அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை 0 அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல் 0 ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்! 0 விவசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் ட்விட் 0 பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 2 - முத்தமிட்ட தென்றல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   23 , 2016  07:43:22 IST

கார் டிரைவர்கள் என்றதும் வெள்ளை யூனிஃபார்ம் அணிந்து தலையில் ஒரு தொப்பி போட்டுக் கொண்டு சல்யூட் செய்யும் உருவம் நினைவுக்கு வருகிறதா..?அப்படியான ட்ரைவர்கள் அல்ல.ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ஒருங்கிணைந்த ஸ்டாண்ட் இருக்கும்.அதில் ஒருபக்கம் அம்பாஸிடர் தொடங்கி எல்லா ரகக் கார்களும் வரிசை கட்டி நிற்கும்.அதற்கடுத்தாற் போல் 407 எனப்படுகிற மினி வேன் மினி பஸ் வகையறாக்கள் நிற்கும்.அவர்களது உலகம் சாலைகளால் ஆனது.சொந்த வண்டி வைத்திருப்பவர்கள் சம்பளத்திற்கு ஓட்டுகிறவர்கள் ஆக்டிங் டிரைவர்கள் எனப் பலரும் புழங்கும் இடம்.


திருநகர் ஒண்ணாவது ஸ்டாப் தான் தலைமை அகம். அப்படிச் சொல்ல முடியாது. திருநகர் ரெண்டாவது ஸ்டாப்பில் தொடங்கி ஒண்ணாவது ஸ்டாப் வரைக்கும் இடதுபுறம் வண்டிகள் நிற்கும்.எதிர்ப்பக்கம் ட்ராவல் ஆபீஸ்கள் சிலது இருக்கும். அவசரத்துக்கு பெரிய வண்டி எடுப்பதென்பது அரிதினும் அரிதான விஷயம்.முக்காலே முக்கால் வாசி டூர்கள் எனப்படுகிற சுற்றுலா புக்கிங் தான்.வண்டி வாடகை எவ்வளவு ட்ரைவர் படி இத்யாதிகள் வழியில் செலுத்த வேண்டிய கட்டணங்கள் எல்லாம் பேசி கிலோமீட்டருக்கு இவ்வளவு என்று முடிவாகி இன்ன கிழமை இத்தனை மணிக்கு என்று ஒப்பந்தமாகி அட்வான்ஸ் தரப்பட்டு அந்த தினம் அதே நேரம் டாண் என்று வண்டி சொன்ன முகவரிக்கு முன் நிற்கும்.அதன் பேர் தான் ட்ராவல்ஸ்.


இப்போது வண்டிகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொறுத்துவது சர்வ சகஜமாகி விட்டது. முன்பெல்லாம் வாகன பயணிகளின் பிரார்த்தனை என்பது நல்லதொரு ஆடியோ சிஸ்டம் தான். செல்லவேண்டிய தூரத்தைப் பாடல்களால் வகுப்பதன் பெயர் தான் பயணம்.தொந்தரவில்லாத வாகனம் அமைவது முன்வினைப் பயன்.தொல்லை தராத ட்ரைவர் அமைவது என்பது அவரவர் விதி.அதைவிட பயணிக்கிற பிரயாணிகள் சகஜமான மனிதர்களாக அமைவதென்பது தான் அந்தந்த ஜென்மத்தின் தலை எழுத்து என்பது ட்ரைவர்களின் பாயிண்ட் ஆஃப் வ்யூ.

 

திருநகர் ஸ்டாண்டில் வரிசையாக இருக்கும் ட்ராவல் ஆபீஸ்களில் என் பள்ளிகாலத் தோழன் லோகுவின் அலுவலகமும் ஒன்று.அதன் வாசலில் தான் ட்ரைவர்கள் சங்கமமே.ஒன்று இரண்டல்ல கிட்டத் தட்ட இருபதுக்கு மேற்பட்ட ட்ரைவர்கள் ஒன்று கூடுவார்கள்.அப்போது நான் செல்பேசிக் கடை ஆரம்பிக்காத தருணம்.கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு எதிர்காலத்தை அண்ணாந்து நோக்கிக் கொண்டிருந்த நேரம்.பகலில் ஒரு குறிப்பிட்ட நேரம் தினமும் அங்கே ஆஜராவோம்.நாங்களும் ட்ரைவர்களும் கலந்து தனித்து டாப் அடிப்போம்.அப்போது ட்ரைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.


