அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -2 -அருள்செல்வன்

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   07 , 2020  16:37:37 IST


Andhimazhai Image

கதைகளும் பாத்திரங்களும் !


'ஊர்வலம் 'கதை மூலம் சாந்தினி தன் மச்சான் மீது உள்ள ரகசிய காதலின் வலியை பெருமூச்சை அழகாக மனதில் ஏற்றி இருப்பார்.அவளது காதல் கைகூடாது, வேறு ஒருவருடன் திருமணம் நடைபெறுகிறது. அவளில் உறுத்தும் உள்ளுணர்வுகள் ஊர்வலமாகத் தொடர்கின்றன.   இப்படி எத்தனையோ பெண்கள் தங்கள் ஆசைகளையும் கனவுகளையும் ஏக்கங்களையும் தன்னுள் புதைத்து நிராசைகளை ஆவியாக்கி புழுங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பது தெரியும்.

பாகிஸ்தானில் நடக்கும் 'கிரகணம்' கதை கொத்தடிமையாக இருந்த பஸ்மினாவின் வறுமை, பசி சூழ்ந்த  அவளது துயரத்தைப் பேசுகிறது.ஒரு அடிமையாக இருந்தவள் எவ்வளவு அறிவாளியாக இருக்கிறாள்?விரைவில் படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் கற்றுக் கொள்கிறாள். புராணங்கள் குறித்து அவள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இருக்கிறது. .அவள் கேட்கும் ஒரு கேள்வி பாற்கடலைக் கடைந்தபோது சிந்திய விஷத்தை சிவபெருமான் உண்டதாக கதை சொல்கிறது . அதனால்  நீலகண்டன் என்று பெயர் பெற்றார் சிவபெருமான் .அப்படி உண்ணும் போது ஒரு துளி விஷம் தவறிப் பூமியில் விழுந்தது .அதன்பிறகு பாம்புகளுக்கு விஷம் வந்தது என்றால் பாற்கடலை கடைந்த போது ஆரம்பத்தில் வாசுகி வேதனை தாங்காமல் விஷத்தைக் கக்கியது என்று வருகிறதே அது எப்படி ? என்கிறாள்.பைபிளில் கடவுள் முதலில் ஒளியைப் படைத்தார் ,நாலாம் நாள்தான் சூரியனையும் சந்திரனையும் படைத்தார் என்று வருகிறது .சூரியன் சந்திரன் இல்லாமல் எப்படி ஒளி வந்திருக்கும்? என்று கேட்கிறாள்.

மனிதர்களின் வாழ்வில் தற்செயலாக நடக்கும் சம்பவங்களே அவர்களது வாழ்வில்  பாத்திரச் சித்திரத்தை உருவாக்குவதாக நம்பப்படுகிறது. இதை நினைவூட்டும் பாத்திரங்களாக ’இங்கே நிறுத்தக்கூடாது’ கதையில் பரமேஸ்வரன் மூஸாவுக்கு உதவி சிக்கிக்கொள்வதைச் சொல்லத் தோன்றுகிறது.

 

முகாமுக்கு முகாம் இறைச்சித் துண்டுக்கு அலையும் அகதிச் சிறுவர்கள் பற்றிப் பேசும் ’ நாளை ’ யில் வரும் சிறுவர்களில் மூத்தவனிடம் குழந்தைமை மட்டுமல்ல  தந்தைமையும் கூட  எனப்புரிகிறது. ’இலக்கணப்பிழை’ கதையோ முழுக்க முழுக்க சைபர் யுகத்து நகைச்சுவை மயம்.

 

 கதைகள் பல்வேறு நீளம் கொண்டவை. உதாரணமாக ’மசாஜ்வைத்தியர்’ 3,442 சொற்களிலும்     ’ லூனாவை எழுப்புவது ’ 2,284 சொற்களில் உள்ளவை என்றால் ’அடுத்த ஞாயிறு’  394  சொற்கள்தான் கொண்டது.  


சகலகலா வல்லவனாக கதை, நாடகம், வீரதீர செயல்கள், காதல் என்று இருந்தவன் செல்லத்தம்பி என்று அவனது பல்வேறு லீலைகள் பற்றிப் பேசுகிறது ’செல்லரம்மான்’. தனது வீரதீர சாகசங்களில் இளநீர் திருடப்போனதும் ஒன்று. சரிந்து போன அவனது காதல் சாம்ராஜ்யம் மட்டுமல்ல அநியாயமாக இறந்து போன அவனது முடிவு எல்லாமே ஒரு முழு நாவலுக்குரிய விரிவைக் கொண்டவை.

’ மொசு மொசு என்று சடை வளர்த்த வெள்ளைமுடி ஆடுகள் ’ கதை குடும்பத்திற்கு பாரமாக இருக்கும் குடிகார கணவனால் விளையும் துயரத்தைக் கூறுவதுடன் குடியின் கொடுமை உலகளாவியது எனச் சொல்கிறது.

