அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை 0 அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல் 0 ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்! 0 விவசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் ட்விட் 0 பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 30 - மேலெழுதிய மேகங்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   14 , 2017  00:23:47 IST


Andhimazhai Image

சதீஷ் ஒரு வித்யாசமான பாடல் ரசிகன். முதலில் நக்கலடிக்கிறான் என்று தான் நினைத்தேன். அப்புறம் தான் தெரிந்தது நக்கல் இல்லை. அவன் அதனை மிகவும் ரசித்து செய்கிறான் என்பது. பொதுவாகவே பாடல்களாலும் புத்தகங்களாலும் தான் என் பால்யம் துவங்கி இன்றுவரைக்குமான வாழ்க்கை நகர்ந்து வருகிறது. தங்கி இளைப்பாறுகிற ஒவ்வொரு மரமுமே பழந்தாங்கிகளாகத் தானே இருக்கும்..? அது போலத் தான் பாடல் சார்ந்த பலரையும் தேடித் தேடிச் சந்தித்தேன் என்பது ஒரு பக்கம். தானாய் வந்து காட்சி தருவது தேவ விருப்பமன்றோ அப்படி வாய்த்தவன் தான் சதீஷ்.


அமைதிக்குப் பெயர் தான் சதீஸ் அந்த அமைதியில் ஏதடி சதீஸ் எனப் பாடியவனைச் சுற்றிலும் நாலைந்து பேர் அமர்ந்து கொண்டு எங்கேயாவது அவன் தப்பு விடுகிறானா என்ற கூர்நோக்கில் கவனித்துக் கொண்டிருந்த போது தான் முதல் தடவை சதீஸ் பாடலைக் கேட்டேன். இத்தனைக்கும் ஸ்ருதி விலகாத நல்ல குரல் அவனுக்கு.ஆனாலும் தேடித் தேடி சதீஸ் பாடிய பாடல்கள் அனைத்தும் பெயர்ச்சொல் மிகுந்தொலிக்கும் பாடல்களை மாத்திரம் தான்.


ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா பாடலை ராஜா என்று வருகிற இடத்திலெல்லாம் சதீஸ் என்று போட்டுப் பாடுவான். ராகம் தப்பாமல் பாடுவானென்றாலும் பெருவிருப்பமொன்றை மாற்றி அமைக்கையில் யாருக்குத் தான் ஆத்திரம் வராது.? ஏன்யா இப்டி பாடுறே என்றால் ராஜான்றது ஒரு பேரு....சதீஸூன்றது இன்னொரு பேரு.. இதக் கேட்கும் போது ஏன்யா உனக்கு வலிக்கிது..? என் இஷ்டம்யா... என்பான்.


ஆண்பால் பெண்பால் பேதமெதுவும் இல்லாத நல்லவன் சதீஸ். எங்கும் மைதிலி எதிலும் மைதிலி எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி பாடலை எங்கும் சதீஸ் எதிலும் சதீஸ் என்று பாடுவான். அவன் உருகிப் பாடுகையில் சிரிப்பை அடக்கிக் கொண்டு சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் செய்வது தான் சரி என்று தமிழ்ப்பட வில்லனுக்கு ஜால்ரா தட்டும் நகைச்சுவை நடிகபாத்திரம் போலவே நாலைந்து ரசிகர்கள் வேறு. கேட்கவா வேண்டும்..?


