???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 23 - அனல் பனி தாமரை - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   24 , 2017  23:21:19 IST


Andhimazhai Image

ஹாரிஸ் ஜெயராஜூக்கு முன்பே தாமரை தமிழ்த்திரை உலகத்தில் பாடலாசிரியராக அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு முன்பே அவரது சிறுகதைத் தொகுதிகளும் கவிதைகளும் பரவலாக இதழ்களில் வெளியாகி இருந்தன. தாமரை என்ற பேர் மீதான பரிச்சயத்தைத் தாண்டி அட என்று யோசிக்க வைத்த பாடல் வசீகரா.


மின்னலே படம் தமிழின் வழமையிலிருந்து விலகி வெளியான படங்களில் ஒன்று என்று தைரியமாகச் சொல்லலாம். ட்ரெண்ட் செட்டர் படங்களில் ஒன்று. மணி ரத்னத்தின் உதவியாளரான கௌதம் மேனன் சகஜமான உரையாடலோடு ஒரு படத்தை இயக்கி அறிமுகமாயிருந்தார். அவர் மாத்திரமல்ல. ஆர்.மாதவனுடன் நடித்த ரீமா சென் மற்றும் இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் ஆகியோர் அறிமுகமானார்கள். மற்றும் பாடலாசிரியராகத் தாமரையை சகல தளங்களுக்கும் எடுத்துச் சென்ற படம் மின்னலே தான்.

வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் அதிருஷ்டவசமாக ஒரு பெண்ணின் பார்வையில் எழுதப்பட வேண்டிய பாடலாயிற்று. வழமையான ஏகாந்தப் பாடலாக இல்லாமல் சற்று அத்யந்தமான உணர்தல்களை வெளிப்படுத்துகிற சூழல் அந்தப் பாடலுடையதானது. பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் இந்தப் பாடலின் மகாபலம். இத்தனைக்கும் நடுவே முன்னரெப்போதும் இல்லாத தன் வரிகளோடு அதிரிபுதிரி செய்தார் தாமரை.


வைரமுத்துவின் பாடல்களுக்கு நேர் எதிரான பாடல்முறை ஒன்றைக் கையிலெடுத்தார் தாமரை. ஒரு சிச்சுவேஷனைத் தனக்குள் ஆழப்புதைத்துக் கொண்டு முழுவதுமாக தன் அக உரையாடலாகவே ஒரு பெண் மாற்றிக் கொண்டால் எழக்கூடிய வரிகளின் கவித்துவ உச்சங்களைப் பாடலாக்கினார் தாமரை. தாமரையின் பாடல்களில் பெருமளவுப் பாடல்களின் தனித்த ஒரு சொல் கூட அதற்கு முன்னர் அதிகளவு பாடலுக்குட்படாத புத்தம் சொற்களாகவே அமைந்தன. தாமரையின் பாடல்கள் தனித்து ஒலிக்க ஆரம்பித்தன. அவரது ஆரம்பத்திலிருந்தே இவை நிகழ்ந்தது தற்செயலல்ல.


பொதுக்கூற்றுக்கள் அனைத்தையும் உடைத்தவர் தாமரை. தொழில்முறைப் பாடலாசிரியராக ஒரு பெண் வெற்றி பெறுவது கடினம் என்ற வாக்கியத்தை சுக்கு நூறாக்கியவர் தாமரை. அவர் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை ஒருபுறம் இருக்கட்டும். அவர் எழுதிய பாடல்களில் கிட்டத் தட்ட எண்பது சதவீதப் பாடல்கள் சூப்பர்ஹிட் வகையறாப் பாடல்கள் என்பது தற்செயலோ அதிர்ஷ்டவிளைவோ இல்லவே இல்லை என்பதும் கூறத்தக்கது.


தாமரையின் பாடல்கள் இசைக்கு முன் முற்றிலும் மண்டியிடுபவை அல்ல. தன்னால் ஆன அளவு உடனோடியாகத் தன் பாடலைத் தந்தனுப்புகிற தாமரை இசையை மையப்படுத்தித் தன் பாடலை அதன் வரிகளை முற்றிலுமாகச் சட்டகத்துக்குள் அடக்கி விடுபவராக ஒருபோதும் இருந்ததில்லை. இன்னும் சொன்னால் ஓவியக்குதிரை என்றபோதும் அதைச் சட்டத்துக்குள் கட்டியடைக்க இயலாது. தன்னிஷ்டத்துக்கு வெளியேறி உலாவித் திரும்புவது அதன் வழமை என்பது போலவே தாமரையின் பாடல்களும் என்பேன்.


