அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை 0 அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல் 0 ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்! 0 விவசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் ட்விட் 0 பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 31 - ஆயிரம் மனசுப் பயிர் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   21 , 2017  01:40:43 IST


Andhimazhai Image

ஒவ்வொரு பாடகரை ஒவ்வொரு விஷயத்துக்காகப் பிடிக்கும். அதெப்படி இவர் மட்டுந்தான் எனக்குப் பிடிச்ச பாடகர்னு சொல்லமுடியும்..? இதைக் கேட்டது பூபதி. நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.அவன் அதையே இன்னும் அழுத்தமாக சொல்ல முயன்றான்.


நான் அவனிடம் பாடுகிற குரல்களைத் தனியா நேசிக்கமுடியுமா..? இசையின் பின்னணியில் வார்த்தைகளின் வரிசைகளைத் தன் குரலால் எடுத்தாளும்போது இந்த மொத்த ப்ராஸசையும் நாம நேசிப்பென்னும் சேமிப்புக்கு மாத்துறதுக்கு இசையமைப்பாளர் பாடகர் பாடலாசிரியர்னு மூணு பேர்ல யாரை வேண்டுமானாலும் உபயோகிச்சுக்க முடியும். இந்த மூன்று பேர்களில் யாருடைய பாடலாக வேண்டுமானாலும் ஒவ்வொரு பாடலும் தனித்து உணரப்படலாம். அப்படி இருக்கும் போது சில பாடல்கள் கேட்டுக் கேட்டு நம் இதயத்தின் அருகாமையிலோ அத்யந்த ஆழத்திலோ அமரமுற்படும். அப்போது தனித்து அதனை எழுதியவரோ இசையமைத்தவரோ பாடியவரோ நமக்கு இன்னும் மேலதிக விருப்பத்துக்கான ஆன்மாவாக உணர்வோம். எல்லாப் பாடல்களின் எல்லாக் கலைஞர்களையும் விரும்பவோ வெறுக்கவோ முடியாது என்பது பொதுமை. அப்பிடிப் பார்த்தால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எண்ணிக்கை அளவிலும் பெருவெற்றி அளவிலும் முதல் இடத்தை வகிக்கிற பாடகராக இருந்தாலும் எனக்கு மனதுக்கு மிகவும் பிடித்த பாடல்கள் பலவற்றை அவர் பாடி இருந்தாலும் கூட எனக்கு மிகவும் பிடித்த பாடகர் யார் எனக் கேட்டால் நான் சொல்லும் பதில் ஜெயச்சந்திரன் மற்றும் மனோ தான் என்றேன்.


அதுவரைக்கும் பேசாமல் இருந்த மகேஷண்ணன் மனோவா..? எஸ்.பீ.பாலசுப்ரமணியத்தோட நிழலாத் தான் மனோவை நினைக்கிறேன் என்றார். அதுவரைக்கும் மகேஷண்ணனுக்கும் எனக்கும் எந்த ஒரு விசயத்திலும் பொருந்தாமற் போனது கிடையாது. இளையராஜா முதல் எழுத்தாளர் சுஜாதா வரை கவுண்டமணி முதல் கமல் ரஜினி வரை எக்கச்சக்கமான மனப்பொருத்தங்கள் எங்களுக்குள் உண்டு. அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்பது அவர் மீதான மரியாதையை பலமடங்கு அதிகரித்து வைத்திருந்தது. அனேகமாக அது தான் முதல் தடவை நாங்கள் முரண்பட்டதாக இருக்கும்.


மனசுக்குப் பிடித்தவர்களுடன் முரண்படுவதும் கூட உறவை வளர்க்கத் தான் செய்யும். முரண் சமராய் மாறிவிடாத வரைக்கும்.அன்பென்பது அடிமைத் தனம் அல்லவே. எதையும் சொல்லுங்கள் சமஸ்தானமே என்று சிரமேற்கொண்டே தொடர்வதன் பேர் அல்லவே நட்பென்பது..? ஆனாலும் உள்ளே இருக்கும் மிருகம் எழுந்து வரும்போது பண்பாடு கலாச்சாரம் தொடங்கிப் பணிவு அடக்கம் வரைக்கும் அத்தனை வேலிகளையும் அறுத்தெறிந்தல்லவா முன்னகரும்..?

