???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை 0 சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்! 0 அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு! 0 மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் 0 ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்! 0 தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு! 0 கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை 0 `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் 0 இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! 0 இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 43 - கன்னத்தில் சின்னம் செய் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   13 , 2017  00:14:36 IST


Andhimazhai Image

எச்சரிக்கை

புலன் மயக்கம் தொடரின் 43 ஆம் அத்தியாயமான இதன் உள்ளடக்கத்தில் செய்யப்பட்டிருக்கிற சிறிய மற்றும் நடுவாந்திர மாற்றங்கள் தற்செயலானவை அல்ல. அறிந்தும் புரிந்தும் செய்யப்பட்டிருக்கிற உள்ளடக்க மடைத் திருப்பங்களே. இவை இந்த ஒரு அத்தியாயத்துக்கானவை அல்ல. இனி அவை இனியவை.


சீர்காழி கோவிந்தராஜனின் குரல் ஆன்மீகத்துக்காவே நேர்ந்து விடப்பட்ட கோயில்காளை உப்பிலியப்பன் போலத் தான் நம்பிக் கொண்டிருந்தேன். சில குரல்கள் தனித்தவை அவற்றின் சிறப்பே அவற்றின் சுமையாகவும் மாறிவிடுவதும் நடக்கும். என் அன்புத்தோழி ஒருவர் ஒரு பரத நாட்டியக் கலைஞர். அவர் மாடர்ன் உடைகளில் நவநாகரீகமாய்த் தோற்றமளிக்கிற போதெல்லாம் எனக்கு அந்த பரதக் கலைஞரின் தோற்றமும் கூடவே வந்து போகும். அவரிடம் சொன்னால் அதானே என் அடையாளம் எனச் சிரிப்பார். நடிகை ஷோபனா போன்ற சிலருக்கே பரத உடையில் ஒரு தோற்றமும் மாடர்ன் தோற்றத்தில் வேறோரு ரூபமும் வாய்த்து இரண்டுமே ரசிக்கத் தக்க அளவில் மாத்திரமல்ல. இரு வேறுபட்ட மாந்தர்களாகவே தெரியச்செய்வது அசாதாரணம் அல்லவா..? அதிலும் குரல் என்று வருகையில் அது எவ்வளவு கடினம்..?

 


தொழில்முறைப் பாடகர்களின் குரல் இனிமைக்காகவும் தனித்துவத்துக்காகவும் விரும்பப் படுவது என்பதின் உள்ளே இருக்கக் கூடிய நுட்பத்தை புரிந்து கொள்ள வேண்டும். கர்நாடக இசை மேதைகள் பலரும் சினிமாப் பாடல்களை அங்குமிங்குமாய்ப் பாடி இருந்தாலும் கூட எல்லாருக்குமானதல்ல எல்லா மேடைகளும்.எல்லாப் பாடல்களையும் யார் வேண்டுமானாலும் பாடி விட முடியாது என்பது எப்படி முதல் ஆகமமோ அப்படியே தான் எல்லாருக்குமானதல்ல பாடல்கள்.பாடல்களுக்கான குரல்களைத் தான் தேடித் தேடிக் கொடுக்கிறார்கள். அதன் பின்னதான வடிவம் தான் நமக்கெல்லாம் நுகர்வதற்குத் தரப்படுகிறது.

 

 

கனமான குரல் மிருதுவான குரல் என்பதெல்லாம் தன்மைகள்.மலேசியாவாசுதேவனின் குரலை என்ன என விளிப்பீர்கள்..? எப்படி வகைப்படுத்த முடியும்..? கோடை காலக் காற்றே ஆகட்டும் பொதுவாக என்மனசு தங்கம் ஆகட்டும் ஒரு கூட்டுக்கிளியாக ஆகட்டும் ஆசை நூறுவகை ஆகட்டும் தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி ஆகட்டும்.. இவை எல்லாம் ஒரே பாடகர் பாடியது என்று எதாவதொரு வெள்ளைக் கார இசைவிரும்பியிடம் சொல்லிப் பாருங்கள். உங்களையே தன்னைப் பீடிக்க வந்த பேயென்றெண்ணித் தலை தெறிப்பார்.

