அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை 0 அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல் 0 ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்! 0 விவசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் ட்விட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் 28 - நீயென்ற தூரம் வரை – ஆத்மார்த்தி எழுதும் தொடர்.

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   27 , 2017  23:09:04 IST


Andhimazhai Image

மதுரை பெரியார் நிலையத்தின்  எதிரே  நான்கு புறங்களிலும் வணிக வளாகங்கள் அமைந்திருக்கும். அதன் ஒரு பகுதியின் பெயரே காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் தான். பாரதி புத்தக நிலையம் என்ற ஒன்று முதலில் தரைதளத்தில் சின்னக் கடைகள் இரண்டில் இயங்கியது பிறகு மாடிக்குப் பெயர்ந்தது. பல ரஷ்ய இலக்கியங்களைப் பதிப்பித்தவராகவும் அறியப்பட்ட திரு துரைப்பாண்டி அவர்கள் அதனை இயக்கி வந்தார். அந்தக் கடை தான் என் பல அகக் கண்களைத் திறந்து தந்தது. அங்கே தான்  நான் கோணங்கி, உமாமகேஸ்வரி, எஸ்.ரா உள்படப் பலரையும் முதல் தடவை சந்தித்தேன். அப்போது தான் எழுதத் தொடங்கி இருந்த அ.முத்துக்கிருஷ்ணனும் நானும் சேர்ந்தே அங்கு வருவோம் அல்லது அங்கே வெவ்வேறு நேரங்களில் வந்து கூடிக் கலைவதும் இல்லாவிடில் ஒன்றாகத் திரு நகர் திரும்புவதும் நடக்கும். என் பை இத்யாதிகளை அங்கே தந்துவிட்டு ஊரைச் சுற்றிவிட்டுத் திரும்புவேன். சில நேரங்களில் எனக்கு வந்து சேரவேண்டிய பொருட்கள் அல்லது புத்தகங்கள் சிலபலவற்றை அங்கே துரைப்பாண்டி தோழரிடமாவது அல்லது அந்தக் கடையை கவனித்துக் கொள்பவரிடமாவது தந்து செல்வர். நான் சென்று கவர்ந்து கொள்வேன்.1994 முதல் 2007 வரைக்கும் கூட அந்தக் கடைக்கு வழக்கமாகச் சென்று வருவேன்.எப்போதென நினைவில்லை அந்தக் கடை தற்போது இயக்கத்தில் இல்லை.


ஒரு தினம் நானும் பரணியும் அங்கே சென்றோம். இன்னுஞ்சில நண்ப வரத்துக்களுக்காகக் காத்திருந்ததாய் ஞாபகம். காலை பத்து மணிக்கு அப்படி ஒரு மழை பொழியும் என்பதை அம்மழைக்கு மாத்திரமே தெரியும். அப்படிப் பொழிந்தது மழை. அங்கே கிடந்த தினத்தந்தி பேப்பரை புரட்டிக் கொண்டிருந்த பரணி என்னிடம் கேட்டான்..


"ரவீ படத்துக்குப் போவமா..? "நான் எட்டிப் பார்த்தேன். ப்ரஷாந்த் மற்றும் ஷாலினி நடித்த மலையாள ரீமேக் படமான பிரியாத வரம் வேண்டும் படம் அன்றைக்கு வெளியாவதாக முதல் பதாகை அங்கே ஒளிர்ந்தது.


எனக்கும் பரணிக்கும் வெவ்வேறு காரணங்களாய் ப்ரஷாந்தும் ஷாலினியும் நடித்த அந்தப் படம் மீது விருப்பம் தோன்றியது இயல்பே. நானென் பதின் பருவத்தில் ரசித்த முதல் யுவ நாயகன் ப்ரஷாந்த். இது ஒரு காரணம் என்றால் என் வாழ்வில் எனக்குக் கிடைத்த முதல் நடிகரின் புகைப்படம் பிரஷாந்தினுடையது. அன்புடன் எனப்பொருள் வரும் வண்ணம் வித் லவ் என்றெழுதிக் கையொப்பமிட்டு எனக்குத் தெரிந்த திருக்குமரன் ப்ரதரின் அண்ணன் அவர் பெயர்கூட ஏதோ திருமாறன் என ஞாபகம் அவர் கடிதமெழுதி ப்ரஷாந்த் அதற்குப் பதிலும் தன் கையொப்பமிட்ட புகைப்படத்தையும் அனுப்பி இருந்தார். அதனை என்னிடம் காட்டின திருக்குமரன் அண்ணன் அந்தக் கடிதத்தை பத்திரம் செய்தவர் ப்ரஷாந்த் கையொப்பமிட்ட புகைப்படத்தை மாத்திரம் எங்கேயோ தொலைத்து விட்டதாக என்னிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டார்.
எனக்கு வருத்தம் இல்லாமல் இல்லை. ஆனாலும் அந்தப் புகைப்படத்தை நான் தானே அவரிடமிருந்து ட்ரான்ஸ்ஃபர் கம் ப்ரமோஷனில் என் அந்தரங்க டைரிக்கு மாற்றிக் கொண்டேன். அதை அவரிடம் அன்றைக்கு சொல்லவில்லை. பிற்பாடு ஒரு தடவை கல்யாண விருந்தொன்றில் நான் சொன்னபோது எனக்கும் தெரியும். பாவம்னு உன்னை விட்டேன் என்றார். நல்லமனிதர். வன்முறை எதற்கும் தீர்வாகாது என்பதில் ஆழ்ந்த பிடிமானம் கொண்டவர்கள் இப்படித் தான் பக்குவம் அடைந்திருப்பார்கள்.

