???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை -10- கற்றது கல்வி மட்டுமல்ல... ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 என் இனிய தயாரிப்பாளர்களே....!பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்! 0 தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை!- முதல்வர் அறிவிப்பு 0 கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று 0 புதிய கல்வி கொள்கை: முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு 0 நாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா உறுதி 0 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா 0 ஆளுநர் பன்வாரிலால் கொரோனா தொற்றால் பாதிப்பு 0 தமிழகத்தில் 5,875 பேருக்கு தொற்று பாதிப்பு 0 கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்: முதலமைச்சர் 0 கொரோனா தாக்கம் 10 ஆண்டுகள் நீடிக்கும்: WHO 0 தமிழகத்தின் எதிர்காலத்துக்கு அ.தி.மு.க துரோகம்: ஸ்டாலின் 0 அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம்: மு.க.ஸ்டாலின் 0 கொரோனா மருந்தை கள்ளச்சந்தையில் விற்று செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதா? - வைகோ கண்டனம் 0 ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் 24 மாநிலங்கள் இணைந்தன
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 14 - ஆடல் பாடல் காதல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   15 , 2016  00:11:02 IST


Andhimazhai Image

"அதாவது தலைவா... உங்களுக்குப் பிடித்த பாடகர்கள் யார்..?"  இது ஒரு அபத்தமான கேள்வியாய்த் தான் படும். தொழில் முறைப் பாடகர்களில் பலரையும் சேர்த்தே ரசிக்கும் மனது ஒவ்வொருவருக்கும் வாய்க்கும்.? நித்யஸ்ரீ மகாதேவனையும் ஜானட் ஜாக்ஸனையும் மால்காடி சுபாவையும் இன்னும் பலரையும் சேர்த்து ரசிக்கையில் மேற்காணும் கேள்விக்கு எப்படிப் பதில் தருவது.?


நிற்க. இந்த வாழ்க்கையில் தனி மனது சொந்தம் கொண்டாட விழைகிற எல்லாமுமே அபத்தங்களாகவும் அற்பங்களாகவும் தான் பிறரால் பார்க்கப்படும்.கலை என்பது கூட்டத்தின் கண் காது மனது இத்யாதிகளுக்கானவை அல்ல. ஒவ்வொரு பூவாய்க் கோர்த்த மாலை கலை. அப்படி இருக்கையில் பிடித்த பாடகர்கள் என்பதனுள் இருக்கக் கூடிய சங்கேதங்கள் அபூர்வமாய்க் கிட்டுகிற மற்றொன்று.எந்த ஜோடிக் குரலை பெரிதும் விரும்புவீர்கள்..? இப்போது அதே கேள்விதான். ஆனால் டோனும் ட்யூனும் வேறல்லவா..?


கண்களை மூடிப் பார்க்கக் கூடிய காட்சி தான் திரைப் பாடல் என்பது. தங்களையே அந்தப் பாடலின் நாயக நாயகிகளாக மாற்றிக் கற்பனை செய்து கொண்ட பற்பலரைக் கொண்டதே முன் பழைய எழுபதெண்பதாம் ஆண்டுகளின் காலகட்டம். அந்த வகையில் எஸ்.பீ.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி இவ்விருவரும் சேர்ந்து பாடிய எத்தனை எத்தனை பாடல்கள் காலத்தால் அழியாத குரல்கோலங்களாக இசைஜாலங்களாக நிரந்தரித்துக் கொண்டிருக்கின்றன..? நூறு இருநூறு... ஏன் அதற்கு மேலான பாடல்கள் இவ்விரு பேர்களைச் சொன்னதும் நினைவுக்கு வருகின்றனவா இல்லையா..?


