???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நடிகர்களை வழுக்கி விழச்செய்யுங்களேன்! - காவல்துறையிடம் கோரிக்கை வைத்த இயக்குநர் லெனின்பாரதி

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   30 , 2019  02:28:52 IST


Andhimazhai Image
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் , திரை விருது விழா -2018 சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டிற்கு அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சியியை தமுஎகச-வின் இணைச்செயலாளர் அன்பரசன் தொகுத்து வழங்கினார்.  
 
 
2018ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களாக காலா, பரியேறும் பெருமாள்,  மேற்கு தொடர்ச்சி மலை  ஆகிய படங்களை தமுஎகச தேர்வு செய்துள்ளது. இத்திரைப்படங்களை இயக்கிய இயக்குநர்களான மாரி செல்வராஜ், லெனின்  பாரதி மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கு தமுஎகச சார்பில் விருது வழங்கப்பட்டது. இயக்குநர் ரஞ்சித், இவ்விழாவிற்கு வரவியலாததால் காலா படத்தின் வசனங்களை எழுதிய மகிழ்நன்  விருதை பெற்றுக்கொண்டார்.   
 
 
தமுஎகசவின் மாநிலத் துணைத்தலைவர் ரோகிணி,  பொதுச்செயலாளர்  ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். இந்த மூன்று படங்கள்  தேர்வு செய்யப்பட்டதன் காரணத்தை   நாடக கலைஞர் பிரளயன்,  தமுஎகச-வின் பொதுச் செயலாளர்  ஆதவன் தீட்சண்யா, இணைச் செயலாளர் அன்பரசன் ஆகியோர் விளக்கினர்.
 
 
இதைத்தொடர்ந்து பேசிய இயக்குநர்  மாரி செல்வராஜ் கூறியதாவது: சாதிய மனநிலை என்னவாக இருக்கிறது என்ற   உரையாடலை மக்களிடம் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பரியேறும் பெருமாள் எடுக்கப்பட்டது.  இத்திரைப்படத்தின் வெற்றியே அந்த நோக்கம் நிறைவேறி உள்ளது என்பதை காட்டுகிறது.  எந்த தயாரிப்பாளர்களும் இயக்குநர்களுக்கு கொடுக்காத ’அரசியல் சுதந்திரத்தை’ இயக்குநர் ரஞ்சித் எனக்கு வழங்கியதால்தான்  இந்த திரைப்படத்தை என்னால் இயக்க முடிந்தது.
 
 
மேற்கு தொடர்ச்சி மலை, காலா , பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் மக்கள் கூடி நிற்கும் எல்லா இடங்களிலும் திரையிடப்பட வேண்டும். இனி பிற்போக்குத்தனமான திரைப்படங்கள் அதிகமாக வெற்றிபெறாது.
 
 சாதி ஒழிப்பு என்பது தமிழகத்தில் இன்னும் தொடங்கவில்லை.  சாதி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கித் தருவதற்கே களப்போராளிகளின்  வாழ்நாள் முழுவதும் சென்றுவிடுகிறது. இதில் சாதி ஒழிப்பைப் பற்றி ஏங்கே பேசவது? எனவே பொதுமக்கள்  தங்களிடத்திலிருந்து  சாதி ஒழிப்பை தொடங்க வேண்டும். வீட்டில் இருக்கும் குழந்தைகளிடம் சாதி ஒழிப்பைப் பற்றி பேச வேண்டும்.  அதுபோல் சாதி ஒழிப்பு கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள் நடத்தப்பட வேண்டும். விருதை வழங்கிய தமுஎகசவிற்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறினார்.
 
இதைத்தொடர்ந்து பேசிய  இயக்குநர் லெனின் பாரதி, ‘ இந்த விருது விழா எனக்கு மிகவும் நெருக்கமான விழா .  எனது அப்பா மார்க்ஸியவாதியாக  இல்லாவிட்டால் நான்  என்னவாக மாறியிருப்பேன் என்பது கேள்விகுறிதான்.  பால்யத்தில் எனது தந்தையுடன் மாட்டு வண்டியை மேடையாக்கி  நிகழ்த்திய  நாடகங்களும், அப்போது ஒலித்த பட்டுக்கோட்டையின் பாடல்களும்தான் என்னை திசை திருப்பியது. திரைப்படங்கள் குறித்த பார்வையை மக்களிடம்   மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற  விழாக்களில் என்னைப்போன்றோர் பங்கெடுக்கிறார்கள். சமீபத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.
 
