அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் – 84 - நடனத்தின் கடவுள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   08 , 2018  18:02:12 IST


Andhimazhai Image

 

பேருரு என்பார்கள். மஹா மானுடன் அல்லது அதி மனிதன் என்பார் நீயெட்ஷே. வரிசையிலிருந்து தப்புவது கலைஞனின் முதல் அடையாளம். மேடையும் கூட்டமுமாய் சமான சமத்தில் உய்க்கும் இவ்வுலகம். கலை என்பது சர்வைவல் ஆஃப் த ஃபிட்டெஸ்ட். தனித்தலும், உயர்தலும், அதை நிரந்தரித்தலும் புகழ் என்னும் பெரும்பசி மிருகத்தின் எப்போதும் புசித்துக் கொண்டே இருக்கக் கூடிய தளராத நாவு போன்றவை. 

 

அந்த மனிதனை எல்லோரும் நேசித்தார்கள். எதிரிகளையும் வசீகரித்தார். கடவுளின் படர்க்கை இருக்கை ஒன்று இருக்குமானால் அதில் இசை சார்ந்த ஒருவர்தான் அமர முடியும். அதுதான் அந்தக் கடவுளுக்கும் அடுக்கும். என் பதின்ம வயது மிகச்சரியாகத் தொண்ணூறாம் ஆண்டு துவங்கி, நான் கல்லூரி முடித்த தொண்ணூற்று ஏழு வரை, தூரத்திலும் சற்று அருகாமையிலும் பிறகு நெருக்கத்திலும், நான் தொழுது போற்ற விரும்பிய வெகு சில மேதைகளுள் மிக முக்கியமானவராக அவர் இருந்தார். அன்றைய சலூன்களில், அவருடைய படத்தைக் காண நேரும்போதெல்லாம் சட்டென்று கண் கடந்து வேறெங்காவது பார்க்க முயலுவேன். இந்த முரண் எத்துனை அழகானது. பார்க்க முடியாத அதே முகம் பார்த்துப் பார்த்துச் சலிக்காததும் கூட. 

 

கலைக்கும் மனிதனுக்குமான பந்தம் அபாரமானது. தொழிலிலோ, கல்வியிலோ, திறன் சார்ந்த பிறவற்றிலோ, தன்னால் இயலாத எது குறித்தும் மனிதன் ஒவ்வாமை கொள்ளுகிறான். அது குறித்த நடுக்கம் அவனுக்குள் ஒரு நிரந்தர அச்சத்தை ஏற்படுத்துகிறது. முயன்று பார்த்துக் கைவிடுகிற போதெல்லாம் தனக்குள் இயலாமை, பொறாமை, வெறுப்பு, விரக்தி, இன்ன பிற இன்ன பிறவற்றுடன் கூடிய சுய இரக்கத்தின் பால் விழுகிறான். கலையில் மாத்திரம் தன்னிலிருந்து தனித்துத் தன்னால் இயலாதவற்றைச் செய்கிற யாரையும் தன் உயிருக்கு அருகே இருத்தி நேசிக்கிறான். 

 

 

மேற்கூறிய இந்த விதிமுறையின் படி, நான் நடப்பது நடனத்துக்கு அருகாமையில் இருந்திருக்கக் கூடும். நடனமாடுகிற ஊரில் எனக்கு வாடகை வீடு கூடத் தேவையில்லை என்கிற அளவில்தான் பாலகப் பிராயம் தொட்டே நான் ஒரு கொழுகொழு குண்டன். இந்த இடத்தில் இந்த அத்தியாயத்தின் நாயகரான அந்தப் பேருரு படைத்த மஹா அதி மனிதனான ஸ்ரீலஸ்ரீ மைக்கேல் ஜாக்ஸன் அவர்களை என் உயிரின் ஜெராக்ஸ் காப்பி போலவே இதுகாறும் விரும்பி வருகிறேன். இடையில் ஒரு நாள் அவர் இறந்து போனதாக வந்த தகவலை நான் நம்பவில்லை, நீங்களும் நம்பாதீர்கள். சூரியனைச் சுட முடியாது, மைக்கேல் ஜாக்ஸனுக்கெல்லாம் சாவே கிடையாது. 

 

மைக்கேல் ஜாக்ஸன் என்கிற எம்ஜே என்கிற ஜாக். உலகம் உள்ளளவு இருக்கும் இந்தப் பெயர். 

