ஒரு நகரத்துக்காக இப்படியா அடித்துக்கொள்வார்கள் எனக் கேட்கும் நிலைமை வந்தாலும் வரலாம் என அஞ்சுகிறார்கள், பஞ்சாபியர்களும் அரியான்விக்காரர்களும்!
ஆமாம், மைய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியாக- தனி ஒன்றியப் பகுதியாக இருக்கும் சண்டிகார் நகரம் யாருக்குச் சொந்தம் என விவகாரம் மீண்டும் பெரிதாகியிருக்கிறது.
இதைச் சூடுபறக்கச் செய்த பெயர், அண்மையில் கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலேவுக்குதான் எனக் கூறலாம்.
எஸ்ஒய்எல் எனப் பெயரிடப்பட்ட அவரின் கடைசிப் பாடலில், பஞ்சாப்பிலிருந்து பிரிக்கப்பட்ட இமாச்சலப்பிரதேசம், அரியானா மாநிலங்களையும் சண்டிகாரையும் தொன்மையான பஞ்சாபையும் திருப்பித்தாருங்கள்; இல்லாவிட்டால் நதிநீருக்காக வராதீர்கள் எனச் சூடுபறக்கப் பாடியிருந்தார்.
பாடலாக மட்டுமில்லாமல் சாடலாகவும் அமைந்துவிட, வரவேற்பைப் போலவே கடும் எதிர்ப்புக்கும் இலக்கானது இந்தப் பாடல். அரசியலாகவும் சிக்கலைக் கூட்டிவிட்டது.
பஞ்சாப்பிலிருந்து இந்தி பேசும் எனக் கூறப்படும் அரியான்வி மொழியினரின் அரியானா 1966ஆம் ஆண்டில் தனியாகப் பிரிக்கப்பட்டது. இரு மாநிலங்களும் சண்டிகாரில் உள்ள ஒரே சட்டப்பேரவைக் கட்டடத்தைப் பயன்படுத்திவருகின்றன. இந்தப் பின்னணியில், கடந்த மாதம் 9ஆம் தேதியன்று வடக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் பேசிய அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், அரியானா சட்டப்பேரவைக்கு தனி கட்டடம் வேண்டும் என்று குறிப்பிட்டார். மைய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதை ஆமோதிக்க, முன்னைவிட முக்கியத்துவம் பெற்றது, விவகாரம்.
அரியானா சட்டப்பேரவைக்கான தனி இடம் கேட்ட கட்டாரின் பேச்சையடுத்து, பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மானும் பஞ்சாப் சட்டப்பேரவைக்கென இடம் வேண்டும் எனக் கோரினார். அதற்காக, சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அவரை விமர்சித்தார்கள்.
சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சுக்பால் கைரா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் மான் பாஞ்சாபின் உரிமையை விட்டுக்கொடுக்கிறார் எனக் குற்றம்சாட்டினார். ஒட்டுமொத்த சண்டிகாருமே நம்முடையது எனக் கேட்கவேண்டாமா? சட்டப்பேரவைக்கோ உயர்நீதிமன்றத்துக்கோ இடம் கொடுத்தால் போதும் என்றா கேட்பது? சண்டிகாரின் சிறிதளவு நிலத்தைக்கூட அரியானாவுக்குத் தரமுடியாது எனச் சொல்லவேண்டாமா என நிரம்பவே பொங்கினார், சுக்பால்.
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வாவும் பக்வந்த் மான் மீது அதிருப்தி தெரிவித்தார்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், முதலமைச்சர்கள் மாநாட்டில் கடந்த ஏப்ரலில் பேசிய மான், பஞ்சாப் உயர்நீதிமன்றத்துக்கான புதுக் கட்டடம் எனப் பேசியதை காங்கிரஸ் தரப்பில் ஒரு பிடிபிடித்துகொண்டு உலுப்புகிறார்கள்.
பஞ்சாப்பின் தலைநகராக அமைக்கப்பட்டதுதானே சண்டிகார் நகரம்; அதை விட்டுவிட்டு ஏன் போகவேண்டும் என மானை எகிறுகிறார்கள், காங்கிரஸ் தரப்பில்.
அது உண்மைதான்; ஆனால் அப்போது அரியானா தனி மாநிலமாக ஆக்கப்பட்டிருக்கவில்லை என்பது இன்னொரு உண்மையும்கூட!
நாட்டுப் பிரிவினையின்போது இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் பகிரும் எல்லையில் பஞ்சாபியர்களும் பிரிவினைக்கு ஆளானார்கள். கிட்டத்தட்ட 8 இலட்சம் பேரை பலிகொண்ட- 15 இலட்சம் பேரை அகதியாக்கிய கொடூரமான பிரிவினை, பஞ்சாபியர்களுக்கும் கசப்பான வரலாறுதான். ஒன்றுபட்ட பஞ்சாப்பின் தலைநகரான லாகூர், அந்தப் பக்கம் போய்விட, புதிய தலைநகரத்தை அமைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது, இந்திய பஞ்சாப் மாநிலத்துக்கு!
1948இல் மைய அரசின் ஆலோசனையுடன் சண்டிகார் நகரத்தை நிர்மாணிக்க முடிவுசெய்தனர். பழைய அம்பாலா மாவட்டத்தில் சிவாலிக் குன்றுகளின் அடிவாரத்தில் புதிய நகரம் அமைக்க முடிவானது. முன்னதாக, அம்பாலா, ஹைசர், லுதியானா, ஜலந்தர் ஆகிய நான்கு இடங்கள் தலைநகருக்காக முன்வைக்கப்பட்டன. ஆனால் அப்போதைய பிரதமர் நேரு வரலாற்றால் மதிப்பில்லாமல் போய்விடக்கூடாது என புதிய நகர முடிவை ஆதரித்தார்.
