அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 68 - தனித்தொலிக்கும் நல்லிசை - யுவன் ஷங்கர் ராஜா 3 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   28 , 2017  18:37:47 IST


Andhimazhai Image

வஸந்த் பற்றித் தனி எபிஸோடில் பார்க்க வேண்டி இருக்கிறது. என்றாலும் இங்கே நேஹா பேஸின் குரலில் சத்தம் போடாதே படத்தில் இடம்பெற்ற பேசுகிறேன் பேசுகிறேன் பாடலைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லி விடலாம். ஏற்கனவே பெண்குரல் ஏகாந்தப் பாடல்கள் வரிசையில் இதனைப் பற்றிப் பேசி இருப்பதாக நினைவு. இங்கே இரண்டாம் முறை.

 

காட்சி ஊடகத்தின் சிறப்புக்களில் ஒன்று எழுதியதைப் பன்மடங்கு விரிவாக்கிக் காணச்செய்வது. அப்படியான அனுபவம் ஒரு பாடலில் கிட்டுமாயின் வார்த்தைகள் இசை காட்சி ஆகிய மூன்றுமாய் காண்பவர் மனமெல்லாம் நிரம்பி வழியும். எந்தக் குதிரையில் வருவான் எப்போது வருவானோ தேடுகிறேன் என்ற பாடலை எத்தனை பேர் கவனித்து இருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் அந்தப் பாடல் மிகமிக முக்கியமான பாடல்மாத்திரமல்ல தன்னுள் பற்பல சின்னஞ்சிறு அபாயங்களைப் பொத்தி வைத்திருக்கிற பாடலும் கூட. புதைத்தவனாலே கூட மறுபடி நினைவிற்குக் கொண்டு வந்து விட முடியாத கண்ணறியாக் கண்ணி வெடிகள் புதைத்த நிலத்தின் அமைதி கலந்த அபாயம் போல ஒரு பாடல். இதனைப் பாடிய ஷ்ரேயா கோஷல் மற்றும் ராகுல் நம்பியார் ஆகிய இருவரின் வேற்று நதிக் குரல்களாகட்டும் அராபியப் பாலை இசைக் கோர்வைகளைக் கொண்டு யுவன் அமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான பின் இசை அத்தனை அற்புதமானது. தாபத்தின் சவுக்கைக் கொண்டு ஒவ்வொரு மேனியாய் மீண்டும் மீண்டும் சொடக்கிட்டுத் தழுவினாற் போன்றதொரு தனித்த வருகை இப்பாடல்.

 

வஸந்த் என்றாலே அவரது முத்திரைப் பாடல்கள் பற்பல. பாடல்களைப் படமாக்குவதிலும் விதவிதமாய்க் கற்பனைகளைப் புகுத்துவதிலும் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தவர் வஸந்த். அவரது படவரிசையில் எல்லா இசையமைப்பாளர்களின் தி பெஸ்ட் சரளிகளும் இடம்பெற்றிருக்கும். அப்படிக் காண்கையில் யுவனும் பூவெல்லாம் கேட்டுப்பார் சத்தம் போடாதே மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்களில் தன் வழங்குதல்களைக் கொண்டு பூச்சொரிந்திருப்பதை உணரலாம்.

 

மழை மழை மழை மழை என்னை மட்டும் நனைக்கும் மழை விட்டு விட்டுத் துரத்தும் மழை பெண்ணே நீ தான் என் மழை நானுன்னைப் பார்த்த நாளிலே ஜன்னல் தாண்டிப் பெய்தது மழை நீ என்னைப் பார்த்த நாளிலே மின்னல் மின்னி வந்தது மழை நா.முத்துக்குமார் எழுதிய இந்தப் பாடல் கார்த்திக் மற்றும் ஷ்வேதா மோகன் பாடியது. கார்த்திக்கின் குரல் காதலுக்கானதல்ல. காதலின் பிரிவாற்றாமைக்கும் முன் காத்திருத்தலுக்குமானது. அந்த வகையிலான பாடல்களைக் கார்த்திக் பாடுகையிலெல்லாம் அப்பாடல்கள் பழகிய செல்லப் ப்ராணிகளைப் போலாகி அவர் முன் மண்டியிடுகின்றன. அனாயாசமான தன் அரூபவிரல்களால் வாஞ்சையுடன் அவற்றை வருடுகிறார் கார்த்திக். இந்தப் பாடலும் அப்படியான ஒரு உதாரணமே. கேட்பதற்கு முன்பு என்னவாக இருந்தாலும் எல்லாக் கலயங்களையும் காதலால் நிரப்பித் தருகிற குரல்சுரபி கார்த்திக். நா.முத்துக்குமாரின் தீராச்சொற்களைக் கொண்டு காதலின் மேனியில் ஒரு பொன்னாடையைப் போல இந்தப் பாடலைப் போர்த்தியிருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

