???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 22 - அகலத் திறந்த மனம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   16 , 2017  21:43:42 IST


Andhimazhai Image

பாடல்களைப் பற்றி உரையாடுவது பாடல் கேட்பதைப் போன்றே சுகமானது. ஒரு சிட்டிகை சுகம் கூடுதல் என்றால் தகும். விஷயதானத்துக்கான களம் திரைப்பாடல்கள். ஒரு பாடலை முன்வைத்துத் தொடங்குகிற உரையாடல் வழுவாமல் பாடல்கள் குறித்ததாகவே அமையுமானால் நேரம் போவதே தெரியாது. அப்படிப்பட்ட உரையாடலை சாத்தியப்படுத்துவதற்கு அகலத் திறந்த மனமும் கொஞ்சம் பாடல்களுடனான அதிகதிகப் பரிச்சயமும் வேண்டும். போதும்.

 

ஜெயப்பாண்டி அண்ணன் ஒரு தொழில் அதிபர். அப்படித் தான் சொல்வார். சொந்தமாய் ஒரு லாரி. எலுமிச்சம் பழமெல்லாம் கட்டாத லாரி என்பதில் கூடுதல் பெருமிதம்.ஒவ்வொரு மனுஷனும் ஒரு கேரக்டர்யா.. என்ற வாக்கியம் தான் அவர் பால் என்னை ஈர்த்தது. லாரி ட்ரைவர்களின் உலகம் வேறுவிதமானது. தூரத்தை நேரத்தால் சதா வகுத்துக் கொண்டு தன் உயிரை மேசை மேல் எடுத்து வைத்து ஆடுகிற பலப்பரீட்சை தான் லாரிட்ரைவிங்.உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதில் தொடங்கி உறவுகளை தன் சொந்த வீட்டை அவ்வப்போழ்து வந்து சந்திக்க மட்டுமே வாய்க்கிறது வரை முற்றிலும் வேறு வாழ்க்கை அவர்களுடையது. அதில் தன்னாலான அளவு எந்தப் பழக்கத்திலும் ஆளாகாமல் சொந்த லாரியும் சொந்தக் கொள்கைகளுமாய் வாழ்ந்து வருவதாகத் தான் தன் கதையைத் தொடங்குவார் ஜெயப்பாண்டி. சுளீர் பார்வையும் பளீர் பதில்களுமாய் ஜெயப்பாண்டி பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.


தண்ணி அடிப்பீங்களா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலை எப்படிச் சொல்வார் தெரியுமா..? அதான் பாட்டு இருக்கில்ல..? ஒவ்வொரு பாட்டும் ஒரு சரக்கு பாட்டில் தானே..? பத்தாது..? என்பார். சிரித்துக் கொள்வேன்.


ஜெயப்பாண்டியின் வருகையும் அத்யந்தமும் எனக்குப் பாடல்கள் குறித்த சில முக்கியத் திறப்புக்களைத் தந்தன.புரியாவினாக்களாக புறந்தள்ளி இருந்த சிலவற்றுக்கான பளிச் பளிச் விடைகள் வந்து விழுந்தன அவர் வாய்ச்சொற்களின் மூலமாக. மனிதர் எப்போதும் கண்கலங்கச் செய்யும் சோகப்பாடல்களை மாத்திரமே கேட்பார். அதுவும் தன் செல்பேசியின் மெமரி கார்ட் முழுவதும் கிட்டத் தட்ட நூற்றைம்பது பாடல்களை நிரப்பி இருப்பார். பர்ஸில் மெமரி கார்டுகளை தனியே பத்திரமாய் வைப்பதற்கென்றே சின்ன அழகான ப்ளாஸ்டிக் பொட்டு டப்பா ஒன்றை வைத்திருப்பார். அதில் கசகசவென நாலைந்து மெமரி கார்டுகள் இருக்கும்.1 முதல் 7 வரை எண்ணிட்டு இருப்பார். அவருக்கு மட்டும் தான் தெரியும் எதன் உள்ளே என்னென்ன பாடல்கள் இருக்கின்றன என்று.