பேர் பெற்ற PAIRகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி உண்டல்லவா..? இவ்விரு ஜோடிக் குரலின் ரசிகர்களுக்கு மாத்திரம் தனித்த இன்னொரு கேள்வி.. இவர்களை வைத்து அதிகதிக ஹிட் பாடல்களைக் கொடுத்த இசை அமைப்பாளர் இளையராஜா தானே..? இதென்ன கேள்வி யெஸ் என்று பதில் வரும் என்று தானே நினைக்கிறீர்கள்..? இந்த பதில் சரிதான். ஆனால் இளையராஜாவை விட அதிகதிக பாடல்களைத் தங்கள் இசைவாழ்வின் சகல தருணங்களிலும் இவ்விருவருக்கும் தந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பேர் ராஜன் நாகேந்திரா. ராஜன் நாகேந்திராவை என் வாழ்க்கைக்குள் அழைத்து வந்தவன் நண்பன் பரணி.


பரணியும் நானும் எப்போதாவது சந்தித்துக் கொள்வோம். ஒவ்வொரு முறையுமே அடுத்த முறை எங்களது சந்திப்பு எப்போது நிகழும் என்று இருவருமே ஏங்கிய கணமொன்றில் தான் அந்த சந்திப்பு நிறைவடைவதை இருவருமே உணர்ந்தவாறு பிரிவோம். அவரவர் உலகங்களில் எங்கள் இருவருக்குமே நிறைய வேலைகள் இருந்தன. அப்படிச் சொல்வதை விட இருவேறு உலகங்களில் எங்களைப் பிடித்துக் கொள்வதற்கான விலங்குகள் அனேகமிருந்தன எனலாம். ஆனாலும் வெடித்துச் சிதறும் பட்டாசைப் போல இதற்கு மேல் தாங்க முடியாது என்றாகும் தினத்தில் ஒருவர் மற்றவரைத் தேடி வந்து விட்ட இடத்திலிருந்து தொடங்கிக் கொள்வோம். எங்களை இணைக்கும் மாயச்சரடு மிக வலுவானதாயிருந்தது. அதன் பேர் ரசனை.


ஒரு வித்யாசமான பாடலை அல்லது வாத்ய இசையைக் கேட்க நேர்கையிலெல்லாம் அந்த இசையின் மந்திரப் பிடிமானத்திலிருந்து விடுபடும் கணத்தில் என் நினைவுக்கு வரும் பெயர் பரணி. என்னளவில் இசை தனிமையில் வாய்க்க வேண்டிய அற்புதம். ஆனாலும் அது பூர்த்தியடைந்த மறுகணம் சேகரமான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள குறைந்த பட்சம் இன்னொரு மனது வேண்டும்.இல்லாது போனால் மனதினுள் கொட்டிப் புதைத்த பிரார்த்தனையின் பலவீனமான சொற்சேர்க்கையாய் மெல்ல அந்த இசைக்கும் நமக்குமான உணர்வனுபவம் குன்றிப் போய்விடும் அபாயம் உண்டு. எல்லார்க்கும் எல்லா இசைக்குமானதன்று முன் சொன்ன வாக்கியம். பகிர்ந்துகொள்வதற்கான ஒரு இணை மனதென்பது இசை மீதான ரசனைத் தொடர்ச்சியின் உன்னதத்தை மங்காமல் பார்த்துக் கொள்ளக் கூடிய ரசவாதம். இருந்தால் நலம்.


பரணி அனாவஸ்யத்துக்கு என்னை அழைக்கவே மாட்டான். செல்பேசியை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பதை எனக்குக் கற்றுத் தந்தவனும் அவனே. முதலில் ஒரு குறுஞ்செய்தி வரும். ஒரு மணி நேரம் கழித்து அழைக்கலாமா என்று. அதற்கு ம்ம் சரி என்று ஒரு பதிலை அனுப்பிவிட்டு அந்த ஒரு மணி நேரத்துக்குள் மானசீகமாய் ஒரு மென் தடாகத்து நடுமண்டபத்துக்குச் சென்று அமர்ந்து கொள்ளவேண்டியது. அதன் பின் அந்த அழைப்பு நீண்டுகொண்டே போவதை யாராலும் ஆட்சேபிக்க முடியாது.


