அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 90 - ஏன் அவர் மேஸ்ட்ரோ 2 – ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   26 , 2018  18:03:35 IST


Andhimazhai Image

 

என்னய்யா மேஸ்ட்ரோன்னு அவரை எதுக்காக சொல்லணும்..? என்னிடம் கேட்டவன் பெயர் ஆனந்த். அவனை நானும் பரணியும் பார்த்த பார்வையில் ஆனந்தின் அடுத்த ஜென்மங்கள் தெரியத் தொடங்கின. அடுத்த வாக்கியமாக இதைச் சொன்னான் ஆனந்த். இந்தா பார்.. உனக்கு ராஜா பிடிக்குதா.. வெச்சுக்க... கொண்டாடு... ஆராதனை பண்ணு வணங்கு எல்லாமே ஓக்கே. அதையே என்னை செய்ய சொல்லாதே... என்னோட ம்யூசிகல் டயக்ராம் வேற.. புரியுதா..? என்றான்.

 

சொல்லப்போனால் ஆனந்துக்கு எங்கள் இருவரை விட அதிகதிகம் இளையராஜாவைப் பிடிக்கும். பிடித்தாக வேண்டும் என்பது நியதியும் கூட. ஆனந்த் அடிப்படையில் இசை கற்றவன். இளையராஜாவின் மூடுபனி பயணங்கள் முடிவதில்லை பாடல்களுக்காகவே கித்தாரைக் கையிலள்ளி அணைத்துக் கொண்டவன். அடுத்தடுத்து வயலின் மீதும் ஆர்வமானான். பிறகு பியானோ கற்றுக் கொண்டான். தபலாவிலும் ஆழ்ந்தான். பள்ளிக் கல்வி ஆனந்துக்கு இரண்டாம் பட்சம் தான். இசைக்கோயில் இன்பக்காளை அவன்.

 

இது நிகழ்ந்தது இரண்டாயிரத்து ஒன்று. என் அக்கா திருமணத்துக்குச் சில தினங்கள் முன்பாக யதார்த்தமான சந்திப்பு ஒன்று பொழுது தின்று இரவை அருந்தி நெடிதோங்கிற்று. அப்போது தான் புகை வளையங்களை எண்ணிக் கொண்டே இப்படிக் கேட்டான் ஆனந்த்.

 

சிறிது நேரம் நாங்கள் மூவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. என்ன நினைத்தானோ ஸாரிடா என்றான். தன் வெடவெட தேகத்தைத் தன்னாலேயே சுமக்க முடியாதவனைப் போலக் கிளம்பிச் சென்றே விட்டான். ஒரு பரபர ஸீனுக்கு அப்பால் எதுவுமே நடக்காமல் சப்பென்றானாற் போல நிகழவிருந்த மகாயுத்தம் நிகழாமற் போனது. அதன் பின் நாங்கள் இருவரும் மாத்திரம் பேசிக் கொண்டிருந்தோம். நிலா தேமேவென சாட்சியாகிக் கொண்டிருந்தது.

 

பேச்சு சில பல நாவல்கள் சினிமாக்கள் எனச் சுற்றி விட்டு சடாரென்று என்னிடம் கேட்டான் பரணி ஆமாடா அவன் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லு ஏன் இளையராஜாவை மேஸ்ட்ரோன்னு சொல்றே...? அல்லது மேஸ்ட்ரோன்னு சொல்லணும்கிறே..? என்றான். நான் கொஞ்ச நேரம் பேசவில்லை. எதையாவது முக்கியமாய்ப் பகிரவேண்டும் என நினைத்த மாத்திரத்தில் என் குரல் வேறொருவனுடையதாய் நெகிழ்ந்து ஆழத்தில் எங்கோ ஒளிந்து கொள்ளும்.எனக்கே சற்று அன்னியமாய்ப் படும். ஆனாலும் சொல்ல வேண்டியது மாத்திரம் எனக்குள் யாரோ தட்டச்சு செய்து மெய்ப்புத் திருத்தி வடிவழகு கூட்டி அச்சுப்பதிந்தாற் போல துல்லியமாய் வெளியேறும்.

