???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை 0 சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்! 0 அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு! 0 மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் 0 ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்! 0 தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு! 0 கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை 0 `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் 0 இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! 0 இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 45 - கிறங்கடிக்கும் இசைஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   27 , 2017  01:43:47 IST


Andhimazhai Image

எல்லாருக்குமே காதல்காலம் வசந்தமான ஞாபகங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அதிலும் காதலுக்கும் கல்யாணத்துக்கும் இடைவெளியில் எதைப் பார்த்தாலும் பித்தூறும். என் வாழ்வின் காதல் + கல்யாண காலத்தில் கேட்க நேர்ந்த சிலபல பாடல்கள் வர்ணசந்தனச்சாரலாக மனதில் தங்கியதில் ஆச்சரியம் இல்லை. மின்னலே படத்தில் வெண்மதி வெண்மதி நில்லு சாமி படத்தில் இதுதானா இவள் தானா என்ற பாடல்கள் அந்த வகையில் வரும். அப்படியான தனித்த ஸ்பெஷல் கேஸட் ஒன்றின் அனேக பாடல்கள் இளையராஜாவினுடையது இல்லை என்று சொல்வேன். அதுதான் நிஜம். அந்தக் குறிப்பிட்ட சின்னஞ்சிறிய காலத்தில் நான் அதிகதிகம் கேட்டதும் திரும்பத் திரும்பப் பித்தாகித் திரிந்ததும் இன்னொருவரின் இசை மீது தான். அவர் பெயர் கார்த்திக்ராஜா.


முதன் முதலில் பாண்டியன் படத்தில் பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என்ற பாடலை கார்த்திக் ராஜா இசையமைத்து ராஜாவின் முதல் பாடலை எழுதிய பஞ்சு அருணாச்சலமே அதையும் எழுதி அவரையும் முன்மொழிகிறார் என்று அறிவிக்கப் பட்டது. கார்த்திக் ராஜாவின் முதல் பாடல் அந்த அளவில் சூப்பர் ஸ்டார் நடிகரின் சூப்பர் டூப்பர் பாடலாகவே தொடங்கிற்று.

 

 

கார்த்திக் ராஜா செறிவூட்டப்பட்ட ராஜவாரிசாக அறிமுகக்கணம் தொட்டே முன்னகர்த்தப் பட்டு வந்தார். அவரது ஆரம்பப் படங்கள் பார்த்துப் பார்த்து தேர்வெடுக்கப் பட்டன. ரஹ்மானின் ஆரம்பத்தை ஒட்டிய அடுத்த காலத்தில் கார்த்திக் ராஜாவின் படங்களும் பாடல்களும் கவனத்தை ஈர்க்கவே செய்தன. சில பெருவெற்றி பெற்றன. சில தோல்வியடைந்தன. ஆனாலும் தொடர்ந்து வந்த காலத்தில் கார்த்திக் ராஜா நம்பர் ஒன் எனும் ஸ்தானம் நோக்கி நகர்ந்திருக்க வேண்டியவர் குறைவான படங்களுக்கே இசை அமைத்தார். மிகச்செறிவான பாடல்களை மாத்திரமல்ல பின்னணி இசையிலும் தீர்க்கத்தை உருவாக்கத் தெரிந்தவர் கார்த்திக்ராஜா.அவரது பாடல்கள் புத்திசையும் நுட்பமும் நிரம்பியவை.வார்த்தைகளின் துல்லிய ஒலித்தலை எப்போதும் உறுதிப்படுத்துவதைத் தன் வழக்கமாகக் கொண்டவர் கார்த்திக்.

 

 

மாணிக்கம் படத்தில்  சந்தனம் தேச்சாச்சி பாடலை அதுவரைக்கும் இல்லாத புத்தம் புதிய தொனியுடன் செய்திருப்பார் கார்த்திக். அதன் தொடக்க இசை மலைச்சரிவில் கூட்டமாய்த் தப்பியோடும் முயல்களின் உற்சாகத்தை இசைப்படுத்தினாற் போல் தொடங்கும். சரணங்களுக்கு முந்தைய இணைப்பிசை மிகப்பலமாக ஒலிக்கும். லேசான எள்ளலையும் பலமான துடிப்பையும் ஒருங்கே பிசைந்து பவதாரிணியின் குரலோடு இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் ஈர்க்கும். இந்தப் பாடலின் நடுவே மிகச்சிறிய இடத்தில் தபலா  துடித்தொலிக்கும். ஆஹா பிரமாதம் என்றாற் போல் மொத்தப் பாடலுமே இனிப்புக் கொட்டகைக்குள் வழி மாறிப் புகுந்த ஈயைப் போலாக்கும் நம்மை.

