???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 51 - இரண்டு ராஜாக்கள் 2.1 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   02 , 2017  01:51:52 IST


Andhimazhai Image

மண் வாசனை படத்தில் இடம்பெறும் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடல் என் வாழ்வோடு அத்யந்தமான ஒரு இடத்தில் பின்னிப் பிணைந்திருப்பது.ஏற்கனவே வாழ்தல் இனிது என்ற நூலில் ஒரு அத்யாயமாகவே அந்தப் பாடலைச் சுற்றிய நிகழ்தல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த இடத்தில் அந்தப் பாடலுக்கும் எனக்குமான பிணைப்பின் இசை சார்ந்த நுட்பங்களை வெளிச்சொல்லலாம் எனப்ரியம்.


ஜானகி பாலு ஐஸ்க்ரீம்சாக்லேட் கூட்டணியில் ஆயிரக்கணக்கான பாடல்கள் உண்டு. தனிப்பவை சிறந்தவை எனலாமல்லவா..? தாபத்தையும் காத்திருத்தலையும் குழைந்து பிசைந்து உருவாக்கப் பட்ட பாடல் இது.


பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பூத்திருக்கு வெக்கத்தை விட்டு பேசிப் பேசி ராசி ஆனதேன்..?மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதேன்..ரொம்ப நாளானதேன்..இந்தப் பல்லவி மெல்ல கேட்பவர் மனங்களில் ஒரு வித்தைக்காரன் இடத்தைச் சுத்தம் செய்து விரிப்பு விரித்து கம்பங்களை நட்டு கயிற்றின் பற்றுதலைச் சரிபார்த்து உடனாடுகிற சிறுமிக்கு கண் அசைவால் தயார் என்று சமிஞை கொடுப்பானே அதைப் போலவே பல்லவியை இரண்டு குரல்களும் நம்முள் ஊசிமருந்தைப் போலவே செலுத்தும்.

 

மாலையிடம் காத்து அள்ளி இருக்கு

தாலி செய்ய நேத்து சொல்லி இருக்கு

இது சாயங்காலமா மடிசாயுங்காலமா..?

முல்லைப் பூச்சூடு மெல்லப் பாய்போடு.. இந்த வாடக் காத்து சூடு ஏத்துது

எனும் போது மொத்தமும் சரிந்து இறங்கிக் கலைந்து காணாமற்போகும் மனது.


ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையே...பாடல்  மலேசியாவின் இன்னுமோர் பாரதிராஜா ஸ்பெஷல் ஒரு ரகசியத்தை வெளிச்சொல்லும் போது ஏற்படக் கூடிய மெல்லிய குறுகுறுப்பையும் கூச்சத்தையும் பாடற்படுத்தி இருப்பார்கள் மலேசியாவும் ஜானகியும். மிகப் பலமான இசைத் தொடக்கமாகட்டும் இடையிசைக் குறிப்புகளாகட்டும் முழுப் படமுமே கிராமியப் பின்னணியில் நகர்வதால் ஏற்பட்டுவிடக் கூடிய மெலிதான அயர்ச்சி மீதான அச்சத்தைத் தன் இந்தப் பாடலால் அகற்றித் தந்திருப்பார் இளையராஜா. ராதா ராதா நீ எங்கே கண்ணன் எங்கே நான் அங்கே எனும் மீண்டும் கோகிலா பாடலின் மிக மென்மையான சாயற்பாடல் இந்த ஆனந்தத் தேன்  சிந்தும் பூஞ்சோலையே பாடல். அரிசி குத்தும் அக்கா மகளே பாடலும் அன்றைக்கு நாடெல்லாம் விரும்பி நாளெல்லாம் ரசிக்கப் பட்டது.

 

                                  

 

ஏவிஎம் மின் புதுமைப்பெண் இசைத்தட்டை வைத்துப் பார்க்கையில் பாரதிராஜா இளையராஜா இருவரின் படமாகவுமே இல்லாமல் தனித்தது என்பேன்.ஓ ஒரு தென்றல் புய்யலாகி வருதே பாடல் மலேசியாவின் உச்சபட்ச பரிமளிப்பு என்றால் இளையராஜா பாடிய கண்ணியில சிக்காதய்யா கானாங்குருவி பாடல் இன்னொரு தனித்துவம்.காதல் மயக்கம் பாரம்பரிய இசையூடாக ஒரு பாடல்.கஸ்தூரி மானே கல்யாணத் தேனே பாடலும் அப்படித் தான்.இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க இளையராஜா பின்னணி இசையில் ஆக்ரோஷம் காட்டியிருப்பதை உணரமுடியும்.


