???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநரைச் சந்தித்தார் முதல்வர் பழனிசாமி 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் எதிரொலி : மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அதிரடி மாற்றம் 0 தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட் கிளையில் மனு 0 கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற குமாரசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து 0 கர்நாடகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் குமாரசாமி 0 தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி 0 தூத்துக்குடியில் தொடரும் பதற்றம்: காவல்துறை வாகனம் தீ வைத்து எரிப்பு 0 துப்பாக்கி தோட்டாக்களால் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது: ராகுல்காந்தி பொளேர் 0 தூத்துக்குடி பெருந்துயரத்துக்கு யார் காரணம்? ப.சிதம்பரம் விளாசல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: தமிழக அரசு விளக்கமளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு 0 ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: விஜய் சேதுபதி கடும் கண்டனம் 0 தூத்துக்குடியில் தொடரும் பதற்றம்: இயல்பு வாழ்க்கை முடங்கியது 0 தூத்துக்குடியில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு 0 பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 34 - நிலவில் ததும்பும் கடல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   11 , 2017  01:24:44 IST


Andhimazhai Image

தேவா எனும் பெயரே ரசித்ததில்லை. தொண்ணூறுகளின் துவக்கத்தில் வைகாசி பொறந்தாச்சி படம் வெளியான போது அதன் அத்தனை பாடல்களும் அதிரி புதிரி ஹிட் ஆனது. வாலிப தேசத்தில் ஒலிக்கிற பாடல்கள் தான் முக்கியமானவை. என்றைக்கும் யுவர்களைக் கவர்வது எளிதல்ல. தேவா எனும் பெயர் அப்போது மின்னி மின்னி மறைந்து கொண்டிருந்தது. தேவாவின் மீதான குற்றச்சாட்டுகள் ஒன்றல்ல ரெண்டு அவை இளையராஜாவைப் போலவே இசையமைக்க முயன்றார் ஆங்கில மேலைப் பாடல்களைத் தழுவி மீவுரு செய்தார் என்பது.


இவற்றைப் பிறர் கூறி நான் கேட்டிருக்கிறேன் என்றெல்லாம் ஜல்லி அடிக்க விரும்பவில்லை.நானே குற்றம் சாட்டினேன். தேவா எனும் பெயரே வெறுப்பாக உச்சரிக்கிற அளவிற்கு அவரை வெறுத்திருக்கிறேன். ஹார்விப் பட்டியில் கோவிந்த் என்ற ஒரு நண்பன். அவனுக்கு தேவா இசை தான் பிடிக்கும்.வேண்டுமென்றே இளையராஜா பிடிக்காது என்கிறான் எனத் தான் அவனை ரொம்ப நாளாக நினைத்திருந்தேன். ஒரு நாள் அவனும் நானும் மட்டும் ஈபீ ஆபீஸ் க்யூவில் நின்று கொண்டிருந்தோம். இப்போது மாதிரி அத்தனை எளிதாக இண்டர்னெட்டில் பணம் கட்டிவிட்டுத் தப்பிக்க முடியாத காலம் அது. அரை நாள் நின்றாகவேண்டும்.


ஒரு மாதிரி ஸ்டாக்ஹோம் சிண்டிரோம் தான் ஒர்க் அவுட் ஆகும். க்யூவில் நிற்க ஆரம்பிக்கும் போது வெறு வெறு என வெறுத்துக் கொண்டே தொடங்கினாலும் பில் கட்டி முடிக்கும் போது அத்யந்த தளபதி ரஜினி மம்மூட்டியாகவே மாறிவிட்டிருப்போம். அத்தனை நேரமானால் யாருக்குத் தான் யார் மீது தான் அன்பு வராது.? கோவிந்த்திடம் முதலிலேயே சொல்லிவிட்டேன். பாட்டு பத்தி பேசவேணாம். வேற எதுனா பேசுவோம் என்று.ஆனாலும் பேச்சு சுற்றிச் சுற்றி பாடல்களிலேயே நிலைகொண்டது. ஒரு கட்டத்தில் சரி வா தேவா என்று தேவா பற்றி அவன் பேச நான் கேட்டேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தேவாவின் அப்போது வரைக்குமான இசைப்பணிகள் குறித்த ஒரு முழுமையான சித்திரத்தை கோவிந்த் நிகழ்த்தினான். ஒரு கலைஞனை ஒரு ரசிகன் எப்படித் தொடர்வது ரசனை என்பதை எனக்குத் தன்னையறியாமலேயே பாடம் நிகழ்த்தினான் கோவிந்த்.

