???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் 24 - பாட முடியாத பாடல்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   30 , 2017  23:51:15 IST


Andhimazhai Image

அந்த அறை ஒரு முதிய மனிதரின் வசிப்பிடம். அவர் பெயர் பரமேஸ்வரன். இயற்பியல் துறை பேராசிரியர் திரை இசையில் மகா கெட்டி. பாகவதர் காலத்து இசையிலிருந்து நேற்று வந்தது வரைக்கும் இசையை அணுகி அலசி ஆராய்வதில் சமர்த்தர். இது நடந்தது 1994 வாக்கில் என ஞாபகம்.கட்டிலில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தார். எதிரே பக்கவாட்டில் நான் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன். என்னோடு வந்திருந்த சிவராமன் தன்னாலான அளவு முரண்பட முயன்றார்."இளையராஜாவோட குரல் பாட்டுப்பாடுவதற்கு ஏற்ற குரலே அல்ல. தன் பிரபலத்தை வேற ஒண்ணா கன்வெர்ட் பண்ணிக்கிட்ட புத்திசாலித்தனம் அவர் சொந்தக் குரலில் பாடிய பாடல்கள். உண்மையா சொல்லப் போனா எல்லாருமே பாடலாம்ங்குற ஒரு சூழலையே ஏற்படுத்தித் தந்தது இளையராஜா குரலில் பாடல்கள் வெளியானதும் அவைகள் ஹிட் ஆனதுக்கும் அப்பறமாத் தான்."


அந்த முதியவர் பேசியதைக் கண் இமைக்காமல் பார்த்தபடி இருந்தேன். சிவராமன்  "இளையராஜா பாடல்களைப் பாடுறது உங்களை மாதிரி முந்தைய காலகட்டத்தை சேர்ந்த யாருக்கும் பிடிக்கிறதில்ல. அதை ஏன் அட்வாண்டேஜ் எடுத்துக்கிறதா நினைக்கிறீங்க..?"


அதற்கு முதியவர் "தம்பி சிவராமன்.... இதே பாடுற  குரல் இளையராஜாவோடதா இல்லாம வேற ஒருத்தருக்கு இருந்திருந்தா அவருக்கு பாட சான்ஸ் கிடைச்சிருக்குமா..? கஷ்டம்தான். இளையராஜா தனக்குத் தானே சான்ஸ் தந்திக்கறதால இது நடக்குதுன்னு நினைக்கிறேன்."


கொஞ்ச நேரம் யோசித்த சிவராமன் விடாமல் வாதத்தைத் தொடர்ந்தார். "கணக்குல நூத்துக்கு நூறு மார்க் வாங்குற ஒரு பய்யன் இங்கிலீஷ்ல எம்பதும் தமிழ்ல தொண்ணூறும் வாங்கறதில்லையா.? அதே பய்யன் வரலாறுல அறுபது தான் வாங்குறான்னு வைங்க.. அவனை கணக்குல நூறு வாங்குனதுக்காகவே பரவாயில்லைப்பா ஹிஸ்ட்ரில முடியறப்போ எழுபது எம்பது வாங்கிக்கலாம். ஆனா கணக்குல என்னிக்கும் நூறை விட்டுறாத. சைன்ஸ்லயும் அப்டியே ஒரு நூறு வாங்கிடு போதும்னு சொல்றது பிற்கால பட்டதாரிகாலக் கல்வியை அஞ்சாவதுலேருந்து புகுத்துற மனோநிலை தான். உண்மையில வரலாறுல நூறு வாங்குறது கணக்கில் வாங்குறதை விடக் கஷ்டம். அதோட பயனை புறவயமா குறைத்துக் காட்டுறது ஒரு சூட்சுமம் இல்லியா.? அந்த மாதிரியே இளையராஜா இசை அமைப்பாளரா இருந்து நம்பர் ஒன் ஸ்தானத்தை அடைஞ்சு எண்ணிக்கை அளவிலயும் பெரும் வெற்றி பெற்ற படங்களையும் பாடல்களையும் தந்துகிட்டிருக்கிறதால எதுலடா குறை சொல்லலாம்குற சாக்கில அவர் சொந்தக் குரல்ல பாடுவதை ஒரு கம்ப்ளெயிண்டா மாத்துறது உங்களை மாதிரி ஆட்களோட புத்திசாலித் தனம்னு சொல்லலாம் தானே..?