 

 

ஒரு கண் ஜாடை செய்தாளே மனம் பஞ்சாகும் தன்னாலே இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே  இந்தப் பாடல் ஒரு ப்ளூ ஜர்னி வகைமைப் பாடல்.தமிழில் சஞ்சாரப் பாடல்கள் என்றாலே செயற்கையாக ஒரு உற்சாகத்தை ஊட்ட முயற்சிப்பதிலிருந்து அவற்றின் வழமை தொடங்கும்.சில பாடல்கள் தனித்துத் தப்பும். அப்படியான பாடல்கள் காலங்கடக்கும்.நிலா அது வானத்து மேலே பாடல் நாயகன் படத்தின் ப்ளூ ஜர்னி. தமிழில் இவ்வகைப் பாடல்கள் மொத்தம் ஐம்பதுக்குள் தான் இருக்கக் கூடும். இந்தியில் அதிகதிகம் உண்டு என்பதற்கான காரணம் பெரியதல்ல.அவ்விடத்தாரின் காமன் சிச்சுவேஷனாகவே அறிமுகப் பாடல்களை அது ஈரோ ஈரோயின் என்றில்லை கதையின் ஆரம்பத்தைக் கூட பிரயாணத்தை முன்வைத்த பல நூறு படங்கள் உண்டு என்பதனால் அப்படி.

 

இந்தப் பாடலுக்கு வருவோம். இருங்கப்பா ஒரு சூப்பர் பீட் சாங் பண்றேன் என்று முன் முடிவோடு அமர்ந்திருப்பார் போல. ஆரம்பமே அதிரி புதிரியாகவே அமையும். ஒரு வெடியைக் கையில் பற்றினால் போன்ற தொடக்கமும் அதிலிருந்து கிளைத்துக் கிளைத்துப் பெருகுகிற மத்திய இசை நம்மை ஒரு தாற்காலிக ராட்டின அந்தரத்தில் ஊசலாடுகையில் உடலின் ஆழத்தில் எங்கோ தன் கையெழுத்தை இடப் பார்க்கிற முன்பறியா பயத்தின் ஆளுமையாய்ப் பெருக்கெடுக்கிறது. பென்னி தயாளின் வருடலும் சாரலுமான குரல் எப்போது குறுகும் எப்போது விரியும் என யூகிக்க முடியாத அற்புதமாய் இப்பாடலில் சதிராடுவதைக் காணலாம்.

 

இந்தப் பாடலின் பேரழகே இடையிடையே எங்கோ தன்னிஷ்டத்துக்கு வருகிற ஓகே என்ற ஒற்றைச் சொல் தான். எளிதாய்த் தோன்றலாம்.ஆனால் அது புரிகிற மாயம் சொல்லில் அடங்கிவிடாத திமிரின்பம். விவேகாவின் உறுத்தலற்ற கவிதாமழையும் இப்பாடலுக்கு இன்னுமோர் பலம்.மொத்தத்தில் ஆன்மாவின் நடனம் இந்தப் பாடல். அத்தனை எளிதாக நேர்ந்துவிடாத அபூர்வம்.

 

தொட்டால் பூ மலரும். அது வரைக்கும் யுவனின் இசையால் நேர்ந்த அத்தனை பாடல்களுக்கும் அடுத்ததாய் ஒரு தனி ஐஸ்க்ரீமாய் அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ என்ற பாடலை படைத்தார் யுவன். அந்த வருடத்தின் ஒரு மாபெரும் ஹிட் ஆக இந்தப் பாடல் ஆனது தற்செயலல்ல. ஹரிசரணின் இன்பதுன்பமற்ற சமரசக் குரல் இப்பாடலுக்கான பின்னணி இசை வரிகள் என எல்லா விதத்திலும் இப்பாடலை மாபெரும் இசைத் தோரணமாக முன் நிறுத்திற்று. சொல்ல வேண்டிய இன்னொன்று இப்பாடலின் சரணங்களுக்கு முந்தைய இணைப்பிசை.அவற்றை மாத்திரம் தனியாக எடுத்து ஆராயலாம். இந்தப் பாடலின் கனத்தை மீறிய பெருஞ்செல்வம் அந்த இணைப்பிசைக் கோர்வைகள்.

