???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 53 - தனித்தொலிக்கும் நல்லிசை 1- யுவன் ஷங்கர் ராஜா - ஆத்மார்த்தி எழுதும் தொடர்.

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   30 , 2017  09:09:35 IST


Andhimazhai Image
(அரவிந்தன் முதல் 7ஜீ ரெயின் போ காலனி வரை யுவனின் இசையூடான பயணம்)
 
 
யுவன் ஷங்கர் ராஜாவின் பலம் என்ன?இளையராஜாவின் இளையபுத்திரன் என்பது நிச்சயமாக பலம் மற்றும் பலவீனம் இரண்டுமாகப் பார்க்கப்படுவதே நியாயம்.அப்படித் தான் பார்த்தார்கள்.அரவிந்தன் படத்தின் மூலமாக அறிமுகமாகும் போது என்ன செய்யப்போகிறார் யுவன் என்று பார்த்த பார்வையில் பெரும் வரவேற்பெல்லாம் இல்லை.அடுத்து வந்த வேலை என்ற படமாகட்டும் கல்யாண கலாட்டா படமாகட்டும் யுவனுக்கான கையெழுத்தாக அமையவில்லை.பிற்பாடு வந்த அவரது நாலாவது படமான பூவெல்லாம் கேட்டுப்பார் யுவனுக்கான ஒரு சரியான துவக்கமாக அமைந்தது. ஒரு முழுமையான ஆல்பமாகவும்.
 
 
 
அஜீத் நடித்து முருகதாஸ் இயக்கிய தீனா படம் ஒரு குறிப்பிடத் தகுந்த படம். அப்போது தான் அஜீத் ஒரு மாபெரும் நட்சத்திரமாக உருவாகி இருந்தார். முன்னரே பத்துக்கும் மேற்பட்ட சூப்பர்ஹிட் படங்களை நடித்திருந்தாலும் கூட வாலி தான் அவருக்கான முழுமையான முதல் அத்தியாயத்தைக் கடக்க உதவிற்று. நட்சத்திர வனத்தினுள் அமர்ந்து கொள்வதற்கான இருக்கை கிடைத்த பிற்பாடு முழுவதுமாக  நாயகனுக்கான ரசிகர்களை மனதில் கொண்டு அவர்களது படவுருவாக்கம் தொடங்கும். அப்படி பார்த்துப் பார்த்து உருவாக்கப் பட்ட முதல் படமாக தீனா அமைந்தது.
 
 
 
தனக்குக் கிடைத்த நவயுவ வாய்ப்பாகவே யுவன் தீனாவைக் கையிற்கொண்டார். மொத்தம் ஆறு பாடல்கள். ஆறுமே ஆரோகண மாலைகளாகவே உண்டாக்கப்பட்டன. பாடல் தொடக்கத்தில் இருந்து முற்றுப் பெறுகிற வரை எப்போதுமே கீழிறங்காமல் ஸ்தாயி ஏறிக்கொண்டே போன தீனா படத்தின் பாடல்கள் தெரிந்தும் தெரியாமலும் வழிபடப்பட்டன.
 
 
வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடல் முற்றிலுமாக ஒரு நாயகபோற்றிப் பாடல். சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் பாடல் பரவசத்தின் சாறு. நீயில்லை என்றால் பாடல் பாடிய குரலுக்காகவே பலமுறை கொண்டாடப் பட்ட பாடல். மொத்தத்தில் தீனா தகர்க்க முடியாத ஆல்பமே.
 
 
மனதைத் திருடிவிட்டாய் படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிற்பாடும் அந்தப் படத்தின் நகைச்சுவை ட்ராக்குக்கென்றே தனியே கொண்டாடப் படுகிற படம். இதன் இசை யுவன் என்றாலும் மஞ்சக் காட்டுமைனா கொஞ்சிக் கொஞ்சிப் போனா பாடல் அபார உயரத்தைத் தொட்டது. மற்ற பாடல்கள் மத்தாப்பூக்கள்.
 
