![]() |
அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -3 -அருள்செல்வன்Posted : வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 07 , 2020 16:40:26 IST
![]()
கதைகளில் வெளிப்படும் தகவல்கள், உண்மைகள்!
’செர்ரி மரம் ’ கதையில் கதைசொல்லியான பெயர் சொல்லாப் பெண் கேட்பாள், ’அம்மா உங்களைக் காதலிக்கவில்லையா அப்பா?’ ‘காதல் சோப் கட்டிபோல தேய்ந்து தேய்ந்து இறுதியில் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடும்.’ அப்பா பலகையைத் திருப்பி வெள்ளை ராஜாவுக்காக விளையாட ஆரம்பித்தார். ’உன் தங்கைமார் எல்லாம் மணமுடித்துவிட்டார்கள். அந்த துயரம் உனக்கு ஒன்றுமே இல்லையா?’ ’என்ன துக்கம் அப்பா? உலகம் விதிவிலக்குகளால் நிரப்பப்பட்டிருக்கிறது என்று நீங்கள் தானே சொன்னீர்கள். பூமிக்கு வெகு சமீபத்தில் இருக்கும் வெள்ளிக் கிரகம் மற்றக் கிரகங்கள்போல் அல்லாமல் எதிர்பக்கமாகத்தானே சுழல்கிறது.’இப்படி அறிவியல் நறுக் இருக்கும். லெமிங் என்றொரு உயிரினம் உள்ளது ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளில் மிகுந்து காணப்படும். ஐந்து அங்குலங்கள்தான் இருக்கும் .கட்டையான உருண்டையான தலை, சாம்பல் நிறம் .இப்படியாக பார்ப்பதற்கு ஐயோ என்று இருக்கும். புல், பூண்டு, தாவரம் எல்லாம் சாப்பிடும் .எவ்வளவு குட்டிகள் போடும் தெரியுமா? ஒரு வருடத்துக்கு 10 குட்டிகள் வரை ஈனும். ஆனால் பாவம் அவற்றுக்குப் பெரிய சோதனை ,மூன்று நான்கு வருடங்களில் அவற்றின் பெருக்கம் நாடு தாங்காது .சாப்பாடு போதாமல் போய்விடும். அப்போது அவையெல்லாம் கூட்டம் கூட்டமாக சேர்ந்து அப்படியே கடலில் மூழ்கிச் செத்துப் போகும். மறுபடி பெருக ஆரம்பிக்கும். நான்கு வருடங்களில் பழையபடி நாடு தாங்காது .மீண்டும் கடலுக்கு செல்லும் .இப்படியே தொடரும்.
பீதோவன் என்ற சிறந்த இசை மன்னர் ஸ்வரங்களை எழுதும்போதே அவர் மூளைக்குள் பெரிய வாத்தியங்கள் வாசித்தபடி இருக்குமாம். அது மாதிரித்தான் அம்மாவின் சமையலும். மூலக்கூறுகளைக் கலக்கும் போதே அந்த உணவின் சங்கீதம் அவர் காதுகளுக்குள் ஒலிக்கும். முன்பின் அனுபவிக்காத ஒரு பதார்த்தத்தை அவரிடம் கொடுத்தால் அதை ருசி பார்க்கும்போதே அதன் மூலக்கூறுகளைக் கூறிவிடுவார். அதே போல ஒன்றைச் சமைப்பதும் அவருக்கு பெரிய காரியமில்லை.
பதினேழு ஆண்டுகள் பதுங்கி வாழ்ந்து மேலே வந்து இனச்சேர்க்கை செய்து விட்டு மீண்டும் உள்ளே செல்லும் ’சி காடா’ பூச்சி இனம் ஒன்றுள்ளது.
