???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை 0 சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்! 0 அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு! 0 மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் 0 ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்! 0 தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு! 0 கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை 0 `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் 0 இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! 0 இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் – 41 - காதல் தேவன் சன்னிதி – ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   30 , 2017  00:47:59 IST


Andhimazhai Image

அக்காவுக்கு ஜானகி என்றால் உயிர். எனக்கு ஜானகியின் குரல் கேட்டுக் கேட்டு ஒரு கட்டத்தில் வேறு பல குரல்களுமே ஜானகியின் குரலிலேயே ஒலிக்க ஆரம்பித்ததும் உண்டு. எஸ்.ஜானகி என்றாலே குழந்தைக்குக் கூடக் குரல் கொடுப்பவர் என்பது தான் முதலில் நினைவை வருடும். இப்படி ஒரு குரலைக் கேட்டுக் கொண்டே இருந்தால் சத்தியமாகப் பசிக்காது. கேட்டிருக்கிறேன்.பசிக்காமலேயே மயங்கிக் கிறங்கியுமிருக்கிறேன்.


மதுரையில் சுற்றிப் பார்ப்பதற்குப் பத்து இடங்கள் தேறினால் அதிகம். கோயில் கோயிலாகச் செல்வதற்குரிய வயது இல்லையே பதின்ம வயது. பள்ளிக் கூட இறுதி வரைக்கும் யூனிஃபார்ம் என்பது ஒரு சுமை. எங்கே செல்லும் இந்தப் பாதை என்று எத்தனை நாட்கள் தியேட்டர்களில் கழிப்பது..? பார்க்கப் படமும் இல்லாமல் செல்வதற்கு இடமும் இல்லாமல் வறண்ட தினங்களில் என்னை நானே தேற்றிக் கொள்ள கண்டுபிடித்த உத்தி தான் பிரயாணம்.


ஸ்கூலுக்கு எப்போது கிளம்புவேன்..? திருநகரில் இருந்து காலை ஏழரை முதல் ஏழே முக்கால் மணி அளவில் கிளம்புவேன். எத்தனை மணிக்கு ஸ்கூலில் இருக்க வேண்டும்..? எட்டரைக்கு. சரி எப்போது ஸ்கூல் விடும்.? நாலு மணிக்கு. வீட்டுக்கு அதிகபட்சம் வந்து சேர்வதற்கான நேரம் என்ன ஆறு மணி வரைக்கும் கூட ஆகும். வெள்ளாண்டுட்டு வந்தா லேட்டுத் தான் ஆகும் என்று அதட்டினால் சரியாப் போகும். அதாவது மொத்தமாய்ப் பத்து மணி நேரங்கள் கிடைக்கும்.


இங்கே தான் எனக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் பயணியின் வருகை நிகழும். எங்கேயாவது போ மச்சி என்று துள்ளும். என்னவோ டெடிகேடட் ஸ்கூல் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் மாதிரி அரக்கப் பரக்க மூன்றாவது ஸ்டாப்பில் நான் ஏற வேண்டிய திசைக்கு எதிர் திசைக்குப் போய் சாத்தூர் சிவகாசி அல்லது தின்னவேலி எதாவதொரு ப்ரைவேட் ரூட் பஸ்ஸில் ஏறி அமர்ந்து விடுவேன். அப்போதெல்லாம் பழங்காநத்தத்தில் ஒரு வெளியூர் பேருந்து இயங்கிற்று. அதிலிருந்து கிளம்பி வரும் வெறிகொண்டயானை போன்றதொரு பஸ்ஸில் ஏறி அமர்ந்தால் குளுகுளு ஃபில்ம் ஒட்டிய கண்ணாடி சன்னலும் அதன் இடைவெளி வழியே சில்லென்று ஃபில்டராகி வரும் காற்றும் உள்ளே எப்போதும் ஒலிக்கும் பாடல்களுமாய் ஆஹா இன்னும் அதே அந்தப் பதின்ம வயதுக்காரனாய் நானே எங்கோ இன்னும் தீராத பயணங்களில் ஏதோவொன்றினுள் அமர்ந்திருப்பதாக ஒரு கணம் நினைத்துக் கொள்கிறேன். அந்த நினைவின் சின்னூண்டுப் பொய்யை யாராவது நிசமாக்கித் தந்தால் கோடிப் பொன் தரலாம்.தகும்.
 

