அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை 0 அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல் 0 ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்! 0 விவசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் ட்விட் 0 பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 33 - அருகில் ஒரு வானம்- ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   04 , 2017  01:37:58 IST


Andhimazhai Image

அம்மாவிடம் டீவீ கூட வேணாம். வீ நீட் ம்யூசிக் என்று போராடி ஒரு டேப்ரிகார்டர் வாங்கிய பிற்பாடு தான் நேரடியாக சொர்க்கத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
கம்பெனி கேஸட்டுக்கள் விலை அதிகம் மேலும் ஒரு படத்தின் எல்லாப் பாடல்களும் விருப்பத்தினுட்படாது. எனவே பதிவு செய்கிற கேஸட்டுகள் தான் வசதிப்படும். ஹெச் எஃப் சிக்ஸ்டி என்றால் விதவிதமான பன்னிரெண்டு பாடல்கள் நைண்டி என்றால் பதினெட்டுப் பாடல்கள் பதிந்து கொள்வோம். கம்பெனி கேஸட்டின் க்வாலிடியில் பதியவே முடியாது என்றாலும் லோகல் ரெகார்டிங் மேதைகள் என்னவாவது செய்து ஒருமாதிரி கிட்டத் தட்ட சுமார் சூப்பராகவே பதிந்து தந்து விடுவார்கள். நானும் என் அக்காவும் அமர்ந்து ஒரு நோட்டில் வரிசையாக எழுது எழுது என எழுதிப் பட்டியல் தயாரிப்போம். எந்தப் பாட்டு முன்னாடி எது பின்னாடி எது ஆரம்பப் பாட்டு எது நடுப்பாட்டு என்றெல்லாம் என்னவோ இளையராஜா கம்பெனியில் சீனியர் வயலின் மேதையைப் போல நான் படுத்தி எடுப்பேன். அக்காவும் பிடிவாதத்தில் சளைத்தவள் அல்ல. ஒரு வழியாக லிஸ்டைக் கொண்டுபோய் ரெக்கார்டிங் கடையில் கொடுத்து விட்டு எப்படா கையில கிடைப்பே என்று அந்தக் கேஸட் ஞாபகமாகவே இருந்து ஜூரம் கூடியே ஜூரம் குறைந்து கையில் கிடைத்ததும் ஒவ்வொரு தடவை கேட்பதற்கு முன்னும் பின்னும் தலா பத்துத் தடவைகள் கேட்டு சலித்த பிற்பாடே வேறு வேலைக்குச் செல்வோம்.


எங்களது கேஸட் ஷெல்ஃபில் பாலு பாடல்கள் பாலு ஜானகி ஹிட்ஸ் ராஜா வாய்ஸ் மோகன் கமல் ரஜினி ஹிட்ஸ் என நாங்களே உருவாக்கின கேஸட்டுகள் அலங்கரித்தன. ஒரு கேஸட் ஒருவருட காலத்தில் கேட்டுக் கேட்டு லேசாக இழுக்கையில் அதை அழித்து விட்டு மறுபடி பதிவோம். அல்லது கைவிட்டு விட்டுப் புதிய கேஸட்டில் மறுபடி அதே கேஸட்டை உருவேற்றி இன்புறுவோம். நிற்க இளையராஜா மீதான எனது வெறிக்கும் என் அக்காவின் மரியாதைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. எல்லா ம்யூசிக் டைரக்டர்ஸ் பாடலையும் கலந்து பதியலாம் என அவள் சொல்லும் போதெல்லாம் அதைக் கவனமாகத் தவிர்ப்பேன் இதுவே எஸ்பீபாலு ஜானகி ஹிட்ஸ் எனப் பதியலாம் என முடிவெடுத்தால் அதிலும் ராஜா ம்யூசிக் செய்த பாடல்களாகவே பார்த்துப் பார்த்துக் கவனமாக சேர்ப்பேன். என் அக்காவுக்கும் எனக்கும் இதில் தான் வாய்க்கால் வரப்பு ஸ்டேட் நாட்டு எல்லைப் பிரச்சினைகள் முற்றி அகில உலக இண்டர் காலக்ஸி போர்கள் மூளும். பகை மிகும். அவள் பொதுவாகப் பாடல்கள் பாடகர்கள் என்று மட்டுமே வகைப்படுத்த விழைவாள். நான் அப்படி அல்ல. என் மனசெல்லாம் ராஜபக்தி ராஜமுக்தி ராஜயுக்தி எல்லாமும் நிரம்பி இருக்கும்.