 
துள்ளுவதோ இளமை படம் இசைத்தட்டு வெளியாகி கிட்டத் தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்தே படம் வர நேர்ந்தது. இந்தப் படம் பல முக்கியஸ்தர்களுக்கான முதலாரம்பம் என்ற வகையில் மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய படமே. வெளியான காலத்தில் படமும் அதன் உட்பொருளும் பலமாகக் கண்டனத்திற்கு உள்ளானது இதற்கு நெகட்டிவ் அந்தஸ்தையே ஏற்படுத்தியது. முன்பே பரவலாக அறியப்பட்ட பாடல்கள் இந்தப் படத்திற்கான ஆரம்ப வருகையாளர்களை உற்பத்தி செய்து தந்தது. இத்தனை முரண்களுக்குப் பிற்பாடு இதன் இயக்குனர் எனத் தன் பேரோடு தன் அப்பாவும் இயக்குனருமான கஸ்தூரிராஜாவின் பேரைப் பகிர்ந்துகொண்டார் செல்வராகவன். அடுத்து ஒரு காதல் கொண்டேன் வரும் வரை இதெல்லாமும் தேவைப்பட்டது.
 
 
துள்ளுவதோ இளமை படம் எனக்கு மறக்க முடியாத இசைத்தட்டு என்பேன். படம் வெளியாக ஆகிற தாமதம் திட்டமிட முடியாத திருப்பம். எதிர்விளம்பரம் என்றே கூறத்தக்க அளவில் பாடல்கள் பெரிதும் சலித்துவிடுவதற்கான அபாயமும் உண்டு. ஆனால் பெரிதும் கொண்டாடப் பட்ட பாடல்களைக் கொண்ட மீரா போன்ற படங்கள் பலவற்றை முன் உதாரணம் சொல்ல முடியும். படம் வருகிற போது பாட்டுப் போதும் படம் வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்துவிடுவான் ரசிகன். தீண்டத் தீண்ட மலர்ந்ததென்ன பாடலை படம் வெளிவரும் முன்பே ஒரு சில ஆயிரம் முறைகள் கேட்டிருப்பேன். ஸீடீ தேய்ந்தாலும் இந்தப் பாடல் தேயவே இல்லை. பாலா என்ற படத்தில் ஒரு பாடல் கூறத்தக்கது.
 
 
பாலா இயக்கிய நந்தா யுவன் இசைத்த படங்களில் முக்கியமான ஒன்று. இதன் பின்னணி இசை தனித்தொலிக்கும் நல்லிசையாக மலர்ந்தது. முன்பனியா முதல்மழையா பாடல் அதுவரை யுவன் பால் ஈர்ப்பாகாமல் தனித்து நின்றுகொண்டிருந்த வேரூன்றிய டிபிகல் இளையராஜா ரசிகர்கள் என்ன பண்றாப்ல இந்தப் பய்யன் என்று பார்த்துக் கொண்டிருந்த பலருக்கும் திருப்தி அளித்த முழு முதல் ஸ்கோர் ஆயிற்று. யுவனின் க்ராஃபில் மிக முக்கிய பாடல்களின் வரிசையில் பாலா இயக்கிய நந்தா படத்தின் முன் பனியா பாடல் இடம்பெற்று நிலைத்தது. 
அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பாடலில்? முன்பே சொன்னாற்போல் இந்தப் பாடல் ஒரு அதிரி புதிரி ஹிட் என்பதில் ஐயமில்லை. அதைத் தாண்டி இது போன்ற பாடல்களை எப்போதாவதுதான் தரிசிக்க முடியும் என்பது உண்மை.
 