 

காலத்தைக் கடந்து தப்புவது ஒரு படைப்புக்கு கௌரவம்.,அதுவே படைப்பாளிக்கு அடுத்த ஒன்றிற்கான முன் நிர்ப்பந்தம்.யுவனுக்கு இப்பாடலும் அத்தகைய இன்னொன்று. ஆதிபகவன் ஜெயம் ரவி அமீர் யுவன் கூட்டு. இது வெறும் பாடலல்ல. சொல்ல முடியாத காலத்தின் பேரிசை. காதலின் தாபத்தின் நிறைவேறாமையின் நிராசையின் ப்ரார்த்தித்தலும் நிர்ப்பந்தமும் கலந்தொலிக்கும் சன்னதத்தின் நல்லிசை இப்பாடல். இதனைப் பாடிய உதித் மற்றும்  ஷ்வேதா பண்டிட் இருவரும் பாடியது.யுவனின் காலகால தி பெஸ்ட்களில் ஒன்று இப்பாடல்.

 

 

காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே

நீ தொட பறந்தேனே நான் என்னை வியந்தேனே

அய்யோ அய்யோ மேகம் போலே கலைந்து கலைந்து போகிறேன்

மெய்யோ பொய்யோ தோணவில்லை ரசிகன் கவிஞன் ஆகினேன்

விண்மீன் முதுகில் ஏறினேன் நூறு கண்டம் தாவினேன்

உன்னில் உன்னில் மூழ்கினேன்

 

காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே

நீ தொட பறந்தேனே நான் என்னை வியந்தேனே

 

உயிரே உயிரே ரெண்டானதே… ஓ…

இளமை உடைந்து திண்டாடுதே… ஓ…

பாறை கரைந்து பாலானதே

பார்வை நான்கும் கொண்டாடுதே

வானம் எந்தன் தலைதட்டுதே

வார்த்தை என்னுள் கவிகட்டுதே

நீயும் நானும் கேட்காமல் நாம் ஆனதேன்

 

மூச்சு காற்றிலே நுழைந்தாயே

பூச்சு போட்டுகள் திறந்தாயே

நீ யாரடா தேடினேன் முகவரிதானே

வாய் கூசுதே உன் பேரை தான் பேசுதே

சாரலில் நான் காய்கிறேன் உன் விழி குடைதானா

ஊமையாய் நான் தேய்கிறேன் உன் மொழி விடைதானா

ரசித்து கவியை நாடினேன் உன்னில் உன்னில் மூழ்கினேன்

மின்னல் முதுகில் ஏறியே நானும் கண்டம் தாவினேன்

 

காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே

நீ தொட பறந்தேனே நான் என்னை வியந்தேனே

 

 

 

எந்தக் கலயத்துக்குள்ளும் நிரம்புவதும் எத்தனை நிலமென்றாலும் தவழ்ந்தோடிக் கலைவதும் தான் ஒரு நதியின் குணாம்சம். இசையில் யுவன் ஒரு நதி. இன்னது என்கிற எதிலும் தன்னைப் பொருத்திக் கொள்ளத் தவறாத இசைமானுடன் யுவன். என்றாலும் எந்த சட்டகங்களின் உள்ளேயும் தன்னை அடக்கிக் கொள்வதே இல்லை. எல்லாவற்றுக்கும் சரியாய் வரக் கூடிய நவ யுக யுவன் என்றால் தகும். கண்ணதாசன் காரைக்குடி என்றாரம்பிக்கிற அஞ்சாதே படப்பாடலை லேசாக நினைவுபடுத்துகிற தாளக்கட்டை அனாயாசமாய் வேறொன்றாக்குவதில் இருக்கிறது யுவனின் சமர்த்து. மெல்லிய கோடல்ல மாபெரிய வேலி என்றாகும் அளவுக்கு ஒரு பாடலை அழித்து இன்னொன்று மலர்வது அபூர்வம்.

