???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கான பயிற்சி அடுத்த மாதம் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் 0 நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரம்: சி.பி.எஸ்.இ தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை 0 ஊழல் வழக்கில் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப், மகள் மர்யம் நவாஸின் ஜாமின் மனு நிராகரிப்பு 0 எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்தில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை! 0 ஓரினச் சேர்க்கைக்கு எதிரான குற்றப்பிரிவு சட்டத்தை நீக்க கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்! 0 உலகக்கோப்பை சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்பே 0 ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் 0 புலன் மயக்கம் - 93 - ஏன் அவர் மேஸ்ட்ரோ [பகுதி-3] இசைவழி முத்தங்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 தென்மாநிலங்களில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 0 பினாமி வீடுகளில் வருமானவரி சோதனை: முதலமைச்சர் பதவி விலக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: 18 பேர் கைது 0 மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது! 0 நாடாளுமன்றம் சுமூகமாக செயல்படவே எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன: குலாம்நபி ஆசாத் 0 46% இந்தியர்கள் லஞ்சம் கொடுத்து பாஸ்போர்ட் பெறுகிறார்கள்: ஆய்வில் தகவல் 0 ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துகுவிப்பு புகாரை விசாரிக்க நீதிமன்றத்தில் மனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் – 37 - நனவிலியின் அழைப்பொலி - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   02 , 2017  07:07:02 IST


Andhimazhai Image

தொண்ணூறுகளில் உலகத்தைத் தன்பக்கம் திருப்பியவர் காலேத். அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே, ஹே ஷப்பா ஹே ஷப்பா போன்ற பாடல்கள் நேரடியாகவே காலேதின் பாதிப்பில் உருவாக்கம் பெற்றவை. தேவா அவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்களில் காலேதைத் தொட்டுக்கொண்டிருப்பார். சிற்பி , வித்யாசாகர் தொடங்கி இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு இசையமைப்பாளர்கள் ஸாரி கூட சொல்லாமல் எடுத்தாண்ட அந்த ஒரு நபரின் இசையில் அப்படி என்ன வித்யாசம்..? யார் இந்தக் காலேத்..? ஹட்ஜ் ப்ராஹிம் காலேத் அல்ஜீரியாவில் 1960ஆம் ஆண்டு பிறந்தவர் ஃப்ரான்ஸ் தேசத்துக்குப் பெயர்ந்தவர். உலகின் இசைநதி ஓடுசாலைகளை மாற்றியமைத்த வெகு சில மேதைகளில் ஒருவர் காலேத். நனவிலியின் அழைப்பொலி.

காலேத் அதுவரைக்கும் நான் கேட்டுக்கொண்டிருந்த பாடல்களின் லட்சண ஒழுங்கை மாற்றி அமைத்தார் என்றே சொல்வேன். கணேஷ் என்னும் நண்பன் அந்தக் காலகட்டத்திலேயே பன்னாட்டு இசை ஆல்பங்களை வாங்குவதும் அவற்றைப் பாடுவதுமாக இருந்தான். மதுரை ரயில்வே பள்ளியில் படித்தவன். அபாரமான மேற்கத்திய இசை ஞானம் படைத்தவன். தன் கை அப்பத்தை விண்டு எனக்கும் தருவதில் பேரானந்தம் அடைந்தான் கணேஷ். காலேதின் ரஹ்டா மற்றும் லியா லியா   மற்றும் ஹாராய்  ஸ்பாபீ ஆகிய பாடல்களோடு பல இரவுகளில் பயணித்திருக்கிறேன். 

இசை என்பதன் மாயம் இது எனலாம். வேறெந்த தொடர்பும் இல்லாத வேறோர் நிலத்தின் வேறொரு வாழ்வியலின் முற்றிலும் அன்னியப் புதிய மனிதன் ஒருவனை மனசுக்குள் நெருக்கமாய் உணர்ந்து கொள்ள நேசிக்க அவனுக்காகப் பிரார்த்திக்க அவனையே பிரார்த்திக்க அவனோடு முரண்பட அவனை வெறுக்க அத்தனையுமாய் அவனைக் கொண்டாடி மகிழ்ந்து உயரே தூக்கிக் குழந்தையை அந்தரத்தில் இட்டு மறுபடி கைக்கொள்ளும் ப்ரியத்தின் நடுக்கக் கணங்களுக்குக் கொஞ்சமும் குறைவற்றவை காலேத் என்னும் மனிதன் மீதான என் நேசம். இன்றைக்கு வரை காலேத் இசையை எப்போதெல்லாம் கேட்கத் தொடங்குகிறேனோ அப்போதெல்லாம் அவரது இசைப்பணியை முழுவதுமாக இன்னொரு முறை கேட்டு முடித்த பின்பே அவரின் இசையிலிருந்து என்னால் விலக முடிகிறது.