 

தன் வாழ்க்கை முழுவதும் தீவு போல் தன்னைத் தனித்துக் கொண்டவர் எம்ஜே. அவிழ்க்க அவிழ்க்கத் தன்னை இரட்டித்துக் கொள்ளுகிற, தன்னைப் புதுப்பித்துக் கொள்ளுகிற ரகசியங்களின் தீராப் பெருஞ்சுனையாகத் தன் வாழ்காலம் எங்கும் பெருக்கெடுத்தவர் எம்ஜே. ஒரு சாமான்யத்திலிருந்து தன் திறமையால் எத்துனை உயரத்தை எந்தப் பின்புலமும் இல்லாத ஒரு மத்யம இளைஞனால் அடைய முடியும் என்பதை மெய்ப்பித்தவர். சென்ற நூற்றாண்டின் மிகச் செல்வாக்கான மூன்று கலைஞர்களைப் பட்டியலிடச் சொன்னால் மைக்கேல் ஜாக்ஸன் எனும் பெயர் சர்வ நிச்சயமாக அதில் இடம்பெறும். என் கணிப்பின் படி அதன் இரண்டாமிடம் அவருக்கு. முதல் மற்றும் மூன்றாம் இடங்களில் சார்லி சாப்ளினும், மார்லன் பிராண்டோவும்.

 

மைக்கேல் ஜாக்ஸனின் தனிப்பட்ட வாழ்க்கை ஐயங்களும் பதிலற்ற வினாக்களும் நிரம்பிய ஒன்றாகவே விளங்கியது. அதிகம் புகழப்பட்ட அவர் கண்டிக்கவும் தண்டிக்கவும் பட்டதெல்லாமும் நடந்தது. உலகின் மூன்றில் கிட்டத்தட்ட இருபங்கு நாடுகளில் அவர் பற்றிய மிகுந்த பரிச்சயம் நிலவியது. ஒருமுறை அவரைக் கிள்ளிவிட மாட்டோமா என்று உலகம் அவரைச் சென்றவிடமெல்லாம் துரத்தியது. காரணமின்றி ரசிகர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்க அவரால் முடிந்தது. 

 

அதுவரை இருந்த இசையின் நான்கு மால்களை மாற்றி அமைத்தார் எம்ஜே. இலக்கணங்களை லேசாய் உராசிவிட்டுப் பெரும் புதுமையைப் படைத்துவிட்டதாய்க் கெக்கலித்தவர்களுக்கு மத்தியில் தன் எழுதலின் மூலமாக அதுவரை இந்த உலகம் பின்பற்றி வந்த அத்துனை இலக்கணங்களையும் தவிடுபொடியாக்கித் தகர்த்தெறிந்தார் எம்ஜே. ஆட்சிக்கு வந்த புதிய தலைவரைப் போலவோ வெளிச்சத்துக்கு வந்த புதிய நடிகரைப் போலவோ இல்லை எம்ஜேயின் தோன்றல். திசைகளைத் திருகியபடி ஒரு புனித குமாரனைப் போல் தோற்றம் எடுத்தார் எம்ஜே. சமகாலத்தின் ஒரே புலியாக அவர் தனித்து விளங்கினார். உலகம் எனும் கானகம் அவர் உலாவலின் கீழ்ப் பணிந்தது. 

 

பெரும் கதையாடல்களாக, திசைமாற்றிகளாக வலுத்து ஒலிக்கும் பிரேரணைகளாகத் தன்னுடைய பாடல்களை எல்லோரும் உருவாக்கிக் கொண்டிருந்த காலத்தில் மனம் எனும் யதார்த்தக் கலயத்திலிருந்து தன் பாடல்களை ஒவ்வொரு சொல்லாய் எடுத்துக் கோர்க்க முனைந்தார் எம்ஜே. பூச்சோ ஒப்பனையோ இன்றி நேர்மையான நேரடியான சொற்றொடர்களாக அவரது பாடல்கள் அமைந்தன. தன் வாழ்நாட்களின் வெவ்வேறு எபிசோடுகளாகத் தன் ஆல்பங்களைத் தர முனைந்தார் எம்ஜே. நடனத்தின் கடவுளாக உருப்பெற்ற எம்ஜே ஒரு முழுமையான பாடற் பறவையாகவும் விளங்கினார். தன் ஆல்பங்களுக்கான இசை துவங்கி அவற்றின் உப குரல்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் என உன்னதமான பங்காளிகளுடன் கரம் கோர்த்தார். 