சுற்றிச் சுற்றி வருவான் சதீஸ். அவனுடைய டீம் மெம்பர்கள் அவனுக்காகவே பெயர்கள் அதிகம் ஒலிக்கும் பாடல்களைத் தேடித் தேடி வந்து தருவார்கள். அதில் ரத்னபாண்டி பாட்டு புஸ்தகத்தைக் கொண்டு வந்து தருவான். கையில் அதை மடக்கிக் கொண்டு ஒருதடவை ரிகர்ஸல் பார்த்து விட்டு நேரே ரெக்கார்டிங்குக்குப் போய்விடுவான் சதீஸ். ஒரு வகையில் பாடல்கள் மீதான மிகைக் காதலில் முதலில் அவனைப் பெரிதும் வெறுத்தாலும் கூட மெல்ல மெல்ல ஆளற்ற தீவில் அகப்பட்டுக் கொண்டவன் கொஞ்ச காலத்தில் கரடியோடு நண்பனாகி இருப்பானல்லவா அது போல சதீஸின் பாடல்களை நானும் விரும்பவே ஆரம்பித்தேன்.


ஏன் இப்படிச் செய்கிறான் என்று அப்போது எரிச்சல் வந்தாலும் இதோ பாடல்களைப் பற்றிய பெரும் புராணமொன்றில் தனக்கென்று ஒரு தனி அத்தியாயத்தைப் பெறுவதற்காகவும் கூட அந்த சதீஸ் அப்படிப் பாடி இருக்கக் கூடும்.


காதல் சதீஸே எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடா கண்ணே என்று முழுப்பாடலையும் உருகிப் பாடுபவன் மிகத் துல்லியமாக ரோஜா என்ற பெயர் வரும் இடங்களிலெல்லாம் தன் பெயரை செருகி அந்தப் பெயரைக் கத்தரிக்க மறக்கவே மாட்டான். பெரியார் நிலையத்தின் காம்ப்ளக்ஸ் பஸ்ஸ்டாண்டின் மாடிப் பகுதியில் நாலைந்து கடைகள் தான் புழக்கத்தில் இருக்கும் அப்போது. எப்போதும் பூட்டிக் கிடக்கிற மற்ற கடைகளில் ஒன்றின் வாசலில் தான் சங்கமமாவோம்.பாலி டெக்னிக் மற்றும் பள்ளி மாணவர்கள் தனி டீம். கல்லூரிக் காளையர்கள் சீனியர் டீம் மற்றும் லோடுமேன்கள் எனப் பலதரப்பட்ட மக்களின் கூடுகைதேசம் அது. இரவும் பகலும் நேரத்தின் கழுத்தைப் பிடித்து நெறித்துத் தள்ள அந்த ஓரிடம் மாத்திரமே பல நாட்கள் பயனாகி இருக்கிறது.


வாடிக்கையாய்க் கூடும் எங்களைப் பார்த்தால் ரோந்து வருகிற பாரா போலீஸார் சினேகமாய்ப் புன்னகைத்துச் செல்வர். அந்த அளவுக்கு புறம்போக்கு நிலத்தைப் புழக்கத்தில் கைக்கொண்டவர்கள் போலவே நாங்கள் அழுத்தம் திருத்தமாய் அந்த இடத்தைப் பற்றிக் கொண்டிருந்தோம். அவர்களில் சதீஸ் ஒரு கொரியர் கம்பெனியில் வேலை பார்ப்பவனாக இருந்தான். தான் வேலை பார்த்த கம்பெனியில் பிற்பாடு நல்ல பதவிகளுக்கு சென்றான். பதினைந்து வருடங்களுக்கு முந்தைய கோட்டுச் சித்திரமாய் சதீஸின் சித்திரம் இன்னமும் மனதில் எழாமல் இல்லை.கூடவே அவன் பாடிய அவனுக்கான பாடல்களும்.