ஒவ்வொரு வருடமும் கனடாவில் 11ம் மாதம் 11ம் தேதி காலை 11 மணிக்கு 2 நிமிட நேரம் மௌனம் அனுட்டிக்கப்படும். முதலாம் உலகப் போர் 1918 நவம்பர் மாதம் காலை 11 மணிக்கு முடிவுக்கு வந்ததை நினைவுகூரும் நாள். அன்றுதான் போர் நாடுகளுக்கு இடையில் சமாதான உடன்படிக்கை கையெழுத்தானது. கனடாவில் அந்த இரண்டு நிமிடம் பஸ்கள் ஓடாது. கார்கள் ஓடாது. தெரு நிசப்தமாக இருக்கும். வீடுகளில் ரேடியோக்களும் டிவிக்களும் அணைக்கப்பட்டிருக்கும். கனடா முழுக்க மௌனத்தில் ஆழ்ந்திருக்கும்.
தலைப்புகள் சொல்பவை!
அவர் தலைப்பு வைக்கும் விதத்தில் தனி பாணியைக் கையாள்கிறார்.சிலவற்றை பாத்திரத்தின் தலைப்புகளாக்கியிருப்பார்.பவித்ரா, பார்வதி , துரி,சிலம்பு செல்லப்பா, அக்கா ,ஸ்டைல் சிவகாமசுந்தரி போன்றவை உதாரணங்கள்.சில கதைகளுக்குக் கதையின் குவிமையத்தைத் தலைப்பாக வைக்கிறார். நீளம் என நோக்கினால் ‘ ரி’ என ஓரெழுத்திலும் வைப்பார். ’மொசுமொசு என்று சடை வளர்த்த வெள்ளைமுடி ஆடுகள்’ ,"உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது' என நீளப்பெயர்களும் வைப்பார்.
லூனாவை எழுப்புவது, அருள் நாயகம் மாஸ்டரும் ஐன்ஸ்டீனும், முதல் விருந்து முதல் பூகம்பம் முதல் மனைவி,எங்கேயோ இப்ப மூன்று மணி, சுவருக்குள்ளே மறையும் படுக்கை,உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது ,வெள்ளிக்கிழமை இரவுகள், கடவுளை ஆச்சரியப்படுத்து, புதன்கிழமை உன்னுடைய முறை , ஒன்றைக் கடன் வாங்கு போன்றவை அதில் அடங்கும்.
கதையின் முகமாக அமைந்தவை என்று தாத்தா விட்டுப் போன தட்டச்சு மெசின் , அண்ணனின் புகைப்படம் ,பாதிக் கிணறு,கம்ப்யூட்டர், ஆதிப் பண்பு, ஜகதலப்பிரதாபன் ,திருடர்கள், முதல் சம்பளம், வடக்கு வீதி, போன்றவற்றைச் சொல்லலாம்.
சற்றே புதிர்த் தன்மையான தலைப்புகள், கதையை யூகிக்க முடியாதவை என்று மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள், கொழுத்தாடு பிடிப்பேன், நிலமென்னும் நல்லாள், மொசுமொசுவென்று சடை வளர்த்த வெள்ளைமுடி ஆடுகள், திகடசக்கரம் போன்றவற்றைக் கூறலாம். அங்காடித் தெரு படத்திற்கு விமர்சனம் எழுதும்போது கூட யாரும் யூகிக்க முடியாத ’யானை வாழும் காடு’ என்று தலைப்பிட்டுள்ளார். இவரது சிறுகதைகளில் கடைசி வரிக்குப் பிறகு வாசகன் எண்ணத்தில் மீண்டும் புத்துரு கொண்டு தொடங்குகிற கதைகள் அதிகம்.
கதைகளில் பயன்படுத்தியுள்ள சில பளிச் உதாரணங்கள்!
கப்பல் மூழ்குவதுபோல உன் அம்மாவின் உயரம் குறைய ஆரம்பித்தது. அடுத்த கணம் முழங்காலில் விழுந்துவிடுவார் போல பட்டது.
