இந்திய செவ்வியல் இசையின் பிதாமகன் என்று தாராளமாய் சலீல்தாவைச் சொல்வேன்.கிட்டத் தட்ட நாற்பதாண்டுகளுக்கு மேலாக இந்தியத் திரைவனத்தில் மொத்தமே 105 திரைப்படங்களுக்கு இசை அமைத்திருக்கும் சலீல் தா என்றழைக்கப்படும் சலீல் சவுத்ரி எழுபத்தியோரு வருடங்கள் வாழ்ந்தவர்.ஹிந்தி மலையாளம் கன்னடம் தமிழ் ஒரியா பெங்காலி தெலுங்கு மராத்தி என திரும்பிய திசையெலாம் தன் இசையால் நிறைத்தவர்.கேஜே ஜேசுதாஸ் ஜெயச்சந்திரன் மன்னாடே முகேஷ் லதாமங்கேஷ்கர் ஆஷா போன்ஸ்லே எஸ்.ஜானகி பீ.சுசீலா போன்ற பல நட்சத்திரக் குரலாளர்களின் சிறப்பான பாடல்களைத் தந்தவர்.ஜி.அரவிந்தன் பாலுமகேந்திரா மிருனாள் சென் ராமுகாரியத் போன்ற இயக்குனர்களின் விருப்பமான இசையமைப்பாளராகவும் அவரே இருந்தார்.
நவம்பர் 19 1925இல் மேற்கு வங்காளத்தில் ஹரினாவி கிராமத்தில் பிறந்த சலீல் சவுத்ரி அவரது இசைக்கோர்வைகளுக்காகவும் பல்வகை இசைக்கருவிகளைப் பயன்படுத்தி அவர் தந்த பலவிதமான இசைக்குறிப்புக்களுக்காகவும் பெரிதும் போற்றப் படுகிற இசைமேதை.யாராலும் யூகிக்கமுடியாத இசையின் தொடர்ச்சியைத் தான் எப்போதும் கண்டடைய முயல்வதாக ஒருமுறை குறிப்பிட்ட சவுத்ரி அதனை வெறும் வாக்கியமாக அல்லாமல் தன் வாழ்வின் அர்த்தமாகவே முயன்றுபார்த்தவர்.
சலீல் சவுத்ரி அதிக எண்ணிக்கையிலான படங்களை எப்போதும் விரும்பியதில்லை. அவரது பாடல்கள் பெரும்பாலும் கரை தாண்டிய அலைகளாகவே அமைந்தன.தன் பாடல்களைப் பெரும்பாலும் கொண்டாட்ட இசைக்குறிப்புகளுடனேயே துவங்க விரும்பும் சலீல்தா பெரும்பாலும் கவிதை விரும்பியாகவே இருந்திருக்கிறார்.இயல்பில் அவர் ஒரு கதை சொல்லி மற்றும் கவிஞரும் கூட.அந்த குணாம்சம் அவரது ஆளுமையின் ஒரு விள்ளலாகவே இருந்திருக்கிறது.எப்போதும் சிறந்தவற்றையே அவர் முயன்று கொண்டிருந்திருக்கிறார்.அவரது பாடல்கள் அவரளவில் மாத்திரமல்ல.இந்தியத் திரை இசையின் பொன்னேட்டில் சலீல்தாவின் படங்களும் பாடல்களும் அதிகதிகம் இடம்பெறத் தகுதிவாய்ந்தவை.மொழி அவருக்கு ஒரு பொருட்டல்ல என்று ஒரு கருத்தை முன் வைக்கலாம்.அல்லது மொழிகளைக் கடந்த இசைஞராகத் தான் சலீல்தா இருந்தார் என்றும் இதனைப் புரிந்துகொள்ளலாம்.மொழியின் அபாயத்தை எப்போதும் உணர்ந்த அம்மேதை ஒரு குறளியைத் தன் கட்டுக்குள்ளேயே வைத்திருக்க எத்தனிக்கும் மாயவாதியாகத் தான் இருந்திருக்கிறார்.
அவரது ஆரம்ப காலத்தில் அதிகம் இந்திப் படங்களைத் தான் தந்திருக்கிறார்.பிறகு மெல்ல தென் இந்திய இசையுலகத்தினுள் நுழைந்த சலீல்தா எண்ணற்ற காலத்தால் அழியாத படங்களில் பங்கேற்றுப் பாடல்களை உருவாக்கித் தந்திருக்கிறார்.இந்தி மலையாளம் சொற்பமாய்க் கன்னடம் தமிழ் ஒரியா தெலுங்கு மராத்தி என்று அவரது இசையேற்பு இருந்திருக்கிறது.
