???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை 0 சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்! 0 அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு! 0 மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் 0 ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்! 0 தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு! 0 கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை 0 `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் 0 இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! 0 இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 47 - பெய்யெனப் பெய்யும் இசை - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   11 , 2017  01:47:29 IST


Andhimazhai Image

பெரிய திரையுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு சின்னத்திரைக்கான சைஸ் மிகவும் கொஞ்சூண்டு. என் பால்யத்தின் ஆரம்பக் காலமெங்கும் TV குறித்த ஏக்கங்களுக்கும் இடமுண்டு. சின்னத்திரை, தொலைக்காட்சி என்றெல்லாம் அறியப்பட்ட TV ஒரு காலத்தில், தலைவலி என்பதன் சுருக்கமாக எங்களால் நொந்து கொள்ளப் பட்டது. மந்திரா பேடி எங்களைத் தொந்தரா செய்தார்.  டி.எம்.எஸ். பாடிய "அமைதிக்குப் பெயர்தான் சாந்தி..." "இந்திக்குப் பெயர்தான் சாந்தி" என்றானது. 'மொழுக்'கென்று எதைப் பார்த்தாலும் எனக்கு மந்திரா பேடியின் முகம் ஞாபகம் வந்தது. முகம் அய்யா முகம். ப்லாச்சுளை போல் அவள் உதட்டைப் பார் என்பார் சித்தப்பா. ஹம்லோக், புனியாத், ஸ்வாபிமான் போன்ற துர்தேவதைகள் எங்களைத் துரத்திக் கொண்டே இருந்தன.

 

 

எனக்கு இந்தி தெரியாத். வராத். அம்மாவுக்கும். தெரிந்தாற்போல் மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு விடாமல் அப்பாவும் அம்மாவும் பார்ப்பார்கள். கிரிக்கெட் பார்ப்பதற்காக, TVக்காக இரண்டொரு பக்கத்து வீடுகளுக்குச் சென்று, பிறகு சொந்த TV வாங்கிய பிற்பாடும் ரொம்ப நாட்களுக்கு இந்தி மட்டும்தான் கிடைத்தது. அப்போதெல்லாம் மெட்ரோ என்று நயவஞ்சகப் பெயரில் மெட்ராஸ் உள்ளிட்ட பெரியாம்பிள்ளை ஊர்களுக்கு மட்டும் தனியே படம் காட்டிப் பந்திவஞ்சனை செய்தது அரசாங்கம். பின்னே வராதா கோபம்? இரண்டாயிரத்து ஐந்நூறு வருடப் பாரம்பரியமுள்ள நகரமான மருதைக்காரன் நான். பிறகு எல்லோருக்கும் TV காட்ட ஆரம்பித்ததும் மறுபடி சென்னையைக் கட்டிப் பிடித்துக் கொண்டேன். மதுரைக்குச் சென்னைதானே மறுவீடு அய்யா?

 

 

இது இப்படி இருக்கையில், தமிழில் வெளியாக வாய்த்த முதல் நெடுந்தொடர் என்ற பெருமையை விழுதுகள் பெற்றது. நிற்க. இந்தத் தொடர் TV பற்றியதல்ல. ஆனால் TVயைப் பற்றித்தான் சொல்லவும் வேண்டியிருக்கிறது. என்னவென்றால், "வலப்பக்கம் ஒரு கரை.. இடப்பக்கம் ஒரு கரை..." என்று அடிக்கடி தினமும் ஒரு நாளைக்கு மூன்று முறை ஒளி/மறுஒளி பரப்புகளில் தோன்றி, மண்டைகளை விடாமல் பற்றிக் கொண்ட பல நெடுந்தொடர்களில், பல பாடல்களில், சில நெடுந்தொடர்களையும், சில பாடல்களையும் மறக்க முடியாது.

 

ஒரு சைடு குரல் சொல்லட்டுமா?

 

"தோன்றிற் நெடுந்தொடரில் தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று"

 

எனும் அளவுக்கு டைட்டின் ஸாங்குகள், "எங்க.. எங்கிட்டேருந்து தப்பிச்சுக்க.. பாப்பம்" என்று துரத்தின. சில சேனல்களும், சில தொடர்களுமே இருந்தபடியால் ஓங்கி ஒலித்தன இப்பாடல்கள். அவற்றில், 'சித்தி' தொடரின் "கண்ணின் மணி..." ஆகட்டும், "கங்கா யமுனா சரஸ்வதி..." ஆகட்டும், 'சொந்தம்' தொடரின் டைட்டில் சாங் ஆகட்டும் சினிமாப் பாடல்களின் கலைக் காவிய அந்தஸ்து சற்றும் குன்றா வண்ணம் பார்த்துப் பார்த்துப் பண்ணப்பட்டன.

