???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 8 - புத்தகமும் பாட்டும் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   05 , 2016  03:04:18 IST


Andhimazhai Image

பாட்டுப் புத்தகங்கள் மீது எப்போது முதல் ஈர்ப்பு ஏற்பட்டது என யோசிக்கிறேன். சிறு வயதில் இருந்தே படம் சார்ந்த புத்தகங்கள் மீதான ஈர்ப்பு பெருமரத்தின் சிறுவிதை போல் மனதிலாழ்ந்து மெல்ல வளர்ந்து வரலாயிற்று. நேரடியாக சினிமாப் பத்திரிக்கைகளின் ஸ்பரிசம் வாய்த்ததென்னவோ பதின்ம வயது தைரியக் காலத்தில் தான். இருந்தாலும் சினிமா செய்திகள் வார மாத பத்திரிகைகளினூடாக கிடைத்துக் கொண்டு தான் இருந்தது. ரஜினி படங்களை சேகரித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் புத்தகங்களின் மீதான பெருங்காதல் உருவானது.

 

 


கிரிக்கெட் இந்தியாவின் மறைமுக மதம். அதன் உக்கிர காலம் 83இல் உலகக் கோப்பையை வென்றதில் தொடங்கி இருக்கக் கூடும். கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிகளின் வரத்து 88 முதல் தொடங்கிற்று. கலர் டீவீ ஆடம்பரம் அல்லது செல்வந்தம். முதல் டீவீ  கட்டாயம் ப்ளாக் அண்ட் ஒயிட் தான். இப்போது இதனை வாசிக்கிற இளையவர்களுக்கு நமுட்டுச் சிரிப்பு வரக்கூடும். என் பதினைந்து வயது என்பது ஒரு வீதியில் ஒன்று அல்லது இரண்டு தொலைபேசிகள் ஒன்று அல்லது இரண்டு கலர் டீவிகள் மொத்தம் ஒரு தெருவில் ஏழெட்டு டீவிகள் தான் இருந்தது.


டீவீ பார்ப்பதில் எத்தனை எத்தனை விசயங்கள் அடங்கி இருந்தன..? முதலில் இன்றைக்கு இருக்கும் அத்தனை சானல்கள் இல்லவே இல்லை. பெரும்பாலும் இந்தி நிகழ்ச்சிகள் விட்டால் தமிழில் விவசாயம் கல்வி ஆகியவற்றுக்குத் தான் பெரும்பங்கு. வாரம் ஒரு தடவை ஒலியும் ஒளியும் அதில் மொத்தம் ஐந்தே ஐந்து பாடல்கள். மாதத்துக்கு அதிக பட்சம் இருபத்தி ஐந்து பாடல்கள் தான் ரேஷன்.


வாரத்துக்கு ஒரு பாஷை வீதம் படங்களை ஒளிபரப்பும் டெல்லி. தமிழ் பதின்மூன்று வாரத்துக்கு ஒரு முறை வரும். அதிகம் அதிலும் ஒரு இந்தியக் கனவு தண்ணீர் தண்ணீர் வறுமையின் நிறம் சிவப்பு துலாபாரம் போன்ற படங்கள் தான் இடம்பெறும்.சக்கையாய் வாழ்க்கையும் உள்ளே எங்கோ ஒரு ஆழதூர இருளில் துளி தேன் நிரவலுமாகக் கழித்திருக்கிறோம்.


அந்தக் காலம் ரேடியோவின் ஆட்சி.நேயர் விருப்பம் தொடங்கி ஒரு படப் பாடல்கள் வரை கேள்வியின்பத்துக்குக் குறைவேயில்லை.தமிழ் என்றில்லை தென் மொழிகள் அனைத்தையும் ரேடியோவைத் திருகித் திருகிக் கண்டடைந்துவிடக் கூடிய வாய்ப்பு இருந்தது. இத்தனைக்கும் மேலாக சிலோன் ரேடியோவும் சற்றே ஏலம் மணக்கும் ஈழத் தமிழுமாய் நம் இசையையும் நிலத்தையும் நம்மை விட மதிப்பவர்களாகத் தான் ஈழத்தமிழர்கள் இன்றும் இருக்கிறார்கள்.