சலீல்தாவின் இசை ஏகாந்தத்தை முன்பில்லாத அளவில் திரைப்படுத்த விழைந்தது எனலாம்.உதாரணமாக மதுமதி.இந்தியத் திரைவானின் ஒப்பிலாக் காவியமான மதுமதியின் மகாவெற்றிக்கு அதன் பின் இசை பாடல் இசை மற்றும் பாடல்கள் என இசைசார்ந்த பங்கேற்பு பெரியது என்பதே நிஜம்.அந்தப் படத்தில் மொத்தம் பதினோரு பாடல்கள்.அதிலும் Suhana safar aur yeh mausam hasin சுஹானா சஃபர் அவ்ர் யே மோஸம் ஹஸின்..இந்தப் பாடல் நமக்குத் தரக் கூடிய அனுபவத்தின் உன்னதம் சொல்மொழி வசப்படாத பேரின்பம்.
Suhana safar aur yeh mausam hasin - (2)
Humein darr hai ham kho na jaye kahee
Suhana safar....
மிக மென்மையான வயலினிசையோடு தொனிக்கத் துவங்கும் இப்பாடல் மெல்ல உடன் குரல்களுக்கு மாறிப் பறவையொலிகளுடன் இயைந்து மெல்ல அங்கத இசையோடு நதியென ஓடித் தொடங்குகிறது.வனத்திற்கொப்பான மலைப்பகுதிகளில் அலைந்தபடி பயணிக்கிற நாயகன் பாடுகிற பாடல் இது.
Yeh kaun hansta hai phulo me chhupkar
Bahar bechain hai jiski dhun par
Yeh kaun hansta hai phulo me chhupkar
Bahar bechain hai jiski dhun par
Kahee gungun kahee runjhun, kee jaise nache jamin
Suhana safar.....
இதனைப் பாடும் முகேஷின் குரல் தேவதிரவ மயக்கத்தையும் ஏகாந்தத்தின் அத்யந்தத்தையும் ஒருங்கே குழைத்து ஒலித்திருக்கும்.லேசான அதிர்வை இரண்டு வரிகளுக்கு இடையிசையில் புகுத்தி இருப்பார் சலீல்தா.
இதன் இரண்டாவது சரணம் முடிந்து மூன்றாவதற்குள் பாடல் புகுந்து கொள்ளும் பாதையில் ஒரு மந்திரத்தைச் செய்திருப்பார் சலீல்தா. காட்சிப்படி அப்போது மலைமுகட்டில் நின்று கொண்டிருக்கும் நாயகன் திலீப்குமார் எதிரே தெரியும் சிகரங்களை நோக்கி ஹொஹோஹோ என்று குரலொலிப்பார்.முகேஷின் குரல் ஒலிக்கும். ஹொஹோ ஹோ என்று அதற்கான பதிலொலி காலங்களைத் தாண்டி கேட்பவர்களின் மனங்களில் இன்றைக்கும் வந்து கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம். காலங்களைக் கடக்கத் தெரிந்தவர்கள் கடவுளும் இசைஞர்களும் தான் என்றால் யாரால் மறுக்க முடியும்..?
இந்தப் பாடலுடைய தொடர்கண்ணிகளாக ஓராயிரம் பார்வையிலே வல்லவனுக்கு வல்லவன் வேதா இது ஒரு பொன்மாலைப் பொழுது நிழல்கள் இளையராஜா மற்றும் காதலின் தீபம் ஒன்று தம்பிக்கு எந்த ஊரு இளையராஜா தீம்தனனா தீம்தனனா ரிதம் ஏ.ஆர்,ரஹ்மான் மூங்கில் காடுகளே சமுராய் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய பாடல்களைச் சொல்லலாம்.
சலீல்தா இந்தித் திரையிசையில் புரிந்த ஜாலங்கள் பல.
Lo bhor hui panchhi niklay aawaz 1956
joomeru kali najraa film noukri 1954
naach re dharhi ke...latha and mannade heera mothi 1959
chand aur sooraj 1965 asha bosle
இந்தப் பாடலின் மைய இசையை மீவுரு செய்து மாற்றியமைக்கப் பட்ட பாடல் செம்மீன் மலையாளப் படத்தில் புத்தான் புறக்கரே என்ற பாடலாகும்.