"ராஜன் நாகேந்திரா கேட்டிருக்கியா..?" என்று ஒரு நாள் அவன் கேட்ட போது யாரென்றே தெரியவில்லை என்ற சத்தியமான பதிலைச் சொன்னேன். உடனே பரணி லேசாய் சிரித்தவாறே வீட்டுக்கு வீடு வாசப்படி படத்துல ஆடல் பாடல் காதல் என்பது அப்போது பாட்டு நினைவிருக்கா என்றான்.நானும் பரணியும் பல பாடல்களை துரத்தித் துரத்திக் கண்டடைந்திருக்கிறோம். தொண்ணூறுகளின் துவக்கத்தில் சாடிலைட் சானல்கள் வராத காலத்தில் தொடங்கியது எங்கள் தேடல் கலந்த சினேகம், வாழ்வை விஸ்தீரித்துக் கொள்வதையே லட்சியமாய்க் கொண்ட ஒருவனால் தான் வெற்று வெளியில் துண்டை விரித்துக் கண்ணயர முடியும். இசை ரசனையில் எனக்கு நேரெதிரான ஒருவன் பரணி. அவனை சந்தித்த முதல் தினம் அரை மணி நேர உரையாடலிலேயே ஒரு வாழ்காலத்துக்குத் தேவையான அளவு தாண்டி அவனை வெறுத்தேன். காரணம் இளையராஜா.

என் வாழ்வை நான் ராஜாவுக்காக ஒதுக்கி வைத்திருந்தேன். அவரிடம் எந்த வழியிலாவது ஒப்படைத்து விடுவதே என் வாழ்வின் அர்த்தமாகவும் நகர்தலாகவும் இருந்தது. இளையராஜா இசையைத் தாண்டி இசை என்ற ஒன்று இல்லவே இல்லை என்று பலமாக நம்பினேன். அவரே வந்து சொன்னாலும் அதன் மாற்றுக்கருத்தை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு சைத்தானாகவே என் மனதை ராஜவிஸ்வாசம் மாற்றி இருந்தது. பரணியை முதன் முறை சந்தித்த போது எனக்கு எவ்வாறெல்லாம் ராஜா பிடிக்கும் என்று நான் சொல்லி முடித்த அடுத்த கணம் பரணி சொன்னது இது தான். "ராஜா ராஜான்னு உங்க சுயத்துக்கு துரோகம் செய்துக்காம அவரைத் தாண்டுங்க ரவி. இல்லைன்னா செக்கு மாடு மாதிரி ஆய்டுவீங்க"


இது போதாதா..? ராஜாவைப் பற்றிப் பேச ஒரு தகுதி வேண்டாமா என்பேன். ராஜாவைப் பற்றிப் பேசுவதற்கான தகுதி யாருக்கும் இல்லை என்பதே என் நம்பகம். இதென்ன வன்முறை.. நானும் என் ராஜாவுமாய் வாழும் ராஜவாழ்க்கையில் இவன் யார் நரதுரோகி...? என்று உடனே வெறுத்தேன். பரணி தன் மென்மையான அதேசமயம் உறுதியான குரலில் தான் சொல்ல வந்ததை அழுத்தந்திருத்தமாய் மறுபடி விளக்கினான்.


"ஒரு மனிதனின் இசைப்பணியை எவ்வளவு வேண்டுமானாலும் நேசிக்கலாம். ஆனால் இசை என்பது எந்த ஒரு மனிதன் சார்ந்த ஆராதனையாக நின்றுவிடக் கூடாது. அப்படி நின்று விடுவது உண்மையிலேயே நமக்கு நாமே செய்து கொள்ளும் வன்முறை. இசை என்பது உண்மையில் ஒரு தீராப்பசி. எப்போதும் நிறுத்த முடியாத தேடல். கணக்கு வைத்துக் கொள்ளாத ஓட்டம். அப்படி இசையில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வாய்க்கிற தேடலில் பல ஆண்டுகளைத் தொலைத்துப் பல காலகட்டங்களின் பல நிலங்களின் இசைவகைமைகளைக் கண்டறிந்த பின்னரும் உங்கள் ஆதார பிடிமானம் மாற்றமடையாமல் இருக்குமேயானால் அது தான் உங்களுக்கு விருப்பமான இசைமேதைக்கு நீங்கள் செய்யும் பதில் மரியாதை" என்றபோது பரணியை நிசமாக நேசிக்க ஆரம்பித்தேன்.