 

 

 

அலெக்ஸாண்டர் படத்தில்  நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா இந்தப் பாடலின் ஆரம்பத்தை பெருந்திரளான மேற்கத்தியக் கோர்வையாகத் தொடங்கிப் பெருகிப் பின் நிதானித்துப் பனிசூழ்தென்றலின் ஒலியாய்க் குறுகி உன்னிக்கிருஷ்ணன் குரலில் பாடலுக்குள் நேரடியாகப் புகுந்துகொள்ளச் செய்திருப்பார். முதல் இரண்டு வரிகள் திசையற்ற பறவை போல அலையும் பாடல் இந்த சோலைக் குயிலும் என்னும் வரியில் நேராய் மேலெழும்பும்.நெடிதுயர்வானம் கைவரப் பெற்ற மழைகொத்திப் பறவையாகப் பறந்து கண்காணா வானேகும். அந்தி வானம் சிவக்கும் புது வாழ்வும் பிறக்கும். அடடா... உன்னி சாக்லேட் கிருஷ்ணன். பவ ஐஸ்க்ரீம் தாரணி விஜயகாந்த்தின் திரைப்பாடல்களில் முதல் ஐந்து இடங்களுக்குள் இந்தப் பாடலை எப்போதும் இடம்பெறச் செய்வேன். அற்புதமான கோர்வை முழுப் பாடலுமே பனிக்கூழ்சுகம்.

 

க்ரஹன் எனும் நேரடி ஹிந்திப் படத்துக்கு இசை அமைத்தார் கார்த்திக் ராஜா ஏ சோச்சுதா எனும் இந்தப் பாடலைக் கேட்டால் குறையொன்றுமில்லை என்பது புரியும். நிசமேதமையும் துல்லியமும் தனித்துவமும் நிரம்பிய பாடல்ராஜன் கார்த்திக் ராஜா என்பதைப் பறைசாற்றும் இன்னுமொரு பாடல்.

 

 

கார்த்திக் ராஜாவின் நகர்தலில் மிக முக்கியமான இன்னொரு ஆல்பம் உல்லாசம். அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் எடுத்த இந்தப் படத்தை இயக்கியவர்கள் ஜேடீஜெரீ இரட்டையர். மொத்தம் எட்டுப் பாடல்கள்.சூப்பர் ஹிட் வகையறா தான் எல்லாமே.. அதிலும் கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அதிரிபுதிரி ஹிட். ரகத்துக்கு ஒன்று இந்தா என்று அதகளம் செய்திருப்பார் கார்த்திக்ராஜா. ஹரிணியும் ஹரிஹரனும் சேர்ந்து அபூர்வமான அசத்தலாய் இந்தப் பாடலைத் தங்கள் குரல்களால் வலுவாக எழுப்பித் தந்திருப்பார்கள். இந்தப் பாடலின் ஆரம்ப இசையைத் தனியே ஒலிக்கச் செய்து திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறேன். ஒருவிதமான மதம் பிடித்த யானையின் அலைதலைப் போலவே மனசுக்குள் அதிரும். மனசும் அலையும். பிறகு மைய இசை பெருகும் போது லயித்து ஒருமுகம் கொள்ளும். இந்தப் பாடலின் சரணங்களுக்கான இணைப்பிசையை உற்றுக் கவனியுங்கள். ராஜாவின் ஆரம்ப காலத்தின் அதே தனிச்சாலைப் பயணம் கார்த்திக்கிற்கும் வாய்த்தது புரியும்.

