இலக்கியக் கூட்டங்களுக்கும் விழாக்களுக்கும் என்று சில முகங்கள் உண்டு. பெரும்பாலும் இலக்கிய விழாக்கள் எளிமை என்கிற பெயரில் தரித்திர சாயல் கொண்டவை .அல்லது மலிவான பதாகைகள் என்கிற கலாச்சாரத்தில் இருப்பவை. சில இலக்கியக் கூட்டங்கள் முரண்பாடுகளில் தொடங்கி மோதலில் முடிவதும் உண்டு. கலந்து கொள்வோர் பெரும்பாலும் நரை கூடிய மூத்த குடி மக்களாக இருப்பார்கள். தனிநபர் துதிபாடல் தலைவிரித்தாடும். மிகைப்புகழ்ச்சிகளுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் விஷ்ணுபுரம் விருது விழா இந்த எந்த பிம்பங்களுக்குள்ளும் அடங்காமல் தனித்த ஒன்றாக இருந்தது.
டிசம்பர் 25 , 26 தேதிகளில் கோவையில் ராஜஸ்தான் சங்க அரங்கில் நடைபெற்ற இந்த விழா ஒரு இலக்கிய விழாவிற்கான புதிய இலக்கணத்தை வரைந்து காட்டியது.
இதுவரை ஆ.மாதவன் ,பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப் ,ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ.முத்துசாமி, ராஜ்கௌதமன், அபி, சுரேஷ்குமார இந்திரஜித் ஆகியோர் விஷ்ணுபுரம் விருது பெற்று உள்ளார்கள். 12வது ஆண்டாக இந்த விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்டது.
அந்தக் காலத்தில் திருமணம் ஒரு வீட்டில் நடைபெறுகிறது என்றால் பத்து நாட்களுக்கு முன்பிருந்தே வேலைகள் தொடங்கப்படும். பந்தக்கால் நட்டதிலிருந்து மண்ணெடுத்து தரை மெழுகு வார்கள், பந்தல் போடுவார்கள், சொந்த பந்தங்கள் எல்லாம் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே மெல்ல மெல்ல வந்து சேர்வார்கள். திருமணத்திற்கு முதல் நாள் கூட ஒரு பெரிய கூட்டம் விருந்துண்ணும். திருமண நாள் தான் கிளைமாக்ஸ் ஆக இருக்கும். அப்படித்தான் இந்த விஷ்ணுபுரம் விருது விழாவையும் எண்ணத்தோன்றியது விழாவிற்கு முன்பிருந்தே விஷ்ணுபுரம் வாசகர்கள் அனைவருக்கும் கொண்டாட்ட மனநிலை வந்துவிட்டது. ஜெயமோகன் தளத்தில் அதற்கான அறிவிப்புகள் வந்துகொண்டிருந்தன. எழுத்தாளர்கள் பங்கேற்பாளர்கள் பற்றிய அறிமுகம் சிறப்பாக செய்யப்பட்டு கொண்டிருந்தது. வாசகர்களுக்குஅவர்களைப் பற்றியும் அவர்களது படைப்புகளைப் பற்றியும் முறையான அறிமுகங்கள் வந்து கொண்டே இருந்தன. வாசிப்பைத் தொடர்ந்து கலந்துரையாடலில் இருந்து கொண்டே இருந்தார்கள்.பங்கேற்பாளர்கள் பற்றிய சித்திரத்தை ஜெயமோகன் தனது எழுத்தில் வரைந்து கொண்டே இருந்தார் .சுருக்கமாகச் சொன்னால் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் வாசகர்களுக்கும் இடையில் ஓர் அந்தரங்கமான உறவு உருவாகி வளர்ந்திருந்தது. விருதுவிழா ஓரிரு நாள் விழாவாக இல்லாமல் சம்பந்தப்பட்டவர்கள் பற்றி சுமார் பத்து பதினைந்து நாட்களாகவே தீவிரமாகக் கொண்டாடப்பட்டு கொண்டிருந்தார்கள்.
வாசகர்களை அவர்களது படைப்புகளை வாசிக்க வைத்தும் அது தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டும் என அவர்கள் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருந்தார்கள்.