நிற்க. அதன் பின்னர் பரணியுடனான என் ஸ்னேகம் இறுகிப் பெருகியது இயல்பானது தானே..? இப்போது ராஜன் நாகேந்திராவுக்கு வரலாம்.


நான் பரணியிடம் ஆடல் பாடல் காதல் பாடலை நினைவில்லை ஆனால் அந்தப் படத்தின் தலைப்புப் பாடலான வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப்படி பாடல் நினைவிருக்கிறது என்றேன். அந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் தான் ராஜன் நாகேந்திராவா எனக் கேட்டேன். அப்போது பரணி சொன்னான்., ராஜனும் நாகேந்திராவும் சகோதரர்கள் என்று. இந்தியத் திரை உலகில் இசைத்துறை என்று மட்டுமில்லாமல் பொதுவாய் அனைத்துத் துறைகளிலும் கிட்டத் தட்ட நாற்பது வருடங்களுக்கு மேலாக இணைந்து பணியாற்றிய இரட்டையர்களில் உடன் பிறந்த சகோதரர்கள் வரிசையில் முதன்மையான இருவர் ராஜனும் நாகேந்திராவும் என்று சொன்னதோடு அந்தப் பேச்சு நிறைந்தது.


பின்  நாட்களில் கன்னடப் பாடல்கள் மீதான என் பார்வை வலுவான தேடலாக மாறியதற்குக் காரணமாய் அமைந்தது ஒரு கன்னடப் பாடல். . ஏதோ சாடிலைட் சேனல்களை மாற்றிக்கொண்டே இருந்த ஒரு நள்ளிரவு நேரம் அந்தப் பாடலை முதல் முறை பார்க்க நேர்ந்தது. காரணமின்றிக் கண்ணீர் வரும் என்ற ராஜாவின் வரிக்கேற்ப முதல்முறை சொற்களில் அடங்காத பெருஞ்சோக ஒலிச்சித்திரமாக எனக்குள் ததும்பியது அப்பாடல். சத்தியத்துக்கு அன்றைய தினம் கன்னடம் என்னும் மொழியின் ஒரு சொல்லைக் கூட பொருளோடு அறிந்திராதவனாக இருந்தேன். என்றபோதும் இசையின் தனித்துவமே வேறுபாடுகளை மௌனிக்கச் செய்துவிடுவது தானே.? என்னால் அழாமல் இருக்க முடியவில்லை.


அப்போதெல்லாம் என் டைரியில் கடக்க நேர்கிற அபூர்வமான பாடல்களை அவற்றின் துவக்க வரிகள் அதில் நடித்தவர்கள் உள்ளிட்ட ஜாதக விபரங்களைக் குறித்து வைத்துக்கொள்வேன். நானும் பரணியும் சந்தித்துக் கொள்ளும் போது F I R எங்கே என்பான். காவல் நிலையத்தின் முதல் தகவல் அறிக்கையைப் போன்றே அதன் பக்கங்களை மேலதிகாரத் தோரணையோடு புரட்டிப் பார்த்துத் தன்னாலான முடிச்சுக்களை அவிழ்ப்பான் பரணி. இந்த இடத்தில் அவனைப் பற்றிய இந்த மேலதிகத் தகவல் உதவக் கூடும். பரணியின் தாய்மொழி தெலுங்கு. அவனது பதினைந்தாவது வயதிலிருந்து வசிப்பிடம் பெங்களூரு. ஆக தமிழ் நாட்டுக்கு மாதமொருமுறை வந்து செல்லும் தேவதூதனாகவே திகழ்ந்தான். இந்த இரண்டு மொழிப்பாடல்களையும் என்னை விட அருகாமையில் தரிசிக்கும் வாய்ப்புப் பெற்ற பக்தகோடி அவன்.        