இசையாலான சாலைகளில் அந்தப் பேருந்துகள் ஓடின. ஸ்டார் ரோட்வேஸ் கண்ணாத்தாள் மு.சி.சோமு ட்ரான்ஸ்போர்ட் பாலசக்தி ஸ்ரீனிவாசா ட்ரான்ஸ்போர்ட் இவையெல்லாம் நகரும் தேசங்கள். ஒன்றுக்கொன்று ரைவல்ரி மாத்திரமல்ல. உள்ளே அமர்கிற ஸீட்டுக்களில் தொடங்கி ஒலிக்கிற பாடல்கள் வரை எல்லாவற்றிலும் வித்யாசம் தான். பயணங்களெங்கும் பாடல்களை அவர்கள் ஒலிபரப்பினார்கள். பாடல்களுக்காகவே ஒரு கட்டத்தில் பயணிக்கத் தொடங்கினேன்.


யோசித்தால் வீட்டில் தொடர்ந்து எத்தனை பாடல்களைக் கேட்க முடியும்..? எதாவதொரு குறுக்கீடு வந்தே தீருமல்லவா..? யாராவது வருவார்கள். எதாவது சின்னதாய் ஒரு கதவு தட்டப்படுகிற ஓசை கூட தொந்தரவு தான்.ஒரு பாடலின் இடையில் நிகழக் கூடிய எதையும் வெறுத்துவிடும் மனசு. அங்கே அறுபடுவது வெறும் இசையின் இழை மாத்திரமல்ல. ஒரு பாடலுக்கும் எனக்குமான பிரத்யேகமான உரையாடலின் இடையே வலுக்கட்டாயமாக நிகழ்த்தப்படுகின்ற வன்முறை அல்லவா அது..?


பேருந்தில் மூன்றாவது ஸ்டாப்பில் ஏறி அமர்ந்தால் போதும். சாத்தூர் அல்லது நெல்லை மா நகரத்துக்குப் போய் சக்கரங்கள் நின்றோயும் கணம் வரைக்கும் தொடர்ச்சியாக எத்தனை பாடல்கள் அப்படியே மனசெல்லாம் ஜீராவில் நன்கு ஊறிய ஜாமூன் போலாகி இருக்கும். எனக்கே என்னைப் பிடிக்கும். ஒரு முழுமையான மழைக்குப் பின்னதான நிலம் போல மனசின் சர்வ சதுர செண்டிமீட்டரும் குழைந்து போயிருக்கும்.எதிர்ப்படுகிற யாரையும் அளவற்ற நற்சொல்களை மொழிந்து ஆசீர்வதிக்கிற உதாரமனங்கொண்ட யோகி ஒருவனைப் போல அந்த ஊர்களில் இறங்கி நடந்திருக்கிறேன்.


அங்கே தான் ராஜூ என்றோர் கண்டக்டர் விதவிதமான கேஸட்டுக்களை தயாரித்துக் கொண்டு வருவார். அவருக்கு மிகவும் பிடித்த குரல் எஸ்.ஜானகியினுடையது. அனேகமாக இதெல்லாம் நடந்தது 92 அல்லது 93 என்றிருக்கக் கூடும். அது வரைக்குமான ஜானகியின் தனிப்பாடல்கள் மற்றும் சோடிப்பாடல்களைத் தனித்தனிக் கேஸட்டுக்களாக பிரித்துப் பதிந்திருப்பார். மதுரையிலிருந்து நெல்லை போய்ச் சேர மூன்றரை மணி நேரம் ஆகும். இப்போது போல அப்போது நாலுவழிச்சாலைகள் இல்லை என்பதை நினைவில் கொள்க. அப்போதெல்லாம் சிங்கில் ரோடு தான். இதில் வழியில் திருவில்லிப்புத்தூரில் கால் அவர் நிற்கும் பஸ்.


