எழுதும்போது சொந்த அனுபவங்களை எழுதுவது, அத்துடன் கற்பனை கலந்து எழுதுவது, கற்பனையாகவே எழுதுவது என்று பல வகை உண்டு.எழுத்தாளர்களுக்குத் தன் அனுபவங்களை மட்டும் வைத்து எழுதும்போது சில போதாமைகள் வருவதுண்டு. ஏனென்றால் எவ்வளவுதான் முயன்று எழுதினாலும் எழுதத்தேவையான அனுபவங்கள் சொற்பமாகவே இருக்கும் .ஆனால் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தைப் பொறுத்தவரை அவருக்கு இந்த போதாமை வருவதற்கு வாய்ப்பில்லை .அவரது விரிந்த அனுபவங்களை எழுதுவதற்கு அவருக்கே காலம் போதாது என்கிற வகையில் உலகெங்கிலும் பறந்து ,பரந்துபட்ட அனுபவத்தைப் பெற்றவர்.வட்டாரம், பிரதேச ,மொழி, நாடு எல்லை கடந்த உலக மனிதராக உலக எழுத்தாளராக தயக்கமின்றி அவரைக் கூறமுடியும்.அவருக்கு அப்படிப்பட்டதான ஏராள அனுபவங்கள் வாய்த்திருக்கின்றன.பல எழுத்தாளர்கள் கற்பனை செய்து மட்டுமே எழுத வேண்டிய காட்சிகளைக்கூட நேரில் கண்டவர்.பிறர் கற்பனையிலும் காணாத புறவயக்காட்சிகளையும் கண்டிருப்பவர் ; அகவய உணர்வுகளையும் கொண்டிருப்பவர்.
அ.முத்துலிங்கம் கதைகளில் வரும் பின்புலமும் கதை மாந்தர்களும் அவர்களது குண இயல்புகளும் பழக்கங்களும் நம்பிக்கைகளும் நமக்கு புதிதாக வேறொரு நிலக்காட்சியில் புதிய தளத்தில் நம்மைக் கொண்டு போய் நிறுத்துகின்றன .அதுஒரு புதிய அனுபவமாக நமக்கு மகிழ்ச்சி தருகின்றன.
வேறு எந்த எழுத்தாளருக்கும் கிடைக்காத வேறுபாடான அனுபவங்கள் கொண்டவர் என்பதால் அவர் கதைகளை படிக்கும் போது கிடைக்கும் வாசிப்பு அனுபவம் அலாதியானது.
அ.முத்துலிங்கம் தன் பள்ளிப் பருவத்திலேயே கவிதை ,கதை என்று முயன்றவர் என்றாலும் முதல் சிறுகதைத் தொகுப்பை 1964-ல் வெளியிட்டுவிட்டு சுமார் 25 ஆண்டுகள் எழுதாமல் இருந்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய விரதம் போன்றது; உபவாசம் போன்றது. ஆனால் அப்போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார் ?பல்வேறு நாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் ,அரசு அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர், வேறு வகையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். அப்போதெல்லாம் இவரும் வாசகனாக நின்று படிப்பறிவை செழுமைப்படுத்தியிருக்கிறார். தனக்குள் இருந்த எழுத்தாளரை 25 ஆண்டுகாலம் அமிழ்த்தி வைத்திருக்கிறார் .இது எவ்வளவு பெரிய உள் அழுத்தத்தை தந்திருக்கும்.பிறகு எழுத ஆரம்பித்தவர், இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்.
அவரது வாசிப்பின் ஆழம் ஆங்காங்கே வெளிப்பட்டு விடுகிறது .புராண இதிகாசங்களில் அவருக்கு ஆர்வமும் ஈடுபாடும் உண்டு .அது சம்பந்தமான தகவல்கள் அவரிடம் ஏராளம் இருக்கின்றன. கதைகளில் பீறிட்டும் விடுகின்றன.எனவே தான் வெளிநாட்டில் ஆப்பிரிக்காவில் வாழும் மாந்தர்கள் பற்றிய கதையில் கூட நம்முடைய புராண இதிகாச மனிதர்களின் குண இயல்புகளை ஒப்பிட்டு அவரால் எழுத முடிகிறது.புராணக் குறிப்புகளைத் தூவ முடிகிறது.