ஒரு தடவை எஸ்.பீ.பாலசுப்ரமணியம் சித்ரா காம்பினேஷனில் பதினோறு பாடல்களை எழுதியாயிற்று. தெரிந்தோ தெரியாமலோ அவை அனைத்தும் ராஜா பாடல்கள். இது நடந்தது 1991. பன்னெண்டாவது பாடல் அதாவது கேஸட்டின் கடைசிப் பாடல். அதற்காக நான் இரெண்டொரு பாடல்களை சுட்ட அதை எல்லாம் அக்கா மறுத்தாள். அவள் மனசுக்குள் வேறோரு பாடல் இருப்பதை அப்போது தான் உணர்ந்தேன். நீ எதோ பாட்டை மனசுல வச்சிருக்கியா அக்கா எனக் கேட்டேன். பயந்து கொண்டே இதயத் தாமரை படத்ல ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் பாட்டு சேர்த்துக்கலாம்டா தம்பி.. செமை பாட்டுடா. என்றாள். அந்தப் பாடலை வேண்டாம் எனச் சொல்ல நிசமாகவே காரணம் ஏதும் அகப்படாத காரணத்தாலும் எனக்கும் அந்தப் பாடல் மிகமிகப் பிடிக்கும் என்பதாலும் அந்தப் பாடலை சேர்ப்பதற்கு சம்மதித்தேன்.


ஷங்கர் கணேஷ் இரட்டையர்கள். ஐம்பது ஆண்டுகள் எம்.எஸ்.வீ இளையராஜா இரண்டு மேதைகளின் காலகட்டத்தில் ஆயிரம் படங்களுக்கு மேல் ஐந்து மொழிகளில் இசை அமைத்த கவிஞர் வழங்கிய தேவரின் இசை இணையர். ஷங்கர் கணேஷின் சில பாடல்களை இங்கே பார்க்கலாம்.முதலில் ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்...! மௌனராகம் படத்தில் கார்த்திக் மீதான ரேவதியின் சேராமற் போன காதல் தமிழ் நிலங்களின் இளமனசுகளெங்கும் அழுந்தப் பதிந்த ரோஜாச்செடி என்றால் அவர்களுக்கு அந்தப் படத்தில் வழங்கப்படாத டூயட்டின் மீதான நிறைவேறாமை கலந்த ஏக்கம் அடுத்த காலத்தில் வெளியான இதயத் தாமரை படத்தில் அதே ஜோடியின் இணைபாடலான ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் என்கிற பாடலால் பூர்த்தி ஆனதாகக் கொள்ளலாம். இது என் யூகமல்ல. என் மனதை அகழ்கையில் கிடைத்த சர்வசம பதில்.இருக்கிறது என்பதல்ல்.இருக்கலாம் என்பது. ஆம். இருக்கலாம்.


                
இந்தப் பாடலின் எல்லா வரிகளுமே வைரஜாலம். அதிகதிகம் கேட்டுக் கேட்டு மனனம் செய்த பாடல்களில் ஒன்று. இன்றைக்கும் தன்னை எக்காலத்துக்கும் மேலெழுதிக் கொண்டே தொடர்ந்தோடுகின்ற வழமை நதி இந்தப் பாடல்.சரணங்களை முடிக்கிற இடம் மிகமிக அழகு. உயிராக மலரும் பாடல். ஏதோ மயக்கம் என்னவோ நெருக்கம் என்கிற செமி ஜிப்ஸியாகட்டும் யாரோடு யாரென்ற கேள்வி விதி வந்து விடை சொல்லுமா என்ற பாடலாகட்டும். அப்போதும் எப்போதும் பிடித்தது. கண்ணான என் கண்மணி  என்ற பாடலை எஸ்.பி.பாலு பாடினாரா இல்லை கார்த்திக்கே பாடினாரா என்ற அளவில் அட்சரப் பிசகில்லாப் பொருத்தம் மயக்கும்.