நான் அப்போதும் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். இறுதியாக பேராசிரியர் தன் பேச்சை முடித்து வைத்தார். "நான் அதுக்காக இளையராஜாவோட இசைத்திறமையைக் குறை சொல்லலைங்க.. எத்தனையோ அற்புதமான குரல் படைச்சவர்களை எல்லாம் விட்டுட்டு என் படம் என் பாட்டு அப்டின்னு நூத்துக்கணக்கான நல்ல பாடல்களை இளையராஜா தானே பாடிக்கிட்டது தான் பிடிக்கலைன்னு சொல்றேன். அதே பாடல்களோட இசையில எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை. ஏன் எஸ்.பீ.பாலசுப்ரமணியம் மலேசியா ஜேசுதாஸ் மனோன்னு எத்தனை பேர் இருக்காங்க.. நீங்களே சொல்லுங்க.. ஏன் அத்தனை பாட்டை அவரே பாடணும்..?"

இத்தனை பேசியும் அந்த மனிதனை நான் குறைந்த பட்சம் ஒரு சொல் கொண்டேனும் கீறாமல் இருந்ததற்கு ஒரே ஒரு காரணம் தான். ரமேஷ் அண்ணன் என்னை முன்னமே எச்சரித்திருந்தார். இந்தாரு.. அவரு பெரிய ப்ரொஃபஸர்... அந்தக் காலத்து ஆளு. அவருக்கு இளையராஜாவை ஒத்துக்க மனசே வராது. ஆனா அவருக்கு இசை பத்தின பல விஷயங்கள் தெரியும். உனக்கு இண்டிரஸ்டுங்குறதால தான் உன்னைய அவரோட பேச சொல்றேன். பிடிக்காட்டி விட்டுறு. அவரு பேசி முடிக்கிற வரைக்கும் ஒரு வார்த்தை கூட அவரோட நீ பேசக் கூடாது. இது என் உத்தரவு.


நான் ரமேஷ் அண்ணனின் வளர்ப்பு. அவரை என்னால் மீறவே முடியாது. என்ன செய்வது..? மனசு ராஜா ராஜா என்று பதறினாலும் அந்த மனிதர் பேசிய அத்தனையையும் பொறுமையாய்க் கேட்டுக் கொண்டே இருந்தேன். உண்மையில் என்னிடம் அப்போது அவருக்குச் சொல்வதற்கு பெரிய பதில்கள் இல்லை. ஆனால் பின் நாட்களில் நான் சந்திக்கிற ஒவ்வொரு இசை ரசிகரிடமும் நேரடியாக இவற்றை வினாவாக மாற்றி எஸ். நோ என்று பதில் பெறாமலேயே ஒரு இடைக்கருத்தாக அவர்கள் இளையராஜா என்ற மகா வெற்றி பெற்ற இசைமேதை தன் சொந்தக் குரலில் பாடிய பாடல்களைப் பற்றி மாத்திரம் அவர்களது கருத்துகள் என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வதை ஒரு தொடர்வேலையாக அல்ல நில்லாவேள்வியாகவே நிகழ்த்தினேன்.

இளையராஜா சொந்தக் குரலில் பாடிய பாடல்களை ஏதோ அவரே இசை அமைத்தார் அதனால் அவராகப் பாடிக் கொண்டார் என்ற அளவில் பார்க்கிற யாரையும் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இல்லை. ஒன்று முந்தைய அல்லது பிந்தைய காலத்தவர்களாக இருப்பார்கள். அல்லது தான் கொண்ட முன் முடிவை எந்த முகாந்திரமும் இல்லாமல் வறட்டுப் பிடிவாதமாய்ப் பற்றி இருப்பார்கள். அந்தப் பேராசிரியர் என்றில்லை. பலரும் அப்படி இருந்தார்கள். இன்னமும் இருக்கக் கூடும்.இளையராஜா பாடிய எல்லாப் பாடல்களுமே அற்புதம் என்றோ அவர் பாலு தாஸேட்டன் மலேசியா ஆகியவர்களை விட சிறப்பான பாடகர் என்றோ நிறுவுவதற்கில்லை இந்த அத்தியாயம். எந்தக் குரலையும் வேறொரு சில பல குரல்களுடன் எப்படி ஒப்பிடுவது..? அவற்றின் பாடல் உபயோகம் மற்றும் பாடல் வகைமை பாடிய நம்பர்கள் மற்றும் ஹிட்கள் என எல்லாவற்றையும் கணக்கிலெடுத்துத் தானே..? அப்படிப் பார்த்தால் இங்கே பிரச்சினை இளையராஜா என்ற பாடகர் பாடிய பாடல்கள் அல்ல. அவற்றுக்கான இசை அமைப்பாளராகவும் அவரே இருந்தது தான். தனக்குத் தானே வாய்ப்புக்களை வழங்கிக் கொண்டார் என்கிற அனர்த்தக் கூற்றுக்கு என்ன பதிலளிப்பது.?