முத்துலிங்கம் கதைகளில் வரும் பாத்திரங்கள் வேறுவேறான வேறுவேறு நிலக்காட்சிகளில் இயங்குபவை ; வேறுவேறான கலாச்சாரப் பின்புலம் கொண்டவை; விதவித மொழி பேசுபவை.அவை ஆர்வம், ஏக்கம், தாபம், காதல், குதூகலம், பசி, நிராசை என்று பிரதிபலிப்பவை. கதை மாந்தர்கள் இலட்சியவாதம் பேசாத, புரட்சிக்கனல் கக்காத,சித்தாந்தம் சுமக்காத எளிய மனிதர்கள்.
அ.முத்துலிங்கம் பற்கள் தெரியச் சிரித்தமாதிரி கூட படங்களைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் அவரது நகைச்சுவை உணர்வு யாரும் எதிர்பாராதது. கதையின் எந்த இடத்திலும் காட்சிகளை நகைச்சுவையாகச் சொல்லும் கலை அவருக்கு வசப்பட்டு இருக்கிறது.
முத்துலிங்கம் எழுதும் கதை நடை சரளமான, வாசகனுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய எளிய நடையாக இருக்கிறது. கண் இடுங்கிப் பார்க்கத் தேவை இல்லாத எளிய புறவயச் சித்திரிப்புகள் அவருடையவை .அவர் இயல்பான கதை சொல்லியாக ஒவ்வொரு கதையின் மூலமும் மிளிர்கிறார். அவரது கூறு மொழியில் மொழி மயக்கங்களோ மொழி முழக்கங்களோ இருக்காது. திருகல் நடையோ சிக்கல் நடையோ பூடக முடிச்சுகளோ புகைமூட்டம் போன்ற கருத்து மயக்கங்களோ காணமுடியாது. மூளையைப் பிறாண்டும் வாக்கிய அமைப்புகளும் இராது. அவரிடம் எல்லாவற்றையும் விஞ்சி நிற்பது இயல்பான சரளமான மொழிநடை என்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை . அதே நடையில்தான் ஒவ்வொரு கதையையும் கூறுகிறார். இடையில் சில பரீட்சார்த்த முயற்சிகளையும் அவர் செய்திருக்கிறார். ஆனால் அவை இயல்பான சரளமான நடைக்கு முன் பலவீனப்பட்டு நிற்கின்றன.
ஒரு கதையை எடுத்துக் கொண்ட போது அதன் போக்கை எழுதும் பேனாவே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்கிற சுதந்திரமான நடையில் அவர் எழுதுகிறார் .ஒரு கதையில் மூன்று கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார் .எதன் பின்னே பயணம் செய்வது ?என்று ஒரு கேள்வியை வைக்கிறார்.எந்தப் பக்கம் போனாலும் கடலை நோக்கிச் செல்லும் ஒரு முச்சந்தி சாலையில் எதில் ஆரம்பித்தாலும் கடலுக்குப் போய் முடிவது போல் படைப்பாளியாகக் கதை செல்லும் பாதை அவருக்குத் தெரியும்தானே? .எனவே ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை முன் நகர்த்திச் செல்கிறார்.
கதை கூறுமொழி!
பொதுவாகக் கதைசொல்லி,கூறுமொழி பாத்திரம் பேசுவது போலவோ எழுத்தாளர் பேசுவது போலவோ இருக்கும். ஆனால் இதில் இவர் ஒரு புதிய முயற்சியை முயன்று பார்த்திருக்கிறார் - கதை கூறல் தன்மையில் அல்லது படர்க்கையில்தான் இருக்கும் .ஆனால் ’ஒருமணிநேரம் முன்பு ’ , ’உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது' கதைகளை ‘முன்னிலை’யில் எழுதி இருக்கிறார். அது புதிய பாணி என்றாலும் அதில் மனம் ஒன்றச் சற்றுப் பால் மாறும். உள்ளே நுழைந்தால் முன்னோக்கிச் செல்லும் ரயிலில் பின்னோக்கி அமர்ந்து பயணிப்பது போல புது அனுபவமாக இருக்கும்.
கதை கூறும் போது மிகையுணர்ச்சி கொள்ளாமல் , பச்சாதாபம் காட்டாமல், புரட்சிக் கொடி தூக்காமல் ,சித்தாந்தம் பேசாமல் ,தத்துவம் பேசாமல், கேள்விகள் எழுப்பாமல் சமநிலையுடன் சொல்கிறார்.
