???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநரைச் சந்தித்தார் முதல்வர் பழனிசாமி 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் எதிரொலி : மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அதிரடி மாற்றம் 0 தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட் கிளையில் மனு 0 கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற குமாரசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து 0 கர்நாடகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் குமாரசாமி 0 தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி 0 தூத்துக்குடியில் தொடரும் பதற்றம்: காவல்துறை வாகனம் தீ வைத்து எரிப்பு 0 துப்பாக்கி தோட்டாக்களால் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது: ராகுல்காந்தி பொளேர் 0 தூத்துக்குடி பெருந்துயரத்துக்கு யார் காரணம்? ப.சிதம்பரம் விளாசல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: தமிழக அரசு விளக்கமளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு 0 ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: விஜய் சேதுபதி கடும் கண்டனம் 0 தூத்துக்குடியில் தொடரும் பதற்றம்: இயல்பு வாழ்க்கை முடங்கியது 0 தூத்துக்குடியில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு 0 பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் – 39 - நிரந்தரத்தைப் பாடியவன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   16 , 2017  00:48:27 IST


Andhimazhai Image

கண்ணதாசனின் வனவாசம் மனவாசம் நூல்களைப் படிக்க நேர்ந்தது என் பதினைந்து வயதுகளுக்குள் நடந்திருக்கும் என்பது ஆச்சரியம் தான். ஆனாலும் அது தான் நிசம். என் அப்பா ஒரு அதிமுக தொண்டர். வெறும் தொண்டரில்லை. எம்ஜி.ஆர் காலத்து தென் பிராந்திய அளவிலான தொழிலாளர் தலைவர். அடிப்படையில் எம்ஜி.ஆர் மீது அவருக்கு இருந்தது தொண்டோ அபிமானமோ அல்ல. வெறிக்குக் குறைவற்ற பக்தி. என்னையும் அக்காவையும் எம்ஜி.ஆர் மீது பெரும் மரியாதை கொண்டவர்களாகவே வளர்த்தார். திமுக மீது அவருக்கு மரியாதை இருந்தது என்பது ஆச்சரியம். கலைஞரைத் திட்ட மாட்டார்.வேறாரும் திட்டுவதை விரும்பவும் மாட்டார். அவர் அடிப்படையில் திமுகவில் இருந்து தான் அதிமுகவாக கிளைத்து வெளியேறியவர் என்பதால் சொல்லமுடியாத ஒரு வாஞ்சை மற்றும் வெளித்தெரியாத மரியாதை ஆகியன திமுக மீதும் கலைஞர் மீதும் இருந்தது.


கண்ணதாசனின் அரசியல் அனுபவங்களைப் பற்றி அப்பா சொல்லும் போது கவியரசருக்கு கவிதை வசப்பட்ட அளவுக்கு அரசியல் புலப்படலை என்பார். இந்த ஒரு வாக்கியத்துக்காகத் தான் இத்தனை வரிகள். கவியரசர் கண்ணதாசனின் எத்தனையோ பாடல்களைத் துல்லியமாக எடுத்துரைப்பார் அப்பா. அவருடைய காலம் மீது பொறாமையாக இருக்கிறதல்லவா..? எத்தனை முரண்பட்டு எதிரெதிர் நிலைப்பாடுகளை மேற்கொண்ட பிற்பாடும் கட்சிரீதியாக எம்ஜி.ஆர் பக்தர். ஆனாலும் கலைஞரின் மீது பெரும் மரியாதை கொண்டவர். அதே சமயத்தில் கவியரசரின் பெரும் ரசிகர். இந்தக் காலத்தில் ரசனை என்பது முழுவதுமாக ரைவல்ரியாக மாறிக் கிடக்கிறது. எல்லாவற்றையுமே பிளந்த பிற்பாடே வகுந்த பிற்பாடே ரசித்தல் கூட வாய்க்கிறது. முந்தைய காலம் பொன்வைரக்காலம். ஹூம்...


என் வாழ்வில் நான் கைக்கொண்ட முதல் டைரியில் முதல் பக்கத்தில் நானெழுதி வைத்திருக்கிற வரிகள் இவை தான்.