முதல் மரியாதை இளையராஜா இசைத்த பாரதிராஜா இயக்கிய வைரமுத்து எழுதிய சிவாஜி படம்.முன்னும் பின்னும் சொல்லிக் கொள்ள இப்படி ஒரு இசைப்பேழை இல்லை எனும் அளவுக்கு இதன் ஆல்பம் மிக முழுமையான ஒரு சித்திரை மாதத்து முழு நிலவைப் போன்று நிரம்பித் ததும்புவது,மலேசியா வாசுதேவனின் குரலில் அத்தனை பாடல்களுமே தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் எப்போதைக்குமான தனியோரிடத்தைப் பெற்றுக்கொண்டது.,வயது கடந்த பின் உருவாகக் கூடிய பெயரற்ற வாஞ்சைக்கான பாடல்களை இளையராஜா அற்புதமாய் உண்டுபண்ணினார்.

 

 

ராதாவும் சிவாஜியும் பாத்திரங்களாகவே மாறி இருந்தனர்.மலேசியாவின் குரல் சிவாஜியின் குரல்வளைக்குள் பெயர்ந்து ஒட்டிக் கொண்டது.வெட்டிவேரு வாசம் வெடலப் புள்ள நேசம் பாடல் ஒரு சோகச்சான்றிதழ்.பூங்காத்து திரும்புமா எம்பாட்டை விரும்புமா  பாடல் ஒரு இயலாமையின் சாட்சியம்.ஏ குருவி சிட்டுக்குருவி தன்னை மறந்தவர்களின் தேசியகீதம்.ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க பாடல் ஒரு சொல்வழிச்சத்தியம்.ஏ கிளியிருக்கு பழமிருக்கு ஏரிக்கரையிருக்கு பாடல் சில்வண்டுகள் புகுந்த மனதின் சொல்கேளாரீங்காரம்.அந்த நிலாவத் தான் நான் கையில புடிச்சேன் பாடல் தெரிந்தே தன்னையும் தன்னை நம்பி வந்த இன்னொரு மனதையும் ஏமாற்றிக்கொள்ளும் மனதின் பலவீனம். மொத்தத்தில் முதல் மரியாதை படத்தின் பாடல்கள் கிராமத்து மனங்களின் அப்பழுக்கற்ற இலக்கிய சாட்சியம்.இசையாலெழுதப்பட்ட சாமான்ய வாழ்வெனும் சரித்திரம்.

 

புது நெல்லு புது நாத்து குரலை முதலில் பயணிக்கச் செய்து விட்டுப் பின் மெதுவாக ஒரு துக்கடாவை இணைத்து மிக மென்மையாக அடுத்தடுத்த இசைக்கோர்வைகளைக் கோர்த்துக் கொண்டே போய் அக்கு பங்க்சர் ஊசிகளை ஒவ்வொன்றாக ஊன்றுகிறாற் போல் மெல்ல மெல்ல செருகி இருப்பார் ராஜா. இதிலும் அவரது வழக்கமான பெருகும் மைய இசை மென் சோகம் ப்ளஸ் தீர்க்கமான சந்தோஷம் இரண்டும் கலந்தொலிப்பதும் குரல்கள் குழைந்தபடி அதனுள் லேசாய் வித்யாசம் செய்வதும் அழகாக நிகழ்ந்திருக்கும். தூங்காமக் காத்திருக்கேன் தொட்டுத் தொட்டு பேசலையே தோளோடு சேரலையே சொல்லி மனம் மாறலையே...ராசாதி ராசா பறிச்சி வச்ச ரோசா ராவானா போதும் நடுங்குதம்மா லேசா.. இந்த வரிகளுக்கு இடையே துண்டித்துத் துண்டித்து மறுபடி இணைந்தோடும் இசை சொற்களில் வசமாகா ரசம்.