 

புறத்தோற்றம் அன்பு காட்டுவதற்கும் காதலிப்பதற்கும் முதல் காரணமாக இருக்கிறது.அகத்தோற்றம் புரியும்போது பிரிய நேரிடுகிறது என்பதை 'என்னை திருப்பி எடு 'கதையில், மிதிலா அவளது அறைவாசியை விட்டுப் பிரிவதற்கான காரணம் அவனது அகத்தோற்றம்  அறிந்ததாக இருக்கலாம் என உணர்த்துகிறது.

 

வீட்டுக்கு தெரியாத 'அந்தரங்க வாழ்க்கை' வாழும்   பெண் லூனா பற்றிய கதை 'லூனாவை எழுப்புவது'.

 

ஒரு டாக்சி டிரைவர் சொல்லும் 'சின்ன சம்பவம்' கதை கனடாவின் இரவுநேர உலகத்தை அதிர்ச்சியூட்டும் வகையில் விரிக்கிறது.

 

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பழக்கம் பண்பாடு உண்டு. உக்ரேன் வழக்கப்படி காதலர்கள்  பரஸ்பரம் ஒரு ரகசியத்தை பரிமாறிக் கொள்ள வேண்டும்.அது ஒரு  கடவுச்சொல் போன்றது. அதை மீண்டும் சொல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன். காதலிக்கிறார்கள். நன்றாகப் போய்,திருமணமும் ஆகிவிட்டது. ஒருநாள் சொன்ன ரகசியத்தைப் பற்றி அவன் பேசும் போது உறவு முடிகிறது .இதுதான் 'வேட்டை நாய்'

 

'போரில் தோற்றுப்போன குதிரைவீரன்' கதையில் “ என் மூன்றாவது காதலனே!” என அவள் கொஞ்சுகிறாள்.  ”என் தேவிடியா குட்டி” என்று அவன் கொஞ்சுகிறான்.அவர்களுக்குள் காதல். இப்படிப்பட்ட கலாச்சாரத்தைப் படிக்கிற போது அதிர்ச்சியூட்டும்.

 

’சுவருக்குள்ளே மறையும் படுக்கை ’ மருமகள் மாமனார் ஒவ்வாமை பற்றிப்பேசுகிறது .

 

’அடைப்புகள்’ கதை அலுவலகத்தில் உள்ள ’கேபினை’ மட்டுமல்லாமல் கதை நாயகியின் மன அடைப்புகள் பற்றியும் பேசுகிறது.

 

’முதல் விருந்து முதல் பூகம்பம் முதல் மனைவி’ அம்மாவின் சமையலின் விஸ்தாரம் பற்றி நுட்பமாகப் பேசுகிறது.

 

’விழுக்காடு’ கதையில் ஆப்பிரிக்காவில் அழகாக இருப்பதால் அமீனாத்து என்கிற பெண்ணுக்கு வேலை கிடைக்காத பரிதாபத்தைச் சொல்கிறது.

  ’ஃபீனிக்ஸ் பறவை’ கதை குடும்பத்தில் நிலவும் போலிப் பாசத்தைப் பற்றி பேசுகிறது. மருமகள் ஸ்வென்கா தான் அடுத்த குழந்தை பெற்றுக்கொள்வதற்காக தன் மாமியாரை கருணைக்கொலை செய்யத்தூண்டும்  காட்சி வருகிறது.

’ பாதிக்கிணறு ’ கதையில் பொதுக்கிணறு பாவிக்கும் குடும்பங்களில் நிகழும் துயரத்தைக் கூறுகிறார்.சொந்தக் கிணறு கௌரவத்தின் அடையாளமாக இருக்கிறது. முழுமையான சொந்தக்கிணறு வைக்கும் கனவில் அம்மா ரகசியமாகச் சேர்த்துவைக்கும் சிறுவாட்டுப் பணத்தைப் பற்றிய நினைவுகள் ,ஏழ்மையின் துயரம் சொல்பவை.

' மனுதர்மம்' , சரித்திரக்கதை. இருபது வருடங்களாக சுண்ணாம்பு பயன்படுத்தாது தாம்பூலம் தரிக்கும் இலங்கை ராணியைப் பற்றிப் பேசுகிறது.

'குந்தியின் தந்திரம் ' மகாபாரதக் காவியக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு நகர்கிறது.தன் மேலுள்ள அவச் சொல்லை நீக்குவதற்கு குந்தி செய்யும் தந்திரம் என்ன என்பதுதான் கதையின் விரிப்பு.

 ’முழுவிலக்கு ' கதையில் வாழ்க்கையில்  இளமையைத் தொலைத்து விட்டு மாதவிலக்கு நின்ற பிறகு,குழந்தைக்கு ஏங்கும் பெண் சங்கீதாவின் புழுக்கம் சொல்லப்படுகிறது.


தன் அப்பா யார் என்று கேட்கும் மகளுக்கான பதில் சொல்லும் அதிர்ச்சிப் பாதைதான்  ‘ வெள்ளிக்கிழமை இரவுகள் ‘ கதை.