 

 

காதலா காதலாவில் எல்லாப் பாடல்களுமே உற்சாகமும் இணக்கமும் மிக்கவை. காசுமேல காசு வந்து அந்தக் கால வைரல்.அனகோண்டாவும் சரவணபவவும் காணவும் கேட்கவும் இன்பமாய்ப் பொங்கிற்று. தகிட தத்தித்தோம் அண்ணாச்சியும் கூடவே இனித்தது. என் சாய்ஸ் என்னவெனில் லைலா லைலா லைட்டாத் தான் அடிப்பா ஸைட்டு... யம்மாடீ எத்தனை நாட்கள் இந்த ஒரே பாடலுக்குள் மூழ்கி மூழ்கி மூழ்கினபடி இருந்திருக்கிறேன் தெரியுமா..? இந்தப் பாடலை இப்படித் துவக்கலாம் என்று திட்டமிட்டதற்கே ஆயிரம் முத்தங்கள் தரலாம். கார்த்திக் ராஜாவின் அபாரமான திறனை இந்தப் பாடல் வெளிவிளம்பும். பவதாரணியால் மாத்திரமே எடுத்தளிக்க முடிந்த குரலாச்சர்யம் இந்தப் பாடல் கூடவே ஹரிஹரமேதை. கேட்கவா வேண்டும்..? நாம் இருவர் நமக்கிருவர் படமும் கூட காதலா காதலாவின் இசை பாதிப்புடனேயே இணை நதியாகவே பெருகிற்று என்பேன்.

 

டும் டும் டும் ஒரு அற்புதம். கார்த்திக் ராஜாவின் உச்சம் என்றே இந்த ஆல்பத்தை விளிப்பேன். ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால்  இந்தப் பாடல் ஒரு கவனந்திருடி. உள்ளங்கொத்தி. முன்னரறியாப் புதுமழை.


ஆல்பம் படத்தின் செல்லமே செல்லம் என்றாயடி ஷ்ரேயா கோஷல் மற்றும் ஹரிஹரன் பாடியது. கார்த்திக் ராஜாவின் தி பெஸ்ட் பாடல்களில் இதுவும் ஒன்று.ஒரு பாடலால் என்னவெல்லாம் செய்ய முடியாதோ அல்லது என்னவெல்லாம் ஒரே ஒரு பாடலில் கிடைத்தால் மனசு கிறங்கி நீந்திமுடித்த மீனாய் அலைந்தபடியே அமைதியுறுமோ அப்படியான அவற்றை எல்லாம் அனாயாசமாக இந்தப் பாடல் செய்து காண்பிக்கும். என்னால் இந்தப் பாடலில் இருந்து அத்தனை சீக்கிரத்தில் வெளியாகி வர முடியவே இல்லை. இத்தனைக்கும் இந்தப் படம் வெளியான காலத்தை விட அதன் பின்னதான அடுத்த காலங்களில் இன்னமும் விரும்பப்பட்டுக் கொண்டிருக்கிறது வியப்பற்ற வியப்புத் தான்.

 

 

நிற்க.. முதல் பாராவில் சொன்ன என்னைக் கிறங்கடித்த என்னை உறங்கவிடாமல் செய்த என் காதலின் பல நுண் இழைகளோடு தங்களைப் பிணைத்துக் கொண்ட கார்த்திக் ராஜாவின் பாடல்கள் உள்ளம் கொள்ளை போகுதே படத்தின் பாடல்கள்.என் வாழ்வின் பாடல்கள் என்றால் அது மிகையற்ற சரிநிஜமே.


சின்னஞ்சிறிய பாடல்கள் ஆகக்கடினம் தெரியுமா..? ராஜாவுக்கு அடுத்து அப்படியான பாடல்களை கார்த்திக்ராஜா பட்டை கிளப்பி இருப்பார் இந்தப் படத்தில் தவற விடக் கூடாத தருணங்களை அழகான மாலையின் இடைப்பூக்களாய்க் கோர்த்தெடுத்தாற் போல் அழகான பாடல்கள் அவை. திரும்பத் திரும்பக் கேட்டாலும் சலிக்காத அந்தப் பாடல்களை எப்போது கேட்டாலும் புத்திசையாய் மலர்வது ரசம்.


கதவை நான் தட்டினேன் 

சொர்க்கமே வந்தது 
தேவதை வந்தது 
என் காதல் தேவதை நின்றதே...
கதவைத் திறந்தேன் ஒரு நிமிஷம் 
இறந்துப் பிறந்தேன் மறு நிமிஷம்.
இப்படி இப்படி இப்படியே 
நாம் இருக்கக் கூடாதா பலவருஷம்...
ஹைய்யோ ஹைய்யய்யோ...