மகேஷ் அண்ணனுக்கும் எனக்குமான விவாதமாக அன்றைய பொழுதை ஆக்கிவைத்தது பூபதியின் சமர்த்து.ஆரம்பித்து வைத்து விட்டால் போதும். மற்றதெல்லாம் கனஜோராக நடக்கும் அல்லவா..? மகேஷ் அண்ணனுக்கு அன்றைய உரையாடல் மானப்பிரச்சனையாகி விட்டது.


நான் சொன்னது இதுதான். மனோவின் நுழைதல் காலம் எஸ்.பீ.பாலசுப்ரமணியத்தின் உச்சவுயரக் காலமாக இருந்தது தற்செயலல்ல. ஆனாலும் பாலுவின் எளிதாய்க் கிடைக்கும் மற்றொரு குரலாக மனோவைக் குறிப்பிடுவது அபத்தம் என்றேன்.


மனோ குரல் பாலுவின் குரலைப் போலவே இருந்ததா இல்லியா என்று அதிலேயே கொஞ்ச நேரம் சுற்றிக் கொண்டிருந்தார் அண்ணன்.


மனோவின் குரல் பாலுவின் குரல் வகைமையிலானது தான். ஜேசுதாஸ் குரலோடு ஜெயச்சந்திரன் உன்னிமேனன் உன்னிக் கிருஷ்ணன் மதுபாலகிருஷ்ணன் ஆகியோரை டிஎம்.எஸ் குரல் வகைமையில் மலேசியாவை வரிசைப்படுத்தலாம். சில குரல்கள் தனித்து நிற்கும் அபூர்வங்களாக இருந்தாலும் பெரும் எண்ணிக்கைக்கு மாற்றம் கொள்ளும் அளவுக்கு அவை நின்று நிரந்தரிக்காமல் போவதற்கான காரணமாகவும் அந்தத் தனித்தொலித்தலையே சொல்ல முடியும் என்றேன்.


மனோவின் பாடல்களை மொத்தமாய்ப் பொத்தாம் பொதுவில் அணுகுவது என்பது குற்றம் என்றேன். தமிழின் உச்சஸ்தாயிக்கான குரல்கள் பெரும்பாலும் எண்ணிக்கையளவில் சொற்பப் பாடல்களையே பாடவுகந்ததாய் இருந்துவிடுவதைக் கூறி அதில் தனிக்கிற ஒரே குரல் மனோவினுடையது என்றேன். (பின் நாட்களில் ஹரிஹரன் உருவானார். இது நிகழ்ந்தது 1994 என்பதை நினைவில் நிறுத்துக.) ஆஅ ஒரு மூன்று மாடிக் கட்டிடம் இருக்கிறதாகக் கொள்வோம். தரைத் தளத்திற்குக் கீழே ஒரு அண்டர்கிரவுண்ட் பார்க்கிங்கும் மூன்றாவது தளத்திற்கு மேல் மொட்டை மாடியும் இருப்பதாக அர்த்தம் கொண்டால் இந்த ஐந்து தளங்களையும் ஐவிதமான இயங்குதளங்களாகக் கொண்டால் அத்தனை இயங்கு தளங்களிலும் அனாயாசமாகப் பாடல்களைப் பாடியவர் மனோ.


போட்டு வைத்தக் காதல் திட்டம் ஓக்கே கண்மணி  என்கிற சிங்காரவேலன் பாடலாகட்டும் உலகத்துக்காகப் பிறந்தவன் நானே  என்கிற உழைப்பாளி படப் பாடலாகட்டும் அத்தனை எளிதில் பாடிவிட இயலாத உச்சஸ்தாயிப் பாடல்கள். பாபா லாலி  என்ற இதயத்தைத் திருடாதே பாடலும் அழகு நிலவு சிரிக்க மறந்ததே என்கிற மைடியர்மார்த்தாண்டன் படப் பாடலும் கீழாழத்தில் இயங்கிச் செல்வது. இடைவரிசைகளிலும் எத்தனையோ மறக்க முடியாத பாடல்களைப் பாடியவர் மனோ.