ஐந்து பெண்பிள்ளைகளைப் பெற்றாள் என்று ’வம்சவிருத்தி’ கதையில் அஸ்காரி தன் முதல் மனைவி நூர்ஜகானை வெறுக்கிறார்.ஆண்பிள்ளை வேண்டி இரண்டாவது மனைவியாக மெகருன்நிஷாவை மணக்கிறார்.ஓசையில்லாத பெண் ஒருத்தியின் மனப்புழுக்கத்தைப் பேசும் கதை .

ஆப்பிரிக்காவில் சிறுத்தை காப்பகம் நடத்தி வரும் அமெரிக்கப் லோர்ரிமார்க்கர் ‘ரயில் வண்டி சிறுவன்’ கதையில் வந்து வியப்பூட்டுகிறார்.

சோமாலியாவில் ஒரு சிசுவாக கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தை எக்கேலு  பெரிய அதிசய சிறுவனாகி அதிமேதாவியாக வளர்கிறான் .மொழிகளைப் புரிந்து கொள்கிறான்.அவன் ’எக்கேலுவின் கதை’யில் வருகிறான்.


கனடாவையும் அமெரிக்காவின் பிரிக்கும் ’49 அகலக்கோடு ’ஓரடி  முன்னே நகர்த்தி வைத்தால் கனடா இந்தப்பக்கம் பின்னே நகர்த்தி வைத்தால் அமெரிக்கா. புதியவர் ஒருவர் அப்படிப்பட்ட எல்லைக்கோட்டில் நின்று தாண்டி  ஒருவர் தாம் இருப்பது அமெரிக்காவா? கனடாவா? எனப் புரியாமல் சட்டத்தில் சிக்கிக்கொண்டு  புலம்பும் காட்சி விசித்திரம்தான்.


’கனகசுந்தரி ’கதையில் 15 வயது அழகிய சிறுமியை தாழ்வு மனப்பான்மை கொண்ட கறுப்பான ஆசிரியை விமலா வெறுப்பாள்; சிறுமியை அவமதிப்பது அடிப்பது குட்டுவது வெறுப்புணர்வு காட்டுவது படிப்பவரை ஆத்திரமூட்டும்.


வண்ணத்துப்பூச்சி ஆர்வலர் கோணேஸ்வரன் இயற்கை உபாசகர் .அபூர்வ வண்ணத்துப்பூச்சியினங்களைப் பார்க்க அமெரிக்காவுக்குச் செல்ல விசாவுக்கு முயற்சி செய்கிறார் கடைசியில் அவர் விருப்பப்படியே பார்த்து விடுகிறார் .'விசா'  கதையின் முடிவு என்ன ஆகிறது?  அதிர்ச்சி தருகிறது.

’வசியம்’ கதையில் வரும் வாய்ச்சவடால் சிவசம்பு மந்திரம் தெரியுமென்று ஏமாற்றுகிறார்
 
ஒரு மக்கள் உபாசகனின் கதையான ’பருத்திப்பூ’ வில் வரும் குணசிங்கம் சட்டத்தை சற்று விலகி மக்களுக்காக வாய்க்கால் போட்டுவிடுகிறார்.  சட்டமா தர்மமா என்றால் தர்மம்தான் என்கிறார்.

’எதேச்சை’ கதை திட்டமிடாத தற்செயல் நிகழ்வின் வீரியத்தை விரிக்கிறது . ஆப்கானிஸ்தானில் நடக்கிறது . இக்கதையில் மட்டும் சிருங்கார ரசத்தை சற்றுத் தூக்கலாக ஊற்றியிருக்கிறார்.

ஊழல் முறைகேடு என்பது உலகளாவியது. மேற்கு ஆப்பிரிக்காவில் நடக்கும் ஊழல் பற்றி 'பெருச்சாளி' கதை கூறும். பெருச்சாளியை ஒழிக்க முடியாதது போலவே ஊழலையும் ஒழிக்க முடியாது என்று சொல்கிறது கதை.இதை ஒரு குறியீடாகவும் கொள்ளலாம்.

தாய்நாட்டை பிரிந்து சென்று சில ஆண்டுகள் கழித்து மீண்டும் தாயகம் திரும்பும் ஒருவன் இங்கே உள்ள நாட்டின் மாற்றங்களைப் பார்த்து ’மாற்றமா? தடுமாற்றமா?’ என்று அதிரும் கதை மூலம் அறிவியல் முன்னேறினாலும் ஆட்கள் மாறவில்லை என்பதை காப்புரிமைக்காக வங்கியில் அலையவிடும்   சம்பவங்கள் காட்டுகின்றன.


சித்தரிப்புகள்: அகமும் புறமும்!


முத்துலிங்கம் கதைகளில் புறச்சித்தரிப்புகள் அதிகமாக இருக்கின்றன. அந்த அளவுக்கு அகச்சித்தரிப்புகள் இல்லை என்று தோன்றலாம்.கட்டுரைகளிலேயே புனைவுத்தன்மை வெளிப்பட எழுதுவபவர், ’முடிச்சு’ போன்ற மிகச் சில கதைகளில் கட்டுரைத்தன்மை எட்டுவதை உணரவைத்துள்ளார் என்பதையும் குறிக்க வேண்டும்.