 

உயிரே என் உயிரே 

எங்கு சாலையில் போகின்றாய் 
எங்கு காலையில் போகின்றாய் 
உனக்குப் பின்னால் என் இதயம் 
உன்னைத் தேடி வருகிறதே 
சாலை விதிகள் தெரியாமல் 
ஓடி ஓடி வருகிறதே 
உயிரே என் உயிரே...எங்கு சாலையில் போகின்றாய் 
எங்கு காலையில் போகின்றாய்..?
என் பாலைவனத்தைக் கடந்து செல்லும் 
மழைமேகமே 
ஒரே ஒரு முறைதான் 
சாரல் வீசக் கூடாதா 
சாரல்வீசக் கூடாதா 
சாரல் வீசக் கூடாதா..?


அன்பே அன்பே பாடலைக் கேளுங்கள். இந்தியாவின் ஆகச்சிறந்த பாடகர்களில் ஒருவர் உன்னிக்கிருஷ்ணன். அவரை சாஸ்திரிய சங்கீதமெனும் விலங்கு கொண்டு பூட்டி வைத்திருக்கிறோம். கார்த்திக் ராஜா ஆகச்சிறந்த கம்போஸர்.ராஜா என்னும் மனிதனின் நிழலைக் கொண்டே பல துண்டுகளாய் வெட்டிக் கொண்டே இருக்கிறோம். இந்தப் பாடலுக்கான ஆகச்சிறப்பு என இதனைச் சொல்வேன். இளையராஜாவுக்குப் பின்னதான கம்போஸிஷன்களில் அவரது பாதிப்பும் இல்லாமல் அதற்கு மாற்றான புத்திசையும் கொண்டு அதே நேரம் பரிபூரணமான இசைத்தன்மையோடு முழுமையான பாடலுக்கான லட்சணத்தோடு கூடிய உதாரணமான ஒரு பாடல்.கார்த்திக்ராஜா. நிஜமான இசைஞன். உன்னிக்கிருஷ்ணன் பாடிய பாடல்

அன்பே அன்பே என் கண்ணில் நீ தானே 
மூச்சுக்காற்றாய் நான் வந்து 
வெளியே சென்றேன் சரிதானே
காதல் ஒரு பரீட்சை தானே 
எழுதிடவே நானும் வந்தேன் 
இன்னொருவன் பேரில் தானே 
நானெழுதிச் சென்றேனே
இரயில் பயணம் தானே காதல் 
நானும் அதில் பயணம் செய்தேன்.
இறங்கச் சொல்லிக் காதல் கேட்க 
நான் இறங்கிச் சென்றேனே.
அன்பே என் அன்பே...
சிலுவை சுமந்தானே 
அவனிந்த காதலில் விழுந்திருந்தால் 
சிலுவை வலியென்ன 
வார்த்தையை வாய்வழி சொல்வானா 
இதயம் ஒருநாள் இரண்டாக உடையும் 
அங்கு வந்து பார் உன் பிம்பம் தெரியும் 
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்.
நீ வந்து தான் நீராடிப் போ...
அன்பே அன்பே என் கண்ணில் நீ தானே


இந்தப் படத்தை மதுரை அம்பிகை தியேட்டரில் பார்த்தேன். சுந்தர் சி என்ற பெயரின் பின்னால் வரைந்தளிக்கப்பட்ட பிம்பம் இது ஒரு நகைச்சுவைப் படம் என்ற முன் முடிவோடு அந்தப் படத்தை ஓபனிங் ஷோ பார்க்கத் தூண்டிற்று. படமோ ஒரு அழகான காதல் படம். அதுவும் சுத்தமாக எதிர்பார்க்காத பாடல்களும் பின்னணி இசையும் இந்தப் படம் என் வாழ்வின் முக்கியமான படமாக மாறியது. ஒரு அழகான மறக்க முடியாத கவிதை இந்தப் படம் தந்த உணர்தல்.அதிலும் பாசாங்கற்ற சொற்களால் இந்தப் பாடலை முதல் தடவை பார்க்கும் போதே கேட்கும் போதே கண்ணெல்லாம் கலங்கி எனையறியாமல் அழுது தவித்தேன். படம் முடிந்து வரும் வழியில் தான் இதன் கேஸட்டை வாங்கினேன். அதுவரை எப்படித் தவற விட்டேன் எனத் தெரியாமல் என்னை நானே கடிந்துகொண்டேன். கிட்டத் தட்ட தியேட்டரில் மாத்திரம் இந்தப் படத்தை ஏழு முறைகள் பார்த்த ஞாபகம். பாடல்களுக்காகத் தான் ஆறு முறைகள் பார்த்தேன் எனச் சொல்லவும் வேண்டுமா..?