இப்போது அந்த பேராசிரியர் எங்கே எவ்விதம் இருக்கிறார் என்று தகவல் இல்லை. அன்றைய சந்திப்பில் அவர் எனக்கு வழங்கிய ராஜவெறுப்பு என்னும் கசப்பைத் தாண்டி அவர் உண்மையாகவே வாழும் பொக்கிஷமாகவே இருந்தார். எண்ணற்ற தகவல்களை எனக்குத் தந்தார். குரல்கள் மற்றும் பாடல்கள் பற்றிய என் சிற்றறிவுக்கு ஸார் தான் பெரிய காரணம் என்னும் அளவுக்கு அள்ளித் தந்தார்.


ஓவர் டு 2017.


இப்ப வாங்க ஸார் பேசலாம் என்று ஆசை எழுகிறது. நான் சந்தித்த போதே அவருக்கு எழுபது வயது இருக்கும். இன்றைக்கு இருந்தால் தொண்ணூற்றுச் சொச்சராக இருப்பார். சரி வேண்டாம். எழுதுகிற தொடரில் அவரை நுழைத்து நாமும் பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.


அதாவது இளையராஜா என்ற வெற்றிகர மானுடத்தின் மீது வைக்கப்படுகிற மாபெரிய அல்லது முதல் விமர்சனம் இது. இதையும் முழுவதுமாக ஒரு குறையாகத் தயாரிக்கத் திராணியற்றவர்கள் தான் இருந்தாலும் ஆனாலும் அதாவது வந்து ஒரு சில எல்லாமே எதுவும் என்று அனர்த்தங்களில் சங்கிலியால் தங்களைத் தாங்களே கட்டிக் கொள்ள முயல்கிறார்கள். இளையாத ராஜா பாடிய பாடல்களைப் பற்றி மாத்திரம் இங்கே பார்க்கலாம்.


அடித் தொண்டையிலிருந்து பாடுகிற வழக்கமே கிடையாது மூக்கின் நுனியில் இருந்து பாடுகிறார் என்பார்கள்..இதையே நான் ஆச்சர்யமாகப் பார்ப்பேன். உண்மையில் போகிற போக்கில் மூக்கு நுனியிலிருந்து பாடுவதாகவே வைத்துக் கொண்டாலும் கூட அப்படியான ராஜா பாடல்கள் மொத்தமே ஏழெட்டு தான் இருக்கும். இளையராஜாவா... விடாத.. விட்டுறாத என்ற வன்மத்தில் எதையாவது தயாரித்துக் கொண்டே வீசிக் கொண்டே எதிர்த்துக் கொண்டே இருப்பதைத் தான் விமர்சிக்கிறோம் என்று பல வருடங்களாகச் செய்துவருகிறார்கள். ஆனால் விமர்சனம் தவறல்ல. அதனுள் அறம் வழுவக் கூடாதல்லவா.? இளையராஜா விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவரது எத்தனையோ படங்களை பாடல்களை பின்னணி ஸ்கோர்களை கடுமையாக நிராகரிப்பேன் நான். விஷயம் அவர் கேள்விக்குரியவர் அல்ல என்ற பிம்பத்தைக் கட்டமைத்து அதனை வற்புறுத்துகிறாற் போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பது தான். சொல்லுங்கள் இளையராஜாவை வழிபடச்சொல்கிறார்களா அவரது ரசிகர்கள்..?


இளையராஜாவின் இசையும் குரலும் அவரது ரசிகர்களின் வழிபாடாகவே மாறுகிறது. இதனை எங்கனம் குறை சொல்ல முடியும்..?