விஷ்ணுபுரம் விழா இணையத்தில் பதிவு செய்துகொண்டு வரவேண்டும் என்கிற படிவம் வந்தபோதே மகிழ்ச்சி துளிர்விட்டு வளர ஆரம்பித்தது. இந்த விழாத் திட்டமிடலில் முகத்தை அந்த பதிவு வடிவத்திலேயே கண்டோம். பதிவு ஒப்புதல் பெற்று தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவ்வப்போது தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வந்து கொண்டே இருந்தன. அவை மிகவும் நேர்த்தியாகவும் நிறைவாகவும் இருந்தன.
கோவை வந்து இறங்கியதும் வந்தவர்களுக்குக் தங்கும் இடங்களை ஒதுக்கீடு செய்வதில் தன்னார்வலர்கள் இன்முகத்தோடு அவரவர் பணியைச் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. எதுவும் இல்லை என்றோ என்ன செய்வது என்றோ யாரும் தயங்கவில்லை.எந்தச் சிக்கலுக்கும் தீர்வு காண தயாராக இருந்தார்கள்.திடீர் தடங்கல்களுக்கும் மாற்று ஏற்பாடுகள் கைவசம் வைத்திருந்தார்கள்.அனைவரும் வேலையாகச் செய்யாமல் விருப்பமாகச் செய்ததால் ரசித்து ரசித்து சேவை செய்தார்கள்.
உபசரிப்பு போலவே உணவும் சிறப்பாக இருந்தது.
தங்குமிடமும் நிம்மதியாகவும் சச்சரவு இல்லாமலும் இருந்தது. கலந்து கொள்பவர்கள் தங்குபவர்கள் குடிக்கக் கூடாது என்ற நிபந்தனையை ஜெயமோகன் ஒரு கண்டிப்பான ஆசிரியரைப் போல் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி அனைத்தும் நடந்தன.
விழாவில் கோகுல்பிரசாத், எம். கோபாலகிருஷ்ணன், காளிப்ரசாத், சுஷில் குமார் ,செந்தில் ஜெகநாதன், திருச்செந்தாழை, ஜெ.தீபா, சோ.தர்மன், தெலுங்கு கவிஞர் வீரபத்ருடு, திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ்.சாய், விருதாளர் கவிஞர் விக்ரமாதித்யன் ,பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் என மூத்த இளைய படைப்பாளர்கள் உடனான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
காலை முதல் இரவு வரை இவ்வளவு மணி நேரம் ஆணி அடித்தது போல் ஒரே இடத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசித்தது வியப்பு. அப்படி எந்த சலசலப்பும் இன்றி விழாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது பெரிய ஆச்சரியமாக இருந்தது. சிறு இடைவேளையில் தேநீர் அருந்தப் போனால் கூட விரைவாக வந்து அரங்கில் உட்கார்ந்து கொண்டார்கள்.
கலந்துகொண்ட வாசகர்களும் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களைப் போல சம்பந்தப்பட்டவர்களைப் பற்றி நன்றாக அறிந்து கொண்டும் படைப்புகளை வாசித்துக் கொண்டு வந்திருந்தார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளிலேயே அது தெரிந்தது. ஆழமாகவும் தர்க்கபூர்வமாகவும் கேள்விகள் கேட்டார்கள் சில கேள்விகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்பட்டன. சில கடந்து செல்லப்பட்டன .சில எதிர்பாராத கேள்விகளாக உணரப்பட்டன. எப்படி இருந்தாலும் கேள்வி கேட்டவர்கள் தங்கள் வாசிப்பு அனுபவத்தையும் முன் தயாரிப்பையும் காட்டினர் எனலாம்.
தேவையற்ற கேள்விகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். அப்படி திசைதிருப்பிய மிகச்சில கேள்விகள் நெறியார்களால் முறைப்படுத்தி விலக்கப்பட்டன.
புதிதாக அமர்வில் பங்கேற்கும் வளரும் எழுத்தாளர்கள் வாசகர்கள் இடையிலான உரையாடலை வீடியோ பதிவு செய்ய செய்யாமல் தவிர்த்திருந்தார்கள். அதை வேண்டுமென்றே தான் அப்படிச் செய்திருந்தார்கள். ஒரு நிகழ்வு பதிவாகிறது என்று உணரும்போது அந்த உரையாடலில் சகஜ தன்மையும் சுதந்திரமும் குலையலாம் என்று வீடியோ பதிவு செய்வதை தவிர்த்து வந்தார்கள்.
அதனால் வெளிப்படையான உரையாடல் நிகழ்ந்தது. அது இயல்பாகவும் கேட்பவருக்கு அணுக்கமாகவும் இருந்தது.