குடிப்பழக்கம் இல்லாத ட்ரைவர்கள் கிடைப்பது யோகம்.குடிப்பழக்கம் உள்ள ட்ரைவர்கள் இரண்டு வகை.குடித்துவிட்டு வட்டையை (ஸ்டியரிங்) பிடிக்காதவன் நல்லவன்.குடித்து விட்டு வண்டி ஓட்டுபவன் பாவி.துரோகி.இந்த நம்பகத்தின் மீது தான் ட்ரைவர்களின் பேருலகம் இயங்குகிறது.ட்ரைவர்களில் முத்து கண்ணன் கோபி எனச் சிலருடன் நெருக்கமாகப் பழகும் போது அவர்களது உலகத்தின் சகல தெருக்களையும் திக்குகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.


எத்தனை ஆயிரம் கிலோமீட்டர்களைப் பயணித்திருக்கிறார்கள் என்பது ட்ரைவருக்கான கூடுதல் தகுதி.ஆக்சிடெண்ட் ஆகாத ட்ரைவராக தொடர்வது தான் தெய்வ அருள்.பெரும்பாலும் ட்ரைவர்களுக்கு தெய்வ நம்பிக்கை அலாதியாக இருக்கும்.தாங்கள் வணங்கும் தெய்வமாகவே வாகனத்தைப் பார்க்கிறவர்கள் உண்டு.ஒரு வண்டியை எப்படி கிளப்பி எப்படித் தெரு தாண்டி எப்படி நெடுஞ்சாலையில் கிளர்த்திக் கொண்டு போகிறான் என்பதில் தொடங்குகிறது ட்ரைவர் ஒருவனின் வித்தை.இத்தனைக்கும் மேலாக அவன் சிரித்த முகமாகவும் இருந்துவிடக் கூடாது.கடுகடுவென்றும் அமைந்துவிடக் கூடாது.


இந்த ட்ரைவர் தான் எனக்கு வேண்டும் என கண்டிஷன் போடுகிற சவாரிகளும் உண்டு என்பது ஒவ்வொரு ட்ரைவருக்கான நற்சான்றிதழ்.ஒரு சுற்றுலா வாகன நிறுவனத்தின் உரிமையாளர் என்பவன் தன் வாகனம் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது எப்போதும் கவனத்தை அதன் மீதே வைத்திருக வேண்டும்.அவனால் நிம்மதியாகத் தூங்க முடியாது என்பதே நிஜம்.எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது தான் வாழ்க்கை.அப்படியானால் சாலைகளை நம்பிச் சென்று மீளும் வாகனப் போக்குவரத்தென்பது இன்னமும் நுட்பமானது தானே..?


கோபி என்கிற கோபிநாதன் சக ட்ரைவர்களிடம் பெரிதாகப் பேசிக்கொண்டிருப்பவனில்லை.எப்போதாவது ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு சிகரட் பிடிப்பான்.டீ சாப்பிடுவான் என்றாலும் அரை கப் தான் அவன் அளவு.குடிப்பழக்கம் அறவே கிடையாது.திருப்பரங்குன்றத்தைத் தாண்டி எங்கேயோ அவன் வீடு.காலையில் கிளம்பி வந்தானென்றால் இரவு டூட்டி முடிந்து தான் வீட்டுக்குச் செல்வான்.மதியம் ஒரு அரை மணி நேரம் கிடைக்கிற இடத்தில் கண் அசர்வான்.அவ்வளவு தான் கோபியின் தினப்படி.


வினாயகா ட்ராவல்ஸ் அண்ணாச்சி என்னைக் கூப்பிட்டு ரவி என் சொந்தக் காரங்க திருச்சி ஏர்போர்ட்ல ட்ராப்...நம்ம கோபி தான் ட்ரைவர்.நீங்க ஃப்ரீயா இருந்தா கூடப் போயிட்டு வந்துர்றீங்களா.?என்றார். எந்த வண்டி என்றேன்.பெரிய வண்டி தான் பயணிக்கப் போவது மூன்றே பேர்.ஆனால் லக்கேஜ்கள் நிறைய்ய என்பதால் வேன் புக் செய்திருக்கிறார்கள்.
சரி அண்ணாச்சி..என்றேன்.பார்த்துக்கிடுங்க என்றார்.நானும் காயின் பூத்திலிருந்து அம்மாவுக்கு ஃபோன் செய்து ஒரு முக்கியமான வேலையாக திருச்சி வரைக்கும் சென்று வருவதாக சொன்னேன்.தயாராக ட்ராவல் ஆபீஸில் காத்திருந்தேன்.நானும் வருகிறேன் எனத் தெரிந்ததும் கோபிக்கு மகிழ்ச்சி..எம்ப்டியா ரிடர்ன் அடிப்பது அதுவும் ஒரே தினத்தில் போய் திரும்புவது லேசாக எரிச்சல் தரக் கூடிய நிகழ்வு தான்.அதில் உடன் வர ஆள் கிடைத்தால் சவுகர்யம்.சொர்க்கம்.