 

பரணி.... எல்லா வேலையுமே முக்கியமானது தான். கலை அப்டின்றதைக் கூட வேலைன்னு பார்க்க முடியும்.படைக்கிறதை ஒரு வேலையா மட்டும் கன்ஸிடர் பண்ண விடாமத் தடுக்கிறது எது..? படைக்கிறவனுக்கு எது மரியாதையை ஏற்படுத்தித் தருது..? படைக்கப்படுற ஒவ்வொண்ணோட ஒற்றைத் தன்மை அதாவது தனித்துவம் அப்பறம் அவைகள் நீடிக்கிற காலகாலம். மூணாவதா அவற்றை உணர்றவங்க அடையுற சந்தோஷம். இந்த மூணும் தான் ஒரு கலையோட உன்னதம் அப்டின்ற பொட்டலப்பொதிக்குள்ள  ஒளிஞ்சுட்டிருக்கு. அந்த அடிப்படையில சினிமாப் பாடல்களுக்கான குறைந்த பட்சத் தேவையை முன்வைச்சு வணிக ரீதியா இயங்குற வேகமும் எண்ணிக்கையும் இருவேறு மிக முக்கியமான கூறுகளா எப்பவுமே இருந்திட்டிருக்கிற எந்தத் துறையாக இருந்தாலும் கலைஞன் தன் கலாதாகத்தை முன்வச்சி இயங்குறதுக்கான ஸ்பேஸையும் காலத்தையும் முடிஞ்ச அளவுக்குக் கட்டுப்படுத்தும் இல்லாட்டி அறவே நீக்கும்.இதுக்கு நடுவுல இந்தா உனக்கு இதான தேவை அப்டின்னு வந்தவரைக்கும் செய்து பார்க்கிற யாரையும் நம்மால குறை சொல்லவோ குறைச்சு மதிப்பிடவோ முடியாது. ஆனா அதே காலம் அதே ஸ்பேஸ் இந்த ரெண்டுக்குள்ளேயும் இயங்கி எண்ணிக்கை மற்றும் வேகம் இந்த இரண்டிலும் ஈடு கொடுத்துக்கிட்டே ஒரு சினிமா இசை அமைப்பாளன் தனக்கு முன்னால் இருக்கிற வெண்காகிதங்கள்ல எழுதிப்பார்க்கிற இசைக்குறிப்புக்கள் என்னவா நமக்கு வருது.? எதிர்பார்ப்புக்கு சம்மந்தமே இல்லாத உன்னதமா வருது.காலத்தை எளிதா கடந்து தன்னை வேறொரு சரிகையற்ற தோரணத்தோட ஊடுபாவா மாத்திக்குது.அப்பறம் என்ன செய்து..? மற்றவங்களோட மற்ற பாடல்கள் எது கூடவும் சேராம நின்னுக்குது.ஏன் இன்னும் சொல்லப் போனால் இதே ராஜாவோட வணிக ரீதியிலான எண்ணற்ற பாடல்கள் இருக்கத் தான் செய்யுது, இங்கே சினிமான்றது அவற்றை விளைய வைக்கிற விவசாயம் மாத்திரமே..ஆனா அவற்றுக்கு நடுவில் பூக்கிற நம்ப முடியாத அற்புதங்கள் எளிதில் உள் வாங்கிக்க முடியாத சித்திரங்கள் மனசைக் கழுவி மாயம் செய்கிற பாடல்கள் அவற்றையெல்லாம் சினிமாபாடல்கள் என்பதைத் தாண்டி வாழ்வின் இசையா மன நலனுக்கான மாத்திரைகளா இந்த சமூகத்தோட இரவுகளைப் புதுப்பிச்சு பாதுகாத்து அமைதிப் படுத்தித் தர்ற நேர்மையான செவிலித் தாய்மைக்கு ஆங்கிலத்துல ஈடு செய்ய எத்தனை வார்த்தைகள் தேவை..? மேஸ்ட்ரோ அப்டின்றது இளையராஜாவை பூஜிக்கிற சொல் இல்லை. அது ஜஸ்ட் அவர் கடந்து ஓடிய எண்ணற்ற வண்ண ரிப்பன்கள்ல மற்றும் ஒண்ணு. ஸோ.... அவர் மேஸ்ட்ரோ என்றேன். என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பரணி இப்பிடிக் காதலிக்க வைக்கிறாப்ல பாரேன் என்றான்.