தேநீர் இடைவேளைகளில் சற்று வெளியே வந்தாலும் வந்தவர்கள் பேசிக்கொண்டது இலக்கியம் பற்றியும் படைப்பாளிகளைப் பற்றியுமே இருந்தது.
தங்கள் கவனிப்புக்குரிய வளரும் புதிய எழுத்தாளர்களை சந்தித்தபோதும் மூத்த எழுத்தாளர்களைச் சந்தித்த போதும் அவர்கள் உரையாடியது வெளிப்படையாக இருந்தது.மனத்தில் தேங்கியிருந்த கேள்விகளையெல்லாம் கேட்டுப் பதில் பெற்றார்கள். சகவாசகர்களுடன் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் செய்திகளும் படைப்புகள் சார்ந்ததாகவே இருந்தது காண்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
கவிஞர் விக்ரமாதித்யன் பற்றிய 'வீடும் வீதிகளும்' என்கிற ஆனந்த்குமார் இயக்கிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.
விழாவில் ஆனந்த் குமாரின் 'டிப்டிப் டிப்' கவிதை நூல், சுஷில் குமார் எழுதிய 'சப்தாவர்ணம் 'சிறுகதைத்தொகுப்பு,கல்பனா ஜெயகாந்த் எழுதிய 'இம்ம் என்று அமைந்திருக்கும் ஆழ்கடல்' கவிதைத் தொகுப்பு என நூல்கள் வெளியிடப்பட்டன.
விடுதிகளில் இரவு தங்கி இருந்தவர்கள் கூட இலக்கியம் பற்றியே பேசிப் பேசித் தீர்த்தார்கள்.
போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வாசிப்பின் ஆழத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பார்வையாளனாக ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.
விழாவில் நிரல் படுத்தப் பட்டிருந்த நிகழ்ச்சிகள் தொடக்கத்திலிருந்து இறுதிவரை கட்டுமானம் குலையாமல் இருந்தது.
அரங்கில் பார்வையாளர்கள் 400 முதல் 500 பேர் இருப்பார்கள் என்று தோன்றியது.
கலந்து கொண்டவர்களில் பெரும்பாலும் இளைஞர்கள் என்பது ஆச்சரியம்.இலக்கியக் கூட்டத்தில் அத்தனை இளைஞர்களைப் பார்த்து தெலுங்குக் கவிஞர் வீரபத்ருடு , முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இருவரும் தங்கள் வியப்பை வெளிப்படுத்தினர்.
நூற்றுக்கணக்கில் பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தாலும் வந்து அமரும்போது வசதிக்காக நாற்காலிகளை நகர்த்தி இழுக்கும் எந்த சத்தமும் அங்கே எழவில்லை. அது மட்டும் இல்லாமல் இத்தனை பேர் இருந்தும் கவனக்குறைவாக ஒருவரிடமிருந்து கூட மொபைல் போனின் ரிங்டோன் ஒலிக்கவில்லை. அனைவரும் சைலண்ட் மோடில் வைத்திருந்தார்கள். கிள்ளி விட்டதுபோல் கூட்டத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்கவில்லை. மைக் விசில் அடிக்க வில்லை. யாரோ ஒருவர் அலைபேசியில் விழா இடத்துக்கு அடையாளம் காட்டி சத்தமாக பேசி 'லொக்கேஷன்' சொல்லவில்லை ; இன்னின்னது போய்க்கொண்டிருக்கிறது என்று நேர்முக வர்ணனையும் கூறவில்லை.உணவு பரிமாறும் போதும் பாத்திரங்களின் உரசல் ஒலியில்லை ,பரபரப்பு சந்தடிகள் இல்லை.100% அப்படியே இருந்தது. இது ஒரு கட்டுப்பாடு மட்டுமல்ல ஒழுங்கு மட்டுமல்ல நல்லொழுக்கமுமாகும். அது நல்ல வாசகனுக்கும் இலக்கிய ரசிகனுக்கும் உள்ள ஒழுக்கமாகும்.
புதிய வாசகர்கள், தீவிர வாசகர்கள் கேள்வி கேட்கும்போது அனுபவ எழுத்தாளர்களும் இடையிடையே கேள்வி கேட்டார்கள். அப்படி சு. வேணுகோபால், கீரனூர் ஜாகிர்ராஜா ,சாம்ராஜ், போகன் சங்கர், ஆத்மார்த்தி, சுனீல் கிருஷ்ணன், விஷால் ராஜா,அமிர்தம் சூர்யா என பல முனைகளில் இருந்தும் கேள்விகள் வந்தன.