அவரது குரலில் உருவான பாடல்களை புரிந்து கொள்ளாமலேயே விமர்சிப்பதை ஏற்பதற்கில்லை.இளையராஜா குரலில் ஆன பாடல்கள் மொத்தம் எத்தனைவிதம்..? சோகப் பாடல்கள் மற்றும் சந்தோஷப் பாடல்கள் என பொது வகைமையில் இரண்டாகக் கொள்வோம். இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று எழுதிக் கொள்ளலாம். அடுத்து விரித்தால் சோகப் பாடல்கள் பக்திப் பாடல்கள் குத்துப் பாடல்கள் சந்தோஷ டூயட்கள் என்று நாலாய் விரிக்கலாம்.


சரி அப்புறம்...?


வேண்டாம்... இது கேள்வி கேட்டு பதிலளிக்கிற இடமாகப் போய்விட்டது. வினா ஏற்கனவே கேட்கப் பட்ட அரதப் பழைய வினா. உலக அளவில் அயர்ச்சியை அந்தகாரத்தை வனாந்திரத் தனிமையை தோல்வியின் இயலாமையைத் தாள ஒண்ணாத துரோகத்தை வலியை நோய்மையை எத்தனையோ பேர் பாடியிருக்கிறார்கள். பெரும்பாலும் melancholy and sadness துக்கத்தையும் சோகத்தையும் உட்படுத்திய BLUE வகையறா பாடல்களை இந்திய நிலத்தில் அதிகதிகம் பாடிய தொழில் முறைப் பாடகர் யாராக இருப்பார்..?

 

பல்லாயிரக் கணக்கான பாடல்களைப் பாடிய வெற்றிகரமான எந்தப் பாடகரின் பேரையும் இந்தப் பட்டியலில் எழுதவே முடியாது என்பதும் இந்திய அளவில் அப்படியான ஆண் குரல்களில் தமிழில் இளையராஜா சந்திரபாபு  கமல்ஹாஸன் ஆகிய பேர்களைத் தான் சொல்ல முடிகிறது. அடுத்த தலைமுறையில் ரஹ்மானின் சில பாடல்கள் இந்த வகையறாவில் வரும். மற்ற படிக்கு தொழில்முறை வெற்றிகரம் அந்தகாரத்திற்கு எதிரானது. நிறையப் பாடல்கள் பாடுவதற்கான குரல் மேற்சொன்னவற்றில் மிளிராது. கன்னடராஜ்குமாரின் குரல் BLUE வகைமைப் பாடல்களுக்கானது என்பேன். நவ காலத்தில் பாடிக் கொண்டிருக்கிற இளைய குரல்களில் ப்ளூ வகைமைக்கான இளவரசன் கேகே என்றழைக்கப்படுகிற கிருஷ்ணகுமார் குன்னத்.

 

சரி இப்போது மீண்டும் ராஜா.
                      
ராஜா பாடிய பாடல்கள் ஒரே வகைப் பாடல்களாகத் தோற்றமளிப்பதிலிருந்து துவங்குகிறது அவர் குரல் ஜாலம். நுட்பமான உப வகைமைகளில் தான் இருக்கின்றது விசயமே. அவற்றை உன்னிப்பாகக் கவனித்த யார்க்கும் ராஜா குரல் பாடல்கள் தனித்தனி சேகரங்களாக குறைந்த பட்சம்  எட்டு தனி வகைப் பாடல்களாகப் பிரிவது புரிபடும்.


1. ‘வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்’, ‘காதல் கசக்குதய்யா’, ‘நிலா அது வானத்து மேலே’, ‘இது தான் இதுக்குத் தான்’, ‘ஏப்ரல் மேயிலே பசுமையேயில்லே’, ‘வாடி என் கப்பக்கிழங்கே’, ‘ மேகங்கருக்கையிலே புள்ள தேகங்குளிருதடி’.
 

2. ‘ஜனனீ ஜனனி ஜகம் நீ அகம் நீ’, ‘ பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே’.


3. ‘என் தாயெனும் கோயிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே’, ‘என்ன என்ன கனவு கண்டாயோ’, ‘அப்பனென்றும் அம்மையென்றும்’, ‘எங்கே செல்லும் இந்தப் பாதை’,  ‘கண்ணே நவமணியே’, ‘வீணைக்கு வீணைக்குஞ்சு’.