சற்றுப் பின் வந்த நாட்களில் சங்கர் கணேஷின் பல பாடல்களைக் கேட்க நேர்ந்தது. நிறையப் பாடல்கள் என் மனதுக்கு நெருக்கமாய் உணரச்செய்தன. நியாயத் தராசு எனும் படத்தில் .வானம் அருகில் ஒருவானம்  என்கிற பாடலை ஏசுதாஸ் எங்கோ தூரத்தில் பாடுகிற பாணி கவரும். ஒரு ஆழத்தில் நம்மைச் செருகித் தரவல்ல பாடல்..எழுதித் தருகிறேன் தமிழின் ஆகச்சிறந்த ஏகாந்தப் பாடல்களின் கேஸட்டு ஒன்றைத் தயாரிப்பதாக இருந்தால் இந்தப் பாடல் அதில் இடம்பெற்றே தீரும். இல்லாவிட்டால் அது ஆகச்சிறக்காது. கேஜே ஏசுதாஸின் குரலால் மட்டுமே நிகழக் கூடிய அத்யந்தமும் ஏகாந்தமும் குழைந்து மனதைத் தன்னாலான மட்டும் வயப்படுத்தும்.


அறிமுகமாகையில் நண்பர்களிடம் அவர்களுக்குப் பிடித்தமான பாடல் எதுவென்று கேட்டு அறிந்து கொள்வது என் வழக்கம். அவர்கள் சொல்கிற அப்படியான பாடல்களின் ஒரு எழுதா உபகுறிப்பாகவே அதை யார்க்குப் பிடிக்கும் என்கிறதும் கூடவே கேட்கையிலெல்லாம் நினைவுக்கு வரும் இரண்டாண்டுகளுக்கு முன்பாக தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று இந்தப் பாடலை என்னிடம் சொன்னார் தோழி தென்றல்.. இந்தப் பாடலை முழுவதுமாக மறந்து தான் போயிருந்தேன். தென்றல் இந்தப் பாடலைச் சொன்ன போதே அந்த ஃபோன் காலை உடனே துண்டித்து விட்டு இந்தப் பாடலுக்குள் மறுபடி குதித்து ஆழவேண்டும் என்ற நடுக்கம் எனக்குள் நேர்ந்தது. முழுவதுமாக மறந்த பிற்பாடு நினைவுக்கு வரும் எந்தப் பாடலின் மீதான தேடலும் அப்படித் தான் இருக்கும். விருந்து முடிந்த பிறகான தீராப்பசியெடுக்கும்  தருணம் போல அது வித்யாசவாதை.பேசி முடித்து விட்டு அன்றைக்கே ஐந்தாறு தடவைகள் கேட்டேன். இன்று வரை இன்னொரு தடவை இதிலிருந்து முழுவதுமாக மறத்தலை முயலாதிருக்கிறேன்.சில அத்தியாயங்களுக்கு முன்னால் நண்பன் மூவேந்தனுக்குப் பிடித்த வைரமுத்து பாடல்களில் ஒன்றாக இதனைச் சுட்டி இருந்தேன்.என்றபோதும் இன்னொரு முதல் தடவை எனக்குப் பிடிக்கிறதை இங்கே பகிரச் சித்தம்.


எனக்கு இந்தப் பாடலை முதல் தடவை கேட்கும் போது ஒன்றுமே புரியவில்லை. இதென்னதிது தமிழில் இப்படி ஒரு பாடலா..? எல்லாப் பாடல்களுமே ஏன் இப்படி மலர்வதில்லை என்று. இந்தப் பாடலிலிருந்து எத்தனை தூரம் ஓடினாலும் தப்பவே இயலாத கயிறொன்றின் பிடிமானத்தை அதுவே வைத்திருக்கிறது. கண்ணீரிலே சந்தோஷமா என்ற ஒரு வரி அதிர்ந்து கொண்டே இருக்கும் ஆழிப்பேரலையாய் இந்த எபிஸோடை எழுதுவதற்குள் இந்த ஒரு பாடலை மாத்திரமே இருபது தடவைகள் கேட்டிருப்பேன். இன்பச்சிறை.