 
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே.. ஹோ"
 
 
நேர்க்கோட்டுத் தன்மையிலிருந்து இடம் கிடைக்கையிலெல்லாம் கீழே இறங்குவது, மறுபடி நேர்க்கோடாய் மாறிப் பயணிப்பது இந்தப் பாடலின் மையம். உறுத்தலற்ற நகாசு வேலையாக, "மனசில் எதையோ" எனத் தொடங்கும் தொகையறா உடனொலிகளின் கூட்டு வழிபாடாக மாறும். "கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு" எனும்போது ஒற்றைக் கணிப்பொறிக் கட்டளைக்குத் தலைசாய்த்து ஒருங்கே திறந்து கொள்ளும் ஒரு லட்சம் மின்னணு சன்னல்களைப் போலக் கேட்கிற மனசின் கரைசல் ஏகும். 
 
 
இந்தத் தொகையறாவின் ஈற்று வரி வலிக்க வலிக்கக் கிள்ளும், கன்னத்தைத் திருகும் நெடுநாள் பின்னர் பார்த்தத் தோழமையின் கரம் தொடுதலாய் ஞாபகம் கிளறும், "மனசு திறந்து சொல்லடி வெளியே" என்று ஆகி முடியும். இதன் இணை தொகையறாவும் முகத்தில் பூசப்பட்டப் பிறந்தநாள் கேக்கைப் போலத் தனித்தும் கலந்தும் சந்தோஷத்தைப் பிரதிகள் செய்யும். அழகாய் அலங்கரித்த குழந்தைக்கு சுண்டு விரலின் நுனி கொண்டு கண் மை அகழ்ந்து கன்ன மை செய்வாளே அன்னை, அது போல, "ஏலோ ஏலோ ஏலேலேலோ" என்றாகி நிறையும்.
 
 
 
உற்று நோக்குகையில் இந்தப் பாடலின் சரணமெட்டு இதைப் பாடிய எஸ்.பி.ஜால சுப்ரமணியம்  இந்த இரண்டு விஷயங்களுக்குள் எதோ கண்கட்டி வேறொரு முன் பழைய பாடலின் வாசலில் சேர்ப்பிக்கிறது நம்மை. காலகாலம் ரசித்த ஒன்று வேறொன்றாகி மனசுக்குக் கன்னங்களிருந்தால் அதை மாறி மாறி முத்தமிட்டாற்போல் இன்னொரு நெடிய காலம் கிறங்கிக் கிடப்பதற்கான உட்பொருளாய் விரியும்.
 
 
 
இளையராஜாவின் அந்தப் பாடல் அவ்வளவு எளிதில் இந்தப் பாடலுக்குள் பிடிபடாது என்பதே யுவனின் சமர்த்து. அதிலிருந்தும் இங்கே வந்து சேர முடியும். அந்தப் பாட்டு காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில் தம்பிக்கு எந்த ஊரு படத்தின் சாஸ்வதநதி. முன் பனியா பாடல் ஒரு அற்புதம். இன்னும் விரித்துச் சென்றால் இந்தப் பாடலின் பின்னணி இசையின் போக்கு அதன் தாளக்கட்டு மட்டும் ரஹ்மானின் "காதல் ரோஜாவே" பாடலைக் கூட மிக மிக லேசாகத் தொட்டுச் செல்வதை உணர முடியும். பாடல் முடியும் இடம் ஊரெல்லையில் வனாந்திரத்தை அறிவிக்கும் ஒற்றைத் தனிமரமாய்த் தனித்து அடங்கும். பின்னர் வியாபிக்கும் நிச்சலனம்.
 
 
 
மௌனம் பேசியதே பாலாவிடமிருந்து கிளைத்து அமீரின் ஆரம்பமாய் அமைந்த படம். ஷங்கர் மஹாதேவனின் "என் அன்பே என் அன்பே" தனித்திருத்தலின் சாரமற்ற வாதையைப் பறைசாற்றிய ஒரு பாடல். இந்தப் படமே ஒரு ஆண்களின் மேன்ஷன் அறை போல தூரத்து தேவதைகளைச் சென்றடையும் வினோதங்களின் சித்திரமாய் மலர்ந்தது. தனித்தனியே குறிப்பிட வேண்டியதில்லை. "Jolly score of Yuvan" வரிசையில் மௌனம் பேசியதே மிக முக்கிய படம். இளையராஜாவின் பின்னணி இசையின் பலங்களை யுவன் எடுத்தாண்டது இன்னும் அழகு. சந்ததியின் சாயலொன்றும் குற்றமல்லவே.
 
