![]() |
புலன் மயக்கம் 27 - கன்று தவிப்பதைப் போல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்Posted : செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 21 , 2017 08:13:38 IST
![]() ஒரு மழைநாளில் இதை முதன்முதலில் கேட்டபோது எனக்குப் பதின்மூன்று வயது இருக்கும். சொந்த ஊருக்குச் சென்று திரும்பும் வாழ்கால ரயில் போல எனக்குள் சதா அலைந்துகொண்டே இருக்கிற ஞாபகமீன் இந்தப் பாடல்,
"ஈரமான ரோஜாவே.. என்னைப் பார்த்து மூடாதே...". ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே கண்ணீல் என்ன சோகம் போதும் ஏங்காதே... என் அன்பே ஏங்காதே (ஈரமான)
ஒரு சூப்பர் ஹிட் பாடலாக ஈரமான ரோஜாவே எல்லாத் தரப்பாருக்குமான பாடலாக மலர்ந்து அதிரி புதிரி ஹிட் ஆனது. எப்போதைக்குமான பாடல்களைத் தொகுத்தால் இன்றும் இந்தக் கணமும் ரசிக்கப்பட்டு வருகிற பாடல்களில் ஒன்றெனவே இது தங்கும்.
என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகும் உன் வாசலில் எனைக் கோலம் இடு இல்லை என்றால் ஒரு சாபம் இடு பொன்னாரமே...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து
முடிக்கிற இடத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மனதும் மூடித் திறந்து முடிந்து தொடங்கும்.
(ஈரமான)
நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை (2) என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை என் காதலி... உன் போல என்னாசை தூங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி
ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே என் அன்பே ஏங்காதே
(ஈரமான)
மூவேந்தனுக்கும் எனக்கும் பொதுவான பல ரசனைகளில் ஒன்று பாடல்கள்.
மூவேந்தனும் நானும் கல்லூரியில் ஒன்றிணைந்தோம். உண்மையில் அவன் என்னைவிட ஒருவயது மூத்தவன். வேறொரு கல்லூரியில் (சிவகங்கையில்) படித்த ஒரு வருடத்தைப் புறக்கணித்துவிட்டு மன்னர் கல்லூரிக்கு வந்து சேர்ந்தான். காலம் சிலரைச் சிலருக்காக உற்பத்தி செய்யும். சில சந்திப்புகள் எதேச்சையானவையாகத் தோன்றும். வணிகவியல் படித்த நானும், இயற்பியல் படித்த அவனும் மிக எதேச்சையாக நண்பர்களானோம்.
வைரமுத்துவின் பெரும்ப்ரியன் மூவேந்தன். "தண்ணீர் தேசம்" புதினத்தில் 'தமிழ்ரோஜா' எனும் கதாபாத்திரப் பெயரைத் தனக்கென்றுசுய ஒதுக்கீடு செய்து கொண்டான். இந்தப் பெயர் அவனுடைய புனைப்பெயர். அந்த நேரத்தில் எனக்கு வேறொரு புனைப்பெயர் இருந்தது. ராஜபாரதி என்று நானும், தமிழ்ரோஜா என்று அவனும் கையொப்பமிடுவதற்காகவே எழுதிக் கொண்ட கடிதங்கள் ஏராளம். நேரில் பார்த்துக் கொள்ளுகிற இருவர் கடிதங்களும் எழுதிக்கொண்டதென்பது இன்றைக்கு அபத்தத்தின் அனர்த்தமாகத் தொனிக்கக் கூடும். இதை ஒரு முறை எங்கள் இருவரையும் குறிப்பிட்டு "பாத்துக்கற தூரத்துல இருந்துகிட்டு ஏண்டா லெட்டர் எழுதிக்கறீங்க?" என்று கேட்ட ஒருவரிடம், "உதடுகள் என்பவை பேசுவதற்காகவும்தானே? போலவே, கடிதம் எழுதிக் கொள்வதற்காக வெவ்வேறு ஊர்களில் சென்று வசிக்க வேண்டுமா நாங்கள்?" என்று கேட்டிருக்கிறேன்.