 

ஏன் அவர் மேஸ்ட்ரோ  

 

ஏனென்றால் எல்.வைத்தியநாதன் என்று ஒரு உன்னதமான இசை மேதை முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டுப் படத்தின் இயக்குநருக்கும் அவருக்குமான புரிந்துணர்வு விலகல் மாத்திரமே காரணமாக அவர் அந்தப் படத்திலிருந்து தன்னைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். படத்தின் இயக்குநருக்கு அந்தத் திரைப்படம் இந்தியாவில் குறைந்தபட்சம் ஹிந்தி உட்பட ஏழு மொழிகளில் வெளியாக வேண்டிய சூழல். படத்தின் கதையில் காணப்படக் கூடிய அகன்ற நிலவெளி அதன் நடிகர்கள் தேர்வு தொடங்கி, காட்சியமைப்பு தொட்டு, பாடல் வரிகள், பாடகர்கள், பின்னணி இசை என சகலத்திலும் பிரதிபலித்தே ஆக வேண்டிய கட்டாயம். மேலும் ஒரு கூடுதல் சுமையாகவே படம் வேறு பீரியட் படம். இப்போது வணிக ரீதியிலான ஒரு இசையமைப்பாளரை அணுகினால் என்ன நடக்கும் எனச் சொல்லத் தேவையே இல்லை. மேதைகள் அதிகதிகம் இருக்கிற நாடுதான் இந்தியா என்றபோதும் ஒரு மாபெரும் திரைப்படத்துக்குத் தேவையான இசைப் பங்களிப்பு, இசை உருவாக்கம், இசை வழி படத்தைப் பூர்த்தி செய்தல், படத்தின் பின்னணி இசை, பாடல்களுக்கான இசை, பாடுகிற குரல்கள், பாடல் வரிகள் இவற்றையெல்லாமும் கையாளுவதற்கும், திரையிசை குறித்த அனுபவஞானம் எல்லாவற்றுக்கும் மேலாக, எழுந்து சென்றிருப்பவர் அப்படி ஒரு மேதை. பாதிப் பயணத்தில் காருக்கு ட்ரைவர் கிடைப்பதே கடினம் எனும் பட்சத்தில் எழுந்து சென்றது பாதி வான் பயணத்தில் விமானி எனும்போது என்ன செய்வார் அந்த இயக்குனர்? என்ன செய்தார் கமலஹாஸன்? என்ன தந்தார் இளையராஜா? என்பதால் அவர் மேஸ்ட்ரோ.

 

ஏன் அவர் மேஸ்ட்ரோ 

 

ஏனென்றால் சாகேத் ராம் ஒரு வருடம் கழித்து தானும் தன் உயிர்க்காரியும் வாழ்ந்த மன்னிக்கவும், சேர்ந்து வாழ்ந்த அதே வீட்டின் இன்றைய வீட்டுக்கு அதே தன்னுடைய வேறொருவனாய்ப் போய்க் கொண்டிருக்கும்போது இந்தப் பாடல் தொடங்குகிறது. அன்பின் அத்தனை சொற்களும் இழந்தபின்பு முட்டாள்தனமாகின்றன. முன்னர் சந்தோஷித்த அத்தனை கணங்களும் அபத்தத்தை அணிந்து கொள்ள நேர்கையில் கண்ணீர் செய்கின்றன. நேற்று பற்றிய ஞாபகம் சாகேத் ராமனுக்கு அபத்தமாக எஞ்சுகிறது. கீதாசாரத்தின் வார்த்தைகளைப் பாடற்படுத்தினாற்போல் அந்தப் பாடல் நமக்கு முன் விரிகிறது. 