நிற்க. இப்பவும் வைகாசி பொறந்தாச்சு படமும் அதன் கதைப்படி இந்தோ பிரிட்டிஷ் நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வை ஊக்குவிக்கும் காதல் காட்சிகளும் (நாயகி காவேரி ஒரு ஆங்கிலோ இந்தியள் ஹிஹி) அதன் தெவிட்டாத தேவா பாடல்களின் தேன் கலந்த இசையும் இன்னபிறவற்றை எல்லாம் தாண்டி ப்ரஷாந்தை எனக்கு ரொம்பவும் பிடித்தது. செம்பருத்தி படத்தை ஜஸ்ட் பத்து தடவைபார்த்திருக்கிறேன். ரோஜா வேறு என் கனவுகளிலெல்லாம் பச்சக் என்று ஒட்டிக்கொண்டிருந்தார்.

அப்படியான ப்ரஷாந்த் ரசிகனான நான் பின் நாட்களில் ஜீன்ஸ் பார்த்தேன் ரசித்தேன் தமிழ் என அவரது ஹிட் படங்களை எல்லாம் தியேட்டர்களில் சென்றே இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகள் ரசித்தவன். ஆணழகன் படத்தைக் கூட ரசிக்க முடிந்த எனக்கு பிற்காலத்தில் பொன்னர் சங்கர், புலன் விசாரணை 2, மம்பட்டியான் ரிடர்ன்ஸ் வித் சிக்ஸ்டீன் பாக் போன்ற படங்கள் வரும் என்று சத்தியமாய்த் தெரியாது. என்னை நம்புங்கள். நான் ரசித்த பிரஷாந்த் சென்ற நூற்றாண்டின் சென்றாயன் என்பதைக் கவனத்தில் கொள்க.

பரணிக்கு ஷாலினி மேல் ஒரு வணக்கத்துக்குரிய மாண்புமிகு போற்றல் உண்டென்பதால் இருவரும் அடை மழையை எச்சரித்துவிட்டு தியேட்டருக்குச் சென்றோம்.


ஒரு படம் எப்படி இருக்க வேண்டும்? ". பிரியாத வரம் வேண்டும்" படம் முடிந்த பிற்பாடும் கதை காட்சிகள்  பாடல்கள் இன்னபிறவற்றின் மல்லிகைப் பூ பிடிகளிலிருந்து வெளியேவரவே முடியாமல் போனது. ஒரு நாளல்ல கிட்டத் தட்ட பத்து நாட்களுக்கு மேல் அதே ஒரே ஞாபகமாக இருந்ததும் அடுத்தடுத்து நாலைந்து தடவைகள் அந்தப் படத்தைப் பார்த்ததும் நடந்தேறியது. வாழ்வில் வெகு சில படங்களுக்குள் தான் நம் மனசு தொலைந்து நம்மைத் தொலைக்கும்.


அந்தப் படத்தின் பாடல்கேஸட்டை படம் பார்த்து விட்டுத் திரும்பும் போதே வாங்கிக் கொண்டாயிற்று. வழக்கம் போலத்தான். தேயத் தேயத் தேய்த்தோம் கேட்டுக் கேட்டுக் களித்தோம்.

