அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை 0 அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல் 0 ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்! 0 விவசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் ட்விட் 0 பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் – 29 - ஆயிரம் சிறகுகள் வேண்டும் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   06 , 2017  22:56:15 IST


Andhimazhai Image

"வானம் எனக்கொரு போதிமரம்..
நாளும் எனக்கது சேதி தரும்.."


இந்த இரண்டு வரிகளை முதல் தடவை கேட்கும்போது எனக்கு ஒரு நாலைந்து வயதுதான் இருக்கும். லேட் மேரேஜ் செய்த என் அப்பா அம்மா மீதான கோபமாகவே மாறியது நான் பிறப்பதற்கு முந்தைய சிறுகாலம் மீதான இழத்தல். வைரமுத்து எழுதிய பாடல் என்பதைத் தனித்து நோக்க ஆரம்பித்ததும், நல்ல, மனதை ஈர்க்கக் கூடிய எந்த வரி என்றாலும் அது வைரமுத்துவாய்த்தான் இருக்கும் என்றே நம்ப விரும்பினேன். இளையராஜாவா வைரமுத்துவா என்றானபோது யாருமே கட்சியை உடைத்துக் கணக்கெடுக்க வில்லையென்றாலும், கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்ட எம்.எல்.ஏ போலல்லாமல், சர்வ சுதந்திரமாய் இளையராஜாவைப் பற்றிக் கொண்டது என் மனசு, அவ்வப்போது லேசாய் வழிமாறி, தடம் மாறி, இடம் மாறி வைரமுத்துவின் மொழியின் மடியில் புதைந்து அழுது, சிரித்து, சிலிர்த்ததும் இன்னொரு பக்கம் நடந்தது.

 

எனக்குள் வைரமுத்து மீதான காதலைப் புகுத்தியது "பனிவிழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்..." பாலகுமாரன் உச்சந்தொட்ட காலங்களில், தன் நாவல்களின் தலைப்பாகவும், சம்பவங்களாகவும், உப வசனங்களாகவும் 80களின் அந்தக் காலகட்டப் பாடல்களைப் பயன்படுத்தினார். "இரும்புக் குதிரைகள்" என்று ஒரு நாவல். அந்த நாவலில் "பனிவிழும் மலர்வனம்"  பாடல் கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவே இடம்பெற்றிருக்கும். இந்தப் பாடல் வெறும் பாடலல்ல. பாலுவின் குரலாலும், ராஜாவின் இசையாலும் நெய்யப்பட்ட இசையாடையை என் பால்ய மனதின் மீது இறுகப் போர்த்திக் கொண்டவன் நான்.


"கைகள் இடைதனில் நெளிகையில் 
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்துக் கண்கள் மூடும்"

 

என்கிற இந்த வரிகளை, லேசான எள்ளல் சிரிப்புத் தொனிக்க பாலு குழைந்திருப்பார். 


என் வாழ்வின் ஆரம்ப வருடங்களில், என் பதின்ம வயதுகளில் நான் அதிகமுறை கேட்ட பாடல் இது. காதலில் காதல் இணை இரண்டு பேர் முதன் முதலில் பார்த்துக் கொண்ட தருணம், பார்த்ததற்கான காரணம், பார்க்கவாய்த்த இடம், பார்க்கச் செய்தவர்கள் மீதெல்லாம் குன்றா நன்றியுடன் கூடிய ஒரு ஞாபகப் பிடிவாதம் இருக்கும் அல்லவா..?. அந்த வகையில் இளையராஜாவின் பல நல்ல பாடல்கள், இளையராஜா மீது வெறி கொள்ளச் செய்த பாடல்கள் பலவற்றின் பின்னே இன்னொரு காரணமும் இருக்கும். அது வைரமுத்து.

வைரமுத்துவின் பாடல்கள் பிறருடைய பாடல்களிலிருந்து மூன்று கூறுகளில் விலக்கம் கொள்கின்றன
.
1. மொழியின் ஜரிகைப் புது பிரயோகங்கள்
2. இசை மீதான சொற்களின் ஆதிக்கம்.
3. மாற்றற்ற சொல்லாடல்களின் துல்லியம்.