    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை 
   எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

 

 

நிச்சயமாகச் சொல்ல முடியும். இந்த வரிகளில் இருக்கிற நான் என்னும் சொல் ஒரே ஒரு நான் அல்ல. கண்ணதாசன் ஒருவருக்கானதல்ல. அது உண்மையில் ஒரு மதத்தின் தொடக்கச் சொல் . அது ஒரு இரகசிய மதம். வெளியே தெரியாத மதம். அந்த மதம் தன்னை வழிபடுபவர்களுக்கானதல்ல. தன் வழியைத் தானே அகழ்ந்து கொள்பவர்களுக்கானது. அப்படியான மதத்தில் தான் நான் இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். மேற்சொன்ன வரிகள் எனக்கும் பொருந்தும். கண்ணதாசனுடைய ஆகப்பெரிய சித்து வேலையே எளிய மற்றும் பொதுப்புத்தியின் புழக்கத்தின் உள்ளே உறைகின்ற சொற்களைக் கொண்டே தன் ஆச்சர்யங்களை அற்புதங்களைக் கட்டமைத்தது தான். அவர் முற்றிலும் கடினமான மொழியின் ஆழத்தில் புதைந்து கிடக்கிற சொற்களைக் கொண்டு தன் எண்ணங்களை வார்த்தெடுக்கவில்லை. மாறாக மக்களின் மொழியிலேயே இயங்கினார். முழுமையான மயக்கத்தை ஒரே அடியால் சாதித்துக் கொள்ளும் பிசகற்ற வாளேந்தலைப் போல் தன் வெட்டுக்கத்தி மொழியால் வித்தகம் புரிந்தார்.


கண்ணதாசனின் கவிதாவரிகள் தமிழ்த் திரைப்பாடல்களின் பொற்காலம்.. முன்னும் பின்னும் வந்த அனைத்தும் அவருடைய வரிகளுக்கு நிகராக இல்லை. இன்னும் உற்றுக் கவனித்தால் கண்ணதாசன் அதுவரைக்குமான தமிழ்த் திரை இசையின் ஆதிக்கத்தில் இருந்து பாடல் வரிகளுக்கான ராஜபாட்டையை ஆரம்பித்து வைத்தார் என்று புரியும். அவர் வாழ்காலத்திற்குப் பிற்பாடு இசையா வரியா என்கிற முதலாம் பாட்டுப்பட்டி போராட்டம் நடந்ததும் வைரமும் ராஜனும் இரண்டால் வகுபட்டுத் தனிக் கட்சிகள் கண்டது நிகழ்ந்ததும் தொடர்ந்து வந்தவைகளும் நாமறிவோம்.


கண்ணதாசன் பாடல் எழுதுவதில் பல்வேறு முயல்வுகளை ஆரம்பித்து வைத்தவர். உத்திகளை முயன்று பார்த்து வெற்றி கண்டவர். ஆசுகவி என்பார்களே அப்படியான கவித்திறமை அவரிடம் குடிகொண்டிருந்தது. கண்ணதாசனுக்கு அமைந்த கவிக்காலமும் கூறத்தக்கது. எதிரெதிர் திசைகள் வலுவாக இருந்தபோது இரண்டிலும் அறுவடை செய்துகொண்ட சொல்லரசன் கண்ணதாசன். ஒரு பக்கம் பக்திரசப் பாடல்கள் இன்னொரு பக்கம் பகுத்தறிவுப் பாடல்கள். ஒரு பக்கம் காங்கிரஸ் ஆட்சியின் முடிவுக்காலம். இன்னொரு பக்கம் திராவிட இயக்கத்தின் பேரெழுச்சிக் காலம்.இப்படியான முரண் திசைகளெங்கும் பாடல்களால் தன் கொடி பறக்கச் செய்தார் கவியரசர் கண்ணதாசன். அவருடைய பாடல்கள் காலம் கடந்தன.இல்லையில்லை காலத்தை வென்றன.கண்ணதாசனுடைய காதல் பாடல்களையும் கொள்கைப் பாடல்கள் இன்னபிற பாடல்களையும் வேறு சில அத்தியாயங்களில் பார்க்க இருக்கிறோம். இந்த அத்தியாயம் முழுவதும் தத்துவப் பாடல்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டாயிற்று.


