அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை 0 அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல் 0 ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்! 0 விவசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் ட்விட் 0 பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன்மயக்கம் - 25 - இந்திமழை பொழிகிறது - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   06 , 2017  22:51:59 IST


Andhimazhai Image

என் எந்த வயதில் முதன் முதலில் இந்திப் பாடலைக் கேட்க நேர்ந்தது என்று எனக்கு நினைவில்லை. அனேகமாக என் வாழ்வின் முதல் இந்திப் பாடலாக மெஹபூபா மெஹபூபா தம் மரோ தம் அல்லது தேரே மேரே பீச்சு மே ஆகிய பாடல்களில் ஒன்றை சுட்டலாம்.

 

என் தந்தையானவர் திராவிட இயக்கத்தில் ஊறியவர். தொழிற்சங்கவாதி. கையில் அண்ணா படத்தையும் எம்.ஜி.ஆர் படத்தையும் பச்சை குத்தியிருந்தவர். எங்கள் வீட்டின் தலைவர் எம்.ஜி.ஆர் தான் என்றே என் பால்யம் தொட்டு உணர்த்தப்பட்டேன். நிற்க. திராவிட இயக்கத்தின் ஆதிக்கமோ என்னவோ இந்தி மொழியைத் தன்னால் ஆன அளவுக்கு எதிர்த்தார் அப்பா. இந்தி என்றாலே வெறுப்பை உமிழ்வார். அம்மா ஒரு டீச்சர். இந்தியை தேசியமொழி என்று வாதிடுவார். என்றாலும் அப்பாவின் சொல்லே இறுதியில் செல்லும். அக்கா தக்கித் தக்கி இந்தி கிளாஸில் சேரும் போது எட்டாவது வகுப்பு படித்தாள். நான் அப்போது ஐந்தாவது வகுப்பு. ஆனாலும் அப்பாவுக்காக இல்லை என்றாலும் எதைப் படித்தாலும் உள்ளுடம்பு நோகிறது என்கிற விஞ்ஞான ஜமீந்தார்த்தன சிந்தனையால் எதையும் கற்றுக் கொள்வதே பிடிக்காமற் போன எனக்கு இந்தி மட்டும் இனிக்கவா செய்யும்..? வெறுத்தேன்.

 

இந்த இடத்தில் என் அம்மாவுடன் பிறந்த ஒரே ஒரு அண்ணர் அதாகப்பட்ட என் தாய்மாமர் பூனாவில் ஸெட்டில் ஆனவர். எங்களிருவரின் பொது வாழ்வில் நான் மொத்தமே நாலு முறை சந்தித்திருக்கிறேன். அந்த மாமர் குடும்பத்தோடு முதல் தடவை வந்த போது எங்களுக்கு நடுவே அவர்கள் இந்தியில் பேசிக் கொள்வார்கள். எனக்கும் என் அக்காவுக்கும் ஏதும் புரியாது. வெட்கமாக உணர்வாள் அக்கா. வெறுப்பை உணர்ந்தேன் நான். அந்தந்த நிலத்தின் மொழி மாத்திரம் அறிந்தவர் மத்தியில் அடுத்த மொழியில் பேசிக் கொள்வது இருபுறமும் கூர் தீட்டிய கத்தி போன்றது. அவரவர் நியாயம் அவரவர்க்கு. ஆனாலும் மனம் அறியாதவர் பக்கமே சாயும் எனத் தோன்றுகிறது.

 

அந்த மாமர் வந்து போன பிற்பாடு அக்கா கொஞ்சம் தீவிரமாகவே இந்தி கற்றுக் கொள்ள முனைந்தாள். எனிக்கு இந்தி மேல் சத்தியமாக ஆர்வம் நஹி ஹேய். இதில் அம்மா என்னிடம் ஜோசியன் உன்னை ஏழு பாஷை படிப்பேன்னு சொன்னான். நீ என்னடான்னா இந்தியக் கூடப் படிக்க மாட்டேங்குறே என்றாள். சில பல நாட்கள் என்னைக் கமிட் செய்த அந்த ஜோசியனைத் தேடியலைந்தேன். சிக்கியிருந்தால் சட்னி செய்திருப்பேன். கிட்டவில்லை. தப்பியோடி விட்டார்.