4. ‘சங்கத்தில் பாடாத கவிதை’, ‘பூமாலையே தோள் சேரவா’, ‘ மணியே மணிக்குயிலே’,கண் மலர்களின் அழைப்பிதழ்’,சிறு பொன்மணி இசையும் அதில்’,அடி ஆத்தாடி’, ‘வட்டி எடுத்த.. சோத்தப் போட்டுட்ட(கிராமத்து மின்னல்)’, ‘பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்’,தென்றல் வந்து தீண்டும் போது’,ஒருகணம் ஒரு யுகமாக’.


5.ஐயா வீடு தெறந்து தான்  இருக்கு உள்ளே புகுந்து பந்தி போடு பரணி பரணி பாடி வரும் தாமிரபரணீ நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுதெச பார்த்திருந்து நேத்து ஒருத்தர ஒருத்தரு பார்த்தோம்.


6.வார்த்தை தவறி விட்டாய் சோலப்பசுங்கிளியே தென் பாண்டிச் சீமையிலே நாரினில் பூத் தொடுத்து ஒரு ஜீவன் அழைத்தது துள்ளி எழுந்தது பாட்டு.


7. ‘எம்பாட்டு எம்பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து’,  ‘உன்னோட உலகம் வேறு என்னோட உலகம் வேறு’, ‘காட்டுவழி போற புள்ள கவலப்படாத’, ‘அரிதாரத்தைப் பூசிக் கொள்ள ஆசை’, ‘ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே’, ‘அழகே அமுதே பூந்தென்றல் தாலாட்டும்’.


8. ‘வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்’, ‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது’,சின்னபொண்ணு சேலை’, ‘புன்னகையில் மின்சாரம்’, ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போலவருமா’.


இளையராஜா பாடிய பாடல்களைப் பொதுவாக மேற்கண்ட எட்டு வகைமையாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு வகைமையிலும் பல்லாங்குழி முத்துக்களைப் போல் ஒவ்வொரு வெற்றிகரமான பாடலாக இட்டு நிரப்பிக் கொண்டே செல்லமுடியும். வியப்பு என்னவெனில் வேறு யாராலும் பாட முடியாத பாடல்களை மெய்யாய்ச் செப்பினால் கைவிட வேண்டிய பாடல்களைத் தேடித் தேடிப் பாடிய ஒரு பாடகர் இளையராஜா. இசை அமைப்பு என்பதன் ஒரு பரிணாமம் தான் எந்தப் பாடலை யார் பாடவேண்டும் என்று தீர்க்கமாய் முடிவு செய்வது. உலக அளவிலான மாபெரிய இசைக் கோர்வை கூட உள்ளூர் அளவில் முடங்கிப் போய்விடுகிற அபாயத்தை அதனை யார் பாடுகிறார்கள் என்கிற குரல் முடிவு செய்யும். பொது நம்பகத்தின் இன்னுமோர் பலவீனம் என்பது எல்லாப் பாடலையும் யார் வேண்டுமானாலும் பாடி விடலாம் என்பது. நேரடியாக மறுதலிக்க முடியும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பல பாடல்களை ஜேசுதாஸ் பாடியிருந்தால் நாம் ரசித்திருப்போமா என்ற கேள்வியை தொடர்ந்து பாடல்களை ரசித்து வருகிறவர் வசமே விட்டுவிடலாம்.  


        

நிற்க.


இப்பவும் தானொரு இசை மேதை என்பதைத் தன் இசைக்கோர்வைகளின் மூலமாக இசையைத் தோற்றுவிப்பதன் மூலமாகப் பல முறை நிரூபித்த இளையராஜா தான் பாடுவதற்காகத் தேர்வு செய்த அத்தனை பாடல்களையும் மேற்காணும் வகையிலான பட்டியலுக்குள் அடக்கிய பிற்பாடு ஒரு விஷயம் புரிபடும். அவற்றில் பெரும்பாலான பாடல்களைப் பாடுவதற்கான குரல் வேறு ஏதுமே இல்லை என்பதே அது.


ராஜா தீர்க்கதரிசி என்பது அவர் தான்  பாடுவதற்குத் தேர்வெடுத்த பாடல்களினால் புரிவது அல்ல. மாறாக அவர் அத்தகைய பாடல்களைப் பாடியபடியே தன் பாடல்களுக்கு இடையே இருக்கக் கூடிய நுட்பவித்யாசங்களைக் கண்கட்டி வித்தகன் ஒருவனைப் போல மறைத்து வைத்ததனால் தான் என்பேன்.