டீவீ வருவதற்கு முன் என்பதால் ரம்மியமான பாடல்களைக் கேட்டுக் கொண்டே நாலாவது பாட்டுக்குள் தூங்கி வழியும் அனேக பொதுஜனம். மொத்த பஸ்ஸில் நானும் ராஜூ அண்ணனும் மேலும் ஒன்றிரண்டு பேரும் மட்டுமே பாடல்களை ரசித்தபடி வருவோம். அம்மாவோட வாய்ஸ் எப்பிடி என்பார் ராஜூ. அவருக்கு ஜானகி அம்மா தான். சுசீலா வாய்ஸ் பிடிக்காதா என்றால் இல்லீங்க.. எனக்கு அம்மா பாட்டுத் தான் பிடிக்கும் என்பார். தன் வாயால் எதையும் நிராகரித்துவிடக் கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருப்பார் ராஜூ. அவரைப் பொறுத்த வரை அவரது உலகத்தின் எல்லா தருணங்களையும் ஜானகியின் பாடல்களைக் கொண்டு நிரப்பி இருப்பார். நம்மையும் அவற்றை ரசிக்கச் செய்வார்.

 


 

 

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே பாடலை மிகச்சரியாக தனக்கன் குளம் தாண்டும் போது ஒலிக்கச் செய்வார். அது தான் முதல்பாடல். ராஜூவின் கேஸட்கள் பெரும்பாலும் அதன் வரிசை கூட எனக்கு மனப்பாடம். இன்றைக்கு அனேகமாக தன் பணியிலிருந்து ஓய்வே பெற்றிருக்கக் கூடும். ஆனாலும் அவரது பாடல்களும் அவற்றின் அவரும் அப்படியே மாத்திரம் தான் இருக்க முடியும்.


கண்களை அவ்வப்போது மூடி மூடித் திறந்து ஒரு பாடலை தனக்குள் வரவழைப்பதே அலாதியாக இருக்கும். அவ்வப்போது சிரித்துக் கொள்வார். அதன் காட்சிகளில் சிலவற்றை நினைத்துக் கொள்வாரோ என்னவோ ஸ்ரீதேவிக்கு ஜானகி குரல் மாத்திரம் தான் பொருந்தும் என்பார். அப்புறம் ஸ்ரீதேவிக்கு மட்டுமா..? அம்பிகாவுக்கு அவ்ளோ பாந்தமா இருக்கும் என்பார். நனனனன என்று வரும் போது கூடச் சேர்ந்து பாடுவார்.


கோபாலன் சாய்வதும் கோதை மடியில் பூபாணம் பாய்வதும் பூவை மனதில் என்றாகும் போது உதடுகளை லேசாக சுருக்குவார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் ஏகாந்தம் தான் எனும் போது அடடா என்று தன் தொடையைத் தட்டிக் கொள்வார்.


இளையராஜா மாதிரி வருமா எஸ்.பி.பி மாதிரி வருமா என்று ஒவ்வொரு பாடலுக்கும் இடையே சொல்லிக் கொண்டே இருப்பார்.


பூவரசம் பூ பூத்தாச்சி பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சி காவேரி போல பொங்குற மனசு பாடாதோ என்று தொடங்குகிற கிழக்கே போகும் இரயில் பாடலை ராஜூ சிலாகிப்பதே அற்புதமாக இருக்கும். இங்க பாருங்க ரவீ... கதைப்படி அந்தப் பொண்ணு ரொம்ப இன்னொஸண்ட். அந்த இன்னொசன்ஸை எப்பிடி குரல்ல கொண்டாந்திருக்காங்க நம்ம அம்மா என்பார்.. இவ்ளோ சந்தோஷத்தை வேற யாரால ரவீ பாடிற முடியும்..? அடிச்சி சொல்வேன் ராஜாவுக்கு பிடிச்ச சிங்கர் நம்ம ஜானகி அம்மா தான் என்பார்.

 

 

குணா படத்தில் வருகிற உன்னை நானறிவேன் பாடலைக் கேட்கும் போதே கண் கலங்குவார். நமக்கான வார்த்தைகளை வரிகளா மாத்தி அம்மாகிட்டே குடுத்து பாடச்சொல்லி வாங்கிக்கணும். மனசுக்கு பிடிச்ச சாமியார்கிட்டே திருநீறு வாங்கிக்குவம்ல அந்த மாதிரி என்பார்.