 

அந்த வகையில், சினிமாவில் பாட்டெழுதியவர்கள், பாடியவர்கள், எடுத்தவர்கள், என அத்தனை பேரும் TVக்குப் பெயர்ந்தது அதன் பின் வரலாறு.

 

இதற்கெல்லாம் சம்பந்தமில்லாத ஒரு முற்காலத்தில், எந்த வகையிலும் புரிந்து கொள்ள முடியாத பல பாத்திரங்களை உருவாக்கியவரான கே.பாலசந்தர் எனப்படும் கே.பி சார் சினிமாவுக்குச் சற்றும் குறையாத 'ரயில் சிநேகம்' என்னும் நெடுந்தொடர் ஒன்றை இயக்கினார். ஆத்மார்த்தி எனப்படுகிற நான் தேடிப்பிடித்து இதன் ஒரிஜினல் கம்பெனி டிவிடியை வாங்கி அவ்வப்போது போட்டுப் பார்த்துக் கண் கலங்குவதற்குப் பற்பல உள் வெளிக் காரணங்கள் இருக்கின்றன என்றபோதிலும், மிக முக்கியக் காரணம் அது மொத்தத்துக்குமானப் பின்னணி இசையும், வைரமுத்துவின் வைர வரிகளால் எழுதப்பட்டப் பாடல்களும், அதைப் பாடிய விதமும்.. ஏன் எல்லாமும் என்பேன்.

 

முதலும் இல்லாதது.. முடிவும் இல்லாதது...

முகமே இல்லாதது.. அறிமுகமே இல்லாதது...

விதையும் இல்லாமல்.. நிலமும் இல்லாமல்..

மரமாய் உண்டாவது..

ரயில் ஸ்நேகம்.. ரயில் ஸ்நேகம்..

ரயில் ஸ்நேகம்.. ரயில் ஸ்நேகம்.."

 

வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்

வந்த தூரம் கொஞ்ச தூரம்

சொந்தமில்லை எந்த ஊரும்

தேவையில்லை ஆரவாரம்

 

தோளில் உள்ள பாரம் போதும் நெஞ்சில் என்ன வேறு பாரம்

நேற்று மீண்டும் வருவதில்லை நாளை எங்கே தெரியவில்லை

இன்று ஒன்று மட்டுமே உங்கள் கையில் உள்ளது

வாழ்க்கை வந்து உங்களை வாழ்ந்துபார்க்கச் சொன்னது

 

முதலும் இல்லாதது

 

 

இந்தப் பாடல் பாடிய ஜேசுதாஸின் அதே ஒரே பெரிய திரைக்கான குரல் ஒரு பரவசத்தின் நடுவாந்திரம் ஏற்படக்கூடிய சின்னக் கிறக்கம் அபூர்வமாய்த் திரும்பத் திரும்ப இரட்டிக்கும். இந்தப் பாடலில் அது சாத்தியமாகும். இன்னும் சொல்வதானால், சமீப ஆண்டுகளில் இந்தப் பாடல் மட்டுமில்லாமல், என் சிசுகாலப் புரள்தல் தொடங்கி, நேற்று வரைக்குமான பற்பலப் பாடல்களை அகழ்வாராய்ச்சி செய்வதும், சொந்த ஊரின் பாசி நீர்த்தேக்கத்தில் ப்ரியத்தின் நெத்திலிகள் தென்படத் தென்பட, காலங்கனக்காதத் தூண்டிலோடமர்ந்து, கொத்திக் கொத்திக் கலயத்தில் சேர்க்கிறாற்போல் நானே அகழ்ந்து மீண்டும் அடைந்தேன். பாடல்கள் என்று மாத்திரமல்ல. மறதி என்பதே ஞாபகம் என்பதன் உறக்க காலம் தானே? அப்படிக் கிடைத்தவற்றில் இந்தப் பாடலை விட "இந்த வீணைக்குத் தெரியாது..." எனும் இதே நாடகத்தின் இன்னொரு பாடல் மிகப் பிரபல்யம்.