இத்தனை விவரங்களடங்கிய சூழலில் நானுண்டு என் ரஜினி படங்கள் உண்டு என்று வாழ்ந்து வந்த காலத்தில் தான் முதல் பாட்டுப் புத்தகத்தை வாங்கினேன்.,என்ன படமென்று நியாபகம் இல்லை. ஆனால் அப்போதைய எல்லா பாட்டு புத்தகங்களுமே விருதுநகரில் தயாரிக்கப்பட்டு வந்தன. சிவகாசி தான் ப்ரிண்ட் துறையில் இமயம். இன்றைக்கும் இது தொடர்வதால் அன்றைய பாடல் புத்தகங்கள் அங்கே இருந்து வந்ததில் வியப்பில்லை.


பாட்டுப் புத்தகங்கள் மொத்தமே ஐந்தாறு பக்கங்கள் தான். அதை விட மட்டமான பேப்பர் இல்லை என்ற ஆய்வுக்குப் பிற்பாடு கிட்டிய பேப்பரில் சிங்கிள் கலரில் தயாரிக்கப் பட்டன. இவ்வளவு ஏன்..? நடுப்பாட்டில் ஒரு சொட்டு இங்க் விழுந்தால் அந்தப் பக்கத்தை அப்புறம் படிக்கவே முடியாது. கொடூரமான தயாரிப்பு என்பேன். அதன் அடக்க விலை அப்போது இரண்டு அல்லது மூன்று பைசா இருந்தால் அதிகம். இருபத்தி ஐந்து பைசா விலை. எத்தனை பெர்செண்டேஜ் என்று நீயா நானாவே நடத்தலாம்.லாபமோ லாபம்.


பள்ளிகளுக்கு அருகாமை மாங்காய் விற்கும் கடைகளில் கூட பாட்டுப் புத்தகங்கள் விற்பனையாகும்.


பாட்டுப் புத்தகத்தின் வடிவமைப்பு தான் விசேஷம்.


உதாரணமாக இங்கே தளபதி படத்தின் பாட்டுப்புத்தகத்தை மனதால் அணுகலாம். முகப்புப் படமாக ரஜினியும் மம்முட்டியும் அருகருகே அமர்ந்திருக்கும் கறுப்பு வெள்ளைப் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். கீழே தளபதி என்ற பெயர் மாத்திரம் கொட்டை எழுத்தில் இருக்கும்.


உள்ளே முதல் பக்கத்தில் கதைச்சுருக்கம் என்று ஒரு பக்கம் இருக்கும். பெரும்பாலும் படம் வெளியாகும் முதல் தினம் வரை ஏன்..? படம் வெளியாகும் தினத்தில் வரிசையில் டிக்கெட்டுக்காகக் காத்திருக்கிற வரைக்கும் அந்த ஒரே பக்கத்துக்காகவே பெரும்பாலும் பாட்டுப் புத்தகங்கள் வாங்கப் பட்டன எனலாம்.


பெரிதாக கதை எதையும் வெளியிட்டு விட முடியாது. இன்று போலவா அன்றைய சினிமா..? மணிரத்னம் படத்தின் கதை படம் வெளியாகும் வரை ஒரு துளி கூட வெளிவராது. இது நிஜம்.,இது ஒரு பக்கம் இருந்தாலும் அந்தப் படம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சினிமாப் பத்திரிக்கைகளை எல்லாம் சேகரித்து அது பற்றிய தகவல்களிலிருந்து ஒரு கதைச்சுருக்கத்தை உருவாக்கி பாட்டுப் புத்தகத்தில் போட்டு விடுவார்கள் சமர்த்தர்கள்.


இப்போது இது என்ன பிரமாதம் என்று தோன்றும். கதை பற்றி எதுவும் தெரியாது. ஆனால் கதைச்சுருக்கம் என்று இரண்டு பத்திகளாவது போட்டாக வேண்டும். அதுவும் கேஸட் வெளியாகி படம் வெளியாகும் வரைக்கும் பாட்டுப் புத்தகங்களுக்கான நிசமான பெருமழைக்காலம்.விடமுடியாதல்லவா..?


வெள்ளிக் கிழமை தினத்தந்தி பேப்பரில் தளபதி பற்றி அதன் பீ.ஆர்.ஓ வெளியிட்ட தகவல்கள் குருவியார் கழுகார் பதில்கள் அதில் நடிக்கும் ஷோபனா மற்றும் ஸ்டில்களைக் கொண்டு யூகிக்கக் கூடிய குறைந்த பட்ச விபரங்கள் எல்லாவற்றையும் உருட்டி ஒரு கதைச்சுருக்கம் வெளியாகும்.