 ஹரிஹரன் பாடிய சோகப் பாடல் கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா இரண்டுமே ஒன்று தான் ஓஹோ... ஓவியம் வரையவா உன் கால் தடம் வரையவா இரண்டுமே ஒன்று தான் ஓஹோ... யாரந்த ரோஜாப்பூ கண்ணாடி நெஞ்சின் மேல் கல்வீசிப் போனாள் அவள் யாரோ உள்ளம் கொள்ளை போகுதே உன்னைக் கண்ட நாள் முதல் உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே...இந்தப் பாடலின் முழு கம்போஸிஷனும் அழகான கவிதையை இசைப்படுத்திய உணர்தலாய்ப் பெருகும். தபலாவை ராஜாவை விட அழகாக பயன்படுத்தி இருப்பார் கார்த்திக். ராஜாவை விட என்ற வார்த்தைகளை நான் எழுதுகிறேன் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. உண்மையாகவே சொல்கிறேன். ராஜாவை விடச் சிறந்த இசை அமைப்பாளர் முழுமையான இசைஞன் என்று கார்த்திக் ராஜாவை சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.காகிதத்தில் செய்த பூவுக்கும் என் மனசுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ இரண்டுமே பூஜைக்குப் போகாதோ.. ...
பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும் என் ஆசைக்கும் சம்மந்தம் இருக்கிறதோ இரண்டுமே வெளிவர முடியாதோ ...
செடியைப் பூப்பூக்க வைத்தாலும் வேர்கள் மண்ணுக்குள் மறையும் உதட்டில் புன்முறுவல் பூத்தாலும் உள்ளே சருகாய்க் கிடக்குதே.
....
கவிதைகள் சொல்லவா..இந்தப் பாடலின் மைய இசை நகர்தலை உற்று கவனித்தால் மிக மென்மையான உத்தேசமேதுமற்ற காற்றைப் போல அலையும் இசையைக் கண்ணுற முடியும். முன்பிலாத நல்லிசை அது. ஓங்கி ஒலித்திருந்தால் இந்தப் பாடலின் ஆன்மாவைக் கீறி இருக்கும். ஹரிஹரனின் குரலும் கார்த்திக்கின் இசையும் விஜயின் வரிகளும் இந்தப் பாடலை தென் திசையின் முதல் கஸல் செறிவுள்ள பாடலாக மாற்றி இருக்கும். அற்புதம்.உண்மையில் நானொரு கடிகாரம் ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல் சுற்றுதம்மா இங்கு என் வாழ்வும்
உண்மையில் என் மனம் மெழுகாகும் சிலர் இருட்டுக்குத் தான் அது ஒளி வீசும் கடைசிவரை தனியாய் உருகும் ...
பிறரின் முகம் காட்டும் கண்ணாடி அதற்கு முகமொன்றும் இல்லை.அந்தக் கண்ணாடி நான் தானே முகமே இல்லை என்னிடம் தான்...
....
கவிதைகள் சொல்லவா...

 

ஒரு பாடல் என்றால் இப்படி இருக்க வேண்டும்.முடிகிறதே என்று தவிக்க வேண்டும். மறுபடி நம்மை அறியாமல் அதனை ஒலிக்கச் செய்ய வேண்டும்.மறுபடி மறுபடி ஒலித்தாலும் குழந்தையின் தீராத இனிப்பு இச்சை போல மனசில் அப்பிக்கொள்ள வேண்டும். சாஸ்வதம். நம்பர் ஒன் நம்பர் டூ என்பதெல்லாம் வெறும் கணிதப்பொய்கள். கார்த்திக் ராஜா ஒச்சமற்ற நல்லிசைக்குச் சொந்தக்காரர். இசையுள்ள வரை கார்த்திக்கின் பேரும் புகழும் நிலைத்திருக்கும்.இந்தக் கட்டுரையின் பாடல்கள் அவற்றுக்கான சாட்சியம்.ராஜா'ஸ் கார்னர்
***************************
BGM BENCH

 

       

 

பாலுமகேந்திராவுக்கென்றே தனியாக இசைத்தார் ராஜா என்றொரு குற்றச்சாட்டு உண்டு.அதனை மெய்ப்பிப்பதற்கான சான்று இந்தக் கோர்வை.மறுபடியும் படத்தின் பின்னணி இசை.ஒரே ஒரு பாலுமகேந்திராவுக்கு ஒரே ஒரு இளையராஜா...

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...