கண்ணதாசன் அயரடிக்கிற சொல்வித்தகர் என்பதில் ஐயமேதும் இருக்கப் போவதில்லை. இந்தியத் தத்துவ மரபின் தொடர்ச்சியில் தமிழகத்தில் ஜென் தத்துவங்கள் எட்டிப்பார்த்திடாத சூழல் அது. கண்ணதாசன் எழுதிய சில வரிகள் மேலோட்டமாகச் சொல்வதானால் சினிமாப் பாடல்கள். வரிகளின் கனமும் ஆழமும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஆனாலும் நீட்சியில் மாயம் செய்து வசீகரித்து அயரச் செய்கிற அர்த்தமாயைகளைக் கொண்டவை என்பது ஆச்சர்யமூட்டுகிறது.அன்றைய காலத்தில் வேறெந்த மொழியிலும் கவிஞர்கள் இத்தனை தத்துவ விசாரத்தைத் தத்தமது கவிதைகளிலாவது செய்து பார்த்தார்களா என்பது ஆய்வுக்குரிய விசயம். கண்ணதாசனின் பல வரிகள் வெறும் வரிகளல்ல. வரிவடிவ ஆச்சர்யங்கள்.மொழியால் சாத்தியமாகும் மந்திரங்கள். கவிதையின் முக்கியக் கூறான மந்திரத் தன்மை மிகுந்தொலிக்கிற இசையோடு எப்போதும் இயைந்து கொள்கிற பல வரிகளைக் கண்ணதாசன் படைத்தார்.

ஆசையே அலைபோலே பாடல் ஒரு விந்தை. இதன் இசை மகாதேவன். பாடியவர் திருச்சி லோகநாதன். இருவரைப் பற்றிய அத்தியாயங்களிலும் இப்பாடல் இடம்பெற்றது தான். இருக்கட்டும்.


இந்தப் பாடலின் தன்மை நாயகத்துவம் அமைதியுற வேறொரு முகம் பொதுவிலிருந்து எழுந்தோங்குகிற பாடல்களில் ஒன்றாக நேர்கிறது. இப்படியான பாடல்களின் இசையில் உற்று கவனித்தால் மெலிதான சாய்தலுடன் கூடிய அயர்ச்சியும் மாயத்தன்மையும் மிகுந்தபடி இவற்றின் பின்னணி இசைக் கோர்வைகள் அமையப்பெறுவது தற்செயலல்ல. இசையின் கண்மறைவு உத்திகளில் ஒன்றாக இருந்திடக் கூடும்.இந்தப் பாடலும் அப்படியே துவங்குகிறது.


நாளை உலகின் பாதையை இங்கே யார் காணுவார் என்கிற கேள்வி வினா வடிவ சிலுவையாகிறது.இளமை மீண்டும் வருமா..? மணம் பெறுமா முதுமையே சுகமா..? இவ்வினாக்கள் ஆணிகளாகின்றன.காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? என்ற வினா உயிரைப் போல் தன்னை மாய்த்துக் கொண்டு ஒரு பறவையைப் போல் விடைபெற்றுத் தனிக்கிறது. பாடலின் ஈற்றுச் சரணத்தில் கண்ணதாசன் ருத்ரதாண்டவம் ஆடுவதைக் கண்ணுறலாம். வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?


அன்பானவர்களே ஜென் தத்துவத்திற்கு சம்மந்தமே இல்லாத ஒரு காலகட்டத்தில் உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழில் ஆகச்சிறந்த கவிஞன் சிந்தித்துத் தந்த இந்த ஒரு வரியை மாத்திரம் தனியே அகழ்ந்து வையுங்கள். இதனைப் பற்றி மாத்திரம் விவரித்துக் கொண்டே செல்லலாம்.பொழுது போதாது. அப்படியான ஆகச்சிறந்த அந்த வரியில் இரண்டே சொற்கள் இருப்பது கனவு.அவ்வளவே. இருப்பது கனவு இந்த வரியைத் தாண்டிச் செல்வதென்ன அவ்வளவு எளிதா..?

 


 

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு என்ற பாடலில் கவியரசர் மிரட்டியிருப்பார்.

 

கள்ளிக்கேது முள்ளில் வேலி போடீ தங்கச்சி காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி என்ற இரண்டு வரிகளை முதல்தடவை கேட்டபோது அயர்ந்தவன் தான். மெய்யாக உரைத்தால் பாரதியின் மீது சிலிர்ப்பு உண்டு. பாடங்களின் வழியே எனக்குள் என் பால்யத்தில் விதையானவன் பாரதி என்றபோதும் என் மீசைத் துளிர்பருவத்தில் கவிதை மீதான கிறக்கத்தைத் தந்து என்னைத் தமிழின் பால் ஈர்த்துக் கொண்டவன் கண்ணதாசன். இதுவரையும் இல்லை இனியும் இவன் போல் இன்னொருவன் இருக்கப் போவதில்லை என்று கூறத்தக்க அளவில் தமிழின் செருக்கு கண்ணதாசன்.