"இளையநிலா பொழிகிறது.." என்கிற ஒரு பாடல். அதன் பின்னணி இசை குறித்துப் பத்து மணிநேரம் பேசலாம். கிடாரின் ஓங்கிய ஒலியைத் தனி ஆவர்த்தனமாய் முழங்கச் செய்து, கூடவே இயைந்து அடங்கித் தொடரும் ட்ரம்ஸ் இசை ஒரு சிப்பந்தியைப் போல உடன் வரும் என்றாலும் இந்தப் பாடலின் ஞாபகம் இசையாகி ஒரு நதியாய், வரிகளாய் ஒரு நதியாய், இரண்டாகிக் கலைவதை இன்றுவரை உணரலாம். இதன் ஆச்சரியங்கள் என்னவென்றால் பொதுவாகவே இசை என்பது குறளி. தன் முன் நிற்பவைகளைத் தானாக்கித் திரிய விடும் செப்பிடு தன்மை இசையின் முதல் ஜாலம். அதிலும் ஒப்பற்ற போதைக்கு நிகரான பின்னணி இசை இந்தப் பாடலுக்கானது. இவையெல்லாவற்றையும் ஒருபுறம் இருத்தித் தங்களுடைய இருப்பை வெளிப்படுத்துவதென்பதே பாடல் வரிகளுக்கு ப்ரம்மப்ரயத்தனம் என்கிற போது, தனி நதியாய்த் தன்னைத் துண்டு செய்து தனித்துக் கிளைத்தது எங்ஙனம் என்பது புரியா வித்தை, சொல்விந்தை. வைரமுத்து.


"வரும் வழியில் பனி மழையில்
பருவநிலா தினம் நனையும்"
"வான வீதியில் மேக ஊர்வலம்"
"விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்"

நன்கறிந்தவை முன்பறியாத மொழியில் காணக் கிடைப்பதாக இப்பாடல் நிகழ்கின்றது. காலம் கடந்து நிலைக்கிற இந்தப் பாடல் முழுவதுமாய் வெற்று அழகியல் மாத்திரமே என்று புறக்கணிக்கிறவர்களும் இருப்பர். என் கூற்று இது வெற்று அழகியல் இல்லை அழகியலின் உச்சம் என்பேன்.எத்தனை பாடல்கள் அவற்றின் வரிகளுக்காகவே நேசித்திருக்கிறேன். அவற்றில் சில இங்கே...

"ஆஹா கள்ளக் கனியே அள்ளச்சுகமே 
வெட்கப்பறவை விட்டுத் தருமோ
(சிட்டுக்குருவி வெட்கப்படுது)"

"இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே"
(அந்திமழை பொழிகிறது)

"வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்"
(இது ஒரு பொன்மாலைப் பொழுது)

"அடிக்கடி மலர்க்கொடி
நேரம் பார்க்குமோ"
(ஆனந்த தாகம்...)

மின்னலைப் பிடிக்க வேண்டும் 
மேகத்தை உடுத்த வேண்டும் 
வானத்தில் பறக்க வேண்டும் 
ஆயிரம் சிறகு வேண்டும்

(வந்தது வசந்த காலம் பூமியில் புதிய கோலம் புதியவன் )

மழைப்பூக்களே நனைந்தபின்னும் வேர்க்குதே 
மலர் அம்புகள் உயிர்வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு

(பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்)

எப்பேர்ப்பட்ட சிச்சுவேஷனாக இருந்தாலும், யாருடைய படமாக இருந்தாலும், கேட்பவரை அயரச் செய்யும் சில வரிகள், சில வார்த்தைகள் கொண்டு, நிஜவாழ்வில் தோன்றவாய்க்காத அபத்தம் ஒன்றை முழுவதுமாகத் தன்வயப் படுத்துகிற அதிபுனைவாகவே தன் பாடல்களைச் செய்தார் வைரமுத்து, பாடல்களுக்குள் கவிதைகளாகவே இவை நிகழ்ந்தன என்றால் மறுப்பதற்கில்லை.

புன்னகை மன்னன் படத்தின் பாடலில் 
"பாறை மீது பவளமல்லிகைப் பதியம் போட்டதாரு..." என்பார். 