அவர் இலங்கைப் பின்புலத்தில் எழுதியிருக்கும் கதைகளில் எல்லாம் அகச்சித்தரிப்புகள் உணரமுடியும்.அவற்றில் மன ஓட்டங்களை ஆழங்களை துழாவியிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.புலம்பெயர்  தேசக்கதைகளில் ஆரம்பத்தில் புறக்காட்சிகளில் நுட்பசித்தரிப்புகளில் ஆர்வம்காட்டியவர்,போகப்போக அகநுழைவு செய்திருப்பார்.இப்போதெல்லாம் எழுதுவனவற்றில் அகப் புறச்சித்திரிப்புகள்  கயிற்றிழை போலப் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.


வாழ்வில் விழிப்புணர்வு  இல்லாமையால் இழப்புகளுடன் தோல்விகள், ஏமாற்றங்கள் என்று வாழும் ஒருவனைப் பற்றிய உளச் சித்தரிப்புகளை ’அழைப்பு ’கதையில் நன்றாகவே செய்துள்ளார்.

’அக்கா’ கதைக்குள் ஒரு சிறுவனின் குழந்தைமையை அழகாகப் பதிவு செய்துள்ளார்.அக்கதையில் தன் அக்கா பற்றிக் கூறும் போது அவளை அம்மாவை விட உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் தம்பியையும் பார்க்கிறோம். எத்தனையோ குடும்பங்களில்  அம்மா ஸ்தானத்தை நிரப்பிக்கொள்ளும் எத்தனை  அக்காக்கள் இருக்கிறார்கள்.

‘நிலம் எனும் நல்லாள்’ கதையில் வரும் சைமன் ஒரு போராளி. அவனுடைய பெற்றோர் கனடாவுக்குக் குடிபெயர்கிறார்கள். அங்கே  அவனுடைய தந்தை தொழில் தொடங்கி வெற்றி பெற்று, இலங்கைப் போர் முடிவுக்கு வந்தபோது நிறையப் பணம் செலவழித்து மகனைக் கனடாவுக்கு எடுப்பித்துவிட்டார்.வீடு,வசதி எல்லாம் உள்ள பெற்றோர் அவனது மறுவாழ்வுக்கு கனவு காண்கிறார்கள்.வந்தவன் அலைபாய்கிறான்.ஒருநாள் ஓடி விடுகிறான்.பனியில் சிக்குண்டு இறக்கிறான்.நுட்ப சித்தரிப்புகள் கொண்ட கதை.


’இலையுதிர் கால’த்தில் சூசன் பாத்திரம் மூலம் முதுமையின் துயரத்தை ஆழமாகச் சித்தரித்திருக்கிறார்.’என் கணவருடன் 40 வருடங்கள் வாழ்ந்தேன். என் மகனுடன் 20 வருடங்கள். என்னுடன் 70 வருடம் வாழ்ந்துவிட்டேன். அலுப்பாயிருக்கிறது ’ என்பார் சூசன்  இறுதியில். இந்த வரிகளில் முடிந்து விடுகிறது வாழ்க்கை. 


ஆப்பிரிக்காவில் வேலைக்கு வந்திருக்கும் ’முழு விலக்கு’ கதை கணேசானந்தன் தாமோதரம்பிள்ளை தன் பெயரை அங்கே உச்சரிக்கப் படும்பாடு சிரிப்பாக இருக்கும்.அவருக்கும் சங்கீதாவுக்குமான காதல் தனியானது . அவள் போட்ட விடுகதையை விமானத்தில் பறக்கும் போதெல்லாம் அவிழ்க்கப் பார்க்கிறார் .ஒரு மரம் ஆனால் இரண்டு பூ.  மரம் என்ன ? பூ என்ன?  மரம் தென்னை மரம். பூ தென்னம்பூ தேங்காய்ப் பூ.

'ஒரு சிறுவனின் கதை'யில் சின்னஞ் சிறுவர்கள் மனவரைபடத்தை வரைந்துகாட்டியிருப்பார்.அந்தச்  சிறுவனில் முத்துலிங்கம் கூட கரைந்திருக்கலாம்.

’அனுலா’ கதையில் சிங்களப் பெண் அனுலாவின் புரிந்து கொள்ளப்படாத காதலின் வலியை  ஏக்கத்தை பெருமூச்சை நுட்பமாகச் சித்தரித்திருப்பார்.அவளின் துயரத்தைச் சுரம் பிரித்து சோகம் இசைத்திருப்பார்.
ஆனால் கடைசியில் அனுலா பாடும் பாடலில்’ நான் அணியும் நகை எல்லாம் பித்தளைதான் பொன்னல்ல ,நான் உடுத்தும் சேலை எல்லாம் கிழிந்தவைதான் பட்டல்ல,  என்றாலும் கூட என்னைப் பார்த்து சிரிக்காதே தெருவில் போகிறவனே,நான் ராசா மகள் .. நான்...’என்கிற பாடல் நம் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

’சங்கல்ப நிராகரணம்’ கதையில் ஈழத்தில் கலவரம் உருவாகும் விதத்தை விவரித்திருப்பார்.இந்த களேபரத்தில்  நடேசன் -கமலியின்  காதல் படும் பாட்டையும் கூறியிருப்பார். அரைகுறை தாடி மீசையுடன் அவனும் சிக்குப் பிடித்த தலையோடு  அவளுமாக மறுபடியும் கப்பல் வழியாக யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டபோது காதல் செய்ய வேண்டும் போலவா தோன்றியது?