            

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே

(வசீகரா)

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு ஸ்னேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்

(வசீகரா)

தினமும் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே


(வசீகரா)


கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கம்/குளிர்காய்ச்சலோடு ஸ்னேகம்/ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்/குளுகுளு பொய்கள் 


தினம் வீட்டிலேயே நீ வேண்டும்/சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்/


யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக் கூடத் தெரியாதே/காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே

இத்தனையும் ஒரே ஒரு திரைப்பாடலுக்குள் இதற்கு முன்னர் எப்போதும் வார்த்தைப்படுத்தப் படாத சின்னச்சின்னக் குறுங்கவிகள். ஒரு மாலையாய்க் கோர்க்கப் பெற்ற கவிதைகள் முதன்முறையாக இசை வளைந்து கொடுத்ததால் பாடலாக்கப் பட்டது எனும் அளவுக்குத் தாமரையை வீடு தோறும் கொண்டு சேர்த்தது. ஆண் கவிஞர்களால் ஒருபோதும் எழுத முடியாத பல கவிதாவரிகளைத் தன் பாடல்களெங்கும் எழுதினார் தாமரை. அவரது இயற்றுதிறனுக்கு இன்னுமோர் சான்றாக வேட்டையாடு விளையாடு படத்தில் வருகிற பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே பாடலை முன்வைப்பேன். மெலிதான கிறித்துவ சாயலிசையின் பின்புலத்தில் துவங்குகிற பாடலை ஜெயஸ்ரீயும் உன்னிமேனனும் அற்புதமாக்கி இருப்பார்கள். படமான விதமும் மனதில் நிற்கும்.


கண் பார்த்துக் கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒருபெண்ணும் நீதான்.. கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும் சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்... 


தாமரையின் மொழிபலம் அவரது தனித்துவங்களில் ஒன்று. புத்தம் புதிதான அதே நேரத்தில் அழுத்தந்திருத்தமான சொற்களைக் கொண்டுவந்து பாடல்களில் சேர்ப்பித்த நற்கவி தாமரை. மேற்சொன்ன பாடலில் என் பதாகை தாங்கிய உன்முகம் உன் முகம் என்றும் மறையாதே என்றவரி காலகாலங்களின் பின்னே நமைக் கொண்டு சேர்க்கவல்லது. முன்னர் நிகழாத அற்புதங்கள் தாமரையின் பாடல்கள்.


2008 என நினைக்கிறேன். இந்தப் படத்தின் பாடல் ஸீடீயை கீஷ்டுகானம் கடையில் வாங்கிய உடன் வரிசையாக காரில் ஒலிக்கச் செய்தபடி வீடு நோக்கிச் சென்றேன். அது ஒரு மழைதினம். நேரே காரைப் பார்க் செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டேன். ஏனோ மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.எதையோ மறந்துவிட்டேனே என்று சுற்றிலும் தேடிப் பார்த்தேன். அப்புறம் தான் வாரணம் ஆயிரம் பாடல்தட்டை வாங்கி காரிலேயே விட்டுவந்திருப்பது நினைவுக்கு வந்து கொட்டுகிற மழையில் நாலு மாடிகள் கீழிறங்கி பார்க்கிங்கில் நின்றிருந்த காரிலிருந்து ஸீடீயை கவர்ந்து கொண்டு என் அறைக்குத் திரும்பினேன். என் மகள் ஷ்ரேயாவுக்கு அப்போது மூன்று வயது. அன்றைக்கு சீக்கிரமே தூங்கி விட்டாள். நான் என் அறையில் அந்த ஸீடியை போட்டு அதற்கு முன் கேட்ட பாடலைத் தள்ளி விட்டு நேரே அடுத்த பாடலுக்குள் சென்றேன். அது தான் அனல் மேலே பனித்துளி.