தனக்கெனத் தேர்ந்த வாசிப்பும், முத்து முத்தான கையெழுத்தும், பல விஷயங்களில் தீர்க்கமான சிந்தனையும், பிடிவாதமான அணுகுமுறையும், இன்னபிறவும் கொண்ட மூவேந்தனென்கிற தமிழ்ரோஜா எனக்குள் எழுத்தார்வத்தைத் தூண்டினவன். என்னை எழுதவைத்துக் கொண்டே இருந்தவன். என் பதில் கடிதங்களுக்கான முன் கடிதங்களை எழுதியவன். இவற்றையெல்லாம் தாண்டி எழுத்தாளனாகவே ஆகியிருக்க வேண்டிய அளவுக்கு எழுத்து வன்மை வாய்த்தவன். வாழ்க்கை எல்லோரையும் வாழ விடுகிறது என்றபோதும் தன்னை ஆள விடுவதில்லை. மூவேந்தன் மற்றும் ஒரு குடும்பஸ்தனாக மாறிப் போனது என்னளவில் பெரிய ஏமாற்றம் என்றாலும் இன்றைக்கு எழுதவந்த பிற்பாடு பல்வேறு சூழல்களில் பாலகுமாரன், பாமரன், சுபவீரபாண்டியன், அறிவுமதி, கலாப்ரியா, வண்ணதாசன், மனுஷ்ய புத்திரன், இயக்குநர் வசந்த், நடிகர் சார்லி, இயக்குநர் சீமான் என்று ஆத்மார்த்தியாய் என்னை நான் தெரிவிக்க வாய்க்கிற சந்திப்பின் சந்தர்ப்பங்களில் எல்லாம் மூவேந்தனுக்குப் பிடித்தவர்கள் என்பதில்தான் தொடங்குகிறது பழைய ஞாபகம் இந்த ஞாபகத்தில் வந்து சேர்கிற எல்லாப் புள்ளியும்.
தொலைந்தோ மரித்தோ போவதுதான் பெருந்துக்கம் என்றில்லை. தன்னைக் கலைத்து இருந்தபடியே காணாமற்போவது யாவற்றிலும் குரூரம் என்பேன்.
"இன்று பௌர்ணமி
கிணற்றில் நீரெல்லாம் என் கண்களில்" என்று கவிதை எழுதிய ஒருவன், கல்யாணம், பிள்ளை குட்டி என்று தன் சொந்தக் கடையில் அடுத்தவர் கொண்டுவந்து தருகிற காகிதங்களை நகலெடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
"ஏன் இப்படிச் சுருங்கினாய்" என்று அவனை அடிக்கிற மானசீகப் பிரம்பு, மறுமுனையில் என்னையும் வீழ்த்துகிறது மிக பலமாக. வைரமுத்து என்றாலே மூவேந்தன் ஞாபகம் வரும் அளவிற்கு அவரது பாடல்களை, புதினங்களை, புனைவுகளை, பேட்டிகளை, அவரது குரலை, நடை உடை பாவனையை, எல்லாவற்றையும் மிகவும் ரசித்தான் மூவேந்தன். வாய்ப்புக் கிடைத்தால் இவர்கள் இருவரையும் சந்திக்க வைப்பது என்னொரு கனவு. இந்த அத்தியாயத்தில் தாங்கள் சந்தித்துக் கொண்டதை இவர்கள் இருவராலும் இனி மறுக்கவே முடியாது.
எத்தனையோ படங்களை நானும் அவனும் பார்த்துவிட்டுத் திரும்பும்போது "இந்தப் பாட்டு வைரமுத்து எழுதினது" என்பான். படம் அப்போதுதான் ரிலீசாகியிருக்கும். சில பாடல்களை முதல் தடவை கேட்டிருப்போம். இன்னது வைரமுத்து, இன்னது அவரில்லை என்று பிரித்துச் சொல்லுவதில் அவனொரு பாடல் விஞ்ஞானி. இதுவரை தப்பியதே இல்லை என்பது உபதகவல்.
"தீ தீ தித்திக்கும் தீ" என்கிற "திருடா திருடா" படப் பாடலும், "காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே" என்கிற "ரோஜா"படப் பாடலும், "மின்னலே நீ வந்ததேனடி" என்கிற "மே மாதம்" படப் பாடலும், "தங்கத் தாமரை மகளே" என்கிற "மின்சாரக் கனவு"படப் பாடலும், "வெண்ணிலாவின் தேரிலேறி" என்கிற "டூயட்"படப் பாடலும்
மூவேந்தனுக்கு மிகவும் பிடித்த வைரமுத்துவின் ரகுமான் பாடல்கள்.
