அசாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் உறுப்பினர் ரெகிபுத்தின் அகமது வனத்துறை சார்ந்த கேள்வி ஒன்றை எழுப்பினார்.
அந்த கேள்வியில் மனித-யானை மோதல் சம்பவங்கள், யானைகளின் உயிரிழப்பு போன்ற விவரங்களை எழுப்பினார். இதற்கு மாநில வனத்துறை அமைச்சர் சந்திர மோகன் படோவாரி எழுத்துப்பூர்வமாக விரிவான பதில் அளித்துள்ளார். அதில், யானைகள் உறையும் இயற்கையான இடங்களில் மனிதர்கள் குடிபெயர்ந்து ஆக்கிரமிக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இதன் தாக்கத்தால் யானைகள் வேறு இடங்களுக்கு உணவு தேடி நகரும் சூழலுக்கு தள்ளப்படுகிறது. இதுவே, மனித -யானை மோதலுக்கு காரணமாக அமைகிறது. அசாம் மாநிலத்தைப் பொறுத்தவரை தற்போது மொத்த யானைகளின் எண்ணிக்கை 5,700ஆக உள்ளது. ஆண்டுக்கு மனித யானை மோதல் காரணமாக சராசரியாக 70 மக்களும், 80 யானைகளும் கொல்லப்படுகின்றன.
இத்துடன் பொருட்சேதமும் அதிகம் ஏற்படுகின்றன. 2001 தொடங்கி 2022 வரை மொத்தம் 1,330 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் 2013ஆம் ஆண்டு அதிகபட்சமாக 107 யானைகள் உயிரிழந்துள்ளன. அதற்கடுத்து 2016இல் 97 யானைகளும், 2014இல் 92 யானைகளும் பலியாகியுள்ளன.
யானை உயிரிழப்பு காரணங்களை பார்க்கும் போது, 509 யானைகள் இயற்கையான மரணத்தால் உயிரிழந்துள்ளன. 202 யானைகள் மின்சாரம் தாக்கியும், 102 யானைகள் ரயில் விபத்து காரணமாகவும், 65 யானைகள் விஷம் வைக்கப்பட்டும், 40 யானைகள் வேட்டையாடப்பட்டும், 18 யானைகள் மின்னல் தாக்கியும் உயிரிழந்துள்ளன. 261 யானைகள் உயிரிழப்புக்கு காரணங்கள் தெரியவில்லை.
அசாமில் மொத்த வனப்பரப்பு 26,836 சதுர கிமீ எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த வனப்பரப்பில் 34.21 சதவீதமாகும். இதுவரை வனப்பகுதியில் 14,373.913 ஹெக்டேர் ஆக்கிரமிப்புக்குள்ள இடங்கள் மீட்கப்பட்டுள்ளன.