 
  சினிமாவில் நடப்பதுபோல்  நிஜத்தில் நடந்து உள்ளது என்று பத்திரிக்கையில் செய்திகள்கூட வெளியானது.  காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட  மாணவர்கள் சொல்லி வைத்ததுபோல் கழிப்பறையில் வழுக்கி விழுந்தார்கள். அதுதான் எப்படி என்று தெரியவில்லை. எந்த அரசியல் பின்னணியும்  இல்லாத எளிய மனிதர்கள்தான் இதுபோன்று கழிப்பறையில் வழுக்கி விழுகிறார்கள்.  இதைவிட அதிக குற்றச்செயல்களில் ஈடுபடும் அரசியல் வாதிகள், ஊழல் புகாரில் சிக்கும் அதிகாரிகள் யாரும் கழிப்பறையில் வழுக்கி விழுவதில்லை.
 
 
பட்டாக்கத்தியுடன்   தாக்குதல் நடத்திய மாணவர்கள் குற்றம் செய்திருக்கிறார்கள் என்பதால் அவர்கள் கைகள் ஒடிக்கப்பட வேண்டும் என்றும் அதுதான் சரி என்ற கருத்தை நம் மத்தியில் சமூக வலைதளங்கள் உருவாக்கி உள்ளது.  ஆனால் அது உண்மையில்லை.  சமமான  வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்காத சமூகம்தான் இதுபோன்ற செயலுக்கு முக்கிய காரணம்.  கத்தியை கையில் எடுக்கும் வன்முறை கலாச்சாரத்தை சினிமாக்கள்தான் உருவாக்குகிறது.  எனவே இதுபோன்று படங்கள் எடுக்கும் , இயக்குநர்களை,  அதில் நடிக்கும் கதாநாயகர்களை  காவல்துறையினர் வழுக்கி விழ வைத்தால் நன்றாக இருக்கும்’’ என்றார் .
 
 
 இதைத்தொடர்ந்து தமுஎகச-வின் பொதுச் செயலாளர்  ஆதவன் தீட்சண்யா, ‘’ காலா, மேற்கு தொடர்ச்சி மலை ,  ஆகிய திரைப்படங்கள்  மனிதனுக்கும் நிலத்திற்குமான உறவைப் பற்றியும், நிலத்தின் உரிமை பெறுவது எந்த அளவிற்கு முக்கியம் என்ற  உரையாடலை  தொடங்கி வைத்துள்ளது.  அதுபோல் பரியேறும் பெருமாள்  மனிதர்களுக்குள் நடைபெறும் உரையாடலை துவக்கி வைத்துள்ளது. இவ்விரு பார்வைகளும் நிகழ்காலத்திற்கு மிகவும் தேவை என்பதால் இந்த மூன்று படங்களை சிறந்த படங்களாக தேர்வு செய்தோம்.  24 மணிநேரமும் வணிக வளாகங்கள் திறந்து வைக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிடுகிறது. 
 
 
ஆனால் கலையிலக்கிய நிகழ்வுகள், பண்பாட்டு நிகழ்வுகள் மட்டும் 10 மணிக்கே முடிவடைய வேண்டும் என்று கூறுவது சரியா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.  பொதுவாக மக்கள் இயக்கங்கள்  ஏதேனும் கூட்டம் நடத்த வேண்டும் என்று இடம் கேட்டால்   ஆளில்லாத முட்டுச்சந்திலோ  அல்லது மூத்திரச்சந்திலோதான் இடம் கொடுப்பார்கள்.  ஆனால் இந்த நிகழ்வுக்கு, மக்கள் கூடும் இடத்தை கொடுத்த காவல்துறைக்கு  நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அனுமதி வழங்கிய காவல்துறை அதிகாரிகள் கழிப்பறையில் வழுக்கி விழக்கூடாது என்று பிரார்த்திக்கிறேன்.  
 
