???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கான பயிற்சி அடுத்த மாதம் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் 0 நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரம்: சி.பி.எஸ்.இ தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை 0 ஊழல் வழக்கில் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப், மகள் மர்யம் நவாஸின் ஜாமின் மனு நிராகரிப்பு 0 எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்தில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை! 0 ஓரினச் சேர்க்கைக்கு எதிரான குற்றப்பிரிவு சட்டத்தை நீக்க கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்! 0 உலகக்கோப்பை சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்பே 0 ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் 0 புலன் மயக்கம் - 93 - ஏன் அவர் மேஸ்ட்ரோ [பகுதி-3] இசைவழி முத்தங்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 தென்மாநிலங்களில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 0 பினாமி வீடுகளில் வருமானவரி சோதனை: முதலமைச்சர் பதவி விலக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: 18 பேர் கைது 0 மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது! 0 நாடாளுமன்றம் சுமூகமாக செயல்படவே எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன: குலாம்நபி ஆசாத் 0 46% இந்தியர்கள் லஞ்சம் கொடுத்து பாஸ்போர்ட் பெறுகிறார்கள்: ஆய்வில் தகவல் 0 ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துகுவிப்பு புகாரை விசாரிக்க நீதிமன்றத்தில் மனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் – 38 - கண்ணனுக்குத் தந்த உள்ளம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   09 , 2017  01:15:36 IST


Andhimazhai Image

பாடல்களின் மீதான ரசனை என்பது ட்ரெண்டிங் சார்ந்த பிரச்சினை போலத் தோற்றமளித்தாலும் தற்காலத்துக்கு சற்று முந்தைய காலத்தின் இசை மீது தான் ஒவ்வொருவருக்குமான ப்ரியத்தின் பிடிவாதம் அமையும். உங்கள் பிறந்த வருடம் எண்பத்து மூன்று என்றால் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்காலம் 75 முதல் 90 வரை இருக்கும். இது ஒரு குத்துமதிப்புத் தான், என்றாலும் இதன் துல்லியத்துக்கு நானே சாட்சி.


ஒரு பாடல் என்பது அதன் காலத்திலிருந்து தன்னை எப்போது விடுவித்துக் கொள்கிறது..? ஒரு படத்தின் சூழல்தேவை மற்றும் அதன் படமாக்கல் இன்னபிறவற்றிலிருந்தெல்லாம் விலகி எப்போதாவது கேட்கும் போது நனவிலியில் இருப்பவனின் முதல் ஞாபகம் போல அதனைக் கேட்கும் அனுபவம் வாய்க்கிறது. ஒவ்வொன்றாக அந்தப் படத்தின் கதையாடல் வரைக்கும் எல்லாவற்றையும் தேடித் தருகிறது. மீட்டுக் கொடுக்கிறது. வெளியாகிற காலத்தில் பெருவிருப்பப் பாடல்களாக இருக்கிற பாடல்களுக்கு மேற்சொன்ன எதுவும் பொருந்தாது. சூப்பர்ஹிட் படங்களின் சூப்பர் டூப்பர்ஹிட் பாடல்கள் எந்தக் காலத்திலும் புகழ் மங்குவதில்லை. அவற்றைத் தெரியாது எனச் சொல்பவர்கள் பாடல் ரசனையில் சொற்பமான ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்களே தவிர ஆழ்ந்த ரசனையும் தேர்ந்த ஈடுபாடும் கொண்ட யாவர்க்குமான இசை எப்போதைக்குமாய்த் தன்னை முன்னிறுத்தியபடியே அடுத்த காலங்களில் தானியங்கி மேலெழுதுதல் முறைப்படி வந்த வண்ணமே நிலைக்கும்.