 

வைகாசி பொறந்தாச்சி பாட்டு பிடிக்குமா பிடிக்காதா என்று நிறுத்தினான் கோவிந்த். நான் சொன்னேன். எனக்கு அதை விட வசந்த காலப் பறவை படத்ல வர்ற செம்பருத்தி செம்பருத்தி ரொம்பப் பிடிக்கும் அவன் ஆச்சர்யமானான். அந்தப் பாடல் ஒரு முழுமையான சினிஸ்கோர். தொகையறாவோடு ஆரம்பிக்கிற பல பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகி இருக்கின்றன. அந்த வரிசையில் தாராளமாய் அந்தப் பாடலைச் சொல்வேன். பாலுவும் ஜானகியும் ஐஸ்க்ரீம் தொழிற்சாலையின்  நடுவாந்திரத்தில் நின்றபடி முழுப்பாடலையும் பாடி இருப்பார்கள். கிழக்குக் கரை படத்தில் எனக்கெனப் பிறந்தவ ரெக்கை கட்டிப் பறந்தவ இவதான் பாடலையும் யாருக்கும் தெரியாமல் ஆயிரம் முறை கேட்டிருக்கிறேன் என்றேன். அவ்வளவு தான். கோவிந்துக்கு ஏதோ சிறகு ரெண்டு முளைத்தாற் போல் பறந்தான்.

 

தேவாவின் இசை பற்றி பேசுவதானால் இளையராஜாவுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான படங்கள் மற்றும் சூப்பர்ஹிட் பாடல்கள் என்ற இரண்டு பதங்களிலும் இயங்கிக் காட்டியவர் அவர் தான். ஏ.ஆர் ரஹ்மானின் வருகைக்குப் பிறகான மடைமாற்றத்தில் அறுவடை செய்தவர் ரஹ்மான் அல்ல. தேவா தான். பின்னணி இசையிலும் குறிப்பிடத் தக்க படங்களை தேவா செய்திருக்கிறார். மேலும் தமிழ்ப் படங்களில் எள்ளல்காலப் பாடல்களின் வரிசையில் கானாவைக் கொண்டு வந்து சேர்த்ததும் சோகத் தன்மையிலான தனிமையின் ஏக்கப் பாடல்களாகவும் கானா பாடல்களை ஆக்கிக் காட்டிய பெருமையின் பெரும்பான்மை தேவாவையே சாரும்.தேனிசைத் தென்றல் என்ற பட்டம் சாலப்பொருத்தம்.

வரிசையாக அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் ஆகிய ரஜினி படங்களுக்கும் பம்மல் கே சம்மந்தம், அவ்வை ஷன்முகி, பஞ்ச தந்திரம் போன்ற கமல் படங்களுக்கும்  என் ஆசை மச்சான், தாய்மனசு, தெற்குத் தெரு மச்சான்,  சூரியன், கருப்பு நிலா, ஆசை, நேருக்கு நேர் இந்து, கோகுலத்தில் சீதை, கோபாலாகோபாலா, காதல்கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க, கல்கி, பாஞ்சாலங்குறிச்சி, பாரதிகண்ணம்மா, ரெட்டை ஜடை வயசு, வாலி, அப்பு, வெற்றிக் கொடி கட்டு, குஷி, வல்லரசு, சாக்லேட், சிட்டிசன், தேவதையைக் கண்டேன் உள்பட பல சூப்பர்ஹிட்களைத் தந்தார் தேவா.