எல்லாப் பாடல்களுமே இத்தகைய ஆன்மாவைக் கொண்டிருப்பதில்லை. உலகமெங்கும் கோடிக்கணக்கான பாடல்கள் தண்ணீரெங்கும் பல்கிப் பெருகுகிற மீன்களைப் போலத் தோன்றுகின்றன. ஒரு கணத்தின் பாதியிலும் பாதி காற்றில் துள்ளி கரையோரம் கால்நனைத்துத் திரிகிற மனித கரங்களில் பட்டு மறுபடியும் நீர்திரும்பி அளைதல் தொடர்கிற கள்வமீன்களுக்கான கணக்கீட்டை யார் செய்வது..?... கடினம் என்பதால் அப்படியான கணக்கீடே இல்லாதிருப்பது நியாயமா..? அந்த மீன்களின் அந்தக் கள்ளத் துள்ளல் பொய்யா புனைவா..? இல்லையல்லவா..? அது போலத் தான் அரிதினும் அரிதாகத் தங்களை நிகழ்த்தியபடி பிறக்கின்ற இப்படியான பாடல் வரிகள். பிரிவொன்றை சந்தித்தேன் 
முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் 
திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை 
நீளாதோ எந்தன் குடை  
நான் என்ற நேரம் வரை 
தூவாதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ அன்பே 
அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே 
அன்பே

முதல் முறை இந்த வரிகளைக் கேட்டபோது என் உடம்பெல்லாம் அதிர்ந்தது. ஒரு கோடி முறை கேட்டாலும் தமிழ் தந்துபார்க்கிற அதிர்வு வேறேதிலும் வாய்க்காது. நீ என்ற தூரம் நான் என்ற நேரம் இந்த இரண்டு போதாதா..? காதலுக்குத் தனி நாடைத் தருகையில் அதற்கான தேசியகீதமாய் நிரந்தரித்து ஒலிக்க..?

(பிரிவொன்றை)-
ஒரு வரி நீ .. ஒரு வரி நான்
திருக்குறள் நாம் உன்னை சொன்னேன்
தனித் தனியே பிரித்து வைத்தால்
பொருள் தருமோ கவிதை இங்கே
உன் கைகள் என்றும் நான் துடைக்கின்ற கை குட்டை
நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை
என்னை நானே தேடிப் போனேன்
பிரிவினாலே நீயாய் ஆனேன்


இந்த முதல் சரணத்தின் முதல் வரியிலேயே மனசு முழுக்கச் சரணடைந்திருக்கும் தொடரும் சரணமுடிவென்பது ஒரு தேவாலயத்தின் நற்சொற் பெயல்மழை போலல்லவா மனங்களைத் துகள்களாக்கித் தன்வயப்படுத்தி மறுபடிக் கோர்க்கும் மாயவித்தையாய்ப் பரிமளித்திருக்கும்..?

(பிரிவொன்றை )
கீழ் இமை நான் மேல் இமை நீ
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே
மேல் இமை நீ பிரிந்ததனால்
புரிந்துகொண்டேன் காதல் என்றே
நாம் பிரிந்த நாளின் தான்
நம்மை நான் உணர்ந்தேனே
நாம் பிறந்த நாளில் தான்
நம் காதல் திறந்தேனே
உள்ளம் எங்கும் நீயே நீயே  
உயிரின் தாகம் காதல் தானே

(பிரிவொன்றை சந்தித்தேன்)


என்ன சொன்னாலும் இந்தப் பாடலுக்கும் அது தந்த உணர்வுகளின் சாரத்தை எண்ணி முடிப்பதற்கோ அல்லது சொல்வழி பெயர்ப்பதற்கோ இயலவே இயலாது என்பேன். அறிவுமதி என்னும் ஞானக்கவிஞன் எனக்குள் ஒரு தேடலாய்த் தீராத விருப்பமாய் நுழைந்தது இந்தப் பாடலின் வழி தான்.


இன்னுமோர் பாடல் வித்யாசாகரின் இசையில் அறிவுமதி எழுதிய தோம் தோம் தித்தித்தோம் என்கிற பாடல் பின்னால் வித்யாசமாய் ஒரு சாகரம் அத்தியாயத்தில் வர இருப்பதால் இப்போது விட்டுவிடலாம்.

அறிவுமதி என்றதுமே நினைவில் முந்துபவை ராமன் அப்துல்லா (முத்தமிழே முத்தமிழே ) மற்றும் சிறைச்சாலை பாடல்கள் (மன்னன் கூரைச் சேலை), (ஆலோலங்கிளித் தோப்பிலே ). இளையராஜாவின் பெருவிருப்பக் கவிஞர்களில் ஒருவர் அறிவுமதி. எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ யாரோ அறிவார் பாடல் சேதுவில் தமிழகத்தைத் துயரால் தாலாட்டி இருளால் ஒளியூட்டிற்று. தேவதை படத்தின் தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் பாடலும் அறிவுமதியின் பேர் சொன்ன இன்னொன்று எனலாம்.

சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் ஒன்று காற்றிலே நடந்தேனே என்ற பாடல் ஆதிபகவன் படத்தில் அறிவுமதி அண்ணன் எழுதி யுவன் இசை அமைத்து உதித் நாராயணும் ஸ்வேதா பண்டிட்டும் பாடியது. கேட்டால் அந்த தினத்தை இந்தப் பாடலின் காலடியில் தொலைக்க வேண்டியது தான். வேறு வழியே இராது.

பூப்பூவாய்ப் புன்னகைக்கும் இவள் என்கிற பாலா என்ற படத்தின் பாடலை எப்போது கேட்டாலும் மனசு குழைந்து மயங்கிக் கலையும்.அறிவுமதி அண்ணனுடனான பரிச்சயம் அன்புத்தம்பி எர்னெஸ்டோ என்கிற பயஸ் மூலமாக கிடைத்தது. சந்திப்பென்பது வெறும் திரைவிலகல் தானே..? சிந்தை ஒருமித்தவர்களுக்குச் சந்திப்பென்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவான தேவை தான். அடிக்கடி அண்ணனுடன் செல்பேசியில் உரையாடுவது வழக்கமாயிற்று. ஆனந்தவிகடனில் நட்பாட்டம் எழுதின போது நீங்களும் வாசிச்சு நானும் வாசிக்கவா என்றேன் ஜில்ஜில்ரமாமணி குரலில்.


என் நட்பாட்டக் கவிதைகள் பலவற்றை அண்ணன் சிலாகித்தது போதுமானதாகவே இருந்தது எனக்கு. ஆனாலும் அப்போதெல்லாம் சந்தித்ததில்லை. பிற்பாடு சில ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் அண்ணன் சௌபாவின் அறிமுகம் கிட்டிற்று. அவரது நெருங்கிய நண்பர் அறிவுமதி அண்ணன். சௌபாவை பார்க்க வரும்போது சொல்றேன் நாம சந்திக்கலாம் என்றார் அண்ணன். அன்னக் கொடியும் கொடிவீரனும் என்ற திரைப்படத்தின் பாடல் பேழை வெளியீட்டை மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தில் நிகழ்த்தினார்கள். அந்த விழாவை ஒட்டி அறிவுமதி அண்ணன் வந்திருப்பதாக ஃபோனில் சொன்னார் சௌபா. பட்டாம்பூச்சி மனதின் படபடப்போடு சென்றேன்.


நான் எதிர்பார்த்த சித்திரத்தின் முப்பரிமாண தினமல்லவா அது..? அறிவுமதி அண்ணன் பேசிக் கொண்டே இருந்தார். நான் அவரையே உற்று நோக்கியபடி இருந்தேன். எனக்குப் பிடித்த வரிகளுக்கு நெருக்கமாக எனக்குப் பிடித்த தமிழுக்கு இணக்கமாக என் ஆன்மாவை வருடிய பாடல்களின் சிகரவுயரத்தைத் தொட்டாற் போன்ற உணர்தல் என்னை ஆட்கொண்டது.


சற்றைக்கெல்லாம் "உங்க கூட ஃபோட்டோ எடுத்துக்கணும் அண்ணா" என்றேன். நானும் உங்க கூட எடுத்துக்கிறேன் ஆத்மார்த்தி என்று கேலியாய்ச் சொன்னவாறே கட்டி அணைத்தபடி ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தார் அண்ணன். என் அங்கலாய்ப்பை தேநீர் சாப்பிட்டுத் திரும்புகிற வழியில் கேட்டேன்.


"ஏன் அண்ணே தீவிரமா தொடர்ந்து பாடல்கள் எழுத மாட்டேன் என்கிறீங்க..? எழுதலாமே..?" என்றேன். ஒரு நிமிடம் உள்வாங்கியவர் சொன்னார் .


"ஆத்மார்த்தி...நான் தீவிரமாவும் தொடர்ந்தும் பாடல்கள் எழுதிட்டு தான் இருக்கிறேன். தீவிரமும் தொடர்ச்சியும் எண்ணிக்கை சார்ந்ததல்ல. எண்ணம் சார்ந்ததுன்னு நம்புறேன்.." என்றார். அது தான் அறிவுமதி. தமிழ் தனக்காக நியமித்துக் கொண்ட அதிகாரபூர்வ அலங்காரக் கலைஞன். தன்  அத்யந்த சொற்களால் நாளும் தமிழை அர்ச்சிப்பவன். தமிழுக்கும் தமிழனுக்கும் எங்கேயாவது சிறுமை நேர்கிற சூழல் வருமாயின் தன் குத்தூசி மொழிகளால் கர்ச்சிப்பவன். தமிழாலானவன்.


வாழ்க அண்ணன் அறிவுமதி.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...