தில்லானா மோகனாம்பாள் கந்தன் கருணை திருவருட்செல்வர் திருவிளையாடல் சரஸ்வதி சபதம் அடிமைப்பெண் தெலுங்கில் சங்கராபரணம் ஆகிய படங்களின் பாடல்களைப் பற்றி என்ன சொல்ல வேண்டும்..? இவற்றின் அத்தனை பாடல்களுமே மக்களின் பெருவிருப்பப் பாடல்கள். தீர்க்கமும் துல்லியமும் உறைந்து ஒலிக்கிற பாடல்கள். சாஸ்திரிய சங்கீதப் பின்புலத்தில் ஆன்மீக நுட்பங்களை இயைந்த வண்ணம் இத்தனை படங்களின் பாடல்களை உருவாக்கித் தந்தவர் க்ருஷ்ணன்கோவில் வெங்கடாச்சலம் மகாதேவன். தென் திசையின் திரை இசையில் சகலரத்தினங்களையும் கொண்டு பொறிப்பதற்கான தகுதி கொண்ட ஒரு பெயர். கேவீ.எம்.


அந்தக் காலத்தில் இசை பற்றிய பயமே தயாரிப்பாளர்களினிடத்தில் இருந்தது. வேதா தொடங்கி சங்கர் கணேஷ் வரைக்கும் இந்தா சான்ஸ்.இசை அமை என்று கொடுத்து விலகினார்களா என்றால் அது தான் இல்லை. இந்தாப்பா சான்ஸ் நீ என்ன பண்றே இந்த இந்தி படக் கேசட்டை திரும்பத் திரும்ப போட்டுக் கேட்டுட்டு அப்டியே அதுல மொதல் பாட்டு மூணாவது பாட்டு அஞ்சாவது பாட்டு மூணையும் தமிழ்ல போட்டுறு..புரியுதா..? டே தம்பி இசை அமைப்பாளர் என்ன கேட்டாலும் வாங்கிக் குடுப்பா.. ஆனா ஒண்ணு சொந்தப் பாட்டு போடப் பார்த்தா எங்கிட்ட சொல்லு. நா பார்த்துக்கறேன் என்று கண்ணை உருட்டி முழித்து விட்டுப் போனார்கள். அந்தக் காலத்தில் தப்பிப் பிழைத்து இத்தனையித்தனை தனித்துவப் பாடல்களைத் தந்து தன்னை நிரந்தரித்துக் கொண்ட மாமேதை மகாதேவன்.


மகாதேவன் உருவாக்கிய இசையின் உலகம் தனித்த வேறொன்றானது. அவரது பலம் ஒன்றிரண்டல்ல பல. பாடும் குரல்களையும் பாடலின் இசையையும் கொண்டு ஒரு வேள்வியையே நடத்தி இருக்கிறார் மகாதேவன். ஒரு இரண்டு பாடல்களைக் கூட பிற இசை அமைப்பாளர்கள் அப்படி உருவாக்கினார்களா என்றால் இல்லை எனலாம். அப்படி இருக்க மகாதேவன் செய்து பார்த்த பரிசோதனை முயற்சிகள் பல. அவற்றில் பெரும்பாலும் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பது நற்செய்தி. சுபசங்கீதம்.

