???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் 21 - நூறாவது நதி - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   09 , 2017  22:21:49 IST


Andhimazhai Image

மதுரையைச் சுற்றிச் சுற்றி சௌராஷ்டிரர்கள் அதிகம். மதுரை தவிரவும் புதுக்கோட்டை தஞ்சாவூர் பகுதிகளிலும் சென்னையிலும் மொழிவாரி சிறுபான்மையினரான சௌராஷ்டிரர்கள் நிறையப் பேர் வசிக்கின்றனர். உண்மையில் அவர்களுடைய ஆதி நிலம் வடக்கே எங்கேயோ இருந்தபோதிலும் தமிழகத்துக்கு குடிபெயர்ந்த இத்தனை நூற்றாண்டுகளில் நம்மோடு நாமாகி வாழ்ந்து வரும் மலரினும் மெல்லினம்.


அந்த மொழி அத்தனை அழகாக இருக்கும். புதூர் வீட்டிற்கு எதிர்த் திசையில் நாலு வீடு தள்ளி சசி அக்கா வீடு இருக்கும். இரண்டு அண்ணன்கள் ராஜன் மற்றும் ரவி. ஒரே பெண் சசி.என் அக்கா உமாவை விட இரண்டு வயது மூத்தவர். அவர்களைப் பார்க்கும் வரை எனக்கு சௌராஷ்ட்ரா என்றொரு பாஷை இருப்பதே தெரியாது. இதென்ன கூத்து அவர்களை நான் பார்த்த போது எனக்கு நாலரை வயது.இப்படிச் சொல்லவேண்டியதை அப்படிச் சொன்னால் ஒரு மிடுக்கு வந்துவிடுகிறதல்லவா..?


என்னோடு செயிண்ட் மேரீஸ் பள்ளியில் இரண்டு பேர் படித்தார்கள். ஒருவன் வெங்கடேஷ். இன்னொருவன் சர்வதத்தன். இருவருமே சௌராஷ்ட்ரர்கள். இருவருமே முதலிரண்டு ராங்கை வாங்குவதில் போட்டி போடுபவர்கள். நானோ வேறோரு பந்தயத்தில் இருந்தேன் என்றாலும் வெங்கடேஷ் மற்றும் சர்வதத்தன் மீது பொறாமை என்று சொல்லவியலாத வெறுப்பைக் கொண்டிருந்தேன். எனக்கு பாஸ் ஆவதற்கு நாலு மார்க் தேவை என்றால் சர்வனும் வெங்கடேஷனும் நூற்றுக்கு நூறு வாங்கிக் கொண்டு புன்னகைப்பார்கள். ஐ ஹேட் தெம்.


கல்லூரி காலத்தில் மணி என்றொரு மகானுபாவன் வந்தான். அவன் தான் எனக்கு சௌராஷ்ட்ரா பாஷையைக் கற்றுக் கொடுத்தவன்.குறைந்த பட்ச சொற்கள் தான் தெரியும் என்றாலும் அவன் புண்ணியத்தில் அது நிகழ்ந்தது. டீ.எம்.சவுந்தரராஜன் குறித்த பெருமை அவர்கள் அத்தனை பேர்களிடமும் இருந்தது. இத்தனையும் சொல்வதற்கு இன்னுமோர் காரணம் இருக்கிறது.


சமையல் கலையில் சௌராஷ்ட்ரர்களின் கைமணமே தனி. அதிலும் வெண்பொங்கல் எனக்குக் கடவுளின் குரல்.இஷ்டதெய்வத்தின் வருகை போன்றது. நல்லதொரு பொங்கலைத் தேடி நாளும் சதா ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கும் மனது எனது.மதுரையின் ஆகச்சிறந்த உணவகங்களின் வரிசையில் எந்தவிதப் பகட்டும் இல்லாத குட்டியூண்டு பொங்கல் கடைகள் இடம்பெறும்.உங்கள் ஊர்களில் எப்படி என்றெனக்குத் தெரியாது.மதுரையில் அப்படிப் பல உணவகங்களை சொல்லலாம்.


மிகக் குறைவான இடத்தையும் மிக அழகாகப் பராமரிப்பது ஒரு ஸ்டைல். எனக்கு நினைவுதெரிந்து மதுரையின் அன்னபூரணி விலாஸ் நாகலட்சுமி அனெக்ஸ் போன்ற பெரிய கடைகள் இன்னமும் மிளிர்ந்தாலும் கூட ஆங்காங்கே சின்னச்சின்ன பொங்கல் கடைகள் மதுரையின் அறுசுவை ஸ்தலங்கள்.