ஜிந்தகி கெசி ஹெ பெஹலி மன்னாடே பாடியது படம் ஆனந்த் வருடம் 1970
நான் என்னும் பொழுது அழியாத கோலங்கள் தமிழில் எஸ்பிபாலசுப்ரமணியம் பாடியது.
naa jiya lage naa film aanand இரண்டும் ஒரே பாடலின் இருவுருவாக்கங்கள்
haal chaal mere apne film mukesh kishore
asha bhosle with jesudas in choti si baat 1975 jane man jane man tere do..
kaanha bole na latha and mannade 1976 sangat
sapna dheke mere koy aanand mahal 1977 latha and jesudas
vani jayram bhoom nach rahi aaj film daisy 1980
asha bhosle trishagni 1988
parivaar 1956 jhir jhir jhir badarwa..hemant kumar –lata
மலையாளத்தில் சலீல்தா இன்னும் ஆச்சர்யங்களை உருவாக்கினார்.பொதுவாகவே இந்திய அளவில் தான் இசையமைக்காத பாடல்களைக் கொண்ட படங்களுக்குப் பின்னணி இசையை மட்டும் இசைக்க இசைந்த மேதைகள் வெகு சொற்பமே. இளையராஜா தான் இசையமைக்காத எந்தப் படத்திற்கும் பின்னணி இசையை மாத்திரம் செய்திருக்கிறாரா என்ன..? அந்த அளவில் மலையாளத்தில் மாத்திரம் ஒருவர் பாடல்களுக்கும் இன்னொருவர் பின்னணி இசைக்கும் இசைந்து பணிபுரிந்திருக்கின்றனர். உலக அளவில் இவ்விரு பணிகளையும் தனித்துப் பகுத்தே கையாண்டு வருகின்ற போதிலும் இந்திய மனோபாவம் இதற்கு எதிரானதாகவே இருந்துவருவதையும் கவனத்திற்கொள்ள முடிகிறது. ஆனால் சலீல்தா தான் இசைக்காத பல படங்களுக்கு பின்னணி இசையை மாத்திரம் அல்ல அதன் டைடில் இசை மற்றும் தீம் ம்யூசிக் ஆகியவற்றை அர்ப்பணிப்போடு உருவாக்கி இருப்பது அவர் சரித்திரத்தின் சிறப்பம்சம் கீழ்க்காணும் இரண்டு பாடல்களுமே பூவண்ணம் போல நெஞ்சே என்ற தமிழ்ப்பாடலின் இருவெவ்வேறு மொழிமுயல்வுகள்.இசைப்ரியர்களுக்கு இவற்றைக் கேட்கும் போது சலீல்தா செய்திருக்கும் நுட்பமான மைக்ரோ வித்யாசங்கள் புரிபடுகையில் மனம் மயங்கி வேறாகும்.
பூவண்ணம் போல நெஞ்சம் அழியாத கோலங்கள். இப்பாடலை எழுதியவர் கங்கை அமரன். கிட்டத்தட்ட இதன் மலையாள மூலப் பாடலான பூமானம் பூத்துலங்கியே பாடலின் சரணங்களை ஒட்டியே தமிழ்ப்பாடலின் சரணங்களை அமைத்திருப்பார் கங்கை அமரன்.
அவரது நகாசுவேலைகளால் இரண்டு பாடல்களையும் கேட்கும் போது மனமொன்றி லயிக்கும்.
ஓ மேரே சாதீரே ஜஸ் ஜஸ் (O Mere, Saathi Re)
பூமானம் பூத்துலங்கியே எதோ ஒரு ஸ்வப்னம்...1978 மலையாளம் பாடியவர் கேஜே.ஏசுதாஸ்.
இந்தப் பாடலின் சிறப்பு சலீல்தாவின் சிறப்புக்களில் முக்கியமான ஒன்று என்பேன். இந்தப் பாடல் மாத்திரமல்ல அவரது பல பாடல்களும் சுற்றிச் சுழன்று தொடங்கிய இடத்திலிருந்து ஓங்கித் தாழ்ந்து நீண்டு சுருண்டு தொடரக் கூடியவை.சொற்றொடரிலேயே இத்தனை முரண்கள் என்றால் அதனை இசைமுயல்வில் கொண்டுவந்து கையாள்வதென்ன லேசான காரியமா..? அது தான் சலீல்தாவின் சிறப்பம்சமே..அவரளவுக்கு இத்தனை ஜிப்ஸி பாடல்களை வேறாரும் முயன்றதே இல்லை என்கிற அளவுக்கு அவரது தனித்தன்மையில் மிளிர்கின்றன பற்பல பாடல்கள்.
