???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 56 - பொய்யாப் பெருமழை - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   20 , 2017  05:26:22 IST


Andhimazhai Image
உங்களுக்குப் பிடித்த பாடல் எது என்பது வெறும் கேள்வி இல்லை. அந்தக் கேள்வி இரண்டு பேருக்கிடையிலான பரிச்சயத்தின் ஆரம்ப சன்னலைத் திறந்து வைக்கிறது. என்ன பேசுவது எனத் தெரியாத குறுகுறு கணம் ஒன்றில் எப்படிப் பேச்சை செலுத்துவது என்கிற தடுமாற்றத் தருணத்தில் இந்த ஒரு கேள்வி ஒரு தெய்வ நிழலைப் போலப் படர்ந்து காக்கிறது. இரு நபர்களுக்கிடையிலான உரையாடலில் உளவியலின் ஆழத்தில் செருகப்படுகிற முதல் மலர் போலவோ அல்லது முதல் கத்தியைப் போலவோ இந்தக் கேள்வி நிகழ்கிறது.
 
          
உண்மையில் இந்தக் கேள்வி அனர்த்தமானது. ஒரே ஒரு பாடலா பிடித்த பாடல் என்று சொல்லும் வண்ணம் இருந்துவிடும்..? எத்தனை பாடல்களை விதவினோத காரணங்களால் பிடிக்கும் என்று சொல்ல வேண்டி இருக்கும்.? ஒரு மனிதன் எத்தகையவன் என்பதை அவன் கேட்கும் பாடல்களின் வகையறாக்களைக் கொண்டு அளவிட முடியாது என்றபோதிலும் கையாள்கிற வார்த்தைகளைக் கொண்டு ஒரு அன்னியனின் சித்திரத்தை எழுத முற்பட்டுவிடுவது மானுட சுபாவம். அப்படிப் பார்த்தால் ஒருவர் விரும்பிக் கேட்கிற பாடல்கள் அவரது மனவிலாசத்தின் ஒரு வரியைப் பிரதிபலிக்காமல் போய்விடுமா என்ன..? மனிதன் பாடல்களாலும் ஆனவன் தான்.
 
               
காலத்தின் பின்னணி இசை அல்லவா பாடல்கள்? சென்ற நூற்றாண்டின் உன்னதமான சினிமாவின் தோற்றுவாய்க்கு அப்பால் ஒருவரது வாழ்க்கை சரிதத்தை அவரது காலத்தின் சினிமாக்களை ஊடுபாவுகளாக்கி நூற்க முடியுமல்லவா? என் தந்தை கடைசியாகக் கேட்ட பாடல் எது என்பதைப் பற்றி எழுதி இருக்கிறேன். திருமணத்துக்குப் பிறகு நீங்கள் சேர்ந்து பார்த்த முதல் திரைப்படம் எது என்ற கேள்வி அரேஞ்ச்டு திருமணத் தம்பதியருக்கானதாகவும் நீங்கள் காதலை தெரியப்படுத்திக் கொண்ட பிற்பாடு பார்த்த முதல் படம் என்ன எனும் வினா காதலிணையருக்கானதாகவும் இருந்து வருவது சந்தோஷம். இதைத் தாண்டி சில பாடல்களைப் பற்றிய எந்தக் கேள்வியையும் கேட்க முடியாமல் இருப்பது மனித உறவாடலின் வசீகரமான இருள் மூலைகளில் அணைந்தெரியக் கூடிய தேவையற்ற விளக்குப் போன்றது.
 
