???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் 19 - குறுநில ராஜாக்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   26 , 2016  22:09:39 IST


Andhimazhai Image

பாலபாரதி எங்கள் ஊர்க்காரர். சுற்றி வளைத்தால் மூன்றாம் பங்காளியாய்க் கூட வரலாம். யார் கண்டது. ஜோக்ஸ் அபார்ட். திருநகர் புண்ணிஸ்தலம். பெரும்புகழ் இயக்குனர் சீனுராமசாமிக்கு முன் திருநகரில் இருந்து நாங்கள் பார்க்க சினிமாவில் மின்னியவர் பாலபாரதி. தலைவாசல் அதிரி புதிரி ஹிட். சென்ற அத்தியாயத்தில் சொன்னாற் போல் அதிகாலைக் காற்றே நில்லு பாடல் புத்தம் புதுக்காலையை நினைவுபடுத்தும். ஆனால் இசையில் ஒரு பாடலின் செல்வாக்கு இன்னொரு அல்லது சில பாடல்களில் தென்படுவது என்பது வேறு. சாயல்கள் வேறு போலிகள் வேறு தானே..? அந்த வகையில் சோழா பொன்னுரங்கம் தூர்தர்ஷனில் வழங்கிய நீலா மாலா செம்மை ஹிட் அடிக்க அது தந்த உற்சாகத்தில் பெரிய திரையில் அதே டீமோடு குதித்து எடுத்த முதல் படம் தான் தலைவாசல். அதற்கடுத்த படம் அமராவதி. மாண்புமிகு அஜித்குமார் அவர்கள் அவதரித்த முதல் படம்.


பாலபாரதியின் இசை பலவகையில் பேசவேண்டியது. தமிழ்த் திரையில் அங்கும் இங்கும் இருந்தும் இல்லாமலும் இருந்த கானா எனப்படுகிற நகர – விளிம்பு - நிலப் பாடல் வகைமையை அதற்குண்டான இலக்கில் பரிசோதித்த முதல் படம் அமராவதி. தலைவாசலில் கூட அதன் தடயங்கள் தெரிந்தன. தமிழ்த்திரையிசையைப் பொறுத்தவரை தேனிசை தேவா தான் கானா என்றதும் நினைவுக்கு வருவார் என்றாலும் பாலபாரதி அதற்குண்டான சாலையில் அந்தக் குதிரையை ஓட்டிக் காட்டினார்.


வான் நிலவே வெண்பனி நிலவே என் கனவினில் நீ உலவிப் போனாய் என் கானாவினில் நீயும் மயங்கினாய் என்ற பாடலைப் பாடிய குரல் பதிவாக்கிய விதம் படமாக்கிய தன்மை எனப்பலதும் மிளிரும். நாந்தினந்தோறும் ரிக்சா ஓட்டிப் பொழைக்கிறேன் பாடலாகட்டும் வந்தனம் வந்தனம் வந்த சனம் குந்தணும் ஆகட்டும் அன்றைக்கு செவிவழி இதயங்களைக் கபளீகரம் செய்தன.


உடலென்ன உயிரென்ன பாடலைப் பாடிய அஷோக்கை பாலபாரதி பத்தாண்டுகளுக்கு அப்பால் மீட்டு வந்தார். அமராவதியிலும் அவரது பாடல்கள் முழுவதும் வித்யாசமாகவும் தீர்க்கமாகவும் இருந்தன. அத்தனை நல்முத்துக்களை வைரமுத்து நல்கினார். பின்னரும் சில படங்களை இசையமைத்தாலும் தன் முதல் இரண்டு படங்களைப் போலப் பரிமளிக்கவில்லை பாலபாரதி. பாடல் இசையாகட்டும் பின் இசையாகட்டும் அவரது திறமை நிஜமாகவே போற்றுதலுக்குரியது.


மரகதமணி இசையில் பாலச்சந்தர் சிலபல படவாய்ப்புக்களை அளித்தார். அவற்றில் வானமே இல்லை ஒரு வைரம்.. பாலச்சந்தர் இளையராஜாவிடமிருந்து ஏ.ஆர் ரஹ்மானுக்குப் போகின்ற வழியில் மரகதமணி இசையமைப்பில் படங்கள் உருவாக்கியது தற்செயலோ திட்டமோ அழகன் மற்றும் வானமே எல்லை இரண்டுமே ம்யூசிக்கல் ட்ரீட்ஸ் தான். அதிலும் பாலச்சந்தர் படங்கள் இசைக்கும் பாடல்களுக்குமான குறைந்த பட்ச ஸ்கோப்பைத் தாண்டிய பெருவெளியை உருவாக்கித் தருபவை. அதனை உணர்ந்து அழகன் படத்தில் சாதிமல்லிப் பூச்சரமே ஆகட்டும் சங்கீத ஸ்வரங்கள் ஆகட்டும் அற்புதம். மரகதமணியின் மாஸ்டர்பீஸ் என்னைப் பொறுத்தவரை அழகனில் தத்தித்தோம் வானமே எல்லை படத்தில் சோகம் இனி இல்லை இரண்டும் தான்.