 

தன் பாடல்கள் தன்னோடு சேர்ந்து நிகழ்வதையே எம்ஜே விரும்பினார். மானுட இனத்தின் வேற்றுமைகளை ஆட்சேபிக்கிற குரலாக ஒலித்தார். அடக்குமுறைக்கு எதிரான சொற்களை எழுதினார். மிகுந்த மன அழுத்தமும் தளையும் வல்லாதிக்கமும், பெருங்கொண்ட மீறல்களுக்கே வழிவகுக்கும் என்பதைத் தன் பாடல்களின் ஊடாகப் பறைசாற்றினார். கடவுளின் முன் நின்றுகொண்டு பிரார்த்தனைகளுக்குப் பதிலாகக் கட்டளையிட அவரால் முடிந்தது. ஒற்றை ஒலி எனினும் ஓங்கி ஒலிப்பதையே அவர் விரும்பினார். பார்த்துப் பார்த்துத் தன்னுடைய ஆல்பங்களை, அவற்றின் காணொளிக் காட்சிகளை உருவாக்கினார் எம்ஜே. இன்று அதி பிரபலமாக விளங்கக் கூடிய ஃப்ளாஷ் மாப் எனும் உத்தியை மிக ஆரம்பத்தில் பிரயோகித்தவர் எம்ஜே. கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு எம்ஜே வருவார். அல்லது ஒரு தனி விமானத்தில் வந்து இறங்குவார். இல்லையெனில் மஹா உயரத்திலிருந்து வெளிப்படுவார். அதே போல அவரது பாடலின் முடிவுகள் இல்லாமற் போவது குறித்துப் பெரிதும் அமைந்தன. கையசைத்து விடைபெறக் கூடிய முறையான நீங்குதல் ஒருபோதும் எம்ஜே கைக்கொண்டதில்லை. வெடித்துச் சிதறி இல்லாமலும் காணாமலும் மறைந்தும் போகிற எதிர் மானுடம் அல்லது அமானுடத்தை அவரது பாடல்களின் பூர்த்திகள் பிரதிபலித்தன.

 

பாடலையும் நடனத்தையும் ஒருங்கே உருவாக்கிய மேதைகளில் எம்ஜே தலையானவர். சென்ற நூற்றாண்டில் பாடி ஆடிய கலைஞர்களில் பேராளுமை எம்ஜே. வலிந்து திணிக்கப்பட்ட எந்த ஒரு துகளையும் எம்ஜேயின் ஒட்டுமொத்த ஆல்பங்களிலும் நம்மால் காண முடியாது. எம்ஜேயின் ஆல்பங்கள் முழுமையான இயக்கங்களாக அமைந்தன. தன்னைச் சுற்றிலும் ஒரு இயல்பான அழகான இசைப்பூர்வக் கதைசொல்லலை நிகழ்த்தினார் எம்ஜே. தன் உடன் ஆடுகிற புத்தம்புதிய கலைஞர்களுக்குத் தனித்துவமும் நேர்த்தியும் மிகுந்த அசைவுகளை அணிகலன்களைப் போலச் சூட்டினார் எம்ஜே. தொடர்ச்சியான பயிற்சியின் மூலமாகப் பாரம்பரிய நடனக் கலையின் அத்தனை உய்ரங்களையும் உரசியும் உடைத்தும் காண்பித்தார் எம்ஜே. அவருக்கு முன்னாலிருந்த யாரைப் போலவும் அவர் இல்லை, அவருக்குப் பின்னால் வந்த அனைவரும் அவர் போலவே இருந்தார்கள். இந்த மாபெரும் பிரபஞ்சத்தின் நடனத்தைத் தன் பெயர் கொண்டு முன்னும் பின்னுமாய் இரண்டாய்ப் பிளந்தார் எம்ஜே. 

 

 

காலத்தின் அபத்தமே அடுத்த காலத்தில் அற்புதமாக மாறுவது அதன் வினோதம். தொழில்நுட்பத்தில் வளர்ச்சியும் போதாமையும் ஒருங்கே சங்கமித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், அதிசயம் ஒன்றைப் போலவே நிகழ்ந்தார் எம்ஜே. தன்னிறைவு பெற்ற அடுத்த காலத்தில் மாற்றோ நிகரோ அல்ல, அவரது நிழலின் பாதியை மெய்ப்பிக்கக் கூட ஒருவரும் இல்லாத வெறுமையே மிஞ்சிற்று. நடனத்தின் மூலமாக ஒரு தனி மனிதனின் உளவியலுக்குள் இயங்கியவர் எம்ஜே. நனவிலியின் வீதிகளில் ஒரு கனவின் வழி சஞ்சாரிப்பதைத் தன் அசைவுகளின் மூலமாக சதா முயன்றுகொண்டே இருந்தார். காற்றுக்கு மரத்தின் இலைகள் தலையசைக்கிறாற் போல் தன் நடனங்களின் உள்ளே பார்வையாளர்களை, ரசிகர்களை வரவழைக்க முடிந்தது அவரால். அந்த ஒரு மனிதனின் உடல் மூலமாகப் பலகோடி மனிதர்களால் மானசீகமாய்த் தாங்களும் நடனமாட முடிந்தது. தன் நடனத்தை எல்லோருடைய ஒரு கூட்டு வழிபாடாகவே மாற்றித் தன்னை வரமாக்கிப் பகிர்ந்து கொடுத்தார் எம்ஜே