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா என்னும் நீலமலைத் திருடன் பாடலையும் மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே என்னும் தாய்க்குப் பின் தாரம் படப் பாடலையும் ஆசையே அலை போலே என்னும் தை பிறந்தால் வழி பிறக்கும் பாடலையும் எங்கிருந்தோ வந்தான் மற்றும் ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா உள்ளதைச் சொல்வேன் நல்லதைச் செய்வேன் ஆகிய படிக்காத மேதை பாடல்களையும் எளிதில் கடக்க முடியுமா என்ன..? தில்லானா மோகனாம்பாள் நலந்தானா மறைந்திருந்து பார்க்கும் மருமமென்ன...? கந்தன் கருணை திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் அறுபடை வீடு கொண்ட திருமுருகா மனம் படைத்தேன் சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா வெள்ளிமலை மன்னவா அடிமைப்பெண் தாய் இல்லாமல் நான் இல்லை ஆயிரம் நிலவே வா காலத்தை வென்றவன் நீ அம்மா என்றால் அன்பு உன்னைப் பார்த்து இந்த உலகம் ஏமாற்றாதே ஏமாற்றாதே திருவிளையாடல் ஒரு நாள் போதுமா பழம் நீயப்பா இசைத் தமிழ் நீ செய்த அரும்சாதனை பாட்டும் நானே பாவமும் நானே பார்த்தால் பசுமரம் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் சரஸ்வதி சபதம் தெய்வம் இருப்பது எங்கே அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி கல்வியா செல்வமா வீரமா ராணி மகாராணி தாய் தந்த பிச்சையிலே முகராசி உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் இவை அத்தனையும் அந்தந்தக் காலகட்டங்களை ஆளப்பிறந்த பாடல்கள். அதிரிபுதிரி அதகளமெட்டுக்கள். இன்றைக்கும் திரும்பப் பெற முடியாத அசல்வைரங்கள்.

 

குடும்பத் தலைவன் படத்தின் அத்தனை பாடல்களுமே இனிப்பினிமை. கட்டான கட்டழகுக் கண்ணா பாடலாகட்டும் ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் பாட்டாகட்டும் செவிக்கின்பம். இந்தப் பாடலின் மகத்துவம் வெளியாகி அரை நூறாண்டு ஆனாலும் இன்னமும் இந்தப் பாடலுக்கான தேவை இருக்கிறது.


         மாறாதய்யா மாறாது 
         மனமும் குணமும் மாறாது

        
தத்துவார்த்தமான இசைக்கோர்வை சீரிய எழுந்துமேலோங்கும் இசை இதன்  ஹம்மிங்கைத் தான் கிலிமாஞ்சாரோ எனும் எந்திரன் படப் பாடலில் பயன்படுத்தி இருப்பார் ரஹ்மான்.

காட்டுப்புலியை வீட்டில் வச்சாலும் 
கறியும் சோறும் கலந்து வச்சாலும் 
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து 
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும் 
மாறாதய்யா மாறாது...


இந்தப் பாடல் வெறும் பாடலல்ல. என் வாழ்க்கையில் சில மனிதர்களைப் பற்றிய புரிதல்களில் குழப்பம் நேர்கையில் எல்லாம் இந்தப் பாடலைக் கேட்பேன். இதனுள் புகுந்து வெளிவருகையில் தேவையான மனவள மருத்துவம் கிட்டிய புத்துணர்வுடனேயே திரும்புவேன். என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தரக் கூடிய மாயமருந்தகம் இப்பாடல்.


அனாயாசமாகக் கோரஸ் பாடல்களை உருவாக்கியிருக்கிறார் மகாதேவன். மணமகளே மருமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வாவா என்ற பாடல் எப்போதுமே வறளாக்கடலாய் விரிகிறதல்லவா..?


மகாதேவனின் அபூர்வமான பாடல்கள் என்று ஒரு முழுமையான கேஸட் தயாரிக்கலாம். அத்தனை பாடல்கள் இருக்கின்றன. காலம் என்பதைத் தாண்டி அவற்றின் பொதுமைகள் என்னென்ன என யோசித்தால் எல்லாப் பாடல்களிலுமே இசை செல்லும் வழி பாடல் நகரும் தொனி பாடலுக்கான சூழல் உடனொலிகள் இடையிசை வார்த்தைகளும் வரிகளும் ஆகிய எல்லாவற்றையும் தன்னால் ஆனவரைக்கும் வித்யாசமாகவே கையாள்வதை விரும்பி இருக்கிறார் மகாதேவன். இது நிச்சயமாக மேதமை. இந்திய அளவில் எம்.எஸ்.விஸ்வநாதன் இளையராஜா ராஜன் நாகேந்திரா சலீல் சவுத்ரி எஸ்.டி.பர்மன் ஆகிய விரல்விட்டு எண்ணக் கூடிய இசை அமைப்பாளர்களே இங்கனமான முயல்வுகளைச் செய்தளித்தவர்கள். அந்தப் பட்டியலில் மகாதேவனுக்கு முதன்மையான இடம் உண்டு என்பதை நிரூபிக்க எண்ணற்ற பாடல்களைத் தந்திருக்கிறார்.
 