தேவா சீரிஸ் பாடல்களுக்கென்றே தனி பென் ட்ரைவ் என்னிடம் இருக்கிறது. அதன் ஃபோல்டர்களில் பல அறியப் பட்ட மேற்சொன்ன படங்களும் பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன. நெடும்பயணங்களின் போது ஒரு மனமாற்றத்துக்காக தேவா ஹிட்ஸ் பாடல்களையும் கேட்பது வழக்கம். இத்தனைக்கும் நடுவே தேவாவின் பெரிதும் அறியப்படாத பாடல் வரிசை ஒன்று என்னிடம் இருக்கிறது. தேவா என்ற பெயரைத் தாண்டி என் இதயத்தின் ஆழத்தில் நான் நேசிக்கிற சொற்ப பாடல்களின் சேகரத்தில் தங்களை நிரந்தரமாய் நிறுத்திக் கொண்ட குன்றாவொளிக் குரல்வழிப் பறவைகள் அவை.

 

ஒன் உதட்டோரச்செவப்பே அந்த மருதாணி கடனாக் கேட்கும் கடனாக் கேட்கும் எனத் தொடங்குகிற பாஞ்சாலங்குறிச்சி படப் பாடல் ஏக் லடுக்கி கோ தேகா தோ எனத் தொடங்கும் 1942 இந்திப் பாடல் சாயலில் எழுந்தாலும் ஹரிஹரனின் ஒப்பிடவியலாத குரலில் என் செவ்வாழத் தண்டே சிறுகாட்டு வண்டே எனும்போது நம் மனம் முழுக்க அதன் வசமாகும்.


பல கேஸட்டுகளிலும் இளையராஜாவின் பாடல்களோடு எந்தப் புண்ணியவான் சேர்த்து வைத்தானோ இந்தப் பாடலும் வந்து சேர்கிறது. தாய்மனசு படத்தில் இடம் பெற்ற தூதுவள எல அரச்சி எனத் தொடங்கும் அற்புதம் பாலுவும் ஜானகியும் பாடிய இரவுநேரத் தென்றல். மறக்க முடியாத நல்லிசை.கேட்பவரைக் கொள்ளை செய்யும் இசைவார்ப்பு. 


கோபாலா கோபாலா படத்தில் வருகிற யுத்தத்தில் திறக்காத கதவை முத்தத்தில் திறப்பேன் என்ற பாடல் வைரமுத்து தேவா கூட்டணியின் அதகளம் எனலாம். ஒவ்வொரு வரியும் ஒரு கவிதை நதி. மொத்தப் பாடல் நிலவு நேரக் கடல்குளியல்.

 


வாட்ச்மேன் வடிவேலு என்றொரு படம் கன்னத்தில் கன்னம் வைத்து எனத் தொடங்கும் பாடல் இதுவுமொரு இந்திப் பாடலின் சாயல் தான்.என்றாலும் அற்புதமான பாடல். பாஸ்மார்க் என்ற ராம்கி படம் உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி என்ற பாடல் பாலுவும் சித்ராவும் பாடிய பாடல். முழுமையான சாரலை அனுபவிக்கச் செய்யும் பாடல்களில் இதுவும் ஒன்று.


சிஷ்யா படத்தில் ஹரிஹரன் பாடிய யாரோ அழைத்தது போல் எனத் தொடங்குகிற பாடல் ஒரு மெல்லிய மழை. கேட்கச் சலிக்காத இன்பம். சாக்லேட் என்கிற மாதேஷ் படம். அதன் இடையே ஒரு பாடல் வரும். முழுவதும் கோரஸ் எனப்படுகிற உடனொலிகளாலேயே அமைத்திருப்பார் தேவா. என் மனதில் வெகு நாட்கள் ஆழ ஒலித்தது இந்தப் பாடல் மறக்க முடியாத ஒரு முத்தத்தைப் போல ஈரம் ஞாபகத்தின் அடிவாரமெங்கும் படர்ந்து நிறைந்திருப்பது சிலிர்ப்பு. ஒரு பாடலால் மட்டுமே வாய்க்கத் தக்க காருண்யம். குன்றாப் பேரன்பு . தேவாவின் இசை என்றதுமே எனக்கு நினைவிலாடும் முதல் பாடலாக இது தான் இருக்கிறது. இந்தப் பாடலிருக்கும் வரை தேவாவின் புகழும் இருக்கும் என்பதில் துளியின் துளித்துளி சந்தேகமும் இல்லை.