 

 

சீர்காழி கோவிந்தராஜனுக்கு மகாகனம் பொருந்திய குரல். இந்தியாவின் உச்சபட்ச வெண்கலக் குரல்களுக்கென்று ஒரு வரிசை அமைத்தால் அனேகமாக முதல் அல்லது இரண்டாம் இடங்களை சீர்காழியும் ஷங்கர்மகாதேவனும் பிடித்தமர்வார்கள். இது என் நம்பிக்கை. இறையம்சம் தொனிக்கிற குரல்கள் அபூர்வமானவை. அதிலும் ஆண் குரல்களில் சீர்காழியின் குரல் உச்சஸ்தாயிக்கென்றே படைக்கப் பட்டாற் போலத் தொனிக்கும். அந்த உயரத்தில் சென்று நிலைப்பதிலாகட்டும் அப்படியே குழைந்தவண்ணம் ஒரு பட்டம் மெல்ல திசைமாறித் திரும்பக் கீழிறங்கி மேலேறி ஆட்டம் காட்டுமல்லவா அப்படியான குரல் அவருடையது.


சின்னஞ்சிறு பெண் போலே பாடலை இசை என்னும் மதம் என்கிற (புலன் மயக்கம் 16) இல் பார்த்திருக்கிறோம். நித்தம் நித்தம் மாறுகின்ற எனும் பந்தபாசம் படப் பாடலை (புலன் மயக்கம் 22 அகலத் திறந்த மனம்) எனும் அத்தியாயத்தில் பார்த்தோம்.நிற்க இப்பவும் இரவும் பகலும் படத்தில் ஒரு பாடல் வரும். அதைக் கேட்காவிட்டால் அர்த்தமற்ற பிறவியென்றாகும் அபாயம் உண்டு. அவசியம் கேட்கக் கடவது. மிக அபூர்வமாக ஜிப்ஸி வகைமைப் பாடல்களில் இதொன்று. இந்தப் பாடலை சீர்காழி அட்டகாசப்ரமாதம் செய்திருப்பார். வேதா இசையில் ஆலங்குடி சோமு எழுதிய இரவும் பகலும் படத்தின் பாடல் இது.

 

    கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லியப்பூ 
    கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதடி உன்னழகு
    நட்டநடு வீதியிலே நாலு பேரு மத்தியிலே 
    வெட்கமா இருக்குதுங்க வேணாங்க விட்டுடுங்க

  இதற்கடுத்த இணைப்பிசை ஒயினாய்ப் பெருகும். பியராய்த் ததும்பும்.

   ஆத்தாடி இதுக்குள்ளே அவசரமும் கூடாது 
   அத்தை மகள் ஆனாலும் கட்டுக்காவல் போகாது

   கூத்தாடும் கொண்டையிலே...
  
  வெட்கத்துக்கு வேலையில்லே வெலகிப் போற வயசுமில்லே  
  வெட்கத்துக்கு வேலையில்லே வெலகிப் போற வயசுமில்லே 
  சொக்குப் பொடி போட்டவளே சுகத்த மறுக்க நியாயமில்லே
  ஆசைக்கு வேலி போட்டுக்கணும் அறிவைக் கொஞ்சம் தீட்டிக்கணும் 
  ஆசைக்கு வேலி போட்டுக்கணும் அறிவைக் கொஞ்சம் தீட்டிக்கணும்
  மீசை முளைச்ச அழகு மச்சான் மனசை ரொம்பத் தேத்திக்கணும் தேத்திக்கணும்

  கூத்தாடும் கொண்டையிலே...