 

எங்கள் புதூர் வீட்டின் எதிர் வீட்டில் ராமசாமி நைனா வீடு. எங்கள் வாழ்வில் கிடைத்த முதல் சுற்றத்தார் என்று அவர்களைச் சொல்லலாம். மிகவும் அன்பும் பரிவும் நிரம்பிய மனிதர்கள். அவர்களுடன் பழகியதில் என் வாழ்வின் முதல் நாலைந்து தெலுங்குச் சொற்கள் எனக்குள் நிரம்பலாயின. அக்கா கொஞ்சம் அதிகமாகவே தெலுங்கு மொழியை அறிந்து கொண்டாள். என்றாலும் என் அம்மாவுக்கு நான் இந்தி படிக்கவில்லை என்று ஒரு உபகோபம் ரொம்ப நாளைக்கு இருந்தது. நீ மட்டும் இந்தி படிச்சிருந்தேன்னா என்று இழுப்பாள் என் தம்பி என்ன படிச்சிருந்தா எம்.பி ஆயிருப்பானா என்றதும் நான் மையமாக முறைப்பேன். நல்லவேளை நான் எம்.பி ஆகவில்லை. என்று நான் உட்பட எல்லாருமே ஒரு கணம் நிம்மதிப் பெரியமூச்சு விட்டுக் கொண்டோம்.

 

இந்த மாதிரியான நேரத்தில் தான் என் தமிழ்த் தவத்தை மீறி வாழ்வின் முதல் இந்திப்பாடல் எனக்குள் ததும்பலாயிற்று. இதே புலன் மயக்கத்தின் நாலாவது அத்தியாயத்தில் என் அக்காவுக்குப் போட்டியாக நானும் பாடிய என் பால்யத்தின் ஞாபகங்களைப் பற்றி விவரித்திருக்கிறேன். அதன் உப தகவலாக என் உற்சாகத்தின் கூடுதல் விளைவாக இந்திப் பாடல்களை நான் பாடியது குறித்தும் பகிர்ந்திருந்தது நினைவில் இருக்கலாம்.

அந்த முதல் பாடல்கள் ஏக் தோ தீன் என்று ஆரம்பிக்கிற தேஸாப் படப் பாடலும் பாப்பா கெஹ்தே ஹே படா நாம் கரேகா என்றாரம்பிக்கிற இன்னொரு பாடலும் தான்.

 

ஓவர் டு திருநகர் வீடு அண்ட் ஓவர் டு 1993. சர்வதேச இசை மற்றும் இந்திய பாப் ஆல்பங்கள் என்கிற அளவுக்கு என் இசையார்வத் தேடல் விஸ்தீரணம் அடைந்திருந்த நேரம். மதுரை அமிர்தம் தியேட்டரில் வெளியான ஒரு படம் ஜஸ்ட் ஒருவருடம் ஓடியது. அதன் சுற்று வட்டாரப் பதினெட்டு பட்டி சிட்டிசன்ஸ் அந்தப் படத்தை தலா பத்து தடவை பார்த்தார்கள். அந்தப் படத்தின் பாடல்கள் டீக்கடை தொடங்கி மிலிட்டரி கேண்டீன் வரைக்கும் ஒவ்வொரு நாளும் தலா முப்பது முறைகள் ஒலிபரப்பப் பட்டன. திரும்பத் திரும்பப் பார்த்ததன் மூலம் அந்த படத்தில் நடித்த நடிகர்களை பெயரே தெரியாத போதிலும் மனசுக்குள் நேசிக்க ஆரம்பித்தார்கள். அப்போது பிறந்த குழந்தைகள் சல்மான் என்றும் மாதுரி என்றும் பேர் சூட்டப்பட்டார்கள். நான் பார்க்க தமிழ் நாட்டை பிடித்த இந்தி ஜூரம் HUM APKE HEIN KOUN.. 