மாறுபட்ட பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் பற்றி கூறும்போது அவரிடம் எந்த ஏளனமும் இல்லை . விமர்சனமும் இல்லை. கேள்விகள் இல்லை. அதே சமநிலையுடன்தான் பதிவு செய்கிறார்.மொழி உணர்வு, தேச உணர்வு, இன உணர்வு கடந்து நமக்கு உலக சிந்தனையை உலக ஒருமையை எண்ண வைக்கிறார்.ஒரு படைப்பாளிக்குத் தேவையானது சார்பு வட்டத்துக்குள் தேங்காமலும் , குறுகிய கூடாரத்துக்குள் தங்காமலும் இருப்பதுதானே ?அப்படி ஒரு சுதந்திரப் பறவையாகத்தான் முத்துலிங்கம் இருக்கிறார்.இவ்வகையில் பேசும் மொழி கடந்து எழுத்துமொழி என்ற புள்ளியில் உலக படைப்பாளிகளுடன் அவர் இணைகிறார்.
ஓர் எழுத்தாளர் கதை கூறும்போது வாசகனுக்கும் அவருக்குமான தொடர்பைப்பற்றிப் பார்க்கும்போது முன்னே சென்று நம்மை பின்தொடர வைப்பது, தோளில் கை போட்டு அழைத்துச் செல்வது, விரல் பிடித்து அழைத்துச் செல்வது ,நம்மைத் தோளில் தூக்கி வைத்து பயணம் செய்வது, ஓடவிட்டு துரத்த வைப்பது என்று பலவிதங்களுண்டு. இருந்தாலும் இவருடைய தொடர்பு முறை வேறானது. ஹெலிகாப்டரில் நம்மை ஏற்றிவைத்து பரந்த உலகத்தைக் காண்பிக்கிறார். இவர் காட்டும் நிலக்காட்சிவெளி விசாலமானது .சில நேரம் ராட்சச கழுகு நம்மை கால்களால் தூக்கிக் கொண்டு கண்டம் விட்டு கண்டம் தாவுவதுபோல் அவ்வளவு விரிந்த வியந்த நிலையில் இவரது கதைகளில் காட்சிகள் உண்டு.
இவரது எந்தக் கதையை எடுத்தாலும் புறவய சித்தரிப்புகள் பிரமாதமாக இருக்கின்றன.அதுவே பாதிக் கதையை உணரவைத்து விடுகின்றன. தூரதேசமோ தூந்திரப் பிரதேசமோ பாலைவனமோ பச்சைப் புல்வெளியோ பாஸ்போர்ட் விசா இல்லாமல் அந்தந்த தேசத்தில் இறக்கிவிடுகிறார். வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வைக் கடத்தி விடுகிறார்.
ஒரு கதையைச் சித்திரம் போல் வரைபவர் .அதே நேரம் இணையாக வாசகனையும் வரைய வைக்கிறார். இவர் கதை நிகழ்விடம் நிலக்காட்சிகளை முதலில் சொல்லிவிடுவார். அதாவது நாம் வரையப்போகும் சித்திரத்திற்கான கேன்வாஸ் துணியை சரி செய்து வாகாக அமைத்துக்கொள்வது போல நமக்கு ஒரு முன் தயாரிப்பாக நிகழ்விடத்தை முன்பே சொல்லிவிடுவார்.
அதன்படி பனிப்பிரதேசங்களில், வழுவழுப்புப் பாறைகளில், சுட்டெரிக்கும் வெயிலில் பாலைவனங்களில், வழுக்குப் பாறைகளில் ,செங்கடலில், மணல்வெளிகளில், பாழடைந்த இடங்களில், புழுதிப்புயல்களில், சதுப்புநிலங்களில், நரம்பை குளிர்விக்கும் குளிர்பனிகளில், பிரம்மாண்டமான பல்துறை அங்காடிகளில், விமான நிலையங்களில் ,ஏன் இலங்கையில் மணற்பாங்கில், போர் மேகம் சூழ்ந்த பகுதிகளில்,பரபரப்பான ஐரோப்பிய தெருக்களில், பதற்றம் தொற்றும் தலிபான்களின் வீதிகளில் எல்லாம் நம்மை அழைத்துச் செல்கிறார் ; உலவ விடுகிறார்.படிமங்களை வெளிப்படுத்தி மனப் படத்தை நிலப்படமாக வரைய வைக்கிறார்.