பார்ட்டி இரண்டு பேர் ஐம்பது வயது தாண்டியவர்கள் இரண்டு பேர் முப்பதுகளில் இருந்தார்கள்.பாட்டு எதுவும் ப்ளே பண்ணவா எனக் கேட்டான் கோபி.உங்களுக்கு வேணம்னா வெச்சிக்கங்க.எங்களுக்கு வேணாம் என்றார் பார்ட்டி.அவ்வளவு தான்.முன் பக்கம் மாத்திரம் சத்தம் ஒழுகும் வண்ணம் அறுபதுகளின் பாடல்களை மெல்ல ஒலிக்கவிட்டபடி திருச்சி வரைக்கும் பயணப் பட்டோம்.நல்ல முறையில் பார்ட்டியை ஏர்போர்ட் வாசலில் இறக்கி விட்டபோது மணி ஒன்று.

 

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் ஒரு மிலிட்டரி ஓட்டலுக்கு அழைத்துச் சென்றான் கோபி.சூடும் சுவையுமாக கண் மல்க காரசாரமாய் சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டோம்.வெளியே வந்ததும் தம் அடித்து விட்டு கெளம்புவமா என்றான் கோபி..நான் ம்ம் என்றதும் வண்டியில் முன் பக்கமே அமர்ந்து கொண்டேன்.உள்ள போயி உக்காந்துக்கங்க பாவா என்றான் கோபி..வேணாம் கோபி என்றேன்.

 

கீழே டீவீஎஸ் என்றெழுதிய டூல்பேகில் இருந்து இரண்டு கேஸட்டுகளை எடுத்தவன் ஏதோ ஒரு யோசனையில் ஒரு கேஸட்டை ஒலிக்க விட்டான். கேட்டால் இனிக்கிற ஒலித்தலில் பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே...மலர் மீது தேங்கும் தேனே....இனிக்கும் தேனே...எனக்குத் தானே...என்று மலேசியா தாலாட்டினார்...


அடுத்த பாடல் என்ன வரப்போகிறது என ஒவ்வொரு பாடலும் அது இடம்பெற்ற வரிசையே மனதைக் கிளர்த்துவதாக இருந்தது.கோபி என்பவன் எனக்கு ட்ரைவராகத் தெரியவில்லை. ஒரு தேர்ந்த ஒலிப்பதிவுக் கலைஞனின் தொழில்நுட்ப மேசைக்கு பக்கவாட்டில் அமர்ந்து கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு வந்தது.ஒவ்வொரு பாடலையும் கோபி ரசிக்கிற அழகே தனி.இந்த இடத்தைக் கவனிங்க பாவா..இந்த ட்யூனைப் பாருங்க..இங்கே திடீர்னு நிப்பாட்டிடுறார் பாருங்க ம்யூசிக்கை என்று அவன் அலசிக் கொண்டே வந்தது ஆயிரம் நுட்பங்களை அள்ளித் தெளித்தது என்பேன்.


மொத்தம் பதினெட்டுப் பாடல்கள்.அவற்றுக்கிடையே இருக்கக் கூடிய ஒற்றுமைகள் உப நுட்பங்கள் இவற்றை எல்லாம் தாண்டி கேட்க வாய்க்கிற அத்தனை ஆயிரம் பாடல்களிலிருந்து தனக்கான பிரத்யேக கேஸட்டைத் தான் தேர்வெடுக்கிற பாடல்கள் அவற்றை பதிவு செய்கிற வரிசை ஆகியவற்றின் துணை கொண்டு தனக்கே தனக்கான இசைப்பேழையாக கோபி தயாரித்துக் கொண்டிருப்பது கண்டு அதிர்ந்தேன்.இத்தனைக்கும் அன்றைய தினத்தில் எனக்கு இருந்த திரைப்பாடல் ஞானம் குறித்தெல்லாம் எனக்கே ஓரளவுக்குத் திருப்தி இருந்த தருணத்தில் இப்படி ஒருவனை சந்திப்பேன் என்றோ இப்படியான கேஸட் ஒன்றைக் கேட்பேன் என்றோ கனவில் காணும் கனவிலும் நினைத்திருக்கவில்லை.