இதை பாடு அதைப் பாடு என்றெல்லாம் அவனிடம் நேயர் விருப்பங்கள் கேட்கப் பட்டதற்கு என்ன காரணம் இருக்கும் என இப்போது யோசிக்கிறேன். இன்றைக்கிருக்கிற நூறுவாசல்களுடனான மீடியா என்ற விஸ்தீரணமான துறையின் ஒரு பகுதியாக சினிமா அன்றைக்கு இல்லை. அதன் தேவதைத் தனங்களும் சாமான்யர்களிடத்தில் சினிமாவின் சகல உப துறைகளுக்கான உச்சாடன உபாசனைகளும் பொதுக் கூற்றில் சினிமா என்றாலே அதன் மீதான ஒரு அன்னியத் தன்மையையும் உற்பத்தி செய்திருந்தது எனலாம். அதாவது எனக்குக் கிடைக்காதது எப்படியானால் என்ன..? என்ற மனோபாவமாகக் கூட இருக்கலாம். சினிமாவின் சகலத்தையும் விரும்பிக் கொண்டே வெறுத்தும் இருந்தோம் போலும். சந்திக்க வாய்க்கிற நட்சத்திரத்தைத் தனிமையில் கைகட்டி உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பிய அதே ரசிகமனோபாவம் கூட்ட நடுவே அதே நட்சத்திரம் சிக்கினால் இடுப்பில் நறுக்கென்று கிள்ளி வைத்தது பலமுறை நடந்திருக்கிறதல்லவா..? பிடித்த நடிகரை நடிகையை எங்கனம் சொந்தம்கொண்டாடுவது என்று தெரியாத பேதமை முகமற்ற கைவிரல்களாகிக் கிள்ள முற்படுவது வினோதம்.


மாஞ்சோலைக் கிளிதானோ பாடலில் பாஞ்சாலி என்று வரும்போது பாஞ்சாலி என்று சொல்லுகிற சதீஸின் கிளி சரியாகப் பரஞ்சோதி என்ற பேர் வரவேண்டிய இடத்தில் சதீஸ் சதீஸ் என்று கத்தும். கிளியைக் கூட விடாத பிடிவாதன் சதீஸ். சாமி பாடல்களைக் கூட விடமாட்டான். எந்தப் பெயராக இருந்தாலும் தூக்கு. சதீஸ் என்றாக்கு. இது தான் அவனது சித்தாந்தவேதாந்தசபதம். சில பாடல்களை அவன் ஆரம்பிக்கும் போது இதை ஏன் பாடுகிறான். இதில் என்ன பேர் வருகிறது என்று சிந்திப்போம் நடுவில் சதீஸ் என்று வரும்போது தான் ஆஹா ஆமாம்ல இது பேர் இல்லியா சதீஸ் கரெக்டாத் தான் பாடுறான் என்ற ஷொட்டுக்கள் வேறு. கொஞ்ச நாட்கள் பாடல்கல் கேட்பதையே விட்டுவிடுவோமா என்று வெளிநாட்டில் வேலை கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறேன்.


நதியா நதியா நைல் நதியா என்ற பாடலாகட்டும் கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ பாடலாகட்டும்... பெண்பால் பெயர் மட்டும் வந்தால் அது சதீஸ் என்று மாற்றப்படும். ரெண்டும் வருமேயானால் ஆண் பெயர் சதீஷாகும். நெஞ்சிலே வாழைப்பூ குஷ்பூவாகவும் என்றுமே சதீஸ் நீ ரஜினி என்று புத்திசாலித் தனமாகப் பாடுவான் சதீஸ். அவனுக்கு ராஜாவாவதை விட ரஜினியாவதே லட்சியம்.


விக்ரம் விக்ரம் நான் வெற்றி பெற்றவன் பாடலைக் கமல் குரலிலேயே சதீஸ் சதீஸ் என்று அவன் பாடிக் கொண்டிருக்கும் போது வடமாநிலத்தில் இருந்து மொத்தமாய் சுற்றுலா வந்தவர்கள் சதீஸை பயத்தோடும் அவன் முன்னால் அமர்ந்திருந்த எங்கள் நால்வரைப் பரிதாபமாகவும் பார்த்துச் சென்றது வரலாறு.ராசா என்ற பேர் இளையராஜாவின் உச்சகாலத்தில் எத்தனைக்கெத்தனை பாடல்களில் பயன்படுத்தப் பட்டது என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அத்தனை பாடல்களின் சதீஸ் வெர்ஷனும் எனிக்கி அறியான்.என்ன செய்வது..? ராசான்னு இருந்தா சரி.சதீஸ்னு இருந்தா தப்பா என்று சமதர்மம் பேசும் எமதர்மனாகவே திகழ்ந்தான் சதீஸ்.