’லூனாவை எழுப்புதல்’ கதையில் பெண்ணின் மன அந்தரங்கத்தை நுட்பமாக்கிக் காட்டியிருப்பார். 


’மாவோவுக்காக ஆடை களைவது’ கதையில் அம்மா மகள் இருவரின் ஞான கர்வம் விரிவதைக்காட்டிவர்,தலைமுறை இடைவெளியையும் உரையாடல் வழியே சித்தரித்திருப்பார்.

 

 நேரம் கூடி வந்த போது நெஞ்சம் திறந்து காட்டாத நிறைவேறாத காதல்கள் இதில் நிறைய உண்டு  ’ஊர்வலம் சாந்தினி ஆகட்டும்  ’பக்குவம் ‘ராசாத்தி  ஆகட்டும் ஒலிக்கத் தயங்கிய ராகமாக ஒடுங்கிப் போனவை அவர்களின் ஊமைக்குரல்கள்.


’இருப்பிடம்’ கதையில் மஞ்சவனப்பதி  தேர்த்திருவிழாவில் தேர்ச் சக்கரத்தில் பலியாகும் அப்பாவி சிறுவன் மனவளர்ச்சி குன்றிய 'விசர்ப் பொடியன்' குணச்சித்திரத்தைப் படித்த பின்பும்  நமக்குள்ளே உறைந்து கொண்டிருப்பான்.தேர்த்திருவிழா ஆரவாரங்கள் எல்லாம் தாண்டி அவனது பேச்சொலி கேட்டுக் கொண்டே இருக்கும்.


 'பிறன் மனை நோக்கும்' பேராண்மை கொண்ட தணிகாசலம், தன் மனைவியின் மரணத்திற்குப் பிறகு குற்றவுணர்ச்சி சூழும் மனதோடு புழுங்குகிறார் 'கடைசி கைங்கரியம்' கதையில்.

”மூத்தவள் நானிருக்க இ ளையவளுக்கு மணக்கோலமா?இதற்கு யார் காரணம் யார்? நான் எந்தக் காரணமும் இல்லையே?” என  மனதில் வேதனையுடன்ன்று புழுங்குகிற ராசாத்தியின் ஏக்கம் குறித்துச் சொல்லும் கதை 'பக்குவம்'. உடம்பில் இருந்து எழுந்து ஆற்றாமையுடன் பெருமூச்சுவிடுகிறாள்  ராசாத்தி.  பொலிவிழந்துகிடக்கும் தன் அங்கங்களை பார்த்து துயரத்தில் உயரம் குறைந்து உள்ளுக்குள் மேலும் குள்ளமாகிறாள்.இதே போல் வீட்டில்  மூத்த பெண்ணான  ’செர்ரிமரம் ’நாயகிக்குள்ளும் சோகமுண்டு.


12 வயதில் திருமணமான பார்வதியின் புத்திர சோகம் வெளிப்படுகிறது ’பார்வதி’ கதையில். கடுமையான விரதம் இருந்து நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த பிள்ளை முருகேசன்.நோய்வாய்ப்பட்ட தன் ஒரே பிள்ளை மீண்டுவர   வேண்டி பார்வதி செய்யும் நல்லூர் கந்தன் கோயில் வெளிப்பிரகார அங்கப்பிரதட்சணம்  அவளது தாய்ப்பாசத்தைக் காட்டும்..

 உலாவரும் பிராணிகள்!

 முத்துலிங்கம் கதைகளில் வரும் கதை மாந்தர்களோடு ஆங்காங்கே வருகிற பிராணிகளையும் மறக்கமுடியாது. துரியோதனனாக ’துரி’ கதையில் வரும் நாய்,’ஒட்டகம்’ கதையில் வரும் சீர் ஒட்டகங்கள், ’ஆட்டுப்பால் புட்டு’ வில் வரும் அப்பாவி ஆடு, 'முழு விலக்கு' சங்கீதாவின் கரிக்குருவி,'ஞானம்' கொலபஸ் குரங்குகள் ,உயிர் தப்பிக்கும் ஆந்தை,' எலுமிச்சை:யில் வரும் நாய் வீரன்,'கழுதை வண்டி சிறுவனோ'டு பயணிக்கும் கழுதை ’மகாராஜாவின் ரயில் வண்டி’யில் வரும் பூனைகள்,'வேட்டை நாய் 'கதையில் வரும் மலிவுவிலை நாய் ஹன்டர் ,'என் குதிரை நல்லது' கதையில் வரும் குதிரை, 'போரில் தோற்றுப்போன குதிரைவீரனி 'ல் வரும் நாய் ஜோடி  ஜாக், ஜெனிஃபர்,’ரி’ கதையில் வரும் மாடு ராமு, ’மொசுமொசு என்று சடை வளர்த்த வெள்ளைமுடி ஆடுகள்’ கதையில் வரும் ஆடுகள் இப்படிப் பலவும் நினைவில் நிற்கின்றன.