பாவா...போன பாட்டு மலேசியா ஜானகி பாடினதில்லையா...இந்தப் பாட்டும் மலேசியா ஜானகி தான்..என்பான் அடுத்து தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ ஒலிக்கும்.அடுத்த பாட்டு தொடங்கும் முன் பாஸ் போட்டு விட்டு சொல்வான்..இந்தப் பாட்டு கேளுங்க...ரகுவரன் என்னா நடிகர் தலைவா...என்று என்ன பாட்டாயிருக்கும் என்று பார்த்தால் தென்றல் என்னை முத்தமிட்டது...இதழில் இனிக்க இதயம் கொதிக்க எல்லோரும் பார்க்க என்று உமாரமணனும் கிருஷ்ண சந்திரனும் பாடிய பாடல் ஒலிக்கும். 

 

கிருஷ்ணசந்திரன் ஒரு மலையாளி. தமிழில் மிகக் குறைவான பாடல்களையே பாடி இருக்கிறார். இவர் ஒரு டப்பிங் கலைஞரும் கூட. தமிழில் சுரேந்தர் நினைவுக்கு வரலாம்.கிருஷ்ணசந்தரின் குரல் மிருதுவும் கனமும் கலக்கும் புள்ளியில் கிளைக்கும் குரல்.இந்தப் பாடல் சாகாவரமானது.இதன் வரிகள் வைரமுத்து.உடன் பாடியவர் உமாரமணன். இசை இளையராஜா.


இந்தப் பாடலைப் பொறுத்தவரை இளையராஜா பாடல் துவக்கத்தில் ஒரு மென்சோக இழையுடன் ஆரம்பிக்கிறதை கவனிக்கலாம்.தனக்குள்ளாகவே முடிந்து துவங்கி முடிந்து தொடரும் இதன் ஆரம்ப இசையுடன் மெல்ல இணைந்து சரணத்துக்கான இசை மறுபடியும் மென்சோகமாய்த் தொடர்கிறது.என்னை நானே காவல் காத்தேன் என்றதும் வரக் கூடிய இசை ராஜவேலை.மொத்தப் பாடலுமே தீர்க்கமாகவும் அதே நேரத்தில் ஆழமான ஒரு அமைதியைக் கலைக்கும் சன்னமான பாடலாக ஒலிக்கிறது.

 

முதலில் கோபி சொன்ன விஷயம் எனக்குப் புரியவில்லை.அதுவரை எனக்குத் தெரிய பாடல்களைத் தொகுப்பது என்றால் இதெல்லாம் மோகன் பாடல்கள் சிவாஜி பாடல்கள் என்று நடிகரை சார்ந்தோ இளையராஜா பாடல்கள் அல்லது கண்ணதாசன் பாடல்கள் என்றோ தொகுப்பதை நானும் வழக்கமாகக் கொண்டிருந்தேன். இல்லாவிட்டால் எஸ்பிபாலு ஹிட்ஸ் அல்லது ஜேசுதாஸ் ஹிட்ஸ் என்று இருக்கக் கூடும்.

 

கோபி தனக்கான கேஸட்டைத் தானே தயாரித்திருந்தார்.மேலோட்டமான லேபிள் ஏதும் இல்லாமல் ஒவ்வொரு பாடலுக்கும் முன்னும் பின்னும் எந்தப் பாடல் வரவேண்டும் என்பதைத் தனக்கே உண்டான ரசனையிலிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது புரிந்தது.அதன் இரண்டாவது ஸைடில் முதல் பாடலைக் கேட்டதும் இது என்ன படம் கோபி எனக் கேட்டேன்.சிரித்துக் கொண்டே மல்லிகை மோகினி என்ற கோபி இதன் இசை யாருடையது எனக் கேட்டார்.நான் ராஜா தான் என நினைக்கிறேன் என்றதும் மறுபடி தலையசைத்தவாறே இல்லை பாவா.,..இது ஜீகேவெங்கடேஷ்.ராஜா இவர் கிட்ட வேலைபார்த்திருக்கிறார்.அதும் தவிர ராஜாவோட பாடல்பாணிக்கும் ஜீகேவி மாஸ்டரோட பாணியோட செல்வாக்கு நிறையவே இருக்கும் என்றார்.