எனக்கு மிகவும் பிடித்த மனோ பாடல்களில் முதன்மையானதாக இதனைச் சொல்வேன். ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா  பூவாயி எனத் தொடங்குகிற பாடல்.


நானா பாடலியே 
நீ தான் பாடவச்ச

 

 

இந்த இரண்டு வரிகளின் அத்தனை எளிமையும் ஒருபுறமிருக்கட்டும். கேட்டால் கடந்து செல்லவே முடியாத தன் குரலால் அதனை அத்தனை தனித்துவமாக்கி பெர்ஸனலான ஒரு குரலால் அதனைக் கையகப் படுத்தி இருப்பார் மனோ.


கண்ணு  தான் தூங்கவில்லை காரணம் தோணவில்லை

பொண்ணு நீ ஜாதி முல்லை பூமாலை போடவில்லை.

கன்னி நீ நாத்து கண்ணன் நான் காத்து வந்து தான் கூடவில்லை.

கூரப்பட்டுச் சேல நான் வாங்கி வரும் வேளை போடு

ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை உனக்காக

நான் காத்திருக்கேன் பதில் கூறு பூவாயி...


(ஆசையில)


இந்தப் பாடலை மனோ பாடியிருக்கும் ஒரு உலர்ந்த குரலும் வார்த்தைக்கு வார்த்தை தன்னைத் தக்கவைத்தபடி தொடர்ந்து செல்லும் மென் சோகமும் மறக்கமுடியாத வைரமாக இதனை மாற்றித் தருவது ரசம். அதிலும் கூரப்பட்டுச் சேல என்று உயர்த்துவதை உடனே நான் வாங்கி வரும் வேளை என்று சமமாய் செலுத்தி வேறோரு திசையில் போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை என்று தனக்கே உரிய தனித்துவமாய் இப்பாடலை மாற்றும் மனோ 


உனக்காக நான் காத்திருக்கேன் பதில் கூறு பூவாயி

என்ற இரண்டு வரிகளை ஒப்பிடற்கரிய வகையில் முடித்து வைப்பார். அற்புதம்.
 

தன் மகளின் மீது தகப்பன் கொண்ட வாஞ்சையை வெளியிடும் எத்தனையோ பாடல்கள் வந்திருக்கின்றன. அவற்றின் வரிசையில் இன்னுமொரு பாடலாய்க் கலந்து மறைந்திடாமல் தனித்து ஒலிக்கும் இந்தப் பாடலை என்றைக்கு எப்போது கேட்க நேர்ந்தாலும் காரணமின்றிக் கண்ணீர் ததும்பும். காரணமாய்த் தானே நேரும் இப்பாடல். எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே என்னும் இந்தப் பாடல் எதிர்பாராமல் ஒரு திரைப்படத்திற்குச் சென்று அந்தப் படம் பிரமாதமான காட்சி அனுபவமாக மாறும் போது தான் மனம் சொல்லில் வர முடியாத இன்பத்தில் திளைக்கும். எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற படங்களை விட இப்படியான படங்கள் நம் வாழ்வெங்கும் தனி ஞாபகங்களாய்த் ததும்பும்.

 

 

பன்னிரெண்டாவது வகுப்பு பரீட்சையை எழுதி முடித்த போது பாஸ் ஆவேனா மாட்டேனா எனத் தெரியாத வதங்கல் ஒருபக்கம் இருந்தாலும் என்ன நடந்தாலும் இன்னொரு தடவை பள்ளிக்கூடம் இல்லை என்ற அளவிலான மினிமம் கியாரண்டி நிம்மதி இருந்ததென்னவோ நிசம். அந்த வருடம் ஏப்ரல் மே வழக்கத்தை விட ருசித்தது. காலேஜ் சேரவேண்டும் என்ற இத்யாதிகளுக்கு நடுவே அந்த வருடம் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியான படங்களில் புத்தாண்டன்றைக்குக் காலை ஓபனிங் ஷோவாக ரசினியார் நடித்த வீரா படத்தைப் பார்த்தாயிற்று. மதியம் சினிப்ரியாவில் அப்போது எல்லோரையும் தன் நடனத்தால் ஜல்லி பண்ணியிருந்த ப்ரபுதேவா நாயகனாக நடித்த இந்து படத்துக்குப் போகலாம் என்று நாங்கள் மூன்று பேர் அனேகமாக செந்திலும் பரணியும் என நினைவு கிளம்பினோம். வீரா முடித்து விட்டு பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து இந்து படம் நிகழ்ந்த சினிப்ரியாவுக்கு போகலாம் என்று கிளம்புகிற நேரம் ஆதியும் மாமன் சுரேஷூம் வந்து சேர்ந்தார்கள். ஒற்றைக்காலில் தன் தலைவர் விஜயகாந்த் நடித்த ஆனஸ்ட்ராஜ் படத்துக்குப் போயே தீரவேண்டும் என்றான்.