சில பாடல்களில் மணி நிலா போன்ற சிலவற்றின் வருகைகளை மீண்டும் மீண்டும் சல்லடையில் அலசுவான் சதீஸ்.. இந்த இடத்ல மணின்றது பேர் இல்லை. ஸோ மணின்னே வரட்டும்... இந்த இடத்ல நிலாவே வான்னு அவன் நிலாவைத் தான் கூப்டுறான். ஸோ நிலான்னே இருக்கட்டும் என்று பெரிய மனது வைப்பான். அந்தந்த பாடல்கள் எங்களோடு சேர்ந்து பெருமூச்சு விடும்.


ராசாவே உன்னை காணாத நெஞ்சு பாடலை சதீஸூ உன்னை காணாத நெஞ்சு என்று பாடிய போது தூத்துக்குடியில் இருந்து ஜெயாவைப் பார்க்க வந்திருந்த மெல்வினுக்கும் சதீஸூக்கும் ஏன்யா இப்டி மாத்துறே நல்ல பாட்டை எனக் கேட்கப் போய் பெரிய சண்டையே வந்தது.

 
உனக்கேன் வலிக்கிது என்ற சதீஸிடம் ரூவா நோட்ல காந்தி படத்துக்கு பதிலா உன் தாத்தா படத்தை வரைஞ்சிடுவியா எனக் கேட்டான் மெல்வின். என் தாத்தா படத்தை வெள்ளை பேப்பர்ல வரையுறது என் இஷ்டம். ஒரிஜினல் பாட்டு அப்டியே தானே இருக்கு.? என் இஷ்டம் நானா பாடும் போது எப்டி வேணா பாடுவேன். உனக்கென்ன என சதீஸ் திருப்ப பாரதி கண்ணதாசன் பாட்டை டைரில எடுத்து எழுதிட்டு கீழ சதீஸ்னு கையெழுத்துப் போடுவியா..? அப்டி போட்டுகிட்டா அது நீ எழுதினதாய்டுமா..? நல்ல பாட்டை எல்லாம் ஆல்டர் பண்ற உரிமை உனக்கேதுய்யா என விடாமல் பிடிவாதம் பிடித்தான் மெல்வின்.


எனக்கு பிடிச்சவங்களை செல்லப் பேர் வச்சிக் கூப்டுறதுக்கு நான் கலெக்டர் ஆபீஸ்ல மனுக்குடுத்து அனுமதி வாங்கனுமா.? எனக்குப் பிடிச்ச பாட்டு. என் பேரை நுழைச்சிப் பாடுறேன். கேக்க ஒப்பலைன்னா கெளம்பிப் போடா என்றான் சதீஸ். மெல்வின் ஆத்திரத்தில் கை நீட்ட  சட்டை அழுக்காகும் வண்ணம் தரையில் புரண்டெல்லாம் அடித்துக் கொண்டார்கள். அந்தப் போரில் எல்லாவகையிலும் வென்றது சதீஸ் தான்.என் இஷ்டம்.நீ வேணா ஊருக்குக் கிளம்பு என்று சொல்ல இளையராஜாவின் தீவிர ரசிகனான மெல்வின் உடனே தூத்துக்குடிக்குக் கிளம்பிப் போனவன் கல்யாணங்களுக்கு அழைத்தால் கூட சதீஸ் வந்தா நா வரமாட்டேன் என்ற அளவுக்கு அதை மறக்காமல் இருந்தான்.