 

ஒரு மந்திரவாதியின் மறைதல் கணத்துக்குப் பின்னால் அவன் மீண்டும் தோன்றுவதற்கான காத்திருத்தல் கணத்தில் அப்படியே உறைந்து போய் ஜீவித்திருக்கக் கூடிய வெறித்த கண்களை உடைய பார்வையாளர்களைப் போலத்தான் இன்னமும் காத்திருக்கிறார்கள் எம்ஜேயின் ரசிகர்கள். அவர் வருவாரா என்பது அனர்த்தமான வினா. அவர்தான் வந்து கொண்டிருக்கிறாரே என்பதுதான் அதற்கான பதில். மனித வரம்புகளின் வழமைகளின் நியதிகளுக்குள் பொருந்தாத எதற்கும் அற்புதம் எனப் பெயர். அந்த வகையில் ஜாக்ஸன் அற்புதங்களின் வரிசையில் இடம் பெறுபவர். மெய்ப்பிக்க முடியாத பலவும் பொய்கள் என்பதல்ல, இன்னும் மெய்ப்பிக்கவில்லை என்பதே (not yet proven). அந்த வரிசையில் எதாவது ஒரு திசையைக் கிழித்துக் கொண்டு எம்ஜே வரத்தான் போகிறார், பார்த்துக் கொண்டே இருங்கள். 

 

அவரது ஆல்பங்களின் பெயர்கள் அதற்கு முன்னால் நாளும் அதிகதிகம் பயன்படுத்தப்பட்டுப் பெரும் புழக்கத்திலிருக்கும் மிக எளிமையான சொற்களாய்த்தான் அவை இருக்கும். நேரடியான பொருளையே அவை தரும். அவரது பாடலின் தலையில் அதனைச் சூட்டியவுடன் அவை சொற்கிரீடங்களாகவே மாறும். உச்சபட்சமாக "Bad" என்ற சொல்லை இந்த உலகம் அதற்கு முன்னால் எவ்வளவு வெறுத்ததோ அதற்குப் பின்னால் அவ்வளவு விரும்பியது.

 

எனக்குத் தெரிந்த ஒரு பய்யன், அவனுடைய வண்டியில் "Bad"  என்று எழுதியிருப்பான். அதைப் பார்த்துவிட்டு ஏரியா ஏட்டய்யா நக்கலாக இது என்ன என்று கேட்டு Bad தெரியாதா, மைக்கேல் ஜாக்ஸன் தெரியாதா என்று இவன் கேட்க, அவர் ம்ஹூம் எனத் தலையசைக்கவும், கர்ம சிரத்தையுடன் இவன் மைக்கேல் ஜாக்ஸனின் எல்லாப் பாடல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக ஏட்டய்யாவுக்கு அறிமுகப் படுத்தினான். சில மாதங்கள் கழித்து ஏட்டய்யா வாங்கிய புதிய பைக்கில் "Thriller" என்று அவர் எழுதியது தனிக்கதை. 

 

நமக்குத் தெரிந்தவரை பிரபுதேவா தன் பெயரை விட இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸன் என்று சொல்லுவதை பக்திபயத்தோடு விரும்புவது ஒரு சிறு எக்ஸாம்பிள். ஒவ்வொரு தேசத்திலும் தன் தோன்றல் பிரதி - தேவாக்களை உண்டுபண்ணிவிட்டுத்தான் சென்றிருக்கிறார் நிஜ ஜாக்ஸன். அன்றைய விலை ஐந்நூறு ரூபாய் என்று ஞாபகம் (தொண்ணூறுகளில்). டிவிடிக்கு முந்தைய விசிடியில் நண்பன் ராகவன் வீட்டில் (ஜாக்ஸன் இஸ் கிங் ஆஃப் பாப், ராகவன் இஸ் த ஜேக் ஆஃப் பாப்) எம்ஜேயின் விடியோக்களைப் பார்க்க முடிந்தது. ராகவனுடைய பாட்டி அங்கலாய்த்தது இன்னும் நவரச ஞாபகம். ஓஹோன்னு கத்தறான், திடீர்னு தலையில இடி விழுந்தா மாதிரி தரையில விழறான், ரெண்டு நிமிஷம் கழிச்சு காலக் கையை ஒதறிக்கிட்டே மந்திரக் கட்டவுத்தா மாதிரி விலு விலுன்னு ஆடறான். என்னடா இதெல்லாம்னு பாத்தா, இந்த பீரோவுல ஒட்டியிருக்கானே அந்தக் கடங்காரன் அவன் இதே மாதிரிதான் டிவியில ஆடறான். இதப் பாக்குறதுக்குத்தான் (என்னைக் காண்பித்து) டீச்சர் பையனும் இன்னும் ரெண்டு மூணு பேரும் அடிக்கடி வந்துட்டுப் போறானுங்க. இதெல்லாம் ஒரு பாட்டா? பாகவதர், கிட்டப்பா மாதிரி வருமா? நாங்கள் நமுட்டுச் சிரிப்போடு மாடி ஏறிப் போய் எங்கள் தங்கம் மைக்கேல் ஜாக்ஸனைக் கண்டு களிப்போம்.