 

சின்னச்சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா என்ற மௌனராகம் பாடல் எப்போதும் அந்த கேஸட்டின் பன்னிரெண்டாவது பாடல். அதாவது கடைசி பாடலாகத் தான் வரும். நான் பதிகையிலும் அப்படித் தான் வைத்திருப்பேன். ஜானகியின் விஸ்வரூபம் அந்தப் பாடல் ரேவதியாவே மாறிட்டாங்க பார் என்பார் சந்திரமுகி படத்தில் பிரபுவிடம் ரஜினி சொல்கிறது இப்போது நினைவில் இடறுகிறது. குழந்தைத் தனமான ரொம்ப தற்காலிகமான புதுசான அதே நேரத்ல இன்னும் கையில முழுசா அகப்படாத முயல்குட்டியோட உடம்பு வழுக்கிட்டு போறாப்ல குரலும் வழுக்கிட்டுபோகுது பார்... மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன் சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள் என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள் மாலை சூடி மஞ்சம் தேடி காதல் தேவன் சன்னிதி காண...காணக் காண...

 

 

இது முடியுற வரைக்கும் கால் வலில சொணங்கிட்டே மலையேறுறப்ப நம்ம கூட வர்ற இன்னொருத்தர் தர்ற சின்ன தொந்தரவு மாதிரி நம்ம மனசைத் தொல்லை படுத்துது பாருங்க ரவி இந்தக் குரல். இந்தக் குரல்ல அம்மா ரொம்ப கொஞ்சம் பாடல்கள் தான் பாடி இருக்காங்க தெரியும்ல என்பார். கண்ணெல்லாம் மின்னும். ஏதோ ராஜூ சொல்வதை ஜானகியால் கூட மறுக்க முடியாது என்றாற் போன்ற தொனியில் தான் இத்தனையும் சொல்வார். மறுக்க மாட்டாரென்றே தோன்றுகிறது.

 

இளமைக்கு என்ன விலை அதை யார் அறிவார் என்ற புலன் விசாரணை படப் பாடலை வெகுவாக சிலாகிப்பார் ராஜூ உனைத் தொடரும் இளமைக்கு என்ன விலை அதை யார் அறிவார். எனும் போது லேசாய் சிரிப்பார்


கட்டழகு மேனி கன்னியிவள் ராணி 
தொட்டணைத்து அணைக்க அது யாரோ 
கட்டழகன் எதிரே வருவாரோ
குளிர்ந்த நீரினில் ஆடுது தேகம் 
கோடியானது மோகம் 
மலர்ந்த பூவிது பாடுது ராகம் 
மாறன் போட்டது பாணம் 
தித்திக்குதே சிவந்த பருவமே 
சில்லென்றதே இவளின் உருவமே 
திரைகள் முழுதும் விலக மயக்கமே 
(கட்டழகு மேனி கன்னியிவள் ராணி )


இந்தப் பாட்டை இந்தியாவுல இல்ல ரவீ உலகத்துலயே இப்பிடி ஒரு இளநீர்க்குரல்ல வேற யாராலயும் பாடிற முடியாது ரவீ இல்லையா..? என்று முத்தாய்ப்பாக முடித்து வைப்பார்.எஸ்.ஜானகியா அது யாரு..? சினிமாப் பாட்டா கேட்டதே இல்லியே இளையராஜாவா கேள்விப்பட்டதே இல்லைங்க  என்று சத்தியம் செய்து விட்டு மூன்றாவது ஸ்டாப்பில் ஏறுகிற ஒருவரை ஒருமணி நேரத்துக்குள் மந்திரித்து 


உன் பெயர்   : ஜானகிதாசன் 
உன் மதம்    : இளையராஜமதம்.
உன் மொழி   : ம்யூசிக் இசை கானம் பாடல் 
என்றெல்லாம் புலம்ப வைத்துவிடுவார் ராஜூ.