 
 
வாழ்வின் அவலத்தை எள்ளும் "ஆடாத ஆட்டமெல்லாம்" பாடல் கார்த்திக்கின் ஆரம்பகால நற்பாடல்களில் ஒன்று. அதுவரை மெல்லின வஸ்துவாகவே பார்க்கப்பட்ட கார்த்திக்கின் குரல், சற்று கனமான பாடலென்றால் கூட்டு சேர்த்து விடப்பட்டது. கமல்ஹாசனுடன் "அன்பே சிவம்" பாடலை இணைந்து பாடினார் கார்த்திக். அந்தப் பாடலின் தெரியாத குரலாய்க் கார்த்திக் ஒலித்தார். "தேரடி வீதியில் தேவதை வந்தா" பாடலில் மாணிக்க விநாயகத்துடன் சேர்த்துவிடப்பட்டார்.
 
 
 
"நா மட்டுமே பாடுவேன்யா" என்று கார்த்திக்கின் தனித்த கையொப்பமாக மௌனம் பேசியதே படத்தின் "ஆடாத ஆட்டமெல்லாம்" பாடல் சிநேகனின் திருத்தமான வரிகளுடன் மலர்ந்தது. 
 
 
 
"புன்னகைப் பூவே" இன்னொரு குறிப்பிட வேண்டிய யுவன் ஸ்கோர். இந்தப் பாடலின் கேஸட் வருகையின் போது, முதல் வாசிப்பிலேயே என்னவோ "வீனஸ் வீனஸ் பெண்ணே" பாடல் பிடித்துப் போனது. ஸெமி-மாண்டேஜ் முறைமையில் கதைக்குள் கதை சொல்லல் பாணியில் தனித்த ஆல்பம் ஒன்றைப் போல் இந்தப் பாடலின் படமாக்கல் கவனம் ஈர்த்தது. தேவையற்ற பண்டங்களாகப் பார்த்த பாடல்களுக்கு இப்படியான மீவுருவாக்கம் அவசியம்தானே. "வானம் தூவும் பூமழையாய்" எனும் இதன் இன்னொரு பாடலும் சலிக்காமல் இனிக்கும்.
 
 
இந்த இடத்தில் முன்னும் பின்னுமாய் ஒரு பத்துப் படங்களைப் புறக்கணிக்கலாம். பெரிதாக வந்திருக்க வேண்டிய பாப்கார்ன், தென்னவன், குறும்பு, உள்ளம், எதிரி, பேரழகன், அது, போஸ் போன்ற படங்கள். 
 
 
 
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய "மலர்களே" பாடல் ஒரு தீர்க்கமான ஏகாந்தப் பாடல். அபூர்வமாய் இணைந்த தாமரை - யுவன் கூட்டணி சொற்பப் பாடல்களில் இது ஒன்று.
 
 
 
அரியர்ஸ் பரீட்சை எழுதி ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தாற்போல் பழைய ஜில்ஜிலாக்கு அத்தனைக்கும் பதில் சொல்லும் படமாகப் பேருரு கொண்டார் செல்வராகவன். "படத்ல நா அடிக்கறேன், பாட்ல நீ அடி" என்று பேசிவைத்துக் கொண்டாற்போல் காட்டடி அடித்தார்கள். இளையராஜாவுக்கு பாரதிராஜா போல், அல்லது பாரதிராஜாவுக்கு இளையராஜா போல் இந்தப் படத்தைச் சொல்ல முடிகிறது. இளமையின் அத்தனை இசைத்தேவைகளையும் பூர்த்தி செய்கிறாற்போல் முழுமையான அதே நேரத்தில் துல்லியமான ஆல்பமாக "காதல் கொண்டேன்" உருவானது.
 
