அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இராஜபக்சேக்களுக்கு ஆகாத 9ஆம் தேதி - கொடுத்தவரே பறித்துக்கொண்டார்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுலை   10 , 2022  15:42:51 IST


Andhimazhai Image

இன்று பிற்பகல் நிலவரப்படி, இலங்கையில் அரசுத்தலைவர் கோத்தாபய இராஜபக்சேவின் இருப்பிடம் அறியப்படாத நிலையிலும், அவர் சார்பில் ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

முன்னதாக, நேற்று நாடாளுமன்ற அவைத்தலைவருக்கு கோத்தாபய அனுப்பிய தகவலில், வரும் 13ஆம் தேதியன்று தான் பதவிவிலகிக்கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். நேற்று இரவு ஊடகங்களுக்கு பேசுகையில் சபாநாயகர் யாப்ப அபேவர்த்தன இதைத் தெரிவித்தார். 

 

ஜூலை 9ஆம் தேதியான நேற்று நாடு முழுவதுமிருந்து கொழும்புக்குத் திரண்டுவருமாறு, காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் இரு நாள்களுக்கு முன்னர் அழைப்புவிடுத்தனர். அதன்படி பல மாவட்டங்களிலிருந்தும் பெரும்பாலான சிங்கள மக்கள் தலைநகரை நோக்கி குவியத் தொடங்கினர். மக்கள் கூட்டம் அதிகரிக்கவே, தலைநகருக்கு வரும் தொடர்வண்டிகள் அனைத்தையும் திடீரென நிறுத்திவைப்பதில் அரசாங்கம் இறங்கியது. 

 

சனிக்கிழமை போராட்டம் தொடங்கவிருந்த நிலையில், வெள்ளியன்றே கொழும்புவை உள்ளடக்கிய மேல்மாகாணம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் போராடும் மக்களோ அதைப் பொருட்படுத்துவதாகவே இல்லை. தம்பாட்டுக்கு போராட்டக் களத்தில் திரண்டுகொண்டு இருந்தனர். குறிப்பாக, அரசுத்தலைவர் கோத்தாபய இராஜபக்சேவின் மாளிகை, அலுவலகம் ஆகியவை இருக்கும் கோட்டை பகுதியில் உண்மையான முற்றுகையில் ஈடுபட்டனர். அந்த இடங்களைச் சுற்றிலும் வெள்ளி இரவிலேயே மக்கள் கூட்டம் அலைமோதியது.  

 

பெண்கள், முதியவர்கள், புத்த பிக்குகள், கிறித்துவ பாதிரியார்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பலவகையான மக்கள் திரண்டுவந்து அரசுத்தலைவரையும் பிரதமரையும் பதவிவிலகுமாறு ஒற்றைக் கோரிக்கைப் போராட்டத்தில் உறுதியாக நின்றனர். நேற்று காலைவரை மக்கள் கூட்டம் மெய்யாகவே அலைஅலையாக ஒரு பக்கமாக முன்னேறுவதும் இராணுவமும் காவல்துறையும் அவர்களைத் தடுப்பதும் பின்னர் பின்வாங்குவதுமாக இருந்தது. 

 

அதிபர் மாளிகையின் வாயிலைத் தாண்டி உள்ளே சென்ற சிலரை, ஆயுதப்படையினர் கடுமையாகத் தாக்கினர். சிலர் ஏறிவந்த கம்பி வாயிலின் வழியாகவே மீண்டும் மக்களின் பக்கமாக இறங்கி தாக்குதலிலிருந்து தப்பினர். 

 

சுற்றியுள்ள வீதிகளில் போராடிய மக்களை கண்ணீர்ப் புகை குண்டு, தண்ணீரைப் பீய்ச்சியடித்தல் மூலமாக இராணுவம் அடக்கமுயன்றது. 

 

இவை எல்லாம் ஒரு கட்டம் வரைதான்... கண்ணீர்ப் புகைகுண்டு, தண்ணீர்த் தாரை வாகனங்களின் மீது போராட்டக்காரர்கள் ஏறிக்கொண்டனர். புத்த பிக்கு ஒருவரே இப்படி தாவிக்குதித்து வாகனத்தில் ஏறிய காட்சி தொலைக்காட்சிகளில் வெளியானது. பல இடங்களில் தம் மீது வீசப்பட்ட கண்ணீர்ப்புகை குண்டுகளை போராட்டக்காரர்கள் இராணுவத்தினரின் பக்கம் திருப்பிவிட்டதும் நடந்தது. 