                            
ஒருவரைக் காதலித்து விட்டு இன்னொருவரைக் கல்யாணம் செய்து கொண்டு முந்தைய காதலை மறக்க முடியாமல் வாழ்வெலாம் மனசுத்தரையில் விரவிக் கிடக்கிற நெருஞ்சிமுட்களென்றே தங்கள் காதலின் ஆதிக்குறிப்புகளை சுமந்தலைபவர்களின் எண்ணிக்கை சொற்பமல்ல. உண்மையான காதல் என்பது சாகும் வரை அதன் ஞாபகங்கள் குன்றாமல் வலிமரமாய்த் தழைத்து வளர்ந்தோங்கக் கூடியதாகவே எடுத்துவரப்படுகிறது. இவற்றிலெல்லாம் பாடல்களின் பங்கு பிரதானமானது.இந்தப் பாட்டை போடாதீங்க ப்ளீஸ் என்று கண் மல்க அழுதகுரலில் வேண்டுகோள் விடுத்த ஒருவரைப் பார்த்து அதிர்ந்திருக்கிறேன். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் முந்தைய பாடல் வரைக்கும் அதே இடத்தில் அந்த மனிதர் சகஜமாக நின்று புகைத்துக் கொண்டிருந்தார். வெளியே கொட்டிக் கொண்டிருந்த மழையினாற் தடைபட்டு தேநீர்க்கடையின் உள்புறம் நின்று கொண்டிருந்த எல்லோரிலும் தானும் ஒருவராகவே அவரைப் பார்த்தேன். சட்டென்று அந்தப் பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும் தன்னை மறந்தவராய் கடையின் சகல திசைகளிலும் பார்வையை ஓடவிட்டார்.மாஸ்டரிடம் சென்று நின்றவர் சட்டென்று விலகி கல்லா எங்கே எனத் தேடினார். கல்லா வெறுமையாக இருக்கவே மறுபடி மாஸ்டரிடம் வந்தார். அதற்குள் கல்லாவுக்குத் திரும்பிய ஓனரிடம் சென்று ஒரு கருணை மனுவின் அதே ப்ரார்த்தித்தலோடு ப்ளீஸ் இந்தப் பாட்டை அணைச்சிடுங்க சார். ப்ளீஸ் என்று அதைச் சொல்லி முடிப்பதற்குள் அழுதுகொண்டிருந்தார். என்னவோ ஏதோ என்று அந்த ஓனர் ஒலியைக் குறைப்பதற்கு முயன்றவர் சட்டென்று அணைத்தே விட்டார்.அடுத்த ஐந்து பத்து நிமிடங்கள் தன் கன்னங்களில் வழிகிற நீர்மத்தை சட்டை செய்யாதவராய் விரல்களைச் சுடுகிற வரைக்கும் புகைப்பிடித்து விட்டு தன்னை மறுபடி ஆசுவாசப் படுத்திக் கொண்டவர் அசட்டுத்தனமான சிரிப்பொன்றை உதிர்த்தார்.
 
                        
வெளியே மழை விடுகிறாற் போல இருக்கவே காசைத் தந்துவிட்டு கிளம்பியவர் கடைக்காரரிடம் சற்று சப்தமாக இப்ப பாட்டு வச்சிக்கங்கண்ணே என்றுவிட்டுக் கிளம்பினார். இன்றைக்கும் அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் அவரது தோற்றம் எண்ணத்தில் படர்ந்து மறைகிறது. முறுக்கு மீசையும் ஓங்கி வளர்ந்த தோற்றமும் என அந்த அழுகைக்கும் அதன் உள்ளுறையும் வேண்டுகோளுக்கும் எப்படிப் பொருத்திப் பார்ப்பதென்று தெரியாமல் அவ்வப்போது மனம் அலைவுறும். பாடல் செய்கிற மாயங்கள் பல. அவற்றுள் மேற்சொன்னது ஒன்று. அந்தப் பாடலைக் கடக்கும் போதெல்லாம் இன்னமும் ஒரு கணம் தடுமாறுவதை என்னென்பது..?
 
                     
குடிக்கிற பானம் மனதை நெகிழ்த்தும் என்பது ஒரு நம்பகம்.அனேகமாக அது ஒரு இறைஞ்சுதல் போலத் தான். எதற்கெடுத்தாலும் பொதுவாக ஒரு தலைவலி வில்லையை முழுங்கிவிட்டுச் சற்று நேரத்தில் சரியாகிவிடும் என்று நம்புவது மனிதனுடைய அசாதாரணமான சாதாரணங்களில் ஒன்று. விஷயம் என்னவென்றால் யாருமே இல்லையா எனைத் தேற்ற என்று ஒருசில தடவை சொல்லிப் பார்ப்பதும் தலைவலித் தைலத்தைத் தேய்த்துக் கொள்வதோடு அந்த வலியை வழியனுப்புகிறதுமாக அடுத்தடுத்த நகர்தல்களுக்குத் தானும் தன் நம்பகமுமாய் தொடர்ந்து பயணிப்பது ஒரு பாவனை ஆட்டம். இதில் தலை நிஜம். வலியும் மருந்திடலும் யாருமே இல்லையா என்ற அங்கலாய்ப்புக்கான ஆதிப்புனஸ்காரங்கள். அத்தோடு தீர்ந்தது எல்லாமும்.
 