இவரது பால்யகால நினைவுகளாகவும் இலங்கை மண் சார்ந்த பதிவுகளாகவும் பெரும்பான்மையாக இடம்பெற்ற நூல் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்'.சுஜாதாவுக்கு 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' போல் இவருக்கு இது எனலாம்.
கவிஞர் கண்ணதாசனைப் போல் புராண இதிகாசம் சார்ந்த அபரிமிதமான அறிவைப் பெற்றவர் இவர். கண்ணதாசன் தனது பாடல்களில் ’நீ என்ன கண்ணனா நான் என்ன கம்சனா?’, ‘ ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே..நல்ல பாரதத்தின் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே...’, ,கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா ?காளிதாசன் சகுந்தலை உன் சேய் அல்லவா’ என்றெல்லாம் கதைக்குப் பொருத்தமாகவும் சூழலுக்குப் பொருத்தமாகவும் போகிற போக்கில் காவியச் சுவைகளை தெளிப்பது போல, இவரும் புராணக் குறிப்புகளையும் காவியங்கள் பற்றிய செய்திகளையும் ஆங்காங்கே தெளித்து விடுகிறார் பொருத்தமான இடங்களில்.
கவிஞர் வைரமுத்து தன் பாடல்களில் 'இன்னிசை பாடிவரும் காற்றுக்கு உருவமில்லை ;காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை' என்ற வரிகள் மூலம் வெற்றிடத்தில் ஒலி பரவாது ஒலிபரவுதற்கு ஊடகம் தேவை என்ற அறிவியல் கருத்தை சொன்னதுபோல்,'தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து 'என்ற வரி மூலம் பாஸ்கல் விதியைச் சொன்னது போல், இவரும் தன்கதைகளில் அறிவியல் கருத்துகளை ஆங்காங்கே உதிர்த்து விடுகிறார்.
அ.முத்துலிங்கம் மூத்த எழுத்தாளராக இருந்தாலும் பண்டிதர் நடையில் எழுதுபவர் அல்ல. இன்றைய நவீன எழுத்துலகத்துக்குச் சொந்தக்காரர்தான்.குறிப்பாக வாழ்முறை மாறிய இந்த நவநாகரிக உலகத்தை எழுதுபவர்.இவரது சிறுகதைகள், சிறுகதையின் சூத்திரமாகச் சொல்லப்படும் முதல் வாக்கியம் நல்ல தொடக்கம் ,பரபர தொடர்ச்சி, திடுக் முடிவு என்கிற இலக்கண வகைமைக்குள் அடைபடாதவை. பலவற்றின் முடிவுகளை வாசகர்களே எழுதிக்கொள்ள நேரும்.அந்த அளவுக்கு வாசகனையும் ஒரு இணை படைப்பாளியாக நடத்துபவை.இவர் தீவிரமான வாசிப்பாளராக இருக்கிறார் நவீன படைப்பு உலகத்தில் உலகத்தர எழுத்தாளர்களை வாசித்தவர். நோபல் பரிசு பெற்ற, பிரபல வெளிநாட்டு எழுத்தாளர்கள் பலரையும் நேர்காணல் செய்தவர்.இந்த நவீன யுகத்தில் போக்கை அற்றைப் படுத்திக்கொண்டே அவதானித்து வருபவர்.