வீட்டுக்கு வீடு வாசப்படி படம் மும்மொழிகளிலும் எடுக்கப் பட்டது. கன்னடம் மற்றும் தெலுங்கில் சூப்பர்ஹிட் படம் அது. தமிழிலும் வெற்றி பெற்றதென்றாலும் மற்ற இரண்டு நிலங்களோடு ஒப்பிடுமளவு இல்லை. பாடல்கள் மூன்று மொழிகளிலும் சூப்பர்ஹிட் ஆகின.

  தெலுங்கில்
  கன்னடத்தில் 
 தமிழில்

மூன்று மொழிகளிலும் இசை அமைத்தவர்கள் ராஜன் சகோதரர்கள்.

மூன்றிலும் பாடியவர்கள் எஸ்.பீபி மற்றும் எஸ்.ஜானகி. மூன்று பாடல்களையும் வெவ்வேறு காலகட்டங்களில் இசை அமைத்த ராஜன் பிரதர்ஸ் மைய இசையை அப்படியே வைத்துக் கொண்டு பாடலின் துவக்க இசையை மாத்திரம் லேசாக மாற்றி மாற்றி அழகூட்டி இருப்பது ஒரு ரசம் என்றால் இடையிசையின் வாத்தியங்களுக்கு இடையே இருக்கக் கூடிய வித்யாசமாற்றமும் இப்பாடலை இன்னும் அழகாக்கி இருக்கும்.

இசையில் எனது ப்ரியமான காலமாக எண்பதுகளைக் குறிப்பிடலாம். அதனை ஒரு ஊடுபாவாகக் கொண்டு எண்பதுகளுக்கு முன்னரும் பின்னருமாய் வெளியான பாடல்களை கவனிக்கத் தொடங்கிய போது கன்னடத் திரை இசையில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அரசாட்சி புரிந்த ராஜன் சகோதரர்களின் இசை மீதான ஈர்ப்பும் புரிதலும் அதிகரித்தது. ராஜன் நாகேந்திரா கன்னடத் திரை உலகம் மாத்திரமல்லாமல் தெலுங்கிலும் தங்கள் முத்திரைகளைப் பதித்த வித்தகர்கள்.


ராஜப்பா ஒரு இசைக் கலைஞர்,மௌனப் படக் காலத்திலேயே திரை இசை அமைத்தவர். அவரது இரண்டு மகன்கள் ராஜனும் நாகேந்திராவும்.1952இல் அறிமுகமாகும் போது ராஜனுக்கு 19 நாகேந்திராவுக்கு 17 வயது. தொடக்கத்திலிருந்தே பெரும்புகழை அடைந்த சகோதரர்கள் இசையை மிக அழகாகப் பிரித்துப் பணியாற்றிவர்கள். ராஜன் பாடலுக்கான இசையை அமைப்பார். அதற்கான பாடல்வரிகளை எழுதிப் பெறுவது குரல்தேர்வு தொனி இன்னபிற விஷயங்களை நாகேந்திரா கவனிப்பார். ராஜன் நாகேந்திரா ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தென் இந்தியத் திரை உலகின் சரிபாதியில் கோலோச்சிய இசையரசர்கள். தெலுங்கில் இருநூறு படங்களுக்கு இசை அமைத்த ராஜன் சகோதரர்கள் கன்னடத்தில் முன்னூறு படங்களுக்கு மேல் இசை அமைத்தவர்கள். காலத்தோடு இசைந்து திரை இசை அடைய வேண்டிய அல்லது அடைந்து கொண்டிருக்கிற மாற்றங்களைத் தங்களது திரைப்படங்கள் பாடல்களின் ஊடாகத் தீர்மானித்த கன்னட இசையுலகின் தீர்மானராஜாக்கள் இவ்விருவரே.