 

அழகாக வரிசைப்படுத்தப் பட்ட காலக்கிரம தொகுதிகளாய் சோகப் பாடல்கள். முழுக்க முழுக்க அவரது பயணங்களின் போதெல்லாம் அத்தகைய பாடல்களை மாத்திரமே கேட்பார். ஏன் எனக் கேட்டால் சாதாரணமாகப் பேசமாட்டார். அதற்கான பதிலை தனக்குள்ளேயே அந்தக் கேள்வியைப் பலதடவைகள் கேட்டுக் கேட்டே அடைந்தார் ஜெயப்பாண்டி. அந்த வினாவுக்கான விடை இந்த அத்தியாயத்தின் நிறைவில்.

 

வைகறையில் வைகைக் கரையில் இது குழந்தை பாடும் தாலாட்டு... நானும் உந்த உறவை அமைதிக்குப் பெயர் தான் சாந்தி நூலும் இல்லை வாலும் இல்லை போன்ற ராஜேந்தர் பாடல்கள் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன். உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி பட்டு வண்ண ரோசாவாம்  வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் தீர்த்தக்கரை ஓரத்திலே தென்மதுரை மாடத்திலே ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே மன்னவனே சின்னவனே மாலையிட்ட தென்னவனே உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு என் ராசா என் மேல் ஆசை இல்லையா..? கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே பூங்கொடி தான் பூத்ததம்மா பூங்காத்து திரும்புமா..? ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே வந்தனம் என் வந்தனம்.


இவை ஒரு ஞாபகத் தகட்டில் இருக்கிற பாடல்களின் சரளி. இவற்றைத் தொடர்ந்த பாடல்களும் இதே காலகட்டத்தைச் சேர்ந்த பாடல்களாக எண்பதுகளுக்கென்று தனியாகத் தேர்வெடுத்த பாடல்கள் இருக்கும்.


இன்னொரு ஞாபகத் தகடு முழுவதும் முன் பழைய கறுப்புவெள்ளை காலத்தின் சோகப் பாடல்கள்.


ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ எனத் தொடங்கும் ஏழை மகள் எங்கு செல்வேன் யாரிடம் சொல்வேன்..? ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு பிறக்கும் போதும் அழுகின்றான் கோட்டையிலே ஒரு ஆலமரம் அதில் கூடு கட்டும் ஒரு மாடப்புறா பல்லாக்கு வாங்கப் போனேன் நினைக்கத் தெரிந்த மனமே வீடு வரை உறவு என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்.,..? மாலைப் பொழுதின் மயக்கத்திலே ஒரு கனவு கண்டேனடி தோழி இரவும் வரும் பகலும் வரும் இரண்டும் ஒன்று தான். யாருக்காக இது யாருக்காக..?

 

ஜெயப்பாண்டியின் சோகப் பாடல்கள் தொகுப்பு அற்புதமானது என்பேன்.தன்னை அறியாமல் காலக்கிரம வரிசையில் எப்படி ஒரு பெருந்தலைப்பின் கீழ் உப தலைப்புக்களைக் கலைத்துப் போட்டுத் தொகுத்தால் இனிக்கும் என்பதை உணர்த்திய பாடல் சேகரம் அவை. மேலும் இன்றைக்கு பெரிய நிறுவனங்களின் கேஸட் கலெக்சன்களைக் கண்ணுறுகையிலெல்லாம் ஜெயப்பாண்டியின் வரிசை கூட பெரிய மாற்றங்களின்றி வெளிவருவதைக் காண முடிகிறது.


                நிற்க.


சோகப் பாடல்களின் உளவியல் என்ன? வாழ்வின் அபத்த மொத்தம் மறதி.மனிதன் நாளும் நல்ல மற்றும் நல்ல என்றே ஓட விழைகிற ஓட்டம் தான் வாழ்க்கை.அதில் அவனுக்குத் தன்னந்தனியாய்க் குளித்தேற ஒரு இருள் பொழுது நதி நனைதல் தேவைப்படுகிறது. அவை தான் பாடல்கள். சப்தமாக ஒலிக்கிற அவற்றின் வரிகள் தங்களால் ஆன மட்டும் சந்தோஷத்தைக் காதலை நட்பை உறவை பாசத்தை கூடலை இன்னபிறவற்றை எல்லாம் ஒலிக்கின்றன. அவன் அவற்றின் பிரதிகளாகத் தன்னையும் தனக்கு இஷ்டமானவர்களையும் எண்ணிக் களிக்கிறான். அதே நேரத்தில் சோகப் பாடல்கள் மென்மையாக ஒலிப்பதையே அவன் விரும்புகிறான்.பாவனையில் சோகப்பாடல்களைத் தன் வாழ்வின் ஒப்புமையற்ற சம்பவங்களின் தொகுப்பாகவே பார்க்க விழைகிறான். சில பாடல்களை மனப்பாடம் செய்த பின்னரும் முதல் தடவை கேட்பதைப் போன்றே ததும்புகிறான். ஓங்கிக் குரலெடுத்து அழுது தீர்க்கவேண்டிய தன் வாழ்வின் இயலாமைகளை மெல்லத் துளித் துளிக் கண்ணீராக மாற்று நிர்வாகம் செய்து கொள்கிறான். பாடல்கள் அவனுக்குத் தேவைப்படுகிற சகலத்தையும் தந்தருள்கின்றன.தன் தெய்வ இஷ்டமாகவே சில பாடல்களை பொத்தி வைத்துக் கொள்கிறான்.