 
 
அதுவரை பெரியதொரு ப்ரேக் அமையாமல் அதே நேரத்தில் சிலபல ஹிட்டுகளைத் தந்திருந்த ஹரீஷ் ராகவேந்திராவுக்கு இரண்டு இன்னிங்ஸில் இரண்டு செஞ்சுரிகளைப் போல், "தேவதையைக் கண்டேன்" பாடலும், "தொட்டுத் தொட்டு" பாடலும் அமைந்தன. ஒரு நிமிடமே ஒலிக்கும் இதன் தீம் ம்யூசிக்கும், படத்தில் ஆங்காங்கே தனித்து அமைந்த மேலும் பல பிட்டுகளும் யுவனின் இசை ஆளுமையைப் பிரதிபலித்தன. அடுத்த காலகட்டத்தின் ஒற்றை "சிகப்பு ரோஜா"வாய் காதல் கொண்டேன் படம் அமைந்தது. 
 
தனுஷ், சோனியா அகர்வால், செல்வராகவன் போன்றோர் உருவானார்கள். யுவன், நா. முத்துக்குமார் போன்றோர் உறுதியானார்கள். காதல் கொண்டேன் அழுத்தந்திருத்தமாய்ப் பேசிற்று. 
 
 
 
கிருஷ்ணகுமார் குன்னத்தின் சாகாவரப் பாடலான "காதல் வளத்தேன்", சாதனா சர்கம் பாடிய "மன்மதனே நீ கவிஞனா" இரண்டும் எனக்குப் பிடித்த 'மன்மத' பாணங்கள். அதிலும், "எத்தனை ஆண்களைக் கடந்து வந்தேன், எவனையும் பிடிக்கவில்லை" என்கிற சிநேகனின் முன்பு மொழியப்படாத பெண் மனத்திறப்பாய்த் தொடர் வரிகள் "இருபது வருடங்கள் உனைப் போல் எவனும் என்னை மயக்கவில்லை". இந்தப் பாடல் சிநேகனின் பேருச்சம் என்பது வரிகளை வருடினால் புரியும்.
 
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்
என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி ஏனோ
இன்னும் மலரல
உந்தன் ரசிகை நானும் உனக்கே புரியவில்லை
எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உனைப்போல் எவனும்
என்னை மயக்கவில்லை
 
நானுமோர் பெண்ணென பிறந்த பலனை
இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்னும்
ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டு இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக் கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா
ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிற
என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அதுதான் சரித்திரமோ....
மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னை வசிக்கிறேன்
உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மஞ்சம் வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன் பேரை வைக்கவோ
அடிமை சாசனம் எழுதித் தருகிறேன்
என்னை ஏற்றுக் கொள்ளு
ஆயுளின் வரையில் உன்னுடன் இருப்பேன் 
அன்பாய் பார்த்து கொள்ளு.
 
 
மதுரை திருநகரில் தேவி கலைவாணி என்றொரு தியேட்டர்.தெற்குத் திசையின் அழகான உள் வெளி அமைப்புக்களைக் கொண்ட வரிசைகளில் அனேகமாக முதலிடத்தைப் பெறுகிற அளவுக்கு அற்புதமான அமைப்பு ஆடியோ சிஸ்டம் ஏர்கண்டிஷன் என எல்லா வகைமைகளிலும் மிளிர்ந்த அரங்கம் அது.என் சின்னஞ்சிறு வயதின் பற்பல படங்களை அங்கே தான் பார்த்தேன்.அப்போது பழங்காநத்தம் தாண்டி திருமங்கலம வரை ஒரே நல்ல தியேட்டராக அது மட்டுமே இருந்தது.பின் நாட்களில் எனது தோழர் மணிவர்மா அதே திருநகரில் மூன்று தியேட்டர்கள் கொண்ட இம்பாலா மல்டிப்ளக்ஸைத் துவங்கினார்.
 
