அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை 0 அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல் 0 ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்! 0 விவசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் ட்விட் 0 பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் 26 - இசை நதி இமான் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   14 , 2017  21:33:25 IST


Andhimazhai Image

இந்த நூற்றாண்டின் இசை துல்லியம் யாருடையது..? இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின்னால் இரண்டு டஜன் இசை அமைப்பாளர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் பலரும் இன்றைக்கு முன்னணி இசை அமைப்பாளர்களாக இருக்கிறதும் வெளியாவதில் பாதிப் படங்களை தமக்குள் பங்கிட்டுக் கொள்கிறதையும் காணமுடிகிறது.


ரஹ்மானுக்கும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் கார்த்திக் ராஜாவுக்கும் ஹாரீஸ் ஜெயராஜூக்கும் அடுத்து இசை அமைக்க வந்தவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் ஒவ்வொருவரை ஒரு சில காரணங்களுக்காக வியக்கத் தோன்றினாலும் ஒரு சில காரணங்களுக்காக விலக்கவும் தோன்றாமலில்லை.


Dude you are aged உனக்கு வயசாய்டுச்சா நண்பா என்றொரு உள்ளகக் குரல் கேட்கிறது..


எனக்கா வயசா..? ஸ்டில் ஐம் யங்... நான் எப்போதும் இளையபுதியயுவன் தான் என்றொரு குரல் பலமாய் ஒலிக்கிறது.


ஆகவே இது வயது காரணமாக ஏற்பட்ட ரசனை மாற்றத்தின் விளைவல்ல.

 

ஆனால்..இசை துல்லியம் மற்றும் புத்திசை குறித்த சமரசமற்ற தராசு கொண்டு நிறுத்தால் ஒரு இசை அமைப்பாளர் மாத்திரம் தனிக்கிறார். அவரது பாடல்களும் பின்னணி இசையும் தனிக்கின்றன. இந்த நூற்றாண்டின் முழுமுதல் இசை அமைப்பாளராக இவரைச் சொல்ல முடிகிறது.


டீ இமான் காலம் இது.


இந்தக் காலத்தின் இசைஞன் இமான்.

 

 சோனு நிகாம் சித்ராவுடன் பாடிய சொக்குதே காதல் சொக்குதே எனும் பாடல் காதலே சுவாசம் படத்திற்காகப் பதிவாக்கப் பட்டது. கேஸட்டும் வந்தது. கார்த்திக் மற்றும் மீனா நடிப்பில் குட்டிபத்மினி மற்றும் பிரபு நேபால் ஆகியோரது உருவாக்கத்தில் வந்திருக்க வேண்டிய படம் அப்படியே நின்று போனது. திரைகாணாப் பாடல்களின் வரிசையில் இந்தப் பாடலும் சேர்ந்து கொண்டது துரதிருஷ்டமே. அப்படி ஒரு கம்போசிஷன். எத்தனை முறைகள் கேட்டிருப்பேன் என்றெனக்குத் தெரியாது. பெரிதாக நேசித்த இந்தப் பாடல் மெல்ல என் வாழ்விலிருந்து அவ்வப்போது வெளியேறிச் செல்வதும் நானாக உணர்ந்து தேடித் திரும்ப அழைத்து வருவதுமாக இன்றுவரை தொடர்கிறது. வருடக்கணக்கில் கேட்டாலும் அலுக்காத பாடல். இந்தப் பாடலில் தான் இமானின் இசையைத் தனித்து கவனிக்கத் தொடங்கினேன்.


ஏபீசீடி படத்தின் மஞ்சள் முகமே மங்கல விளக்கே பாடல் ஏற்கனவே இந்தத் தொடரின் வேறொரு அத்தியாயத்தில் இடம்பெற்று உள்ளது. இமானின் இசையும் பாடலின் வரிகளும் அந்தஸ்தாக இந்தப் பாடலை மிளிரச் செய்திருக்கும்.