கன்னியின் மேனி வேர்க்குதே 
ஜன்னலின் கம்பி பார்க்குதே (ஆனந்ததாகம் இவள் கூந்தல்)

நீ மல்லிகைப் பூவைச்சூடிக் கொண்டால் ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும் 
நீ பட்டுப்புடவை சூடிக் கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்

(விழியில் விழுந்து இதயம் நுழைந்து)

ஆசை நதி மடை திறக்கும் பாஷை வந்து கதவடைக்கும் (ஆராதனை இளம்பனித் துளிவிழும் பாடலில்)

வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே 
யாரும் வந்து நடக்காத சாலை நீயே

வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம் 
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம் (பூவில் வண்டு கூடும்)

விரல்கள் விருந்து கேட்குமே 
ஒரு விளக்கு விழித்துப் பார்க்குமே 
(நதியில் ஆடும் பூவனம்)

பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து 
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்கள் பூத்து
ஏதோ மோகம் ஏதோ தாகம்

காவல் நூறு மீறி 
காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூவேலைகள் 
உன் மேனியில் பூஞ்சோலைகள்

(தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி)

நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம்
முகவேர்வைத் துளியது போகும் வரையிலும் தென்றல் கவரிகள் வீசும்


ஒரு ஸ்பின் பௌலருக்குக் கட்டுப்பட்ட கிரிக்கெட் ஆட்டத்தைப் போலவே தனக்கு வழங்கப்பட்ட இசைக் கோர்வைகளைத் தன் மொழியால் வளைத்து நெளித்தார் வைரமுத்து. ஒரு பாடலை எங்கே சுழற்றவேண்டும் என்பது அவரது மேதமை. அநேக பாடல்கள் துவக்கத்தில் சமர்த்தாய்த் துவங்கின. ஒரு ஸ்பின் பந்தை எப்படிச் சுழற்றவேண்டும் என்பதைப் போலவே ஒரு பாடலை எந்த இடத்தின் சிதறடிக்க வேண்டும் என்பதில் வைரமுத்து மகா சமர்த்து.

"மந்தையில நின்னாலும் நீ 
வீரபாண்டித் தேரு..." 

இந்த இரண்டு வரிகளில் முதல் மரியாதை படத்தின் சிவாஜி கதாபாத்திரத்தின் குணநல நியாயதர்ம சாரம் அனைத்தையும் புரிவதற்காகும்.

"அடுப்புக் கூட்டி அவித்த நெல்லை
விதைத்து வைத்தது யாரு..."

 
இந்த வரி புன்னகை மன்னன் படத்தில் இந்தப் பாடலின் இந்த வரி வரைக்குமான கதையை நேர்த்தியாகச் சொல்லி நியாயம் கேட்க வல்லது. 


"கடற்கரையெங்கும் மணல்வெளியில்
காதலி காலடி தேடினான்"

துவங்குவதற்கு முன்பே முடிந்துபோன ஒரு பொருந்தாக் காதலை, தீராத நோய்மையை, இரக்கமற்ற நியதியை, அர்த்தமற்ற அலைதலை, இத்தனை உறுதியாய்ச் சொல்லமுடிகிற வைரமுத்துவால் மட்டுமே

"மோகனம் பாடும் வேளையிலும் 
சிந்துவின் ராகம் பாடினான்"


என்று பூர்த்தி செய்தும் வைக்க முடிந்தது.

காதலுக்கான அதுவரையிலான தமிழ்த் திரைப்பாடல்களின் இயற்றல்திசையை அதன் போக்கை மாற்றியமைத்த இரண்டாமவர் வைரமுத்து. முதலாமவர் கண்ணதாசன். கவிஞர் வாலி தாசமுத்து இருவர் காலத்திலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட இன்னொருவர். இது ஒப்பிடல் நோக்கல் அல்ல.மூன்றுமே வைரங்கள். தன்மை வெவ்வேறு. வைரமுத்து தன் பாடல்களை மெல்லிய உரையாடல்களாக ஊடல்பொழுது சம்பாஷணைகளாக உற்சாகப் போழ்தின் பிதற்றல்களாக முறையிடல்களாக கோரல்களாக துன்பம் இன்பம் என எல்லாவற்றையுமே பேசிக்கொள்கிற இயல்பெனும் சூத்திரத்தை முடிந்த வரைக்கும் உட்படுத்தினார். கண்ணதாசன் பரீட்சார்த்தமாக சில பாடல்களை இப்படி முயன்றிருக்கிறார் என்றாலும் இயல்புவாழ்வின் மொழி நோக்கி பாடல்களைத் திருப்பியவர் வைரமுத்து தான் எனலாம். மேலும் வைரமுத்து கதாபாத்திரங்களின் குணாம்சங்களுக்கும் அறிதல் அறியாமைகளுக்குள் உட்பட்ட சொற்களைக் கொண்டே தன் பாடல்கள் முழுவதையும் அமைத்தார். The ideologies and intellectuality of the characterization as well as the innocence and ignorance of them too.  இந்த நான்கு மால்களில் வைரமுத்து காட்டிய கச்சிதமும் சொல்லாடல்களுடைய தேர்வுமே அவரது பெருவாரிப் பாடல்களின் உள்ளே உப அற்புதங்களைக் கொண்டுவந்து சேர்த்தன.