கேள்விகள் கேட்டபோது வாசகர்கள் பலரும் ஆர்வ மிகுதியால் ஒரு சிறு பிழை செய்தார்கள்.ஒரே நேரத்தில் இரண்டு மூன்று கேள்விகள் கேட்டனர்.பதில் அளிக்கும்போது மூன்றாவது கேள்விக்கு பதில் சொல்லும்போது முதல் கேள்வியை மறந்து இருந்தார்கள்.
ஒவ்வொன்றாகக் கேட்டிருந்தால் அனைத்திற்கும் விளக்கம் கிடைத்திருக்கும். இப்படி கொத்தாக கேள்வி கேட்டதால் சிலரிடமிருந்து அனைத்துக்கும் பதில் பெற முடியாமல் போய்விட்டது. இப்படி வரிசையாக கேள்வி கேட்டதை ஈரோடு கிருஷ்ணன் போன்ற நெறியாளர்கள் மட்டும் தனியே பிரித்துக் கொடுத்து பதில் பெற்றுக் கொடுத்தனர்.மொத்தத்தில் சச்சரவற்ற கேள்விகளோ வம்பளப்புகளோ இல்லை.
விழாவுக்குத் தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இருந்து மட்டுமல்ல இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்தது மகிழ்ச்சி அளித்தது.
"என்னிடம் கேட்க ஏராளமான கேள்விகள் இருந்தன இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை ஒரு சொட்டு விடாமல் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே நான் தனியாக அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தேன்" என்றார் சென்னையிலிருந்து வந்திருந்த சீனிவாசன் சங்கர். இப்படிப் பலரும் மௌன சாட்சியாக இருந்து நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.இவ்வளவு ஏற்பாடுகளையும் வழிகாட்டுதல்களையும் நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒழுங்குகளையும் சரியாக அமைத்துக் கொடுத்து விட்டு யாரோ ஒருவர் போல் கூட்டத்தில் ஒருவராக ஜெயமோகன் அமர்ந்திருந்தது வியப்பளித்தது.
எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று எந்தவித பதற்றமும் இல்லாமல் மனம் லேசாகி அமர்ந்திருந்தார். தேநீர் இடைவேளை போன்ற சிறு இடைவெளிகளில் கூட எழுத்தாளர்களைச் சூழ்ந்துகொண்டு வாசகர்கள் கலந்துரையாடி மகிழ்ந்தனர்.
தான் இப்போதுதான் முதல்முறை விழாவுக்கு வந்திருப்பதாக ஒரு வாசகி ஜெயமோகனிடம் கூறியபோது, அதற்காக வருத்தப்பட வேண்டாம். இங்கே வந்து விட்டாலே ஒரு நல்ல அறிமுகம் கிடைத்து விடும்.எதுவுமே தெரியாமல் உள்ளே வந்துவிட்டால்கூட புரிந்துகொள்வீர்கள் என்று கூறினார் .புதிதாக திருவையாறு இசை விழாவுக்குச் சென்றவர்களுக்குக் கூடசில கீர்த்தனைகள் மனதில் பதிந்து பாடமாகி விடும்.முதன்முறையாக திரைப்பட விழாக்களுக்குச் சென்றவர்களுக்கு கூட நல்ல படங்களின் அறிமுகம் கிடைத்து விடும் என்று அவர் கூறினார்.அவரை சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்த வாசகர்களிடம் ஜாலியாக கமெண்ட் அடித்துக் கொண்டே இருந்தார்.
எழுத்தாளர் நாஞ்சில் நாடனிடம் இளைஞர் கூட்டம் ஒன்று வட்டமிட்டுக் கொண்டிருந்தது. என்னதான் கேட்கிறார்கள் என்று காதைக் கொடுத்தபோது ஆழமான கேள்விகள் கேட்கும் வாசகர்களிடையே புரிதல் இல்லாமல் சிலர் மிக எளிய கேள்விகள் கேட்டபோது கூட அவர் அலுக்காமல் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டு இருந்தார்.
அங்கே குழுமியிருந்த வாசகர்கள் விதைநெல் போன்றவர்கள்.அவர்களில் நல்ல எழுத்தாளராக உருவாகி வளர்வதற்கான சாத்தியங்கள் உள்ள பலரை இனங்காண முடிந்தது.