 

தமிழில் சொற்பப் படங்களுக்கே இசை அமைத்த ராஜன் பிரதர்ஸ் பாடல் இசையில் மாத்திரமல்ல பின்னணி இசையிலும் பெரும் ஞானத்தைக் கொண்டிருந்தவர்கள். பல்வேறு உணர்ச்சித் ததும்பும் சூழல்களுக்கும் பாடல்களுக்கும் தங்கள் அற்புதமான இசையை வழங்கிய ராஜன் சகோதரர்களில் இளையவரான நாகேந்திரா 2000 ஆமாண்டு இயற்கை எய்தினார். 83 வயதாகும் ராஜன் மாஸ்டரின் மகன் ஆர்.ஆனந்த்குமார் தற்போது கன்னடப் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். அவரது படங்களில் ராஜன் மாஸ்டருடைய பங்கேற்பு இருந்துவருகிறது.


இளையராஜா கங்கை அமரன் சகோதரர்கள் இணைந்து ராஜன் சகோதரர்களின் படங்களில் கீபோர்ட் மற்றும் ட்ரம்ஸ் இசைத்திருக்கிறார்கள் என்பதும் வயலின் மேதைகள் சகோதரர்கள் எல்.ஷங்கர் மற்றும் எல்.வைத்யநாதன் ஆகியோர் முதல்வரிசை வயலினிஸ்டுகளாக ராஜன் சகோதரர்களின் படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பதும் கூடுதல் தகவல்கள். இந்தப் பாடல் குல்லா ஏஜண்ட் 000 என்ற கன்னடப் படத்திற்காக இந்திப் பாடகர் கிஷோர் குமார் பாடியிருக்கிறார்.
  
தமிழில் ஆட்டோராஜா என்ற பேரிலான படத்தில் இந்தப் பாடல் (மலரே என்னென்ன கோபம்..?) இடம்பெற்றது. தமிழில் இசை அமைத்தவர்கள் சங்கர் கணேஷ். அதிலும் சங்கத்தில் பாடாத கவிதை பாடல் மாத்திரம் இளையராஜா இசையில் இடம்பெற்றது. ஆட்டோ ராஜா கன்னடத்தில் சூப்பர் ஹிட் படம் மாத்திரமல்ல. அதன் பாடல்கள் ராஜன் சகோதரர்களின் இசையில் பெரிதும் புகழப்பட்டதும் கூட.  நலிவா குலாபி ஹூவே பாடியவர் எஸ்.பீ.பாலசுப்ரமணியம்.


ராஜன் சகோதரர்களின் இசையில் எஸ்.பிபாலு உருகி உருகிப் பாடிய பற்பல பாடல்கள் கன்னட இசைக்கான கொடை என்றே சொல்ல முடியும். கீழ்க்காணும் இரண்டு பாடல்கள் ஜஸ்ட் ஒரு சாம்பிள்.

  நன்ன ஹாடு நன்னது சுப்ரபாதா   எஸ்.பீ.பாலு
 Ee Hrudaya Haadide -    Suprabhaata -     எஸ்.பீ.பாலு 

 nanu neenu ondada mele - Na ninna bidalare எஸ்பீபி ஜானகி திகில் படமான இதன் பாடல்கள் அனைத்துமே பெரிதாக ரசிக்கப்பட்டன.அதிலும் இந்தப் பாடல் மெல்லிய உற்சாகத்தையும் லேசான அமானுஷ்யத்தையும் கலந்து குழைந்ததாக அமைந்திருந்தது. கொஞ்சும் குரலில் இப்பாடலின் பல்லவியை பாடலின் இறுதிவரை பாடகர்கள் இருவருமே அசாத்யமாய்ப் பாடியிருப்பார்கள்.