அவரது பாடல்களில் முதலாவது ஒன்றைக் கேட்பதென்பது பருவம் பொய்க்காத நன்மழைக்காலத்தைத் துவக்கி வைக்கிற தூறல்புதுத் துளிர்த்தலை ஒத்தது. அவ்வளவுதான் விட்டொழித்தாயிற்று என நினைத்த ஞாபகமாயை கண்ணைச் சிமிட்டியபடியே தனக்கொன்றும் தெரியாது என்கிற பாவனையோடு மறுபடி வந்துதிர்க்குமே போல அது நல்லதோர் இசை. இப்படிப் பல முறைகள் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். சலிப்பதற்கில்லை.


முதன் முதலில் 92 ஆம் ஆண்டு கணேஷின் புண்ணியத்தில் எனக்குள் வந்து நுழைந்த காலேத் என்னும் ஆல்பத்தின் நாயகன் காலேத் அதற்குப் பின்னால் அடுத்த வருடம் நெய்ஸி நெய்ஸி N'ssi N'ssi அதன் பிற்பாடு ஸாஹ்ரா  உள்பட ஐந்து தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். இசைவெறியர்களுக்கு இருக்கவேண்டிய வெறி காலேத் மீதானது என்பதை தன்னடக்கத்துடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நம்மூர் சந்திரபாபுவின் குரலோடு இயைந்து செல்லக் கூடிய மித சோக மற்றும் வனாந்திரத் தனியலைவுக் குரல் வகைமைகளில் வரக் கூடிய அபூர்வம் காலேத். ஓங்கி அடித்தால் ஒன்றரை டன்னெல்லாம் இல்லை ஸ்வாமி ஒன்றரை யுகங்களுக்கும் மேலாக மறக்க முடியாத இசைப் பலவான். நெய்ஸி நெய்ஸியில் வருகிற கெய்பூ என்றோரு பாடல் காரணமின்றிக் கண்ணீர் அகழ்ந்து தரும். இத்தனைக்கும் அதன் உள்ளடக்கம் மிக பாஸிடிவ்வானது என்பது கூறத்தக்க மற்றொன்று. தன் பாடல்களைப் பெரும்பாலும் தானே எழுதி இசை அமைக்கும் ஞானராட்சஸன் காலேத்  லே மார்ஸெய்ம் என்கிற இந்த பாடலும் இன்னொரு முத்து.  பக்ட்தா என்னும் ஜிப்ஸி வகையறை பாடலின் சுட்டி இதோ  இந்தப் பாடலை நள்ளிரவில் கேளுங்கள். ஒரே ஒருதடவையோடு கேட்டுவிட்டுக் கடந்து செல்லவே மாட்டீர்கள். காலேத் என்னும் இரவுதின்னும் ராட்ஸசன் எப்படியான ஒரு போதையை மனசுகளெங்கும் விதைத்திருக்கிறான் என்பது புரியும். பந்தயமே கட்டுவேன். இதுவரை நீங்கள் கேட்ட எல்லாக் குரல்களையும் தாண்டியும் இந்தக் குரலையும் இவனது இசையையும் விரும்பியே தீர்வீர்கள். இது வரமா சாபமா என்றெனக்குத் தெரியாது. என்னளவில் இவன் நிஜநல்லிசை.

காலேத் ஸாஹ்ரா ஆல்பத்திலும் அதகளம் பண்ணினார். வாலோ வாலோ என்றொரு பீட் ஸ்கோரும் வஹ்ரான் வஹ்ரான்  என்றொரு மென்சோகப் பாடலும் மீண்டும் மீண்டும் கேட்கவல்லவை. பின் சொன்ன பாடலில் ஆழும் போது காலம் நிலம் ஆகிய இரண்டு முக்கிய கண்ணிகளுமே அற்றுப் போய் பெயரற்ற அந்தரம் ஒன்றில் லயிப்போம். நிகழவல்லாதவற்றை நிகழ்த்திப் பார்க்கும் மாயை காலேத் இசை. இந்தப் பாடலின் நடுவில் வரக் கூடிய குழலிசைக்கு மயங்காதவர்க்குக் காதுகளும் இல்லை மனசும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. இதே ஆல்பத்தில் லே ஸோர் வியேன்றா என்றொரு வேகப்பாடலும் முக்கியமான மற்றொன்று.