 

மிக நேரடியான தெளிவான கதை. மொத்தம் பன்னெண்டு பாடல்கள். எல்லாமே சூப்பர் ஹிட். அதில் பெரும்பாலானவற்றை பாடியவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்பதைத் தவிர அந்தப் படத்துக்கும் தமிழகத்துக்கும் யாதொரு சம்மந்தியும் நஹி. எனக்குப் புரியாத புதிராகவே அப்போது இருந்தது. என்னாடா இது இந்தின்னா வெய்யிறாங்கிய. 1967க்கு அப்பால காங்கிரஸை சுத்தமா துடைச்சிட்டானுவோ... இரெண்டு திராவிடக் கட்சில எதாச்சும் ஒண்ணியோட கூட்டாப்ரேசன் வெச்சி தான் காங்கிரஸே தப்பிச்சிக்கிது.. இந்த லச்சணத்ல இந்தி ஒரு கெஸ்ட் ரோலாக் கூட இல்லாத ஸ்டேட்ல எப்டி தலை தெறிக்க ஓடுது இந்தப் படம்..? அதும் சுத்தமா வசனம் புரியாத படத்தை ஏதோ பெருமாள் பிரசாதம் கைல கெடச்சாப்ல கண் கலங்கப் பாக்குறானுவ...

 

அந்தப் படம் என்றில்லை. 1967க்கு அப்பால் வருடம் தவறாமல் இங்கே இந்திப் படங்களில் ஒரு சில மகா வெற்றி அடைந்திருப்பதும் அவற்றின் பாடல்கள் தமிழ்ப் பாடல்களோடு இணை நதியாக வருடக் கணக்கில் ரசிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

 

மெல்ல இந்திப் பாடல்களின் மேல் எனக்கான ஆர்வம் துவங்கிற்று. இளையராஜா இசை அமைத்த இந்திப் படங்கள் எஸ்.பி.பாலு மற்றும் ஜேசுதாஸ் பாடிய இந்திப் பாடல்கள் என்று ஆங்காங்கே எனக்கு கிடைத்த அளவுக்கு இந்திப் பாடல்களையும் எனக்குள் அனுமதிக்கத் தொடங்கினேன். 1994ஆம் ஆண்டுக்கு அப்பால் மீண்டும் தமிழகமெங்கும் நிறையவே இந்திப் படங்கள் வெளியாக தொடங்கின. தமிழ்ப் படம் போடாத இடைவெளிகளை ஹிந்திப் படங்களைக் கொண்டு நிரப்ப ஆரம்பித்தார்கள். அது வரைக்கும் எப்போதும் இங்கிலீஷ் படங்களை மட்டும் வெளியிட்டுக் கொண்டிருந்த மதுரையின் அப்போதைய ஏக்ளாஸ் தியேட்டர்களான மாப்பிள்ளை வினாயகர் மாணிக்க வினாயகர் காம்ப்ளக்ஸில் தொடர்ந்து ஹிந்திப் படங்கள் வெளியாகத் தொடங்கின.

ஷாரூக்கானின் வரவு அமீர்கான் மீதான என் காதலைத் திருடிக் கொண்டது. பாஸிகர் படத்தின் ஏ காலி காலி ஆங்கேன் பாடலைப் பெரிய திரையில் பார்த்ததில் இருந்து மீசையற்ற இரண்டாவது முகத்தை (சில படங்களில் ரகுவரன் மீசை இல்லாத தோற்றத்திலும் ரசித்திருக்கிறேன்). பெரிதும் விரும்பத் தொடங்கினேன். வரிசையாக டர் மற்றும் தில்வாலே துல்ஹானியா லேஜாயேங்கே படங்கள் வந்து ஷாரூக் மீது பித்தே பிடித்தது. போனவாரம் வந்த ரேயிஸ் என்ற ஷாரூக் படம் வரைக்கும் தலைவர் நம்மூர் பக்கம் வந்தால் தியேட்டரில் பார்த்து ஹாய் சொல்வதும் வராத போழ்துகளில் ஸீடியில் பார்த்து சீயர்ஸ் சொல்வதும் இன்றுவரை தொடர்கிறது.