தளபதி

 

இரண்டு நண்பர்களுக்கு இடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டமே தளபதி படத்தின் கதை. ரஜினியும் மம்முட்டியும் இணை பிரியாத நண்பர்கள். மம்முட்டியின் மனைவி கீதா. ரஜினியின் காதலி ஷோபனா. (ஏனென்றால் அவர்கள் சேர்ந்தார்களா எனத் தெரியாததால் ரிஸ்க் எடுக்க முடியாது) நட்பின் பெருமையை உலகுக்கு உரைக்கும் இரண்டு நண்பர்களின் கதை. உனக்காக உயிரையே தருவேன் என்று ஒருவருக்கு ஒருவர் இணை பிரியாதவர்கள். அவர்களது வாழ்க்கையில் குறுக்கிடும் எதிர்ப்புக்களை எப்படி வெல்கிறார்கள் என்பதே கதை. (காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டின் வரிகளைக் கொண்டு ஓரளவுக்கு இரண்டு நண்பர்களுடைய வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் அன்பும் முக்கியத்துவமும் அளித்துக் கொள்ளும் கதையின் போக்கை ஊகிக்க முடியும் அல்லவா..?) இத்தோ'டு இன்னும் இரண்டு வரிகளாக இளையராஜாவின் இசையும் மணிரத்னத்தின் இயக்கமும் தளபதியின் பெரும்பலங்கள் என்று இன்னொரு வரியோடு முடியும் கதைச்சுருக்கம்.


சிந்தித்தால் ஒரு பெரிய பொருட்காட்சி அல்லது சர்க்கஸ் நடக்கையில் சற்று அருகாமையில் தண்ணீர்பாக்கெட் அல்லது மோர் கடலை எதையாவது விற்பவர்களது மொத்த வியாபாரமே நூறு ரூபாய்க்குள் இருக்கும். அதற்குள் ஒரு முதல் ஒரு லாபம் அல்லது நட்டம்.. இதைப் போலத் தான் சினிமா என்னும் மாயவசீகரத்தின் பெருங்கோயில் வாசலில் அருகம்புல் மாலை விற்கும் சிறுவர்களைப் போல பாட்டுப் புத்தகங்களின் வரத்தும் வியாபாரமும் இருந்தன.


ஏகத் தமாஷாக சில படங்களின் முன் கதைக்கும் நிசத்துக்கும் ஒரு வார்த்தை கூட பொருத்தமில்லாமல் கூட இருந்திருக்கின்றன.யாராவது பாட்டுப் புத்தகங்களில் உள்ளீடு செய்யப்பட்ட கதை ஊகங்களுக்கும் நிஜங்களுக்கும் இடையிலான பொருத்தங்களையும் விலக்கங்களையும் குறித்து தெவிரமாக இயங்கி முனைவர் பட்டத்துக்கான ஆய்வை சமர்ப்பிக்கலாம். அந்த அளவுக்கு தமிழ் நிலத்தில் பாட்டுப் புத்தகங்கள் காகித வவ்வால்களாகப் பறந்து பறந்து வீழ்ந்திருக்கின்றன.


என்னிடத்தில் வெகு நாட்களுக்கு ரோஸ் கலர் அட்டையுடன் பைண்டிங் செய்யப்பட்ட பாட்டுப் புத்தகங்கள் இரண்டு மூன்று வால்யூம்கள் இருந்தன. எனக்கும் பாட்டுக்கும் இடையிலான நதியைப் படகு போலவோ பாலம் போலவோ சென்றடையவைத்தவை பாட்டுப் புத்தகங்கள் தான்.இடையிடையே ஓரிரண்டு வார்த்தைகள் கறுப்படித்து இருக்கும்.அவற்றை யூகித்து அனேகமாக சரியான வார்த்தையைக் கண்டுபிடித்து விடுவேன். இல்லாமற் போகையில் நானாக உருவாக்கிய சொல்லாடல்கள் தான் கவிதைகளின் பெருங்கதவை எனக்குள் திறக்கச் செய்த சின்னஞ்சிறு சொற்சாளரங்கள் எனலாம். அவை இல்லாமல் நானேது..?


ரேடியோ கேட்பதற்கும் டீவீ பார்ப்பதற்கும் இடையிலான பெரும் வித்யாசம் கூடவே ஒரு செவ்வாழையைப் போலத் தொடர்ந்து வரக் கூடிய இயல்பு ரேடியோவுக்கு உண்டு. டீவீயைப் பார்த்துக் கொண்டே வேலைகளைப் பார்ப்பது கடினம் அல்லவா.? படிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் ரேடியோ ஒலித்துக் கொண்டே இருக்கும் வீடு எங்களுடையது. எதற்குத் திட்டு விழுமோ அதற்கு மட்டும் தான் விழும். மற்றவற்றுக்கெல்லாம் நோ திட்டு.பாட்டு தானே கேட்டுக்கோ என்று எல்லாருமே சொல்லிக் கொள்வோம்.