 

 

தாலாட்டும் பாடல்கள் பல. பச்ச மலப்பூவு பாடலுக்கும் மன்றம் வந்த தென்றலுக்கு பாடலுக்கும் தீ தீ தித்திக்கும் தீ பாடலுக்கும் தூங்காத கண்ணென்று ஒன்று இவற்றுக்கெல்லாம் என்ன ஒற்றுமை..? இவை எல்லாமும் அந்தந்த காலகட்டத்தைத் தாலாட்டி உறங்க வைத்தவை. அடுத்த காலங்களுக்கும் தங்களைத் தப்பிக் கொண்டு வந்தவை. அவற்றின் வரிசையில் யுவனின் இந்தப் பாடலையும் சொல்லலாம். தகும்.

 

ஹரிஹரனின் குரலா முத்துக்குமாரின் வரிகளா என்றெல்லாம் பிரிக்கப் பகுக்க இயலாத பேரின்பமாக ஒரு துன்பியல் மெல்லிசையை ஆக்கியிருப்பதே யுவனின் நல்லிசை எனலாம். போலி செய்ய முடியாத பெருங்கலை இசை. அதின் தத்தமது கையொப்பங்களை இட்டுவிட்டு மர்மப் புன்னகைகளை நேர்த்துவதென்பது மேதைகளின் வழக்கம்.யுவனின் கையெழுத்து இந்தப் பாடல். ஹரிஹரனின் ஐஸ்க்ரீம் மழை.

    

மேற்சொன்ன பாடலுக்கான முகாந்திரம் தெலுங்கில் ஆடவாரி மாடலுக்கே அர்த்தாலு வேறுலே படத்துக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்தப் பாடல் தான். நம் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட தெலுங்குப் படமே யாரடி நீ மோகினி என்றறிக. த்ரிஷா நயந்தாராவாக மாறி வெங்கடேஷ் தனுஷாக ஆகி எஸ்பீபாலசுப்ரமணியம் ஹரிஹரனாக மாற்றம் கொண்டதே வரலாறு., அந்த வரிசையில் மாறாத பேர்களில் யுவனுடையது ஒன்று. அதே இசை இங்கேயும் தொடர்ந்தது. இரண்டில் எது பெஸ்ட் என்பதைக் கேட்பவரின் காதுகளும் மனங்களும் முடிவு செய்யக் கடவதாக.எனக்கு ரெண்டுமே பிடிக்கும். தமிழும் தெலுகுவும் சால இஷ்டமே.

 

நான் மகான் அல்ல என்ற படத்திற்கான பின்னணி இசை அபாரமானது. இந்தப் படத்திற்காக யுவன் ஒரு கூடுதல் இயக்குனராகவே மாறி இருப்பார் என்றால் அது மிகைப்படுத்துவது ஆகாது. இந்தப் படத்தைப் பலமுறை பார்த்ததற்கு ஒரு முக்கியக் காரணம் யுவனின் பின்னணி இசை. படம் தொடக்கம் முதலே எதிர்பாத்திரங்களுக்கான ஒரு கோர்வை கார்த்திக்கான இன்னொரு கோர்வை இரண்டையும் கொண்டுவந்து ஓரிடத்தில் கலந்திருப்பது சூட்சுமம். அதன் பிற்பாடு படத்தின் இரண்டாவது பாதியில் படம் முடிவை நெருங்க நெருங்க மாயம் பொங்கும் அமானுஷ்யமான நொட்டேஷன்களைக் கொடுத்தபடி படம் முடியும் போது முன்பு இல்லாத ஒரு இசைப்பூர்வ அமைதியை நமக்குள் நிகழ்த்துவார். க்ளைமாக்ஸில் கார்த்தி மட்டும் பசங்களிடம் மாட்டிக் கொள்ளும் போது ஆளுக்கு ஒரு இடத்தில் நின்று கொண்டு அனாயாசமாக ஒரு பார்வை பார்ப்பார்கள்.அந்த இடம் இதுவரைக்கும் கேட்டறியாத ஒரு இசைத்துணுக்கை நமக்கெல்லாம் வழங்கி இருப்பார் இசை இளவரசன் யுவன்.