அப்போது ஒரு  முதல் வகுப்பு டிக்கட் விலை 10 ரூ என்றால் ப்ளாக்கில் பதினைந்து அல்லது 20 ரூ இருக்கும். அதுவே முதல் நாள் மன்ற டோக்கன் என்றால் முப்பத்தைந்து ரூபாயிலிருந்து ஐம்பது வரை கூட செல்லும்.படம் ஹிட் என்றால் முதல் மூன்று நாட்களுக்கு குதிரைக் கொம்பு காட்டினால் தான் டிக்கட் வழங்கப்படும். அத்தனை கெடுபிடிகளுக்கு மத்தியில் டிக்கட் கிடைக்காது மாமா என்றேன். உனக்கென்னப்பா கவலை ப்ளாக்கில் ஒரு டிக்கட் 100 ரூபாயா இருந்தாலும் நாம பாக்குறோம் என்று மதியம் ஷோவுக்கு தியேட்டர் நோக்கி சென்றோம்.


ஆதி கார்த்திக் ரசிகன். சுரேஷ் மாமன் விஜயகாந்த் வெறியன். நான் அப்போது ரஜினி ரசிகன். இந்த முப்பெரும் முரன்பாடுகளுடன் ஹானஸ்ட்ராஜ் படத்தைப் பார்த்து முடிக்கும் போது அதுவரைக்கும் இருந்த பல அபிப்ராயங்கள் மாறியிருந்தன. ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவும் விஜயகாந்த் கவுதமி மனோரமா இவர்களோடு தேவன் ஆகியோரது அளவான நடிப்பும் பலமான கதையமைப்பும் மனதுக்குள் ஒரு கனத்தைப் பதித்திருந்தது. அதிலும் அந்தப் படத்தில் வருகிற வானில் விடிவெள்ளி மின்னிடும் மின்னிடும் நேரம் பாடல் வாழ்வில் எப்போதும் ரசிக்கின்ற சரளிவரிசையில் ஒன்றாய்த் தன்னை செருகிக் கொண்டது. 
 

 

சில தனித்த பாடல்களே நினைவிலும் நிஜத்திலும் மாறி மாறி பயணிப்பதை உணர்த்துவதற்காக ஏதேனும் ஒரு குரல் சந்தோஷமாகவும் இன்னொன்று துக்கமாகவும் பாடுவது போல அமைக்கப்பட்டிருக்கும். வானில் விடிவெள்ளி மின்னிடும் மின்னிடும் நேரம் இந்தப் பாடலின் துவக்கம் மெல்லிய செமி கர்னாடிக் நோட் ஒன்றில் தொடங்கும் ஜானகி பாடும் வரிகள் பழைய ஞாபகத்தின் சந்தோஷத்தைப் பிரதிபலித்தபடி பாடல் நகரும். இடையே மனோவின் குரலில் 


எங்கே அவள் உயிர்த்துணை போனதே
இங்கே அது பழங்கதை ஆனதே
அன்பே உனை இவன்மனம் தேடுதே
உந்தன் முகம் நிழல் என ஆடுதே


இந்த நான்கு வரிகளை மனோ எடுத்தாண்டிருப்பதை உற்றுக் கவனித்தால் படத்தில் இந்தப் பாடலை உதட்டசைக்கப் போகும் நாயகபாத்திரத்தின் இயலாமையைத் தன் குரலெங்கும் படர்த்தி இருப்பதை உணர முடியும். இதே பாடலின் இரண்டாவது சரணபாதியில் ஜானகி பாடுவது நிறைவுற்றபிறகு நாயக பாத்திரத்தின் இயலாமைக்குப் பிந்தைய வதங்கலை வெகு நுட்பமாக மனோ தன் குரலில் கொணர்ந்திருப்பதை உணரலாம்.