அவருடைய ஒவ்வொரு சொல்லையும், கடற்கரையில் அபூர்வ கிளிஞ்சல்களை சேகரிப்பதுபோல, ஆர்வத்துடன் பொறுக்கிக் கொண்டனர்.
‘போரினால் ஒன்றும் சாதிக்க முடியாது. மனிதனின் உண்மையான எதிரி பசி. அதற்கு எதிராகத்தான் போராடவேண்டும்.’ அவன் நீட்டிய தட்டில் இருந்த உருண்டை என்னைப் பார்த்தது. ‘ஸ்வாஹிலி மொழியில் ’பசிக்கிறது’ என்று சொல்வதில்லை. ’பசி கேட்கிறது’ என்றுதான் சொல்வார்கள்’ என்றான். என்ன ஆச்சரியம்! கடந்த ஆறு மாதங்களாக பசி என் காதுகளுக்குள் 24 மணிநேரமும் கேட்டபடியேதான் இருந்தது.
பரமேஸ்வரனிடமிருந்து தோல்விச் சிரிப்பு ஒன்று வெளிப்பட்டது.
வயிறு முட்ட பால் குடித்த கண் திறக்காத நாய்க்குட்டி போல பரிபூரண நிம்மதியோடு இவர் அயர்ந்துபோய் கிடந்தார்.
மொழிபெயர்ப்பாளராக!
மொழியும் செல்நெறியும் !
முத்துலிங்கத்தின் அக்கா சிறுகதைத்தொகுப்பு 1964-ல் வெளியானது. திகடசக்கரம் 1995-லும் வம்சவிருத்தி 96 , வடக்கு வீதி 98 ,மகாராஜாவின் ரயில் வண்டி 2001 என வெளியிடப்பட்டன. முத்துலிங்கம் கதைகள் முழுத்தொகுப்பு 2004 வரை எழுதியவை பிறகு வெளியானது.
இப்படிப் பல தொகுப்புகள் வந்துள்ளன .’அக்கா ’ தொகுப்பில் வரும் கதைகளை விட ’ திகடசக்கரம் ’ சேகரிப்பில் சற்று மேம்பட்ட மொழிநடையில் எழுதி இருப்பதை உணரமுடியும். அதன் பிறகான தொகுப்புகளிலும் இதைவிட பல படிகள் தாண்டிய சொல்மொழி மேம்பாட்டைக் காண முடியும்.அறுபதுகளில் எழுதிய தொகுப்பில் உபரிச்சொற்கள் மிகுந்திருக்கும்.கதையோட்டம் மிதமான வேகத்தில் இருக்கும். பிறகு போகப்போக மொழிநடையில் சீர்பட்டு கூர்மை பெற்றுள்ளது. இப்போதைய கதைகளில் எல்லாம் சுண்டக்காய்ச்சிய சொற்களோடும் வடிகட்டிய வாக்கியங்களோடும் எழுதுகிறார்.அந்த அளவுக்கு தொடர்பயிற்சியால் மொழி வசப்பட்டு இருக்கிறது.
அ.முத்துலிங்கம் எழுதிய ஆரம்பகாலக் கதைகளில் ஈழத்து எழுத்தாளர் என்கிற முகம் தெரியும் .போகப்போக அதில் இருந்து சட்டை உரித்துக்கொண்டு வெளியே வந்து உலகத் தமிழ் எழுத்தாளராக பரிமளித்திருக்கிறார் .இப்போது இவர் பயன்படுத்தும் மொழி உலகத் தமிழர்களுக்குப் புரியும் வகையில் உள்ளது. வட்டார வழக்குகளை சொற்ப அளவிலேயே பயன்படுத்துகிறார். அது ஒரு தடையாக ,இடையூறாக இருக்கக்கூடாது என உணர்ந்து பொது மொழியைக் கையாளுகிறார். எழுதும்போது உலகத் தன்மையுடன் எழுதுகிறார்.