பிற பாடகர்கள் பாடிய அனெகமாக பாலு பாடிய சில பெருவெற்றிப் பாடல்களைத் தானும் பாடி அவற்றை கேஸட்டுகளில் மட்டும் இடம்பெறச் செய்திருப்பார் ராஜா. ஹரிஹரன் பாடிய என்னைத் தாலாட்ட வருவாளா கமல் பாடிய தென்பாண்டிச் சீமையிலே பாலு பாடிய கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்தால் அவை போலச்செய்த பாடல்களாக இராது. தன் நுட்பமான குரலால் இயன்ற அளவு அவற்றை வித்யாசப்படுத்தி இருவேறு பாடல் அனுபவங்களாக ஏற்படுத்தி இருப்பார் ராஜா . அவர் பாடி ரமணமாலை தொகுப்பில் இடம்பெற்ற பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் பாடலை திரைப்படுத்தும் போது மதுபாலகிருஷ்ணனைப் பாட வைத்திருப்பார். ரமணமாலையும் ராஜா பாடியதும் கேட்பவர் நினைவுக்கு வரக் கூடாது என்கிற எத்தனமும் அதில் அடங்கி இருக்கும்.

ராஜா பிறமொழிகளிலும் பாடி இருக்கிறார். துக்கம் தாபம் தனிமை அந்தகாரம் இன்னபிறவற்றைப் பாடுவதென்பது எளிதான வேலை அல்ல. அதனையும் அனாயாசமாகச் செய்து காட்டிய பாடகர் இளையராஜா யாராலும் பாடமுடியாத பாடல்களைத் தனதாக்கிக் கொண்டவர். நம் வசம் தந்தவர் என்பதே மெய்.
                  
                  பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே...
                  இங்கு போராடும் சருகான பூமனம் தாங்காதே....
                  நான் ஒன்று எண்ணித் தவிக்க
                  தானொன்று தெய்வம் நினைக்க
                  துன்பத்தில் என்னைத் தள்ளிப் பார்க்காதே 
                  என் நெஞ்சம் தாங்காதேஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு உடன்பிறப்பு படத்தில் பாடிய சோழர் குலக் குந்தவை போல் எனும் பாடல் முதல் முறை கேட்டபோதிலிருந்தே மனதில் அட்டகாசமாய் அமர்ந்து கொண்டது...ஈருடலில் ஓருயிர் தான் நீயும் நானும் வேறு என்ன சொல்ல...? என்ற இடத்தில் கரைந்து குழையும் இருகுரலும்.


இளையராஜா பாடிய பாடல்களைப் பற்றிய என் அனுமானம் பிறரால் பாடவியலாத பாடுவதற்கான மிகத்துல்லியமான குரல் அகப்படாத பாடல்களை மாத்திரம் அவர் பாடியவரில்லை. அவை அவர் பாடிய பாடல்களில் சிலபல. அவற்றைத் தாண்டி அவர் பாடிய பாடல்களில் பெருவாரிப் பாடல்கள் வெற்றிபெற்ற சூப்பர்ஹிட் பாடல்களாக அமைந்தது தற்செயலல்ல. மேற்சொன்ன ப்ளூ வகைமைக் குரலாளர்கள் உலக அளவில் தாபம் பொங்குகிற பாடல்களையும் பாடியிருப்பது கூறத்தக்கது. இளையராஜாவின் வசீகரம் அப்படியான பாடல்களைத் தன்னாலான அளவு வித்யாசப் படுத்தியது தான். உதாரணமாக ஆத்தாடி பாவாட காத்தாட என்ற பாடல் பூவிலங்கு படத்தில் இடம்பெற்றது. அதன் துவக்க இசை மிகப் பலமான புல்லாங்குழல் ஒற்றையாகத் தொடங்கி மெல்ல தாளக்கருவியில் நிலைபெறும். ஆத்தாடி பாவாட காத்தாட எனத் தொடங்கி குளிக்குது ரோசா நாத்து எனும் போது ஒளிந்திருந்து காணக் கிடைத்த தழுவல் காட்சிபோல மனமெங்கும் விரவும்.