வானம் அருகில் ஒரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டிப் போகும்
கானம் பறவைகளின் கானம்
வானம் அருகில் ஒரு வானம்


அதே படத்தில் வெண்ணிலா என்னோடு வந்து ஆடவா  என்ற பாடல் எத்தனை முறை பாடியிருப்பேன் எனத் தெரியாது. மனோவின் மனோகரம்.

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போறது

செப்புக்குடம் தூக்கிப்போற செல்லம்மா

நான் சொக்கிப் போறேன் தாகத்துல நில்லம்மா...
விழியே விழியே கடிதம் எழுது உன் பார்வையே

காதலின் தாய்மொழி நான் ஒரு கோவில்

 நீ ஒரு தெய்வம்  வெண்ணிலா முகம் பாடுது
வாலிபம் வாழ்க வையகம் வாழ்க அவளொரு

 பச்சைக்குழந்தை பாடும் பறவை பருவம்

 பதினாறு பனியும் நீயே மலரும் நானே

பருவராகம் பாடுவோம் செந்தாமரையே செந்தேன்

மழையே ரெண்டு கன்னம் சந்தனக்கிண்ணம்

ஒரு பாடல் நான் கேட்டேன்

முத்தம்மா வாடி முத்தம்மா தாயிக்கும் தாயான பூமி


மாலை மயங்கினால் இரவாகும் இள மங்கை மயங்கினால் உறவாகும் இந்தப் பாடல் இனிக்கும் இளமை படத்தில் பீபிஸ்ரீனிவாஸ் பாடியது. கடலோடு நதிக்கென்ன கோபம்  காதல் கவி பாட விழிக்கென்ன நாணம் இந்தப் பாடலைத் தன் ஐஸ்க்ரீம் குரலால் குழைத்திருப்பார் பாலு. ஷங்கர் கணேஷின் பெரிய பலங்களில் ஒன்று பாடல்களை மிக மென்மையான கோர்வையாகத் தொடங்கி மெல்ல வேகமெடுப்பது. ஒற்றையடிப் பாதையில் விரைவதற்காகாத மென்வேகத்தில் செல்லத் தலைப்படுகிற வாகனத்தைப் போல வித்யாசமான ஆரம்பங்களைக் கொண்டிருந்தன அவரது பாடல்கள் இந்தப் பாடல் முழுவதுமே அளவான படிகளில் சீரான வேகத்தில் ஏறிச்செல்வதைப் போலவே உணர்வெழுவது கூறத்தக்கது அர்த்தங்கள் ஆயிரம் எனும் படத்தில் இப்பாடல் இடம்பெற்றது.


 

பருத்தி எடுக்கையிலே  எனும் பாடல் தமிழின் சூப்பர்ஹிட்களில் ஒன்று அல்லவா..?  சட்டம் ஒரு இருட்டறை படத்தில் தனிமையிலே ஒரு ராகம்  ஒரு தாளம் உருவாகும் பாடல் சுரேந்தரும் ஜானகியும் பாடிய நினைவை நீங்காத இன்னொரு பாடல். ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ  இந்தப் பாடல் மீனாட்சி குங்குமம் படத்துக்காக ஜெயச்சந்திரன் பாடியது.