 
அந்த தேவி கலைவாணி தியேட்டரில் ஒரு குறிப்பிட்ட காலம் அந்த வளாகத்தினுள் இருந்த தேநீர் விடுதியை நான் குத்தகைக்கு எடுத்து நடத்தினேன்.அப்போது இயல்பாகவே தியேட்டர் பணியாட்களுடன் நெருக்கமான உரையாடல்கள் சாத்தியமானது.நான் நடத்திய அந்தச் சின்னஞ்சிறிய காலத்தில் அங்கே காதல் 7ஜி ரெய்ன்போ காலனி ஆகிய படங்கள் பெரிதும் வெற்றிகரமாய் ஓடின.ரெயின்போ காலனி படத்தை எத்தனை முறை பார்த்தேன் எனத் தெரியாத அளவுக்குப் பார்த்தேன். 
                         
 
கண் பேசும் வார்த்தைகள் தெரிவதில்லை பாடலின் கையைப் பற்றிக் கொண்டு இன்னமும் வீடு திரும்பாமல் வீதிகளிலேயே அலைந்து கொண்டிருக்கும் நனவிலி மனிதர்களின் எண்ணிக்கை பல லட்சம்.அவர்களுள் நான் நீங்கள் நாமெல்லாருக்கும் இடம் உண்டு.யுவனின் ஆகச்சிறந்த பாடல்களில் கண் பேசும் வார்த்தைகள் பாடல் எப்போதும் நிலைக்கும். 
 
 
           
 
7ஜி  ரெயின்போ காலனி அமானுஷ்யத்தைத் திரைப்படுத்திய படங்களில் குறிப்பிடத் தக்க படம்.விட்டேற்றித் தனமான பருவத்தில் நிலைத்துக் காண வாய்த்த பெயரற்ற கண்களின் சாட்சி சொல்லலாகவே இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்திருந்தது.அன்பின் தன்னை அலங்கரிக்கத் தெரியாத அசட்டுத் தனமொன்றினை இந்தப் பாடலின் துவக்க இசையில் கலந்திருப்பதைப் பாருங்கள்.க்ரேட் ஜாப்!
 
 
கலையாத கோலம் போடுமோ
விழிபோடும் கடிதங்கள் வழிமாறும் பயணங்கள் 
தனியாக ஓடம் போகுமோ 
இது இடைவெளி குறைகின்ற தருணம் 
இரு இதயத்தில் மெல்லிய சலனம் 
இனி இரவுகள் இன்னொரு நரகம் 
இளமையின் அதிசயம்
இது கத்தியில் நடந்திடும் பருவம் 
தினம் கனவினில் அவரவர் உருவம் 
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும் 
கடவுளின் ரகசியம்
உலகில் மிக இனித்திடும் பாஷை 
இதயம் ரெண்டும் பேசிடும் பாஷை 
மெதுவாய் இனி மழை வரும் ஓசை 
ஆ.....
 
கனாகாணும்
 
நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை
நான் வேறு நீவேறென்றால் நட்பு என்று பெயரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழி இல்லை
தனிமையாய் கால்கள் எதைத் தேடிப் போகிறதோ
திரி தூண்டிப் போன விரல் தேடி அலைகிறதோ
தாயோடு சில தயக்கங்கள் இருக்கும் தோழமையில் அது கிடையாது
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே
 
கனா காணும்
 
இது என்ன காற்றில் இன்று ஈரப்பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்திவேளை அழைக்கிறதே
அதிகாலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே
விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே
நடை பாதை கடையில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்
படபடப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனித்துளியாய் அது மறைவது ஏன்
நிலநடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மன நடுக்கம் அது மிகக் கொடுமை..ஆ...
 
கனா காணும்..
 
