அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நான் தயார்… நீங்கள் தயாரா? நான் ரெடி… பழனிசாமி நீங்க ரெடியா? மு.க.ஸ்டாலின்

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   16 , 2021  10:37:59 IST

திருவாரூரில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைப் பயணத்தைத் தொடங்கிய திமுக தலைவர் ஸ்டாலின்,

 

இன்று நான் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறேன். எங்கே என்றால், நம் திருவாரூரில்! கலைஞர் வளர்ந்த - கலைஞரை உருவாக்கிய இந்த திருவாரூர் மண்ணில்!

 

கலைஞருடைய மகனாக வந்திருக்கிறேன். நான் மட்டுமா, நீங்களும் கலைஞருடைய பிள்ளைகள்தான். நான் இதே திருவாரூருக்குக் குழந்தையாக - பள்ளிக்கூட மாணவனாக - கல்லூரியில் படிக்கும் மாணவனாக -இளைஞரணிச் செயலாளராக - சட்டமன்ற உறுப்பினராக - கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக - சென்னை மாநகரத்தின் மேயராக - கழகத்தின் பொருளாளராக - உள்ளாட்சித்துறை அமைச்சராக - துணை முதலமைச்சராக - செயல் தலைவராக - தலைவராக வந்திருக்கிறேன். இப்போது முதலமைச்சர் வேட்பாளராக வந்திருக்கிறேன்” என்றவர் திமுக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

 

முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் - சொல்லும் அத்தனையும் பொய்யாகவே, ‘பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்கடா போக்கத்த பசங்களா’ என்று கிராமங்களில் சொல்வார்கள் - அதுபோல பொய்களையே செய்திகளாக தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் நிலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

 

ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் கலைஞரும் – மு.க.ஸ்டாலினும் தான் என்று சொல்லியிருக்கிறார். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 10 ஆண்டுகாலத்தில் 2வது முறையாக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு அவர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் படுத்திருந்த நேரத்தில் அவர் உடல்நலத்தைப் பற்றி வெளியில் சொல்வதற்குக் கூட துப்பற்ற ஆட்சியைத்தான் இவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

 

நான் தொடர்ந்து பல நேரங்களில் குறிப்பிட்டு காட்டி இருக்கிறேன். இப்போது நமது தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறோம். அம்மையார் ஜெயலலிதா மர்ம மரணத்தை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கையை நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு எடுப்போம் என்று உறுதிமொழி தந்திருக்கிறோம்.

 

பழனிச்சாமி அவர்கள் இப்படி சொல்லி இருக்கிறார். இந்த 4 ஆண்டு காலம் நீங்கள்தான் ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள். ஸ்டாலின் தான் காரணம் என்றால் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா?

 

இப்போது சொல்கிறேன். தைரியம் இருந்தால் - தெம்பு இருந்தால் ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டாலின் தான் காரணமென்றால் வழக்குப் போடுங்கள். சந்திப்பதற்கு நான் தயார்… நீங்கள் தயாரா? நான் ரெடி… பழனிசாமி நீங்க ரெடியா?” என கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி முரண்பாடுகளைப் பட்டியலிட்டுள்ளார்.

 

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “முதலமைச்சராக இருக்கும் பழனிசாமியிலிருந்து - கடைக்கோடியில் இருக்கும் மந்திரிகள் வரை என்னென்ன ஊழல்கள் செய்திருக்கிறார்கள்? எங்கெங்கு கமிஷன் வாங்கியிருக்கிறார்கள்? எந்தெந்த வகையில் அவர்கள் கொள்ளை அடித்து இருக்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் பொத்தாம் பொதுவாக அல்ல, வாய்க்கு வந்தபடி அல்ல, நினைத்ததை அல்ல, முழு ஆதாரங்களோடு அத்தனையும் ஒன்றுதிரட்டி தமிழகத்தின் ஆளுநரிடத்தில் கொடுத்திருக்கிறோம்” என்றவர், அதிமுக அமைச்சர்களின் ஊழலை வெளிகொண்டுவர திமுக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், ”அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. நாம் சொன்னதையே நகலாக காப்பியடித்து வெளியிட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. அறிக்கையை தி.மு.க. அறிக்கை என்று கூடப் போட்டுவிடுவார்கள். அந்த அளவிற்கு நாம் என்ன சொன்னோமோ அதை அப்படியே நகல் எடுத்துப் போட்டிருக்கிறார்கள். ” என்றவர், அதிமுகவின் எந்தெந்த அறிவிப்புகள் திமுகவின் அறிவிப்புகள் என்பதையும் பட்டியலிட்டுள்ளார்.