சங்கர் கணேஷின் பாடல்கள் பலவற்றில் இந்தி ஆங்கிலப் பாடல்களின் தாக்கம் இருந்தன. அந்தக் காலகட்டத்தில் ஓங்கி உலகளந்த பாடல்களைத் தமிழுக்காக வண்ணமாற்றித் தந்தனர் எனக் கொள்ள முடியும். அப்படியான பாடல்கள் வெண்ணிலா என்னோடு வந்து ஆடவா  என்கிற நியாயத் தராசு பாடல் யாரோ அழைக்கிறார்கள் படத்தில் பால் நிலவு காய்ந்ததே  எனும் பாடல் நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தில்  சித்திரமே உன்விழிகள்  கொத்து மலர்க்கணைகள் தேவி கூந்தலோ பிருந்தாவனம்  ஆகியவற்றை சொல்லலாம். நீயா படத்தில் எல்லாப் பாடல்களும் இனித்தன என்றாலும் எனக்கு மிகவும் பிடிக்கும் உற்சாக ததும்பலாக இந்தப் பாடலைச் சொல்வேன் "ஒரு கோடி இன்பங்கள் உருவாகும் அங்கங்கள் அசைந்தாடும் அழகுக் கோலங்கள்"
          .
  மழையே மழையே  இளமை முழுதும்
  நனையும் வரையில் வா...
  சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
  கூந்தல் மலரில் தேனை எடுக்க
  காத்துக் கிடந்தேன் கால்கள் கடுக்க
   இதயம் துடிக்க...


மழைப்பாடல்களில் முக்கியமான ஒன்றாக இதனைச் சொல்வேன். ரேடியோ ஹிட்ஸில் இதற்கென தவிர்க்க இயலாத ஓரிடம் உண்டல்லவா..?


ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்  பாடலை மறக்க முடியுமா..? ஒரு முறை தீபக் கடையில் இந்தப் பாடலைப் பாதியிலிருந்து கேட்டுவிட்டு மறந்துவிட்டேன், மறுபடி எப்போதோ நினைவுக்கு வந்து இந்தப் பாடலின் முதல் வரியைத் தேடிக் கண்டடைந்தேன். அதனாலேயே மறக்கவே இயலாத வெகு சில பாடல்களில் ஒன்று இது. ஜேஸூதாஸின் மறக்க முடியாத பாடல். உள்ளங்கைச்சூடு பட்டு மனம் கொஞ்சம் வாடும் மங்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்சம் மாறும்...வாவ் பாடல்களில் ஒன்று.


இவற்றை எல்லாம் விட என் வாழ்வின் பாடல்களில் ஒன்றாக கீழ்க்காணும் பாடலைச் சொல்வேன். காவியக்கவி வாலி எழுதிய இந்தப் பாடல் பட்டிக்காட்டு ராஜா படத்திற்காக சங்கர் கணேஷின் இசையில் உருவானது. இதனை முதல் முறை கேட்ட போது அயர்ந்து போனேன்..திரைப்பாடல் ஒன்றில் சாத்தியமாகும் உச்சபட்சத் தமிழின்பத்துக்கான சான்றாகவே இந்தப் பாடலை சுட்ட விரும்புகிறேன்.காலத்தால் செல்லரிக்க முடியாத தீர்க்கம் இந்தப் பாடல்.


 டிஸ்கோ ராப் வகைப் பாடல்களில் இசை விரைவாகவும் தொனி சோகமாகவும் அமைகிற பாடல்கள் காலம் கடக்கும். இன்னும் சொல்லப் போனால் இந்தியப் படங்களில் மேற்கத்திய வடிவமான ராப் ஐ எப்படிப் பயன்படுத்துவது என்பதில் தெளிவான முடிவெடுத்தல் இல்லாமற் போனது.வடிவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பாடல்களை உருவாக்கினார்கள். அதன் ஆன்மாவை அப்படியே பெயர்க்க விழையவில்லை. இதை விரித்தால் தனிமை அந்தகாரம் மென் சோகம் ஏமாற்றம் கைவராக் காதல் ஒருதலைக்காதல் ஏக்கம் மறைபொருளை உணர்த்துதல் சைகை சமிஞை என இத்தனையையும் உள்ளடக்கிச் செய்யப் பட வேண்டிய பாடல்வகைமை இது. வெறுமனே க்ளப் டிஸ்கோ பாடலாகவே இங்கே முனையப்பட்டு சந்தோஷம் உற்சாகம் சோகம் எல்லாவற்றின் கலந்துகட்டியான பாடல்கள் உருவாக்கப் பட்டன. என்னளவில் அறுபதுகளின் இறுதியிலிருந்து 85 வரையிலான காலகட்டத்தில் தமிழில் அற்புதமான சில க்ளப் டிஸ்கோ ராப் வகைமைப் பாடல்கள் உருவாக்கப்பட்டன.