 

கீரவாணி என்ற பேரில் பாகுபலி வரை பட்டை கிளப்பினாலும் மரகதமணி பாலச்சந்தரைத் தாண்டி வேறார் படங்களிலும் தமிழில் எழுந்தாடவில்லை. அவரது நிலம் தெலுகு. அங்கே அவர் கில்லி. தட்ஸ் இட்.


ரஞ்சித் பரோட் ஒரே ஒரு படம் என்றாலும் வீ.ஐபி என்ற படத்தில் மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே பாடல் ஹரிஹரனின் உச்சபட்சம். அதுவும் ஏறிக்கொண்டே செல்லும் ராஜபாட்டை அந்தப் பாடல். ஈற்று வரிகளும் இரண்டாவது சரணமும் குழைந்து கேட்பவரை வென்றேடுக்கும்.


துள்ளித் திரிந்த காலம் பாலசேகரனின் பெரிதும் எதிர்பார்ப்பைத் தந்து ஏனோ சரி வெற்றி அடையாமற் போன படம். தீவானா தீவானா எனும் பாடல் அதிரிபுதிரி. இந்தப் படத்துக்கான இசை ஜெயந்த் பின்னணி ஸ்கோர் வீ.எஸ்.நரசிம்மன். இதே இயக்குனரின் லவ் டுடே படத்தில் சிவா இசையில் ஏன் பெண்ணென்று பிறந்தாய் முகமது அஸ்லம் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய பாடல் மெய்சிலிர்க்க வைக்கும் சர்க்கரைக்கட்டி. இதையே உன்னிகிருஷ்ணன் சோலோவும் உண்டு. பாலு பாடிய என்ன அழகு எத்தனை அழகு பாடல் காதலைத் தெரிவிக்கிறவர்களின் தேசியகீதம்.


ஓவியன் இசையமைப்பில் தினந்தோறும் எனும் படம். என் வானம் நீதானா எனும் பாடலும் கண்ணுக்குள் சுகம் பாய்ந்ததென்ன உயிரே இந்தப் பாடல் ஓ பூமாலை அதில் தேன் இவ்வேளை எனும் பாடலின் சாயலிசையில் மலர்ந்திருக்கும். மொத்த போக்கும் வெவ்வேறு டெம்போவின் சங்கமமாய் மின்னும். ஸ்வர்ணலதா மற்றும் உன்னிகிருஷ்ணன் பாடிய அபூர்வம்   இப்பாடல்.


பாதியில் உதிர்ந்த மகேஷ் இசையமைத்த படங்கள் சொற்பமே. இருந்தபோதிலும் வெரைட்டி என்ற சொல்லோடு பொருத்தி எப்போதும் நோக்கக் கூடிய பன்முக இசைத்தன்மை மிக்க படங்கள் அவை. நம்மவர் மற்றும் குருதிப்புனல் ஆகியவை மட்டுமல்லாது ஆளவந்தான் படத்தின் இசையை ஷங்கர் எசான் லாய் ஆகியோர் அமைக்க பின் இசையை வழங்கியவர் மகேஷ். மகேஷின் இசை குருதிப் புனல் படத்தில் இன்னொரு கதாபாத்திரமாகவே மாறி சிலிர்ப்பைத் தந்தது .


ப்ரேமிசுகுண்டாம் ரா படத்திலிருந்து மகேஷின் ஒரு தீர்க்கமான டூயட். காதல் பொன்மானே உன் காவல் நான் தானே..?  ஓடங்கள் படத்தில் இந்தப் பாடல் இன்னுமொரு பாடல் அல்ல. இன்றைக்கும் கேட்பவர் மனசில் தனக்குண்டான ஒரு இடத்தைத் தட்டிப் பறிக்கக் கூடிய பிடிவாதப் பறவை இந்தப் பாடல். அந்த வருடத்தின் உற்சாகப் பீறிடல் பாடலாக அமைந்த சந்தனப் பூவை சம்மதம் கேட்கப் போறேன் போறேன் பங்குனி மாசம் பரிசம் போட வாரேன் வாரேன் என்ற பாடல் சம்பத் செல்வன் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சில்லிடும் குரலில்  தாலாட்டிற்று. 