சதீஸ் தன்னைத் தாண்டுகிற பாடல்களை இரண்டாகப் பிரித்து பெயரற்ற பாடல்களை புறந்தள்ளிப் பெயர்கள் கொண்ட பாடல்களை எல்லாம் தனியே எடுக்கிறான். அந்த அத்தனை பெயர்களையும் நீக்கி விட்டுத் தன் பெயரெழுதி அந்தப் பாடல்களை எல்லாம் தனதாக்கிக் கொள்கிறான். எப்போதும் சதீஸ் உடனே இருக்கும் ரத்னபாண்டி செல்வம் ஆகியோரிடம் விளையாட்டாகக் கேட்டேன் ஒருதடவை.


ஏன்யா இதே பாடல்களை எல்லாம் வேறெங்கயாவது கேட்டா எப்டி இருக்கும் உங்களுக்கு..?


ரத்னபாண்டி சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொன்னது தான் ஸ்வாரசியம்.


நீ வேற ரவீ... காரணமே இல்லாம சிரிச்சிட்டிருப்பம்..ரேடியோ டீவீல வர்றப்பன்னா கூட சமாளிச்சிக்கலாம்னு வய்யி... இந்தா இருக்கானே செல்வம் பய...இவன் போனமாசம் செஞ்ச கூத்து தெரியுமா..? இவன் வீட்டு பக்கத்ல ஒரு துஷ்டி.செல்வம் பயலும் வேலைக்குக் கெளம்புறதுக்குள்ற போயிட்டு வந்துரலாம்னு போயி வீட்டு வாசல்ல சேர்ல உக்காந்திருந்திருக்கான். பெரிசா ரேடியோ குழாய் கட்டி வரிசையா சோகப்பாட்டு மாத்திரம் போட்டிட்ருந்திருக்காங்க... உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கண்ணா .. இவனுக்கு அதைக் கேட்டப்ப நம்ம பய்யன் பாடுனது ஞாபகம் வந்து கெக்கே பெக்கேன்னு தன்னை மறந்து சிரிச்சி அப்பறம் அந்த வீட்டுக்காரங்கிய ஒரு மாதிரி முறைச்சிட்டானுங்க.. இவனுக்கு எப்டி சமாளிக்கன்னு தெரியாம அந்தப் பாட்டு முடியறதுக்குள்ற கெளம்பி வந்திட்டான். இதெப்டி..?


சதீஸ்ராஜ சோழன் நான் என்று ஆரம்பிக்கும் போது மாத்திரம் அவனை நோக்கி திருவிளையாடல் சிவாஜி தன் சொல் கேளாமல் டாடி வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் சாவித்ரியை கால்டாக்ஸி வருவதற்குள் முறைத்துத் தன் சிகப்பு நெற்றிக் கண்ணால் எரிப்பாரே அப்படி எரித்து விடுகிறாற் போல் பார்ப்பேன். அந்த ஒரு பாடலை மாத்திரம் தான் என்னால் காப்பாற்ற முடிந்தது என்பதை இன்றைக்கும் பகீர்கலந்த திருப்தியோடு நினைத்துக் கொள்வேன். ராஜராஜசோழனும் நானும் ஒரே ராசி நட்சத்திரம்  வேறு. இந்த உதவியை நான் செய்யாமல் யார் செய்வார்கள்..?


         போதும் சதீஸ்... இனி சிவக்குமார்.


மார்க்கண்டேயர் அண்ட் கோ உரிமையாளரும் சின்னமார்க்கண்டேயர்கள் கார்த்தி சூர்யா இருவரின் தந்தையாருமான சிவக்குமார் ஒரு காலத்தில் மோகனுக்கு அடுத்து முரளிக்கு முந்தைய பாடல் ராஜாவாகத் திகழ்ந்தார். அவரும் நதியா ரேவதி சுரேஷ் மோகன் உள்ளிட்ட பலரும் பாடல்களாலேயே மொத்த வாழ்க்கையும் நகர்ந்து முடியும் பல படங்களில் நடித்தார் சிவக்குமார். அவரது ஹிட் பாடல்களை மாத்திரம் தனி பென் ட்ரைவ் இல் சேமித்து விட்டுத் தைரியமாக நெடும்பயணம் சென்று திரும்பலாம்,பாதை தீர்ந்தாலும் பாடல் தீராது.எனக்குப் பிடித்த சில வித்யாசமான சிவக்குமார் பாடல்கள்