விஸ்வநாதனின் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் இளையராஜாவின் சொர்க்கம் மதுவிலே ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே  இவற்றோடு சங்கர் கணேஷின் இந்தப் பாடலைச் சொல்ல முடியும்.


இதன் ஆரம்பமே அலாதியாய் இருக்கும். மென் சோகமும் விரைவும் கலந்த வனத்தன்மையுடனான உடனொலி கோரஸ் களுடன் தொடக்கம் அமையும்.பாலுவின் ஒப்பிலாக் குரலில் உள்வாங்கிய குரலில் ஆரம்பித்திருப்பார். முதலிரண்டு வரிகளை இரண்டாவது முறை பாடும் பொழுது லேசாய் அதன் ஸ்தாயியில் நுட்பமான வித்யாசத்தை காண்பித்திருப்பார்.பாடலின் கருப்பொருளை அதன் துவக்க இசையிலிருந்தே கேட்பவரைப் பழக்கிவிடுகிற பாடல்கள் அபூர்வமானவை மாத்திரமல்ல பெருவிருப்பப் பாடலாகவும் அவை மாறுவதைக் காணலாம். 

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்
நான் உனக்காகவே ஆடுவேன் கண்
உறங்காமலே பாடுவேன்

(உன்னை நான்


இசைக்கோர்வைகளுக்கு இணையாக ஏற்கனவே சொன்னாற் போல் வனத் தன்மை மிகுந்தொலிக்கும் உடனொலியும் இந்தப் பாடலின் இன்னுமொரு இசைக்கருவியாகவே மாறி இசைப்பதை உணரமுடியும். பப பப பப என்றொலிப்பது கேட்டலின்பத்தின் அடியாழத்தில் ஒலிப்பது ரசம்.

அன்று ஒருபாதி முகம் தானே கண்டேன்
இன்று மறுபாதி எதிர்பார்த்து நின்றேன்
(அன்று ஒரு பாதி)


சரணத்தின் முதலிரு வரிகள் சுழன்றொலிப்பது இந்தப் பாடலின் ஓட்டத்துக்கு பெரும்பலமாக மாறுவதை சொல்லமுடிகிறது. வழமையில் சரணத்தின் முதலிரு வரிகள் சுழலுகையில் நியாயமாகப் பாடலின் வேகம் குறையும் அல்லது நிதானிக்கும் அதிகரிக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்தப் பாடலின் மிதவேக சரணத் தொடக்கம் சுழல்வதை கேட்பவர்களின் ஆழ்மனதில் நிகழ்த்துவதால் மேலோட்டத்தில் அது சிறு தடையையும் ஏற்படுத்தாமல் கலந்து குழைகிறது.

கைவளையோசை கடல் பொங்கும் அலையோசையோ
என செவியாலே நான் கேட்க வரவில்லையோ


இந்த இரண்டாவது வரியில் என செவியாலே நான் கேட்க வரவில்லையோ என்பதைத் தன் கையெழுத்தைப் போல் தனித்து நிகழ்த்தியிருப்பார் பாலு.


(உன்னை நான் பார்த்தது)

வாலியின் விஸ்வரூபம் இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் கவிதை என்னும் அளவுக்கு மலர்ந்திருக்கும். கன்னித் தமிழால் உன் எழில் கூறவேண்டும் என்று கூறியவாறே என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி என மடிமீது குடியேறி முத்தாடவா என்று வினவி பதிலற்ற ஓரே பதிலான சம்மதத்தை இமைப்போழ்தில் சாத்தியம் செய்துகொள்ளும் போதைவரிகள் அல்லவா..?