அப்படியானதொரு கடையில் தான் முதல் முதலில் கேபிள் ரேடியோவை காணக் கிடைத்தது. தொண்ணூறுகளின் மத்தியில் சாடிலைட் சானல்களும் பண்பலை வானொலிகளும் வந்து நிலை கொள்வதற்கு முன் ஒரு குறுகிய காலமே கேபிள் ரேடியோக்கள் கோலோச்சின என்றாலும் கூட ஒரு குறிப்பிட்ட காலம் அரிய பல பாடல்களைக் கேட்பதற்கான வாடிவாசலை அவை திறந்து விட்டன என்றால் மிகையல்ல.


ஒவ்வொரு ஏரியாவிலும் மையமத்தியில் ஒரு ஒலிபரப்புக் கூடம் இருக்கும் ஒவ்வொரு பூவாய் மாலை கோர்த்தாற் போல் அங்கே இருந்து அடுத்தடுத்து கேபிள் மூலமாக இணைக்கப்பட்டு இருபத்தி நாலு மணி நேரமும் பாடல்கள் ஒலிபரப்பாகும். அப்படி ஒலிபரப்புவதில் கேபிள் ரேடியோவை நடத்துபவர்களின் ரசனையும் அர்ப்பணிப்பும் ஒருங்கே மிளிருவதைப் பல சிரத்தையான முயல்வுகளிலிருந்து உணர முடியும். அத்தனை நேர்த்தி இன்றைக்குப் பெருவர்த்தக வானொலிகளில் கூட இல்லை என்பதே நிசம்.


எங்கள் ஏரியாவில் மகாலட்சுமி காலனி என்று நெசவாளர் குடியிருப்பு இருந்தது. வீட்டின் ஹாலின் பெரும்பகுதியை நெசவுத்தறி ஆக்கிரமித்திருக்கும். அதனோடே தான் வாழ்க்கையின் சகலமும் நிகழ்ந்தேறும்.அப்படியான காலனியில் ஒரு வீடு விடாமல் கேபிள் ரேடியோவுக்கு சந்தாகட்டியிருந்தனர். நடத்துகிறவர் உட்பட பெரும்பாலானவர்கள் சௌராஷ்ட்ரர்கள் என்பதால் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு நடுவிலுமான அறிவிப்புகள் பல சமயங்களில் அந்த மொழியில் இருக்கும். நடுநடுவே வரும் இளையராஜா எஸ்.பி.பாலசுப்ரமணியம் சித்ரா போன்ற பெயர்கள் மாத்திரமே புரியும். அப்படியான அறிவிப்பாளர்களில் ஒருவன் மட்டும் தனித்தான்.நூறு நதியில் தானொரு நதியாய் மிளிர்ந்தான். அவன் அறிவிக்கிற அழகே தனி. "அடுத்து நாம் கேட்கப் போகிற பாடல் நம் உள்ளத்தில் தன்னால் ஆன அளவு உணர்வுக் குவியல்களை நிகழ்த்தும் என்று நம்பலாம். மந்திரக் குரலை நம் மனமெங்கும் மழை போல் பொழியச் செய்யும் இணையில்லா பாடல் சக்கரவர்த்தி கே.ஜே.ஏசுதாஸ் பாடிய கனவு காணும் வாழ்க்கை யாவும் என்ற பாடல் நீங்கள் கேட்டவை படத்திற்காக இப்போது செவிவழி மிதந்து இதயங்கள் நுழைந்து மாயஜாலம் புரியட்டும்..."


ஆனந்த் அதனை ஒரு வேலையாக அல்ல. வித்தையாகவே செய்தான். ஒவ்வொரு பாடலை அறிமுகம் செய்வதற்காக அவன் தயாரிக்கிற அழகே தனி அழகு. அத்தனை ஹோம் ஒர்க் செய்த பின்னர் தான் ஒலிபரப்பை ஆரம்பிப்பான். பரணி சொல்வான் ஒவ்வொரு பாட்டுக்குள்ளேயும் ஒரு வாழ்க்கை இருக்கும். இருக்கணும்னு கட்டாயம் இல்லை. இருக்கும்னு நிச்சயமும் இல்லை. ஆனா அப்படியான வாழ்க்கை இருக்கிற பாடல்கள் மாத்திரம் தனிச்சி நிக்கும்.ஏன் எதுக்குன்னு தெரியாம நமக்குள்ளே சின்ன பெரிய அலையடிச்சி நிதானத்துக்குள்ளயே ஒரு சின்ன ஆர்ப்பரிப்பை உண்டாக்குற காரணமில்லாத உணர்வுக்கெல்லாம் பின்னணியில அப்படியான பாடல்கள் இருக்கும்."