இவற்றை எல்லாம் விட ஒரு பாடல் ஒரே ஒரு பாடல். அத்தனை அறியப்படாத அந்தப் பாடலை முதல்முறை கேட்ட போது கரைந்து நூற்றுக்கணக்கான என் பிரதிச்சில்லுகளாக நான் உடைந்தேன். என்னை நானே மறுபடிச் செதுக்கினேன். இத்தனைக்கும் காரணமாகியது அந்தப் பாடல். ஒரு யுகாந்திரத்துக்கான அன்பின் ததும்பலை தேடலின் வாதையை தீராப் ப்ரியத்தின் மென்மையான துகள்களைத் தன்னை முன் நிறுத்திக் கொள்வதைக் கொஞ்சமும் அறியாத பேரன்பின் நிழலை நமக்குள் பெயர்க்க வல்ல அந்த ஒரு பாடல். இன்றைக்கும் கேட்க வாய்க்கையில் கேட்பவரை முழுவதுமாய்த் தீர்த்து வேறோருவராக்கித் திருப்புகிற மாயாஜாலத் தேனிசை அந்தப் பாடல். எஸ்.பீபாலசுப்ரமணியத்தின் அபூர்வமான தனித்துவப் பாடல்களில் அதுவும் ஒன்று. உடன் பாடிய ஸ்வர்ணலதாவின் மனங்கொத்திக் குரலால் மறக்க முடியாத டூயட் சேர்ந்திசைப் பாடலாக மலர்ந்திருக்கும். கேளாதவர்க்குக் கானங்கள் இல்லை. கேட்டால் இனிக்கும் பூப்போன்ற பாடல்தொடங்கும்போதே மந்திர உச்சாடனங்களின் ஆரம்பத்தைப் போல மனம் ஒன்றி ஒருமுகமாவதை உணரமுடியும். நெடிதுயர்ந்து கொண்டே செல்லும் மலைப்பாதைகளின் முடிவற்ற பயணமொன்றின் அந்தி நேர விரைதல்களைப் போலக் காற்றும் ஏகாந்தமுமாய்த் தன்னைத் தொடங்கும் இந்தப் பாடல்.பாலசுப்ரமணியம் எனும் ஐஸ்குரலரசன் இந்தப் பாடலைத் தன்னால் ஆன அளவுக்குத் தனித்துப் பாடியிருப்பதை கண்ணுறலாம்.

ஒரு வட்ட முகத்தில் நான் இட்ட நிலவு என்னை வா வா என்றது 
பூமாலைகளில் ஒரு மல்லிகைப்பூ என்னை வா வா என்றது 
இந்தப் பூ வனம் உந்தன் சீதனம் 
இதில் இன்பச்சண்டை செய்யவேண்டும் வா 
வண்டுகள் தட்டட்டும் 
மொட்டுக்கள் மொட்டுக்கள் திறக்கட்டும் 

(ஒரு வட்டமுகத்தில்)


பல்லவியின் இடையே மெல்ல உயரும் பாலுவின் குரலும் லேசாய்த் தன் இயல்புத்தளத்திலிருந்து ஒரு படி கீழிறங்கும் ஸ்வர்ணலதாவின் குரலும் அழகாக ஒருங்கிணைவதை உணரலாம்.