உன்னிப்பாகக் கவனித்தால் ஆபாசமாகவோ முகஞ்சுளிக்கிற அளவுக்கோ இந்தப் பாடல் சென்றுவிடாமல் இருப்பதற்கான கடிவாளமாக இந்தப் பாடலின் பின்மைய இசையை மென் சோக இசைக்கோர்வையாகவே அமைத்திருப்பார். தாளக்கட்டு காதலும் சரசமும் பொங்கும். தன் குரலால் கடிவாளம் கட்டி இருவேறு குதிரைகளைப் பாடலின் பூர்த்தி கணம் வரைக்கும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பார் ராஜா.

 

காரணமின்றிக் கண்ணீர் வரவழைக்கிற பாடல்களைத் தந்த அதே குரலா மனதின் அணுக்கமான அடியாழத்திலிருந்து பரவசத்தையும் கிளர்ச்சியையும் உற்பத்தி செய்தது என்ற வினாவுக்கு அந்த ராஜாவால் மாத்திரமே பதிலளிக்க முடியும். காதல் கசக்குதய்யா போன்ற பாடல்களை லேசான அயர்ச்சியுடன் பாடி இருப்பார் ராஜா.


ஜேசுதாஸ் உடன் ராஜா இணைந்து பாடிய பாடல்களில் கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும் என்ற பாடல் எப்போதும் இனிக்கும் ரகம். கடல் சார்ந்த இசையை இந்தியப் படங்களில் சலீல்தா ராஜா உட்பட வெகு சிலரே துல்லிய அற்புதங்களாக வார்த்திருக்கிறார்கள். அப்படியான பாடல்களில் இதுவும் ஒன்று. முழுவதுமாக சற்று மேல் தளத்தில் ராஜாவும் கொஞ்சம் இறங்கிய இடத்தில் ஜேசுதாஸூம் பாடியிருப்பது ரசம். இரண்டு குரல்களும் இணைந்தொலிக்கிற இடங்களிலெல்லாமும் விலகி நெருங்கி பரவச கேட்பனுபவமாக விரிந்திருக்கும்.

 அவதாரம் படத்தில் வருகிற அரிதாரத்தைப் பூசிக் கொள்ள ஆசை பாட்டை ராஜா எடுத்திருக்கும் அழகே அழகு. நாசர் குரலில் வசனங்களும் ராஜா குரலில் பாடலும் மாறி மாறி தொடங்கும்.ஒரு கட்டத்தில் நாசர் பாடுவதாகவே நம் மனம் நம்பும். இளையராஜா குரலில் நேர்த்திய அற்புதங்களில் இந்தப் பாடலும் ஒன்று என்பேன். 


இளையராஜா தன் குரலில் பாடிய பாடல்கள் எத்தனை இருந்தாலும் கூட ஆகச்சிறந்த பெருவிருப்பப் பாடலாக இதனைத் தான் சொல்ல முடிகிறது. இதனைக் கேட்ட மாத்திரத்தில் இருந்து இந்தக் கணம் வரைக்கும் எனக்குள் சதா ஆலவட்டங்களை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிற அந்தப் பாடல் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது. ஜானகியுடன் சேர்ந்து பாடியிருப்பார் ராஜா. ஆட்டோராஜா படத்தில் இடம்பெற்ற இப்பாடல் பல மொழிகளிலும் ராஜாவால் பயன்படுத்தப் பட்டது.

          
பூமணி படத்தில் ராஜா பாடிய தோள் மேல தோள் மேல பாடல் சுஜாதவுடன் பாடியிருப்பார் ராஜா...

 
நான் இருந்தேன் வானிலே மேகமாய்
ஏன் விழுந்தேன் பூமியில் வேகமாய்
வீழ்ந்ததும் நல்லதே தாகமாய் உள்ளதே

 

 

மறக்க முடியாத பாடல். இந்தப் பாடல் முழுவதையும் மென் நோய்மை கலந்த குரலில் பாடி இருப்பார் ராஜா. உடன் பாடிய சுஜாதா குரலுக்கேற்ற ஓரிடத்தில் ஒலிக்கும் முழுப்பாடலும்.


இளையராஜா இசையின் பேருரு. ஒரு கட்டுரையின் சிற்றளவுச் சொற்களில் அடங்கிவிடார். இன்னும் ராஜானுபவம் விரியும்…

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...