இந்த அத்தியாயம் வைரமுத்துவின் ஒருபகுதிப் பாடல்களைக் கையாள்கிறது. அவரது கிராமியப் பாடல்கள் இரண்டாயிரத்துக்குப் பிந்தைய பெருவாரிப் பாடல்கள் மற்றும் அவரது சமூக நோக்கப் பாடல்களைத் தனியே பின்னர் வேறொரு பத்தியில் பார்க்கலாம். இசையிட்ட இடங்களை எல்லாம் தன் வரிதொட்டு நிரப்பினார் வைரமுத்து.தனக்கான தனி அடையாளத்தை எத்தகைய நெரிசலிலும் ஏற்படுத்தித் தந்த தன் வைரவரிகள் அவரே சொன்னாற் போல் ஆயிரம் சிறகுகளாகவே நேர்ந்தன. தன் கைப்பொருளாகப் பாடல்களை மாற்றும் வைரமுத்துவின் ஆதிவிழைதல் கூட  இளையராஜாவுடனான பாட்டிசைக் கூட்டை ஆறேழு வருடங்களில் உடைத்துப் போட்டிருக்கக் கூடும். வைரமுத்துவின் மொழிபலம் கிராமம் சார்ந்த தொன்ம இருளில் வெளித்தெரியாது ஊடுபாவியிருக்கும் சொல்வேர்கள் அவற்றின் பாடற்பயன்பாடுகள் அவற்றைப் பின்னர் பார்க்க இருக்கிறோம். காதலின் பரப்பைத் தன் அற்புதமான சொல்லாடல்களால் எல்லாப் பாடல்களினூடும் விரித்துப் பார்த்தவர் வைரமுத்து. அவரது பல நூறு பாடல்கள் அவற்றுக்கான சாட்சியங்கள்.
 
சிலிர்க்கிறேன் வெந்நீராற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில் என்னை நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

மனதில் உனது ஆதிக்கம் இளமையின் 
அழகு உயிரை பாதிக்கும்
விரகம் இரவை சோதிக்கும் கனவுகள்
விடியும் வரையில் நீடிக்கும்
ஆசையென்னும் புயல் வீசிவிட்டதடி 
ஆணிவேர்வரையில் ஆடிவிட்டதடி 
காப்பாய் தேவீ...

வயல்வெளியில் பலகனவை விதைக்கிறதே சிறுபறவை நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இருபிறை வளருது ஓமைனா ஓமைனா

உந்தன் ஆவியை நீ வெறுப்பதா 

தூரம் நின்று நானும் பார்த்தேன் 
என்னை நானே காவல் காத்தேன் 
----
தென்றல் என்னை முத்தமிட்டது பாடலிடை வரி

ஓ வெண்ணிலாவே வா ஓடிவா...நாளை இந்த வேளை எமை நீ காணவா பால் போல வா.. 


இந்தப் பாடலை என் அத்தை வீட்டுக்குச் சென்ற போது முதல்முறை கேட்டேன். அந்தக் கேஸட்டை மன்றாடி அவரிடமிருந்து இரவல் பெற்று வந்தேன். இன்றைக்கும் என் பால்யத்தின் ஏதோ ஒரு தினத்தை ஒரு மறக்க முடியாத பகல் பொழுதை இன்னும் சொல்லில் வந்துவிடாத பற்பல தூறல்துளி ஞாபகங்களை எல்லாம் எனக்கு இன்னொரு முதல்முறை நேர்ப்பிக்கிறது இந்தப் பாடல்.


ஆயிரம் நிலவே வா படத்தில் இடம்பெறுகிற அந்தரங்கம் யாவுமே எனத் தொடங்கும் பாடல் வைரமுத்து எனக்குத் தந்த மாபெரும் நனைதலின்பம் என்றும் இனிக்கவல்லது. இதன் வரிகள் வைரமுத்துவின் உச்சபட்சக் கவிதாச்சர்யம் என்பேன்.

அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே...