அது யார் ராஜாவுக்கே மாஸ்டரா..?என்று ஆரம்பத்தில் வியந்தேன்.மேலும் சொன்ன கோபி இந்தப் பாட்டை பாடியதும் அவர் தான். இதே பாட்டை எஸ்.பி.பி பாடியும் இருக்குது. இந்த கேஸட்டுக்கு மாஸ்டரோட வாய்ஸ் செட் ஆவும்னு பதிஞ்சுருக்கேன் என்றார்.ஒரு பாடலைப் பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன்.
ஒரு பாடலைப் பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உனைத் தேடினேன் இன்று நேரில் காண்கிறேன்

(ஒரு பாடலைப் பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன்.)

எந்தன் காதலில் இந்த தேவதை குரல் ஓசை கேட்கிறேன்
உந்தன் ஞாபகம் வரும்போதெல்லாம் நான் வானில் பறக்கிறேன்
விழி மோகனம் தரும் மந்திரம்..விழி மோகனம் தரும் மந்திரம்
அது மோகக் காவியம்

(ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன்.)

பனிமல்லிகை மண மோகினி உன்னை மறக்க முடியுமோ
ஓராயிரம் கவி பாடினும் இதை ஈடு செய்யுமோ
ஏழுலகமும் சென்று தேடினும் இதைக் காணக் கூடுமோ
ஏழுலகமும் சென்று தேடினும் இதைக் காணக் கூடுமோ

(ஒரு பாடலைப் பல ராகத்தில்)

மழைக்காலங்கள் வரும் வேளையில் உனை மேகமாக்குவேன்
இளம் சோலையில் எந்தன் ஜாடையில் உனைத் தென்றலாக்குவேன்
என் நெஞ்சமே ஒரு ஆலயம் உனை தெய்வமாக்குவேன்

(ஒரு பாடலைப் பல ராகத்தில்)

 


சில பாடல்கள் தான் முதல்முறை கேட்கும் போதே நேராக மனசுக்குள் ஆயுள் சந்தா கட்டிவிட்டு அட்டகாசமாய் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளும்.பல பாடல்கள் கேட்டுக் கேட்டுத் தான் பற்றிக் கொள்ளக் கூடும்.முதல் வகைப் பாடல்களுக்கென்று தனித்த காரணங்கள் இருக்கக் கூடும் அல்லது அந்தப் பாடலோ குரலோ மொழியோ இன்னபிறவோ கூடக் காரணமாய் மாறும்.இந்த மல்லிகை மோகினி பாடலை இப்போது கேட்டாலும் துவரங்குறிச்சி தாண்டுகையில் முதல்தடவை கோபியின் வாகனத்தில் அதனைக் கேட்டுவிட்டு மனசயர்ந்த ஞாபகம் நிரடித் ததும்பும்.

 

கண்ணதாசனின் வரிகளும் பாடிய வெங்கடேஷ் மாஸ்டரின் தனித்துவக் குரலும் அபூர்வமான கேட்பு இன்பத்தை நேர்த்துகின்றன.மேலும் இளையராஜாவின் இசைநதியோடு இயைந்து செல்வதாகவும் அதே நேரம் தனக்கேயுண்டான தனித்துவம் பொங்கும் வளைவு நெளிவுகளைக் கொண்டதாகவும் இசையமைத்திட ஜீகேவியால் மாத்திரமே முடிந்திருக்கிறது என்பேன்.இந்தப் பாடலை மறக்க முடியாத பாடலாக மாற்றி இருப்பார் ஜீகேவி.


பின் நாட்களில் இதே மல்லிகை மோகினி படத்தை வெகு சிரமப் பட்டு பார்த்தேன். அமானுஷ்யமான கதையுடனான படம். எல்லாப் பாடல்களுமே சிறப்பாக இருக்கும். மிக முக்கியமான இன்னொரு பாடல் என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள் 
எஸ்.பி.பாலு பாடியது புலமைப்பித்தன் எழுதிய இப்பாடலும் தவற விடக் கூடாத வைரமே.