 

 

மேலும், “தலைவர் கலைஞர் அவர்கள் ஐந்து முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் நாட்டு மக்களுக்கு நிறைவேற்றிய திட்டங்களைப் பற்றி எல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம். நேரம் போதாது!

 

1948 முதல் ஓடாமல் நின்று போயிருந்த திருவாரூர் தேரை, கலைஞர் தான் 1970-இல் முயற்சி எடுத்து ஓடவைத்தார்.  தேர் ஓடுவதற்கு வசதியாக நான்கு ரதவீதிகளையும் சிமெண்ட் சாலைகளாக மாற்றித் தந்தவர் தலைவர் கலைஞர். பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் கிடந்த திருவாரூர் கமலாலயம் குளத்தைத் தூர்வாரச் செய்தவர் தலைவர் கலைஞர்.

 
* திருவாரூர் என்ற புதிய மாவட்டமே தி.மு.க. ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது.

 

* ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற அலுவலகம் ஆகியவற்றைப் பிரமாண்டமாக கட்டினார்.

 

* திருவாரூர் நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டித் தந்தது தி.மு.க.

 

* மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டாலும் 2013-ஆம் ஆண்டுதான் அ.தி.மு.க. ஆட்சி அதை முடித்தது.

 

* புதிய பேருந்து நிலையத்துக்கு 2010-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு இருந்தாலும் காழ்ப்புணர்ச்சி காரணமாக எட்டு ஆண்டுகள் கழித்து 2019-இல் தான் திறப்புவிழா செய்தார்கள்.

 

* தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தை 2009-இல் திருவாரூரில்   அமைத்துக் கொடுத்தார் முதலமைச்சர் கலைஞர்!

 

* 2010-ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியையும் அமைத்தது திமுக!

 

* மன்னார்குடியில் அரசு கலைக் கல்லூரி

 

* பாமணி உரத் தொழிற்சாலை

 

* மாவட்டம் முழுக்க குடிநீர் வசதிகளை உருவாக்கினார் அண்ணன் கோ.சி.மணி அவர்கள்.

 

* டி.ஆர்.பாலு அவர்கள் முயற்சியால் ஐந்து புதிய ரயில்கள் விடப்பட்டன. அதில் முக்கியமானது செம்மொழி எக்ஸ்பிரஸ்!

 

* மன்னையில் இருந்து திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் விட்டதும் கழகத்தின் முயற்சியினால் தான்!

 

கழக ஆட்சியின் இத்தகைய பணிகள் தொடர வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை நாடித் தேடி வந்திருக்கிறேன்.

 

1989-ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார். இதே தெருவில், இதே வீதியில் நடைபெற்ற வெற்றிவிழாக் கூட்டத்தில் கலைஞர் கலந்து கொண்டார். இப்போது நான் கேட்கிறேன் இந்த தேர்தலில் வெற்றி பெற்று வெற்றி விழா கூட்டத்திற்கு நான் முதன் முதலாக இந்த திருவாரூர் ஊருக்கு தான் வரவேண்டும். வரவைத்து விடுவீர்களா? நிச்சயமாக…  உறுதியாக…  நம்பிக்கையோடு இருக்கிறீர்கள். நீங்கள் மட்டுமல்ல இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் அதுதான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

 