ஒரு பாடலுக்கு முன்னும் பின்னுமாய் அதுவரைக்கும் சேகரித்து வைத்திருந்த அத்தனை காதல் பற்றிய நினைவுகளையும் மறந்து போய் மலங்க மலங்க விழித்தது இந்தப் பாடலைக் கேட்டுவிட்டுத் தான். இந்தப் பாடல் ஒரு வழி தொலைத்த நாய்க்குட்டியைப் போல் என்னைப் பின் தொடர்ந்து என் இல்லம் வந்தது.என்னால் இந்தப் பாடலை ஓரிடத்தில் இருத்தி விட்டு நான் மட்டும் அந்த இரவின் மிச்சத்தை உறங்கிக் கடக்க முடியவே இல்லை. செய்வதறியாது நானும் இந்தப் பாடலைப் போலவே விழித்திருந்தேன். ஒரு கட்டத்தில் எப்படி என்றறியாமல் உறங்கிக் கிடந்த நான் மறுதினம் விழிக்கும் போது தான் உணர்ந்தேன் இரவெல்லாம் இந்தப் பாடல் மாத்திரம் REPEAT MODE இல் மறுபடி மறுபடி ஒலித்துக் கொண்டே இருந்திருக்கிறது என்று. பின்னொரு தினத்தில் எழுதினேன். உறங்கிய பிற்பாடும் உறங்கவே இல்லை. உறங்காத போதும் உறங்கினேன். எல்லாம் நீ செய்த மாயம். இது அந்தப் பாடலை நோக்கி நான் பேசிய சொற்களாக இருக்கக் கூடும்.
    
   ஆழ மூழ்குவதே 
   கரையேற வழி


என. அனேகமாய் அந்தப் பாடல் என் வீட்டுக்குள் என் மனதுக்குள் என் உலகத்திற்குள் வந்த அந்த நீண்ட நெடிய இரவின் மிச்சமாகவாவது தொடர்ச்சியாகவாவது தான் மேற்காணும் வரிகள் எனக்குள்ளிருந்து பிறந்திருக்க முடியும் என்று நம்ப விரும்புகிறேன். தாமரையின் பாடல் அது. ஹாரீஸ் ஜெயராஜின் இசை அது பாடிய சுதா ரகுநாதனின் குரல் என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாத பேரின்பம் அது.பெருந்துன்பமாகவும் அதையே சொல்ல முடியும்.


அனல் மேலே பனித்துளி இன்னொரு மென் தாமரைப் பாடல். இதன் சரண வரிகள் கவித்துவம் மேலோங்கி மிளிர்பவை.மறக்க முடியாத மெல்லிசைப்பாடல்களில் ஒன்று. என் அனுமானத்தில் அன்பை காதலை காமத்தை சங்ககால பலத்தோடு தன் மொழிவழி பெயர்த்துத் தருவதில் தாமரைக்கு நிகர் அவர் மாத்திரம் தான் என்பேன்.

அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

             (அனல் மேலே பனித்துளி)

எந்தக்காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே
உனது இருவிழி தடவியதால் அவிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கரை கரை 

(அனல் மேலே பனித்துளி...)


சந்தித்தோமே கனாக்களில் சில முறையா பல முறையா
அந்தி வானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுவாய் கடல் அலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழிசொல்லுமா கலங்கரையே
உனதலைகள் எனை அடித்து 
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட 

(அனல் மேலே பனித்துளி...)
என் தோழி ஒருத்தி சொல்வாள். தாமரையின் ஒவ்வொரு புதிய பாடலைக் கேட்கும் போதும் அடடா... நான் காதலித்த காலத்தில் தாமரையின் பாடல்கள் இல்லாமற் போய்விட்டதே.. இருந்திருந்தால் இன்னும் இசைபடக் காதலித்திருப்பேனே என்று தோன்றும் என. அது தான் தாமரையின் பாடல்களுக்கான ஸல்யூட்.


ஜீ.வீ. பிரகாஷ்குமார் இசையில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் வருகிற கண்கள் நீயே காற்றும் நீயே பாடல் தாமரை எழுதிய பாடல்களில் மாத்திரமல்ல ஒரு பாடலை எனக்கே எனக்கென்று நான் சொந்தம் கொண்டாட விரும்புகிற பாடல் என்று கூறத்தக்க அளவில் மதிக்கிறேன். விரும்புகிறேன்.ரசிக்கிறேன். இன்றும் இதனைக் கேட்க வாய்க்கையிலெல்லாம் எனக்குள் கலங்கித் ததும்புகிறேன்.ஒரு திரைப்பாடல். அற்புதம். 


கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ

பல நாள் கனவே ஒரு நாள் நனவே ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன் 
நான் தான் நீ வேறில்லை

முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே

(கண்கள் நீயே ....)

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத் தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்

தோளில் ஆடும் தேனே
தொட்டில் தான் பாதி வேளை

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
இசையாக பல பல ஓசை செய்திடும்
இராவணன் ஈடில்லா என் மகன்

எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்

பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

கண்கள் நீயே ....இன்னொரு பாடலைப் பற்றி இங்கே பேசலாம். நாணயம் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் சித்ரா பாடிய நான் போகிறேன் மேலே மேலே பாடல். இப்படி ஒரு படம் வந்ததோ இந்தப் பாடல் அதில் இடம்பெற்றதோ எனக்குத் தெரியாத ஒரு தினத்தில் என் தோழி ஒருத்தி இந்தப் பாடலை என்னிடம் பாடிக்காட்டினாள். இப்போது எங்கிருக்கிறாள் என்ன செய்கிறாள் என்று தெரியாமற் போன முன்பிருந்த ஸ்னேகத்தின் பறவைகளில் நாங்கள் இருவரும் இருந்தோம். அவள் இந்தப் பாடலை பாடி முடித்துவிட்டு நல்லா இருக்கா ரவீ என்று கேட்டதும் இன்றைக்கு வரை இந்தப் பாடலின் இணைப்பாகவே ஒட்டிக் கொண்டு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இதனாலேயே இந்தப் பாடலை என்னால் இயன்ற அளவு வெறுத்துப் பார்த்து முடியாமற் தோற்று எங்கேயாவது ஒளித்து வைத்துவிடலாம் என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.இந்தப் பாடல் பற்றிய ஞாபகத்தையாவது ஒளித்து வைப்பதற்கான பெட்டி ஒன்று கிடைத்தால் இந்தப் பாடலை பொத்தி வைப்பேன்.

மறக்க விரும்புகிற ஒரு பெண்ணின் ஞாபகத்தை ஒரு பாடல் தன் கால்களால் பற்றிக்கொண்டு வானின் ஏதோவொரு மூலை நோக்கிப் பறந்து சென்றுவிடுகிறது. உண்மையில் அது காலத்தின் கண்களைக் கட்டிப் பறக்கிற மாயப்பறவை. அப்படி ஒரு பாடலை அல்ல அதன் ஒரு துளி இசையைக் கூட யாராலும் மறக்கவே இயலாது என்பது தான் நிசம். மறப்பது போல நடிப்பது வேண்டுமானால் சாத்தியம். அதுவும் கூட நாமாகத் தேர்வெடுப்பதிலிருந்து வேண்டுமானால் விலக்கி வைக்கலாம். ஆனால் தன்னிஷ்டமாய் ஒரு பாடல் ஒலிப்பது நேருமெனில் அப்போது அந்த அதே ஞாபகத்தின் பேரேடும் அல்லவா திறந்து கொள்கிறது..?

 


தாமரையின் பாடல்களில் இந்தப் பாடலின் விசேஷம் மற்ற பாடல்களை நானாகத் தேடிக் கேட்பேன். இந்தப் பாடல் தானாக என்னைத் தேடித் தழுவும்.

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் வருகிற உன் சிரிப்பினில் சுப்ரமணியபுரம் படத்தில் வருகிற கண்கள் இரண்டால் என் கண்கள் இரண்டால் அழகிய தமிழ்மகன் படத்தில் கேளாமல் கையிலே பசங்க படத்தில் ஒரு வெட்கம் வருதே வருதே கண்ட நாள் முதல் படத்தில் பனித்துளி பனித்துளி பனித்துளி காக்க காக்க படத்தில் ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா..? ரௌத்திரம் படத்தில் வருகிற மாலை மங்கும் நேரம் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் மன்னிப்பாயா அச்சம் என்பது மடமையடா படத்தில் ராசாளியே என தாமரையின் தனித்தொலிக்கும் பாடல்கள் பலவற்றுக்கும் நான் ரசிகன். நம் காலத்தின் போற்றுதலுக்குரிய கவி தாமரை. திரைப்பாடல்கள் என்று சுருக்கம் கொள்ளவியலாத இசைமய இலக்கியங்கள் தாமரையின் பாடல்கள்.(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...