ஜீ.வெங்கடேஸ்வரன் எடுத்த தமிழன் படத்தின் இசைவாய்ப்பு இமானுக்குப் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. முதல் படம் நின்று போய் அடுத்து எதடா கிடைக்கும் என்று தானே இருந்திடும்..? அப்படியும் கிரி நல்ல பேர் கொடுத்தாலும் அன்பே வா, சின்னா, தகதிமிதா ஆணை,6.2 என பல படங்களை வெறும் எண்ணிக்கைக்காகக் கடக்க நேரிட்டது இமானுக்கு. அந்த நேரத்தில் தலைநகரம் படம் வெளியானது. இந்தப் படத்தின் பின் இசையைத் தன்னாலான அளவு தனிக்கச் செய்திருப்பார் இமான். பாடல்களும் குறிப்பாக ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன்  ரெக்கை கட்டிப் பறந்தது. மதராசி, வாத்தியார், கோவை ப்ரதர்ஸ் படங்கள் வந்து சென்றன. இமான் இன்னமும் நிலையற்ற பட்டமாகத் தான் காற்றில் அலைந்து கொண்டிருந்தார். இத்தனைக்கும் கோவை பிரதர்ஸ் படத்தில் ஒரு பாடல் உலகத்தில நீ  எனத் தொடங்கும் இமானே சொந்தக் குரலில் பாடிய பாடல் அது சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இமானின் ராசியே மூணு நாலு நம்பருக்கு பின்னால் ஒரு ஹிட் என்றே ஆகிப்போனது. கலிங்கா, லீ, தவம் படங்கள் வந்தனதவத்தில் கண்ணதாசா கண்ணதாசா வருவாயா என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது. 

 

சுந்தர் சி இயக்கிய ரெண்டு படத்தில் மொபைல் லவ் மொபைல் லவ் பாடல் இமானுக்குத் தனி அடையாளம் தந்தது. அந்த வருடம் அதிகம் நேசிக்கப் பட்ட பாடல்களில் இதுவும் ஒன்றானது. 


கச்சேரி ஆரம்பம் படத்தின் கடவுளே கடவுளே என்ற பாடலும் எல்லோருக்கும் பிடித்த பாடலாயிற்று.

 

2010ஆமாண்டு வெளிவந்த மைனா படம் பாடல்களுக்காகவும் பின்னணி இசைக்காகவும் இமானுக்கு மிக நல்ல பெயரைத் தந்தது. மைனா வெளியான சூழலில் காதல் படங்களின் போக்கைச் சற்றே மாற்றிவைத்தது. முழுக்க குரங்கணி வனப்பகுதிகளைச் சுற்றிச் சுற்றிப் படமாக்கப் பட்ட மைனாவுக்கான பின்னணி இசையும் மலைவாழ் மக்களின் இசையோடு இயைந்து அமைத்திருந்தார் இமான். எல்லாப் பாடல்களுமே மெகா ஹிட் ஆன மைனாவில் கைய்யப் புடி கண்ணத் திற பாடலும் மைனா மைனா நெஞ்சுக்குள்ள பாடலும் புத்தம் புதிய மெலடிகளாக விரிந்தன. ஜிங்கு ஜிங்கு ஜிமிக்கி போட்டு பாடல் தென் நிலத்துக்கே உரிய நையாண்டி எள்ளலிசையின் பின்புலத்தில் லேசான அயர்ச்சியைக் குரலிலும் இசையிலும் பிரதிபலிக்கிற பாடலாயிற்று.ஒரு முழுமையான ஆல்பத்துக்கு உண்டான சர்வ லட்சணங்களும் அமைந்த மைனா யுகபாரதி மற்றும் இமான் கூட்டணியின் முதல் மெகா ஹிட் என்றால் மறுப்பதற்கில்லை. மைனாவின் க்ளைமாக்ஸ் பகுதிக்கான பின்னணி இசையைத் தேர்ந்த ஞானத்துடன் அமைத்திருப்பார் இமான்.