இலங்கையில் போருக்குப் பின் நிறைய போர் சார்ந்த இலக்கியங்கள் வர ஆரம்பித்துவிட்டன. நிறைய எழுதுகிறார்கள்.இவர் இப்படி நிறைய எழுதவில்லை என்று சிலர் புகார் சொல்வதுண்டு.என்றாலும் இவர் எழுதிய கதைகளில் ஈழப்போர் சார்ந்து ஆங்காங்கே பதிவாகி உள்ளதை மறுக்க முடியாது . இலங்கையில் இருந்ததைவிட இலங்கைக்கு வெளியே இவர் வாழ்ந்த காலம் அதிகம். ஆப்பிரிக்க நாடுகளில் 20 ஆண்டுகள் வாழ்வைக் கழித்து கனடாவில் 20 ஆண்டுகள் என்று கடந்தவர். அதனால் ஈழம் சார்ந்த அனுபவங்கள் இவரிடம் குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
தி .ஜானகிராமன் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை எழுதவில்லையே என்று சிலர் கூறுவதுண்டு . அவர் பெரிதும் அறிந்த உலகத்தைப் பற்றியே அதிகம் எழுதி இருக்கிறார். ஓர் எழுத்தாளரும் அப்படித்தான் செய்ய முடியும் .அப்படித்தான் முத்துலிங்கமும் அவர் உற்றுணர்ந்த உலகத்தை எழுதுகிறார். என்றாலும் ஈழத்து நினைவுகளையும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்.அவர் அறிந்த ஈழம் பற்றிக் கணிசமான கதைகள் வந்துள்ளன.
இலங்கையை விட்டு வெளியேறி நாட்டுக்கு வெளியே அவர் தங்கியிருந்த காலம் நீளமானது. அந்த புலம்பெயர் அனுபவங்களைத் தன் கதைகளில் பதிவு செய்கிறார். புலம்பெயர் வாழ்க்கை என்பது இன்று ஓர் இலக்கிய வகைமையாக மாறி உள்ளது. அதில் முத்துலிங்கம் முன்னணியில் இருக்கிறார் எனலாம்.சொந்தநாட்டுக்கு வெளியேயான வாழ்வையும் பதிவு செய்ய வேண்டியுள்ளதுதானே?
அ.முத்துலிங்கம் ஒரு நூல் விமர்சனம் எழுதினாலும் தனி நபரைப் பற்றி பதிவு எழுதினாலும் அதில் ஒரு புனைவுத்தன்மை வந்து அமர்ந்து கொள்கிறது . அவர் ’ஒரு லட்சம் டொலர் புத்தகம்’ என்கிற நூல் விமர்சனத்தில் கதைத் தன்மை காட்டி சுவாரஸ்யம் கொள்ள வைக்கிறார். ‘வந்திடு டுப்புடு’ என்கிற பதிவில் தன்னுடைய ரசிகர் பற்றிப் பதிய வைக்கிறார்.அவரது எல்லாவிதமான கட்டுரைகளிலும் ’இது மொழி மேம்பட்ட எழுத்தாளர் எழுதியது’ என்கிற கையொப்பத்தை இட்டுச் செல்கிறார்.இவரது படைப்புகளில் கதை சொல்லும் நிதானம் ஆரம்பத்தை விட மிகவும் மேம்பட்டிருக்கிறது கூர்பட்டிருக்கிறது. அவ்வப்போது புதிய முயற்சிகளில் உத்திகளில் சோதனை செய்து பார்க்கிறார். அ.முத்துலிங்கம் தமிழில் கதைகள் மட்டுமல்ல விமர்சனம்,நேர்காணல்,மொழிபெயர்ப்பு என பலமுனைகளிலும் முயலும், எழுதும் உலக எழுத்தாளராக மிளிர்கிறார் எனலாம்.
-அருள்செல்வன்
|
|