தன்னை முன்னிலைப் படுத்தாமல் இது ஒரு அமைப்பு ரீதியான விழாவாக நடக்கவேண்டும் எதிர்காலத்தில் தொடரும் ஒரு விழாவாக வடிவமைத்து, பொறுப்புகளில் இருந்து மெல்ல மெல்ல விலகி நின்று ரசிக்கும் யாரோ ஒருவராக ஜெயமோகன் அவ்வப்போது விலகி நின்று வேடிக்கை பார்த்தார்.
விழா ஏற்பாடுகளின் மையப்புள்ளி ஜெயமோகன் தான் என்றாலும் அவர் அதை விரும்பாமல் அனைத்தையும் பிரித்துக் கொடுத்து வெற்றி பெற வைத்துள்ளார்.குழுவின் வெற்றியாக மாற்றிக் கொடுத்துள்ளார்.
இரண்டு நாளும் தலைவாழை இலை போட்டு கல்யாண விருந்து கொடுத்தார்கள். காலை ,இரவு உணவு வகைகளும் சிறப்பாக இருந்தன.
பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தப்படவில்லை.இப்படி எத்தனையோ முன்னெடுப்புகளுக்கும் முன்னுதாரணமாக இந்த விழா அமைந்திருந்தது.
இடைவேளை தருணங்களில் வெளியே வந்த போது கண்ணில் பட்ட எழுத்தாளர்கள், வாசகர்களிடம் பேச்சுக் கொடுத்தேன்.சிலரிடம் அவர்களது கருத்தைக் கேட்டேன்.
எழுத்தாளர் சோ. தர்மன் பறவைகள் பற்றி விவரித்து தகவல்களை சிலரிடம் விவரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் நிகழ்ச்சி பற்றிக் கேட்டபோது,
"இங்கே கிட்டதட்ட நானூறு பேர் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே சாதாரண ஆட்கள் கிடையாது. தேர்ந்த வாசகர்கள் ,எழுத்தாளர்கள். இப்படி தேர்ந்த வாசகர்களும் இலக்கியம் சார்ந்த கொள்கை உடையவர்களும் படைப்பாளிகளும் சேர்ந்து ஒன்றாகக் கூடும் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாக இதைப் பார்க்கிறேன்.இது ஒரு ஆரோக்கியமான நிகழ்வு. விருதுத் தொகை 50 ஆயிரத்திலிருந்து 2 லட்சமாக ஆகியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. அது ஒரு கணிசமான தொகை. அதுவும் தகுதியான நபர்களுக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பது மிகவும் பெருமைக்குரியது.
இதுவரை விருதுகள் கொடுக்கப்பட்ட 12 பேருமே தகுதியானவர்கள்தான். இப்போது விருது பெறும் விக்கிரமாதித்தனும் தமிழ் இலக்கியப் பரப்பில் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வருபவர்.நான் பொதுவாக இலக்கிய விழாவுக்குச் செல்வது இல்லை. நான் இப்போதுதான் முதன்முதலாக இந்த விழாவில் கலந்து கொள்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறது..எனக்கான அமர்வில் ஒருமணிநேரம் கொடுத்தார்கள். அது திருப்தியான அமர்வு . மிக்க மகிழ்ச்சியாக நிறைவாக உணர்கிறேன்" என்றார் .
மதுரையிலிருந்து வந்திருந்த ரம்யா பேசும்போது,
"இந்த விழா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இளம் வாசகருக்கு நம்முடைய வாசிப்பது எப்படி இருக்கவேண்டுமென்று வழிகாட்டியது. எழுத்தாளராக ஆரம்பகாலத்தில் இருப்பவர்களுக்கும் எழுதத் தொடங்குவது எப்படி? எப்போது தொடங்க வேண்டும்? என்று புரிதல் கிடைத்து,இளம் எழுத்தாளர்களுக்கான நல்ல அறிமுகமாகவும் இருந்தது.முதல் முறையாகத் தான் இந்த விழாவுக்கு நான் வந்திருக்கிறேன். முதல் வாய்ப்பில் நெறியாளராக வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. அதைப் பெருமையாக உணர்கிறேன்" என்றார்.