காட்டுக்கேது தோட்டக்காரன் என்பது வெறும் பாடல்வரியா..? காடென்பது தோட்டமானால் கடவுளென்பவன் தோட்டக்காரன் கடவுளென்பவன் இல்லை என்றால் காடெப்படிக் காடாச்சு என்றால் அது ஆத்திகம். காட்டுக்குத் தோட்டக் காரனில்லை. ஆனாலும் காடு காடாயிற்று. அது போலக் கடவுளில்லை இயற்கையே தன்னைப் படைத்துக் கொண்டது என்றால் அது நாத்திகம். இரண்டும் தமிழாலணையும் கவிரசம். தந்து சென்றவன் கண்ணதாசச்சக்கரவர்த்தி.

 

 

இந்த வரிகளை அவை எழுதப்பட்ட காலத்தோடு சேர்ந்து நின்று அவதானியுங்கள். அவற்றின் வீர்யம் புரியும். வெகு ஜாக்கிரதையோடு அணுக வேண்டிய கவிதைகள் கண்ணதாசனுடைய திரைப்பாடல்கள் . லேசாக அணுகினால் அவற்றின் ஆழவைரங்கள் கைவரப் பெறாது. ஆழ ஆழ வைரங்கள் கைவரும் கவிவரம் கொண்டாட்டம் பலவிதம் நான் அதிலே ஒருவிதம், பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்ற பாடலின் இடை வரி..இந்த ஒரு வரியை எப்படிச் சிலாகிப்பேன்..? கொண்டாட்டம் பலவிதம் நான் அதிலே ஒருவிதம் எனும் போது THY = SELF அஹம் பிரம்மாஸ்மி என்பதல்லவா உள்ளே ஒலிக்கிறது..?  போகச்சக்கரவர்த்தியின் மேனியில் வழியும் தேனினும் இனிய சொற்களையல்லவா கவிதையின் வரிகளென்றாக்கித் தந்திருக்கிறார் கவியரசர்..?


வாழும் மிருகம் தூங்கும் தெய்வம் நடுவே மனிதனடா எங்கே ஒருவன் இருந்தால் அவனை ஊரே வணங்குமடா (லக்ஷ்மி கல்யாணம் யாரடா மனிதன் இங்கே) ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி (ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு) பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா அமைதி தெய்வம் முழுமனதில் கோயில் கொண்டதடா இந்தப் பாடலின் இதற்கடுத்த வரிகளைப் பாருங்களேன்.

 
எறும்புத்தோலை உரித்துப் பார்க்க யானை வந்தததா

நான் இதயத்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா


சட்டி சுட்டதடா கை விட்டதடா என்ற பாடல் வெறும் பாடலா..?

 

 

ஒரு மொழியின் புலவன் ஒருவன் தன் சொற்களைக் கொண்டு சமூகத்தின் கூட்டு மனதை மெல்ல வருடி மயங்கச் செய்து உறங்க வைத்த உளவியல் தாலாட்டு. ஒரு காலகட்டத்தைத் தூங்க வைத்தவனும் விழிக்க வைத்தவனும் தன்னை உணரவைத்தவனுமாகிய மகா கவிமேதை கண்ணதாசன்.
 

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இது தான் எங்கள் உலகம் எங்கள் உலகம்  வேடிக்கையாகச் சொல்லப் போனால் உலகமயமாக்கலுக்குப் பின்னால் அமெரிக்கப் பல்லக்குகளை இந்திய சேவகர்கள் தூக்கித் திரிவது பெரியதோர் துறையாகப் பார்க்கப் படுகிறதல்லவா..? அமெரிக்க இரவுகளில் உறங்கி அமெரிக்கப் பகல்களில் வேலைபார்த்து நாளொரு நோயும் பொழுதொரு சிதைவுமாய்த் திரிபவர்கள் எத்தனை பேர்..? அவர்களுக்கான ஸ்பெஷல் ஆந்தம் ஒன்றை இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்பே எழுதிச் சென்றுவிட்டார் கவியரசர் .

 

 

திருவிளையாடல் படத்தில் வரும் பார்த்தால் பசுமரம் படுத்துவிட்டால் நெடுமரம் எனும் பாடல் என் பால்யத்தில் நான் முதல்முறையாக உற்று நோக்கிய மரணம் குறித்ததான தத்துவார்த்தச் சொற்கள் . சேர்த்தா வெறகுக்காகுமா ஞானத்தங்கமே தீயிலிட்டாக் கரியும் மிஞ்சுமா என்ற வரியின் இறுதியில் நேரும் புரிதல் அபாரமானது.