மழை சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு அங்கே எனத் தொடங்கும் பாடலைப் பார்க்கலாம். ஆடவந்த தெய்வம் படத்தில் இடம்பெறும் இந்தப் பாடலைடீ.ஆர்மகாலிங்கம் மற்றும் பி.சுசீலா  இருவரும் இணைந்து பாடியிருப்பார்கள். ஒவ்வொரு சரணமுடிவிலும் பல்லவி இணைகிற இடம் வெகு துல்லியமாக எந்த இடைவெளியும் இல்லாமல் சட் சட்டென்று மேலேறிச் செல்லும் இசை முடியும் வரைக்கும் தங்கள் குரலாலும் தொனியாலுமே பாலன்ஸ் செய்திருப்பார்கள். தமிழின் முழுமையான ஜிப்ஸி வகைமைப் பாடல்களில் இது ஒன்று. ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் பாடலை இந்தப் பாடலின் வேறொரு வடிவமாகவே முயன்றிருப்பார் மகாதேவன் என்பது கூடுதல் இன்பம்.

தெலுங்கில் சந்திரமோகன் என்கிற நகைச்சுவை குணச்சித்திர நடிகர் பெரிதும் கொண்டாடப்படுகிற ஒருவர். அவர் ஆரம்ப காலத்தில் நாயகனாய் நடித்த ஒரு படம் கே.விஸ்வநாத் இயக்கிய சீதாமாலக்ஷ்மி படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக தமிழில் இந்தியில் என வரிசையாக ரீமேக் ஆனது. இந்தி மேக்கின் இசை பர்மன். தமிழிலும் தெலுங்கைப் போலவே மகாதேவன் இசை அமைத்திருந்தார்.அந்தப் படம் தான் ஏணிப்படிகள். தெலுங்கில் ஏற்கனவே இடம்பெற்ற  சீதாலு சிங்காரம் என்ற பாடல் எஸ்.பீ.பாலசுப்ரமணியம் சுசீலா பாடிய சூப்பர்ஹிட். ஆனால் அதையே திருத்தப்பட்ட புதிய பதிப்பாக்கித் தமிழில் பூந்தேனில் கலந்து என்கிற அழியாவரப் பாடல் பெரும்புதையல் மெல்ல அவிழ்ந்து தரையில் வீழும் வைடூர்யநாணயங்களின் சரளியாட்டம் இப்பாடல்.


மகாதேவன் ஒரு தனிநபர் இசைக்கல்லூரி.திரைப் பாடல்களை எப்படித் தொடங்க வேண்டும். எப்படிச் செலுத்த வேண்டும்.எப்படிக் கையாண்டு எங்கனம் முடிக்க வேண்டும் தொனிகளை இசைநகர்வை இணைப்பிசைத் துக்கடாக்களை எப்படியெல்லாம் மாற்ற வேண்டும் என்பதை எல்லாம் கற்றுக் கொடுக்கும் பாடங்களே அவரது பாடல்கள். தமிழில் மகாதேவன் வெரைட்டி இசையின் மன்னர் என்பேன்.

 

படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரைய்யா பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா தாயில்லாப் பிள்ளை. பாடியவர் பீபீ ஸ்ரீனிவாஸ் இடையிசையில் ராஜநடனம் ஆடியிருப்பார் மகாதேவன். பாடிய குரலால் தன்னால் ஆன அளவுக்கு மனவசீகரவித்தை புரிந்திருப்பார்  அந்த புத்தம் புது நெருப்பைத் தானே காதல் என்பது கவிஞர் சொன்னது என்ற இடத்தில் பாடல் பொங்கி நுரைக்கும் புதுமதுப் பெருவருகை.