 
               
நா.முத்துக்குமாரின் வரிகள் தன்னை மீறிய ஒரு சூன்யத்தைத் திறந்து வைக்கிற இருண்மை ப்ரவகிக்கும் வரிகளாய் நிகழ்ந்தன. பாடல் வரிகள் அத்தனையுமே பாடலுக்குண்டான ஆகமவிதிகளைப் பற்றிய எந்தக் கட்டுப்பாடும் இல்லாத சுதந்திரத்தின் சொல்லாடல்களாகவே தனித்துக் குழைந்து கலந்தொலித்திருக்கிற அபூர்வம் புரிபடும்.ஒரு முடிவற்ற அதே நேரம் பலமுறை நிகழ்ந்துவிட வாய்ப்பிருக்கிற அன்பின் உரையாடல் ஒன்றை படர்க்கையில் இருந்து பார்த்தபடி அதனை மனனத்துக்குள் செலுத்துகிற பிறழ்மனிதனின் சொல்லாடல்களாய் இப்பாடலைப் பார்க்கிறேன். அன்பின் அதிகதிக விள்ளல்களாய் இந்தப் பாடலின் வரிகள் அமைந்தன. அதன் படமாக்கலும் நடிகர்களின் பங்கேற்பும் கூட பின்னணி இசையின் உயிரிழைகளைப் பின்னிப் படர்ந்த பாசிவனத்தின் மேனி மீதொரு சின்னஞ்சிறிய சலனத்தையும் ஏற்படுத்திவிடாமல் தாழப் பறந்து திரும்பிச் செல்கிற வழக்கப் பறவைகளைப் போலவே நிகழ்ந்திருந்தன. மறக்கவே முடியாத இந்தப் பாடல் வெளியான பொழுதின் முதல் முறை கேட்கையில் தந்து ஒலித்த அதே ஒரே அனுபவமாய் இன்றைக்கும் நிகழ்ந்து கொண்டிருப்பது மற்ற பாடல்களின் சாதாரணத்தினின்றும் இதனைத் தனித்து வேறொன்றாக்குகிறது.   
 
 
 யுவனின் பாடல்கள் தனிப்பது அவற்றின் துவக்கங்களிலிருந்தே துவங்குவதை உணரலாம்.அந்த வகையில் தமிழில் எம்.எஸ்.விஸ்வநாதன் இளையராஜா சந்திரபோஸ் ஏ.ஆர்.ரஹ்மான் கார்த்திக் ராஜா எனும் தனித்த வேறொரு வரிசையில் யுவனது பேரையும் சேர்த்தாக வேண்டி இருக்கிறது.யுவனின் பெருவாரிப் பாடல்களின் தொடக்க இசை கவனிக்கத் தகுந்தது.அன்பின் இயலாமையை வாழ்க்கையின் அயரடிக்கும் சந்தர்ப்பங்களை வீழ்தலின் மெல்லிய அன்பற்ற வருகைகளை சட்டென்று திரும்பிவிடுகிற அதனிஷ்டப் பாதைககளை இசைப்படுத்துகிற சித்துவேலை அது.மேற்சொல்லப் பட்டிருக்கிற அத்தனை பாடல்களையுமே இத்தகைய துவக்கங்கள் மற்றும் எத்தகையை பலத்த காற்றுக்கும் அசைய மறுக்கும் யானையின் மயக்கப் பொழுதாய் கூட்டிசையின் பலமான கோர்வைகளைக் கொண்டு வந்து 
சேர்க்கிற ஜாலம் அளப்பரிய இசை இன்பம்.உடனொலிகளாகட்டும் இணைப்பிசையாகட்டும் எல்லாமே யுவன் சொன்ன பேச்சைக் கேட்டாடும் மந்திரம் மீறா நாகங்கள்தான்.              
 
 
யுவன் ஷங்கர் ராஜாவின் முதல் பத்து வருடங்களின் படங்களைப் பற்றிப் பார்த்திருக்கிறோம்.அதற்குப் பின்னதான படங்கள் பாடல்களை அடுத்த அத்தியாயத்தில் தொடர்ந்து பார்க்கலாம்.
 
 
(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்).


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...