உலக அளவில் எல்லா மொழிகளிலும் எல்லா நிலங்களிலும் காதலும் சோகமும் இணை பிரியாத இருப்புப் பாதைகளைப் போலவே தோற்றமளிக்கின்றன. அவலச்சுவை இலக்கியம் என்றே இத்தகைய பாடல்களைக் குறிப்பிட முடியும்.இவற்றின் சொல்லாடல்கள் எப்போதுமே விரும்பத்தகாத வெறுப்பின் எதிர்மறைக் குறியீடுகளாய்த் தான் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தமேதும் இல்லை. தமிழிலும் கூட எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்.நான் வாழ யார் பாடுவார்..? எங்கிருந்தலும் வாழ்க.நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துகள் எலோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே.. என சொல்லத் தக்க பல பாடல்கள் கொஞ்சமும் எதிர்மறைத் தன்மை இல்லாமல் தொனித்ததையும் குறிப்பிட வேண்டும்.


எனக்குப் பிடித்த பாடல்கள் என்றில்லை.என்னால் தவிர்க்கவே முடியாத பாடல்களின் வரிசையில் வருகிற மூன்று சோகப் பாடல்களை இங்கே வரிசைப் படுத்தலாம் .சோகப் பாடல்களின் இன்னொரு உபவிபரம் என்னவெனில் அவை எளிதில் ஹிட் ஆகி விடும். மேலும் அவற்றின் ஒலியாள்கைக் காலம் மிக நெடியது.பன்னெடுங்காலம் ஒலித்தவண்ணம் இருப்பவை சந்தோஷ கானங்களை விட இத்தகைய சோகப் பாடல்களே.


என்றோ ஒரு நாள் நான் கேட்க விழைந்த இந்தப் பாடல் இன்றளவும் எனக்கு மிகமிகப் பிடித்த பாடல் என்பேன்.கண்ணதாசனின் மாயவரிகள் இத்தனை சிக்கனமாக அதே நேரத்தில் ஒரு காற்புள்ளி கூட குறைக்கவியலாத வசீகரத்தை எல்லா வரிகளிலும் கொண்டிருக்கும் இப்பாடல் அத்யந்தத்தின் பாடல்,ஏகாந்தத்தின் பாடல்.இன்று நேற்றல்ல.இன்னும் ஆயிரமாயிரம் வருடகாலம் நிலைத்திருக்கப் போகும் மகாகானம் இது.


ஓராயிரம் பார்வையிலே வல்லவனுக்கு வல்லவன் சவுந்திரராஜன் பாடிய பாடல் இது.

ஓராயிரம் பார்வையிலே 
உன் பார்வையை நான் அறிவேன் 
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மலைக்குள் வாடிவிடும்
நம் கடலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

இந்தக் காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூ முகம் காணுகின்றேன்


சிவாஜி கணேசன் மரணிக்கிற வரையில் நான் அவரது நடிப்பைப் பாராமுகம் காட்டியவனாகவே இருந்தேன்.என் வாழ்வில் ஒரு மனிதனை அவரது மரணத்தின் பொழுது உணரத் தொடங்கி அவருக்குப் பெரும் ரசிகனாக மாறியது சிவாஜிக்குத் தான். அதுவும் நம் காலத்தின் உச்ச பட்ச நடிகன் சிவாஜி தான் என்பதை என்னால் சான்றுகளுடன் விளக்கி நிரூபிக்க முடியும். பந்தபாசம் என்றொரு கருப்பு வெள்ளைத் திரைப்படம். மாயவநாதனின் எழுத்துக்களில் அதிலொரு பாடல்.