 


அதன் பின்னரும் அரை டஜன் அப்பைகுப்பைகளைத் தாண்டி மறுபடி பிரபுசாலமனின் கும்கி படத்தின் பாடல்கள் இமானை ஒரு நிரந்தர இடத்தில் நிலைநிறுத்தின. சொல்லிட்டாளே அவ காதலை பாடல் லேசான அமானுஷ்யத்தோடு ஏகாந்தத்தின் மென் வருடலாய்க் கிளைத்துப் பெருகும். அய்யய்யோ ஆனந்தமே பாடல் மைனாவின் பாடல்களிலொன்றை நினைவுபடுத்துவதைப் போலத் தொடங்கினாலும் சற்றைக்கெல்லாம் விலகித் தனித்தது. இதே படத்தில் சொய் சொய் பாடல் உற்சாகமான மலைநடனத்தை முன்வைத்து உருவாக்கப் பட்டது.

 

 

யானைகளின் வாழ்வோடு ஊடாடும் கதை கும்கி படத்துக்கான இசையை பார்த்துப் பார்த்து செய்திருப்பார் இமான். உற்சாகமாகத் தொடங்கும் சொய் சொய் பாடல் மென் சோகத்தோடு படரும். ஒரு பாடலின் அழகே அது பாத்திரங்களின் அறிதல் அறியாமைகளின் மொழி நுட்பத்தோடு இயங்குவதில் தான் பெரிதும் வெளிப்படவல்லது. இந்தப் பாடலில் அறியாமையின் ஞானச்சொற்களை யுகபாரதி அழகுற எடுத்தாண்டு இருப்பது இப்பாடலின் நிஜபலம்.


இதனை முதல் தடவை கேட்கும் போது சாதாரணமாகக் கடந்து விட்டேன். படம் பார்க்கும் போதும் பெரிதாய் லயிக்கவில்லை. ஆனால் அன்புத் தோழி மனுஷி தன் அழைப்பொலியாக வைத்திருந்த போது ஒரு தடவை மனுஷியை அழைத்த போது நாலைந்து முறை இப்பாடலைக் கேட்க நேர்ந்தது. இப்பாடல் குறித்து எங்கள் உரையாடல் வெகு இயல்பாக நேர்ந்தது. சட்டென்று என்னிடம் ஆத்மா... இந்த வரி எனக்கு ரொம்ப பிடிச்சிச்சி என்றவாறே மனுஷி சொன்னார்

"நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க
உறவு வேணும் மச்சான்.."


இந்த வரி எனக்கு உடன்பாடில்லை ஆத்மா.. உறவு தான் வேணுமா என்ன எனக் கேட்டார். நான் ஒரு நிமிட யோசனைக்குப் பிற்பாடு அந்த இடத்ல உறவுன்ற வார்த்தையை எடுத்திட்டு நட்புன்னு போட்டாலும் மீட்டரும் இடிக்காது அர்த்தமும் குறையாது ஆனா என்ன நட்புன்றதும் ஒரு உறவு தானே என்றேன்.

 


நீண்ட யோசனைக்குப் பிற்பாடு ஆமால்ல என்றார் மனுஷி.

   சொய் சொய் சொய். 
 

கை அளவு நெஞ்சத்துல கடல் அளவு பாசம்  மச்சான்
அளவு ஏதும்  இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும்
நெனப்பே போதும் மச்சான்

சொய் சொய் ..