காலேதின் இசை தீ தீ என்ற பாடலில் உச்சமாய்ப் பொங்கிற்று. உலக இசை நேசர்களின் மனங்களில் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்ததோ இந்தியத் திரை இசை மற்றும் திரை சார் இசை ஆகிய வெளிகளில் தீதீ பாடலும் அதன் பின்னணி இசையும் அதன் தொனிநகரும் முறைகளும் குரல்களின் செலுத்தற் திசையும் என சின்னதும் பெரியதுமான சகல நுட்பங்களும் பெரியதோர் மாற்றத்தைக் கொண்டு வந்தன என்றால் அது தான் நிஜம். பின்னணி இசையிலும் பாடல்கள் உருவாக்கத்திலும் பல்வேறு திசைகளின் இசைகளிலும் தீதீ பாடலின் சாயலில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் உருவாக்கப் பட்டன.


காலேதின் இசையின் மையம் வெகு அந்தரங்கமான ஒரு கேவலை குரலால் மாத்திரமே வெளிப்பட்டாக வேண்டும் என்கிற நிலையில் குரலின் ஒத்துழையாமையை நொந்தபடி எழக் கூடிய தாழ்நிலை ஸ்வரம் ஒன்றை அடிப்படையிலாகக் கொண்டது. பிரார்த்தித்தபடியே விரைந்தோடுகிற மென்மையான அதே நேரம் உயிருறுதி தெறிக்கும் இசைக்கோர்வைகளைப் பின்னணியாகக் கொண்டவை காலேதின் பாடல்கள். பெரும்பாலும் பாடலின் துவக்க இசை சுழலிசைப் பிரமாணங்களாகவே நிகழ்ந்தன. இந்திய இசைக்குச் சற்றும் அந்நியமற்ற அதே நேரத்தில் முற்றிலும் புதிதான இசை ஆல்பங்களின் வரிசையில் காலேதின் ஆல்பங்கள் இடம்பெற்றதில் வியப்பேதுமில்லை. அதிலும் இரவு பாலை தனிமை ஆகிய மூன்று தன்மைகளையும் ஒருங்கிணைத்து அவர் உருவாக்கிய பாடல்கள் ரத்த நாளங்களில் சென்று செருகிக் கொண்டன. பிரித்தறிய முடியாத குழந்தை மீதான பேரன்புக்குச் சற்றும் மாற்றற்ற பித்தை பெருந்தேடலைக் கைவிடமுடியாத பற்றுதலைத் தங்களுடைய நேயர்மனங்களில் உருவாக்கி வைத்திருப்பவை காலேதின் பாடல்கள்.

அமர் அப்துல் பாஸேத் அப்துல் தியாப் என்கிற பாடகரின் இந்தப் பாடலைக் கேளுங்கள். தமிழில் ஜெய்ராம் தேவயானியின் பின்னே கொந்தளித்துப் பாடியபடி தமிழில் பெரிய இடத்து மாப்பிள்ளை என்றபடத்தில் இடம்பெற்ற காப்பி கேட்டின் ஒரிஜினல் இது. அசல் கேட்ட பிற்பாடு நகலை மறக்கக் கடவதாக. எகிப்தியப் பின் புலத்தில் உருவான மத்தியதரைக்கடல் பிராந்தியத்தின் முழுமுதல் புத்திசைக் கலைஞர் பாடலாசிரியர் மற்றும் பாடகரான அமர் தியாப் உடைய ஆல்பங்கள் சர்வதிசைகளிலும் விரும்பப்படுகிற இன்னுமோர் வகைமை இசை என்பதில் ஐயமே இல்லை.

Habibi ya nour el-ain
(My darling ... you are the glow in my eyes )
Ya sakin khayali
(You live in my imagination. )
A'ashek bakali sneen wala ghayrak bibali
(I adored you for years ... No one else is in my mind )

Habibi ... Habibi ... Habibi ya nour el-ain ... aah
(My darling , my darling, my darling ..glow in my eyes ... AH)
Habibi ... Habibi ... Habibi ya nour el-ain
(My darling, my darling, my darling )
Ya sakin khayali
(You live in my imagination )
Agmal a'ouyoun filkone ana shiftaha

(The most beautiful eyes I ever saw in this universe. )
Allah a'alake allah a'la sihraha
(God be with you ... what magic eyes. )
A'oyonak maa'aya ...
(Your eyes are with me ... )
A'oyonak kifaya ...
(That is enough ... )
Tinawar layali
(They light the nights. )

Habibi ... Habibi ... Habibi ya nour el-ain ... aah
(My darling, my darling, my darling ... glow in my eye ... aah)
Habibi ... Habibi ... Habibi ya nour el-ain
(My darling, my darling, my darling ... glow in my eye ... )
Ya sakin khayali You live in my imagination

Kalbak nadani wkal bithibini ...
(Your heart called me and told me you love me ... )
Allah a'alake allah ...
(God be with you ... )
Tamentini
(You reassured me.)
Maa'ak elbidaya ...
(You have the beginning ... )
Wkoul elhikaya ...
(And all the story ... )
Maa'ak lilnihaya
(I will be with you to the end. )