 

  பழனி -  சீர்காழியும், சுசீலாவும் பாடிய இந்தப் பாடல் மறக்க முடியாத இன்னொன்று.

  

வட்ட வட்டப் பாறையிலே
வரகரிசி தீட்டையிலே
ஆர் கொடுத்த சாயச்சிலை
ஆல வட்டம் போடுதடி

என்கிற ஒரு தெம்மாங்குப் பாட்டு உண்டு. அதன் மீதான மயக்கத்தில் அந்தப் பல்லவியை எடுத்தாண்டிருப்பார் கவியரசர். பழனி படத்தில் இடம்பெற்றிருக்கிற 

வட்ட வட்டப் பாறையிலே
வந்து நிற்கும் வேளையிலே
யார் கொடுத்த சேலையடி
ஆலவட்டம் போடுதடி

என் பரிந்துரை என்னவென்றால் நல்லதொரு விருந்துக்குப் பிற்பாடான மதியப் பொழுதில் இந்தப் பாடலை ஒரு தடவைக்கு மூன்று தடவை கேட்டுக் கொண்டே தூங்கினோ மேயானால் அந்தப் பக்கம் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய கறுப்பு வெள்ளை சொர்கமொன்றில் எழுந்திருக்கலாம் என்பேன். முயற்சிக்கலாம்.கவியரசர் என்பது வெறும் பட்டமல்ல. அதற்கான முழுத் தகுதியும் கொண்டவர் கண்ணதாசன். இந்தப் பாடல் அதற்கு இன்னுமோர் நற்சாட்சியம்.

மாமனோ மைத்துனனோ மாமாயம் செய்பவனோ 

(இந்த ஒரு வரியை இரண்டாவது முறை சுசீலா எடுத்துப் பாடிய விதமே அசரடிக்கும்.)

மாமனோ மைத்துனனோ மாமாயம் செய்பவனோ 
மைபோடத் தெரிந்தவனோ மயக்குவித்தை படித்தவனோ 
மார்போடு என்னை அணைத்து 
வாங்கித் தந்த சேலையிது வாங்கித் தந்த சேலையிது...

(இது இன்னமும் கிறங்கடிக்கும் வரியும் சொல்லாடலும் சுசீலா பாடிய தொனியும் அடடா,,,)

முன்னொருவன் தொட்டு மோகங்கொண்ட 
பெண்ணே இன்னொருவன் தொடவோ 
இந்தக் கள்ளுக்கும் சொல்லுக்கும் காத்துக்கிடந்தவன் 
இங்கு முள்ளில் உறங்கிடவோ..?

கண்ணுக்கு நல்ல பெண்ணென்று மெல்ல 
கையைப் பிடித்து எண்ணங்கள் துள்ள 
அள்ளி எடுத்தான் ஆனந்தங்கொள்ள 
அய்யய்யோ மற்றதை என்னன்னு சொல்ல?

(வட்ட வட்டப்)

வெற்றிலை பாக்குடன் நிச்சய தாம்பூலம் 
வைப்பவன் நானடியோ உன்னைக் 
கட்டிப் பிடிக்கவும் தொட்டு அணைக்கவும் 
இங்கு வந்தவன் யாரடியோ

கண்ணுக்குக் கண்ணன் உள்ளத்தில் கள்ளன் 
கன்னத்தில் சின்னம் செய்வதில் மன்னன் 
வந்து சிரித்தவன் அன்னியன் அல்ல 
மாமா உன் பெயர் எப்படிச் சொல்ல..?

(வட்ட வட்டப்)சீர்காழி கோவிந்தராஜன் பாடிய காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை போன்ற அழியாத பாடல்கள் காலந்தாண்டிய ஞாபகப் பறவைகள். ஒப்புமை இல்லாத் தனிரசக் குரலோன் சீர்காழி. வாழிய அவர் புகழ்.