கோவிந்தாவின் சில பல படங்களைப் பார்த்துக் குழம்பினேன். இது உண்மையிலேயே நடிப்பா இல்லை மனிதர் நக்கல் செய்கிறாரா என்று. இன்று வரைக்கும் நான் கோவிந்தாவின் தீவிர ரசிகன். அவரது காம்ப்ளர் சப்ஸே படா கிலாடி ஆகிய படங்களை தலா பத்துத் தடவை பார்த்திருக்கிறேன். விசாரித்த வகையில் அந்த ஊரின் வெண்ணிற ஆடை மூர்த்தியாகவே தலைவர் நடித்துத் தள்ளி இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். இருந்தாலும் ஐ லவ் கோவிந்தா.

அப்போது தான் 1942 ய லவ் ஸ்டோரி படம் பார்த்து மனக்கோயில் கட்டி மனீஷாவை போற்றினேன். அந்த ஒரு படம் வாழ்க்கையில் மறக்க முடியாத பீரியட் படம் என்பேன். பொதுவாக எனக்கு பீரியட் படங்கள் பிடிக்காது என்ற எண்ணத்தையே அந்தப் படம் தான் மாற்றிற்று. அதில் ஓஹ் ஏக் லட்கி கோ தேகா தோ ஹேஸா லகா என்ற பாடலை மனப்பாடம் செய்தேன். மனதுக்குள் பலமுறை பாடினேன். என் பாடலாகவே அது மாறிற்று. என் பாடல்களின் பேழையில் அந்தப் பாடலுக்கு என்றும் ஓரிடம் உண்டு.

                        

93 முதல் 2000 வரைக்குமான காலகட்டத்தில் என் நினைவில் நின்ற வரை கீழ்க்கண்ட படங்களை ஒரு முறை அல்லது இரண்டு முறைகள் கூடப் பார்த்திருக்கிறேன். மொத்தத்தில் ஒரு மாதிரி குண்ஸாக நம்மூர் சேட்டுகள் தொடர்ந்து பேசுகிற துரிதவேக இந்தி கூட லேசு பாசாக இடையிடையே புரிகிறாற் போல் ஆனதற்கு எந்த இந்திப் பண்டிட்டும் காரணமல்ல. நானே நான் பார்த்த இந்திப் படங்களின் மூலமாகப் பெற்றுக் கொண்ட  சொற்கள் மற்றும் அர்த்தங்களே காரணம்.

 

gardish gumrah kabhi haa kabhi naa karan arjun Ashique jo jeetha wahi sikkandhar mohra Rajababu coolie no 1 criminal hulchul karan arjun Kartavya Oh Darling Eh hai india Raja Rangeela trimurti Beqabu agni sakshi chaahat dastak dil tera diwana nirbay Raja hindustani tere mere sapne aflatoon Border hero no 1 judaai koyla pardes devta ghulam kareeb satya soldier sarfarosh taal bhaagi

 

ஷாரூக் அளவுக்கு நான் ரசித்த இன்னொரு என் கால ஹீரோ பர்ஸாத் பட நாயகன் பாபி டியோல் என் கனவுகளில் பாபி டியோலும் அவரது நன்கு பராமரிக்கப்பட்ட கேசமும் தனித் தனியாகவும் சேர்ந்தும் பல இரவுகளில் இடம்பெற்றது வரலாறு. எனக்கு அப்படி ஒரு மண்டைக்கட்டு இல்லாதபடியால் அப்படியொரு கேசத்தை வளர்க்க முற்படவில்லை. என்றாலும் இன்றைக்கும் எனக்கு வாய்க்காத பட் நான் விரும்புகிற சிலவற்றில் பாபியின் கேசத்துக்கு இடம் நிச்சயம்.

 

humko sirf thumse pyar hei என்ற பாடலை இன்றைக்குப் பார்த்தாலும் கவிதை. இந்தியாவின் சிறந்த படமாக்கப் பட்ட காதல் பாடல்களின் வரிசையிலும் சிறப்பாக உணர்ந்து பாடப் பட்ட காதல் பாடல்களின் வரிசையிலும் இந்தப் பாடலுக்கு நிச்சயம் இடம் உண்டு. என் லிஸ்டில் இது சூப்பர் ஸ்பெஷல் பாடல். 