சிட்டான் சிட்டான் குருவி பாடல் மனோ ஜானகி இணையின் இன்னுமோர் வைரவைடூர்யம்.பெருகும் உற்சாக இசை இந்தப் பாடலின் மைய இசையாகப் பொழியும்.பாடிய குரல்களைக் கட்டுப்படுத்துகிற லகான் உடனொலிகள் எனப்படுகிற கோரஸ் குரல்களிடத்தில் இருந்து இயக்கும்.. 


வசியம் போட்டு புடிச்சி பாரு அடிச்சா லக்கி ப்ரைஸூ தான்.. 

மசிஞ்சா நானும் ஆம்பளை இல்லை புடிச்சா புளியங்கொம்பு தான்..

குத்தாலமா சத்தியமா முந்தானைக்கு நீதானய்யா


வேலையில்லா பொட்டப் புள்ள ஜாலியில்லே ஜிம்கானா..

ஊரு எங்கும் கெட்டுப்போச்சி போடி போடி கும்கானா..

உசுரே உனக்காகத் தான் படச்சானே சாமிதான்...

ஏ சிட்டான் சிட்டான் குருவி...

 

முதல் சரணம் இரண்டாவது சரணத்தைச் சென்று சேர்கிற வழியெங்கும் ஒரு துள்ளலிசை படர்ந்தொலிக்கும் குதிரைகளின் குளம்பொலிகளாய்ப் பெருகியோங்குவது அடுத்த வளைவில் மிக மென்மையாகக் குறுகித் தனிக்கும். அந்த இடத்தை மெல்லிய நாதங்களாக்கி இருப்பார் ராஜா.


கருத்த மச்சான் பாடல் ஒரு கிராமிய மரகதம். ராஜாவால் மாத்திரமே சாத்தியமாகும் இன்னொரு மற்றொரு ராஜகானம். பம்பை ஒலிபெருகும் கருத்த மச்சான் பாடலின் துவக்கந்தொட்டு முழுப்பாடலுமே ஒற்றைக் கோர்வையிலேயே பயணித்துப் போகும். மெல்லத் தாளங்கள் அதிகரித்தாலும் கூட இரண்டு இழைகளாய் இல்லாமல் ஒற்றையிழையாகவே பெருகி முடிவு வரைக்கும் செல்வது சவுந்தர்யம். 

 

 

பல்லவிக்கும் சரணத்திற்குமான ஊடுபாவாகவும் அதே பம்பையை ஒலிக்கச் செய்தபடி புல்லாங்குழல் இசையை இணைப்பிசையாக்கி இருப்பது வித்யாசம்.ஜானகியின் குரலில் நிறைபோதை ததும்பும். தாளங்களை இத்தனை வன்மையாகக் கிறக்கவொலியாக்க முடியும் என்பது முன்னர் வேறாரும் மெய்ப்பித்திராத அதிசயம். ராஜசாத்தியம்.

 

இரண்டாவது சரணத்துக்கு முந்தைய பிட் இன்னும் கூடுதலாய் திருவிழாக் காலத்து விட்டேற்றி மனதின் வரைபடமாகவே விரிந்தொலிக்கும். நினைத்ததிலிருந்து  தொடங்கும் அருவிச்சாரலில் நனைகிற அனுபவம் என்றொரு சொலவடை உண்டல்லவா..அப்படி நினைக்கும் போதே அலுப்பற்ற உற்சாகமாய்ப் பெருகும் குரல் நதி இந்தப் பாடல்.


புதிய வார்ப்புகள் படத்தில் இளையராஜாவின் புத்திசை மீதான பிடிவாதம் நம்தன நம்தன பாடலாக உருவெடுத்திருக்கும்.ஜென்சி மற்றும் பி.வஸந்தா குரல்களில் இன்றைய இளையோர் மனங்களையும் வருடித் தன் வசமாக்கி இருக்கும் சொற்ப பாடல்களில் இதுவும் ஒன்று என்பது வெறும் சேதியல்ல.கங்கை அமரனின் பாடல்வரிகளில் இந்தப் பாடலின் மொத்த செலுத்துதலுமே பாரம்பரிய இசையின் ஓடுபாதையில் புத்திசைக்கான தொனித்தலையும் உட்படுத்தியபடி நகர்ந்துசெல்வதாக அமைந்திருக்கும்.கோரஸ் குரல்களை ஒரு வாத்தியக்கருவிக்கு உண்டான பலத்தோடு பயனுறுத்தி இருப்பார் ஞானி.மேலும் இந்தப் பாடலின் சரணங்களுக்கு இடையிலான இணைப்பிசை சோகமும் மென்மையும் ததும்பும் அமானுஷ்யப் பெருக்கமாக அமைந்திருக்கும்.மையை இசையின் சன்னவிலக்கமாய் நிலைபெற்றிருக்கும்.மனதைப் பிசையும் குரலும் இசையும் இதன் பலம்.
    

