Posted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 07 , 2021 13:01:46 IST
அமெரிக்க நிறுவனம் ஒன்றில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் ஒருவர் 3 நிமிடங்களில் 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்து விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஷால் கார்க் 'பெட்டர் டாட் காம்' என்ற வலைதள வீட்டு வசதி கடன் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிவருகிறார். இந்த நிறுவனத்தில் சுமார் பத்தாயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இங்கு பணியாற்றும் 900 பேருக்கு கடந்த புதன் கிழமையன்று ஜூம் கால் அழைப்பு வந்துள்ளது. மீட்டிங்கில் பங்கேற்ற 900 ஊழியர்களை 3 நிமிடங்களில் பணிநீக்கம் செய்துள்ளார் விஷால் கார்க்.
"நீங்கள் இந்த ஜூம் மீட்டிங்கில் இடம்பெற்றிருந்தீர்கள் என்றால் இன்று நமது நிறுவனத்தில் நடைபெறும் ஆட்குறைப்பில் நீங்களும் ஒருவர். நீங்கள் துரதிர்ஷ்டவசமான குழுவைச் சேர்ந்தவர்." ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் முன் விஷால் கார்க் கூறிய வார்த்தைகள் இவை.
மொத்த ஊழியர்களில் 9 சதவீதம் பேர் வேலையிழப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு வேலையில் மந்தம், செயல்பாடுகளில் திறமையின்மை, உற்பத்தித் திறன் குறைவு ஆகிய காரணங்களை விஷால் கார்க் கூறியுள்ளார். பணி நீக்கம் செய்தோரில் 250 பேர், 2 மணி நேரம் மட்டுமே வேலை செய்து 8 மணி நேர ஊதியத்தை பெறுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அந்த நிறுவனம் மட்டுமின்றி பணிகளை வழங்கும் வாடிக்கை நிறுவனங்களும் பாதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
விஷால் 900 ஊழியர்களை நீக்கியிருப்பது அமெரிக்காவில் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இவர் ஏற்கனவே வேலையை விரைவாகச் செய்யும்படி ஊழியர்களை கடுமையாக திட்டி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.