Habibi ... Habibi ... Habibi ya nour el-ain ... Aah
(My darling, my darling, my darling ... glow in my eye ... aah )
Habibi ... Habibi ... Habibi ya nour el-ain ... aah
(My darling, my darling, my darling ... glow in my eye ... aah)
Aah ... Habibi ... Habibi ... aah ah ...
(my darling ... my darling ... aah )

 

அப்படியே நுஸ்ரத் ஃபதே அலி கான் என்ற புண்ணியாத்மனைப் பற்றியும் பேசி விடலாம். ஆலாபனையின் அரசன் என்றே அழைக்கத் தகுந்த அலிகானின் இசை அற்புதங்களை சாதாரணங்களாக்கியபடியே விரைந்தோடுகிற திரும்பத் தெரியாத காட்டாற்றைப் போன்றது. ஒரு பாடலை மெல்ல எடுத்துச் சென்று வானில் ஓரிடத்தில் அசைவறு நிலையில் நிறுத்தி அழகுபார்க்கிற தேர்ந்த விமானி ஒருவரைப் போலவே தன் பாடல்களை வழங்கியவர் அலிகான். மேலும் அவரது பாடல்கள் உடனொலிகளுக்குப் பேர் போனவை. நுஸ்ரத் ஃபதே அலிகானின் இசைவாழ்வை ஒரு பாடல் கொண்டு விளக்கி விட முடியாது. இருந்தபோதிலும் இந்த அத்தியாயத்தில் ஒரு சின்னஞ்சிறு ஜன்னலைத் திறந்தபடி பறக்கிற பறவையின் பின்புல வெளிச்சமாகவே இப்பாடலை முன்வைக்கிறேன். வாழ்க நுஸ்ரத் ஃபதே அலி கானின் புகழ்.

இந்தப் பாடலை முழுவதும் கேளுங்கள். தமிழில் உள்ளத்தை அள்ளிய பாடலாகத் தோன்றுகிறதா..? அதன் நிஜவேர் இந்தப் பாடல். இதிலிருக்கும் ஆன்மா திரைப்பயன்பாட்டு முனைப்பை எல்லாம் தாண்டி தமிழ்ப் பாடலிலும் தொனித்திருப்பதை உணரலாம்.

தீயின் குதிரைவண்டிகள் எனப் பொருட்படும் சாரியட்ஸ் ஆஃப் ஃபயர் 1981 ஆமாண்டு வெளியான திரைப்படம். ஒரிஜினல் ம்யூசிக் ஸ்கோருக்கான சிறந்த பின்னிசைக்கான ஆஸ்கர் அகதமி விருதை வென்றார் வெங்கலீஸ். இந்தப் படத்தின் தீம் ம்யூசிக் சுட்டியைப் பின் தொடருங்கள். ரோஜாவில் ரஹ்மான் நமக்களித்த புது வெள்ளை மழை பாடலின் பலமான பின் இசையின் செலுத்தல் இதன் உந்துதலே என்பதை உணரலாம். இத்தோடு சேர்ந்து முன்னர் வேறு அத்தியாயத்தில் நாம் பார்த்த க்ரெஃப்ட் வார்க் மேன் மெஷின் இசையின் விள்ளல் ஒன்றையும் இணைத்தால் அந்தப் பாடலின் நகரும் திசை உள்பட அப்படியே பொருந்துவதைக் காணலாம்.

ஜக்ஜித் சிங்கின் இந்தப் பாடலைக் கேளுங்கள். அனுபவியுங்கள். முப்பத்தாறு வருடங்களாக வேறோன்றாகக் கேட்டபடி வாழ்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரர்களில் ஒருவரா நீங்கள்..? இதன் பிற்பாடாவது ஒரு தடவை உங்கள் கரவொலிகளில் சிங்கின் பங்கை அவருக்களிக்கவே இந்த முன்வைத்தல். குறையொன்றுமில்லை.

உந்துதல் வேறு போலச்செய்தல் வேறு, எவையெல்லாம் உந்துதல் அல்லது முன் மாதிரி எவையெல்லாம் போலச்செய்தல் அல்லது காபிகேட்ஸ் என்பதைப் பற்றிய எந்த விசாரணை தண்டனை வழங்கல்களுக்குள்ளேயும் இந்தப் புலன் மயக்கம் அண்ட் கோ செல்ல விரும்பாது என்பதைத் தெரிவித்துக் கொண்டு என்றாலும் இருந்தாலும் இப்படியான பாடல்களை இசைக்கோர்வைகளைப் பற்றிய சின்னஞ்சிறிய வரிகளையும் அவ்வப்போது வழங்குவதும் புலன்மயக்குகிற வேலையின் உபவேலை தான் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். இசையால் இணைவோம்.

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...