படித்ததும் கிளர்ந்தெழும் வேறு கதைகள்!

முத்துலிங்கம் தன் கதையில் கூறும் தொடர் சங்கிலி தியரி போலவே அவரது கதையைப் படிக்கும்போது வேறு சில கதைகளும் நினைவுக்கு வருகின்றன. இதைக் கூறுவதால் அவற்றோடு ஒப்பிடுவது ஆகாது. அப்போது மனதில் கிளர்ந்தெழும் எண்ணங்கள் அவ்வளவுதான்.’துரி’ கதையில் நாய் பற்றிப் படிக்கும் போது ஜெயகாந்தனின் ’நிக்கி’  கதை நினைவிற்கு வருகிறது.

தண்ணீருக்காக ’ஒட்டகம்’ கதையில் நடக்கும் அவலத்தைப் படிக்கும்போது  சென்னையில் தண்ணீருக்கான பாடுகளைச் சித்தரிக்கும் அசோகமித்திரனின் ’விடிவதற்கு முன்’ கதை நினைவுக்கு வருகிறது. கந்தர்வன் தன்  ’தண்ணீர்’ கதையில் வரும் தண்ணீரில்லாக் காட்டில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் பிடிக்க ஓடிவரும்  கிராம மக்கள் கூட்டம் நினைவிற்கு  வருகிறது. அதுபோலவே.கு. அழகிரிசாமியின் ’குமாரபுரம் ஸ்டேஷன்; கதையில் தண்ணீர் பிடிக்க கலயத்துடன் வரும்  கூட்டமும் நினைவிற்கு  வருகிறது. ’ கழுதை வண்டிச்சிறுவன் ’ கதை அசோகமித்திரனின் ’கண்கள்’ கதையையும்  ’அடுத்த ஞாயிறு’ , ஜெயகாந்தனின் ’நடைபாதையில் ஞானோபதேச’த்தையும் நினைவுபடுத்தின...

 

’நான்தான் அடுத்த கணவன்' ,'போரில் தோற்றுப்போன குதிரைவீரன்' கதைகளில் வரும் நாயகிகள் புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்' கதையை நினைவூட்டுகின்றனர்.

 

 ’யதேச்சை’ யில் தலிபான்கள் தேசத்தில் காசிமுக்கு  மரண தண்டனை நிறைவேற்றும் காட்சியை விவரிக்கும் போது ஜெயமோகனின் ’போழ்வு’ கதையில் மாவிலிங்கம் கிருஷ்ணன் பிள்ளைக்கு நேர்ந்தது நினைவுக்கு வந்தது . 
’பருத்திப் பூ’ கிழவி அழகிய பெரியவனின் ’வனம்மாள்’ கதையின் சாலம்மாள்  கிழவியை நினைவுக்குக் கொண்டு வந்தாள்.

’ஒரு சாதம்’ கதை அசோகமித்ரனின் ’பழக்கம்’ கதையை நினைவுக்கு கொண்டு வந்தது.

ஒருதலைக் காதலால் உணர்ச்சியோடு காதலி பின்னால் பலநாட்கள் சுற்றித்திரியும் ’மெய்க்காப்பாளன்’  கதையைப் படித்தபோது, ஒரு வாசக சாலையில் ஒருத்தி பின்னால் அலையும்  எம். ஏ. நுஃமானின் ’சதுப்பு நிலம்’ கதையின் நாயகன் நினைவுக்கு வந்தான்.

உணவு,மது,பெண் என ரசனை உணர்ச்சியை விஸ்தாரமாகப் பேசும் ‘வையன்னா கானா’ , சமையலின் விவரிப்பு கொண்ட’ முதல் விருந்து முதல் பூகம்பம் முதல் மனைவி ’ கதைகளைப் படித்தபோது ஜெயமோகனின் ’சூழ்திரு’ கதை மட்டுமல்ல 'தேனீ 'கதையும் நினைவிற்கு வந்தது. 

 ’குமர்ப்பிள்ளை’ கதையில் ஜெயகாந்தனின் ’ஒரு பக்தர்’ நிழலாடினார் .

 

 முகநூல் பின்னணிகொண்ட ’செர்ரி மரம்’ கதை ராம் முரளி எழுதிய ’மன்னிக்கவேண்டும் தோழி' யையும் 
’லூனாவை எழுப்புவது’ படித்தபோது சுஜாதாவின் ’ஒரே இரவில்’ கதையையும் கிளர வைத்தன. ’எங்கேயோ  இப்ப மூன்று மணி ’படித்தபோது மாத்தளை சோமு எழுதிய ’ஒற்றைத்தோடு’   நினைவில் நிழலாடியது .