 

ஒரு அதிகாலையைப் பெயர்த்தெடுத்து இசைப்படுத்திக் கைகளில் ஒரு குழந்தையைப் போலத் தவழச் செய்திருப்பார் வான் மேகங்களே பாடலில் இதனை மலேஷியா பாடியதன் பரவசச் சரிதத்தைப் போற்றச் சொற்கள் போதாது.ஒரு காகிதப் பட்டத்தின் காற்றலைதலைப் போலவே தன் குரலை அலையச் செய்திருப்பார் மலேஷியாவாசுதேவன்.

நிறம் மாறாத பூக்களில் ஆயிரம் மலர்களே மலருங்கள் இரு பறவைகள் மலை முழுவதும் அங்கே இங்கே பறந்தன என்ற இரண்டு பாடல்களுமே புத்தம்புதிய குரல்களும் இசைக்கோர்வைகளும் கொண்டு மனங்கொத்திய வைரங்கள்.நின்று நிதானித்து ஒலிக்கும் இரு பறவைகள் பாடலாகட்டும் ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலாகட்டும் இரண்டுமே ரேடியோ ஹிட்ஸ் தான்.இன்றும் குன்றாக் குரல் செல்வந்தம்.இந்தப் படத்தின் முதன்முதலாக காதல் டூயட் பாட வந்தேனே பாடல் அந்த வருடத்தின் பெருவெற்றிகரம் மாத்திரமல்ல.இன்றுமென்றும் விருப்பங்குறையாப் பாடலாபரணம்.      

பாரதிராஜா எடுத்த பீரியட் படம் நாடோடித் தென்றல்.கார்த்திக் ரஞ்சிதா நெப்போலியன் நடித்த இந்தப் படத்தை சமீபத்தில் தான் நான் பார்த்தேன்.வெளியான போது நான் பார்க்கத் தவறிய வெகு சில நல்ல படங்களில் ஒன்று என இதனைச் சொல்வேன்.ராஜாவின் இசை வழக்கம் போலவே பாரதிராஜாவுக்கான அட்சயபாத்திரத்தின் இன்னொரு அள்ளலாய்ப் பொங்கி இருக்கும்.

இளையராஜா எழுதி இசை அமைத்து பாடிய குறிப்பிடத் தகுந்த பாடல்கள் நாடோடித் தென்றல் படத்தில் இடம்பெற்றன.அவற்றுள் ஒரு கணம் ஒரு யுகமாக பாட்டு முக்கியமான ஒன்று. சொல்ல வேண்டியது நாடோடித் தென்றல் படத்திலும் வழக்கம் போலவே பாரதிராஜாவுக்கான ஸ்பெஷல் ட்ரீட்டை கச்சிதமாகவே நேர்த்தி இருப்பார் ராஜா. ஒவ்வொரு பாடலுமே வெவ்வேறு வகைமை.மலேஷியா வாசுதேவனின் இன்னுமொரு அட்டகாசம் இந்தப் படத்தில் இடம்பெற்ற ஏலமலக் காட்டுக்குள்ள பாடல். நாடோடித் தன்மை பெருகும் முன்முதுமைக் காலக் குரலொன்றில் ஆங்காரமும் இயலாமையும் கலந்தொலிக்கும் அபூர்வக் குரல் ஒன்றைக் கட்டுக்குள் நிறுத்திப் பாடி இருப்பார் மலேஷியா வாசுதேவன்.
 

சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே பாடல் இளையராஜாவின் மற்றும் ஒரு உச்சந்தொடல். இதன் மைய இசையாகட்டும். மெலிதாக இழையோடியபடி பாடல் முழுவதும் தொடர்ந்தொலிக்கும் தாளம் அத்தனை தனியாக அத்தனை பலமாக ஒலிக்கும். பாடிய குரல்களை வழமைக்குச் சற்றுக் குறைவாகவே ஒலிக்கும் வண்ணம் கட்டுப்படுத்தி இருப்பது பாடலின் கூடுதல் பலமாக மாறி இருக்கும். மிக லேசான கிறக்கத்தை பாடல் வரிகளின் மீது மென்மையாக்கிப் படர்த்தி இருப்பார்கள் மனோவும் ஜானகியும். ஒவ்வாமைக்கு முந்தைய மிக லேசான அயர்ச்சியை கேட்பனுபவத்தினுள் சன்னமாய் நிகழ்த்தியபடி முழுப் பாடலையும் அனுபவமாக்கி இருப்பார் ராஜா. இந்தப் பாடலின் படமாக்கல் இதன் அந்தஸ்தை இன்னொரு மடங்கு அதிகரித்திருக்கும். நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி என்றடங்கும் போது அகிலவுலக அண்ட சராசரங்களும் அடங்கித் தான் போகும் ஒரு கணம். மணியே மணிக்குயிலே மாலை இளங்கதிரழகே பாடல் மொழிவளம் மிக்கதொரு இசைக்கவிதை. மொத்தப் படமுமே காலத்தை வென்ற ஆல்பம்தான்.

 

பாரதிராஜாவின் முதல் பதினைந்து ஆண்டுகளில் இருபத்து மூன்று படங்கள். நேரடித் தமிழ்ப் படங்கள் ஒரு பதினெட்டு இருக்கும். கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக பாரதியின் படத்துக்கு இளையராஜா இசைக்கவில்லை. ஆனாலும் இளையராஜா வைரமுத்து பிரிந்தார்கள் சேரவில்லை என்றே மறுபடி மறுபடி விவாதிக்கப்பட்டு வருகிற எதுவும் இவர்களது படங்களில் பங்கேற்காமை பற்றி எந்தப் பேச்சுமே இல்லை என்பதிலிருந்தே கூட இருவரின் உடைபட முடியாத உன்னத நட்பின் வித்யாசத்தை எழுதுவதைத் தொடங்க முடியும். திரைத் துறையின் சார்புகளும் விடுவித்தல்களும் எல்லாமுமே ராசி பணம் தேவை சூழல் புதுமை இன்னபிற இன்னபிற காரணங்களால் நடைபெறுவது. அரசியலிலாவது நட்பு எனும் சொல்லாவது கிடைக்கும். சினிமாவில் அப்படி ஒரு சொல்லே அபூர்வம். அப்படி இருக்கையில் இந்திய அளவில் சினிமா கலைஞர்களுக்கு இடையிலான நட்பைப் பற்றிச் சுட்டுகையிலெல்லாம் இந்த இரண்டு ராஜாக்களின் பெயர்களும் அவரிடை நட்பும் அடிக்கடி சொல்லப்பட்டுக் கொண்டே இருப்பதும் இந்த இருவருக்கு அப்பால் கடந்த நாற்பதாண்டு சினிமாவில் இப்படி இன்னுமிருவர் சொல்லப்படவில்லை என்பதும் லேசாகப் பொறாமைக்கு உரிய பதார்த்தமாகவே இவ்விருவரின் ஸ்னேகத்தைச் சொல்ல வைக்கின்றது. வாழ்தல் இனிது. வாழ்க ஸ்னேகிதர்கள்.

 

 

இந்திய அளவில் இயக்குநர் சினிமாக்களில் பாரதிராஜாவின் படங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு.அவற்றில் அவரது முன்பாதி அளவுக்கு இல்லை என்றாலும் கூட இளையராஜாவுக்கு அப்பால் பாரதிராஜாவோடு பணியாற்றிய இசை அமைப்பாளர்கள் எனப் பார்த்தால் ரவிதேவேந்திரன், வித்யாசாகர், அம்சலேகா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, மரகதமணி, சிற்பி, ஹிமேஷ் ரெசேம்மியா ஆகியோருடன் இணைந்தார்கள். இவற்றில் பாடல்களின் வெற்றிகரம் தோல்விமுகம் ஆகியவற்றைத் தாண்டி இளையராஜா இல்லை என்ற ஒரு உணர்வை பாரதிராஜாவின் ஏறக்குறைய அத்தனை படங்களுமே எனக்குத் தந்திருக்கிறது. அந்தப் படங்களின் பாடல்களைப் பற்றி வேறோரு அத்தியாயத்தில் பார்க்கலாம்.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...