சூழல் என்னவென்றால் சிவாஜியும் தேவிகாவும் லவ்வர்ஸ். ஆனால் சூழ்நிலை காரணமாக தேவிகாவை விடுத்து அவரது சித்தி மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியவராவார் நாயகன். அந்தத் திருமணத்திற்கு எதிர்பாராமல் வந்து சேர்வார் தேவிகா. ரெஜிஸ்டர் மேரேஜ் என்பதால் நாலைந்து ஆட்கள் தான் இருப்பார்கள். உங்களுக்கு ஏதும் ஆட்சேபணை உண்டா என அங்கிருக்கும் ஒவ்வொருவரையும் கேட்பார் பதிவாளர். இல்லை என்பார் சிவாஜி. இல்லை என்பார் மணப்பெண் இல்லை என்பார் தேவிகா. திருமணம் நடக்கும் மங்கல நாண் ஏறும். தேவிகா தனியறை போய்த் தரையில் வீழ்வார். அன்றைய இரவு முதல் இரவல்லவா..? அதற்கு முந்தைய கணத்தில் சிவாஜியின் முகத்தில் இருளும் கருமையும் செய்வதறியாமையின் வெம்மையும் ஒருங்கே பொங்கும்.

 

மனையாளோ தனக்கு இஷ்டமான ஒருவன் கணவனாய்க் கிடைத்த திருப்தி ததும்பும். தேவிகாவுக்கோ இனி வாழ்க்கையில் வேறென்ன இருக்கிறது என்ற ஊசலாட்டமும் வெறுமையும் வழியும். அடுத்தடுத்த ஷாட்களில் இவற்றைக் காட்சிப்படுத்தி விட்டு நேரே நம்மைப் பாடலுக்குள் அழைத்துச் செல்வார் பீம்சிங். இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராசனால் தான் இத்தனை வன்மையாகப் பாடியிருக்க முடியும். ஒரு முழுப் பாடலிலும் சிவாஜி நம்மைத் தன் பரிமளிப்பென்னும் சிலுவையில் பாவனை ஆணிகளால் அறைந்திருப்பார். இமை விலகாது பார்த்து முடிப்போம். இன்றும் நாயக நடிப்பின் இலக்கணம் சிவாஜி தான் என்பதை மௌனத்தின் சிற்சில சின்னஞ்சிறிய ஷாட்களின் மூலமாய் அழகாக உணர்த்தியிருப்பார் சிவாஜி


   
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
கொண்ட குறியும் தவறிபோனவர்கள் எத்தனையோ
(நித்தம் நித்தம் )

குறை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது
காதல் கதையில் பாதி நடக்கும்போது திரைவிழுந்தது
தங்கை உயிர் தானிருந்த இடத்தில நின்றது
கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது
கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது
(நித்தம் நித்தம் )

இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது
குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று கடமை என்றது
காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது
என்றும் மேடு பள்ளம் உள்ளது தான்வாழ்க்கை என்பது
என்றும் மேடு பள்ளம் உள்ளது தான்வாழ்க்கை என்பது
(நித்தம் நித்தம்)

தனிக் கொடியாய் நடை இழந்து தவித்தது ஒன்று
அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க நின்றது ஒன்று
இதற்கிது தான் என்று முன்பு யார் நினைத்தது
வழி இங்கு வந்து முடியும் என்றால் யார் தடுப்பது
வழி இங்கு வந்து முடியும் என்றால் யார் தடுப்பது
(நித்தம் நித்தம்


வாழ்வில் தோற்றவர்கள் என்று தனியே ஒரு குழுமம் இருக்கிறதா என்ன..? வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் இடையிலான எண்ணிக்கை வித்யாசங்கள் வேண்டுமானால் மாறுபடலாம். எல்லோருக்குள்ளேயும் இயலாமையின் நதிகளும் நிறைவேறாமையின் நிழல்களும் இருக்கத் தானே செய்கின்றன.வெளித்தோற்றத்தில் எல்லா விதங்களிலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவே காட்சி அளிக்கிற பலரிடமும் நான் அவ்வப்போது கேட்பதுண்டு.சோகப்பாட்டு பிடிக்குமா என்று.. அதற்கு எனக்குக் கிடைத்த பதில் எஸ்.. ரொம்பப் பிடிக்கும். எனக்கே எனக்குன்னு நான் மட்டும் கேட்பேன் என்று தங்கள் வாழ்வின் முரண்சுவையாகவே அதனை வரிசைப்படுத்துவார்கள். நல்லது. அதற்கும் வேண்டுமல்லவா பாடல்கள்.? மனிதனின் தெய்வ-இஷ்டம் என்று சொல்லலாம் தானே பாடல்களை..?