இந்தியில் மகா பெரிய ஹிட் ஆன மதுமதி சலீல் சவுத்ரி இசையின் ஒரு வைரமகுடம் என்றால் மலையாளத்தில் செம்மீன் தமிழில் அழியாத கோலங்கள் என சலீல் சவுத்ரி தொட்டெடுத்த பல படங்களும் அவற்றின் பாடல்களும் பின்னணி இசையும் பெரும் வெற்றிகரத்தையும் மயக்கும் அனுபவத்தையும் உறுதிசெய்தன எனலாம்.
கடலினக்கர போனோரே...காணா பொன்னின போனோரே....போய்வரும்போதெந்து
கொண்டு வரும் கை நிறைய... கேஜே ஏசுதாஸின் தேவலோகக் குரலில் இந்தப் பாடல் மொழி என்னும் வேலியைத் தாண்டி நிலங்களெங்கும் அபாரமாய் விரும்பப் பட்டது,வெளி நாடுகளிலும் கூட இந்தப் பாடல் இன்றளவும் ரசிக்கப் பட்டுவருவது கூறத்தக்கது. (இதே பாடல் இந்தியில் லெஹர் லெஹர் டேலேரே என்ற பாடலாக ஹரிஹரன் பாடி செம்மீன் லாஹெரென் படத்தில் இடம்பெற்றது. இப்பாடல் அப்படியே செம்மீன் பாடலின் மீவுரு ஆகும்) இதே படத்தில் பெண்ணாளே பெண்ணாளே என்ற பாடலாகட்டும் புத்தன் வலக்கரே...என்னும் பாடல் சுற்றிச் சுழலும் தன்மைக்காகவும் பாடிய குரல்களான ஏசுதாஸ் மற்றும் லீலா ஆகியோரது பங்களிப்புகளாலும் வயலார் ரவிவர்மாவின் அற்புதமான வரிகளுக்காகவும் கொண்டாடப் பட்டது. தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய செம்மீன் நாவல் படமாக்கப்பட்டு தேசிய விருதுகளை வென்றெடுத்தது. சலீல் சவுத்ரி இந்தப் படத்தில் சின்னஞ்சிறியதோர் தீம் ம்யூசிக் இசைத்திருப்பார். காலத்தால் அழியாத இசையின் துளித்துளிகளாய் விரியும்.
மன்னாடே என்கிற இந்திய இசையின் மகத்தான பாடகர்களில் ஒருவர் பாடிய மானச மைனே வரு என்னும் புகழ்பெற்ற பாடலும் கூட சலீல்தாவின் பொன்னிசைக்குச் சாட்சியம் கூறும் இன்னுமோர் பாடலே. மாடப்றாவே வா....ஜேசுதாஸ் அமானுஷ்யமான இசை மற்றும் தொனி. நின்று ஒலிக்கும் மைய இழை
மாமலையிலே பூமரம் பூத்த நாள் அபராதி ஜானகி
இவிடே காட்டின் சுகந்தம் ஜானகி ஜேசுதாஸ் ராகம் மலையாளம்
கரும்பு எனும் பெயரில் ராமு காரியத் இயக்கிய தமிழ்ப்படம் வெளியாகவில்லை. 1971 இதில் சலீல் இசையில் மூன்று பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.இந்தப் பாடல் சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்தாளப் பட்டிருக்கிறது. பாடியவர் ஏசுதாஸ். இதே பாடலை சுசீலாவும் தனியாகப் பாடியிருப்பார்.
தேன்மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும் மோகமிந்த தேன் கண்டேன் என்று தொடங்கும் பாடல் ஜானகி பாடியது மதனோற்சவம் என்னும் மலையாளப் படத்தின் தமிழாக்கம் பருவமழை என்ற பேரில் 1978இல் வெளியானது.
உள்ளம் எல்லாம் தள்ளாடுதே..உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே....அன்புமொழி பேசி என் ஆசை வலை வீசி கன்னி மீனை அள்ளிக்கொள்ளக் கைதாவுதே...