நெருப்பிலே பூத்த மலர்  ஜெயச்சந்திரன் எங்கெங்கும் அவள் முகம் இந்தப் பாடல் ஒரு பிரவாகம் என்பேன். இதனைக் கேட்கும்போதெல்லாம் பாடலின் இசைக்கும் குரலுக்கும் இடையே தொனிக்கிற முரண் இதனை சிலாகிக்காமல் கடக்க விடுவதில்லை.  இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று குலமகள் ராதை படத்தில் இந்தப் பாடலின் பின் இசை குறிப்பிடத் தக்கது. அமானுஷ்யமான இரவின் தனிமையை நிச்சயமற்ற மருட்சியை எதிர்பாராமையின் இருண்மையை என்னவோ நடக்குமோ என்ற பதற்றத்தை தொலைதலுக்கு முந்தைய உணர்வேக்கத்தை எனப் பற்பல அபூர்வமான குழைதல்களைத் தன் இசையால் நிரடிப் பாடலாக்கித் தந்திருப்பார் மகாதேவன். என்றும் இனிப்பது குறையாத சாஸ்வதம் இப்பாடல். துளசி மாடம் சித்திரை மாத நிலவினிலே தென்றல் வீசும் இரவினிலே உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள் அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான் டீஎம்.எஸ் பாடிய பாடல் இனிமையானது. அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை படத்தில் எதிர்பார்த்தேன் இளங்கிளியைக் காணலியே எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொஞ்சுகுரலில் இம்சித்திருப்பார் குரல்ராட்சஸன் எஸ்.பீபி. அவரே வஸந்தாவுடன் பாடிய இருளும் ஒளியும் படத்தில்  திருமகள் தேடி வந்தாள் என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் உற்சாகம் பெருகும்..பீ.சுசீலா பாடிய கள்ளமலர் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே கன்னிமனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே சுசீலா பாடிய குலமகள் ராதை படப் பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன் இதன் துவக்க இசை ஆகச்சிறந்த பேரொலியிசை வகையறா என்பேன். இன்றைக்கு மறுவுரு செய்தால் இன்றைய ட்ரெண்டிங்கிற்குச் சவால் விடும் என்பேன்.


வானம்பாடியில் தூக்கணாங்குருவிக்கூடு சுசீலா ஸ்டார்டிங்க் ம்யூசிக் செமி ஜிப்ஸி இந்தப் பாடலைத் துவக்கி மேலெழுப்பி செலுத்துவதை என்னவென்பது..? பாடிய சுசீலாவின் அட்டகாசமும் மகாதேவனின் இசைஜாலமும் ஒருங்கிணைந்து கூட்டணி அமைச்சரவை அமைத்திருக்கும். சும்மாப் போன்ன மச்சானுக்கு... என்று தனக்கே உரிய குறும்பான தொனியில் கையாண்டிருப்பார் சுசீலா. எப்போதைக்குமான சேகரஜாலம் இப்பாடல்.


 

குங்குமம் படத்தில் இடம்பெற்றிருக்கும் தூங்காத கண்ணென்று ஒன்று பாடலைப் பற்றி புலன்மயக்கம் முதல் அத்தியாயத்தில் பார்த்திருக்கிறோம். குங்குமம் படமும் ஒரு ம்யூசிகல் ட்ரீட் தான்.பூந்தோட்டக் காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா..? பாடலாகட்டும் மயக்கம் எனது தாயகம் பாடலாகட்டும் குங்குமம் படத்தின் பெருமையை என்றென்றும் பறைசாற்றிக் கொண்டிருப்பவை என்றால் அழியாவரப் பாடலான சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா பாடல் இப்படத்தின் மகாபலம். வசீகரம். ஜானகியும் டீ.எம்.எஸ்ஸூம் பாடிய இந்தப் பாடல் என்றும் மாறா நேயர்விருப்பப் பாடலாகும். தமிழ் மொழிக்கென்று திரை இசைக்காகத் தரப்பட்ட முதல் தேசியவிருதைப் பெற்ற மகாதேவனின் இன்னொரு ம்யூசிகல் சிக்னேச்சர் இந்தப் படம் என்றால் அது நிசம்.