கோலம் அதை கலைத்தது யாரம்மா
சிற்பம் உனை சிதைத்தது யாரம்மா
நண்பன் என்னும் இழிமகன் தானம்மா
அம்மா.......


இறுதியாக நாயகபாத்திரத்தின் வரிகள் வரும்.

மலர்வனம் போலிருந்த 
மகிழ்ச்சிகள் பூத்திருந்த 
குலமகள் வீடு இது 
குருவிகள் கூடு இது...
இன்னாள் அந்த மலர்வனம் காய்ந்ததே.
இங்கே ஒரு புயல்வரச் சாய்ந்ததே
கண்ணீர்மழை விழிவழிப் பாய்ந்ததே...
அன்பே........


(வானில் விடிவெள்ளி)

இந்த ஈற்றுப்பத்தி முன்பிருந்த  இரண்டு பத்திகளிலிருந்தாற் போல் சோகம் தொனிக்காமல் சூளுரைக்கும் வண்ணம் உறுதியும் இறுக்கமும் அதிகரித்த வேறோரு தொனியில் ஒலிக்கும். மனோ கேட்பவரை உருக்கி எடுத்திருப்பார் என்றால் அது மிகைமொழி அல்ல.

எனக்கு நினைவு தெரிந்த வரைக்கும்  தரிசனம் என்ற படத்தில் சூலமங்கலம் ராஜலட்சுமி இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதி டி.எம்.சவுந்திரராஜன் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி ஆகிய இருவரும் பாடிய "இது மாலை நேரத்து மயக்கம்"  என்ற பாடலை மேற்சொன்ன ஹானஸ்ட் ராஜ் படப் பாடலோடு வரிசையில் இணைக்க முடியும்.


ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி இருந்தாலும் எனக்குப் பிடித்த மனோ பாடல்களைச் சொல்லலாம் என விழைகிறேன்.

 

 

தான் பாடிய பல நடிகர்களுக்கு மூவிதமான குரல் நிலைகளில் பாடல்களைப் பாடி இருப்பவர் மனோ ரஜினிக்கு மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே என்கிற வீரா படப்பாடல் ஒரு அற்புதம். உலகத்துக்காக பிறந்தவன் நானே  என்ற உழைப்பாளி படப் பாடலும் அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ என்ற பாண்டியன் படப் பாடலும் வா வா வா அன்பே வா என்ற வேலைக்காரன் படப் பாடலும் எனக்கானவை என்பேன். கமலுக்குப் பாடிய நீ ஒரு காதல் சங்கீதமும் எனக்கு மெத்தப் பிடிக்கும். என்றாலும் என்னைப் பொறுத்தவரை பிரபுவுக்கு மனோகுரல் பொருந்தியது கச்சிதம் என்பேன் குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன் ஆனா சொல்லிக் கொடுத்தா அக்கா மக சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் ச்சம் ச்சம் அழகு நிலவு சிரிக்க மறந்ததே காதலுக்கு ராஜா சிரிக்கும் ரோஜா வாவ்வா அன்பே வா அன்பென்னும் வெண்பா சொன்னேன் வா என் மன்னவா வெற்றிக்கரங்கள் படத்தில் மேகவீதியில் நூறு வெண்ணிலா கும்பக் கரைத் தங்கய்யாவில் தென்றல் காற்றே தென்றல் காற்றே சின்னதம்பியில் தூளியிலே ஆடவந்த பாண்டித்துரை படத்தின் மல்லியே சின்ன முல்லையே சின்ன மாப்பிள்ளை படத்தில் காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல மற்றும் காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி... எனப் பல பாடல்கள் மனோகரமாய் மிளிர்பவை. 