 

 

நேற்று ராமினுடையதாக இருந்த, வாடகை வீடெனினும், அவ்வில்லம், இன்று ஒரு மலையாளியினுடையதாக இருக்கிறது. லிஃப்டைத் திறந்து விடுபவன், "நீங்கள் நாயருடைய அதிதியா?" என்றவாறே அவனை அவன் வாழ்ந்த வீட்டை நோக்கி அனுப்பி வைக்கிறான். தன் வீட்டின் கதவை யாருமற்ற ஒருவனாக வெளியே நின்றுகொண்டு தட்டுகிறான் சாகேத் ராம். உள்ளே இருந்து கதவைத் திறக்கும் தற்பொழுதின் அந்த வீட்டின் மனிதன் இவனது அதே பழைய தெற்குத் திசையின் அச்சத்தோடு தென்பட்டு, "என்னால் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?" என்று கேட்கிறார். யாராலும் தனக்கு உதவ முடியாது எனும் விரக்தியைக் கலந்து புன்னகைத்தவாறே தாங்கள் மாட்டிய ஒரு படத்தை மட்டும் அந்த வீட்டிலிருந்து பிய்த்துக் கொண்டு தங்களுடைய ஞாபகங்களை எந்த விதத்திலும் அந்த வீட்டோடு உதிர்த்துவிட முடியாமல் திகைத்தபடி அங்கிருந்து கிளம்புகிறான். நாயருக்கும் ராமுக்குமான உரையாடல்கள் அற்புதமானவை.

 

"யாரைப் பார்க்க வேண்டும்?"

 

"சாகேத் ராமை"

 

"அவருக்கும் உங்களுக்கும் என்ன உறவு?"

 

"ஆன்மாவுக்கும் உடலுக்குமான உறவு"

 

உண்மையில் சாகேத் ராம் அங்கே சந்திக்க வந்திருப்பது தன்னைத்தான். பாவனைப் பூட்டை ஒவ்வொரு சாவியாக முயற்சித்துத் திறந்து பார்ப்பது போன்றது. இதெல்லாம் நடக்கும் காலகட்டம் இந்தப் படம் வெளியாவதற்கு சற்றேறக்குறைய ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால். இந்தப் பாடல் ஒரு வேறு வழியேதுமற்ற மான்டேஜ் சாங். இதன் இந்தியப் பொதுக் குரல்கள் ஹரிஹரன் மற்றும் ஆஷா. நினைவோடைக்கான இசைப்படுத்துதலில் காலம் என்கிறது மறுகரையின் இன்னொரு நிர்ப்பந்தமாக இருக்கும் நிலையில் வெகு தைரியமான முறையில் காலத்தை வெட்டுச் சீட்டுப் போல உபயோகித்திருப்பார் ராஜா. 

 

பீரியட் படங்களுக்கென்றே இருக்கக் கூடிய ஒரு பழைய வாசனை இசையை முற்றிலுமாகத் தவிர்த்து, கேட்பவர் மனங்களையெல்லாம் வேறு ஒரு இடத்தில் நிலை நிறுத்தி, காலம் குறித்து எழக் கூடிய, நியாயமான தர்க்கப்பூர்வ அபிப்ராய சாத்தியங்கள் அனைத்தையும் தன் சித்து வேலையால் ரத்து செய்திருப்பார் ராஜா. உண்மையில், வெகுவாக மெனக்கெட்டிருக்க வேண்டிய ஒரு பாடலுக்கான சூழல் இது. இசைக் கோர்வைக்குப் பதிலாக வெறும் எழுப்புதல் நிலையிலான இசைக்கூட்டு ஒன்றை மாத்திரமே பயன்படுத்தி முழுப் பாடலையும் பூர்த்தி செய்திருப்பார் ராஜா. இது குற்றச்சாட்டா, அபாரமா என்று எனக்குத் தெரியவில்லை. எளிதாகச் சொல்ல வேண்டுமானால், பாடல் ஆரம்பிப்பதற்கு முன்பே ஒரு புள்ளியில் மொத்தப் பாடலின் இசையும் முடிந்து போயிருக்கும். 

