாகும் தூறும் வானம் (எஸ்.பி.பாலசுப்ரமணியம்)

      வருகிறாள் என் தேவதை...
      வழியிலெங்கும் பூவிதை...
      நெடிய வானம் கடலில் கானம் நெஞ்சை அள்ளுதே..
      உன் நினைவு வந்து விழி சிவந்து கதைகள் சொல்லுதே....
   
அமானுஷ்யமான ஏகாந்தப் பாடல். இந்தப் பாடலின் துவக்க இசையில் நளினமான வீணையிசை தனித்தொலிக்கும்.இடையிசை சிற்சில இடங்களில் ராஜாவை நினைவுபடுத்தும். பாலசுப்ரமணியம் பாடிய விதமே அலாதியான சோகத்தை முன் மொழிந்து செல்லும்.


இரவு கூடப் பனியின் உருவில் கண்ணீர் வடிக்கும் நீ இல்லை இல்லை இல்லை என்றே இதயம் துடிக்கும்... இதயம் துடிக்கும் என்ற வரியைப் பாடுகையில் கேட்பவரை உருக்கி இருப்பார் பாலு.


சரணங்களுக்கு இடையிலான இசை வேகவேகமாய் நகர்ந்து மெல்ல ஷெனாயுள் சுருண்டு நின்று நிதானிக்கிற இடம் அருமை.இந்தப் பாடலை ஒத்த இன்னொரு பாடலாக பிரம்மா படத்தில் வருகிற எங்கிருந்தோ இளங்குயிலின் பாடலை சொல்லமுடிகிறது.அற்புதமான பாடல்.


  
விழிதீபம் உனைத் தேடும் புதுராகம் மனம் பாடும் சங்கீதமேடை...தெய்வீக ஜாடை...கடைக்கண் பார்வை.

மேகம் அந்த மேகம்...


இது இளமை எழுதும் கதை


காதல் நிலா தேய்ந்ததோ பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ மென்சோக மெலடி ப்ரியர்களுக்கான சாய்ஸ் இந்தப் பாடல்.

 

பூமேடையோ பொன்வீணையோ....நீரோடையோ...அருவியோ தேன்காற்றோ பூங்குயிலோ...

 

பூமேடையோ பாடல் நரசிம்மனின் சாகாவரப் பாடல். அத்தனை மெலடியை இளையராஜாவால் தான் சாத்தியப்படுத்தி இருக்க முடியும் என்று பலநெடுங்காலம் நம்பிக் கொண்டிருந்தேன். இது ராஜா பாட்டுத் தான் என்று ஒரு தடவை இரண்டு தடவை இல்லை பலமுறை சண்டை இட்டிருக்கிறேன். டேட்டாபேஸ்கள் செயல்பாட்டுக்கு வராத காலமல்லவா..? விஷயம் தெரிந்தவர்கள் சொல்லும்போது தான் இந்தப் பாடலுக்கான இசையை அமைத்தவர் வயலின் மேதை வீ.எஸ்.நரசிம்மன் என்று அறிய நேர்ந்தது.


          சாதாரண பாடலா அது..?

பரவசம் பொங்கும் தொடக்க இசை உடனே மெலிந்து மெல்ல மெல்லப் பல்லவி நோக்கி நீளும். வயலின் இசையைக் கொண்டு போய் பல்லவியாற்றில் கரைக்கிற இடம் அபாரம். நின்று நிதானித்து சுருண்டு சுருண்டு பூர்த்தியாகும் பல்லவியின் பின்னிசை.


முதல் சரணத்துக்கு முந்தைய இடையிசையில் ராகமழையைப் பொழியவைத்திருப்பார் நரசிம்மன். வயலினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல பாடல்கள் மற்ற எந்தக் கருவியின் ஆதிக்கமும் இல்லாமலே முடிந்து போகும் பொதுவாக.நரசிம்மனின் இந்தப் பாடலில் தபலா தனிமழை பொழியும். இணைப்பிசையை மத்திமமாகவும் மையப் பின் இசையை சற்றே அலங்காரவேகத்துடனும் அமைத்திருப்பது ரசம். பாடிய பாலசுப்ரமணியம் ஜானகி இருவரும் உயிராழத்தை நிரடி இருப்பார்கள்.


மிக சமீபத்தில் வெளியான உதயம் NH4  படத்தில் யாரோ இவன் யாரோ இவன் என்று தொடங்கும் ஒரு பாடலை இரண்டொரு தடவை கேட்டபோது இதை எங்கேயோ கேட்டிருக்கிறோமே என்று மனப்பல்லி சுவர் தாண்டிற்று.பிடிபடும் வரை பாடலைத் தொடர்வது நரகாவஸ்தை.பிடித்துக் கொண்டு வந்த பிற்பாடு அலாதியின்பம். மெல்ல மனதினுள் திரும்பத் திரும்ப பாடலின் ஸ்தாயியை லேசுபாசாய் மாற்றிப் பார்த்துக் கொண்டிருக்கையில் வந்து விழுந்தது.