அன்று ஒருநாள் அந்த மயிலாள் 
ஆடை நனைந்தாள் 
காயும் வரையில் தோகை உடலில் 
என்னை அணிந்தாள்
நாணமே சேலையானதும் போதையானதும் 
என்னென்று சொல்ல..?


இதே பாடலின் அடுத்த சரணம் முழுவதுமே அதகளம் தான். இந்திய மொழிகளில் வேறெதிலேயும் இப்படியான ராஜபோதையைப் பாடலாக்கி இருப்பார்களா சந்தேகமே..காதலை தானம் கேட்டேன் என்ன ஒரு தாராளம்..?
நான் அவள் தோளில் சாய்ந்து அள்ளியது ஏராளம்

தாவணிப் பூக்களை சோதனை செய்கிறேன்.
எத்தனை மச்சங்கள் கேள் அதைச் சொல்கிறேன்

பாவை உடலில் கோடி மலரில்
ஆடை அணிந்தேன்
ஆடை அணியும் சேதி முழுதும்
நானும் அறிந்தேன்.

மீதியை நான் உரைப்பதும் நீ ரசிப்பதும்
பண்பாடு இல்லை

(அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே..)


இந்தப் பாடலை உற்று நோக்கினால் இதன் அசாதாரணமான சிச்சுவேஷன் மற்றும் ஒரே பாடகர் இரு குரல்களாய்க் கிளைத்துத் திரையில் ஒரே நடிகர் இரண்டு பாத்திரங்களாய் வகுபட்டுத் தெரிய நேர்ந்த பாடல் இது என்பது முதல் விஷயம்.இதன் ஆரம்ப வரியே அத்தனை ரிஸ்கானது அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே என்ற ஆரம்பத்துக்குப் பிற்பாடு ஒரு வரி சேர்ந்தாலும் ஒவ்வொரு வரியின் சேர்மானத்தின் போதும் ஆபாசத்தை உரசிவிடக் கூடுமோ என்கிற இடரேற்புடனேயே இதன் வரிகளுக்கான தோற்றுவாய் இருக்கும்.அப்படிப் பட்ட சூழலில் ஒரு முழுப்பாடலை விளிம்பெனும் மஞ்சள் கோட்டில் அனாயாசமாகத் தன்னை நடத்தியபடி வென்று வந்து ஒளிர்ந்து மிளிர்வார் கவிப்பேரரசு வைரமுத்து.


முடிகிற இரண்டு வரிகளில் தான் காலகாலக் குறும்பையும் கவிஜாலத்தையும் ஒருங்கே பொழிந்திருப்பார். மீதியை நான் உரைப்பதும் நீ ரசிப்பதும் பண்பாடு இல்லை.

 
வைரமுத்து தன்னை நிகழ்த்திக் கொண்ட மொழியாச்சர்யம்.

சர்வ நிச்சயமாக எண்பதுகளில் நுழைந்த எழுத்துத் தென்றல் வைரமுத்து தான். அவரது காலத்தின் காதல் பாடல்கள் என் பால்யத்தின் என் பதின் பருவத்தின் எத்தனையோ தனிமைகளைக் கனவுகளை நிறைவேறாமப் போன காதல்களை இன்னபிற இன்னபிறவற்றை எல்லாம் நிரப்பித் தந்தன.வைரமுத்து, திரைப்பாடல் வடிவத்தில் தன்னால் இயன்ற அளவு பாடல் கேட்கிற ஒரு பெருங்கூட்டத்தை செம்மையும் செழுமையும் படுத்தி முன்னகர்த்தி மேலேறச் செய்த வகையில் மறக்க முடியாத ஆளுமையே. 

 

 

என்னுடைய "வாழ்தல் இனிது" நூலில் "பொத்திவெச்ச மல்லிக மொட்டு" பாடல் ஒரு அத்தியாயமாகவே மாறியிருக்கும்.  இதே "புலன் மயக்கம்" தொடரில் வைரமுத்துவின் "என் நெஞ்சில் தூங்கவா நிலாவே...", "நெஞ்சமெல்லாம் காதல்...", "நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்..." போன்ற பல பாடல்கள் ஏற்கனவே எடுத்தாளப்பட்டுள்ளன. இனியும் இது நிகழும். இன்னும் வைரம் மின்னும்.வைரமுத்துவுக்குச் சின்னதாய் ஒரு பூங்கொத்து இந்த அத்தியாயம்.(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...