 

அழுகையின் பேரோசைக்கு மாற்றாகத் தனக்குள் புதைத்துக் கொள்ளுகிற நிசப்தத்தின் ஆழத்தை எடுத்து முழுப்பாடலுக்குமான ஓடுதளத்தை நிர்மாணித்திருப்பார் ராஜா. இதற்கும் மேலாகச் சில சொற்கள் தமிழின் ஆகச் சிறந்த முழுமையான சுழலிசைப் பாடல்களின் வரிசையில் இந்தப் பாடல் இடம்பெறும் என்பதுதான். எனவே அவர் மேஸ்ட்ரோ.

 

ஏன் அவர் மேஸ்ட்ரோ  

 

ஏனென்றால் ராமன் தோற்கிற ஒரு தினுசான ஹே ராம் கதையாடலில் காந்தியைக் கொன்றுவிடுவதான வெறி கலந்த சபதத்துக்கு போதையின் பிடிமானத்தில் மெல்ல மெல்ல வந்து சேருகிற ஒரு விசித்திரச் சூழ்நிலைதான், "இசையில் தொடங்குதம்மா" பாடலுக்கான சிச்சுவேஷன். வழமையிலிருந்து முற்றிலுமாக விலகி, சினிமேட்டிக் என்னும் சொல்லைக் கூடத் தன்னாலான அளவுக்கு இந்தப் பாடலில் சொற்பம் செய்து, இந்தியத் திரையின் வினோதமான பாடல்களின் அரிய வரிசையில் இந்தப் பாடலைக் கொண்டுவந்து நிறுத்தியிருப்பார் இளையராஜா. அந்த நிலத்தின் குரல் எனச் சொல்லலாம், அஜய் சக்ரபர்த்தியை. இளையராஜா இசையில் இளையராஜா எழுதிய இந்தப் பாடலை வேறு யாருக்கும் வாய்க்காத தன் அரிதினும் அரிய குரலால் மலர்த்தியிருப்பார் அஜய். போதையின் வழுக்குதலையும் ஒரு முடிவை ருசிப்பதன் உக்கிரத்தையும் ஒருங்கே இசையில் கொணர்ந்திருப்பார் ராஜா. இந்தப் பாடல் ஒரு முழுமையான க்ளாஸிக். இதை ஹிந்துஸ்தானியின் இயங்கு  திசைக்கு உண்டான அத்தனை நுட்பங்களுடனும், கொஞ்சமும் காலப் பிசகோ, திசைப் பிறழ்வோ இன்றி உத்தமமான ஒரு பாடலாகத் தந்தார். 

 

 

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ..

 

இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே

வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே

வசந்த கோலங்களை வானின் தேவதைகள்

கண்டு ரசிக்க வந்து கூடிவிட்டார்

இங்கு நமக்கு ஹோ..

 

இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே

வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே 

 

ஆ..

 

தேய்ந்து வளரும் தேன் நிலாவே

மடியில் வா

தேய்ந்திடாத தீ குழம்பாக ஒளிர வா

வானத்தில்..

வானத்தில் மின்னிடும் வைரத்தின்

தாரகை தோரணங்கள் பூமிக்கு கொண்டு வா

ஆ...

 

இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே

வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே 

 

ஆ..

நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்

வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்

உயிர்களே...

உயிர்களே உயிர்களே உலகிலே

இன்பத்தை தேடி தேடி

கிரஹத்துக்கு வந்ததே

 

ஆ..

இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே

வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே 

 

 

இதன் நடுவே வரும் சின்னஞ்சிறிய அலைதல்கள் அஜய் சக்ரபர்த்தியின் தன்னிகரில்லா குரலுக்கு சாட்சியம் சொல்லுகின்றன. அந்த வகையில் ஒரு அமானுஷ்யத்தை, வேக இசையோடு முழுமையாக, இசைவசமாக்கிய காரணத்தினாலும் கூட அவர் மேஸ்ட்ரோ.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)

 

 

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...