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரத்தை நடத்தினோம். மக்கள் கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து மக்களையும் சந்தித்தோம். அதைத் தொடர்ந்து ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் சுற்றி வந்தோம். ‘உங்கள் தொகுதி ஸ்டாலின்’ என்பது ஏதோ அழகான பெயருக்காகவோ, ஏட்டளவிலான சொல்லுக்காகவோ மட்டுமல்ல. அந்த திட்டத்தின் நோக்கமே நாம் ஆட்சிப் பொறுப்பேற்று பதவியேற்ற அடுத்த நாளில் இருந்து, 100 நாட்களில் தமிழ்நாட்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை, அன்றாட பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதுதான். அந்த ஒரே நோக்கத்தோடு உருவாக்கிய திட்டம் தான் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற அந்தத் திட்டம்.

 

பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டார்கள் மக்கள். திரண்ட மக்கள் கூட்டத்தை கூட்டி உட்காரவைத்து கூட்டத்தை பேசி அனுப்பி வைத்து விடவில்லை. ஒவ்வொருவரும் அந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு அவர்கள் பெயர் ஊர் அவர்கள் குறைபாடுகள் தெருவிளக்கு பிரச்சினையா, சாக்கடை பிரச்சனையா, மருத்துவமனை பிரச்சினையா, பள்ளிக்கூடப் பிரச்சினையா அதேபோல ஓய்வூதிய பிரச்சினையா - எந்த அடிப்படைப் பிரச்சினையாக இருந்தாலும் அவற்றை அவர்கள் அங்கே பதிவு செய்து, அதற்குப் பிறகு அவர்களுக்கு வரிசை எண்ணுடன் கூடிய ஒரு அடையாள அட்டை கொடுத்திருக்கிறோம். இதில் உங்களில் பல பேர் வாங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

 

பிரச்சினைகளையும் தீர்க்கப் போகிறோம். ஒருவேளை யாருடைய பிரச்சினையாவது தீர்க்கப்படாமல் இருந்தால், அந்த அடையாள அட்டை இருந்தால் போதும். நேராகக் கோட்டைக்குள் வரலாம். யாருடைய அனுமதியும் தேவையில்லை. கோட்டைக்குள் மட்டுமல்ல முதலமைச்சர் அறைக்குள் வருவதற்கான தகுதி அந்த அட்டைக்கு இருக்கிறது. இதனைத் தெளிவாக நாங்கள் சொல்லி இருக்கிறோம்.

 

எனவே மக்களோடு இருந்து, மக்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்து, மக்கள் பிரச்சினைகளை அறிந்து, புரிந்து, அவர்களுக்குப் பாடுபடக்கூடிய மாபெரும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அப்படிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் எல்லாம் என்றைக்கும் துணை நிற்க வேண்டுமென்று உங்களை நான் இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

 

தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் உறுதிமொழிகளில் குறிப்பாகச் சிலவற்றை நான் தலைப்புச் செய்திகளாக உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நமது தேர்தல் அறிக்கையில் 505 உறுதிமொழிகள்

5 முறை முதலமைச்சராக பொறுப்பில் இருந்தபோது அவர் மக்களுக்கு என்னென்ன பணிகளை ஆற்றி இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். மீண்டும் கழகம் உங்களுடைய ஒத்துழைப்போடு உங்களுடைய ஆதரவோடு பொறுப்பேற்கும் நேரத்தில், அந்தத் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் அத்தனை உறுதிமொழிகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை மீண்டும் உங்களுக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, திருவாரூர் தொகுதியில் நம்முடைய பூண்டி கலைவாணன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், மன்னார்குடி தொகுதியில் டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், நன்னிலம் தொகுதியில் எஸ்.ஜோதிராமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், வேதாரண்யம் தொகுதியில் வேதரத்தினம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் - நம்முடைய கூட்டணி வேட்பாளர் மாரிமுத்து அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும் வாக்களித்து நீங்களெல்லாம் மாபெரும் வெற்றியை தேடித் தரவேண்டும்.” என கேட்டுக்கொண்டார்.

 

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...