"பொத்தி வெச்ச மல்லிக மொட்டு" என்கிற "மண்வாசனை" படப் பாடலும்,
"பூவே இளைய பூவே" என்கிற "கோழி கூவுது" படப் பாடலும்,
"கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே" என்கிற "கடலோரக் கவிதைகள்" படப் பாடலும்,
"பூமாலை வாங்கி வந்தான் பூக்களில்லையே" என்கிற "சிந்து பைரவி" படப் பாடலும்,
"ராசாவே உன்ன நம்பி" என்கிற "முதல் மரியாதை" படப் பாடலும்
"ஒரு பொன்மாலைப் பொழுது" என்கிற "நிழல்கள்" படப் பாடலும்
"நியாயத் தராசு" படத்தில் வருகிற "வானம் அருகில் ஒரு வானம்" பாடலும், "பார்த்தேன் ரசித்தேன்" படத்தில் வருகிற "எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ" பாடலும்,
"வசூல் ராஜா" படத்தில் வருகிற "கலக்கப் போவது யாரு" பாடலும்,
"இதயத் தாமரை" படத்தில் வருகிற "ஒரு காதல் தேவதை" பாடலும்,
"நேருக்கு நேர்" படத்தில் வருகிற "மனம் விரும்புதே உன்னை" பாடலும்,
"வானமே எல்லை" படத்தில் வருகிற "நீ ஆண்டவனா" பாடலும்,
"டிஷ்யூம்" படத்தில் வருகிற "நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்" பாடலும்,
"வாகை சூட வா" படத்தில் வருகிற "சர சர சாரக்காத்து வீசும்போது" பாடலும்,
"வா இந்தப் பக்கம்" படத்தில் வருகிற "ஆனந்த தாகம் இவள் கூந்தல் பூக்கள்" பாடலும் மூவேந்தனுக்குப் பிடித்த வைரமுத்துவின் பல்வேறு இசையமைப்பாளர்களின் பாடல்கள்.
"அலைபாயுதே" படம் கேசட் வந்திருந்த நேரம். அதில் வருகிற "சினேகிதனே" பாடல் தொடக்கத்தில் ஒரு தொகையறா வரும்.
“உன் நித்திலப்பூ மடியில்
காற்று நுழைவதுபோல்
இன்று பின்னிரவில் கன்று தவிப்பதைப் போல் மனம் கலங்கிப் புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில்
கர்வம் அழிந்ததடி.. இந்த ஒரு தொகையறாவுக்குத் தமிழ்நாட்டைச் சுற்றியிருக்கும் தண்ணீருடன் சேர்த்து வைரமுத்துவுக்குத் தந்தேவிட்டான் மூவேந்தன். இதன் ஒவ்வொரு சொல்லையும் சிலாகித்தபடி நானும் அவனும் உரையாடிக் கொண்டிருந்த எங்களுக்குள் இந்தப் பாடலின் சந்தத்துக்கு நானும் அவனும் பாடல் எழுத ஒரு போட்டியற்ற தீர்மானம் வந்தது. சரணத்தின் ஈற்று வரிகளாக நான் எழுதிய மூன்று வரிகளை ஒரு நாலாயிரம் முறை சிலாகித்திருப்பான் மூவேந்தன்.
பிறிதொரு நாளில் நானும் அவனும் மதுரை காந்தி ம்யூசியம் பகுதியில் டூ வீலரில் சென்றுகொண்டிருந்தபோது நாலாயிரத்து ஒன்றாவது முறையாக அந்த மூன்று வரிகளைச் சிலாகித்தவன், "இது ஏனோ எனக்குள்ள ஓடிகிட்டே இருக்கு ரவி" என்றான். தன்னுடைய டைரியில் தனக்குப் பிடித்த வரிகளை ஒரு ஓவிய நேர்த்தியுடனான தன் கையெழுத்தில் எழுதியிருப்பான் மூவேந்தன். அந்த மூன்று வரிகளை எழுதிய பக்கத்தில் வேறு எதையும் எழுதாமல் வைத்திருந்ததாக ஞாபகம்,
"மெல்ல மெல்ல
என்னை வெல்ல தெரிந்தே தோற்றேன்."
"வைரமுத்து எழுதுனதுலேயே எது உனக்கு ரொம்பப் புடிக்கும்" என ஒருநாள் கேட்டேன். "பெற்றவனிடம் உன் குழந்தையின் எந்தப் பருவம் உனக்குப் பிடிக்குமெனக் கேட்கலாமா" என்று கேட்டான். "இருந்தாலும் பிறந்த குழந்தையின் பாதத்தைப் போல ஒன்று ப்ரிய உச்சத்தில் ஈர்த்திருக்குமல்லவா" என நான் கேட்டேன்.
"நானே எனக்கு நண்பன் இல்லயே உன்னால் ஒரு சொந்தம் வந்ததே..."
(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)
|
|