 
இதேவேளையில்தான் எழுத்தாளர் மற்றும் திரைக்கலைஞர்கள் 41  பேர் பிரதமருக்கு முக்கியமான கடிதத்தை எழுதியிருக்கிறார்கள்.  நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் வெறுப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் நடைபெறுகிறது என்றும் இதை தங்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.  இந்த கடிதம் கண்டிப்பாக பிரதமர் அலுவலகத்திற்கு சென்றிருக்கும். ஆனால் அவர் இதுவரை வாய் திறக்கவில்லை. புதியக் கல்விகொள்கையில், வகுப்பிற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.  ஆனால் பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.
 
 
அந்த 41  கலைஞர்களுக்கு போட்டியாக 61 பிரபலங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  அதில்’ 41 பேருக்கும் இந்தியாவில் இருக்க பிடிக்கவில்லை என்றால் நிலவுக்கு செல்லுங்கள்’ என்று  குறிப்பிட்டுள்ளனர். எப்போதும்  பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்றுதான் கூறுவார்கள். ஆனால் இப்போது சந்திராயன் 2  நிலவுக்கு  அனுப்பி உள்ளோம் என்பதை மார்தட்டிக் கொள்ள நிலவுக்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.  இதற்கு அடூர் கோபாலகிருஷ்ணன் ‘ இந்த  ஆட்சியில் வாழ்வதைவிட  நிலவுக்கு செல்வதே மேல். நிலாவிற்கு செல்ல டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்துதாருங்கள்  என்று கூறியுள்ளார்.
 
 
இந்த ஆட்சிக்கு எதிராக மாற்றுக்கருத்தை முன்வைப்பவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறார்கள்.  விவசாயிகளுக்கு சொந்தமான தஞ்சை மண்ணை தற்போது மீத்தேன் திட்டம் என்ற பெயரில் நாசம் செய்யப்பார்க்கிறார்கள்.  அதுபோல் சேலம் 8 வழிச்சாலை என்ற திட்டம் மூலமாக  விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கப்பார்க்கிறார்கள்.  சேலத்திலிருந்து சென்னை வந்தடைய ஏற்கனவே 5 வழித்தடங்கள் இருக்கும் பட்சத்தில்  8 வழிச்சாலை எதற்கு ?  இப்போது பெயரை வேண்டுமானால் மாற்றுகிறோம் என்கிறார்கள்.  நாம் என்ன பெயர்பிடிக்கவில்லை என்றா  கூறினோம்!.
 
 
தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராட்டிக்கொண்டிருக்கின்றன.  புதிய கல்விக்கொள்கை என்பது ஏதோ மாணவர்கள்- ஆசிரியர்கள் சம்மந்தப்பட்ட  விஷயம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. அனைவரின் தலை எழுத்தை தீர்மானிக்கும் விஷயம் அது.. இந்த கல்விக்கொள்கையானது நமது குழந்தைகளுடைய கல்வி  பெறும் உரிமையோடு  நேரடியாக  சமந்தப்பட்டுள்ளது. இது அமலுக்கு வருமானால்,  3 வயதிலே அரசாங்கம் நமது குழந்தைகளை  அதன்  கட்டுப்பாட்டில்  எடுத்துக்கொள்ளும்.  3 வயது முதல் 8 வயது வரை ஒரு குழந்தை என்ன கற்றுக்கொள்கிறதோ அதை அப்படியே  ஏற்றுக்கொள்ளும். 
 
 
அதை தனக்கு சாதகமாக அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளப்போகிறது. இந்த கல்விக்கொள்கையின் படி 3 , 5, 8, 12 வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தப்படும் இத்தேர்வுகளில் வெற்றிபெறும் மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்கு செல்ல முடியும்.  நீட் தேர்வு போல எல்லா பட்டப் படிப்பிற்கும் நுழைவுத்தேர்வு  நடத்தப்படும் என்ற அம்சங்களும் கல்விக்கொள்கையில் உள்ளது. எனவே இதை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும்’ என்று கூறினார்
 
 
-வாசுகி 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...