                        
காசி விஸ்வநாதன் என்பது அவரது முழுப்பெயர். யாரும் அவரை முழுப்பெயர் சொல்லிப் பார்த்ததில்லை. எல்லாருக்குமே அவர் காசி தான். ஒரு படத்தில் டான் வேடப் பாத்திரத்தின் பெயர் காசி என்றிருக்கும் அதே ஸ்தாயியில் அதே தொனியில் மகாநதி சங்கர் எனும் நடிகரின் கரகர குரலில் காஸ்ஸி என்பார். எப்போதுமே அந்த ஸ்ஸி சேர்ந்தே ஒலிக்கும்.சுருட்டை முடி.எப்போதும் எண்ணெயில் ஊறும் சிகை. அந்தக் காலகட்டத்துக்குச் சற்றும் சம்மந்தமே இல்லாத முன் தியாகராஜ பாகவதரின் உடை பாவனை இத்யாதிகளைத் தன்னாலான அளவு மெயிண்டெய்ன் செய்வார் காஸி.சாதாரண நாட்களில் சாதாரணமாக இருப்பார். எங்காவது சுற்றுலா என்று கிளம்பினால் பயணிக்கிற தூரம் பிரயாண வாகனம் இத்யாதிகளை எல்லாம் முடிவு செய்து கொண்டே வரும் போது சரி காசி வரட்டுமா என்ற கேள்விக்கு சற்று யோசித்து விட்டு அந்தாளு வரட்டும்யா...கலகலன்னு இருக்கும் என்று அழைத்துச் செல்பவர்களும் இருந்தோம். அந்தாளு வேணாம்யா நம்மள பேசவே விடாது என்று விட்டுவிட்டும் சென்றோம். எது நடந்தாலும் நன்றி கூறுகிற அமைதி காஸியினுடையது.
                 
 
மதுரையின் எல்லையைத் தொட்டால் போதும் இரண்டு அவுன்ஸ் கர்மதிரவம் உள்ளே இறங்கினதும் பாகவதர் அட் ஈஸ் நிலையிலிருந்து அட்டென்ஷன் நிலைக்கு மாறிக் கொள்வார்.
என்ன பாட்டுப் பாட எனக் கேட்பார்.
 
    
அந்த இடமே ஏன் இந்தப் பிரபஞ்சமே அமைதியுறும்.எந்தப் பாட்டு என்று ஆளுக்கு ஒன்று சொல்லலாம் அல்லவா..? அப்படிச் சொல்வது காஸிக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஏன்யா மூத்திரம் அடிக்கிற இடத்துல வரிசை கட்டி நிக்கிறாப்ல கசகசக்குறீங்க..? பாடுறத விட பொறுப்பான வேலை அதை தேர்ந்தெடுத்து சொல்றதுய்யா..? சாதாரணமா அது..? பாட்டுன்னா அப்டியே மனசை உருக்கி கசக்கி பிழிஞ்சுர வேணாமா..? மனுஷனோட கண்டுபிடிப்பிலயே உசத்தியானது எது..?பாட்டுதான்....இதுக்கு ஈக்கோலா எதும் கிடையாதுல்ல..?அப்ப அதை தேர்ந்தெடுக்கிற பொறுப்பு என்ன மாதிரியான பொறுப்பு? சும்மாவா.?"
 
               
என்னவோ காஸி தான் எங்களை டூர் அழைத்துச் செல்பவராட்டம் அதிகாரம் தூள் பறக்கும். எத்தனை சொன்னாலும் அவரது எடையை விட அன்பான மனிதர் காஸி என்பது எல்லோர்க்கும் தெரியுமல்லவா.? நான் ரஜினி பாட்டொன்றை சொல்லலாமா என என் அருகே இருக்கிற ரமேஷிடம் கேட்பது போலக் கேட்பேன். என் தலையைப் பின் ஸீட்டிலிருந்தவாறே தடவி வேணாம்டா கமல் கோச்சுக்குவார் என்பார் காஸி. எம்ஜி.ஆர் பாட்டை சொன்னால் கணேசன் வருத்தப்படுவார் என்பார். இதெல்லாம் சாக்கு காஸி தனக்கு உகந்த பாடல் ஒன்றை எங்களுடைய பிடித்தங்களின் கூடையிலிருந்து எடுத்துக் கொண்டாற் போல் காட்டுவதற்காகக் காத்திருப்பார். சரி காஸி நீங்களே சொல்லுங்க என்றாலும் விட மாட்டார். ஒரு வழியாக நவநீ ஒரு பாட்டை சொன்னதும் அவன் நெற்றியை வழித்து சொடக்கிடுவார்... இது தாண்டா செரியான பாட்டு என்பார்...
முறைக்கும் அஷோக்கிடம் அப்டி இல்லடா மருமகனே...நீங்க சொல்றதெல்லாம் சரி தான். ஆனா பருவந்தப்புன மழை மாதிரி ஆய்டக் கூடாதில்ல..வள்ளுவர் சொன்ன பெய்யெனப் பெய்யும் மழை மாதிரி இருக்க வேணாமா..?  எல்லோருடைய ஒத்த சம்மத புன்முறுவல்களைப் பெற்றுக்கொண்ட திருப்தியில் ஆரம்பிப்பார்.
             