 

 

ஆரண்ய காண்டம்  படத்தின் பின்னணி இசை முழுவதுமாக எப்போது எத்தனை முறைகள் கேட்டாலும் சலிக்காத நல்லிசை ஆல்பம். ஒரு கால் மணி நேரத்துக்கான அந்தப் படத்தின் பின் இசை இங்கே இருக்கும் சுட்டியைத் தொடர்ந்தால் கிடைக்கும்.இசையால் பேசத் தெரிந்தவனின் சன்னத மொழிதல்கள் என்றே இந்தப் படத்தின் இசைக்கோர்வைகளைப் பற்றிச் சொல்ல முடிகிறது.மனித வாழ்வின் அரூபங்களை அதன் மீவருகையற்ற தருணங்களை வேறு யாருக்கும் நிகழாத அற்புதங்களை வெளிச்சொல்ல முடியாத அற்பங்களை எல்லோருக்குமான மழையின் நீர்மங்களை யாருக்கும் வாய்க்காத விஷத் துளிகளை கண்ணீரின் சுவையற்ற சுவையை துரோகத்தின் இருளை பேராசையின் கவுச்சியை உயிர்பிழைத்தலின் வாதையை என இந்தப் படத்தின் அத்தனை உணர்வுகளையும் உள்வாங்கிப் பலமடங்கு இசைமயமான பேருருவை நேர்த்தி இருப்பது யுவனின் சிறப்பு.இந்திய அளவில் மிகச்சிறந்த பின்னணி இசை ஆல்பங்களில் இந்தப் படமும் ஒன்று.

 

ஆதலினால் காதல் செய்வீர் படத்தின் முக்கியமான இசைக்கோர்வைகளைக் கேட்கலாம். இளமை பொங்கும் இந்தப் படத்தின் நல்லிசைக்காக யுவனுக்கு அழகான முத்தமொன்றைப் பரிசளிக்கலாம். அல்லது இன்றலர்ந்த மலர்களை. அல்லது அவர் விரும்புகிற ஒரு பானத்தை அல்லது உலக வரைபடத்தில் ஒரு தேசத்தை அல்லது வேண்டாம். யுவனின் இசைக்கு ஈடில்லை. சுசீந்திரனின் இயக்கத்தில் ஆதலினால் காதல் செய்வீர் ஒரு முக்கியமான படம். அதுவும் இந்தப் படத்தின் பாடலான நட்பிலே காதல் ஒரு அதிரி புதிரி ஹிட் தமிழ்நாடே கொண்டாடிக் கூத்தாடிய காதல்கானம். அரபு நாடே பாடலின் இன்னொரு வெர்ஷனாகத் தொடங்கும் இப்பாடல் ஒரு இசைவழி ஆன்மீகம். இதனால் ஆவது இதனால் மாத்திரமே ஆகும். அந்த அளவுக்கு யுவனின் கானம் ரசம்.

 

 

இளையராஜாவின் மகன் என்பது யுவனுக்கான அடையாளமா..? அது பெரும் சிறப்பு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.என்றபோதும் தன் முழுமையான அடையாளம் தனது இசை மாத்திரமே என்பதில் தீர்மானமாக இருக்கிறார் யுவன். இளையராஜா என்ற பேரைத் தாண்டி அந்த சகாப்தத்தின் தொடர்ச்சியாக பாடல் இசை பின்னணி இசை தான் பாடுகிற பாடல்கள் உடன் பயணிக்கிற கலைஞர்கள் இசையமைப்பதில் காட்டுகிற துல்லியம் அர்ப்பணிப்பு பாடல்களின் வகைமைகளில் காட்டுகிற வித்யாசம் இசைக்கருவிகளின் பயன்பாடுகள் மீதான தணியாத தாகம் புத்திசை குறித்த நிரந்தரத் தேடல் சார்பும் முன் தீர்மானங்களும் அற்ற மையங்கொளல் எனப் பற்பல காரண காரியங்களால் யுவன் ஷங்கர் ராஜா இந்த நூற்றாண்டில் தமிழ் இசையின் முகவரியாக விளங்குகிறார். திரை இசையை இரண்டு நூற்றாண்டுகளுக்கு இடையே இணைப்பாக செயல்படுவதும் அடுத்த காலத்துக்குக் கொண்டு செல்வதுமாகிய இரண்டு காரியங்களையும் ஒருங்கே செய்து கொண்டிருக்கிற யுவன் சங்கர் ராஜா நல்லிசையின் நாயகன் தனித்தொலிக்கிற இசைஞன்  இசைவழி பொழிகிற முன்பில்லா நல்மழை அபூர்வத்தை இசைத்தவன். வாழ்க யுவன்

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...