எழுத்தாளர் சாம்ராஜ் பேசும்போது,
"நான் இந்த மாதிரி விழாக்களுக்குத் தொடர்ந்து வரக்கூடியவன். இந்த விஷ்ணுபுரம் விருது விழாவிற்குரிய சிறப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் நடக்கும் விழாக்களில் இது மட்டும்தான் திட்டவட்டமான உணர்வுகளுடன் நடக்கும் விழா என்று சொல்ல வேண்டும்.
நிகழ்ச்சிக்காக பல்வேறு எழுத்தாளர்களை வர வைத்துஅவரது படைப்புகளைப் பற்றி முன்கூட்டியே தளத்தில் வெளியிட்டு வாசிக்க வைத்து அதன் மீதான கேள்விகளை நினைக்க வைத்து அதன் பிறகு சிறப்பு விருந்தினர்களாக அமர்வில் அமர வைத்து வாசகர்களை நேரடியாக உரையாட வைத்தது என்று இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வு என்பது
பொதுவாகத் தமிழ்ச் சூழலில் நடப்பதில்லை .நான் முப்பது ஆண்டுகளாக இலக்கியம் வாசிப்பவனாக இதைச் சொல்கிறேன்.
இவ்வளவு இலக்கியம் சார்ந்த நண்பர்களை ஒரே இடத்தில் பார்ப்பதற்கான வாய்ப்பு என்பது வேறு எந்த நிகழ்ச்சியிலும் கிடைக்காத ஒன்று. நூல் வெளியீடு புத்தக கண்காட்சி என துண்டு துண்டாக சிறு சிறு கூட்டமாகப் பார்ப்போம். ஆனால் இப்படி ஒத்த அலைவரிசை கொண்ட ஒரே நண்பர்களைச் சந்திக்கக் கிடைக்கும் வாய்ப்பு இங்கே மட்டும்தான் கிடைக்கும்.நமக்கான நல்ல நண்பர்களை இனம் கண்டுகொண்டு ஒத்த ரசனையோடு பயணிக்க முடியும் .அதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. இப்படிப் பல சாத்தியங்களை வழங்கும் விழாவாக இது இருக்கிறது. என்னைக் கேட்டால் இதை ஒரு இலக்கியத் திருவிழாவாகப் பார்த்து, இதை ஒரு கொண்டாட்டமாக உணர்கிறேன். இது உண்மையிலேயே ஒரு இலக்கியத் திருவிழா தான். இது பலருக்கும் நிறைய கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பாகவும் பிரியும் போது நம்மையறியாமல் பிரிய மனமில்லாமல் மனதில் வருத்தம் கவிகிறதை உணரலாம்.நான் எப்போதும் மகிழ்ச்சியுடன் மனநிறைவுடன் தான் இதில் கலந்து கொள்கிறேன்" என்றார்.
எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா பேசும்போது,
"கவிஞர் விக்கிரமாதித்தனுக்கு விருது வழங்கும் விழாவுக்கு வந்திருக்கிறேன். இரண்டு நாட்கள் பல அமர்வுகள் வாசகர் சந்திப்புகள் என்று நிகழ்ந்து வருகின்றன.நிறைய எழுத்தாளர்களுக்கு தங்களது அனுபவங்களைப் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இரண்டாவது நாளாகவும் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது நாள் முதல் அமர்வாக தெலுங்குக் கவிஞர் வீரபத்ருடு தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.தெலுங்கில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று நமக்குத் தெரியாது. மலையாளத்தில் பெங்காலியில் இந்தியில் என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியும். ஆனால் தெலுங்கில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது. அந்தச் சூழ்நிலையில் என் அருகில் இருக்கக்கூடிய தெலுங்கில் என்ன மாதிரியான இலக்கிய அசைவுகள் நடக்கின்றன என்பது நமக்குத் தெரியாது. விருந்தினர் தெலுங்குக் கவிஞர் வீரபத்ருடு அமர்வு மூலம் அவருடைய படைப்புகளை நாம் தெரிந்து தெரிந்துகொள்ள முடிந்தது, மட்டுமல்லாமல் தெலுங்கில் இப்படி மகத்தான ஒரு கவிஞர் இருக்கிறார் என்றும் புரிந்துகொள்ள முடிந்தது. இப்படி பல அமர்வுகள் இலக்கியவாதிகளுக்கும்
வாசகர்களுக்கும் புதிதாக எழுதத் தொடங்குபவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஏன் மூத்த எழுத்தாளர்களுக்கும் கூட ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக இருந்தது" என்றார்.