பல அபூர்வமான பாடல்களை முதன் முதலில் ரேடியோவில் தான் கேட்டிருக்கிறேன். பாட்டுப் புத்தகங்களிலிருந்து அடைந்த பாடல்களின் எண்ணிக்கை அதிகதிகம். சில பாடல்களின் வருகை வேறு வண்ணத்தோடு சற்று சிறப்புக் கலந்து இருக்கும்.அப்படியான பாடல்களில் ஒன்று தான் பனி விழும் மலர்வனம். ஒரு புத்தகத்தில் நான் அடைந்த பாட்டு அது பாலகுமாரன் எழுதிய இரும்புக் குதிரைகள் நாவலுக்கு என் வாழ்க்கையில் தனியோர் இடம் உண்டு. எங்கேயாவது காலட்சேபம் மாதிரி ஏற்பாடு செய்யுங்கள். இந்தக் கதையை அப்படியே வரி வார்த்தை மாறாமல் ஒப்பிக்கிறேன். ஒரு பிரதியின் பின் பக்கத்து உள் அட்டையில் என்றைக்கெல்லாம் அதைப் படித்தேன் என்று நூலக ரிஜிஸ்தர் போலக் கையொப்பமிடுவதை வழக்கமாகி வைத்திருந்தேன். எதிர் வீட்டு சூர்யாவுக்கும் பக்கத்து வீட்டு பாலாஜிக்கும் ஏதாவது சண்டை என்றாலும் கூட நான் இரும்புக் குதிரைகள் நாவலை இன்னொரு தடவை படிப்பேன். என்ன சம்மந்தம் என்றெல்லாம் கேட்கப் படாது. அது அப்படித் தான்.


அந்த நாவலின் மைய இழை விஸ்வநாதன் என்னும் பாத்திரத்துக்கும் காயத்ரி என்னும் பாத்திரத்துக்கும் இடையிலான முரண். விசுவின் மனைவி பெயர் தாரணி. இந்த மூன்று கதாபாத்திரங்களையுமே நம்மால் விரும்பாமல் இருக்க முடியாது. சிந்தித்தால் சிந்து பைரவி படத்தின் மைய இழை இதுவே என்பது புரியும். அந்தப் படத்தில் அன்னார் பாலகுமாரனார் ஒரு உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதற்குச் சிலபல வருடங்கள் முன்னரே பாலகுமாரன் இரும்புக் குதிரைகளை எழுதி விட்டார்.


           நிற்க..இது சிந்துபைரவி பற்றியது அல்ல.


அந்த நாவலில் பனி விழும் மலர் வனம் பாடலை அந்தப் பாத்திரம் வெகுவாக விரும்பும். என் வாழ்க்கையில் முதலில் நாவலில் வரிகளைப் படித்து விட்டுக் கிறுகிறுவென்றாகி ஒரு பாடலைத் தேடியடைந்த முதல் அனுபவத்தை அது தான் நிகழ்த்தியது.


வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் இடையிலான திரை - பந்தமென்பது சற்றேறக் குறைய ஆறு வருடங்கள் தான். அதிக பட்சம் இருனூற்றி ஐம்பது பாடல்களை இருவரும் சேர்ந்து உருவாக்கி இருப்பார்களா..? அவ்வளவு தான். இருந்தாலும் ஏதோ ஜெர்மன் அல்லது வியட்நாம் பிரிந்தாற் போல் எப்ப சேருவீங்க..? எப்ப திரும்ப ஒண்ணாவீங்க..? என்றெல்லாம் இன்றைக்கும் அவர்கள் இருவரிடமும் தனித் தனியாக இந்தக் கேள்வியை முன்வைத்துக் கொண்டே இருக்கிறோம். முதலில் எனக்கு ஏன் பிரிந்தார்கள் என்றொரு ஆத்திரமே இருந்தது. பிறகு அதெல்லாம் தணிந்து சரிங்க.. உங்க ரெண்டு பேரையும் சேர்ந்து ரசிச்சோம். தனித் தனியாவும் ரசிச்சோம். எங்களுக்கென்ன..? என்றாகிப் போனது. இப்போது இனி இருவரும் சேர்ந்தாலும் பழைய நிலாக்காலத்தின் அருகாமையில் கூட செல்லத் தக்க பாடல்களை இருவரும் சேர்ந்து உருவாக்க முடியாது என்பதே அடியேனின் தாழ்மையான கருத்து.