கம்பன் மகனாக நான் மாற வேண்டும்
கன்னித் தமிழால் உன் எழில் கூற வேண்டும்
என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி
என மடிமீது குடியேறி முத்தாடவா

(உன்னை நான் பார்த்தது)


பொதுவாகவே மூன்று சரணங்கள் இருக்கிற பாடல்கள் எண்பதுகளின் ஆரம்பத்தில் முடித்து வைக்கப்பட்டன. காட்சிப்படுத்துவதில் இருந்த சிக்கல்கள் அல்லது அப்படியான முடிவுகள் பாடலை இரண்டாகப் பகுக்கிற வசதிக்காகவும் அப்படி இரண்டு சரணங்களாக மாற்றி அமைக்கப் பட்டிருக்கக் கூடும். இன்னொரு பிரச்சினை ஆடை மாற்றம் காட்சி மாற்றம் இடமாற்றம் ஆகியவற்றில் கிடைத்த சலுகைகளுக்காகவும் எல்லாரும் கூடாமல் பேசாமல் நிகழ்ந்த இயல்பான மாற்றமாகவும் இதனைக் கொள்ள முடியும். எது எப்படியோ பாடல்கள் அதற்கு முன்பு மூன்று சரணங்கள் பின்னர் இரண்டு சரணங்கள் என்றாகின.மூன்று சரணங்கள் கொண்ட பாடல்கள் ஹிட் மற்றும் ஃப்ளாப் ஆகிய இரண்டை நோக்கி விரைவதற்கும் அந்த ஒரு கூடுதல் சரணம் தந்த உளவியல் பூர்வ அயர்ச்சியும் காரணமாக இருந்திருக்கக் கூடும்.பின்னர் இரண்டு அதே சமயத்தில் நெடிய சரணங்கள் அத்தகைய அயர்ச்சி நேராமற் பார்த்துக் கொள்ளப் பட்டன.இதனைக் கூர்ந்து கவனித்தால் வாலி இவை அத்தனை மாற்றங்களையும் உள்வாங்கியபடி தன் பாடல்களை நிகழ்த்தித் தானும் நிகழ்ந்த பாடல் இயக்கமாகவே வாழ்ந்தார். அவர் அளவுக்கு காலத்தை உள்வாங்கியபடி நிலைத்து நின்ற கவி என இன்னொருவரைச் சொல்ல முடியாது. ஸ்பைடர் மேனைப் போல் ஒரு இழையைப் பற்றி அடுத்ததை நேர்த்தி அதனைப் பற்றி முந்தையதைக் கைவிட்டபடித் தன் கவித்துவம் குன்றாத வார்த்தைச் சிற்பங்களால் காலம் கடந்த கவிமேதை வாலி. இந்தப் பாடலின் இறுதி இரண்டு வரிகளைப் பாருங்கள் நாம் மறந்தாலும் மறவாத அழகல்லவா நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா..?இவை வெறும் வரிகளா..? பல நூறு வெற்றிப் படங்களின் எப்போதும் விரும்பத்தக்கதாய் விளங்குகிற திரைக்கதை அல்லவா..? அதனை இருவரிகளில் சொல்ல வேறாரால் இயலும்..? வாலி.

எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னைத் தொடராமல் நானிங்கு வந்தேன்
(எங்கு தொட்டாலும்)
நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா
நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா..?
(உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்)


             
வாலியைப் பற்றி இன்னும் அதிகதிகம் பேச வேண்டி இருக்கிறது. சங்கர் கணேஷ் இரட்டையரில் ஒருவர் இல்லாமற் போகாதிருந்தால் ஏ.ஆர்.ரஹ்மான் காலத்திலும் ஏன் அனிருத் காலத்திலும் கூட இன்னமும் அவ்வப்போது ஒரு பெருவிருப்பப் பாடலுடன் தங்களது முத்திரையை நிகழ்த்திக் கொண்டு தான் இருந்திருப்பர். இசை விரும்பிகளால் மறக்கவும் தவிர்க்கவும் இயலாத பெயர்கள் இசைமேதமை இரட்டையர் ஷங்கர் கணெஷ் இருவருடையது. வாழ்க அவர்கள் புகழ்.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...