அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கவிதைகள் என்னை விட்டுப் போய்விடுமோ? - குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது விழா

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   11 , 2021  10:11:59 IST


Andhimazhai Image

இந்த ஆண்டு இளங்கவிஞர்களுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது ’வெயில் பறந்தது’ என்ற கவிதை தொகுப்பை எழுதிய கவிஞர் மதாருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை எழுத்தாளர் தேவிபாரதி  நேரில் நடந்த சந்திப்பில் மதாரிடம் (9-06-2021) வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, இன்று( 10-06-2021) மாலை நடைபெற்ற ஜூம் மீட்டிங்கில் கவிஞர் குமரகுருபரனை அறிமுகம் செய்து பேசிய அந்திமழை இளங்கோவன், ”குமரகுருபரன் குறித்து பேசுவது மிகவும் உணர்வுப் பூர்வமான ஒன்று. அதுவும் குறுகிய நேரத்தில் பேசுவது என்பது கொஞ்சம் சிரமம் தான். குமரகுருபருடன் குறைந்த அளவிலான இலக்கியக் கூட்டங்களில் மட்டுமே அவருடன் பங்கேற்றிருக்கிறேன். கூட்டங்களில் பொதுவாக குமரகுருபரன் கடைசி வரிசையில் தான் அமர்வார். அவருடன் சரியாக 27 வருடங்கள் 7 மாதங்கள் மட்டுமே பழகியதாக நினைவு, இது மிகவும் உணர்ச்சிகரமான  உணர்வு.


குமரகுருபரனின் உருவத்திற்கும் அவரின் வெளிப்பாட்டுக்கும் வேறுபாடு உண்டு. கவிஞர்கள், எழுத்தாளர்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்” என்றார்.

அவரைத் தொடர்ந்து ’குமரகுருபரனும் விருதும்’ என்ற தலைப்பில் பேசிய தேவேந்திர பூபதி, ”குமரகுருபரனை சரியாக மதிப்பிடக் கூடியவர் அந்திமழை இளங்கோவன். 1997ஆம் ஆண்டிலிருந்து எனக்கும் குமரகுருபரனுக்கும் தொடர்புண்டு. அவர் குமுதம் ஸ்பெஷல் இதழின் எடிட்டராக இருந்தார். அப்போது எஸ்.வைத்தீஸ்வரன் கவிதை இதழில் வெளிவந்திருந்தது. அந்த கவிதை குறித்து குமரகுருபரனுடன் பேசும் போதுதான் எனக்கும் அவருக்குமான நட்பு உருவாகியது. இது அவர் இறப்பது வரை தொடர்ந்தது. அவரின் இறப்பை எப்பொழுது நினைத்தாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.

குமரகுருபரன் திறமைக்கு இன்றைக்கு இருந்திருந்தால் மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டிருப்பார்.” என்றவர், ”கவிஞர் மதாருடைய “வெயில் பறந்தது” என்ற நூலுக்காக குமரகுருபரன் விருது கொடுக்கிறார்கள். 62 கவிதைகள் உள்ளது. வடிவம் சார்ந்ததைவிட அதன் கவித்துவமான வெளிப்பாடு சிறப்பாக உள்ளது. இது போதுமானது என்று நினைக்கிறேன். தீர்க்கமான கவிதைகள் இவருடையது. தமிழின் நல்ல கவிஞராக மதார் உருவாகுவார்,’’ என்றார்.

அதனைத் தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய வேணு தயாநிதி, “ நவீன கவிதைகள் என்றாலே ஆங்கிலத்தில் எழுதப்படுவதாக ஒரு கருத்து உண்டு. அது எதனால் என்றால், நவீன கவிதை எழுதியவர்கள் பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்கள் தான். நவீன கவிதைகள் ஆங்கிலத்தில் உருவாகி வருவதற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாகே முன்னதாகவே தமிழில் அகநானூறு, புறநானூறு போன்ற தொகை நூல்கள் உருவாகிவிட்டது. இதில் நவீன கவிதைக்கு இணையான கூறுகள் உள்ளது. தமிழில் மற்ற மொழிகளின் நவீன கவிதைகள் அறிமுகமாகாமலிருந்தாலும் கூட தமிழில் சுயாதீனமாக நவீன கவிதைகள் உருவாகியிருக்கும்” என்றார்.

வாழ்த்துரை வழங்கிய கவிஞர் கண்டராதித்தன்,“இரண்டு வருடங்களுக்கு முன்பாக மதார் கவிதையை வாசித்த போது சில ஆலோசனைகளை அவருக்கு வழங்கினேன். தற்போது அந்த கவிதை ”வெயில் பறந்தது” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இந்த விருதினை மதாருக்கு இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து வழங்கியிருக்கலாம் என்று நினைக்கிறேன். இதனால் கொஞ்சம் அவருக்கு பொறுப்பு கூடியிருக்கும் என்று நினைக்கிறேன்.” என்றார்.

இறுதியாக வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர் ஜெயமோகன், “என்னுடைய இளவலாக இருந்த குருமரகுருபரனை நினைவு கூர்வது என்பது கசப்பானதாக இருக்கிறது. கவிஞர்களுக்கு சாவு இல்லை என்பார்கள், அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் நினைவுக் கூறப்படுவார்கள். குமரகுருபரனின் நினைவாக சென்ற சில வருடங்களாக இளங்கவிஞர்களுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது வழங்கி வருகிறோம்.

கவிதையை எளிதாக மதிப்பிட முடியாது. மதார் கவிதைகள் அனைத்தும் சாதாரணமானவை கிடையாது. அவருடைய கவிதைகள் அனைத்தும் புறவயமானவை. ஒரு கவிதை எந்த இடத்தில் அது தனது கவித்துவத்தை இழக்கிறது என்றால், புறவய புலன்களிலிருந்து தனித்து விலகும் போது தான் அது நிகழ்கிறது. அகவயப்பட்டு கவிதை இயங்கும் போது அது கருத்தியல் சார்ந்ததாக மாறிவிடுகிறது. கவிதை என்பது புற உலகை புரிந்து கொள்வது என்பதுதான்.” என்றார்.

கடைசியாக ஏற்புரை வழங்கிய கவிஞர் மதார், “என்னுடைய கவிதைகள் கைத்தட்டலிலிருந்தே பிறந்தது. கவிதைக்காக வாழ்க்கை முழுவதும் காத்திருக்கிறேன். கவிதைகள் என்னைவிட்டுப் போய்விடுமோ என்று எண்ணியதுண்டு. ஆனால் அப்படிப் போகாது. அது ஒரு கனவு வெளி. ஒரே நேரத்தில் பார்வையாளனாகவும் பங்கேற்பாளனாகவும் இருக்கும் கனவு வெளி. கவிஞர் குமரகுருபரன் பெயரில் இந்த விருது வழங்கப்படுவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.” என்றார். இறுதியாக வாசகர்களின் கேள்விக்கு கவிஞர் மதார் பதில் அளித்ததுடன் நிகழ்வு நிறைவுற்றது. நிகழ்வில் கவிதா சொர்ணவல்லி, ராஜகோபாலன், சௌந்தர், காளிபிரசாத், புகைப்படக் கலைஞர் ஆம்ரே கார்த்திக் உள்ளிட்ட விஷ்ணுபுரம் வாசகர் வட்ட உறுப்பினர்கள் ஏராளமாக இணையம் மூலம் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

-தொகுப்பு- தா.பிரகாஷ்click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...