 

வண்ணக்கிளி ஒரு இசை ஆச்சரியம். இதிலும் தன் விஸ்வரூபத்தை நேர்த்தியிருப்பார் மகாதேவன். காட்டுமல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க  ஆட்டம் போட்டு மயிலக்காளை தோட்டம் மேயப் பாக்குதடா..மாட்டுக்காரவேலா உன் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா...  தமிழ் நிலத்தின் இதயகீதமாகவே இந்தப் பாடலைச் சொல்லலாம். இந்தப் பாடலின் இணைப்பிசை பலமான நாட்டுப்புறக் கோர்வைகளுடன் இயைந்தெழும். பாடிய சீர்காழியின் தனித்துவக் குரலும் இந்தப் பாடலை சிறப்பித்திருக்கும். ஜிப்ஸி இசையின் முழு உதாரணமாக சித்தாடைக் கட்டிக்கிட்டு பாடலைக் கூறமுடிகிறது. மேலும் சொல்வதானால் உடனொலிகளும் மெலெழும்பியபடியே செல்லும் சரணமும் பல்லவியும் ஒட்டுகிற இடங்களில் இரட்டிக்கிற இசையும் குரல்களும் சேர்ந்து இந்தப் பாடலை ஒரு அற்புதமாக்கி இருக்கும். தமிழின் முழுமையான தாலாட்டுப் பாடல்களில் ஒன்றான சின்னப் பாப்பா எந்தன் செல்லப் பாப்பா எனும் பாடல் வண்ணக்கிளியில் இடம்பெற்றது தற்செயலல்ல. தமிழ் இயங்கு மொழியாக இருக்கிற மாபெரும் வெளியில் எத்தனை குழந்தைகளை இந்தப் பாடல் உறங்கச் செய்திருக்கிறது என்பது பெருங்கணக்கு. திரையிலிருந்து வாழ்க்கைக்குக் கொண்டு செல்வதற்கான பெருஞ்செல்வங்கள் பாடல்வைரங்கள். அவற்றில் தலையாயது இந்தப் பாடல். மகாதேவனின் சித்துவேலையே இந்தப் பாடலின் பின் இசையை மெலிதான காவடியிசையாக அமைத்திருப்பார். பாடிய குரலும் தன்னாலான மென்மையை கடைபிடித்திருக்கும். இசை இருப்பதே தெரியாமல் குரலை முன் நிறுத்துவது சாதாரணமல்ல. அதை அனாயாசமாகச் செய்திருப்பார் மகாதேவன்.

 

வானம்பாடி அனைத்துப் பாடல்களும் கண்ணதாசன் எழுதியது. காதலுக்கும் பக்தி இலக்கியத்துக்குமான தொடர்பு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலானது. அதிலும் கிருஷ்ண அவதாரம் கண்ணனைக் காதலனாக்கி அழகுபார்ப்பது.பாரதி உட்படக் கவிதை மீது பித்துக் கொண்ட யாருக்கும் கண்ணன் எனும் சித்தாந்தம் மீதான பித்து இருந்தே தீரும்.கண்ணனை ஒருதலையாய்க் காதலிக்கலாம். எப்போதும் காத்திருக்கலாம். கண்ணனிடம் ஏமாறுவதன் பேர் தான் வாழ்க்கை.சேராக் காதலின் தலைவன் கண்ணன். இவை ஒருபுறம் இருக்க ஒவ்வொரு காலகட்டத்திலும் திரை இசையில் கண்ணன் மீதான காதல் காத்திருத்தல் ஒருதலை முன்வைத்தல் இன்னபிறவற்றின் பலமான முறையிடல்கள் பாடல்களாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட கண்ணன் மீதான காதல் பாடல்களின் முதல் இடத்தை இந்தப் பாடலுக்குத் தருவேன்.