 

கமல் நடித்து தயாரித்த குணா ஒரு அற்புதமான படம். எனக்குப் பதினைந்து வயது, என்ன மாதிரியான உணர்வெனக் கண்டுகூற முடியாத அழுத்தம் எனக்கு இப்படத்தைப் பார்த்த மாத்திரத்தில் உருவானது. இந்தப் படத்திலிருந்து வெளியே வர எனக்கு நாட்கள் ஆனது. அதன் ஒரு பாடலை சென்ற நூற்றாண்டின் ஆகச்சிறந்த பாடல்களின் வரிசையில் எப்போதும் வைப்பேன். இளையராஜா இசையில் வாலி எழுதியது. எஸ்.ஜானகி பாடியது.உன்னை நான் அறிவேன் 
என்னை அன்றி யார் அறிவார் 
கண்ணில் நீர் வழிந்தால் 
என்னை அன்றி யார் துடைப்பார்
யார் இவர்கள் மாயும் மானிடர்கள் 
ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் 


தேவன் என்றால் தேவன் அல்ல 
தரை மேல் உந்தன் ஜனனம் 
ஜீவன் என்றால் ஜீவன் அல்ல 
என்னைப் போல் இல்லை சலனம் 
நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை 
நானோ யாரும் வந்து தங்கிச் செல்லும் மாளிகை 
ஏன் தான் பிறந்தாயோ 
இங்கே வளர்ந்தாயோ 
காற்றில் நீ ஏன் சேற்றை வாடைக் கொள்ள வேண்டும் 
 
ஜெயப்பாண்டியிடம் ஒரு நாள் கேட்டேன்..   ஏன் பிரதர்..? எல்லாரையும் விட ட்ராவல்ஸ் ட்ரைவர்கள் குறிப்பா லாரி ட்ரைவர்கள் நிறைய சோகப்பாட்டு கலெக்சனைத் தேடித் தேடிக் கேட்குறீங்க..? அதும் மத்த பாட்டுக்களை விட அளவுக்கதிகமா சோகப்பாடல்களை எப்பிடிக் கேட்க முடியுது.? என்ன காரணம்..?"


இதனை பதில் அறிவதற்கான கேள்வியாக மட்டும் கேட்டுவிடவில்லை. எனக்குள் பதில் இல்லை என்பதற்குப் பின்னதான ஞானத் தேடலாகவே இதனைக் கேட்டேன். நீயாவது சொல்லேன். ஏதாவது சொல்லேன் என்கிற தொனியில் கேட்டிருப்பேன். வந்து விழுந்த பதில் அத்தனை கச்சிதமாய் இருக்கும் என்று சிறிதும் எதிர்நோக்கியிருக்கவில்லை.


"அதுவா ரவீ...லாரி ட்ரைவர்ஸ் நெடுந்தூரம் வண்டி ஓட்டணும். இன்னிக்கு வண்டி எடுத்தா திரும்ப வீடு வந்து சேர குறைஞ்ச பட்சம் பதினைஞ்சு நாள். அதிகம் போனா நாப்பது நாளெல்லாம் வீட்டைபிரிஞ்சி இருக்க வேண்டி இருக்கும். பொண்டாட்டி தர்ற சொகத்தைக் கூடக் காசு குடுத்து வாங்கிக்கலாம்னு வைங்க... கொழந்தைக தர்ற முத்தத்தை எங்கயும் வாங்க முடியாதில்லையா..? இதுக்கு நடுவுல உசுரு ரிஸ்க் வேற.. அதான் வீட்டையும் குழந்தைகளையும் பிரிஞ்சு தூரம் போற வேதனையை இன்னொரு பாத்திரத்துக்கு மாத்திக்கிறாப்ல தான் அத்தனை சோகப் பாட்டும். அது சோகம் இல்லைங்க.. கூட வர்ற வழித்துணை."


   அந்தப் பதில் எனக்குப் போதுமானதாயிருந்தது.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...