![]() |
64 வயதில் எம்.பி.பி.எஸ் சேர்ந்தவர்! ஆச்சர்ய ஸ்டோரி!Posted : சனிக்கிழமை, டிசம்பர் 26 , 2020 14:50:25 IST
மருத்துவம் படிக்க வேண்டுமென்கிற கனவுக்கும், கல்வி கற்பதற்கும் வயது ஒரு தடை இல்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஒரிசாவில் 64 வயதில் ஒருவர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். அவரது பெயர் ஜெய் கிஷோர் பிரதான்.
1956-இல் பிறந்த கிஷோர் பிரதானுக்கு சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டுமென்பது கனவு. இதற்கான முயற்சியில் பள்ளி படிப்புக்கு பிறகு கடந்த 1970-இல் மருத்துவக் கல்விக்கான நுழைவு தேர்வை அவர் எழுதினார். அதில் தோல்வியடைந்ததால், காத்திருந்து மீண்டும் முயற்சிக்க வாய்ப்பில்லாத அவர் குடும்ப சூழல் காரணமாக இயற்பியல் பயின்றார்.
இதன்பிறகு வெவ்வேறு பணியில் இருந்து இறுதியாக எஸ்.பி.ஐ வங்கி பணியில் சேர்ந்த அவர், துணை மேலாளர் பதவிக்கு உயர்ந்து கடந்த 2016-இல் விருப்ப ஓய்வு பெற்றார். அதுவரை துரத்திக்கொண்டே வந்த மருத்துவக் கல்வி கனவு அவரை மீண்டும் தொந்தரவு செய்தது.
கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளதால் இம்முறை தனது கனவை இழக்க கிஷோர் பிரதான் தயாராக இல்லை. விடாமுயற்சி செய்து ஒரிசாவின் முதன்மை மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான சுரேந்திர சாய் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ் சேர்ந்திருக்கிறார் அவர். இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதிக்கான மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து, கடந்த திங்கள்கிழமை அவரது மருத்துவச் சேர்க்கை உறுதியானது.
மருத்துவ கல்லூரியில் சேர்ந்துவிட்ட மனநிலையை விவரிக்கும் கிஷோர் பிரதான், “மருத்துவம் பயில வேண்டும் என்கிற வேட்க்கை என்னுள் மிக வலுவாக இருந்தது. இதற்காகதான் குடும்ப நிர்பந்தம், கடமைகளுக்கு மத்தியிலும் எனது வங்கி பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன்” என்கிறார்.
மேலும் கூறிய அவர், “எனக்கு இரட்டையர்களாக பிறந்த இரு மகள்கள். அவர்கள் இருவரும் மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான பயிற்சியில் இருந்தபோது நான் அவர்களுக்கு உதவியாக இருந்தேன். எனக்கு இப்போதும் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் நன்றாக நினைவிருப்பதை என மகள்கள் கவனித்து என்னிடம் சொன்னார்கள். அவர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள்” என்கிறார்.
ஆனால் அவரின் மகள்களில் ஒருவரது எதிர்பாராத மரணம் கிஷோர் பிரதானின் குடும்பத்தை புரட்டிப்போடுகிறது. இறந்த மகளின் மருத்துவக் கல்வி கனவை நிறைவேற்றும் கடமையையும் பிரதானே எடுத்துக்கொள்கிறார். இதன்பிறகு உறுதியான முடிவோடு மருத்துவக் கல்வியில் சேர வேண்டுமென களமிறங்கிய அவர் இன்று அதனை சாதித்திருக்கிறார். 175 மதிப்பெண்கள் எடுத்த அவருக்கு மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்தது.
இப்போது 64 வயதாகும் கிஷோர் பிரதான் 69 வயதில் மருத்துவக் கல்வியை நிறைவு செய்வார். இதில் கற்றுக்கொண்டதை தனது வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாக பயிற்சி செய்து மருத்துவ சேவையாற்றுவேன் என அவர் உற்சாகத்துடனும், நம்பிக்கையோடும் கூறுகிறார்.
|
|