வான் அளவு விட்டதுல வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவை இல்ல அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக்கொண்டாலும் வேண்டா விட்டாலும்
சாமி கேக்கும் மச்சான்

சொ ய் சொ ய்

ஏடளவு எண்ணத்துல எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்

நாடளவு கஷ்டத்துல நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க
உறவு வேணும் மச்சான்


சொய் சொய் சொய் சொய்

கையளவு நெஞ்சத்துல கடல் அளவு ஆசை மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம காணும் எல்லாமே கையில் சேர்ந்தாலே
கவலை ஏது மச்சான்

சொய் சொய் சொய் சொய்
சொய் சொய் சொய் சொய்

நீ எப்போ புள்ள சொல்லப் போறே பாடல் ஒரு அபூர்வம். அதன் பல்லவி முடிகையில் மெல்ல உயர்ந்தொலிக்கும் தாளக்கட்டொலி பாடல் முழுவதும் பின்னால் ஆங்காங்கே ஒரு முதிய பறவையைப் போல ஒலித்தவண்ணம் தொடர்ந்துவரும்.பேரழகு. பாடிய குரலும் வார்த்தைகளும் இந்தப் பாடலை அத்தனை அழகாக்கித் தந்திருக்கும்.


தேசிங்கு ராஜாவில் அம்மாடி அம்மாடி என்று தொடங்குகிற இந்தப் பாடலும் ஹிட் மாத்திரமல்ல. கேட்பினிமைக்கு உத்தரவாதமான பாடலும் கூட. அடுத்து வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் பாடல்கள் அதிரி புதிரி ஹிட் அடித்தன.


இமான் வழமையான நடைமேடையிலேயே தன் பாடல்களைப் பயணிக்கச் செய்தார் என்றாலும் அவரது மெலடியும் மென் சோகப் பாடலும் அடிமிகுந்த உற்சாக இனிமைப் பாடலும் சோகப்பாடலும் வழமையான பாடல்களாக ஒருபோதும் இருந்ததே இல்லை. மேலும் அவரது பாடல்களின் இசைக்கோர்வைகளின் துல்லியமும் ஒன்றுக்கும் அடுத்தபிறவுக்கும் இடையிலான இசையிடை மௌனமும் வாத்தியங்களின் தேர்வும் அவற்றின் சேர்மானமும் குரல்களின் தனித் தன்மைகளும் குழுக்குரலாளர்களின் உடனொலிகளைச் சேர்த்துப் பயன்படுத்துகிற விதமும் எனப் பற்பல காரணங்களுக்காக இமானின் இசை முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது என்பேன்.

 

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் பாடல்கள் புதிய திறப்புக்களைக் கொண்டிருந்தன. படம் சூப்பர்ஹிட் என்பதற்குப் பாடல்களும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தாக வேண்டுமல்லவா..? அதைத் தாண்டி ஊதாக் கலரு ரிப்பனு உனக்கு யாரு அப்பனு பாடல் தமிழகத்தின் பொதுப்பாடலாயிற்று. ஹரிஹரசுதனின் அதுவரை கேளாத குரலும் இப்பாடலை பெரிதாய் ரசிக்க ஒரு காரணம்.


உன்னிப்பாகக் கவனித்தால் மெலடி மெலன்கோலி வகைகளைத் தாண்டி இந்த உற்சாக-மென்சோக முரண்  வகைமைப் பாடல்களை இரண்டாயிரமாவது ஆண்டுக்கு பிற்பாடு இமான் மாத்திரமே தொடர்ந்து உருவாக்கி வருவதை உணர முடிகிறது. பாடலின் சூழல் சந்தோஷமாய்த் தென்படும். பாடலின் வரிகளும் பொதுவில் துக்கத்துக்கு எதிரானதாகவே அமையும். ஆனால் பாடலின் மைய இசையும் குரலினுள் இழைகிற ஸ்தாயியும் மட்டும் சோகத்திற்கு நெருக்கமாய்த் தோன்றித் தனிக்கும். உன்னிப்பாக கவனித்தால் இது மாதிரியான பாடல்களின் உருவாக்கத்தில் இருக்கிற இடர் ஏற்பின் அபாயம் புரியக் கூடும். கரணம் தப்பினால் மொத்தப் பாட்டுமே மழையில் தரைவீழ்ந்த உப்பைப் போலாகிப் பயன்கெட்டுவிடும். ஆனால் அப்படியான பாடல்களைத் தொடர்ந்து உருவாக்கி வருபவராகவும் இமான் இருக்கிறார். அவற்றில் ஆகப்பெரும்பான்மைப் பாடல்கள் அதிரி புதிரி ஹிட் பாடல்களாக மாறுகின்றன. வெற்றிகரத்திற்குப் பின்னால் இருக்கக் கூடிய உருவாக்கத் திறனின் வித்யாசம் இது. இமான் செய்கிற மாயம்.