 

என் அம்மா முன்பே சொல்லி இருக்கிறார்கள்.பிறரை அணுகும் போது நீ கவனமாக இருக்க வேண்டும் என்று.மேலும் பொய்கள் மெல்ல மெல்ல உண்மைகளாக்கப்படும் என்றும் கவலையோடு பாடும் ஒரு ஆடவன் இப்படிப் பாடுகிறான்.அவள் திரையில் ஒளிர்ந்த ஒரு காட்சியிலிருந்து எழுந்து வந்தாற் போலிருந்தாள்.அவள் பெயர் பில்லி ஜீன்.அவள் சொல்கிறாள் நான் தான் அவளோடு நடனமாடினேன் என்று.அவள் சொல்வதெல்லாமும் பொய்.அந்தக்குழந்தை என் மகன் இல்லை.என்னை நம்புங்கள்.

 

யாரோ குழந்தையின் பிதற்றல் என்று எண்ணாதீர்கள்.இதான் சர்வ வல்லமை படைத்த மைக்கேல் ஜாக்ஸனின் பில்லி ஜீன் பாடலின் உட்கருவின் விள்ளலாக்கும்.

 

 

     Billie Jean

மைக்கல் ஜாக்சன்

 

She was more like a beauty queen from a movie scene

I said, "Don't mind, but what do you mean, I am the one

Who will dance on the floor in the round?"

She said I am the one who will dance on the floor in the round

 

[2nd Verse]

She told me her name was Billie Jean

As she caused a scene

Then every head turned with eyes that dreamed of being the one

Who will dance on the floor in the round

 

[Bridge]

People always told me, "Be careful of what you do

And don't go around breaking young girls' hearts"

And mother always told me, "Be careful of who you love

And be careful of what you do, 'cause the lie becomes the truth"

 

[Chorus]

Billie Jean is not my lover

She's just a girl who claims that I am the one

But the kid is not my son

She says I am the one, but the kid is not my son

 

[3rd Verse]

For forty days and for forty nights, the law was on her side

But who can stand when she's in demand?

Her schemes and plans

'Cause we danced on the floor in the round

So take my strong advice, just remember to always think twice

(Don't think twice) Do think twice! (hoo)

 

[4th Verse]

She told my baby we'd danced till three, then she looked at me

Then showed a photo of a baby crying, his eyes were like mine (oh no)

'Cause we danced on the floor in the round, baby

 

[Bridge]

People always told me, "Be careful of what you do

And don't go around breaking young girls' hearts"

She came and stood right by me

Then the smell of sweet perfume

This happened much too soon

She called me to her room

 

[Chorus]

Billie Jean is not my lover

She's just a girl who claims that I am the one

But the kid is not my son

Billie Jean is not my lover

She's just a girl who claims that I am the one

But the kid is not my son

She says I am the one, but the kid is not my son

She says I am the one, but the kid is not my son

Billie Jean is not my lover

She's just a girl who claims that I am the one

But the kid is not my son

She says I am the one, but the kid is not my son

She says I am the one

She says she is the one

She says I am the one

 

மைக்கேல் ஜாக்ஸன் என்கிற   தன் பிரபஞ்சத்தின் கண்களால் நமையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். இது அடுத்த பாடலுக்கான அவரது ஒத்திகைக் காலம். இது பொய்யெனினும் இதுதரும் உவகை பெரு நன்மை. இப்படியான பொய்கள் வாழ்க. ஒரே ஒரு எம்ஜே புகழ் வாழ்க. 

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)

 

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...