கும்பக்கரை தங்கய்யா படத்தில் வருகிற பாட்டு உன்னை இழுக்குதா பாடலைப் பற்றி திருநெல்வேலியில் நானும் என்னோடு ஒரு நாள் கட் அடித்து விட்டு வந்த ஆனந்த் சாமிநாதனும் ஆ என்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருக்க ராஜூ சொல்லிக் கொண்டே கையில் இருக்கிற டீ கிளாஸை ஒவ்வொரு சிப்பாக குடித்துக் கொண்டே மிக லேசான குரலில் அந்தப் பாடலின் பல்லவியை ஹம்மிங் செய்தார். அதுவரை ஆண் பாடி ஜானகி பாடலை அப்படிக் கேட்டதில்லை. ராஜூவின் குரல் அத்தனை நன்றாகவும் இளமையாகவும் இருந்தது. அண்ணே உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கே அண்ணே என்றேன். ஆனந்தும் அதை ஆமோதித்தான்.


சீச்சீ...ஜானகி அம்மா எஸ்.பீபாலசுப்ரமணியம் ராஜா எல்லாம் வாழ்றகாலத்ல நாமும் வாழ்ந்தமா நாலு பாட்டை ரசிச்சி கேட்டமான்னு இருக்கணும் ரவீ... நாமளும் பாடக் கூடாது. அது தப்பு என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார். இந்தப் பாட்டை பாலுவும் ஜானகி அம்மாவும் என்னமா பாடி இருக்காங்க பாரேன்..என்று ரசித்தார்.


எனக்கு ஷையாகப் போய்விட்டது. நானோ பிறவிப் பாடகன். மேலும் பாடிக் கொண்டே பிறந்தவனும் கூட. எத்தனை பேர் கதறினாலும் அது குறித்த கொஞ்சூண்டு கவலை கூட இல்லாமல் நான் எங்கே கிட்டத் தட்ட பாதி பாலசுப்ரமணியமாகவே இருந்தும் பாட மறுக்கும் ராஜூ எங்கே..?


ஆனாலும் அதன் பிற்பாடும் நான் பாடுவதை நிறுத்தவில்லை. நிறுத்தினால் மண்டைக்குள்ளே அரித்தது. கையெல்லாம் நடுங்கிற்று. பாடப் பாடத் தான் குணமாயிற்று. பாடிக் கொண்டே இருப்பேன் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.


ஜானகி எத்தனை ஆயிரம் பாடல்களைப் பாடிய குரல்தேவதை. எனக்கு மறக்க முடியாத ஜானகி பாடல் எதுவென்று கேட்டால் அவளுக்கென்று ஒரு மனம் படத்தில் வருகிற உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாடலைச் சொல்வேன். அதை ஆரம்பிக்கிற இடமே சிக்ஸர். ஜானகி தன்னால் மாத்திரமே முடியக் கூடிய ஜாலமாகவே அந்தப் பாடலை வழங்கி இருப்பார்.

   

இதழுடன் இதழாட நீ இளமையில் நடமாடு நினைத்தால் போதும் வருவேன் தடுத்தால் கூடத் தருவேன் என்று முடித்து மறுபடி உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்ற போது நிசமாகவே நமக்கு வழங்கப்பட்ட ஒரு அன்பின் புத்தம்புதிய ஈரத்தை மனசின் அடிவாரத்தில் உணரச்செய்வார் ஜானகி.
 

பூக்காரி படத்தில் வரும் காதலின் பொன் வீதியில் பாடலை எப்போது கேட்டாலும் முரணான டீஎம்.எஸ் மற்றும் ஜானகி ஆகிய இருவரது குரல்களும் இணைந்தொலிக்கிற அற்புதத்தை ரசிக்கிறேன்.


ஜானகி என்றாலே அனேகப் பாடல்கள் அழகு தான். இனிமை தான். ஊரு சனம் தூங்கிடுச்சி பாடல் என் அக்காவுக்கு ரொம்ப பிடித்த பாடல். இந்தப் பாடலை எங்கே கேட்க நேர்ந்தாலும் என் பால்யத்தின் ஏதோ ஒரு சின்னஞ்சிறிய ஜன்னலை அது திறந்து வைக்கிறது.

 

 

மறுபடியும் படத்தில் ஆசை அதிகம் வச்சி பாடலைப் பாடிய அதே பாடகி தான் நல்லதோர் வீணை செய்தே பாடலையும் பாடினார் என்று ஜானகியே சத்தியம் செய்தால் கூட நம்ப மறுக்கிறது மனசு.