இளையராஜா ரசிகர்களுக்கு தற்காலத்தில் மிகப் பிடித்த இசை அமைப்பாளர் யார் எனக் கேட்டால் இமானைச் சுட்டுவார்கள் என்பது என் நம்பகம். உதாரணமாக பாண்டியநாடு படத்தின் ஏலே ஏலே மருது பாடலைச் சொல்லலாம்.  இதொரு முழுமையான பாடல். நாயகன் தேடலும் தவிப்புமாய் தமிழில் ஆயிரக்கணக்கான பாடல்கள் இருந்தபோதிலும் இந்தப் பாடல் எல்லாவற்றிலிருந்தும் தன்னைத் தனித்துக் கொள்வதற்குக் காரணம் இமான் இந்தப் பாடல் முழுவதையுமே அளவாகத் தரப்படுகிற மயக்கமருந்தைப் போல உருவாக்கி இருப்பார். அகலவும் விடாமல் அணுகவும் இயலாமல் இந்தப் பாடலின் தலைவாசலின் உள்ளேயும் வெளியேயும் சிக்கி ஊசலாடும் கேட்போர் மனம் பாடல் நிறைகிற இடத்தில் மொத்தமாய்த் தன்னையே இப்பாடலின் இடையிசையாகவாவது அதிலொரு வரியாகவாவது மாற்றிக் கொள்ளத் தலைப்படுகிற இசைவடிவ ரசவாதம் இப்பாடல் இமானின் மேதமையில் உருவான மெல்லினகம்பீரம். தென் இந்தியத் திரை இசையில் வெகு அபூர்வமாகக் காணக் கிடைக்கிற BLUE மற்றும் GYPSY வகைமைகளின் கலவைச்சான்று இப்பாடல்.ஆங்காங்கே சுழன்று சுழன்று தொடங்கக் கூடிய இப்பாடலின் பின்னணி இசைக் கோர்வையை மாத்திரம் தனியே கேட்டால் சர்வதேசத் தரத்துடனான ஒற்றையாக ஒலிப்பது கூறத்தக்கது.வைரமுத்து வரிகளில் சிறுமுந்தானை மூடிடும் தெய்வமே உன்னை முத்தாடத் தோணலியே போன்ற வரிகள் சிலிர்ப்பின் உச்சத்தைக் கொணர்ந்தன. சூரஜ் சந்தோஷின் குரலும் இப்பாடலை ஒரே முறை வாய்க்கும் அபூர்வமாக்கித் தந்தது. ஜில்லா படத்திலும் எல்லாப் பாடல்களும் சிறப்பாக அமைந்தன.

 

 