1.நிலவு சுடுவதில்லை படத்திற்காக நாளும் என்மனம் என்கிற இந்தப் பாடலுக்கான இசையும் பாடிய ஜேசுதாஸ் மற்றும் ஜானகியின் குரல்களும் இரண்டு வினோதங்களாக முகிழ்ந்து நாளும் என் மனம் என்ற சொல்லாடல் வரும் போதெல்லாம் மனம் லேசாய்க் கசங்கும்.. எப்போது கேட்டாலும் இனிப்பில் விழுந்த எறும்பைப் போலாவது நிசம்.2. இளஞ்சோலை பூத்ததோ ஒரு மௌனம் தீர்ந்தது சுதியோடு சேர்ந்தது ஒரு தாளம் ராகம் சொல்ல சந்தம் பொங்கும் மெல்ல மாயமல்ல மந்திரமல்ல என்று மாயமந்திரன் எஸ்.பீ.பாலசுப்ரமணியம் பட்டை கிளப்பி இருப்பார். ராஜபோதை குரல் வடிவ மது3 . காதல் விளையாட கட்டிலிடு கண்ணே தூயமகனாட தொட்டிலிடு கண்ணே எண்ணங்களின் இன்பநடனம் கன்னங்கள் மீது அந்த நிலை எழுதும்... பாலு சுசீலா


4. ஒருநாள் உன்னோடு ஒருநாள் உறவாடும் நெஞ்சம் ரகசியமான ஒரு குரலும் அத்யந்தமான மொழிதலும் ததும்புகிற பாடல்5.  ஒரு காதல் தேவதை ஒரு கன்னிப்பூவிதை இவள் ராஜவம்சமோ ரதிதேவி அம்சமோ..? சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு படத்தின் இந்தப் பாடல் முழுவதும் உலர்ந்த குரலால் பாடி இருப்பார் பாலு.6.  ராகம் தாளம் பல்லவி தீர்ப்புகள் திருத்தப்படலாம். வாணி ஜெயராம் பாலு 
7. நிஜங்கள் உன் காதொடு காதொடு சேதி சொன்னாலென்ன இசை எம்.பீ.ஸ்ரீனிவாசன் பாலு ஷைலஜா8.  நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் சாட்டை இல்லாத பம்பரம் ஜானகி மலேசியாவின் உற்சாகக் குரல்கள்  இப்பாடலை ரசிக்க வைக்கும்.


சிந்து பைரவி பாசப்பறவைகள் பாடாத தேனீக்கள் இல்லம் ஒருவர் வாழும் ஆலயம் அக்னி சாட்சி ஆனந்தராகம் ஆணிவேர் ஏணிப்படிகள் உனக்காகவே வாழ்கிறேன் நான் பாடும் பாடல் மனிதனின் மறுபக்கம் இசைபாடும் தென்றல் யாரோ எழுதிய கவிதை உன்னை நான் சந்தித்தேன் கற்பூர தீபம் பௌர்ணமி அலைகள் இன்று நீ நாளை நான் நெல்லிக்கனி நெருப்பிலே பூத்தமலர் சாமந்திப்பூ மச்சானைப் பாத்தீங்களா  எனப் பற்பல படங்கள் சிவக்குமார் நடித்து பெருவிருப்பப் பாடல்களைத் தாங்கிய வண்ணம் வெளியாகி உள்ளன. எல்லா நடிகர்களுக்கும் பாடல்கள் அமைந்துவிடாது. அந்த வகையில் சிவக்குமார் பாடல் ராஜாக்களில் ஒருவர் என்றால் அது தகும். அவரது பாடல்கள் நினைவெங்கும் தீராமற் பொழியும் கானமழை.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...