ஆனந்த்தின் குரல் கம்பீரமாக இருக்கும்.தானொரு ரேடியோ ஜாக்கியாக வரவேண்டும் என்பது அவனது ஆசை மட்டுமல்ல. அவனுக்கு அதற்குண்டான அத்தனை தகுதிகளும் இருந்தன என்பேன். சமீபத்தில் திருநகர் சென்றபோது ஆனந்த் எங்கே இருக்கிறான் என்பதைப் பற்றி விசாரித்தபோது தெரியவில்லை என்ற பதிலுடன் அவன் ஊரைக் காலி செய்துவிட்டு சென்னைப் பக்கம் போய்விட்டான் என்ற தகவல் கிடைத்தது. ஒருவகையில் அந்தப் பதிலற்ற பதில் எனக்குத் திருப்தியாக இருந்தது என்பேன்.


ஒரு ஆனந்த் என்றில்லை ஓராயிரம் ஆனந்துகளின் கண் தேங்கிய கனவுகளை சதா செரித்தவண்ணம் இருக்கிற மகா நகரத்தின் பேர் தான் சென்னை என்பது இல்லையா..?


ஆனந்தின் ரேடியோ ஸ்டேஷன் ரொம்ப காலம் நீடிக்கவில்லை என்றாலும் சில அசாத்தியமான தினங்கள் நாங்கள் மாத்திரம் பல பாடல்களைக் கேட்டவாறு கடந்திருக்கிறோம். அவனுக்கு பாடல்கள் மீது அத்தனை பெரிய மரியாதை இருந்தது. ஒவ்வொரு பாடலையும் அர்ச்சனைத் தட்டைப் பெற்றுக் கொள்கிற பூசாரியைப் போலவே ஏந்திப் பெறுவான் அவன். நாம் எதாவது புதிய பாடல் பற்றிச் சொன்னால் அதனை அத்தனை கவனசிரத்தையுடன் கேட்பான்.அதனை எழுதியவர் யார்..? அதன் இசை யாருடையது அப்பாடலைப் பாடியவர் யார் என்றெல்லாம் ஒரு நிலத்தைச் சுற்றியிருக்கும் நான்கு மால்களை அதன் வரைபடத்தில் நிரந்தரமாக இருத்தி வைப்பதைப் போலப் பெற்றுக் கொள்வான்.அவனது ஞாபக சக்தி அபரிமிதமானது. அவன் சொல்கிற தகவல் பிறழ்ந்ததாய் சரித்திரமே கிடையாது.


மின்சாரம் மாலை ஆறு மணிக்குத் தான் வரும் என்று மாதம் ஒரு நாள் பராமரிப்பு நடக்கும்.துறைவாரி நடவடிக்கை என்பதால் எதுவும் செய்வதற்கிராது. அப்படி ஒரு நாள் நானும் ஆனந்தும் கலைவாணி தியேட்டரில் செகண்ட் ஷிஃப்டுக்கு ரிலீஸ் ஆகி இருந்த கோகுலம் என்ற படத்திற்குப் போனோம். உண்மையை சொல்லப் போனால் இரண்டேகாலுக்கு மேல் நேரமாகி விட்டதால் லோக்கல் தியேட்டருக்குப் போவது தான் உசிதம் என்று அந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்தோம். கோகுலம் படத்தைப் பற்றி எந்த அபிப்ராயமும் எங்கள் இருவருக்குமே இருந்திடவில்லை. படம் எப்டி இருந்தாலும் பரவாயில்லை என்றான் ஆனந்த். விக்ரமன் படம்னா எளிதாக யூகிக்கக் கூடிய கதையாய்த் தானே இருக்கும் என்கிறேன் நான். என்னளவில் பெரிய எதிர்பார்ப்புடன் சென்று நொந்து போன படங்களும் உண்டு. எதிர்பார்ப்பே இல்லாமல் போய் மனதின் ஆழத்தில் அமர்ந்து கொண்ட அற்புதங்களும் உண்டு. இது இரண்டாவது ரகம்.


ஒரு வரியில் சொல்வதானால் அந்தப் படம் தந்த அனுபவத்திலிருந்து வெளியே வர எனக்குப் பல தினங்கள் பிடித்தது.