 (ராஜ்குமார் ஜானகி) எல்லல்லே நோடல்லி நா நின்ன மரியாலரே

நின்று சுழன்று ஓரிடத்தில் குவிந்து மறுபடி அதே இழையாய்ப் பெருகும் இடையிசை ராஜன் சகோதரர்களின் பெரும்ப்ரியமான இசைப்பாணியாகவே இருந்திருக்கிறது. இந்தப் பாடலின் சரணம் எங்கும் அப்படியே குவிவதும் முடிவதும் மீண்டும் துவங்குவதுமாக இருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் உச்ச மத்ய மற்றும் நீச்ச ஸ்தாயிகளை மாற்றி மாற்றிப் பாடுகிறவர்களின் குரலில் உற்சாகத்தையும் பரவசத்தையும் கசிந்து உருகுவதையும் ஒரே பாடலுக்குள் கொணர்ந்து விடும் வித்தை சாத்தியப் படுவதை உணரலாம். ஏ.ஆர் ஆனந்த் எழுதிய கன்னட நாவலான நானு நீனு ஜோடி யை ஆதாரமாய்க் கொண்டு தயாரிக்கப்பட்ட நா நின்ன மரியாலரே என்னால் உன்னை மறக்கமுடியாது என்று பொருள்படும் இந்தப் படம் ராஜன் நாகேந்திரா இசையமைத்து ராஜ்குமார் நடித்த மற்றும் பாடிய படங்களில் மிக முக்கியமான படம். இந்தப் படத்தில் ராஜ்குமார் இரண்டு டூயட்களை வாணி ஜெயராமுடனும் ஜானகியுடனும் சேர்ந்து பாடி இருக்கிறார்.


ராஜ்குமார் தெரியுமல்லவா..? கன்னடத்து எம்ஜி.ஆர் என்றே சொல்லலாம். கன்னட ராஜ்குமார் என்று ரசிகர்களால் பெரிதும் மகிழ்ந்து போற்றப்படுகிற இந்தியத் திரைவானில் தன்னை சாஸ்வதப்படுத்திக் கொண்ட சூப்பர்ஸ்டார்களில் ஒருவர். கன்னடத் திரை வரலாற்றில் இவரை விஞ்சிய புகழை அல்லது போற்றுதலை வேறார்க்கும் தரத் தயாராக இல்லை கன்னட நிலம் என்பது இவரது இடத்துக்கான சாட்சி.


ராஜ்குமாரைப் பொறுத்தவரையில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் உருவான உச்ச நட்சத்திரங்களில் தனக்கான பாடலைத் தானே பாடி நடித்த சமீபத்திய நட்சத்திரம் எனலாம். தமிழில் கமல் மற்றும் விஜய் ஆகியோர் தங்கள் படங்களில் அவ்வப்போது பாடல்களைப் பாடியிருந்தாலும் கூட ராஜ்குமார் தொழில்முறைப் பாடகர்களின் வரிசையில் அறியப்படுகிறவர். நூற்றுக்கணக்கான ஹிட்ஸ் பாடல்கள் அவரது பெருமைசாற்றுபவை.


1978 இல் வெளியான இரு நிலவுகள் என்றோரு படம். நேரடித் தமிழ்ப்படம் அல்ல. தெலுங்கில் இருந்து தமிழில் பெயர்க்கப் பட்டது. இந்தப் படத்தில் கமல்ஹாஸன் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார் .தொலி வலப்பு தொந்தரலு இந்தப் பாடலை எஸ்.பி.பாலுவும் ஜானகியும் பாடி இருப்பார்கள்.  இதன் தமிழ்ப் பாடல் தொடவரவோ தொந்தரவோ என்று அதே இணை பாடியது. கேட்டால் மயக்கும் பாடல் இதோ.


ராஜன் நாகேந்திரா கன்னடத்தின் ராஜாக்கள். கேட்பவரை வசீகரிக்கும் மிக ஆழமான இசைமந்திர வசீகரர்கள். தென் இந்தியத் திரை இசையின் தகர்க்க முடியாத சிகரங்கள்.

 

( ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...