 

குமார் ஸானுவின் குரல் ஒரு அபூர்வ ஒற்றை. இந்திப் பாடல்களுக்கான ஆதாரக் குரல்களில் ஸானுவின் குரலும் ஒன்று. கேட்பவர் மனங்களைத் துளைத்துக் கரைத்துக் கலங்க வைத்துக் கண்ணீர் மணிகளை அகழ்ந்து விடக் கூடிய மாந்த்ரீக உழவன் குமார் ஸானு. உச்சஸ்தாயி மற்றும் கீழ் நசிந்த மென் ஸ்தாயி ஆகிய இரண்டிலும் இயங்கக் கூடிய வெகு சில குரல்களில் ஒன்று குமார் ஸானுவினுடையது.

ச்சாஹத் படத்தில் வருகிற இந்தப் பாடலை சாதனா சர்கம் உடன் பாடி இருப்பார் ஸானு. இப்போதும் சொல்லில் வரவழைக்க இயலாத உணர்தலின் குழைவை நேர்த்தவல்லது இப்பாடல். 

 

பர்தேஸ் படத்தில் வரும் கிஸீ ரோஸ் தும்சே முலா காத் ஹோகி இந்தப் பாடல் ஒரு காதல்ஜோதி. இன்றைக்கும் முதல் தடவை கேட்பதைப் போன்றே புத்தம் உணர்வின் நீர்ப்பனித்துளிகளைத் தன் மேனி மீது பூசி வருகிறது இப்பாடல். அதற்கான தலையாய காரணம் குமார் ஸானுவின் குரலே என்பேன். கேட்டால் உறைவதும் உருகுவதும் ஒருங்கே நிகழ்வது நிச்சயாதிசயம்.

 

தமிழ்க் கேஸட்டுக்களைப் போன்றே என்னிடம் இருந்த ஆஷிக்கி படத்தின் கேஸட்டைப் பல தடவை கேட்டுக் கேட்டு அந்தக் கேஸட்டின் ஸ்பூல் நைந்து போய் இழுத்து இரண்டாவது மூன்றாவது முறைகள் வாங்கியது நடந்தது. ஒரு காற்புள்ளி கூடக் கூடுதலாய்ச் சொல்லவில்லை. என் வாழ்வின் அத்தனை தமிழ்ப் பாடல்களின் மீதான ப்ரியத்தினின்றும் கொஞ்சமும் குறைந்ததல்ல இப்படத்தின் மீதும் இதன் பாடல்கள் மீதும் நான் கொண்ட ப்ரியத்தின் அளவும் உயரமும்..

ஸாஸோன் கீ ஜரூரத் கே ஜேஸே... என்கிற இந்தப் பாடலும் நஸர் கீ சாம்னே ஜிகர் கீ பாஸ் என்கிற இன்னொரு பாடலும்  காதலின் ஆன்மாவுக்கென்றே அளவெடுத்துச் செய்யப்பட்ட உயிராடைகளைப் போன்றது. கேட்டால் புரியும். தீரே தீரே ஸே மேரி ஜிந்தகி என்று ஆரம்பிக்கும் அடுத்ததொரு பாடலும் சளைத்ததல்ல.  ஏனென்றே தெரியாமல் உருகிக் கலைந்து அழுதிருக்கிறேன். குமார் ஸானு அற்புதம்.

 

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலுக்காகவே சாஜன் போன்ற பல பாடல்களை ரசித்திருந்தாலும் சரி.. பின் நாட்களில் எனக்கு உதித் நாராயண் உள்படப் பலரது குரல்கள் பிடித்தாலும் ஜேசுதாஸ் பாடிய பல இந்திப் பாடல்களைத் தனியாக ரசித்திருந்தாலும் என் வாழ்வின் ஆகச்சிறந்த குரலாளர்களின் பட்டியலில் மிக சமீபத்தில் நான் ரசிக்க தொடங்கிய கேகே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் மற்றும் குமார் ஸானு ஆகிய இருவருக்கும் இடம் உண்டு.