அரசாங்கம், சுவிஸ்- பிரெஞ்சு கட்டடக் கலை வல்லுநரான லெ கர்பூசியர் என்பவரிடம் புதிய நகர வடிவமைப்புப் பணியை ஒப்படைத்தது. மனித உடலமைப்பும் இயக்கமும்போல கருத்தாக்கத்தில் சண்டிகாரின் வடிவத்தை உருவாக்கினார். தலை- தலைநகர வளாகம், இதயம்- 17ஆவது செக்டாரில் உள்ள நகர மையம், நுரையீரல்கள்- ஏராளமான மரங்கள், திறந்தவெளிப் பசுமைவெளிகள், மூளை- கல்வி, பண்பாட்டு நிறுவனங்கள், இரத்தவோட்ட மண்டலம்- ஏழு சாலைகள், உள்ளுறுப்புகள்-தொழிற்சாலைப் பகுதி என அவை அமைந்தன.
இப்படி பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட இந்திய பஞ்சாப்பின் தலைநகர் சண்டிகார், 1966இல் அரியானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது, பொதுத் தலைநகரானது. பஞ்சாப்புக்கு 50, 362 சதுர கிமீ, அரியானாவுக்கு 44,212 சதுர கிமீ என பாகப்பிரிவினை செய்யப்பட்டது. ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் பஞ்சாப்பிலிருந்து இமாச்சலப்பிரதேசம் இன்னொரு மாநிலம் உருவாக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, சண்டிகார் யாருக்குச் சொந்தம் எனும் பிரச்னை தீவிரமடைந்தது. சண்டிகாரை யாருக்கும் உடைமை என இல்லாமல் மைய அரசின் ஒன்றியப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குள் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாகச் சொன்னார், இந்திரா. இன்றுவரை சண்டிகார் ஒன்றியப்பகுதியாகத் தொடர்கிறது.
1966இலேயே இதற்காக அமைக்கப்பட்ட ஜேசிஷா ஆணையம், பஞ்சாபி, இந்தி/ அரியான்வி மொழியினர் எனும் அடிப்படையில், எல்லையைப் பிரித்தளிக்கலாம் எனப் பரிந்துரை செய்தனர். ஆனால் இடம் குறித்து இரண்டு உறுப்பினர்கள் ஒரு கருத்தையும் இன்னொரு உறுப்பினர் வேறு ஒரு கருத்தையும் முன்வைக்க, விவகாரம் பெரிதாகிவிடக் கூடும் என அஞ்சப்பட்டது. அதனால் அந்த ஆணையத்தின் பரிந்துரை கிடப்பில் போடப்பட்டது.
பின்னர், அகாலிதளம் கட்சி சண்டிகார் கோரிக்கையைப் பிடித்துக்கொண்டது. போராட்டங்களிலும் ஈடுபட்டது.
சீக்கியர்கள் மீதான டெல்லி வன்முறையை அடுத்து, 1985இல் பிரதமர் இராஜீவ்காந்திக்கும் அகாலிதளத் தலைவர் லோங்கோவாலுக்கும் இடையில் ஒப்பந்தம் உண்டானது. அதில் சண்டிகார் விவகாரமும் ஒன்று. அதன்படி, மைய அரசே சண்டிகாரை பஞ்சாப்புக்குக் கொடுக்கும்; அதற்குப் பதிலாக இந்தி (அரியான்வி) பகுதிகளை அரியானாவுக்கு தந்துவிடவேண்டும்.
இதைச் செயல்படுத்த இந்தி பேசும் பகுதிகளைக் கண்டறிய நீதிபதி இஎஸ் வெங்கட்டராமய்யா ஆணையம் அமைக்கப்பட்டது. அது தன் பரிந்துரைகளைக் கொடுத்தபோதும் அதைப் பற்றி ஒரு பேச்சும் இல்லை. அதில், 70 ஆயிரம் ஏக்கர் பரப்பை அரியானாவுக்கு பஞ்சாப் தரவேண்டும் என்பது முக்கியமானது.
இப்போது, இரண்டு தரப்பு முதலமைச்சர்களும் தனித் தனி சட்டமன்றக் கட்டடம் பற்றிப் பேசுகின்றனர்.
அரியானா தரப்பில், இப்போதைய 90 உறுப்பினர்கள் எண்ணிக்கை 2026ஆம் ஆண்டு மறுவரையறையில் 126ஆகக் கூடிவிடும் என்பதால், இட நெருக்கடி ஆகும் என யோசிக்கிறது. சண்டிகாரின் தகவல்நுட்பப் பூங்கா சாலையில் 10 ஏக்கர் பரப்பில் தனிச் சட்டமன்றக் கட்டடம் கட்ட ஆலோசனை நடந்துவருகிறது. இருந்தபோதும் சண்டிகார் சட்டமன்றக் கட்டடத்தை விட்டுவிடவும் அரியானா தயாராக இல்லை.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரவுள்ள அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவேகூட முக்கிய பிரச்னையாக மாறக்கூடும்; யார் கண்டது!
50 years tussle between 2 states for a capital city 21-07-2022
Pic courtesy:
By Raakesh Blokhra - Flickr, CC BY-SA 2.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=3524758