 எந்தப் பாடலுக்கு முன்னும் பின்னுமாய் எந்தப்பாடலைக் கேட்கலாம் என்பது தான் தொடர்ந்து பாடல்களைக் கேட்டுப் பிரியமான ரசிகனின் சுதந்திரம் என்பதே கோபீன் கூற்று.இப்படித் தான் கேட்கவேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை.இன்னும் சொல்லப் போனால் சிச்சுவேஷன்களின் தேவை கருதி ஒரு படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெறுகிறது என்றால் அவற்றின் தொகையாகத் தான் அந்தப் படத்தின் கேஸட் இருக்க முடியும்.ஆனால் நாம் அதனை அப்படியே எப்போதும் கேட்கமுடியாது.ஒரு படத்தில் ஒரு அல்லது சில பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்வதும் மற்றவற்றைக் கைவிடுவதும் இயல்பாக நடந்துவிடுகிற ஒன்று தான்.ஆனால் கோபியின் சித்தாந்தம் என்பது திரை இசைப் பாடல்களுக்கு இடையே ஆழமான ஒரு ஆன்மா இருக்கிறது.அதனை மேலோட்டமாக விளக்குவது கடினம்.அப்படியான ஒன்றைச் சென்றடைய வேண்டிய தூரமாக அல்லாமல் கண்டடைய வேண்டிய ஞானமாகக் கொள்வதே சிறப்பு.உனக்கான கேஸட்டை நீ தயாரித்துக் கொள்ள வேண்டாமா என்று போகிற போக்கில் கேட்டுவிட்டார் கோபி.


எனக்கான அரிதினும் அரிதான பாடல்களடங்கிய கேஸட்டுக்களை சீடீக்களை நானே தயாரித்துக் கொள்ளத் தொடங்கினேன்.கோபியிடமிருந்து தான் அந்த விஷயத்தைக் கற்றுக் கொண்டேன்..இன்றைக்கும் எப்போதெல்லாம் பயணங்களைத் திட்டமிடுகின்றேனோ அது கார் என்றால் காரில் ஒலிப்பதற்கான பாடல்களையும் பஸ் ரயில் அல்லது விமானம் என்றால் காதில் ஹெட் செட்டினுள்ளே ஒலிப்பதற்கான பாடல்களையும் பார்த்துப் பார்த்து நானே பதிந்து கொள்கிறேன்.அவ்வப்போது கோபியின் குரல் மனதினுள் ஒலிக்கும்.பாவா...எந்த பாட்டுக்கு அடுத்து எந்தப் பாட்டு வரணும்கிறது தான் பாவா விஷயமே...எதை வேணாலும் எதுக்கடுத்து வேணாலும் கேட்டுற முடியாது...சீரா...ஒரே ஃப்ளோல இருக்க வேணாமா..?என்பான்.


கோபியின் பாடல்கள் வரிசை கிட்டத் தட்ட எனக்கும் இணக்கமாயிருந்தது.சமீபத்தில் தலையெல்லாம் வெளுத்து அதே கோபியின் சற்று வயதான கோபியைச் சந்தித்த போது என்னவெல்லாமோ பேச்சுக்கு நடுவே அந்த திருச்சி ட்ரிப் பற்றிப் பேச்சு வந்தது..இப்போது ஒரு மில் ஓனரிடம் மாத சம்பளத்துக்கு ஓட்டுகிறார் கோபி.


பென் ட்ரைவ்ல பாட்டுப் பதிஞ்சா க்வாலிடி குறைஞ்சுடும் பாவா...தனித் தனி சீடிக்கும் டீவீடி எம்பித்ரிக்கும் இடையிலயே பாட்டொட தரம் குறையத் தான் பாவா செய்யும்.நான் என்ன சொல்றேன்னா...எல்லாப் பாட்டையும் நம்மால அப்டி பண்ண முடியாட்டாலும் நமக்கே நமக்குன்னு பிடிச்ச பாடல்களை மாத்திரம் சீடில நல்லா ஸ்பேஸ் குடுத்து பதிஞ்சு கேட்கணும் இல்லைன்னா ஒரிஜினல் சீடி தான் லாயக்கு..ஐனூறு பாட்டு ஆயிரம் பாட்டுன்னு கம்ப்ரெஸ் பண்ணி கம்ப்யூட்டர்ல ஏத்தி கேட்குறதெல்லாம் ஒரு பொழப்பா பாவா...?பத்துப் பாட்டுன்னாலும் சும்மா உசுருக்குள்ள கேட்க வேணாமா.? என்றார்.


          கோபி கோபி தான். சீரியஸ் ஆக யோசிக்கிறேன்.

 

( ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்).

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...