ஜோஷ்வா ஸ்ரீதர் காதல் படத்தில் உனக்கென இருப்பேன் என்ற பாடல் ஏ.ஆர்.ரஹ்மானின் பூங்காற்றிலே உன் ஸ்வாசத்தை பாடலின் விலகு தளத்தில் இயங்குகிற அற்புதமான பாடல். ஸ்ரீதரின் இசை மிகத் துல்லியமானது. இந்த ஒரு பாடல் குன்றின் மீதேற்றப் பட்ட விளக்கு.

 

இந்த வரிசையில் பரணி குறிப்பிடத் தகுந்த இன்னொருவர். இளையராஜாவின் இசைப்பாணியால் உந்துதலாகித் தன் தனித்துவத்தையும் விடாமல் கிட்டத் தட்டப் பத்துக்கும் மேற்பட்ட சூப்பர்ஹிட் ம்யூசிக்கல் ஸ்கோர்களைத் தந்தவர் பரணி.


பார்வை ஒன்றே போதுமே படத்தின் அத்தனை பாடல்களும் தேன்மிட்டாய் மற்றும் தேங்காய்பர்பி வகையறா பாடல்கள். இந்த இடத்தில் ஒரு சின்ன தகவல்
   
நண்பன் மூவேந்தனும் நானும் கல்லூரியில் ஒரே பருவத்தில் வெவ்வேறு பட்டப்படிப்பைப் படித்தோம். ஆனாலும் எப்போதும் ஒன்றாகவே இருப்போம். ஒருநாள் அவனும் நானும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கம் போல பெரியார் நிலையத்தில் சந்தித்து விட்டு அடுத்து எங்கே நகரலாம் என்று மார்க்கெட்டில் திரியும் யானை போல யோசித்துக் கொண்டிருந்தபோது தான் அந்தப் பாடலை முதல் முறை கேட்டோம்.


துளித்துளியாய் வரும் மழைத்துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்தி விட்டாய் எனும் பாடலின் ஏதோ ஒரு வரியில் நானும் மூவேந்தனும் தொலைந்து போனோம். அது ஒரு முழுமையான பாடல்.


திடீரென்று மூவேந்தன் கேட்டான்..இந்தப் படத்தோட கேஸட்டை வாங்கிட்டு உன் வீட்டுக்குப் போயிடலாமா ரவீ..?.


உண்மையில் நானும் அவனும் எல்லா விடுமுறை தினங்களிலும் சந்தித்து விடுவோம். திருநகர் அண்ணா பூங்கா அல்லது பெரியார் நிலையம் பாண்டி பஸாரை ஒட்டி இருக்கும் கிறித்துவ ஆலயம் பஸாருக்குள் சீ.எஸ்.ஆர் ஸ்னாக்ஸ் அல்லது மல்லிகை புத்தக நிலையம் எதுவும் தோன்றாத போதுகளில் என் வீட்டிலேயே அமர்ந்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருப்போம்.

 

அது நல்ல யோசனையாகப் பட்டதால் அந்தப் படக் கேஸட்டோடு என் வீட்டுக்குச் சென்று அந்தப் பாடலை முப்பது முதல் தடவைகள் கேட்டோம். கிட்டத் தட்ட பாடலின் இண்டு இடுக்குகள் எல்லாமும் மனனம் ஆன பின்னால் டீ குடிப்பதற்காக திருநகர் 2 ஆவது ஸ்டாப்புக்கு ஸ்கூட்டியில் சென்று திரும்பும் வழியில் மறுபடி மூவேந்தன் சொன்னான் ரவீ என்னால அந்தப் பாட்டுலேருந்து வெளில வர முடியலைடா..


வழக்கமாக இளையராஜா பாடல்களுக்கு மாத்திரம் தரக் கூடிய க்ரெடிட் அது. சட்டென்று ஒரு புதிய ம்யூசிக் டைரக்டருக்குத் தூக்கித் தரவா முடியும் மனசுட்ராஃபியை..? இளையராஜாவின் பாடல் துவக்கங்களைப் போலவே தனது பாடல்களைத் துவக்கித் தருவதை பரணி இயல்பாகச் செய்தார். பாடிய குரல்கள் ஸ்வர்ணலதா மற்றும் ஹரிஹரன் இருவரும் தங்கள் ஆதித் தொனியைப் பெயர்த்துக் குழைத்து அந்தப் பாடலை உயிர்ப்பித்திருந்தார்கள். இதெல்லாம் தவிர வேறேதோ அந்தப் பாட்டினுள் அதிகதிகமாக இருந்து கொண்டு எங்கள் இருவரையும் இம்சைப் படுத்திற்று.