             குலமகள் ராதை படத்தின் இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று  இந்தப் பாடலை 
                      சுமைதாங்கி படத்தின் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் இந்தப் பாடலை 
                      தாய் சொல்லைத் தட்டாதே படத்தின் போயும் போயும் மனிதனுக்கிந்த இந்தப் பாடலை 
                      பாவ மன்னிப்பு படத்தின் வந்த நாள் முதல் இந்தப் பாடலை 
                      பாசம் படத்தின் உலகம் பிறந்தது எனக்காக இந்தப் பாடலை 
                      பாலும் பழமும் படத்தின் போனால் போகட்டும் போடா இந்தப் பாடலை 
                      உள்ளம் என்பது ஆமை எனும் பார்த்தால் பசி தீரும் இந்தப் பாடலை 
                      தரிசனம் படத்தில் இது மாலை நேரத்து மயக்கம் இந்தப் பாடலை 
                      வீடு வரை உறவு வீதி வரை மனைவி எனும் பாதகாணிக்கை படத்தின் இந்தப் பாடலை 

 

எல்லாம் பாடல்கள் என்று அழைப்பதும் அணுகுவதும் மாபெரிய பிழைகள். அவை வாழ்வை நகர்த்துவதற்கான இசையுடனான பாடங்கள் என்பதே மெய்.


   

 

இந்தப் பாடலைக் கேளுங்கள்.
 

நாம் அடிக்கடித் தொட்டுச் செல்கிற ஜிப்ஸி வடிவத்திலான முழுமையான பாடல்களில் இதுவும் ஒன்று. பாடிய குரல்களின் முரணுக்காகவும் எப்போதும் சிலாகிக்கப்படுகிற பாடல் இது எனலாம். உள்ளம் சொன்னதை மறைத்தவனில்லை ஊருக்குத் தீமை செய்தவனில்லை வல்லவன் ஆயினும் நல்லவன் இந்த வரியை எப்படிக் கடப்பது? டீஎம்.எஸ் அதுவரை சிவாஜிக்குப் பாடியிராத ஒரு தொனியில் முற்றிலும் முரணான ஒரு தளத்தில் நின்று பாடுவதைக் கவனிக்கலாம். இசையில் இதொரு ஆச்சரியம். இந்தப் பாடலின் இடையில் எழுகிற ஷெனாய் இசையும் தாளக்கோர்வைகளும் குழலிசையும் முற்றிலும் சேராக்கலவையாகச் சேர்ந்தொலிப்பதன் ஆச்சரியத்தை என்னென்பது..? சோகமும் ரௌத்ரமும் சந்தோஷமும் மூன்றும் ஒருங்கிணைவது வெகு அபூர்வமானது. இந்தப் பாடலின் டெம்போவில் தொடங்கும் ஆன்மமாயம்.முற்றிலுமாகச் சரணங்கள் முடிவடைந்த பிற்பாடு ஒரு முழு சங்கதியை வைத்திருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள் மறக்க முடியாத இசையின்பம் இப்பாடல் நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் எனும் பாடலில்   நாடகவேஷம் கூடவராது என்று எழுதி இருப்பார் இந்த வரியிலிருந்து வெளியே வரவியலாமல் பல தினங்கள் இதையே வெறிகொண்டாற் போல் யோசித்திருக்கி'றேன். கண்ணதாசனால் மாத்திரமே இயலும் இப்படி ஒரு மொழியாச்சர்யம். 


மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே பாடலின் ஈற்றுவரிகள் இதோ 

           ஆசையில் கல்லாகி 
           அச்சத்தில் மெழுகாகி 
           யார்முகம் பார்த்தாலும் 
           ஐயத்தில் தவிப்பாய் நீ 

என்று எழுதி இருப்பார் கவிஞர்.

 

 

உண்மையாகவே மொழியை மாத்திரம் ஒரு நாய்க்குட்டி போலாக்கிக் கொள்வான் கவிஞன் என்று முன்னும் பின்னுமாய்ப் பல கவிஞர்களைக் கொண்டாடமுடியும்.ஆனால் இசையையும் மொழியையும் ஒருங்கே ஆட்டுவித்த ஆச்சர்யக் கவிஞன் கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன் .தமிழென்னும் மொழி கொண்டு காதலை குடும்பத்தை அரசியலை பக்தியை வெற்றி தோல்விகளை துரோகத்தை அன்பை நட்பை குழந்தமையை வரலாற்றை இன்னபிறவற்றை எல்லாம் தன் அனாயாசமான வரிகளைக் கொண்டு இத்தனை தூரம் ஆட்சிபுரிந்த இன்னொருவன் இல்லவே இல்லை.வாழ்க கவியரசர் புகழ்.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...