என்னமோ ஏதோ, ரோமியோ ஜூலியட், பாயும் புலி, ரஜினி முருகன், மிருதன், தொடரி, வெற்றிவேல் எனத் தொடர்ந்து இமானின் இசையை உன்னிப்பாகக் கவனித்தும் ரசித்தும் வருகிறவன் நான். இமானின் இசை இன்னும் உயரங்கள் தொடும் என்பது என் நம்பிக்கையோ விருப்பமோ மாத்திரமல்ல. அவரது ஒவ்வொரு ஆல்பமும் அடுத்ததிலிருந்து தனித்தும் சேர்ந்தும் பேசாமொழி ஒன்றின் ரகசியச்சொற்களாகவே விரிகின்றன. இமான் இன்னும் இசைப்பார். அவரது பாடல்கள் நம் வாழ்வெங்கும் உறுத்தாத நிஜமேக நுரைத்தல்களை நேர்த்தும் என்பதை உறுதியாக மொழிகிறேன். கீழ்க்காணும் போகன் படத்தின் செந்தூரா செந்தூரா பாடலை முதல் முறை கேட்ட கணத்திலிருந்து இந்த நிமிடம் வரைக்கும் எல்லா இடைவெளிகளையும் தன்னைக் கொண்டு நிரப்பியபடி பேராசை பிடித்த ராஜராஜனொருவனின் போர்ப்புரவியைப் போலத் தணியாமல் பாய்கின்ற பெருவெள்ளம் போல எனக்குள் நில்லாப் பெருங்கடலாய்ப் பிரவகித்துக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல். தாமரையின் தனி மொழியும் இமானின் இசையும் தவிர இதனைப் பாடியிருக்கிற லக்ஸ்மி சிவனேஸ்வரலிங்கம் தமிழுக்குக் கிடைத்திருக்கும் அபூர்வமான கொடை என்றே சொல்வேன்.

 


   

குரலா அது..?


இமானுக்கு ஜிப்ஸி பாடல் வகைமை மீது பெருங்காதலே உண்டென்பது என் அனுமானம். அதை மெய்ப்பிக்கிற பல துக்கடாக்களைத் தன் பாடல்களெங்கும் அவ்வப்போது அவர் பரீட்சித்தபடியே வருகிறதை சொல்ல முடிகிறது. இந்தப் பாடல் முழுமையான ஜிப்ஸி. தமிழில் இளையராஜாவுக்குப் பிற்பாடு ரஹ்மான் ஆங்காங்கே செய்து பார்த்திருக்கிறார். இமான் அனாயாசமாக வித்தை காட்டுகிறார் என்பது தான் விஷயமே...

 

 

பத்துப் பன்னிரெண்டு இசைக்கோர்வைகளாக உடைக்கலாம் இந்தப் பாடலை. இவற்றை ஒட்டினாற் போலில்லாமல் வெகு இயல்பாக ஒரு மரத்தின் வெவ்வேறு கிளைத்தல்களுக்கு இடையே இருக்க வாய்க்கிற நீள வித்யாசங்களாகவே அவையும் கலக்கும். சொல்ல வந்தது அப்படியான இசைக்கோர்வைகளின் சேர்மானம் வெளியே உறுத்தாத வண்ணம் அவற்றை இணைக்கிற வரிகளின் முக்கியத்துவம் அமையும்.இவ்விரண்டும் அமைந்தாலும் கூட இவற்றின் கூட்டைப் பெற்றுப் பாடுகிற குரல் தான் இவ்வகையான பாடல்களின் மேல்மையக் காரணியாக அமையும்.வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் குரலாலேயே அமையப் பெறும் இவ்வகைப் பாடல்கள். இந்தப் பாடலைத் தன் தனித்த அபூர்வக் குரலின் வளைவு நெளிவுகளைக் கொண்டு காற்றில் தன் பேரெழுதிக் கையொப்பமிட்டுத் தனதான தென்றலாய் மாற்றிக் கொண்டிருக்கிற லக்ஸ்மியின் குரலுக்கு பெரிதாக ஒரு நல்வரவைச் சொல்லலாம் தானே..? இதுவும் இன்னமும் இமானால் சாத்தியம்.

 

மீண்டும் சொல்வதானால் காதலே சுவாசம் படத்தின் சொக்குதே காதல் சொக்குதே பாடல் தந்த பெருமயக்கத்திலிருந்தே இன்னமும் விடுபட முடியவில்லை. மென்மேலும் தன் பாடல்களால் கேட்பவர்களை வசீகரித்துச் செல்கிற இசை நதி இமான். இன்னமும் இசைக்கட்டும் நமக்கான பாடல்களை…

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...