புலன் மயக்கம் 
ராஜா'ஸ் கார்னர் 

BGM BENCH

மௌனராகம் என்ற படம் மணிரத்தினத்தை உலகறியச் செய்தது. என் வாழ்வில் பதின்ம வயதுக்குள் அதிகதிகம் காண வாய்த்த படங்களில் அதுவும் ஒன்று. இந்தப் படத்தில் கார்த்திக் வந்து போகும் சொற்ப காலகட்டத்திற்கென இரண்டு வித இசைக்கோர்வைகளை அமைத்திருப்பார் ராஜா. ரேவதியுடனான கார்த்திக்கின் அறிமுகம் அவர்களுக்கு இடையே பரிச்சயமாகி நட்பு காதலாகி குறுகிற நாட்களிலேயே கார்த்திக் கொல்லப்படுவார். ரேவதி தனக்குள் இறுகிக் கல்லாவார்.

 

 

இந்த எபிஸோடுக்கு மாத்திரம் தனியாக இசை அமைத்திருப்பார் ராஜா. உற்சாகம் சிருங்காரம் கொண்டாட்டம் ஆகியவையாகப் பெருகிப் பிரவகிக்கிற இசை மெல்ல அமைதியாகி பெருநதி சிற்றோடையாகக் குறுகினாற் போல் மென்மையும் குழைதலும் கரைதலுமாகக் குறுகி ஒலிக்கும்.ஒரு சூன்யத்தை நோக்கி அழைத்துச் சென்று அதனுள் காண்பவர் மனங்களை செருகி வைப்பார். அந்த மொத்த இசைக் குறிப்புகளையும் மனப்பாடமாக சப்தமாகக் குறிப்பிட்டு இதெல்லாம் கேஸட்ல வந்தா எப்டி இருக்கும் என ஏங்கி இருக்கிறேன். தற்போதைய இணைய காலத்தில் அவை எல்லாமும் இணையவெளியில் கிடைக்கின்றன.


அதே மௌனராகம் படத்தில் ரேவதிக்கும் மோகனுக்குமான வாழ்க்கையை பிரதிபலித்து நிறைகிறவரைக்கும் வேறொரு முன்பிலா இசைக்குறிப்புக்களால் அந்தக் காட்சிகளுக்கான அர்த்தத்தை மீட்டியிருப்பார் ஞானி. மோகனை நோக்கி மனம் கனிந்து திசை மாறி அவர் வசமாகக் கூடிய சூழலை ரேவதி கதாபாத்திரம் அடைகிற நேரத்தில் சின்னச் சின்ன வண்ணக்குயில் பாடல் வந்தொலிக்கும். வெறும் பாடலா அது..?


அதிலும் க்ளைமாக்ஸ் கடைசி பத்து நிமிடத்தை இசையால் நிறைத்து அதகளம் செய்திருப்பார் ராஜா. ரேவதிக்கு நெற்றியில் பொட்டிடுவார் மோகன். சர்தான் ரெண்டு பேரும் சேரப்போறாங்க என்று முடிவு செய்தால் ரேவதிக்கான சென்னை பயண டிக்கட்டைத் தந்து செல்வார் ட்ராவல் ஏஜண்ட்.நா என்ன பண்ணட்டும் என்பார் ரேவதி. மனசுக்குள் போகாதன்னு ஒரு தடவை சொல்லுங்களென். இந்த ஜென்மத்துக்கும் உங்களை விட்டுட்டு போகமாட்டேன் என மனசுக்குள் நிறைவார். அதே நேரம் மோகனோ போகவிரும்பலைன்னு ஒரு வார்த்தை சொல்லேன். உன்னை ஒரு நொடி கூட பிரியாம இருப்பேன் என நினைப்பார். ஆனால் வெளியே பேசுகையில் இவர் உன் இஷ்டம் என்பார். ரேவதி வேறு வழியில்லாமல் கிளம்பத் தயாராவார்.