 

இந்தப் பாடல் வெறும் திரைப் பாடல் என்கிறவர்கள் தங்களைத் தாங்களே சபித்துக் கொள்கிறார்கள். உள்ளே நுழைந்து வெளியே திரும்பும் போதெல்லாம் இந்தப் பாடலின் பக்தகோடிகளில் பெயரற்ற ஒருவராய்த் திரும்புகிறவர்களில் ஒருவன் தான் அடியேனும். பக்தி இருக்கிறதோ இல்லையோ ஆத்திகமோ நாத்திகமோ அதெல்லாம் வேறு இசை பாடல் குரல் ஆகிய மூன்று மாத்திரம் இருக்கிற இடம் இது. இங்கே இந்தப் பாடலை பக்திப் பாடலாக அல்லாது காதல் ரசம் பொங்கிப் பெருகும் பாடலாகக் கொள்வதும் நிகழ்கிறது. வழி எதுவானால் என்ன..? கிறங்கி மயங்கித் தொலைந்து உருகுதல் நிச்சயம். கண்ணன் என் காதலன் என்று கண்ணனுக்குத் தாஸனாய் ஆனவர் எழுதிய உச்சபட்சம் இப்பாடல். கவியரசரின் முன் மொழிதலைத் தன் ஈடில்லாக் குரலால் வழிமொழிந்திருப்பார் குரலரசி சுசீலா.கங்கைக்கரைத் தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் 
கண்ணன் நடுவினிலே  
கண்ணன் நடுவினிலே 
காலை இளங்காற்று பாடி வரும் பாட்டு 
எதிலும் அவன் குரலே  
எதிலும் அவன் குரலே  

கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்ணன் முகத்
கண்மயங்கி ஏங்கி நின்றேன் 
கன்னி சிலையாக நின்றேன்.
என்ன நினைந்தேனோ 
தன்னை மறந்தேனோ 
கண்ணீர் பெருகியதே  
கண்ணீர் பெருகியதே
(கங்கைக் கரைத் தோட்டம்)

கண்ணன் என்னைக் கண்டு கொண்டான் 
கையிரண்டில் அள்ளிக் கொண்டான் 
பொன்னழகு மேனி என்றான் 
பூச்சரங்கள் கோடிதந்தான் 
கண் திறந்து பார்த்தேன் 
கண்ணன் அங்கு இல்லை 
கண்ணீர் பெருகியதே  
கண்ணீர் பெருகியதே

அன்று வந்த கண்ணன் 
இன்று வரவில்லை 
என்றோ அவன் வருவான்
என்றோ அவன் வருவான்

கண்ணன் முகம் கண்ட கண்கள் 
மன்னன் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம் 
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணன் வரும் நாளில் 
கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ  
காற்றில் மறைவேனோ

நாடி வரும் கண்ணன் 
கோலமணி மார்பில் 
நானே தவழ்ந்திருப்பேன்
நானே தவழ்ந்திருப்பேன்

கண்ணா
கண்ணா

கங்கைக்கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே ....கண்ணன் நடுவினிலே...இந்தப் பாடலில் இருந்து வெளிவருவது இயலாத இன்னொன்று.. முதலாவது இந்தப் பாடலுக்கு இணையான ஒன்றைத் தேடுவது. பொய்த்தாலும் பரவாயில்லை என்றான பிற்பாடு எழுகின்ற விஸ்வாசத்தின் பேர் தான் பக்தி என்கிற பிடிவாதம். அதன் இன்னொரு பேர் தான் காதல் என்பது.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...