 

 ’ சுவருக்குள் மறையும் படுக்கை’ கதை இமையம் எழுதிய ’உண்மைக் கதையை நினைவூட்டியது என்றால், ஆள்மாறாட்ட சந்தேகம் கொண்ட ’அது நான்தான்’ ஜெயமோகனின் ’ஆட்டக் கதை’யை  நினைவூட்டியது . ’வம்சவிருத்தி’ யைப் படித்தபோது ஆசி. கந்தராஜாவின்   ’ஆண்குழந்தை’எண்ணத்தில்  தவழ்ந்தது.  


 புராண, இதிகாசக் குறிப்புகள்!

’முடிச்சு’ கதையில் பிரச்சினைகள் கழுத்தைப் பிடிக்கும்  சமயம் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்ற ஒருவனாக இதிகாசத்தில் கர்ணனை குறிப்பிடுகிறார் .’வில்வித்தையில் கர்ணன் அர்ஜுனனை விட மேல் என்று சொல்லலாம் ஆனால் உக்கிரமான போர் நடந்து கொண்டிருக்கும் , பாவம் காரணம் செய்வதறியாது தடுமாறி நின்று போய் விடுவான்’  என்கிறார்.
அதே கதையில் கிரேக்கப் புராணங்களில் கூறியுள்ள கிளைகள் கொண்ட நூதனமான  கோர்தியன் முடிச்சு பற்றிப் பேசுகிறார்.


ஆப்கானிஸ்தானில் ஹெராத் நகரத்தில் அழகிய மலைகள் சூழ்ந்து மெல்லிய குளிர்காற்று உடம்பை வருடும் சூழலில் கதை நிகழ்ந்தாலும் நம்மூர் ’குங்கிலியக்கலய நாயனார்’ என்று கதைக்கு பெயர் வைத்துள்ளார். போதைக்கு அடிமையான ஒபுக்கு என்பவனைப் பற்றிக்கதை பேசுகிறது.எந்த போதைக்கும் அடிமையாகி விட்டால், மீள்வது சிரமம் ; குங்கிலியக் கலய நாயனாரின் பக்தி போதையைப் போல என்று ஒப்பிடுகிறார் .

’உடும்பு’ கதையில் புறநானூற்றுப் பாடல் 'உடும்பரித்தன்ன வென் பழுமருங்கிற் கடும்பின் கடும்பசி' என்ற   வரிகளை நினைவூட்டுகிறார்.

’பூமாதேவி’ கதை அமெரிக்காவில் நடந்தாலும் , கம்சன் மூடன் என்று கூறி புராணக்கதையை நினைவூட்டுகிறார்.தங்கையின் எட்டாவது குழந்தை தனக்கு எமன் என்று தெரிந்தும் தேவகி, வாசுதேவரை ஒரே சிறையில் வைத்ததைக் குறிப்பிடுகிறார்.  கொடுத்த வாக்கைக்  காப்பாற்றிய திருக்குறிப்பு நாயனார்  பற்றிப் பேசுகிறார்.


’சுளுக்கெடுப்பவர்’ கதையில்  கல்கி எழுதிய’ பொன்னியின் செல்வன்’ ஐந்தாம் பாகத்தில் வரும் குந்தவையும், வந்தியத்தேவனும் சந்திக்கும் இடம் மிகவும் சுவாரஸ்யமாக சித்தரிக்கப் பட்டிருக்கும். குந்தவை, வந்தியத்தேவனிடம் பேசும்போதெல்லாம் 'நீர் பழுவூர் ராணியின் ஒற்றன்' ' நீர் எங்கே சென்றீர்?' என்று 'நீர்,    நீர்' என்றே பேசுவாள். வந்தியதேவனோ 'தேவி, தங்களுடைய இதய சிம்மாசனம்', 'தங்கள் திருக்கரம்' என்பான் என்று வரும்.  

 

 பொன்னியின் செல்வனில்  வரும் பாத்திரமான சேந்தன் அமுதன்  ’எங்கேயோ இப்ப மூன்றுமணி ‘யில் போலிப்போராளியாக வருவான்.


ஸ்வீடன் தேசத்துக்காரன் எரிக்சன் உடன் ஆப்பிரிக்காவில் பணியாற்றும் போது ,கச்சியப்பர் எழுதிய கந்தபுராணத்தில் வரும் திகடச்சக்கரம் எப்படி அவர்கள் பிரச்சனை தீர்க்க உதவியது என்பது சம்பந்தம் இல்லாதது போல் தோன்றும். ஆனால் ‘திகடச்சக்கரம்’ கதையைப் படித்தால் புரியும்.


’துரி’ கதையில் துரியோதனன்  என்ற நாயின் பெயர்க் காரணத்தைக் கூறும்போது ’மகாபாரதத்தில் சிறப்பாகப் பேசப்படும் நட்பு கிருஷ்ணன் அர்ஜுனன் நட்புதான். இரண்டு பேருமே ராஜவம்சம் நெருங்கிய உறவு இதில் என்ன அதிசயம்? உண்மையில் எங்கள் இதிகாசங்களில் கூறியபடி மிகச்சிறந்த நட்புக்கும் விசுவாசத்துக்கும் அன்புக்கும் இலக்கணம் துரியோதனன் தான் .அர்ஜுனனுடன் துவந்த யுத்தம் தொடங்கும் முன்பு ’உன் குலத்தை வைப்பாயாக’ என்று சபை நடுவே கேட்டதும் தலைகுனிந்த கர்ணைனைக் கட்டித்தழுவி அந்தக்கணமே அவனை அங்க தேசத்துக்கு அரசனாக அபிஷேகம் செய்த துரியோதனனை மறக்க முடியுமா? மறக்க முடியுமா ?’என்கிறார்.