 

இரயில் நிலையம் நோக்கிய பயணம். இடைப்பட்ட மௌனப் ப்ரதேசங்களை ராஜா தன் மழையொத்த இசையால் நிரடி நிரப்பி ஜாலவித்தை செய்திருப்பார். ஸ்டேஷனில் இறங்கியதும் விவாகரத்து கிடைத்த பேப்பரைத் தருவார் மோகன். அதை கிழித்தெறிந்து விட்டு ரயிலுக்குள் சென்று தன்னிடத்தில் அமர்ந்து எங்கோ வெறித்தபடி இருக்கும் ரேவதியைத் தேடிச் சென்று திரும்ப இணைவார் மோகன். இதை எழுதிவிடுவது சுலபம். இந்தக் காட்சிகளை இப்போது பார்த்தால் நம் வாழ்வியலில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்ட பழைய நெடியடிக்கும் இரயில்ஞாபகமாய்த் தான் தங்கி இருக்க வேண்டியது. ஆனால் அத்தனையையும் வேறாக்கி இன்னமும் நம் மனங்களில் அதன் அதே பழைய காதலின் மிட்டாய்வாசனையைக் கொணர்ந்து தரச்செய்கிற மாயம் இளையராஜாவின் பின்னணி இசை.

 

 

மௌனராகம் ஒரு ஸாம்பில். இளையராஜாவின் பின்னணி இசை பற்றிய உரையாடல் கோடிச் சொற்கள் தாண்ட வல்லது. தொடரலாம்.மௌனராகத்தின் கணிசமான பின்னணி இசையை இந்தச் சுட்டியில் அடையலாம்.


Voice of Raja

வந்தாளே அல்லிப்பூ என் வாழ்வில் தித்திப்பூ

 

இந்திரா பார்த்தசாரதியின் சாகித்ய அகாதமி விருது பெற்ற குருதிப்புனல் நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப் பட்ட கண் சிவந்தால் மண் சிவக்கும் முதல் படத்துக்கான சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை ஸ்ரீதர்ராஜனுக்குப் பெற்றுத் தந்த படம். இந்தப் பாடலை அனேகமாக வைரமுத்து எழுதி இருக்கக் கூடும்.

ONE IN TWO


பானுப்ரியா அறிமுகமான படம் சிதாரா. தெலுங்கில் அற்புதமான படங்கள் பலவற்றைப் படைத்த வம்சி இயக்கிய படம். சுமனும் பானுப்ரியாவும் நடித்த சிதாராவில் இந்தப் பாடல் ஜிலிபிலி பலிகுல சிலிபின பலிகில ஓ மைனா ஓ மைனா

 

 

 

எஸ்.பி.பாலசுப்ரமணியமும் ஜானகியும் பாடிய பாடல். தமிழில் ஆனந்தக் கும்மி படத்துக்காக இசைஞானி உருவாக்கிய ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது பாடல் எடுத்துக் காட்டுக் காட்சிகளில் குழந்தைகளின் உலகத்தினுள் அலைதல்காட்சிகளாக விரிந்திருக்கும். தெலுங்கில் இது டூயட். பல்லவிக்கும் சரணங்களுக்கும் இடையிலான இணைப்பிசை முற்றிலுமாக தெலுங்கில் மாற்றி இருப்பார் இளையராஜா., ஒரு நுட்பமான வேறுபாட்டை முழுவதும் படர்த்துவதற்காக புல்லாங்குழல் இசைக்குறிப்புக்களை அகற்றிவிட்டு தெலுங்கில் மீவுருவாக்கம் செய்திருப்பார். மேலும் சரணங்களுக்கு இடையிலான இணைப்பிசையிலும் மாற்றங்கள் இருக்கும். இரண்டு பெண் குரல்களில் கேட்டு மனனம் ஆகி இருக்கும் இந்தப் பாடலை பாலசுப்ரமணியத்தின் கூட்டணியில் ஜானகி பாடும் டூயட்டாக கேட்பதும் மனதுக்கு இதமும் இனிமையும் தான்.

 

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...