            யாரோ இவன் யாரோ இவன் 
            என் பூக்களின் வேரோ இவன்...?
            உன் காதலில் கரைகின்றவன் 
            உன் பார்வையில் உறைகின்றவன் 
            உன்பாதையில் நிழலாகவே மறைகின்றவன் 
            என் கோடயில் மழையானவன் 
            என் வாடையில் வெயிலானவன் 
            கண் ஜாடையில் என் தேவையை அறிவானிவன்...


நரசிம்மனின் பல்லவியின் வேகம் மிகக் குறைந்து இயங்குகிறது. இங்கே யாரோ இவன் பாடலின் டெம்போ கொஞ்சம் அதிகரித்து ஒலிக்கிறது. அங்கே இசையாகவே ஒலிப்பது இங்கே விஸிலொலியாக மாறுகிறது. கண் ஜாடையில் என் தேவையை அறிவானிவன் என்பது நீ பேசுவாய் நீ பேசினால் எனும் வரிக்குண்டான பெயர்தல் அப்படியே யாரோ இவன் எனும் பல்லவியாய்த் துவங்குவதை உணரலாம்.


இரண்டு பாடல்களும் அப்படியே போலச்செய்தல் என்கிற சாட்டல்ல இங்கே சொல்லி இருப்பது. ஆனால் ஜீவீ ப்ரகாஷ் குமாரின் இசையில் உருவான யாரோ இவன் பாடலுக்கான ஆதிமூலம் பூ மேடையோ பாடல் என்பதில் ஐயமில்லை.


(வருவாளோ தேவி...எழுதியவர் கலைப்புலி தாணு பாடியவர் ஜெயச்சந்திரன் படம் யார். இசை நரசிம்மன்.)


மூக்குத்திப் பூமேலே கடைக்கண் பார்வை உன்னை ஒன்று கேட்பேன் புதியவன் அச்சமில்லை அச்சமில்லை பாசமலர்கள் ஆயிரம் பூக்கள் மலரட்டும் கண் சிமிட்டும் நேரம் 
வீ.எஸ்.நரசிம்மன் இசையில் புதியவன் இன்னுமோர் முக்கியமான படம். கேபாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் அமீர்ஜான் இயக்கிய படம்.பூவிலங்கு. அதன் சூப்பர்ஹிட் வெற்றியைத் தொடர்ந்து உடனே அதே நிறுவனத்துக்காக முரளியை வைத்து இயக்கிய படம் புதியவன். இதற்கான இசை நரசிம்மன் அமைத்தார். நானோ கண் பார்த்தேன். நீயோ மண் பார்த்தாய் ஒரு மனதாழ மெலடி. தேன் மழையிலே தினம் நனையும் பூந்தென்றலே... வா ரசிகையே சங்கீதம் நானே... இதுவொரு பீட் சாங். என் கோயில் இங்கே...என் தெய்வம் எங்கே ஏசுதாஸ் பாடிய சோகப்பாடல் கண்ணே கலர் கலரா தெரியுது கண்ணே என்ற மதுபோதைப் பாடல். வந்தது வசந்த காலம் பூமியில் புதிய கோலம்... இதுவுமொரு மேடைப் பாடல்.எல்லாப் பாடல்களுமே மிகப் பிரபலமாகின.


கலைவாணன் கண்ணதாசன் இயக்கத்தில் உருவான கண் சிமிட்டும் நேரம் இன்னுமோர் கவனத்திற்குகந்த வெற்றிப்படம்.இதன் இசை நரசிம்மன். ராகம் புது ராகம் ஏசுதாஸ் பாடிய பாடல். தானே பாடுதே மனம் எதையோ நாடுதே...சுசீலா பாடிய பாடல். காலத்தால் அழியாத வீ.எஸ்.நரசிம்மனின் இன்னொரு சூப்பர் ஹிட் பாடல் இந்தப் படத்தில் இடம்பெற்றது.எஸ்.பி.பீ சித்ரா இருவரும் பாடியது

    விழிகளில் கோடி அபிநயம்.
    மனம் பரிமாறும் அவசரம்.
    இளங்குயில் பாடுது ராகம்
    இசைத்திடத் தூண்டுது மோகம்.
    உனதிருவிழி
    அதில் நவரசம் 
    மலர்ப்புதுமுகம் 
    குளிப் பவுர்ணமி அதன் பரவசம்.மெல்லிய துவக்க இசை உடனே வேகம்பெற்று ரெக்கை கட்டும்.பிறகு மறுபடி சுருளும்.இந்தப் பாடல் ரேடியோ காலங்களில் மிக அதிகமாக விரும்பப் பட்டு அதிகதிக முறைகள் நேயத்தோடு கேட்கப்பட்ட பாடல்களில் ஒன்று.


நரசிம்மன் எண்ணிக்கையளவில் சொற்பமான படங்களுக்கே இசைதந்திருந்தாலும் கூட காலத்தால் அழியாத நிரந்தரிகளாக அவரது பாடல்கள் நம் செவிகளைத் தாண்டி மனங்களவாடி நிலைக்கின்றன.

வாழ்க நரசிம்மனின் புகழ்!

( ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...