எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷண், சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது!
Posted : திங்கட்கிழமை, நவம்பர் 08 , 2021 15:11:44 IST
மறைந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
கொரோனா பேரிடரால் இரண்டு ஆண்டுகளாக பத்ம விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று டெல்லியில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.
இதில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ப விபூஷண் விருது வழங்கப்பட்டது. அவருக்கு பதிலாக அவரது குடும்பத்தினர் விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன், புதுச்சேரியைச் சேர்ந்த இலக்கியவாதி மனோஜ் தாஸ் ஆகியோர் பத்மபூஷண் விருது பெற்றுக்கொண்டனர்.
இதேபோன்று தமிழகம் சார்பில் திரைப்பட பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, சமூக சேவகி கிருஷ்ணம்மாள், சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
தொழில் முனைவோரான ஸ்ரீதர் வேம்பு, மருத்துவத் துறையில் திருவேங்கடம் வீரராகவன், கார்ட்டூன் ஓவியர் கே.சி.சிவசங்கர், வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், கூடைப்பந்தாட்ட வீராங்கனை பி.அனிதா உள்ளிட்டோருக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
மேலும், டெரகோட்டா சிலை வடிக்கும் கலைஞர் முனுசாமி கிருஷ்ணபக்தர், சமூக சேவகர் சுப்புரமணியன், 105 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள், கியர் மேன் ஆஃப் கோயம்புத்தூர் பி.சுப்பிரமணியன் ஆகியோரும் பத்ம ஸ்ரீ விருதினை பெற்றுக்கொண்டனர்.