ஜானகி குரலால் நிகழ்ந்த ஒரு அற்புதம். நான் வாணி ஜெயராமின் ரசிகன். எனக்கு ஷைலஜா தொடங்கி சித்ரா வரைக்கும் சுசீலா தொடங்கி ஜிக்கி வரைக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி தொடங்கி எம்.எஸ்.ராஜேஸ்வரி வரைக்கும் பல குரல்களின் மீதும் ப்ரியம் உண்டு. ஆனாலும் வாணி ஜெயராமின் குரல் எனக்குப் புனிதரகசியம். அந்த அளவுக்கு ஜானகியின் பாடல்கள் என்னை ஈர்ப்பதாக நான் சொன்னால் அது பொய். எனக்குப் பிடித்த பல பாடல்களை ஜானகி பாடி இருக்கிறார்.. ஜானகியின் குரல் மீது எனக்கு மதிப்பு உண்டு. ஆனால் ராஜூ போலப் பல்லாயிரக் கணக்கானவர்கள் என் அக்கா உள்படப் பற்பலரும் ஜானகியின் பாடல்களை சிலாகிப்பதை தங்கள் உயிருக்கு அருகாமையில் வைத்து வணங்குவதைப் பார்த்தவண்ணம் இருக்கிறேன். ஜானகியின் பாடல்கள் எனக்குள் பல மழைக்கால மேகங்களை ஊர்வலமாடச் செய்தவை.


கிட்டத்தட்ட ஒரு முழு வருடம் அடிக்கடி என்று சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு வாரத்துக்கு ஒரு அல்லது ரெண்டு முறைகள் ராஜூவின் ரூட் பஸ்ஸில் பயணித்திருக்கிறேன். எல்லா நாட்களும் அந்த வழித்தடத்தின் இரு திசைகளையும் ஜானகியின் பாடல்களால் நிரப்பத் தான் செய்தார் ராஜூ. ஒரு நாள் அவரிடம் கேட்டேன். ஏன் ராஜூண்ணே... ஜானகி தவிர வேற யாரோட வாய்ஸ் உங்களுக்குப் பிடிக்கும்.? என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு சொன்னார், யார் வாய்ஸூமே பிடிக்காது ரவீ.  எனக்கு வாணி ஜெயராம் பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும்ணே... எனக்காக ஒரு நாள் வாணி ஜெயராம் பாட்டா பதிஞ்சு நா ஒரு கேசட் கொண்டுவர்றேன் போடுறீங்களா..? இந்த ஸ்பீக்கர்ஸ்ல கேக்கணும்போல ஆசையா இருக்குண்ணே என்றேன்.

 

 

சரி ரவீ... நாளைக்களிச்சு கொண்டாங்க என்றார். அதாவது அந்த வாரத்தின் சனிக்கிழமை.
நானும் ஒரு கேஸட்டை ரெடி பண்ணிக் கொண்டு ஏறினேன். முதல் சில படங்களில் தோன்றிய நாகேஷ் போன்ற உடல்வாகோடு வேறொரு கண்டக்டர் இருந்தார். ட்ரைவர் என்னை காட்டி ஏதோ சொல்ல என்னிடம் வந்தார்.


நீங்க தான் ரவியா..?


நான் ஆமா என்றேன். கேஸட்டு வச்சிருக்கீங்களா..? ராஜண்ணே சொல்லிருந்தாப்ளயாம் ட்ரைவர்ட்ட.. கொண்டாங்க போடுறேன் என்றார்.


அன்றைக்கு ராஜூவுக்கு லீவு என்றும் அவர் வீட்டில் ஜானகி பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் உபதகவல்கள் பிற்பாடு வழங்கப்பட்டன. முதல் முறையாக சீறும் காற்றுக்கு நடுவில் எனக்குப் பிடித்த வாணியின் பாடல்களை ஒவ்வொன்றாகக் கேட்டபடி கண்மூடிப் பயணிக்கலானேன்.


அவரவர்க்கு அவரவர் ஜானகி அவரவர் வாணி.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...