 

நண்பகல்வாக்கில் மக்களின் ஆவேசத்துக்கு முன்னால் தங்களின் வலு எடுபடாது என்பதைப் புரிந்துகொண்ட காவல்துறையும் இராணுவமும் மொத்தமாகப் பின்வாங்கியது. அதிபர் மாளிகைக்குள்ளும் அதிபரின் அலுவலகத்துக்குள்ளும் மக்கள் பேரலையைப் போல உள்ளே புகுந்த  வான் காட்சியை வாசகர்கள் நேரலையாகவும் பார்த்திருக்க முடியும்.  

அதன் பிறகு இரண்டு இடங்களிலும் உள்ளே புகுந்து போராட்டக்காரர்கள் செய்த அட்டகாசங்கள் எல்லாம், சலிக்கும் அளவுக்கான காணொலிச் செய்திகளாகிவிட்டன. கிட்டத்தட்ட போராட்டம் நடத்திய மக்களின் சுற்றுலாத் தலம் போல இரண்டு இடங்களும் மாறிப்போயின. வயதான பெண்மணி ஒருவர் அதிபர் மாளிகையிலோ அலுவலகத்திலோ உள்ள சொகுசு நாற்காலியில் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் காட்சி, இதற்கு அருமையான சாட்சி!

 

பிற்பகல்வரை நீடித்த இந்த அமர்க்களங்களை அடுத்து, மாலை 4 மணிக்கு அரசியல் தலைவர்களின் கூட்டம், பிரதமர், அரசுத்தலைவர் பதவிவிலகல் அறிவிப்புகள் என வேறொரு இடத்துக்கு நகர்ந்தது. 

 

முதலில் பதவிவிலக மாட்டேன் என பிரதமர் இரணில் விக்கிரமசிங்கே மறுத்ததாகத் தகவல் வெளியானநிலையில், அவரின் அதிகாரபூர்வ இல்லமான அலறி மாளிகை, தனிப்பட்ட இல்லம் ஆகியவற்றையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அலறி மாளிகையை அவர் பயன்படுத்தாதபோதும் அங்கு மக்கள் உள்ளே புகுந்தனர். அவருடைய தனிப்பட்ட இல்லத்துக்குள் புக முற்பட்டதுடன், வீட்டின் மீது தாக்குதலும் நடத்தினர். தீ வைக்கப்பட்டதால் சில பகுதிகள் சேதமடைந்தன. 

 

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த படைகளின் முதன்மைத் தளபதி சவீந்திர சில்வா, அவசரமாக நாடுதிரும்பினார். நள்ளிரவில் ஊடகங்களைச் சந்தித்த அவர், நாட்டு மக்களிடம், அமைதியைக் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து இன்று முற்பகலில் போராட்டக்காரர்களில் மூன்று பேரை இரணிலின் இல்லத்தில் தீவைத்தது தொடர்பாக காவல்துறையினர் கைதுசெய்தனர். 

 

இந்த சூழலில், நேற்று அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி அதிபர் கோத்தாபயவுக்கு சபாநாயகர் அபேவர்த்தன கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், அரசுத்தலைவரும் பிரதமரும் பதவிவிலகுவது, அதையடுத்து, அரசியலமைப்பின்படி ஒரு வாரத்துக்குள் இடைக்கால அரசுத்தலைவர் பதவியேற்பது, அனைத்துக் கட்சியினரையும் கொண்ட தேசிய அரசு அமைப்பது, நாட்டின் பொதுத்தேர்தல் குறித்து அறிவிப்பது ஆகியவை குறித்து அபேவர்த்தன குறிப்பிட்டிருந்தார். 

மேலும், பிரதமர் இரணில் விக்கிரமசிங்கே தன்னையும் அரசுத்தலைவராகத் தெரிவுசெய்யலாம் என முன்வைத்ததாகவும் அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். 

 

அரசியலமைப்பின்படி அதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றாலும், பல்வேறு கட்சியினராலும் இப்போது பிரதமராக இரணில் ஆக்கப்பட்டதே கடுமையாக எதிர்க்கப்படும்நிலையில், அவரை அதிபராக்குவதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்புவது உறுதி. 