எல்லாப் பாடல்களுமே படத்திற்குத் தேவையான இடங்களில் எழுந்தன. கேட்பதற்கு இனிமையாக இருந்தன. பின்னணி இசையும் கூட மனதை வருடியது. அது வரை சிற்பி இசை என்றாலே சில சாயல் பாடல்களைத் தந்தவர் என்ற அளவிலேயே ஒரு முன் முடிவில் இருந்த நான் சிற்பியின் இசைக்கு ரசிகனானேன்.

 

பின்னாட்களில் திரைக்கதை உத்திகள் பற்றிப் பேசும் போதெல்லாம் மௌனராகம் படத்தையும் கோகுலம் படத்தையும் ஒரு புள்ளியில் இணைத்து இருவேறு படங்களாக மாற்றிக் காட்டுவேன். இரண்டுமே மக்களால் பெரிதும் ஏற்றுக்கொள்ளப் பட்ட படங்கள். அதுவும் விக்கிரமன் படங்களில் எனக்கு இன்றளவும் மிகமிகப் பிடித்த படமாகவும் கோகுலம் மாறிப் போனது.


எல்லாவற்றுக்கும் மேலாக படம் முடிந்து வெளியே வந்து அண்ணா பார்க்கில் நானும் ஆனந்தும் வெகு நேரம் அமர்ந்திருந்தோம். அந்தப் பாட்டு மெஸ்மரைஸ் பண்ணுது ஆனந்த் என்றேன். உன்னிமேனனும் சுசிலாவும் எதிர்பாராத காம்பினேஷன் இல்லையா ரவீ என்றான் ஆனந்த். ஒரு பாடல் குறித்த முன் தீர்மானத்தில் அந்தப் பாடலை எந்தக் குரல்கள் பாடவேண்டும் என்று தீர்மானிப்பது பெரியதோர் பங்கு வகிக்கிறது என்பான் மூவேந்தன். அதற்கு எத்தனையோ வெற்றிப்பாடல்களும் சொதப்பிய தோல்விப் பாடல்களும் கூட சாட்சியம் அளிக்கின்றன. அந்த வகையில் இந்தப் பாடலின் நிதர்சனமான வெற்றிக்கு சுசீலாவும் உன்னிமேனனும் பாடியது தான் முதல் காரணம் என்பேன்.

 

ஒவ்வொரு பாடலும் ஒரு வாழ்க்கையை உள்ளீடு செய்தபடி உருவாகிறது. இந்தப் பாடல் அப்படியான வாழ்தலுக்கு உதாரணமான பாடல் எனலாம். படத்தின் கதையில் மிகமிக முக்கியமான ஒரு பாடல் என்றாலும் அதனைத் தாண்டி படத்தைப் பாராதவர்கள் மற்றும் அந்தப் படத்தினின்றும் வெளியேறிவிட்டவர்கள் அத்தனை பேரையும் தனக்குள் சுழற்றியபடி தான் மட்டுமாய் வேறொரு திசையில் நகரக் கூடிய வல்லமை இப்பாடலுக்கு உண்டு. ஒரு குறிப்பிட்ட தூரம் வரைக்கும் சேர்ந்து பயணிக்கிற விண்கலன் திட்டமிட்ட புள்ளியில் செயற்கைக் கோளிலிருந்து தான் மட்டும் கழன்று கொண்டு அது வேறு தான் வேறென்றாவதில்லையா..? போல அது இப்படியான பாடல்கள்.


சுசீலாவின் குரலுக்கான உச்சபட்ச விருப்பக் காலம் முடிவடைந்த பிற்பாடு அவர் பரபரப்பான பாடகியர் வரிசையில் இருந்து தள்ளிச் சென்ற பிறகு அவர் பாடிய அனேக பாடல்கள் சூப்பர்ஹிட் வகையறாக்கள் தான். அதிலும் முக்கியமான ஒன்று முத்துமணி மாலை என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட... இன்னொன்று கோகுலம் படத்தில் இந்தப் பாடல்... 
            
செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்

செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
நீ வரும் நேரம் வானவில் கோலம்
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே

செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்

ரோஜாவின் மின்னல்கள்
உனதழகினைப் படம் வரைந்திட
தாலாட்டும் உன் கண்கள்
மனம் முழுவதும் மழை பொழிந்திட (2)

 


சுசீலாவின் குரல் பதின்பருவத்துப் பெண்ணின் குரலாகக் குழைந்திருக்கும். உடன் பயணிக்கிற உன்னியின் குரலோ பல்லக்கின் உள்ளே அமர்ந்திருக்கும் இளவரசியைக் காவல் காத்தபடி உடன்பயணிக்கிற சேவகனைப் போலத் தொடர்ந்திருக்கும்.அலை நீரில் நதி ரெண்டு சேரும்
நிலவினை ரசித்தபடி பனியினில் நனைந்தபடி
நிலவினை ரசித்தபடி பனியினில் நனைந்தபடி
நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்
நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்
                                       
நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும் என்று நிறைகிற இடம் அதியற்புத அழகு.