 

ஒரு பாடலின் கேட்கும் அனுபவம் என்பது எந்தப் புள்ளியிலிருந்து வேண்டுமானாலும் தொடங்கக் கூடிய ஒரு கோலத்தைப் போன்றது. அந்த வகையில் ஒவ்வொரு பாடலுக்கும் மனித வாழ்வைப் போன்றே ஒரு பிறப்பு, ஒரு வருகை இருக்கிறது என்பதை உணர முடிகிறது. சில பாடல்களின் வருகையை ஒட்டிய (முதல் முறை அவற்றைக் கேட்க நேர்தலை அதன் வருகையென்று கொள்ளலாம்தானே) எதிர்பாராமை எத்தனை அழகானது.

 

அப்படித்தான் அம்மா ஒரு நாள் TV சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்தபோது என்னைத் திட்டினாள். ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் என்றொரு பெயர் இருக்குமல்லவா? அந்த ஸ்தானத்தின் அதிகாரத்தை உணர்த்துவதற்கான ஒரு படம் தேவைப் பட்டால், சாவிக் கொத்தை முந்திக் கொண்டு எது தேர்வாகும் என்று நினைக்கிறீர்கள்? யெஸ். TV ரிமோட்தான் அது. ஆகவே கடும் முகத்தோடு வெடுக்கென்று என்னிடமிருந்து அதைப் பறித்தாள். "குட்ரா... காதலிக்க நேரமில்லை பார்க்கணும்.." என்றாள். நான் உடனே ஒரு பாலையாவையாவது, நாகேஷையாவது, காஞ்சனாவையாவது, ராஜஸ்ரீயையாவது, சரி வேண்டாம். முத்துராம ரவிச்சந்திரர்கள் கோபப்பட்டாலும் பரவாயில்லை.

 

அங்கே வண்ணமயமாக  ஒரு பாடல் தன்னைத் துவக்கி ஒலிக்க ஆரம்பித்தது. சத்தியமாகச் சொல்லுகிறேன். என் வாழ்வின் வெளிச் சொல்ல முடியாத சிலபல செல்லக்குட்டி நிமிஷங்களின் வரிசையில் அந்த நிமிடத்தைச் சொல்வேன். இது கொஞ்சம் அதிகம் என்று தோன்றலாம். இருந்தாலும் சொல்கிறேன். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து நீங்கள் எழுப்பப்படுவதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் எதிரே பார்ப்பது முன்னரெப்போதும்  பார்த்திராத ஓர் அழகிய நீர்வீழ்ச்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதுக்குப் பிடித்தவர்கள் உங்களுடன் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அங்கே லேசாக மழை தூறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குழந்தைப் பறவை உங்களுக்கு மட்டும் பிரியமான ஒரு கானத்தைத் துவக்குவதாக வைத்துக் கொள்ளுங்கள். இவை அத்தனையும் கனவென்றாலே கிளர்ந்து போகுமல்லவா மனம்? நிஜமென்றா குகையில் அதுதானே சொர்க்கம்? அப்படி ஒரு பாடல். எனக்குள் மழைத்தது என்றுதான் சொல்வேன்.

 

மனித மனத்தின் விசித்திரம் எவ்வெவை நம் வாழ்வின் ஆசீர்வாதங்கள் என்று நம்மால் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். அவைகள் எத்தனைதான் அரிதாய் இருந்தாலும், அதிகதிகம் கிட்டினாலும் ஒன்று போலவே அவற்றை நேசிக்கும் மனம். ரயில், யானை, மழை, ஐஸ்க்ரீம் தொடங்கிப் பற்பல ஆசீர்வாதங்களை நாம் அறிவோம் அல்லவா? நம் அறியாமையின் மீது, தன்னைப் பூர்த்தி செய்தபடி வருகை தரும் அறிதலின் மகரந்தம்தான் பாடல் என்பது. இதில் வியப்பு என்னவெனில், துளி மகரந்தம், மானசீகத்தில் முழுப் பட்டாம்பூச்சியாகவே மாறும் என்பது. உண்மையில் அந்தப் பாடலை எப்படித் தேடிப் போவது என்று பலநாள் தவித்தேன்.