மூவேந்தனிடம் சொன்னேன்...நண்பா...இந்தப் பாட்டுல பல்லவி முடிஞ்சதும் வர்ற இணைப்பிசை ரொம்ப பலமா இருக்கு கவனிச்சியா என்றேன். அவனும் பிடி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் ஆமாடா அதைத் தான் நானும் சொல்ல ட்ரை பண்ணிட்டிருந்தேன் என்றான். அந்த இணைப்பிசை இன்னமும் என் மனதுக்கான டைடில் ம்யூசிக்காகவே நிரந்தரித்து விட்டது எனலாம்.


கேசட் தேயும் வரை பாடு கரண்ட் தீரும் வரை பாடு கம்பெனி கலையும் வரை பாடு என்றாற் போல கேட்டுக் கொண்டே இருந்தோம் அந்தப் பாடலின் இடையிசையை மட்டும் பிறகு பாடலை மட்டும் பல தடவைகள் கேட்ட பின் கலைந்தோம். அடுத்த நாள் சந்திக்கும் போது மூவேந்தன் சிரிப்புடன் சொன்னான் நண்பா நம்ம கூடவே வருதுடா அந்த ம்யூசிக்கும் இல்ல என்றான்.? நான் ஆமோதித்தேன்.


டக்கென்று அவன் அப்படிக் கேட்பான் என எனக்குத் தெரியாது நண்பா அந்த இசைத்துணுக்குக்கு மட்டும் வரி எழுதேன் என்றான். அதாவது அந்த இருபது வினாடி இசையை எடுத்துக் கொண்டு இருக்கிற  பாடலில் இருந்து துண்டித்து அதையே தனிப் பாடலாக மாற்றி எழுத சொன்னான்.


அந்தப் பாடலின் சுட்டியை இங்கே தருகிறேன். 5 நிமிடம் 09 நொடிகள் ஓடக்கூடிய இந்த பாடல் வீடியோவில் மிகச்சரியாக 01.36 முதல் 01.56 வரை இருபது வினாடிகள் வரக்கூடிய அந்த இணைப்பிசையைத் தனியே கேளுங்கள் 
  
1)  
அன்பாலே  பூத்தமுல்லை 
ஓர்வார்த்தை போதவில்லை 
வேறெங்கும் தேடவில்லை 
உன்பேரைச்  சொல்கிறேன்

2)
உனக்குள் நான் கலந்தேன்
உனக்குள் நான் தொலைந்தேன்
உனக்குள் நான் கரைந்தேன்
உன்னாலே வாழ்கிறேன்இந்தப் பாடலின் இடையே வருகிற இந்த இசைத்துணுக்கிற்கு நான் மொத்தம் எழுதியது பத்துப் பதினைந்து பல்லவிகள் இருக்கக் கூடும். இப்போது நினைவில் நிற்பது இவ்விரண்டு. மேற்கண்ட இசைத்துணுக்கைப் போலவே கேட்ட போதிலிருந்து பலகாலம் தன்னையே தொழச் செய்த இன்னும் இரண்டு இணைப்பிசைக்கான பாடல்களை இங்கே சொல்லலாம்.


காதல் சுகமானது படத்தில் சொல்லத் தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது இந்தப் பாடல் முழுவதிலும் சினேகா புன்னகைத்தபடி நடனமாடி இருப்பார். தெலுங்குப் புன்னகை அது. மொழி பெயர்க்கப் பட்ட படத்தின் பாடலும் பாடிய சித்ராவின் குரலும் அமுதமாய்ப் பிரவகிக்கும். இந்தப் பாடலின் காணொளியில்  இரண்டாவது சரணத்துக்கு முந்தைய இணைப்பிசை மொத்தம் 02.54ஆம் நிமிடத்திலிருந்து 03.14 நிமிடம் வரைக்குமானது.


சேரனின் பொக்கிஷம் படத்தின் நிலா நீ வானம் காற்று எனும் பாடலின்  துவக்க இசைத்துணுக்கு மொத்தம் இருபத்தியெட்டு வினாடிகள் வரக்கூடியது. துவக்கத்தைப் போலவே நாலாவது நிமிடத்தில் மறுபடி வருகையில் வசனக்கோர்வைகளுக்குப் பின் இசை தந்தவாறு உருவாக்கப் பட்ட இந்தப் பாடலில் வழமையான பல்லவி சரணம் இடையிசை என்றில்லாமல் பாடலின் ஊடுபாவாகவே இந்தத் துவக்க இசைக் கோர்வை இயங்கி இருக்கும். சபேஷ் முரளியின் அற்புதமான இந்தப் பாடல் பல இரவுகள் தூக்கங்கெடுத்தது.


இன்றைக்கும் இந்தப் பாடல்களைக் கேட்டால் ஒரே ஒரு முறை கேட்பதோடு விடுதலையாகி வெளியேற முடிவதே இல்லை. சாவி ஏதோ ஒரு முன் பழைய காலத்தில் இருக்கிறது. இனி இவற்றை எப்படித் திறப்பது..?

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...