அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Posted : திங்கட்கிழமை, டிசம்பர் 06 , 2021 11:40:55 IST
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட 252 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் 7-ஆம் தேதி நடைபெறும் எனவும், அதன் முடிவு 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அதிமுக தலைமை கழகம் சென்ற வாரம் அறிவித்திருந்தது.
அதன்படி ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர்-3 ஆம் தேதி தொடங்கிய நிலையில், டிசம்பர்-4 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, மாலை 3 மணியுடன் மனுதாக்கல் நிறைவடைந்தது. அதன்பின்னர், இருவரும் போட்டியின்றி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்வாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.
இதனைத் தொடர்ந்து, நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தேர்தல் அதிகாரிகளான பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான வேட்புமனுக்களைப் பரிசீலனை செய்தனர். இதற்கிடையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மனு வாங்க வந்த தொண்டர்கள் சிலர் விரட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட 252 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பெயரிலேயே அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வேட்புமனு பரிசீலனையில் தகுதியற்ற வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, ஓபிஎஸ்- இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட உள்ளது.