 

விஜய் ஆண்டனி இசையமைத்த,

 

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு

உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்

செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன்

செய்தி அனுப்பு …ஹோ

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்

உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை

காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்

சொல்லி அனுப்பு ..ஹோ

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்

மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்

கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்

கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

 

என்னை தேடி

 

யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ

உன் கனவினில் நிறைவது யாரோ

என் சலனங்கள் தீர்த்திட வாராயோ

ஏனோ என் இரவுக்குள் நெல்வது ஏனோ

ஒரு பகல் என சுடுவது ஏனோ

என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ

காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு

காதலிக்க அங்கு நேரம் இல்லையா

கிளையை போல் என் இதயம் தவறி விழுதே

 

என்னை தேடி

 

 

ஒரு நெடுங்காலம் எனது அலைபேசியில் அழைப்பொலியாக இந்தப் பாடலைத்தான் வைத்திருந்தேன். நல்ல பாடல் தரும் கண்ணீர்த் துளி என்பது ஸ்படிகம் போன்றது. இந்தப் பாடலைக் கேட்க வேண்டும் என்பது எந்தெந்த நாட்களின் நியதி என்பதை அறியாத நானே எனது இன்னொரு எண்ணிலிருந்து அடிக்கடி இந்த எண்ணை அழைத்தேன். ஸ்பீக்கரில் ஒலிக்கும் இந்தப் பாடல். பெய்யெனப் பெய்யும் இசை.

 

இதை எழுதிய தேன்மொழி தாஸ், தமிழில் மிகக் குறைவான பெண் பாடலாசிரியர்களில் குறிப்பிடத் தக்கவர். தனது கவிதை நூல்களுக்காகவும் அறியப்படுகிறவர்.

 

இன்று என் வாழ்வின் உரையாடல்களில் அநேகம் கதைத்துக் கொள்ளும் குறிப்பிடத் தகுந்த எனது தோழமைகளில் ஒருவர். என்றபோதும் இது என் தோழியின் பாடல் என்பதல்ல விஷயம். இந்தப் பாடல் தந்த தோழமை தேன்மொழி தாஸ்.

 

 

ஒரே ஒரு வரியைச் சொல்லிக் கொள்ளும்படி எழுதிவிட்டால் நிம்மதி என்பான் மூவேந்தன்.

 

சும்மா போகும் வடிவேலுவை யாரோ களத்தில் இறக்கிவிட, அவரை நையப் புடைத்துவிட்டுக் கோப்பையைப் பெற விழையும் பரும பயில்வான் போல, சிக்குகிறவர்கள் மூக்கில் குத்தி, எது இலக்கியம் என்று குஸ்திக்கு வரச் சொல்லிக் கட்டாயப் படுத்தும் செய்கைக்கு நடுவாந்திரம், ஒரு தொலைக்காட்சிப் பாடலுக்குத் தன் மொழியை ஒரு வள்ளலைப் போல் அள்ளி வழங்கியிருக்கும் தேன்மொழி தாஸின் இந்தப் பாடல், காலமுள்ள காலம் வரை நின்று நிலைத்து, நிரந்தரிக்கும் என்பது இந்தப் பாடலைக் கேட்பவர்கள், பிறழா மனம் கொண்ட புண்ணியவான்கள் ஒத்துக் கொள்வார்கள்.

 

ராஜா'ஸ் கார்னர்

 

ராஜாவின் ரமணமாலை பக்திச்சரத்திற்கென அவரே இசை அமைத்து எழுதிப் பாடிய பாடல் பிட்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே...

 

இதே பாடலை பின்னாட்களில் நான் கடவுள் படத்தில் இடம்பெறச் செய்தார் ராஜா.

 

    

ரமணர் மீது ஆரம்பம் முதலே பெரும் ஈர்ப்பும் பக்தியும் கொண்டவர் ராஜா.இதை மதம் ஆன்மீகம் பக்தி ஆகியவற்றின் இழைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மெய்ஞானம் மிகுந்தொலிக்கும் பாடல் என்பதை உணரலாம்.இப்படி ஒரு பாடலுக்குள் இசைக்குக் கட்டுப்பட்டு இத்தனை கனமான தத்துவவிசாரங்களைப் புகுத்த முடியும் என்பதை மெய்ப்பித்திருப்பது ராஜாவின் அற்புதம்.அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிட்சைக்குச் செல்வது எவ்விடத்தில் என்கிற ஒரு வரியைக் கடக்கவே முடியவில்லை.வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரம் உள்ளது உன்னிடத்தில் எனும் வரிக்குள் தொலையாத மனமும் உண்டா.?பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே...?உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே...

 

 அபாரமான ஞானக்குளியல் இந்தப் பாடல்.ராஜாவின் இன்னொரு உச்சதூரம்.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...