நாம் நமது பண்பாடு கலாச்சாரம் என்று நாம் புரிந்து ரசித்துக் கொண்டிருக்கும் போது, இவர் வெவ்வேறு வகையான பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் தமிழ் வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறார்.ஆப்பிரிக்கர்களை நாம் பண்படாத கலாச்சாரம் கொண்டவர்கள் என்று நினைக்கும் போது அவர்களின் பண்பட்ட கலாச்சாரங்களை இவர் கண்முன் நிறுத்துகிறார். அவர்கள் விருந்தினரை வரவேற்கும் விதத்தில் உபசரிப்பதில் நம்மைவிட பல மடங்கு உயர்வானவர்கள் என்று தோன்ற வைக்கிறார் .அதேநேரம் இறந்தவர்களை எரிப்பதை அவர்கள் அவ்வளவு பாவமாகக் கருதுகிறார்கள். இந்தியர்கள் எரிக்கப்படும் போது அவர்கள் பீதியுடன் பேசிக் கொள்கிறார்கள் என்பதையும் சொல்கிறார். அவர்கள் சடலத்தையும் உயிருள்ளதாகப் பார்க்கிறார்கள்; மதிக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது .இவர் ஒருமுறை காரில் போகும்போது இரண்டு பேர் தாயும் மகளும் வைர படிவுகளை அரித்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் புகைப்படம் எடுக்கலாம் என்று கேட்கிறபோது வெட்கப்பட்டு ”இப்படியேவா? ”என்று கூச்சப்பட்டவர்கள், அந்த டீ-சர்ட்டை கழட்டி விட்டு இயற்கையாக போஸ் கொடுத்திருக்கிறார்கள். இந்த பண்பாடு வியப்பூட்டுகிறது.
விருந்துக்கு செல்லும்போதும் வரும்போதும் அங்குள்ள பழக்கவழக்கங்கள் சில புதியவை; சில வியப்பூட்டும்; சிலபுதிராகவும் இருக்கும் ; சில அதிர்ச்சியூட்டும்.
உலகம் முழுக்க இருக்கும் பிரச்சினைகளாக வறுமை, பசி,ஆணாதிக்கம் ,பெண்கள் ஒடுக்குமுறை, புலம்பெயர் மக்களின் அலைக்கழிப்புகள்,கலாச்சாரப் புரிதலில் எதிர் கொள்ளும் இடர்கள்,முதலாளி வர்க்கத்தின் சுரண்டல்கள்,சமூக அழுத்தங்கள், நிற பேதங்கள்,குடும்ப அழுத்தத்தில் பணத்தைத் துரத்தி ஓடுதல், திருடுதல் ,உள்நாட்டுப் பிரச்சினையால் தப்பி ஓட எண்ணி வெளிநாட்டில் மாட்டிக் கொள்ளுதல் ,தண்டனை அனுபவித்தல், சித்திரவதையை அனுபவித்தல் என்று மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் மன நெருக்கடிகளையும் தன் கதைகளின் மூலம் நமக்குப் புரியவைக்கிறார்.
கதையில் வட்டாரமொழி!
ஜெயமோகன் கதைகளைப் படிக்கும்போது குமரி மொழியும் மலையாளம் கலந்த தமிழும் ஆரம்பத்தில் நம்மை இடைஞ்சல் செய்யும் . கி.ரா.வைப்படிக்கும் போது கரிசல்மொழியைச் சிறு தடையாகச் சிலர் உணர்வர். அதையும் கடந்து உள்ளே செல்ல வேண்டும். வாசிப்பு அனுபவத்தில் திளைக்க வேண்டும்.அதைப்போல முத்துலிங்கத்தின் இலங்கை பின்புலக் கதைகளில் அங்குள்ள சில புழங்கு சொற்கள் எதிர்ப்படும் .சிலர் கூறுவது போல் யாழ்ப்பாண வழக்கு ஒரு தடையாகத் தோன்றாது.அப்படி எனக்குத் தோன்றியதில்லை. அவற்றின் பொருள் புரிந்து கொண்டு மேலே செல்லப் பழகிக் கொள்வோம்.அவர் எழுதி இருக்கும் தும்பு மிட்டாய், இலையான், நுளம்பு,கோடா. சூப்புத்தடி, கொய்யகம், சொண்டு, அப்பியாசம் , கெதி, றாத்தல், வண்டில் காவி,பரிசாரகன், ,செட்டை ,ஒழுங்கை, குற்றி ,குசினி , விறாந்தை, கிட்டங்கி, கதிரை, வெளிக்கிடல், வட்டிலப்பம், உலங்குவானூர்தி, சொக்கான், பொக்கற், கொடுப்பு, மணித்தியாலம், விசர்,சுவாத்தியம் போன்ற ஈழத்து மண்ணின் சொற்களைப் பயன்படுத்தும் இடங்களை வைத்துப் புரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்ல அவர் வழக்குச் சொற்கள் அல்லாமல் நுண்ணலை அடுப்பு, நிறுத்தி, உயர் குதிச் செருப்பு,உலர்த்தி,தகைமை தரவு போன்ற தூய தமிழ்ச் சொற்களையும் பயன்படுத்துகிறார்.