 

நாடளவில் ஏற்கப்படக்கூடிய ஒருவரே அதிபராக்கப்பட வேண்டும் எனும் நிலையில், முன்னாள் அதிபர்கள் சந்திரிகா, மைத்திரிபால சிறீசேனா போன்றவர்கள் அளவுக்கு யாரும் ஈடானவர்களாகக் காணப்படவில்லை. இதனிடையே, நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரும் இரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவருமான கரு ஜயசூர்யாவை, தேசியப் பட்டியல் எனும் முறை மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்குவதற்கான முனைப்புகளும் தொடங்கியுள்ளன. அப்படி வரும்பட்சத்தில் அவர் பிரதமராகத் தேர்வு செய்யப்படக்கூடும் என்று இலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

இப்போதைய சபாநாயகர் அபேவர்த்தனவை தற்காலிக அதிபராக்கியபின், அவரையே இடைக்கால அதிபராகவும் ஆக்கலாம் என்று கூறப்பட்டாலும், இராஜபக்சேக்களின் தரப்பைச் சேர்ந்தவர் என்பதால் எதிர்க்கட்சிகள் அதை ஏற்கமாட்டா என்பதும் உறுதியாகக் கூறப்படுகிறது. 

 

மீண்டும் இராஜபக்சேக்களின் குடும்பத்திலிருந்து ஒருவர் என்கிறபடி முன்னாள் சபாநாயகர் சமல் இராஜபக்சேவை முன்னிறுத்த நினைத்தால்கூட, அதற்கும் வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு மக்களின் கொந்தளிப்பு மிகவும் அதிகமானதாக அமைந்துவிட்டது. கடந்த ஏப்ரலில் தொடங்கிய கோத்தாவே வீட்டுக்குப்போ என்கிற போராட்டம் மே முதல் வாரத்தில் தீவிரம் அடைந்தது.

 

அந்த மாதம் 9ஆம் தேதியன்று பிரதமரின் அலறி மாளிகையில் தன் கட்சியினரை வரவழைத்து மகிந்த இராஜபக்சே உசுப்பிவிட, அரை நாளில் அலறி மாளிகை அலறிப்போனது. அப்போதைய நெருக்கடியைத் தீர்க்க இயலாமல், மகிந்தவின் இளைய தம்பி பசில் ஜூன் மாதம் 9ஆம் தேதியன்று பதவிவிலக வேண்டியதானது. அதைத் தொடர்ந்து ஜூலை 9 அன்று நாடு முழுவதுமிருந்து தலைநகர் கொழும்பு நோக்கி எனும் போராட்ட அறிவிப்பின் தாக்கத்தை, முன்னாள் இராணுவ அதிகாரியான கோத்தாபய முன்னுணர்ந்து இருப்பார்போலும்... முந்திய நாளே அரசுத்தலைவர் மாளிகையிலிருந்து மூட்டையைக் கட்டிவிட்டார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

அம்பாந்தோட்டை இராஜபக்சே சகோதரர்களுக்கு அந்த 9ஆம் தேதி என்பது இந்த மூன்று மாதங்களாக ஒத்துவராமல் போனது, ஒரு வியப்புச்சுவை. ஆனால், போராட்டக்காரர்களுக்கும் இலங்கை மக்களுக்கும் இந்த நாள் அந்த நாட்டின் வரலாற்றில் மேலும் ஒரு முக்கியத்துவத்தைப் பதிந்துவிட்டுச் சென்றுவிட்டது. எந்த சிங்கள இனத்தவர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியைக் கொடுத்தார்களோ அதே இனத்தவரே அதிகாரபூர்வ அரசு இல்லத்திலிருந்து அடைக்கலம் தேடி ஓடும்படி விரட்டியும் அடித்திருக்கிறார்கள். 

 

தென்னிலங்கை எனப்படும் சிங்களவர் பெரும்பகுதியாக வாழும் பகுதிகளில் இவ்வளவு களேபரம் நடைபெற்றாலும், ஈழத்தமிழர் பகுதிகளில் மிகமிகச் சிறிய அளவுக்கே தவிர இவைகுறித்த ஆதரவு, எதிர்ப்பு நிகழ்வுகள் பெரிதாக இல்லை. தமிழ் மக்களைக் கொன்றொழித்த போரில் பொருளாதாரத்தை காலிசெய்தபோது கண்டுகொள்ளாமலோ கைதட்டியபடியோ இருந்த சிங்களவர், இன்று தமக்கு நெருக்கடி வருகையில் பொங்கி எழுகிறார்கள். குறைந்தபட்சம் ஈழத்தமிழர் பகுதிகளில் அடிப்படையான உணவுக்கும் எரிபொருள் நெருக்கடிக்கும் மாற்று இருக்க, மாற்றில்லாத சிங்கள இனத்தவர் முதல் நெருக்கடியிலேயே முழுக்கத் துடிக்கிறார்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. 

 

- இர. இரா.தமிழ்க்கனல் 


English Summary
9 made Rajapaksas down in Srilanka

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...