ஒரு சதம் என்கிற தன் வீட்டின் பெயரை ’ ஒரு சாதம்’ என்று புரிந்துகொள்கிற நண்பன் சிவலிங்கத்துடன் கதை சொல்லி பேசுகிற கதை. அதில் தனது அலுவல் சிக்கல் பற்றிப்பேசும் போது சிறுதுளி பெரு விளைவைக்கூறும் போது ஔவையாரின் ’வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும் ’பாடலைப் பயன்படுத்தியுள்ளார்.அக்கணக்குச் சிக்கல் பற்றிப்பேசும் போது, அது ’கடலும் கிழவனும் ’கதையில் வரும் கிழவனுக்கும் மீனுக்கும் நடந்த போராட்டம் என்கிறார். பீமனுக்கும் ஜராசந்தனுக்கும்  நடந்த துவந்த யுத்தம் போன்ற முடிவில்லாதது என்கிறார் .அது மட்டுமல்ல. இந்த கணினி மென்பொருள் சிக்கலில் எங்கோ ஒரு மூலையில் தவறு ஒளிந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் போது கம்பனின் பாடல்

'கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை
கரதலத்தில் கவர்ந்த காதல்
உள்ளிருக்கும் என நினைத்து உடல் புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி' என்ற பாடலைக் கூறுகிறார் .ஜானகியைக் கவர்ந்த காதல் எங்கே ஒளிந்திருக்கிறது என்று இராவணனுடைய உடலை  கூரிய அம்பினால் ஓட்டை போட்டுத் தடவித்  தேடியதாம் ராமனுடைய பானம், அதுபோல எங்கேயோ ஒளிந்து இருக்கும் அந்தப் பிழையைத்  தேடிப்பார்க்கிறேன் அது தென்படவே இல்லை என்று கூறவைக்கிறார்.அதே கதையில் சூரபத்மன் கதையும் வருகிறது.

ஆப்பிரிக்காவில் நிகழும் ’முழு விலக்கு’ கதையில் கூட ராவணனுடைய நிலையை ஒப்பிட்டு ' கரனையும் மறந்தான், தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான்,
உரனையும்  மறந்தான் ; உற்ற பழியையும் மறந்தான்' என்று கம்பர் பாடலைக் கூறுகிறார்.


’விழுக்காடு ‘ கதையில் கிஷ்கிந்தையிலே சுக்கிரீவன் மாரிகாலம் முடிந்தபின்பும் ராமகாரியத்தை முற்றிலும் மறந்து அந்தப்புர போகத்தில் மூழ்கிக் கிடந்ததுபோல லோடாவும் தன் அலுவலக காரியங்களை அறவே மறந்தார். அவளோ வாலிபத்தின் உச்சியில் இருந்தாள் என்று கூறுகிறார்.


’ஞானம்’ கதையில் ஆப்பிரிக்காவுக்கு விலங்குகள் பற்றிய ஆராய்ச்சிக்கு செல்லும்போது கூட உள்ளூர் சிந்தனை ஓடுகிறது. "இது என்ன கோணாக் கோணாக்காய்? என்றும் ”இதுதான் கோத்தை வித்த புளியங்காய்!' என்றும்  பாட்டு பாடுகிறார் .


’சிலம்பு செல்லப்பா’ கதையில் நில மடந்தையின் புலம்பலாக, 'விரிகதிர் பரப்பி உலகம் முழு தாண்ட, ஒருதனித் திகிரி உரவோன் காணோம்' என்றும் கோவலன் மதுரைக்குப் போய்  கண்ணகி கையால்  உண்ட கடைசி உணவு பற்றி சிலப்பதிகாரம் கூறும் போது அவர் பரிமாறிய சாப்பாடு என்ன சாப்பாடு'?
’கோவில் பாகல் , கொழுங்கனித் திரள்காய் ,
வாள்வரிக் கொடுங்காய், மாதுளம் பசுங்காய்,
 மாவின் கனியொடு வாழைத் தீங்கனி'இவற்றுடன் சோறு பால் நெய் மோருடன் கோவலனுக்கு கடைசியாகப் பரிமாறினாள் கண்ணகி என்று வருகிறது.

இதே கதையில் 'நன்னுதற் கினியாய் ஓலம்,
 ஞான நாயகனே ஓலம் ,
பண்ணவர்க் கறையே ஓலம்,
 பரஞ்சுடர் முதலே ஓலம் '
என்கிற கந்தபுராணப் பாடல் வருகிறது.இதுபோன்ற பல குறிப்புகள் வருகின்றன.
 

(தொடர்ச்சி பகுதி -3-இல் காண்க) 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...