கதை நிகழ்விடங்கள்!
சில எழுத்தாளர்கள் கதை எங்கே நிகழ்வது என்பதை பளிச் என்று சொல்லிவிட மாட்டார்கள் இழுத்துக் கொண்டு போய் போக்கு கட்டுவார்கள் .ஆனால் இவர்,கதையின் நிகழ்வு இடத்தை முதல் வரியிலோ அல்லது முதல் பத்தியிலோ அல்லது ஆரம்ப வரிகளிலோ சொல்லிவிடுவார்.
இலங்கை ’மாப்’பினை விரித்து வைத்து அதன் தலையில் யாழ்ப்பாணத்தில் தேடிப்பிடித்து சிகப்பு பென்சிலால் பெரியதொரு புள்ளிப்போட்டு இதுதான் கொக்குவில் என்று பீற்றிக் கொள்ளும் அளவிற்கு பிரபலமானது அல்ல எங்கள் ஊர் என்று தொடங்குகிறது ’கோடைமழை’ கதை.அதேநேரம் அந்த மேப்பை எடுத்துப் பிரிக்காமல் பென்சிலால் கோடு இழுக்காமல் இருக்கும் என்று சொல்லாமல் விடக்கூடிய அளவிற்கு பிரபலம் அற்றது என்றும் கூறிவிட முடியாது என்கிறார் .
பதினைந்து வருடங்களுக்கு பிறகு கொழும்புக்கு வருகிறேன் என்று ’மாற்றமா தடுமாற்றமா?’ கதை ஆரம்பத்திலேயே இடத்தைச்சொல்லிவிடுகிறது.
’பக்குவம்’ கதையோ ”கந்தர்மடம் செல்லம்மா அஞ்சு ” , ” கொக்குவில் வேலாயுதபிள்ளை பத்து ” என்று தொடங்குகிறது.
இன்னொரு கதை ‘குங்கிலியக்கலய நாயனார்’ என்ற பழமையான பெயர் கொண்டிருந்தாலும்
நடப்பது ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் நகரம் என்று தொடங்குகிறது.
’பெருச்சாளி’ கதையோ ’அதற்குப் பெயர் கட்டிங் கிராஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் பெருகிக் கிடக்கும் ஒருவகை பெருச்சாளி இனம் என்று தொடங்குகிறது.
’குதம்பேயின் தந்தம் ’கதை ’மேற்கு ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டுக்குள் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு சேதமின்றி வந்து சேர்ந்து விட்டோம் ’என்று இடத்தைச் சொல்லிவிடுகிறது.
எரிக்ஸனுடன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆப்ரிக்காவில் தங்கியிருப்பதாக ’திகடச்சக்கரம் ’கதையில் சில வரிகளுக்குப் பின் தெரியவருகிறது.
பாதையை நிறைத்து பனி மூடியிருந்தது கனடாவின் அன்றைய வெப்ப நிலை மைனஸ் 20 டிகிரி என்று தொடங்குகிறது ’ஒரு சாதம்’.
’கிரகணம்’ கதையோ ’நான் மணமுடித்து லண்டனுக்கு குடிவந்து ஐந்து வருடங்கள் கடந்து விட்டன’ என்று ஆரம்பிக்கிறது.
நான் ஆப்பிரிக்காவில் ஐநாவுக்காக வேலை செய்த போது நடந்த கதை இது என்று ’விழுக்காடு’ கதை தொடங்குகிறது .
யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தில் மூன்று சினேகிதிகள் இருந்தார்கள் என்று ’தளுக்கு ’ கதை ஆரம்பிக்கும்.
அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை என்று தொடங்குகிறது ’வடக்கு வீதி’ . அதுமட்டுமல்ல அக்கா, செல்லரம்மான் ,முடிச்சு ,சிலம்பு செல்லப்பா, எலுமிச்சை, வசியம் ,உடும்பு ,மனுதர்மம் ,மகாராஜாவின் ரயில் வண்டி, அம்மாவின் பாவாடை ,ஐந்தாவது கதிரை, தில்லை அம்பலப் பிள்ளையார் கோயில் போன்ற கதைகளின் நிகழ்விடங்களும் இலங்கைதான்.
