3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக (பிங்க் பந்து டெஸ்ட்) குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த டெஸ்டில், டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
முதல் இன்னிங்ஸில் வெறும் 48.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்களை இழந்து 112 ரன்களுக்கு சுருண்டது. சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் பட்டேல் 6 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களயும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்து இந்திய அணியும் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்து தடுமாறியது. முதல் நாளின் முடிவில் 99 ரன்களுக்கு 3 விக்கெட்கள் எடுத்திருந்தது இந்திய அணி.
ஜோ ரூட் 8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், ஜாக் லீச் 54 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ரூட் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை டெஸ்ட்டில் கைப்பற்றினார்.
இதனையடுத்து 33 ரன்கள் பின்னிலையுடன் 2வது இன்னிஸ்சை தொடங்கிய இங்கிலாந்து அணி வெறும் 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இன்று இழக்க நேர்ந்தது. முதல் இன்னிங்ஸ் போலவே அக்ஸர் பட்டேல் 5 விக்கெட்களையும், அஸ்வின் 4 விக்கெட்களையும் எடுத்தனர். அஸ்வின் மைல்கல் சாதனை ஒன்றை இப்போட்டியில் படைத்தார் 400 விக்கெட்கள் வீழ்த்திய இந்தியாவின் 4வது வீரரானார் அஸ்வின்! இதனிடையே 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.