இரு கனி வனப்பே இனிக்கின்ற நெருப்பே 
தாவித் தாவி அணைப்பேன் 
கொஞ்சம் தமிழும் சொல்லிக் கொடுப்பேன்


இதில் இரண்டாவது மூன்றாவது வரிகளுக்கிடையே லேசாய்ச் சிணுங்கல் சிரிப்பை கலந்திருப்பார் பாலு.

துடிக்கின்ற அரும்பாய்த் துணையின்றிக் கிடந்தேன் பனியில் பனியில் நனைந்தேன்.
உந்தன் மடியில் மடியில் மலர்ந்தேன்


குரலால் தன்னை மலர்த்த ஸ்வர்ணலதா ஒருவரால் மாத்திரமே முடியும்.

கண்ணே இந்த இன்பம் இன்பம் என்று ஆரம்பமோ
கன்னம்சுடும் மூச்சுக் கூட இன்று ஆனந்தமோ

நான் சொல்லித் தந்தேன் நீ அள்ளித் தந்தாய் 
இனி முத்தத்தின் சத்தத்தில் ரத்தங்கள் துள்ளட்டும் துடிக்கட்டும்

(ஒரு வட்ட முகத்தில்)

குதிரைக் குளம்போசையுடன் இடையிசை தொடங்கும் லேசான வனப் பிரதேச இசையை நாடோடித் தன்மை குன்றாமல் ஒலிக்கச் செய்திருப்பார் தேனிசைத் தென்றல் தேவா. இந்த இடையிசை அத்தனை கச்சிதமாக ஒலித்து முடிக்கையில் மறுபடி சுழன்று ஒரு வட்ட முகத்தில் எனத் தொடங்கும் இடம் இந்தப் பாடலின் செமி ஜிப்ஸித் தன்மைக்கு சிறப்பான உதாரணமாக அமைகிறது.

உள்ளம் மெல்லத் தவிக்க உள்ளுயிரும் துடிக்க உனது

கணவனானேன் இன்று உதறி எடுக்கலானேன் 
கண்ணழகு பார்த்தேன் காதலித்து முடித்தேன்

மனது நிறைந்து போனேன் இனி மடியும் நிறைந்து போவேன்

உன்னைக் கண்டு இந்த ராமன் இன்று மாறிவிட்டான்
என்னைக் கண்டு காமன் இன்று எல்லை மீறி விட்டான்
நீ விட்டுத் தந்தால் நான் கற்றுத் தாரேன் 
இது ஆரம்பக் கல்லூரி ஆனந்தக் கச்சேரி தொடங்கட்டும்


முதல் சரணத்திற்கும் இரண்டாவது சரணத்திற்கும் இடையே மெலிதான வித்யாசத்தை இசையும் குரல்களுமாய்க் கலந்து நேர்ப்பித்திருப்பது இந்தப் பாடலை ஆன்மாவுக்கு அருகே தோற்றங்கொள்ளச் செய்கிறது ஆயிரமாயிரம் பாடல்களால் ஆகாத சித்துவேலை அது. பாடல் முடிவடைகையில் பல்லவி ஒலிக்கையில் ஆனந்த அழுகைக்கு நிகரான உணர்தலைக் கேட்பவர் மனதுள் சுரக்கச் செய்கிற அபூர்வத்தை ஒவ்வொரு முறை ஒலிக்கையிலும் நிகழ்த்துகிற .காலங்கடக்கும் மாயமழை இந்தப் பாடல்.

(ஒரு வட்ட முகத்தில் நானிட்ட நிலவு)


தேவாவின் மனம் விரும்புதே உன்னை போன்ற அதிரி புதிரி சூப்பர்ஹிட்டுக்கள் ஒருபக்கம் நிற்கட்டும். மேற்சொன்ன வட்ட முகத்தில் இட்ட நிலவைப் போலத் தனித்திருக்கிற தன் பாடல்களால் என்றென்றும் தமிழ்த் திரை இசையின் பேரேட்டில் பேரிருக்கும்.தேனிசைத் தென்றல் தேவ மயக்கம்.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...