 

                  இன்னும் கொஞ்சம் நிற்க.. 
          
                 பனிவிழும் மலர்வனம்
                 உன் பார்வை ஒருவரம்...
                 இனிவரும் முனிவரும்
                 தடுமாறும் கனிமரம்.

                 பனிவிழும் மலர்வனம்
                 உன்பார்வை ஒருவரம்

எஸ்.பீ.பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது குரல்காலத்தின் மத்திமக் காலம். (முதல் குரல் காலம் 1978 வரை) (இரண்டாவது குரல் காலம் 1978--1989) மூன்றாவது குரல் காலம் 1989 -- 1998 அதற்கப்பால் இப்போது நாலாவது குரல்காலம் என்று வைத்துக் கொள்ளலாம். இது என் கணக்கீடு. எந்தக் கண்டுபிடிப்பும் அல்ல. இதனை நிறுவுவதற்கான அளவைகளை புலன்மயக்கத்தில் அலசுவோம்.) பாடிய பெரும்பான்மைப் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தன. அதிலும் இந்தப் பாடல் அற்புதம் என்று சொன்னால் வெறும் அற்புதம் என்றாகிவிடுமே...அற்புதத்தின் முடிவிலி.


இளையராஜா இந்தப் பாடலை மிக மெல்லிய ஸ்ட்ரிங் இசைக்கோர்வையிலிருந்து மெல்ல எழுப்பி வருவார். பல்லவி முடியும் வரை மெல்ல மேலெழும் இசை உடனே கிளம்பி வானம் தொட்டு மீளும்.கம்பிக் கருவிகளில் தொடங்கி இடையிசையாகக் குழலைப் பயன்படுத்துகிற பெரும்பான்மைப் பாடல்கள் இளையராஜாவின் தனித்துவமாய்ப் பெருகுவதை உணரலாம். இன்னொரு உதாரணம் என் வாழ்விலே வரும் அன்பே வா...


ஒரு தியானத்தைப் போல இந்தப் பாடலைத் தொடங்கும் பாலுவின் குரல் சரணங்களில் மெல்லக் குதித்தோடும் குழந்தைப் பிடிவாதமாக மாறும்.சரண ஈற்று வரிகளில் கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில் எரியும் விளக்கு சிரித்துக் கண்கள் மூடும் பனிவிழும் மலர்வனம்... உன் போர்வை ஒருவரம்.. என்பது வரைக்கும் தனக்குள் குறுகிக் கொண்டு மூச்சை அடக்கி மெல்லக் குதித்தோடிப் பல்லவிக்குள் தன்னை செருகிக் கொள்ளும் பாலுவின் குரல் தவிர இன்னொரு குரலில் இந்தப் பாடலைக் கற்பனை செய்து கூடப் பார்க்க இயலாது. தனித்துவம்.


இந்தப் பாடலை முதல் முறை கேட்ட போதே அதற்கு முழு அடிமையாக மாறினேன்.இன்றைக்கும் கேட்டால் அலுக்கவே அலுக்காத சிற்சில விஷயங்களில் ஒன்றாக ஒரு பாடல் என்பதைத் தாண்டிய சுயபந்தத்தின் அலமாரியில் இதற்கொரு தனி இடம் உண்டு.விருப்பத்தின் உச்சியில் இந்தப் பாடலில் வெறுப்பதற்கும் ஒரு அம்சம் உண்டு.அது பற்றி இன்னொரு அத்தியாயத்தில் விரிவாக அலச இருப்பதால் ஜஸ்ட் டீஸர் மட்டும் தந்து முடிக்கிறேன்.அது...


இப்படியான ஒரு பாடலை ஜீஜீ என்னும் நடிகையும் கார்த்திக் என்னும் குச்சிமீசை பாலகனும் எக்சர்ஸைஸ் மூவ்மெண்டுகளுடன் படமாக்கி இருப்பதைக் கண்டிக்க வழியின்றி என்னால் இயன்ற அளவு மாண்டேஜாக மனதுக்குள் படமாக்கி மகிழ்கிறேன்.அதனைப் பார்த்த நாளிலிருந்து.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...