செவ்வந்தி பூவெடுத்தேன் ....

கல்யாண ராகங்கள்
துள்ளும் மழை இசையில் வர
சங்கீத சிலம்போடு
இரு பறவைகள் மனம் இணைந்திட

செவ்வாழைத் தோட்டங்கள் வாழ்த்தும்
சந்தன பூங்கிளையில் அன்பினைப் பாடும் குயில்
சந்தனப் பூங்கிளையில் அன்பினைப் பாடும் குயில்
வானத்தை விலையாகக் கேட்கும்
வானத்தை விலையாகக் கேட்கும்

செவ்வந்தி பூவெடுத்தேன் ....


இந்தப் பாட்டை அவரோடு இணைந்து பாடிய உன்னி மேனனின் குரலுடன் சுசீலாவின் குரல் அத்தனை அற்புதமாய் இணைந்து இயைந்திருக்கும். வானத்தை விலையாகக் கேட்கும் என்று இரண்டு குரல்களும் குழைகையில் இந்தப் பிரபஞ்சமே குழைந்திருக்கும் என்றால் மிகையாகாது.


பழனிபாரதியின் ஒப்பனையற்ற தமிழ் இந்தப் பாடலின் எந்த ஒரு வரியும் இதற்கு முன்பாக இத்தனை வீர்யமாகப் பாடலுக்கு உட்படுத்தப் பட்டதில்லை என்று உறுதிபடச் சொல்லமுடியும். வானத்தை விலையாகக் கேட்கும் நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும் சந்தனப் பூங்கிளையில் அன்பினைப் பாடும் குயில் என ஜதை ஜதையாய் எந்த இரண்டு வரிகளும் பாடலுக்குள் கவிதைகளாய் பிறந்திருக்கும். உண்மையில் இசை அமைப்பாளர் சிற்பி என்பதோடு பழநிபாரதியும் தமிழ்ச்சிற்பியாகவே இந்தப் பாடலை வடித்திருப்பார்.


ஒரு முறை கேட்டுவிட்டு வழமையின் உலகத்திற்குள் சென்று அன்றாடங்களில் புகுந்து கொள்ள அனுமதிக்கக் கூடிய இன்னுமொரு பாடல் இல்லை இது. உன்னிமேனன் சுசீலா என்பது யூகிக்க முடியாத குரல் இணை என்றால் அதைவிட பழநிபாரதியின் வரிகளும் சிற்பியின் இசையும் சேர்ந்து இந்தப் பாடலை என்றென்றும் ரசிக்கத் தக்க பாடலாக மாற்றியது என்றால் அதுவே நிசம்.


அதன் பின்னர் உள்ளத்தை அள்ளித்தா படம் வந்து சிற்பி பழநிபாரதி கூட்டணியை வீடுதோறும் தெரிவித்தது. அழகிய லைலா பாடலாகட்டும் லவ் யூ லவ் யூ சொன்னாளே பாடலாகட்டும் என்னைப் பொறுத்தவரை வெரைட்டி என்ற சொல்லுக்கு வாலிக்கு அடுத்து பழநிபாரதியின் பாடல்களைத் தான் உதாரணமாகக் கொள்ளமுடிகிறது. அந்த அளவுக்கு சகலவிதமான பாடல்களையும் எழுதிப் பார்க்கிறது பழநிபாரதியின் பேனா.


ஆனந்த் ஒரு நாள் சொன்னான், ரவீ எனக்கு ஒரு ஆசை... எனக்கு மனைவியா வரப்போறவளுக்கும் என்னைப் போலவே பாடல்களை ரசிக்கிற ஆர்வம் இருக்கணும். பாடவும் தெரிஞ்சிருக்கணும். நானும் அவளும் சேர்ந்து ஒரே ஒரு பாடலைப் பாடணும். எங்களுக்கு முதல் குழந்தை போல அந்தப் பாட்டு தான் இருக்கணும் என்றான். நான் அவனைக் கேட்காமலேயே செவ்வந்திப் பூ எடுத்தேன் தானே என்றேன். கண்கள் மின்ன ஆமாம் என்றான். அப்படியே ஆகட்டும் என வாழ்த்தினேன். அப்படியே ஆகட்டுமே...

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...