 
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக
அண்ணன்தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்குக் கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக
 
தாயாரும் படித்ததில்லை தந்தைமுகம் பார்த்ததில்லை
தாலாட்டுக் கேட்டதன்றி ஓர்பாட்டும் அறிந்ததில்லை
தானாகப் படித்து வந்தான் தங்கமென வளர்ந்த தம்பி
தள்ளாத வயதினில் நான் வாழுகிறேன் அவனை நம்பி
 
அண்ணன் சொல்லும் வார்த்தையெல்லாம் வேதமெனும் தம்பி உள்ளம்
அண்ணன் சொல்லும் வார்த்தையெல்லாம் வேதமெனும் தம்பி உள்ளம்
அன்னை என வந்த உள்ளம் தெய்வமெனக் காவல் கொள்ளும்
சின்னத் தம்பி கடைசித் தம்பி செல்லமாய் வளர்ந்த பிள்ளை
ஒன்றுபட்ட இதயத்திலே ஒருநாளும் பிரிவு இல்லை
 
ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம் போல் நாங்கள் கொண்ட சொந்தமடா
ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா
நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா
 
 
இந்தப் பாடலை காஸி பாடி முடிக்கும் போது அனேகமாக அந்த வேனில் பயணிக்கிற அனைவருமே அழுது கொண்டிருப்பர் என்பது தான் நிசம். இதில் ட்ரைவர் கண்ணை துடைத்துக் கொண்டு ஓரமாக நிறுத்தி டீ சாப்டுட்டு போலாம்ணே என்று இண்டர்வல் விடுவார். இந்தப் பாட்டை காஸி பாடிக் கேட்ட யாருமே கண்டசாலா பாடிய பாடல் என்றால் சந்தேகமாக பார்க்கிற அளவுக்கு காஸி தான் அதைப் பாடிய நிசக்குரல் எனும் அளவுக்கு பிய்த்து உதறி விடுவார். இத்தனைக்கும் அந்தக் கடைசி வரிகளை எல்லாம் அவர் செலுத்திச் செல்லும் போது ஒரு ரிகார்டிங் ஸ்டூடியோவில் அமர்ந்திருக்கிற உணர்வு தான் எழும். அத்தனை அற்புதமான குரலும் ஒரு பாடலை எப்படி எங்கனம் பிசகாமல் பாடுவது என்பதற்கான உதாரணம் காஸி என்றால் தகும்.
 
               
அதே டூரிலிருந்து திரும்பி வரும் வழியில் இதே பாட்டை ரமேஷ் எனப்படுகிற குறக்களி பாடும்,நிறை போதையில் தள்ளாத வயதினிலே நான் வாழுகிறேன் அவனை நம்பி என்று நவனீ பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்துத் தன் பையில் செருகிக் கொண்டே என் மடியில் படுத்துக் கொள்வான். அண்ணன் சொல்லும் வார்த்தையெல்லாம் எனும் வரியை சொல்லி சீனியின் தலையைத் தடவுவான். சின்னத் தம்பி கடைசித் தம்பி என்பதற்கு ரமேஷ் தேர்ந்தெடுப்பது அவனை விட இரண்டரை அடி உயரமான அஷோக்கை. நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா என்று கடைசி வரி வரை பாடி விட்டுத் தான் அயர்வான் ரமேஷ். அவனை எங்களால் எதுவும் செய்ய முடியாது. ஏண்டா இப்டி பண்றே என்றதற்கு அவன் சொன்னது அந்தாளு பாடுறதை விட நா நல்லாத் தானே பாடுறேன் என்று.
 
   
இந்த ஒரு சொல்லுக்காகவே ரமேஷை வெளியூர் ரவுடிகளை இறக்குமதி செய்தாவது அடித்தே தீர்வேன் என்று நாலைந்து நாட்கள் திரிந்தான் அஷோக். அப்புறம் ஒரு நாள் அதே ரமேஷைப் பார்த்து ஏண்டா அப்டி சொன்னே எனக் கேட்ட போது ரமேஷ் சொன்னது கிட்டத் தட்ட பாவமன்னிப்புக்கு ஈக்கோலான வார்த்தைகள்.
 
 
"அப்டியா மாப்ளே சொன்னேன்...ச்சே...அந்தாளு குரலு எவ்ளோ நல்லா இருக்கும்...நா போதையில எதுனா பேசிருப்பேன் நீ சீரியஸா எடுத்துக்காத"
 
இதெப்டி இருக்கு?
 
 
(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...