ஜேசுதாஸ் ஜானகி பாடிய இந்தப் பாடல் கடற்புர வாழ்வைப் பிரதிபலிக்கக் கூடிய பாத்திரங்களுக்கிடையிலான பாடலாக விரியும்.இசையின் மைய இழையாக அதுவரைக்கும் இல்லாத புத்திசையாக தாளக் கருவிகளை வேகமாகவும் மிக மெதுவாகவும் ஒருங்கே இணைத்து அமைத்திருப்பார் சலீல்தா.இணைப்பிசை மிக மென்மையான கோர்வையில் இருக்கும்.லேசான அயர்ச்சியைப் பிரதிபலிக்கும் குரல்கள் இன்னும் இப்பாடலை சுவையாக்கி இருக்கும்.விஜயகாந்தின் முதல் படம் இதுதான்.1980 ஆமாண்டு வெளியானது.
மாதலப்பூ போலொரு என்ற பாடல் ஸ்வப்னம் மலையாளம் 1973 ஜானகி பாடியது
நெல்லு மலையாளம் 1974 நீலப்பொன்மானே...எண்டே நீலப்பொன்மானே...யேசுதாஸ் பாடியது.உற்சாகமான இந்தப் பாடலுக்கும் பூவண்ணம் பாடலுக்கும் இடையே இசையில் லேசான ஒற்றுமை இருக்கும்.
கல்யாணப் பிராயத்தில் பெண்ணுங்கள் சூடுன்ன கண்மதப்பூ கன்னம்பூவுண்டோ கூடே வன்னே ஆண்கிளி ச்சூடு தன்னே போ.. எனத் தொடங்கும் பாடல் பாடியது சுசீலா.சக்ரவாக ராகத்தில் விரியும் இந்தப் பாடலை எழுதியவர் வயலார் ரவிவர்மா.சலீல்தாவின் துள்ளல் இசைக்கு இந்தப் பாடல் ஒரு சான்று.
காடறு மாசம் ஏழு ராத்திரிகள் ஏசுதாஸ்
மானே மானே விளி கேட்கு... ஜேசுதாஸ் ஸ்வப்னம் 1973
நீ ஒரு காவிய தேவதே...ஜேசுதாஸ் ஸ்வப்னம் 1973
காடு கருத்த காடு அனுஷ்ய மாத்யம்...நீலப்பொன்மான் மலையாளம் ஏசுதாஸ் இந்தப் பாடலின் இடையிசை அமானுஷ்யம் பொங்கும் வனாந்திரத் தன்மை மிகுந்து ஒலிக்க வல்லது.எங்கோ அடியாழத்தில் கோரஸ் ஒலி கூடவே பயணிக்கும் ரயில் சன்னலோரத்து மழைப்போது மாதிரி சொல்லில் அடங்காத இன்பமாய் விரியும் பாடல் இது.
நிஷாசுரபிகள் ராசலீலா மலையாளம் நிஷாசுரபிகள் வசந்தசேனகள் நடனமாடான் வருகையோ கிருதி நடனமாடான் வருகையோ...ஜெயச்சந்திரன் (துவக்க இசை பூவண்ணம் இசையிலிருந்து வேறொன்றாய்க் கிளைக்கும்.)
கேளி நளினம் யேசுதாஸ் துலாவர்ஷம் இசை சலீல்தா.
மாமலயிலே அபராதி மலையாளம்
விஷூக்கனி மலையாளம் பூவிலி பூவிலி பொன்னோ...ஏசுதாஸ்..துள்ளல் இசைப் பாடல்.
ராக்குயிலே உறங்கூ...ஈ கானம் மறக்குமோ ஏசுதாஸ்
ஓர்மைகளே...ஏசுதாஸ் சலீல் சவுத்ரி ப்ரதீக்ஷா மலையாளம்
நாடன் பாட்டிலே மைனா...ஜானகி ராகம் மலையாளம் 1975
சுவன்ன சிறகுகள் மலையாளம் ஜேசுதாஸ்
காக்க கரும்பிகளே... ஏழு ராத்திரிகள்
கோகிலா
சஞ்சே தங்காளி மை சொகளு....கோகிலா கன்னடம் ஜானகி
இதிக நீ தூராதே இதிக நீ தூராதே...
சுவாசினி ஹென்னாதே நதிமுண்டே நின்னசுகா வேறெ முகா..
பீபி ஸ்ரீனிவாஸ் மற்றும் சுசீலா பாடிய இப்பாடல் சலீல் சவுத்ரியின் கன்னட சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்று.கேட்பவர் மனதைக் கரைய வைக்கும் பாடல்.மென் சோகவகைப் பாடல் இது.