ராஜாவின் பார்வையிலே படத்தில் ஒரு சுடர் இரு சுடர் ஒளிச்சுடர் மணிச்சுடர் சொல்லத் துடிக்கிது மனசு படத்தில் தேன்மொழி எந்தன் தேன்மொழி அமைதிப்படை படத்தின் சொல்லிவிடு வெள்ளி நிலவே பாடலும் தாலாட்டு கேட்காத பேரிங்கு பாட்டுக்கு நானடிமை கண்ணே என் கண்மணியே  மற்றும் வான் நிலா தேன் நிலா வாடைப்பூ நிலா   இந்த இரண்டும் கவிதை பாடும் அலைகள் போடு தாளம் போடு வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே  இரண்டும் புதுவசந்தம் என்றும் அன்புடன் படத்தில் துள்ளித் திரிந்ததொரு காலம். குடகு மலைக் காற்றில் ஒரு பாட்டுக் கேட்குதா கரகாட்டக்காரன் சின்னப்பொண்ணு தான் வெட்கப்படுது அம்மா அம்மாடி வைகாசி பொறந்தாச்சி.

 


ஒருநாள் நினைவிது பல நாள் கனவிது நினைக்க நினைக்க மனம் இனிக்கிறதே.. . 

கலகலக்கும் மணியோசை அதோ மேக ஊர்வலம்  ஈரமான ரோஜாவே  இங்கே இறைவன் என்னும் கலைஞன் சார் ஐ லவ் யூ சிட்டான் சிட்டான் குருவி  புது நெல்லு புது நாத்து (வசியம் போட்டு புடிச்சி பாரு அடிச்சா லக்கி ப்ரைஸூ தான்) ஆத்தா உன் கோவிலிலே சின்னஞ்சிறு பூவே உன்னைத் தொடும் போதே... ஓ ஜனனி வாடுமோ ஓவியம் தெய்வங்கள் கண்பார்த்தது  மூன்று பாடல்கள் புதிய ராகம் படத்தில் என்னருகே நீ இருந்தால் ஓ உன்னாலே நான் பெண்ணானேனே  தங்க மனசுக்காரன் படத்தின் பூத்தது பூந்தோப்பு மணிக்குயில் இசைக்குதடி பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு  மூன்று பாடல்கள்.

 

சின்னவர் படத்தில் அந்தியிலே வானம் பொண்ணுக்கேத்த புருஷன் படத்தில் மாலை நிலவே மன்மதன் கண்படும் அழகே... பாண்டியன் படத்தில் அன்பே நீ என்ன அந்த ராதையோ சின்ன மாப்பிள்ளை படத்தில் காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல காதோரம் லோலாக்கு கதை சொல்லுதம்மா.. கோயில் காளையில் சோலை கிளிகள் ரெண்டு வண்ணச்சிந்து வந்து விளையாடும்... ராக்காயி கோயில் படத்தில் உந்தனின் பாடல் என்னை எங்கோ கொண்டு செல்ல வால்டர் வெற்றிவேல் படத்தில் சின்ன ராசாவே சித்தெறும்பு மற்றும் பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து பாடலும் பொன் விலங்கு படத்தில் சந்தனக்கும்பா உடம்பிலே எங்க தம்பி படத்தில் மலையோரம் மாங்குருவி மற்றும் மானே மரகதமே ஆடிப்பட்டம் தேடிப்பாத்து பொன்னுமணி படத்தில் அரண்மனைக் கிளி படத்தில் ராத்திரியில் பாடும் பாட்டு அடிப் பூங்குயிலே பூங்குயிலே கேளு கோகுலம் படத்தில் புது ரோஜா பூத்திருக்கு இளமாலையிலே அடுக்கிக் கொண்டே போகலம். மனோ சென்ற நூற்றாண்டில் தமிழ்த்திரைக்குக் கிடைத்த உன்னதமான கலைஞன். தன் பாடல்களால் கேட்பவர் மனங்களில் அழுத்தந்திருத்தமாய்த் தன் கையெழுத்தை இட்டுச் செல்கிற பாடலரசன் மனோ. அவரது பல பாடல்கள் என் மனதுக்கு நெருக்கமானவை. ஆயிரம் மனசுப்பயிர் மனோ.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...