எழுத்தாளர் பாவண்ணன் கருத்தைப் பகிரும் போது,
"இது முக்கியமான சந்திப்பு புதிய வாசகர்களுக்கு எழுத்தாளர்களையும் எழுத்தாளர்களுக்குத் தங்களது வாசகர்களையும் அறிந்து கொள்ளும் நல்லதொரு வாய்ப்பு.இலக்கிய உலகத்துக்குள் நுழையத் தொடங்கியுள்ள புதிய வாசகர்களுக்கு உடனடியாக அவர்களுக்கு மூத்த எழுத்தாளர்களைச் சந்திக்கும் அனுபவம் கிடைக்கிறது. நேரடியாகச் சந்திக்க கூடிய வாய்ப்பும் கலந்துரையாடும் வாய்ப்பும் இதில் கிடைக்கிறது.ஒரு வாசகனுக்கு கேட்கலாமா வேண்டாமா என்று கூச்சப்பட்டு மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு இந்தச் சபையில் பதில் கிடைக்கிறது. இது ஒரு முக்கியமான பயனாகும் .கடந்த காலத்தில் கேள்விகளை மனதுக்குள்ளே அடக்கிக்கொண்டு ஆண்டுக்கணக்கில் தேக்கி வைத்துக் கொண்டு இருந்த சூழல் இன்றில்லை.இந்த சந்திப்பு சந்தேகத்தை உடனடியாகப் போக்கக்கூடிய வாசலை திறந்து வைக்கிறது.பல வாசகர்கள் ஒன்றாகக் கூடி உரையாடுகிறார்கள். ஒரு காலத்தில் வாசகர்கள் தனித்தனியாகப்பிரிந்து கிடந்தார்கள்.சந்திக்க வாய்ப்பு கிடைக்காது.பழங்காலத்தில் கிராமங்களில் ஊர்களில் தனித்தனியாக நாலைந்து பேராக பகிர்ந்துகொண்ட நிலை இன்று இல்லை. இன்று ஏறக்குறைய 500 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் இலக்கியப் பரிச்சயமுள்ள நண்பர்களைச் சந்தித்து பேசுவது ஒரு தனி மகிழ்ச்சி. அதற்கு இவ்விழா பெரிய வாய்ப்பு.
ஓர் எழுத்தாளனாக மிகவும் மகிழ்ச்சியாக நெருக்கமான அணுக்கமானவர்களைச் சந்திக்கும் நிகழ்வாக இதைப் பார்க்கிறேன். இந்த விழாவில் கலந்துகொள்வது நிறைவளிக்கும் ஒன்று என்றே கருதுகிறேன்" என்றார்.
நாஞ்சில் நாடன் என்ன கூறுகிறார் என்று அறிய விரும்பியபோது,
"இளம் எழுத்தாளர்கள் வாசகர் கள் நிறைய பேரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது .அதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
எனக்கு 74 வயது போய்க்கொண்டிருக்கிறது.
இப்போதும் இளைஞர்களுடன் நான் ஒரு விஷயத்தைப் பேசிக்கொண்டு இருக்கும்போது நான் மிகவும் இளமையாக உணர்கிறேன்.என்னை, என் இளமையைப் புதுப்பித்துக் கொள்ளும் உணர்வு கிடைக்கிறது.
எனது இலக்கிய பரிச்சயம் அதிகரிக்கிறது, என் இலக்கிய ஆர்வம் என்கிற உணர்வு புதுப்பிக்கப்படுகிறது.
ஒரு புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்வது என்பது வேறு.உரையாடல் மூலம் எழுத்தாளர்களிடம் வாசகர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்வது என்பது வேறு.அப்படி ஒரு வாய்ப்பாக அமைந்து இந்த நிகழ்ச்சி மூலம் நிகழும் சந்திப்புகளில் அந்தரங்கமான நட்பு இங்கே கிடைக்கிறது.
தனிப்பட்ட முறையில் நமக்கான கருத்துக்கள் கொள்கைகள் வேறு வேறாக இருந்தாலும் இலக்கியம் என்கிறபோது பொது நோக்கத்தில் கூடியிருக்கிறோம். தெலுங்கு கவிஞர் வீரபத்ருடு சொன்ன மாதிரி இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகள் என்று சொன்னாலே
எல்லாரும் 45 க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள் என்றால் இங்கே எல்லாரும் இளைஞர்களாகக் கூடி இருக்கிறார்கள் என்று சொன்னார் அல்லவா? இப்படி நிறைய இளைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர்கள் எழுத்தாளர்களிடம் மனதில் குழப்பத்தில் இருக்கும் அவர்களின் ஏராளமான விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்.