தான் இசை அமைத்த எல்லா மொழிகளிலுமே ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்டோடு தான் ஆரம்பமாகிறார் சலீல் தா.இதை அவர் திட்டமிட்டு செய்திருப்பதாகத் தெரியவில்லை.இந்திய அளவில் பெரும்பேர் பெற்ற இயக்குநர்களின் படங்களிலேயே பணி புரிந்துவந்திருக்கும் சலீல்தாவுக்குக் கிடைத்த அல்லது அவர் ஒத்துக்கொண்ட அத்தனை படங்களுமே இசைக்கு முக்கியத்துவமும் எழுந்தியங்குவதற்கான வாய்ப்பும் உள்ள படங்களாகவே அமைந்ததும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.
ஹிந்தியில் மதுமதி சாந்த் கி சூரஜ் மிருகயா சங்கட் மேரே அப்னே ஆனந்த் தமிழில் அழியாத கோலங்கள் தூரத்து இடி முழக்கம் மலையாளத்தில் செம்மீன் ஏழு ராத்திரிகள் மதனோல்சவம் அபராதி கன்னடத்தில் கோகிலா என சலீல்தா இசையமைத்த பெருவாரியான படங்கள் இந்திய விருதுகளையும் வசூல் வெற்றிகளையும் ஒருங்கே பெற்ற படங்களாக அமைந்தது தற்செயலல்ல என்றே தோன்றுகிறது.
மன்னாடே மற்றும் கே.ஜே.ஜேசுதாஸ் ஆகிய இருவரது குரல்கள் மீதும் பெரும் மரியாதை கொண்டவராக இருந்திருக்கிறார் சலீல்தா.மன்னாடேயை விட ஒரு படி மேலாக தாஸேட்டன் தான்.சலீல்தா இசை அமைத்த எல்லா மொழிகளிலும் தாஸேட்டனை பயன்படுத்தி இருக்கிறார்.மேலும் சொல்வதானால் தாஸின் வழமையான குரலுக்கு எதிரான அல்லது மேலுங்கீழுமான பலவிதமான குரல் தொனி இத்யாதிகளைப் பல பாடல்களிலும் முயன்று வெளிப்படுத்த தூண்டுதலாயிருந்திருக்கிறார்.ஜெயச்சந்திரன் பாடிய பூவண்ணம் போல நெஞ்சே பாடல் தமிழ் உள்ள வரைக்கும் சலீல்தாவின் புகழோடு ஒலிக்கும் என்பது ஏற்புக்குரிய போற்றுதல் தானே..?
மேலும் சலீல்தாவின் இன்னுமோர் சிறப்பம்சம் அவர் மொழிகளுக்கு இடையே தொடர்ந்து விளையாடிய விருப்ப விளையாட்டாகவே இசை இருந்திருக்கிறது எனலாம்.ஒவ்வொரு மறக்க முடியாத பாடலையும் அதன் ஸ்தாயி தொனி மைய இசை உடனிசை பாடிய குரல்கள் ஆகிய பலவற்றையும் மாற்றி மாற்றி அடுத்தடுத்த மொழிகளில் முயன்றிருக்கிறார் சலீல்தா.சிறப்பம்சமாக செம்மீன் பாடல்களையும் பூவண்ணம் பாடலையும் அவர் பல மொழிகளிலும் கொணர்ந்ததோடு மாத்திரமல்லாமல் மலையாளத்திலேயே மூன்று வெவ்வேறு பாடல்களாக வனைந்து வனைந்து மாற்றி இருப்பது குறிப்பிடத் தக்கது.இசைமேதை சலீல்தாவின் இரண்டு மகன்களில் ஒருவரான சஞ்சய் சவுத்ரி தந்தையின் காலத்திற்குப் பிற்பாடு கவனத்திற்குரிய இசை அமைப்பாளராக ஹிந்திப் படவுலகில் இயங்கி வருகிறார்.
சலீல்சவுத்ரி என்பது ஒரு பெயரல்ல.இசையில் தன்னைக் கரைத்துக் கொண்டு தனக்குள் இருந்து இசையை அகழ்ந்தளித்த இந்திய இசையின் மறுக்கவும் மறைக்கவும் மறக்கவும் முடியாத பேராசான்களில் முதன்மையான ஒருவர் சலீல்தா.மேலும் சொல்வதானால் தன்னை நிரந்தரித்துக் கொண்ட இசை இயக்கம் சலீல்தா.
( ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)