கணேசானந்தனுக்கு தன்னுடைய பெயரைப் பிடித்திருந்தது ஆனால் அது ஆப்பிரிக்காவுக்கு வரும் வரைக்கும் தான் என்று ’முழு விலக்கு’ கதை ஆரம்பிக்கிறது.
’அமெரிக்காவின் நேஷனல் சயின்ஸ் பவுண்டேஷன் ஆதரவில் நாங்கள் இருவரும் மேற்கு ஆப்பிரிக்கா சியரா லியோன் போய்க்கொண்டிருந்தோம்’ என்று தொடங்குகிறது ’ஞானம்’ கதை என்றால்,’வம்சவிருத்தி’ கதையோ ’ பாகிஸ்தானின் வடமலைப் பிராந்தியத்தில் அவர்கள் வெகு நேரமாக பயணம் செய்தார்கள் ’ என்று தொடங்குகிறது.
சூடானில் நடப்பதாக ’பருத்திப் பூ ’ கதையின் ஆரம்ப வரிகள் சொல்கின்றன.
’பூமாதேவி’ கதை ’ நான் அமெரிக்காவுக்கு வந்து மிக வேகமாக முன்னேறியது இந்த தேநீர் போடும் துறையில்தான் ’ என்கிற ஆரம்பத்திலேயே அமெரிக்கா தெரிந்துவிடுகிறது.
சோமாலியா பெண்கள் அப்படித்தான் என்று ’ஒட்டகம்’ தொடங்குகிறது.
’விருந்தாளி’ கதையோ ’ ஆப்பிரிக்காவில் இருந்தபோது எனக்கு ஒரு வினோதமான சம்பவம் நேர்ந்தது ’ என்று ஆரம்பிக்கிறது .
’ ஆப்பிரிக்கா பாதை கண்டுபிடிக்கப்பட்ட சில மாதங்களில் இது நடந்தது ’ என்று ’மாற்று’ கதை தொடங்குகிறது.
’கடன்’ கதையோ ’ அமெரிக்காவிற்கு முதல் முறை வருபவர்கள் பல விதமான பொற்பாதங்களைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் ’ என்று சில வரிகளுக்கு பின் இடம் புரிகிறது.
’ பிரான்ஸ் தேசத்தில் ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்தில் இந்த பட்டறையை ஒழுங்கு செய்திருந்தார்கள் ’ என்று ’பூர்வீகம் ’தொடங்குகிறது
போஸ்டன் நகரத்திற்கு செல்லும் திட்டத்தை சொல்கிற ’கல்லறை’ கதை ,நிகழ்விடம்அமெரிக்கா தான் என்கிறது.
’சுவருக்குள்ளே மறையும் படுக்கை’ கனடாவுக்கு வந்து இறங்கிய முதல் நாள் அவருடைய மருமகள் வத்ஸலா ஒரு பொய் சொன்னாள் என்று தொடங்கும்.
கென்யத் தலைநகர் நைரோபியில் ’ராகுகாலம்’ தொடங்குகிறது.
’கொழுத்தாடு பிடிப்பேன் ’கதை டொரண்டோ ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய சண்முகலிங்கம் ராசரத்தினம் வாக்குமூலத்துடன் தொடங்குகிறது.
’23 சதம் ’கதை கனடிய டொலர் 23 சதம் இதன் மதிப்பு இலங்கை ரூபாயில் 15 இந்திய ரூபாயில் எட்டு இத்தாலியில் 353 என்று ஆரம்பிக்கிறது.
’மொசு மொசுவென்று சடை வைத்த வெள்ளைமுடி ஆடுகள்’ கதை ஆப்கானிஸ்தானில் தொடங்குகிறது.
இப்படி ’அடைப்புகள்’ அமெரிக்காவில். ’ஆப்பிரிக்காவில் அரை நாள்’ கதை எங்கே என்று சொல்ல வேண்டுமா என்ன?
’காபூல் திராட்சை’ கதை காஷ்மீரிலா நடக்கும்? ஆப்கானிஸ்தானில்தான்.
’நாற்பது வருட தாபம்’ கதை கனடா வீதிகளில் தொடங்குகிறது.இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.
(தொடர்ச்சி பகுதி-2 -இல் காண்க)