இத்தனை பேர் வந்து இருக்கிறார்கள்.அவர்களில் நூறு பேர் எழுத ஆரம்பித்தால் பத்து பேர் தேறி விடுவார்கள் அல்லவா?
இந்த வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கிறது என்பது மகிழ்ச்சி. இவர்களை
ஒருசேர ஒரே இடத்தில் சந்திப்பது என்பது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி! இந்த காலகட்டத்தில் நான் அவர்கள் வீட்டிற்குச் செல்ல முடியாது. அவர்கள் என் வீட்டுக்கு வர முடியாது .ஆனால் இந்த விழாக் கூட்டம் ஒரு வாய்ப்பாக இருக்கிறது.
எந்தக் கவிஞனும் எழுத்தாளனும் பரிசு விருது என்று நினைத்து எதிர்பார்த்து எழுதுவதில்லை. அவனுக்குத் தான் இனம் கண்டு பாராட்டப் படுகிற போதுதான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கிறது. வேறெந்தப் பொருளையும் அவன் எதிர்பார்ப்பதில்லை.
இந்த விருது கிடைத்ததன் மூலம் அவனுக்கு சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து கிடைக்கிறது. குடும்பத்திலேயே மரியாதை கிடைக்கிறது. ஒரு எக்ஸ்போஷர் கிடைக்கிறது. எத்தனை பேர் பார்க்கிறார்கள் எத்தனை பேர் கட்டுரை எழுதுகிறார்கள்.
கவிஞர் விக்ரமாதித்யனுக்கு இந்த விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். கிடைத்துள்ளது.
இந்த பரிசுத்தொகை அதன்மூலம் கிடைக்கிற புகழ் வெளிச்சம் இது ஒரு பெரிய
விஷயம்.இந்த விழாவின் மூலம் பலரையும் சந்தித்தது பேசியது கூடுதல் மகிழ்ச்சி" என்றார்.
கவிஞர் விக்ரமாதித்யனிடம் பேசியபோது,
"இவ்வளவுக்கும் காரணம் ஜெயமோகன் தான் "என்று நெகிழ்ந்தார்.
தஞ்சாவூரில் இருந்து வந்திருந்த வாசகர் நேசன் பேசும்போது,
"இந்த விழாவே ஒரு பிரம்மாண்டமான விழா. இதில் ஒத்த ரசனை கொண்ட வாசகர்கள் பலரையும் பார்த்து, சந்தித்து பேசும் வாய்ப்புக்காகவே நான் வந்தேன்.சில வாசகர்களின் தீவிரத்தை அறிந்து ஆச்சரியப்பட்டேன். மற்றபடி ஒரு பார்வையாளராக அமைதியாக நான் பார்த்து ரசித்து விட்டுச் செல்கிறேன்." என்றார்.
நாகப்பட்டினத்தில் இருந்து வந்த வாசகர் கதிரேசன் கூறும்போது,
"இலக்கியம் வாசிப்பவர்கள் குறிப்பாகத் தீவிரமாக இலக்கியத்தை பார்க்கும் வாசகர்களை ஒருசேர பார்ப்பது ஒரு பெரிய மகிழ்ச்சி. எத்தனை எத்தனை வாசகர்கள் எவ்வளவு தீவிரமாக படிக்கிறார்கள், எவ்வளவு ஊக்கத்தோடு எழுதுகிறார்கள் என்பதை எல்லாம் பார்க்கும் போது நமக்கு ஒரு புதிய ஆற்றல் கிடைக்கிற உணர்வு ஏற்படுகிறது" என்றார்.
மொத்தத்தில் விஷ்ணுபுரம் விழாவின் பயன் விளைவுகள் விரிந்து கொண்டே செல்கின்றன.
அடுத்தமுறை தாமும் ஏதாவது பங்கெடுத்துச் செயல்பட வேண்டும் என்ற உணர்வு பலருக்கும் வந்ததை உணர முடிந்தது. ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அடுத்த ஆண்டு உணவு பரிமாறும்போது நான் ஊறுகாயாவது பரிமாற வேண்டும் என்றார்.
-( கட்டுரையாளர் அருள்செல்வன், சென்னையில் வசிக்கும் இலக்கிய ஆர்வலர்)