குன்னத் பாடிய இந்தப் பாடலை எனக்கொரு தோழி ப்ளூ டூத்தில் அனுப்பினாள். இடம் சென்னை எழும்பூர் ரயில் நிலையம். ட்ரெயினில் என்னை வழியனுப்ப வந்தவள் ஜன்னத் 2 கேட்டியா என்றாள். இல்லை என்றேன் உதட்டை பிதுக்கி. நீ வேஸ்டு என்றாள். ரொம்ப சொல்லாத என்றேன். கேக்குறியா என்றவள் ப்ளூடூத்தில் அனுப்பினாள். கை காட்டி தண்ணீர் பாட்டில் வாங்கித் தந்து விட்டு கிளம்பிப் போய்விட்டாள். விழுப்புரம் போகும் வரைக்கும் அதே ஒரே பாடலோடு பயணித்து விட்டு அவளை அழைத்தேன். எடுத்ததும் என்னடா என்றாள்.என்னப்பா இது என்றேன். ஒரு முடிவை மாற்றிக் கொள்பவனின் கூச்சத்தோடு அந்தப் பாடலை அவளிடம் விவரித்துப் பாராட்டினேன். அவள் சொன்னாள் வார்த்தைகளும் வரிகளும் புரியாமலே இத்தனை சொல்றே என்று ஆரம்பித்தாள். நான் சொன்னேன் எதுக்குப்பா..? என் வார்த்தைகளும் என் வரிகளும் இருந்திச்சில்ல.. அது வெறும் பாட்டில்ல... என் பாட்டு என்றேன். அவள் மௌனமாக ஆமோதித்தாள். அதன் பின் நான் பலரிடமும் பகிர்ந்து தந்து கொண்டே இருக்கிறேன் அந்தப் பாடலை. கேகே என்கிற ஒருவரால் மாத்திரமே பாட முடிகிற அந்தப் பாடல் இன்றைக்கும் என்றைக்கும் எப்போதைக்கும் போதுமான பாடல்.

 

மிக சமீபத்தில் நான் தொடர்ந்து செல்லக் கூடிய ஸ்பாவில் எல்லா சிகையலங்காரக் கலைஞர்களும் பிஸியாக இருந்த ஒரு மதியம் அங்கே ஒலித்துக் கொண்டிருந்த பாடல் என்னை அசத்திற்று. எந்த ஒரு பாடலுமே நம் வாழ்வில் அதுவாக நிகழ்கையில் அவற்றின் ஈர்ப்பும் இடமும் தனிச்சிறப்பாகிறது. இதே பாடலை நான் தேடியிருந்தால் அப்படி ஒரு பாடல் கிடைக்காமலே போயிருக்கக் கூடும். ஆனால் அந்தப் பாடல் என்னைத் தேடியதென்பது தான் நிஜம். யார் சொன்னது பாடல்களை ரசிப்பதற்கு மொழி அவசியம் என்று..? இல்லவே இல்லை. ஓங்கிச் சரிகிற நீர்ப்பொழிதலில் எந்தத் தாரை அல்லது எத்தனை தாரைகள் நம்மை நனைக்கும் என்று திட்டமா தீட்ட முடியும்..? மழையின் தன்னிஷ்டத் தாரைகள் போலத் தான் பாடல்களும். அப்படித் தான் நிகழும். அப்படித் தான் நிகழ்ந்தது. அங்கே வேலை பார்த்த ஒரு யுவனிடம் இதென்ன படம் என்றேன்.. யங்கிஸ்தான் என்றார். யார் பாடியது என்றேன் அர்ஜீத் என்றார். அப்போதுதான் அந்தப் பாடலைப் பாடியபடியே  அர்ஜீத் என் வாழ்க்கைக்குள் வந்தார்.  காதல் என்பதே ஒரு மொழி தான். அதன் பாடல்கள் எல்லாமும் அதன்வழிதான். தனியே ஏது மொழி.?

இந்திப் பாடல்களைப் பொறுத்தவரை எண்பதாண்டுப் பாடல்களைப் பற்றிப் பேசுவதற்கு இன்னும் சில அத்தியாயங்கள் தேவைப்படும். அவ்வப்போது இடம்பெறும். விட்டுவிட்டுப் பெய்யட்டும் இந்திமழை..

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...